வானில் அலைகின்றன குரல்கள், வேரில் திகழ்வது -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

வானில் அலைகின்றன குரல்கள் பல நினைவுகளை தூண்டிவிட்டது. ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்ச்சின் அந்த டயல்டோன். என் வாழ்க்கையுடன் முப்பது ஆண்டுகள் அன்றாடம்போலவே கழிந்துவிட்ட ஒன்று. சீரோவை எல்லா எண்ணுடனும் சேர்வது, எவருக்கும் சொந்தமில்லாதது என்று நானும் சொன்னதுண்டு. எல்லாம் ஒரு கனவுபோல சென்றுவிட்டது இல்லையா? தொழில்நுட்பம் ஒன்று வந்தால் முந்தையது அப்படியே மறைந்துவிடுகிறது

 

வானில் அலையும் ஒலிகளை ஒரு இடத்தில் இழுத்துவைத்து பங்கிடுகிறோம் என்று எனக்கும் தோன்றியது உண்டு. சிலசமயம் ஸ்ட்ரௌஜரில் எலக்டிரானிக் ஸ்டார்ம் அடிக்கும்போது குரல்கள் டிஸ்டார்ட் ஆகும். அது பேயோ தெய்வமோ பேசுவதுபோல கேட்கும். தெய்வம் பேசுவதை கேட்டிருக்கிறேன் என்று நான் சொல்வேன் அன்றைக்கெல்லாம்

 

இதெல்லாம் முடிந்தபிறகு ஒருமுறை சந்திக்கவேண்டும்

 

எஸ்.குமரேசன்

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

வணக்கம்

 

வானில் அலைகின்றன குரல்கள் கதையில் குறிப்பிட்டிருக்கும் தொலைபேசி நிலையங்களின் தொழில்நுட்பம், அந்தத் தளம் எனக்கு முற்றிலும் புதியதென்பதால் அத்தனை  பிடிபடவில்லை. ஒரு பெட்டி ஒரு டெலிபோன் எக்சேஞ்ச் ஆக இருக்க முடியுமென்பதும் அதன்பிறகு வந்த டிஜிட்டல் எக்சேஞ்சும் எனக்கு சரியாக விளங்கவில்லை. எனினும் கதையில் ’ஸீரோ கொடு’ என்று தினம் கேட்கும், டயல்டோனை கேட்டபடியே இருக்கும் தோட்டான்  எனக்கு ராதாகிருஷ்ணன் என்னும் நான் பணிபுரியும் கல்லூரியின் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவரை நினைவுபடுத்தியது.

 

அவர் பொருளாதாரத்துறையில் தலைவராக இருந்து ஒய்வு பெற்றபின்னரே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார் அதன்பிறகு 17 வருடங்கள் அப்பணியிலிருந்தார். முதல் பத்து வருடங்களுக்கு பின்னர் அவருக்கு தள்ளாமை வந்துவிட்டது. சான்றிதழ்களில் கையெழுத்துக்கூட போடமுடியவில்லை. நிர்வாகம் அவர் மீதிருந்த மரியாதையினால் அவரை வரவேண்டாம் என்று சொல்லவுமில்லை. கணிசமான ஒரு தொகையினை அவருக்கு சம்பளமாக கொடுத்து விட்டு உதவி அதிகாரி என்று ஒருவரை நியமித்து அவர் பொறுப்பெடுத்துக்கொண்டார்

 

தேர்வறையின் செயல்கள் முழுவதும் கணினி மயமானதையும் நிறையப் பேர் புதிதாக வேலைக்கு சேர்ந்ததும், அறைகள் இடித்து மாற்றிக்கட்டப்பட்டதும் எதுவும் அவருக்கு தெரியாது. அவரை சாப்பாட்டுப்பையுடன் ஒரு ஆட்டோவில் ஏற்றி வீட்டிலிருந்து அனுப்பிவிடுவார்கள், கல்லூரியில் 3 பேர் காத்திருந்து கைத்தாங்கலாக அவரையும் சாப்பாட்டுப்பையையும் கொண்டு வந்து அறையில் வைத்துவிடுவார்கள். உறங்கிக்கொண்டெ வருவார் பல சமயங்களில்  அறையிலும் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருக்கும் அவரை உணவு இடைவேளையின் போதும், மாலை வீடு செல்லும்போதும் எழுப்புவார்கள்.

