பிடி [சிறுகதை]

நான் அரைக்க கொடுத்திருந்த தோசைமாவை திரும்ப வாங்கச் சென்றபோது பிள்ளையார் கோயில் முகப்பில் மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். நீளமான மேலாடை அணிந்து அதை அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டு கரகரத்த குரலில் “ஈன்றைய தீனம் ஈங்கே” என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் மண்ணில் ஏழெட்டு வயசாளிகள் இரும்பு நாற்காலியில் அமர்ந்திருக்க அக்ரஹாரத்துச் சின்னப்பையன்கள் மூங்கில்களில் இருந்து மூங்கில்களுக்கு ஓடி தொட்டு விளையாடி கூச்சலிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். “ஏல அந்தால போ” என ஒருவர் துண்டை வீசி அவர்களை துரத்தினார்.

தேர்வீதியின் இருபக்கமும் ஏராளமான டியூப் லைட்டுகளை கட்டி வைத்திருந்தார்கள். அவற்றில் நுண்ணிய ஈக்கள் சுழன்று கொண்டிருந்தன. ஆலடிமுக்கில் வழக்கமாக நிறுத்தப்பட்டிருக்கும் மூக்கன் வேலப்பனின் தட்டுகடை இங்கே வந்திருந்தது. அவனுடைய மனைவி ஸ்டவ்வை புஸ் புஸ் என காற்றடித்துச் சீறவைத்துக் கொண்டிருக்க அவன் கீழே அமர்ந்து கலத்தில் ஏதோ கலந்து கொண்டிருந்தான். சில சைக்கிள்கள் நின்றன. அக்ரஹாரத்தின் அகலமான திண்ணைகளில் வயதான அம்மியார்கள் ஓரிருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டுமுற்றங்களில் புதிதாக சாயங்காலம் கோலமிட்டிருப்பது தெரிந்தது.

நான் மாடன்முக்கு சந்துக்குள் நுழைந்தேன். அது இரு கைகளையும் விரித்தால் தொட்டுவிடும் அளவுக்குப் குறுகியது. அதன் இடப்பக்கம் செங்குத்தான பெரிய சுவர். அதற்கு அப்பால் ராஜலட்சுமி கல்யாண மண்டபம், முன்பு அது குளத்து அய்யரின் வீடாக இருந்திருக்கிறது. சுவரில் காரை பெயர்ந்த வடுக்கள். சுவரை ஒட்டி சாக்கடை ஓடியது. அது அப்பால் ராதாவிலாஸின் கொல்லைப் பக்கத்திலிருந்து வந்து தேர்வீதியின் மூடப்பட்ட சாக்கடைக்குள் கலப்பது. வலப்பக்கம் வரிசையாக ஓட்டுவீடுகள். அவற்றில் பலவற்றில் எவரும் குடியிருக்கவில்லை.

எல்லாமே உயரமற்ற பழங்கால வீடுகள். அந்தச் சந்தில் தரை சிமிண்ட் போடப்பட்டிருந்தமையால் திண்ணைகள் தாழ்வாக ஆகி ஒரு சாண் உயரமே இருந்தன. தூண்கள் சாதாரண பனந்தடியால் ஆனவை. படிகள் கருங்கல் வெட்டிச் செய்யப்பட்டவை. பல வீடுகள் சந்தின் தரைப்பரப்புக்கு கீழே இறங்கிச் செலவது போல அமைந்தவை. திறந்துகிடந்த கதவுக்கு அப்பால் சுரங்கப்பாதை போல அறைகளும் கொல்லைப்பக்கத்தில் திறந்து கிடக்கும் கதவும் தெரிந்தன. குடியிருப்பு உள்ள வீடுகளின் எல்லா திண்ணைகளிலும் நடுவே ஓடிய பாதையின் ஒருபக்கம் கிழவர்களோ கிழவிகளோ தென்பட்டனர். இன்னொரு பக்கம் சைக்கிள்கள், சிலவகையான தகரப்பொருட்கள், உடைந்த மரச்சாமான்கள்.

வீடுகளின் கதவுகளும் பழையவை. அந்தமாதிரி குறுக்கே சட்டம் அறையப்பட்ட ,உயரமில்லாத, பருமனான கதவுகளை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. எல்லா கதவுகளிலும் பெயிண்டால் விபூதிப்பட்டை போல அடித்திருந்தார்கள். கதவை ஒட்டிய சுவர்களில் கல்விளக்குகளில் இருந்து எண்ணை வழிந்திருந்தது. அவற்றில் சிறிய திரிகள் எரிந்தன. கத்தரிக்காய் விளக்குகள் மெழுகுவத்தி அளவுக்கே வெளிச்சத்துடன் எரிந்தன.

கணேசய்யரின் வீட்டுக்கு முன் நின்று நான் “பானுமதி அக்கா!” என்று குரல் கொடுத்தேன். பானுமதி அக்கா என் அக்காபையன் மதுவின் பள்ளியில் படிக்கிறாள். என்னைவிட மூன்று வகுப்பு கூட. அவள் தம்பி பாலசுப்ரமணியன் என்னைவிட மிக இளையவன், மதுவின் வயதுதான். அவன் பெயரைச் சொல்லி அழைப்பது எனக்கு கௌரவமாக இருக்காது.

பாலு உள்ளிருந்து எட்டிப் பார்த்து “அம்மா அரைச்சிண்டிருக்கா… ஒக்காரச்சொன்னா” என்றான்.

“நீ படிக்கிறியா?”என்றேன்.

“இண்ணைக்கு வினாயகச் சதுத்தி… பூஜை இருக்குல்ல? நான் கோயில் போய்ட்டு இப்பதான் வந்தேன்… இனிமேத்தான் அம்மாவுக்கு காய்கறி ஆய்ஞ்சு குடுக்கணும்”

நான் திண்ணையில் அமர்ந்தேன். உள்ளே மாவு அரைக்கும் கிரைண்டர்கள் கார் போல ஓடிக்கொண்டிருந்தன. “உங்கப்பா வரலியா?” என்றேன்.

“இன்னிக்கு ராத்திரி முழுக்க அவரு கோயிலிலேதான்” அவன் உள்ளே பார்த்துவிட்டு “வரேன், வேலை கிடக்கு” என்று சென்றான்.

உள்ளே பானுமதி அக்காவின் குரலும் கௌசல்யா மாமியின் குரலும் கேட்டன. அவர்கள் வேலையாக இருந்தார்கள் என்று தோன்றியது. நான் அந்த சிறிய சந்துக்குள் செங்குத்தாக மேலிருந்து காற்று இறங்குவதை உணர்ந்து எழுந்து அண்ணாந்து பார்த்தேன்.

“எந்த தெரு?” என்ற குரல் கேட்டது.