 

ஆனால்  தேர்வுகுறித்த ஏதேனும் சிக்கலென்றால் எழுப்பி எப்போது கேட்டாலும் சரியான தீர்வை சொல்லிவிடுவார். 20 வருடங்கள் முன்பு படித்த மாணவர் ஒருவர் இப்போது சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் என்றோ, பல வருடங்களுக்கு முன்னர் தோல்வியடைந்த  பாடத்தில் இப்போது ஒருவர் அரியர் எழுத வந்தால் அந்த பாடத்திற்கு கொடுக்கபட்டிருந்த எண் என்னவென்றோ, காப்பி அடித்ததால் பிடுங்கி வைக்கப்பட்டிருக்கும் பேப்பர்களை எல்லாம் என்ன செய்வதென்றோ என்ன குழப்பமென்றாலும் அவரிடம் சரியான பதிலும் தீர்வுமிருக்கும்.   ஏராளமான கோப்புக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பழைய அறையில் எந்த கோப்பு எங்கிருக்கிறது என்று நினைவிலிருந்தே சொல்லிவிடுவார்.அவரது உலகமே அந்த அறைதான். என் அக்காவின் ஆசிரியர் அவர் அந்த நினைவில் பல சமயம் என்னை சங்கமித்ரா என்று அழைப்பார். அவர் அவரது பழைய காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். பணி ஓய்வுபெற்றதுகூட அவருக்கு நினைவிலிருந்திருக்காது.

 

3 வருடங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்து இடுப்பெலும்பு முறிந்ததால் கல்லூரிக்கு அவர் வருவது நின்று போனது. உறக்கத்திலேயே இறந்துபோன அவர்  தேர்வுக்கட்டுப்பாட்டு அறையில் இருப்பதாக நினைத்துக்கொண்டெ உயிரை விட்டிருப்பார் என்று  போர்டில் இருக்கையிலேயே இறந்து குளிர்ந்துபோன தோட்டானைப்பற்றி  வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்.

 

10 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் விலங்கியல் துறையில் நிறைய தவளைகளை ஒரு சாக்குப்பையில் போட்டு கொஞ்சம்  குளோரோபார்ம் உள்ளே கொட்டி குலுக்கி மயங்கிய தவளைகளை உயிருடன் ஆளுக்கொன்றாக மாணவர்களுக்கு கொடுத்து துடிக்கும் அதன் இதயத்திலிருந்து ரத்தக்குழாய்களை தனியே பிரித்தெடுத்து காட்டச்சொல்லுவார்கள் ஆசிரியர்கள். ரத்த நாளங்கள் உடைந்து  அவை வைக்கப்பட்டிருக்கும் தகர ட்ரேவின் தெளிந்த நீரில் குருதி கலந்தால் மதிப்பெண் இல்லை. அங்கு பல வருடங்களாக  ஆய்வக உதவியாளராக இருந்த சித்துரானுக்கு அவற்றையெல்லாம் அரசு நிறுத்தச்சொல்லி கணினியில் மென்பொருள் ஒன்றின் உதவியால் விலங்குகளின் உள்ளுறுப்புக்களை பாகம்பாகமாக பிரித்துக்காட்டினால் போதுமென்றாகிவிட்டபின்னர் வேலை மிகவும் குறைந்துவிட்டது. கைகள் நடுங்க கணினி ஸ்விட்ச்சை இயக்கியதும் தன்னையறியாமல் மாணவர்களை திட்டத்துவங்கிவிடுவார். ’என்னத்தை படிச்சு என்னத்தை பண்ணுவீங்களோ’ என்பதுபோல என்நேரமும் வசவுகள்  வந்தபடி இருக்கும்.