அப்போதுதான் திண்ணையில் மறு எல்லையில் போடப்பட்டிருந்த ஏதோ துணிமூட்டை என நான் நினைத்தது ஒரு மனிதர் என்று தெரிந்தது. வயதான கிழவர், உடல் ஒடுங்கி குறுகி அமர்ந்திருந்தார்.

“நெடுந்தெரு” என்றேன்.

“சாலியர்தெருவா?”என்றார்.

“இல்லை,நெடுந்தெரு” என்றேன்.

“சாலியநெடுந்தெருன்னு ஒண்ணு உண்டு” என்றபின் “நெடுந்தெருவிலே எங்க?”என்றார்.

“திலகர் படிப்புசாலை இருக்குல்லா?” என்றேன்.

“உன்னோட அப்பா என்ன செய்றார்?”

நான் “கச்சேரியிலே” என்றேன்.

“எந்தூரு?”

“குலசேகரம்”

“இங்க எப்டி?”

“இங்க எங்க அக்கா இருக்காங்க. நான் லீவுக்கு வந்திருக்கேன்.”

அவர் “ஓ” என்றார் “அக்கா புருஷன் பேரு என்ன?”.

“கோபாலகிருஷ்ணன்”.

“நீங்கள்லாம் யாதவருங்களா?” என்றார்.

“இல்லை, வெள்ளாம்புள்ளைக” என்றேன்.

“சரி” என்று அவர் பெருமூச்சுவிட்டார். நீண்ட கழி வைத்திருந்தார். அதனால் தரையை தட்டி “இங்க கொசு உண்டு” என்றார்.

“ஆமா” என்றேன்.

“நான் புலியூர்க்குறிச்சியிலே மக கூட இருந்தேன். அவ வீட்டுக்காரன் அங்க மில்லிலே வேலை பாக்கிறான்… அவன் ஒரு வார்த்தை சொல்லிப் போட்டான். நான் இங்க வந்திட்டேன்… மானம்னு ஒண்ணு இருக்குல்ல?”

“ஆமா” என்றேன்.

“இங்க எடமில்லை. உள்ள மிசினா வாங்கி வச்சிருக்கான். சரி, கோயிலிலே பூசைய பண்ணி எவன் சோத்த தின்னான்?” என்றார் “நீ எந்த கிளாஸ்லே படிக்கிறே?”

“எட்டு”

“இவளுக்க மக பத்தாம் கிளாஸ். இனி அதுக்கு வரன் பாக்கணும். பொன்னும் பண்டமும் இல்லேன்னா எவன் வரப்போறான்? திமுத்துட்டு நிக்குது… தீனிக்கு ஒரு கொறையும் இல்லை.”

நான் உள்ளே பார்த்தேன்.

“அங்க இன்னிக்கு மதுரை ராமையா பாட்டுல்ல?” என்றார்.

“தெரியாது” என்றேன்.

“ஆமா, அவன் பாட்டுதான். என்னத்துக்குத்தான் வருசாவருசம் அவனை பாட வைக்குறாங்களோ… மடி ஆசாரமா பாடுறவா எத்தனைபேர் இருக்காங்க”.

நான் “ஆமா”என்றேன்.

அவர் மீண்டும் கழியால் தரையை தட்டி “அவன் பாட்டா பாடுறான்? சதஸிலே ஒக்காந்து குஸ்தின்னா பண்றான்…” என்றார். “குரலும் குஸ்தி. கையிலயும் குஸ்தி”

நான் உள்ளே பார்த்தேன். “சங்கீதம்னா நல்ல தைலதாரையா ஒழுகணம். இவன் ஆஸ்மாக்காரன் மாதரி மூச்சுவிடறான். ரயில்வண்டி மாதிரி கூச்சல்போடறான்…”

நான் “ஆமா” என்றேன். அவர் எதைப்பற்றி பேசுகிறார் என்றே புரியவில்லை.

“நல்லவேளையா சட்டிரேடியோவ நம்ம தலைக்குமேலே வைச்சு தொந்தரவு பண்ணலை… இங்க ஒண்ணும் கேக்காது. நிம்மதியா ராத்திரி தூங்கிடலாம்”

நான் “ஆமா”என்றேன்.

உள்ளிருந்து பானுமதி பாவாடையை தூக்கி இடுப்பில் செருகியபடி வந்தாள். “டேய், இன்னிக்கு மதுரை ராமு பாட்டுடா” என்றாள்.

“ஆமா” என்றேன்.

“இங்க வடை கொழுக்கட்டைன்னு ஏகப்பட்டது அரைக்க வந்திருக்கு… முடியறதுக்குள்ள விடிஞ்சிரும்னு நினைக்கிறேன். வந்து ஒரு அஞ்சுநிமிசமாச்சும் கேக்கணம்… முடியும்னு நேக்குத் தோணலை.”

நான் உள்ளே பார்த்து “எங்க வாளி அரைச்சாச்சா?”என்றேன்.

“அரைச்சாச்சு.. நீ பாட்டு கேப்பியா?”

நான் “இல்ல… நாளைக்குத்தான் நாடகம்னு சொன்னாங்க” என்றேன்.

“இன்னிக்கு கேள்டா மடையா… மோணையன் மாதிரி வளந்திருக்கான். அறிவிருக்கா பாரு… மூஞ்சிய பேக்கணும்னு பத்திண்டு வரது. சிரிக்காதே”

அவள் குஞ்சலம் வைத்த நீண்ட பின்னலை தூக்கி பின்னால் வீசிவிட்டு மெல்லிய துள்ளலுடன் உள்ளே சென்றாள். வெள்ளிக்கொலுசு அணிந்திருந்தாள்.

“அவளுக்கு நல்ல ஸங்கீதம் தெரியாது… ஸங்கீதம்கிறது ஏகாந்தமான ஜபம் மாதிரின்னா” என்றார் கிழவர்.

பானுமதி எவர்சில்வர் வாளியில் தோசைமாவு அரைத்ததை கொண்டுவந்தாள். உளுந்துமாவு நுரைத்து விளிம்பில் வழிந்திருந்தது. மூடியை அழுத்தி “பத்ரமா கொண்டுபோ… வழியிலே கண்டவா வாயைப் பாத்துண்டு நிக்காதே” என்றாள்.

“சரி” என்றேன். வாளியுடன் கிளம்பினேன். நல்ல எடை இருந்தது. அக்கா அதனால்தான் மதுவை அனுப்பவில்லை.

எனக்குப் பின்னால் பானுமதி “போய்ப் பாட்டு கேள்டா மண்ணாந்தை , நல்லா இருக்கும்” என்றாள்.

நான் சந்துவழியாக தேர்வீதிக்கு வந்தபோது ஆச்சரியமாக தெருவில் பாதிப்பங்கு நிறைந்திருந்தது. மேடையில் விரிக்கப்பட்ட கம்பளத்தின்மேல் கட்டைகுட்டையான ஒருவர் நெற்றியில் தெளிவான விபூதிப்பட்டையுடன் அமர்ந்திருந்தார். வெள்ளை ஜிப்பா போட்டிருந்தார். அவருக்கு முன் பெரிய சட்டி மைக். வலப்பக்கம் வயலின் வாசிப்பவரும் விபூதிப்பட்டையுடன் இருந்தார். இடப்பக்கம் மிருதங்ககாரர். அவர் நீண்ட செந்தூரப் பொட்டு. அவர்கள் இருவரும் வாயில் வெற்றிலை போட்டு மென்றுகொண்டிருந்தனர்.

அவர்தான் மதுரை ராமையா என்று தெரிந்தது. அவர் ஆர்மோனியம்போல சின்னதாக ஏதோ ஒன்றை வைத்திருந்தார். அதை ஏதோ செய்தார். அவருக்குப்பின்னால் ஒரு பையன் வீணையை செங்குத்தாக நிறுத்தி அமர்ந்திருந்தான். பின்பக்கம் படுதாவில் பெரிய பிள்ளையார் படம். அருகே ஒரு குத்துவிளக்கு. அதன்முன் முக்காலியில் பூஜைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

சந்துகளுக்குள் இருந்து மாமிகள் வெளிவந்து தேர்வீதியை ஒட்டிய இல்லங்களின் திண்ணைகளில் அமர்ந்தார்கள். சிலர் வீட்டுக்குள் இருந்து நாற்காலிகளையும் கயிற்றுக் கட்டில்களையும் கொண்டுவந்து தெருவில் போட்டார்கள். சந்தடியாக இருந்தது.

நான் வீட்டுக்குச் சென்று அக்காவிடம் மாவை கொடுத்துவிட்டு “நான் பாட்டுக் கேட்கப்போறேன்” என்றேன்.

“பாட்டா, நீயா? அங்க எதுக்கு?”

“நான் போவேன்.”

“அந்தப்பாட்டெல்லாம் நல்லாவே இருக்காதுடா.”

“நான் போவேன்” என்றேன் “நான் எப்டியும் போவேன்… பாட்டு கேப்பேன்.”

“சரி, ஒழி. தூக்கம் வந்தா வந்திரு”

நான் தோசை சாப்பிட அமர்ந்தேன். அக்கா நான்கு தோசை போட்டாள். அவசரமாக பிய்த்து வாயிலிட்டேன். விக்கியது.

“மெல்ல சாப்பிடு…அங்க அவங்க முக்கி முனகி பாட்டுன்னு ஆரம்பிக்கிறப்ப ஒருமணிநேரம் ஆயிடும்.”

நான் எழப்போனேன். அக்கா “இன்னொண்ணு சாப்பிடுடா” என்றாள்.

“வேண்டாம்” என்றேன்.

கிளம்பும்போது அக்கா இரண்டு ரூபாய் தந்தாள். “என்னமாம் வாங்கிச் சாப்பிடு.”

நான் இரண்டு ரூபாயை பையில் போட்டுக்கொண்டு மீண்டும் பிள்ளையார் கோயில் முகப்பிற்கு வந்தேன். அங்கே மதுரை ராமையா பாடிக்கொண்டிருந்தார். எனக்கு ஒருகணம் திகைப்புதான் ஏற்பட்டது. மெய்யாகவே இதையா பாட்டு என்று சொல்கிறார்கள்? எங்களூர் ஒண்டன் பூசாரியின் அதே குரல். கட்டையாக கரகரப்பாக. அதுவும் ஏதோ ஓலம் போன்ற பாட்டு.

நான் தெருவில் சென்று சுவர் ஓரமாக நின்றேன். எனக்கு ஓரளவு முகம்தெரிந்த அக்ரகாரவாசிகள் எல்லாரும் இருந்தனர். அவர்களில் சிலர் தொடையில் தாளமிட்டார்கள். சிலர் விரல்களால் ஏதோ எண்ணினார்கள்.

அவர் பஜனை பாடுவது போலவும் தோன்றியது. தலையை அசைத்தும் சிரித்துக்கொண்டே அங்குமிங்கும் பார்த்தும் பாடினார்.

நான் அவருடைய கையின் அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பால்கறப்பதுபோல. நூல் பாவுபோடுவதுபோல. டீ ஆற்றுவதுபோல. சகடத்தில் நீர் இறைப்பதுபோல .வீட்டுக்கு வெள்ளை அடிப்பதுபோல. ஸ்டீரிங்கை ஒடித்து வண்டியை திருப்புவதுபோல. குடத்தில் நீரை தலைக்குமேல் தூக்குவதுபோல. எனக்கு வேடிக்கையாக இருந்தது. யாராவது சிரிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தேன். எல்லாரும் தலையை ஆட்டிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது. வீட்டுக்குத் திரும்பிப் போகலாமா என்று நினைத்தேன். ஆனால் அதற்கும் மனம் வரவில்லை. வயலின் ஓசை என் தலையை கீறுவதுபோல ஒலித்தது. பின்னால் சென்று அங்கே காலியாக இருந்த ஒரு திண்ணையில் அமர்ந்தேன். அங்கே நாலைந்துபேர் இருந்தனர். ஒருவர் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். நல்ல குளிர்ந்த சிமிண்ட் திண்ணை. அந்த வீட்டில் ஆள் இல்லை. தேரடித்தெருக்களில் பல பெரிய வீடுகள் பூட்டியே கிடப்பவை.

நான் கொஞ்சம் தூங்கியிருப்பேன். எழுந்தபோது அவர் மிகவேகமாக கையை அசைத்து கூச்சலிடுவதுபோல பாடிக்கொண்டிருந்தார். குஸ்திதான் செய்கிறார். எதிரில் கண்ணுக்குத்தெரியாமல் இருப்பவரும் இவருக்குச் சமானமான குஸ்திபயில்வான்.

சந்துக்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன். அங்கே அவ்வேளையில் பெருச்சாளிகள் சலசலத்து ஓடின. கடுமையான சிறுநீர் வாடை. நள்ளிரவு ஆகியிருக்கும் என்று தோன்றியது. லேசாகக் குளிரடித்தது. டார்ச் ஒளியுடன் மேலும் பலர் வந்தனர். அவர்களெல்லாம் ஓட்டல் வைத்திருப்பவர்கள். சிலர் ஆட்டோ ஓட்டுபவர்கள். அவர்கள் ஆங்காங்கே வெறும் மண்ணிலேயே அமர்ந்துகொண்டார்கள்.

நான் மேடையில் அவர் போடும் குஸ்தியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய நீற்றுப்பட்டை அழிந்துவிட்டது. உடலில் வெள்ளைச்சட்டை வியர்வையால் ஒட்டியிருந்தது. அவருடைய கழுத்துதான் எத்தனை தடிமனானது. வண்டிக்காளையின் கழுத்து.

ஏதோ விசித்திரமான மொழியில் அவர் பாடிக்கொண்டிருந்தார். தமிழ் போலவும் இருந்தது, மலையாளம்போலவும் இருந்தது. கைகளால் சாலை போல காட்டினார். எழுந்து நடப்பவர் போல இருந்த இடத்திலிருந்தே நடித்தார். அழுதார், சிரித்தார், உருகி பரவசமானார். “நன்னு பாலிம்ப” அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. நான் அந்த விசித்திரமான வார்த்தையை கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன். “நன்னு பாலிம்ப!” அவர் கைகூப்பி வணங்கி அய்யோ என்பதுபோல கைகளை விரித்தார்.

மீண்டும் நான் விழித்துக் கொண்டபோது எங்கோ கிடந்தேன். மிக அருகே ஒர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் ஓசையை நான் கேட்டேன். அது எதையோ சொன்னது. என் உள்ளம் உருகத் தொடங்கியது. “என்னை காப்பாற்று. நா உன்னை நம்பியே இருக்கிறேன். எனக்கு நீயல்லால் யாருமில்லை” ஆற்றின் ஓசை அல்ல, வேறு யாரோ பாடுகிறார்கள்.

நான் கண்களை திறந்து பார்த்தேன். மேடையில் அவர் அழுவதுபோல பாடிக்கொண்டிருந்தார். “என்ன பாடினாலும் நீ இரக்கம் காட்டுவதே இல்லை”. ஆனால் நான் கண்மூடி தூங்குவதையும் நானே பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்தது. விசும்பிக்கொண்டே படுத்திருந்தேன்.

திடீரென்று எல்லா விளக்குகளும் எரிந்தன. பகல் ஆகிவிட்டிருந்தது. “நீ இருக்க பயம் ஏது? இனி எனக்கு கவலைகள் ஏது?” பகலில் நான் திண்ணையில் படுத்திருந்தேன். சிரித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தன. யாரோ உரக்க சிரித்தார்கள். ஆனால் பகல் அல்ல. அவர் பாடிக் கொண்டிருந்தார். வெளிச்சம் என் கண்களுக்குமேலேதான்.

நான் விழித்துக் கொண்டபோது என்னைச் சுற்றி நிறையபேர் படுத்திருந்தனர். தெரு குழல்விளக்குகளின் ஒளி மெல்ல அதிர்ந்து பரவியிருக்க காலியாக கிடந்தது. தரைமுழுக்க வேர்க்கடலைப் பொட்டலக் காகிதங்கள், சுண்டல் இலைகள். மேடையில் வெறும் வெளிச்சம், பிள்ளையார் படம், அதன்முன் பூஜைப்பொருட்கள்.

எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தேன். எல்லா திண்ணைகளிலும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வீடுகளுக்குள் விளக்குகள் எரிய நடமாட்டம் தெரிந்தது. சில வீடுகளிலிருந்து பெண்கள் வெளியே வந்து கோலமிடத் தொடங்கினர்.

நான் மீண்டும் சந்திற்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வீட்டுக்குச் சென்றேன். கூட்டுவீடு. பொதுவான திண்ணையில் ராஜம்மை மாமியும் தாணம்மை மாமியும் வேறு நிறையபேரும் தூங்கினர். சுவர் ஓரமாக இடமிருந்தது. நான் படுத்துவிட்டேன். சுவர் மெல்ல அதிர்ந்தது. சுவரை தொட்டேன். அதிர்வை உணரமுடிந்தது. தொட்ட விரல் வழியாக என்னுள் அந்தக்குரல் கடந்தது. “வேலும் மயிலும் அருகிருக்க!”

அக்கா என்னை உலுக்கியபோது எழுந்துகொண்டேன். கண்கள் கூசும்படி வெளிச்சம் நிறைந்திருந்தது எங்கும். நடுமுற்றத்தில் குழாயிலிருந்து நீர் கொட்டும் ஓசை. சாமிநாதன் அண்ணனும் அபிராமி அக்காவும் குடங்களில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்

“டேய் விடிஞ்சிருச்சி… எந்திரி” என்றாள் அக்கா

நான் எழுந்து கண்களை கசக்கிக்கொண்டேன். அக்கா “கடைக்குப்போய்ட்டு வாடா… கெளம்பு”

நான் கண்களை பாதி திறந்தபடி கொல்லைப் பக்கம் போனேன். முகம் கழுவி வந்தபோது அக்கா காபி தந்தாள். நான் நின்றபடியே காபியை குடித்தேன். வழக்கம்போல அது சீனிக்கரைசல்

“எப்டிடா இருந்தது?”

“என்னது?”

“பாட்டு”

“என்ன பாட்டு?”

“வெளங்கீரும்.. சனியன் அங்க போயி தெருவிலே உருண்டுட்டு வந்திருக்கு”

நான் பட்டியலுடனும் பையுடனும் வெளியே வந்து நின்றேன். கண்கள் கொஞ்சம் ஒளிக்குப் பழகிவிட்டிருந்தன. திலகர் நூலகம் அருகே திரும்பியபோது பிள்ளையார் கோயில் தெரிந்தது. அதனருகே சத்திரம். அதற்கு அடுத்த வீட்டுமுற்றத்தில் ஒருவர் தரையில் குப்புற படுத்து உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்

நான் ஆவலாக அருகே சென்று பார்த்தேன். முந்தையநாள் பாடியவர்தான். லங்கோடு கட்டி இறுக்கியிருந்தார். நல்ல உறுதியான பயில்வான் உடம்பு. அதில் வியர்வை பளபளத்தது. அவர் தரையில் மூக்கு பட அழுந்தி அழுந்தி எழ அருகே நின்ற சிறுவன் “நாநூற்றி எண்பத்தேளு… நாநூற்றி எண்பத்தேளு நாநூற்றி எண்பத்தெட்டு நாநூற்றி எண்பத்தொன்பது” என்று எண்ணிக்கொண்டிருந்தான்.

நான அருகே சென்று நின்றேன். “நாநூற்றி எண்பத்தொன்பதா?” என்றேன் “சத்தியமாட்டா?”

அவன் “ஆமா அவர் நிப்பாட்டவே இல்லை” என்றான்.

இன்னொரு சிறுவன் “ரொம்ப ,ரொம்ப, ரொம்ப நேரமா” என்றான் சுட்டுவிரலை தூக்கி காட்டி “ஆனா எங்க அப்பா இப்டி…” என்றான்.

அவர் உடற்பயிற்சி செய்தபடியே “டேய் எண்ரா” என்றார்.

அவன் “முந்நூற்றி எண்பத்தெட்டு முந்நூற்றி எண்பத்தொன்பது” என்று எண்ணினான்.

நாநூறு என்றபோது அவர் எழுந்து கைகளை தட்டிக்கொண்டு அவனிடம் “நாநூறு… முடியுமா உன்னாலே?”என்றார்.

“எங்கப்பா எங்கப்பா…” என்றான் அந்த இன்னொரு சிறுவன்.

“உங்கப்பாவை வரச்சொல்லு” என்றார். பிறகு என்னிடம் சினேகமாக புன்னகைத்து “உன் பேரு என்ன?” என்றார்.

“அனந்தன்”

“நல்லா அனத்துவியா?”என்றபின் அவரே அந்த நகைச்சுவையை ரசித்து உரக்கச் சிரித்தார். சின்னப்பையன்களும் என்னை பார்த்துச் சிரித்தனர்.

அவர் அருகே ஒரு உரலின் மேலுருளை கிடந்தது. அவர் அதன் ஓட்டைக்குள் ஒரு துணியை விட்டு கட்டி எடுத்து தோளைச் சுற்றிச் சுழற்றத் தொடங்கினார். அவருடைய முண்டா பெருச்சாளி போல அசைந்தது.

சுழற்றியபடியே “இங்க கல்ராக்கட்டை எங்கியுமே இல்லை” என்றார்.

நான் “ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ்லே இருக்கு” என்றேன்

“அது எங்க இருக்கு?”

“அங்க… தூரம்” என்றேன்

“அனந்து, இங்க பிடிக்க ஆளுண்டா?”

“எதுக்கு?”

“பிடி.. நல்ல பிடி”

நான் யோசித்து “எலும்பு முறிஞ்சா பிடிக்கிறதா?”என்றேன்

“நம்ம எலும்பு இஸ்டீல், முறியாது” என்றார். “பிடிண்ணா அடிமுறை… குஸ்தி”

“குஸ்தியா!” என்றேன். “வடிவீஸ்வரத்திலே மஸ்தான்னு ஒருத்தர் உண்டு”

“உனக்கு அவர் வீடு தெரியுமா?”

“தெரியும்…”

“வா காட்டு” அவர் துண்டை எடுத்துக்கொண்டு செருப்பில்லாமல் கிளம்பினார்.

நான் அவருடன் சென்றேன். அவர் என் தோளில் கைவைத்து “பெலமே இல்லை. முருங்கைக்காய் மாதிரி இருக்கு” என்றார்.

என்னைவிட சிறிய இரு பையன்களும் சிரித்தனர். அதிலும் அந்தப் பொடியன் வாயைப் பொத்தியபடி சிரித்தான். அவன் மண்டையில் குட்ட வெறி எழுந்தது.

எதிரில் இடுப்பில் ஒரு பெரிய செம்புக்கலத்துடன் பானுமதி அக்கா வந்தாள். அவள் சாலையோரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க நான் அவளருகே சென்றேன்.

“எங்கடா போறே? மதுரை ராமையால்ல அது?”

“ஆமா, அவரை குஸ்திக்கு கூட்டிட்டுப் போறேன்”

“குஸ்திக்கா?”

“ஆமா… ” என்றேன் “வடசேரிக்கு… இல்லை வடிவீஸ்வரத்துக்கு”

“நன்னா பாடினார்னு ஆனந்தவல்லி சொன்னா… நேக்கு குடுத்து வைக்கலை. எல்லாம் கழுவி கவுத்தரச்சே விடிஞ்சிருச்சி.”

அவர் அப்பால் நின்றார். அவரை நோக்கி நான் ஓடினேன்.

“உங்கூட படிக்கிற குழந்தையா அது?”

“இல்லை, அவ பத்தாம் கிளாஸ்…” என்றேன். “மாவு அரைக்கிறதனாலே அவ பாட்டுக்கேக்க வரல்லை”

எதிரே வந்த மகாதேவய்யர் நின்று கைகூப்பி “குளிக்கப் போறேளா? நேத்து பாட்டு அபாரமா இருந்தது… அப்டியே அழுதுட்டேன். நான் என்னத்தைச் சொல்றது? தெய்வானுக்ரகம்” என்றார்

“நல்லா இருந்துச்சில்லே? ஆஹா ஆஹா!” என்றார் ராமையா. மகிழ்ந்து தலையாட்டி சிரித்து “ரொம்ப நல்லா இருந்திச்சு அற்புதமா அமைஞ்சு போச்சு… அந்த மகா கணபதிம் பாடினேனே. எப்டி?” என்று கேட்டார்.

“சொல்லணுமா? நகுமோமுவிலே நின்னு வெளையாடினீங்க பிள்ளைவாள்” என்றார் மகாதேவய்யர் “ஒவ்வொரு பிடியும் அப்டி இருந்திச்சு… என்னன்னு சொல்ல!”

“ஆமா ஆமா” என்றார். மீண்டும் உரக்க சிரித்து “நாத தனுமனுசம்… அத விட்டிருவோமா?”

“ஒண்ணுக்கொண்ணு சளைச்சதா? கோவிந்தா நின்னே… அதைக்கேட்டு நான் அளுதிட்டேன்… தெய்வம்தான் கண்ணுமுன்னாடி” என்றார் மகாதேவய்யர் “ஆனா நன்னு பாலிம்ப நடசி ஒச்சிதிவோன்னு எடுத்தீங்களே …தியாகையர் கையகூப்பிண்டு பாடுறத கண்ணால பாத்தேன்… சும்மா இல்ல… சத்தியமா”

“ஆமா அது என்ன பாட்டு….என்னா ஒரு பாட்டு! அப்டியே தூக்கிட்டேன் இல்ல? அப்டியே மேலே கொண்டு போய்ட்டேன் இல்ல?” என்று ராமையா தலையைச் சுழற்றியபடி கேட்டார்.

“பின்ன? என்னைப் பாக்கவா நடந்து வந்தேன்னு தியாகையர் கதறினது இந்தா இந்த புள்ளையார் கோயில் ஜங்சனிலேன்னுல்ல தோணுது!”

“ஆமா ஆமா!” என்று சிரித்தார்

“ஏழை பிராமணன் தியாகய்யர். ராமனோ அயோத்திக்கு அரசன். திருவையாறு ரோட்டிலே தேடி நடந்து வந்து தர்சனம் குடுத்திட்டானே? சாமிக்கு தெரியாதா பக்தன் மனசு? தேடி வந்திரும்ல?”

“ஆமா, அருமையா சொல்லுங்க”

“அப்டியே ராமன கண்ணுலே காட்டிட்டீங்க பிள்ளைவாள். ராமனை அறியணும்னா அனுமானாலேதான் முடியும்.. நீரு அனுமான்… சஞ்சீவிமலையை தூக்கிண்டு பறக்கிற அனுமான், கேட்டேளா?”

“ஆசீர்வாதம் பண்ணுங்கோ சாமி”

“ஆசீர்வாதமா? நானா? என்னோட அப்பா உம்மை ஆசீர்வாதம் பண்னாருன்னு வைச்சுகிடுங்கோ. அவரு ஞானஸ்தன்… அமோகமா இருக்கணும்”

“வரட்டா” என்று கும்பிட்டபின் செல்லும்போது என்னிடம் கண்ணடித்து “அப்டி பாடிப்புட்டோம்ல? கர்ணாமிர்தமா!” என்றார்.

“நல்லா பாடினிங்களா?” என்றேன்

“பின்னே? நாம எப்பவுமே நல்லாவே பாடுவோம்… குருவருள் பரிபூர்ணமா கைவசம் இருக்குல்ல?”

“எங்கூட, எங்கூட, எங்கூட பாலூன்னு ஒத்தன் படிக்கிறான். அவன், அவன் ,அவன்…” என்றான் சிறுவன்.

காமராஜின் டீக்கடைமுன் சிறு கூட்டம். “ஒரு டீயைப் போடுவோம், என்ன?” என்றார்.

“ஆமா” என்றேன். என்னிடம் மளிகை வாங்குவதற்கான காசு இருந்தது. அதை செலவழித்துவிட வேண்டியதுதான். அக்காவிடம் எதையாவது சொல்லலாம்.

அவர் அருகே சென்றதும் காமராஜ் வணங்கி “வாங்கய்யா” என்றார்.

ராமையா “நல்லா பாலுவிட்டு, சீனி ஜாஸ்திபோட்டு ஒரு டீ… அப்றம் இந்த பிள்ளைகளுக்கும் டீ குடுங்க…டேய் வடை எடுத்துக்கங்கடா.”

நான் வடை எடுத்து பையன்களுக்கு கொடுத்தேன். நானும் ஒருவடை எடுத்துக்கொண்டேன்.

ராமையா “டீயை சொம்பிலே போடுங்க மாஸ்டர்” என்றார்

காமராஜ் சிரித்தபடி “தெரியும்” என்றார்.

பெரிய செம்பு நிறைய டீ அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் வடைக்குவியலில் இருந்து எடுத்து எடுத்து சாப்பிட்டார். ஒரு வடை ஒரு வாய்தான்.

“பாட்டு ரொம்ப நல்லா இருந்தது பிள்ளைவாள்.”

“வந்திருந்தீரா? ஓய், பாட்டு அப்டியே அபாரமா இருந்திச்சு இல்ல?” என்று ராமையா கேட்டார்.

“பிள்ளைவாள் பாடினா சொல்லணுமா? அது பாட்டுல்ல, வேற என்னமோ… தாயே யசோதா பாடினீங்களே.”

“ஆமா அது என்ன பாட்டு… சும்மா உருக்கிட்டோம்ல? தாயே யசோதா!” என முனகினார். உரத்தகுரலில் “தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி” என்று பாடத்தொடங்கினார். அவரே தன் கைகளால் தாளமும் போட்டுக்கொண்டார். தொண்டை நரம்புகள் புடைத்து நின்றன.

காமராஜ் கைகூப்பி நின்றார். கடையைச் சுற்றி ஆட்கள் கூடிவிட்டார்கள். அவர் பாடி முடித்ததும் காமராஜ் கையை தலைக்குமேல் தூக்கி கூப்பினார்.

“பிள்ளைவாள், நேத்து வந்தேன்… எப்படி பாடினரோ பாடினிகளே. அப்டி ஒரு எதமா இருந்திச்சு” என்றார் ஆட்டோக்காரர பரிபூரணம்.

“வாறேன்… வந்திடுறேன்” என்று இன்னொரு வடையை சாப்பிட்டுவிட்டு மெல்ல முனகி “எப்படி பாடினரோ அதை அப்படி பாட நான் ஆசைகொண்டே சிவமே” என்று ஆரம்பித்தார்.

“ஆனா ராம நீ சமானமெவரு… அதைப் பாடின்னப்பத்தான் வேற எங்கியோ போய்ட்டீரு பிள்ளைவாள்…மேடையிலே நீங்க இல்ல. வேற ஆரோ வந்து எறங்கீட்டமாதிரி…”

“ஆமா, ஆமா,ஆமா” என்றார். “அது வேற ஆளு…. வேற ஆளு… ராமா! ராமா!”

நான் “குஸ்திக்கு போகணும்ல” என்றேன்.

“ஆமா… நான் குஸ்திக்கு போறேன். அப்றமா வாறேன்” என்றார் ராமையா “எவ்ளவு ஆச்சு நாடாரே?”

நான் “நான் குடுக்கேன்” என்று காமராஜிடம் சொன்னேன்.

“குடுக்கதா? உம்ம வீட்டுக்காவே வந்திருக்காரு? நம்ம கடையைத் தேடி காலம்பற வந்து அனுக்ரகிச்சிருக்காரு… அந்தால போவும்வே” என்றார் காமராஜ்.

“வாறேன்” என அவர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டார். அருகே பிளாஸ்டிக் டம்ளருடன் நின்றிருந்த பிச்சை எடுக்கும் குரிசிடமும் “வாறேன்யா” என்றார். ஞாபகமாக திரும்பி நான்கு வடையை எடுத்து மடியில் கட்டிக்கொண்டார்.

நாங்கள் மீனாட்சிபுரம் வழியாக நடந்தோம். வழியில் பலபேர் அவரை கண்டு வணக்கம் சொன்னார்கள். சிலர் பாட்டு கேட்க வந்திருந்தார்கள் என்றனர்.

“சிட்டியிலே அம்புட்டுபேரும் நம்ம பாட்ட கேக்க வராங்க…” என்று அவர் மகிழ்ச்சியுடன் சொன்னார். “நம்ம பாட்டோட மவுசு எப்பவுமே அப்டித்தான்.. எல்லாம் குருவருள்.”

வடிவீஸ்வரம் முக்கில் மஸ்தான் பயில்வானின் வீட்டுமுன் அவருடைய பாயம்மா அமர்ந்து பீடிசுற்றிக்கொண்டிருந்தாள். ஒட்டுத்திண்ணையில் ஆடுகள் நின்றிருந்தன. ஒரு ஆடு எங்களைப்பார்த்து கனைத்தது.

பாயம்மா “என்ன? ஆருடே இந்த பயிவான்?” என்றாள்.

நான் கால்தசை திறம்பியபோது மஸ்தான் சாயபுவிடம்தான் எண்ணைபோட்டு உருவி குணமானேன். பாயம்மாவும் நாலைந்து முறை எனக்கு அப்போது எண்ணை போட்டிருக்கிறாள்.

“இவரு மதுரைக்காரரு… சாயபுகிட்டே பிடிக்கணும்னு சொன்னாரு.”

“அவரு இல்லியே… ஆசாரிமார்தெருவிலே ஒருத்தருக்கு காலு தெறம்பிச்சுன்னு கூட்டிட்டுப் போனாங்க.”

நான் “செரி” என்றேன். ராமையாவிடம் “அவரு இப்ப இங்க இல்லை” என்றேன்.

அவர் ஏமாற்றத்துடன் “சரி” என்றார்.

“ஆனா இங்க நல்ல கொளம் உண்டு… பெரிய கொளம்…நெறைய தண்ணி இருக்கும். நீந்தலாம்” என்றேன்.

அவர் ஆர்வத்துடன் “இங்கயா?” என்றார். பின் உற்சாகமாக “போவோம்” என்றார்.

நாங்கள் குளம் நோக்கிச் சென்றோம். குளத்தில் பலர் குளித்துக்கொண்டிருக்க நீரில் அலை ததும்பியது. கரையின் கல்விளிம்புகளில் அலைகள் சளக் சளக் என அறைந்தன. நீரின் மணம் வந்தது.

குளத்துக்குமேல் கோயிலின் வடக்கு முற்றத்தில் மணல்விரித்த களம் இருந்தது. ராமையா ஆவலாக அதைப் பார்த்தபின் “நல்ல களம்… இங்க ஆரோ பிடிக்கானுக” என்றார்.

“இது கபடிக்களம்” என்றேன்.

“கபடியும் பிடிதான்”

அவர் துண்டை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் மஸ்தான் வருவதை நான் கண்டேன். கையை வீசிக்கொண்டே விரைந்து வந்தார். தோளிலிருந்த துண்டை முதுகுக்குப்பின் போட்டு இழுத்துக்கொண்டு நடந்து அணுகி என்னிடம் “எங்க பயில்வான்?”என்றார்.

“இவருதான்”

மஸ்தான் சிலாவரிசை முறைப்படி கைகாட்டி வணங்கி “நம்ம பேரு மஸ்தான் சாயவு…” என்றார்.

“நான் ராமு… ”

“வாத்தியாரு ஆராக்கும்?”

“ஆனையடி கந்தப்பப்பிள்ளை.. நமக்கு?”

“நம்ம உஸ்தாது இங்கிணதான்… எடலாக்குடி நயினார் முகம்மது சாயவு”

“பிடிப்பமா ஓய்?”

“பின்ன? ஒரு நல்ல தோளைப் பாத்து எம்பிடு நாளாயிப்போட்டு”

ராமையா அந்த மணல்பரப்பில் சென்று நின்றார். மஸ்தான் துண்டை அவிழ்த்து லங்கோட்டியை இறுக்கியபடி சென்று அவருக்கு எதிரே நின்றார். குளித்தவர்களும் ஏறி நின்று வேடிக்கை பார்த்தனர்.

இரு மல்லர்களும் கைகளை நீட்டியபடி உடலை தணித்து ஒருவரை ஒருவர் பார்த்தபடி சுற்றிவந்தனர். இருவர் தசைகளும் முறுகியும் நெகிழ்ந்தும் அசைந்தன. தசைகள் பெரிதாகி இருந்தமையால் மணிக்கட்டுகளும் கரண்டைக்கால்களும் மிகச்சிறிதாகத் தெரிந்தன.

சட்டென்று இருவரும் பாய்ந்து தழுவிக்கொண்டார்கள். அந்த ஓசை ஓர் அடியின் ஒலி என்று கேட்டு நான் மெய்சிலிர்ப்பு அடைந்தேன். கைகளும் கால்களும் பின்னிக்கொண்டன. ஒருவரை ஒருவர் வளைக்கவும் ஒடிக்கவும் முயன்றனர். தள்ளி நிலத்திலிட முயன்றனர். கால்களை ஊன்றி அதை தடுத்தனர்.

சட்டென்று ராமையா மஸ்தானை தூக்கி தலைமேல் சுழற்றி மண்ணில் அறைந்தார். பின்னர் மண்ணை தொட்டு கும்பிட்டு விலகி நின்றார். மஸ்தான் எழுந்து பொடியை தட்டிக்கொண்டார்.

“தண்ணி” என்றார் ராமையா

நான் திகைக்க ஒருவன் குளத்தில் நீர்மொள்ள கொண்டுவந்திருந்த குடத்தை எடுத்து நீர்மொண்டு நீட்டினான். அதை வாங்கி அண்ணாந்து அப்படியே வாயில்விட்டு குடித்தபின் மஸ்தானிடம் நீட்டினார் ராமையா. அவரும் குடித்தபின் குடத்தை திரும்ப தந்தார்.

மீண்டும் இருவரும் சுற்றிவந்தனர். இம்முறை அவர்கள் ஓசையில்லாமல் அறைந்து கொண்டதாக தோன்றியது. இரண்டு பாம்புகள் ஒன்றையொன்று நெரித்தன. சட்டென்று ராமையா சரிந்துவிழ மஸ்தான் அவர் மேல் விழுந்தார். மண்ணில் இரு உடல்களும் கிடந்து புரண்டு நெளிந்தன. கால்களை கால்களால் பின்னிக்கொண்டார்கள். மஸ்தான் ராமையாவை அழுத்தி மண்ணோடு மண்ணாக பிடித்துக்கொண்டார்.

சற்றுநேரம் கழித்து மஸ்தான் எழுந்து மண்ணைத் தொட்டு கும்பிட்டார். ராமையா எழுந்து மண்ணை வணங்கினார். ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்தபடி சிறிது ஓய்வெடுத்தனர். மீண்டும் கைகளை நீட்டியபடி சுற்றிவந்தனர். மீண்டும் ஆடுகள் மண்டையை முட்டுவதுபோல மோதிக்கொண்டனர்.

இருவரும் நெடுநேரம் ஒருவரை ஒருவர் வளைக்கவும் ஒடிக்கவும் முயன்றனர். இறுகி அசைவில்லாது நின்றனர். ஒரு கட்டத்தில் மஸ்தான் ராமையாவை தூக்கி அறைந்தார். மண்ணை தொட்டு கும்பிட்டு விலகிக்கொண்டார். ராமையா எழுந்ததும் அவர் கையை நீட்ட இருவரும் லேசாக தழுவிக்கொண்டார்கள்.

இருவரும் அங்கிருந்த பிற அனைவரையுமே மறந்துவிட்டதுபோல தோன்றியது. இருவரும் லேசாக தழுவியபடியே குளத்தின் படிக்கட்டுக்கு வந்தனர். அருகருகே அமர்ந்து மெல்லியகுரலில் பேசிக்கொண்டார்கள்.

நான் சற்று தள்ளி நின்றிருந்தேன். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. சிறுவர்கள் சிலர் நீரில் பாய்ந்தனர். நிஜாரை கழற்றிவிட்டு ஜட்டியுடன் நானும் கூடவே பாய்ந்தேன். நாங்கள் நீரில் முக்குளியிட்டும் கரையில் ஏறி மீண்டும் பாய்ந்தும் கும்மாளமிட்டோம்.

சட்டென்று ராமையா மஸ்தானை தொடையில் ஒரு தட்டு தட்டிவிட்டு சிரித்தபடி நீரில் பாய்ந்தார். மஸ்தானும் நீரில் பாய்ந்து அவரை துரத்தினார். ராமையா மறு எல்லையில் ஏறி நீரில் பாய்ந்தார். குளம் முழுக்க கும்மாளமிட்டுக் கொண்டிருந்த பையன்களுக்கு நடுவே அவர்கள் இருவரும் மட்டும் தனியாக நீந்தி துரத்தி விளையாடினர்.

எனக்கு கண்சிவந்து மூச்சுவாங்க ஆரம்பித்தது. நான் கரையில் ஏறி நிஜாரை போட்டுக்கொண்டேன். உடம்பை துவட்ட துண்டு இல்லை. ஆனால் சீக்கிரமே காய்ந்துவிட்டது.

மீண்டும் நெடுநேரம் அவர்கள் இருவரும் குளித்தனர். இருவரும் சேர்ந்தே கரையேறி வந்தார்கள். இருவர் உடலிலும் தசைகள் உலோகத்தால் ஆனவைபோல இறுகி பளபளப்பாக இருந்தன.

நான் “போலாமா?” என்றேன்.

“ஆமா, நல்லா தூங்கணும்… இன்னிக்கு கச்சேரி இருக்கு” என்றார் ராமையா.

மஸ்தான் “நாளைக்கு போறீரா வே?” என்றார்

“ஆமா, நாளை வெடிகாலையிலே கெளம்பீருவோம்… காரிலே நெல்லை. அங்கேருந்து ரயிலு” என்றார் ராமையா.

“மறுக்கா வாரப்ப இங்கிண வாரும் வே..” என்றார் மஸ்தான்.

“பின்ன வராம?” என்றார் ராமையா “நம்ம எடமாக்குமே?”

அவர்கள் இருவரும் மஸ்தானின் வீடுவரை சேர்ந்தே வந்தனர். ராமையா மஸ்தானின் தோளில் தட்டி “வாறேன் ஓய்” என்றார் “மறுபடியும் பாப்போம்.”

“இன்ஷா அல்லா!” என்றார் மஸ்தான்.

திரும்பிச் செல்லும்போது ராமையா தனக்குள் மெல்ல பாடிக்கொண்டே வந்தார். வந்தபோதிருந்த கொப்பளிப்பெல்லாம் அடங்கி அவர் நிறைவடைந்ததுபோல தோன்றியது. நானும் களைத்திருந்தேன்.

காமராஜின் கடையை கடக்கும்போது ராமையா திரும்பி “வாறேன் ஓய்… சாய்ங்காலம் வாறேன்” என்றார்.

காமராஜ் “ஒரு சாயை குடியுங்க பிள்ளைவாள்” என்றார்.

“இல்லை டிப்பன் சாப்பிடவேணும்” என்றார் ராமையா.

தேரடி முக்கில் திரும்பியபோது நான் “இங்கதான் பானுமதி வீடு” என்றேன்.

“யாரு?”

“போறப்ப பாத்தமே… அவ வீடு. அவ உங்க பாட்ட கேக்க வாறேன்னு சொன்னா.”

“வரலியா?”

“இல்ல”

“ஏன்?”

“அவ வீட்டிலே கிரைண்டர் இருக்கு.. மாவு அரைக்கணும்ல?”

“ஓகோ” என்றார் ராமையா “இந்த சந்திலயா?”

“ஆமா”

“பாத்திருவோம்… பாட்டுதானே.. அது காத்துமாதிரி… வைகையிலே ஓடுற தண்ணி மாதிரி… முருகனருள் மாதிரி… எங்கயும் உண்டு… வா”

சந்துக்குள் சென்றபோது கிழவர் அதே திண்ணையில் குச்சியுடன் அமர்ந்திருந்தார். ஆனால் குளித்து முடித்து நெற்றியிலும் உடலிலும் நீற்றுப் பட்டை போட்டிருந்தார். அவருடைய இரு கால்களும் நன்றாகச் சூம்பி திரும்பிக் கொண்டிருந்ததை அப்போதுதான் பார்த்தேன்.

“அக்கா! பானுமதி அக்கா!” என்று நான் அழைத்தேன். “வா…வெளியே வா… யாரு வந்திருக்கா பாரு.”

“யாரு?” என்றபடி வந்த பானுமதி திகைத்து, மூச்சொலியுடன் கையால் வாயை மூடிக்கொண்டாள்.

“யாருடி?”என்றபடி உள்ளிருந்து கௌசல்யா மாமி வந்தார். அவரும் படபடப்புடன் நின்றுவிட்டார்.

நான் “அக்காவுக்கு பாடிக் காட்ட வந்திருக்கார்….நானே கூட்டிட்டு வந்தேன்” என்றேன்.

கூடவந்த பையன் “நான், நான் ,நான்தான் சொன்னேன்” என்றான்

ராமையா திண்ணையில் அமர்ந்து “கேளுங்கம்மா… என்ன பாட்டு வேணும்” என்றார்.

பானுமதி உதட்டைக் கடித்துக்கொண்டு கண்ணீர் வழிய நின்றாள். கதவின் விளிம்பை பிடித்திருந்த அவள் கை நடுங்கிக்கொண்டிருந்தது.

கௌசல்யா மாமி “எங்க பூர்வஜென்ம புண்ணியம்… தெய்வம் வீடுதேடி வந்தது மாதிரி” என்று சொல்லி கைகூப்பினாள்.

“சொல்லுங்கம்மா பிடிச்ச பாட்டைச் சொல்லுங்க”

“அவளுக்கு பிடிச்ச பாட்டுன்னா குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்தான்” என்றாள் கௌசல்யா மாமி

ராமையா “ம்ம்ம்ம்” என்று முனகி பாட ஆரம்பித்தார். கண்களை மூடி தொடையில் தாளமிட்டு “குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும். குறை ஏதும் எனக்கேதடீ” என்று பாடினார். தொண்டை நரம்புகள் புடைத்திருந்தன. கச்சேரிபோலவெ முழுக்குரலெடுத்து பாடினார். கைகளை அசைத்து தலையை உருட்டி. பாடிமுடித்து கண்களை திறந்து பார்த்து புன்னகைத்தார்.

கிழவர் கைகூப்பியபடி அமர்ந்திருந்தார்.

“சாமிக்கு என்ன பாட்டு வேணும்? சொல்லுங்கோ” என்றார் ராமையா

“எனக்கா?” என்றார் கிழவர்

“ஆமா”

“எனக்கா?” என்றபோது அவர் அழத்தொடங்கினார்

***

முந்தைய கட்டுரைஆட்டக்கதை, மதுரம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–45