 

உபயோமின்றி போய்விட்ட அந்த ஏராளமான தகர ட்ரேக்களை அடிக்கடி கழுவிதுடைத்து மாற்றி மாற்றி  அடுக்கி வைத்துக்கொண்டிருப்பார். பணி  நிறைவடைந்த பின்னரும் அடிக்கடி வந்து ஆய்வக வாசலில் கைகளைக்கட்டிக்கொண்டு  நின்று மாணவர்களை பார்த்துக்கொண்டு நின்றிருப்பார் அவரும் தோட்டானைப்போல என்று இப்போது தோன்றுகிறது.

 

பழையன கழிதலும் என்பது அந்த பழையதிலேயே தன் வாழ்நாளின் பெரும் பகுதியை கழித்தவர்களுக்கு எத்தனை குழப்பத்தை உளைச்சலை புரியாமையை கொடுத்திருக்கும் என்று  ஒருமுறைகூட நினைத்துப்பார்த்ததே இல்லை இந்த கதையை வாசிக்கும் வரையிலும்

 

இந்தக்கதையில் சாந்தியின் குரலுக்காக தேடிவந்த அவள் கணவனைக்காட்டிலும் ஸீரோவை தினம் கேட்கும்  தோட்டானும், யாராலுமே கவனிக்கப்படாமலிருந்த குரலை கொடுத்துவிட்டு சாலைவிபத்தில் செத்துப்போன சாந்தியும்  மனதில் எப்போதுமே இருக்கும் மாறாத துக்கமான  சில நினைவுகளைப் போலாகி விட்டிருக்கின்றனர்.

 

தினம் வரும் கதைகளை படிக்கையில் மனதின் அடியாழத்தில் புதைந்து போயிருக்கும் யார் யாரோ எழுந்து வந்தபடியே இருக்கிறார்கள் எனக்கு. எத்தனை விதமான கதைகளை தினம் எழுதுகிறீர்கள் என்று மலைப்பாக இருக்கிறது

 

அன்புடன்

லோகமாதேவி

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஜெ

 

முற்றிலும் வேறுவேறு வகையான கதைகள். வேரில் திகழ்வது ஒரு இன்வெஸ்டிகேஷன் கதை. அதை பலவகையான கதைகளுக்குள் சுற்றியிருக்கிறது. ஒரு கதையை ஔசேப்பச்சன் சொல்கிறார். அருகே ஒரு கதை நடக்கிறது. இரண்டு கதைகளும் இணைகின்றன

 

நல்ல இன்வெஸ்டிகேஷன் கதைக்குரிய அம்சம் என்னவென்றால் அதில் முற்றிலும் புதிய நிலக்காட்சிகள் வரவேண்டும். நிகழ்ச்சிகள் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கவேண்டும். மன உணர்வுகள் இருக்கக்கூடாது. அவற்றை உணர்த்தியிருக்கவேண்டும். கதை பரபரவென்று செல்லவேண்டும். ஔசெப்பச்சன் போன்ற நல்ல கதைசொல்லி சொல்லும்போது எல்லாம் கூடி வந்திருக்கிறது கதையில்

 

மங்களூரின் டீடெயில்கள் நீங்கள் காசர்கோட்டில் நீண்டகாலம் இருந்தமையால் வந்தது என நினைக்கிறேன்

 

ராஜன்

 

 

ஜெ.

 

வணக்கம்.

 

வேரில் திகழ்வது படித்தேன். பெரும்பாலும் தாங்கள் இதுபோன்ற துப்பறியும் கதைகள் எழுதுவது இல்லை. குற்றவாளியைச் சொல்லிவிட்டு பின் பிடிபட்ட விவரம் சொல்லும் இது புதுமாதிரியான் உத்தி. இரு கதைகள் இணைந்து ஒரு கதையாயிருக்கின்றன. ஒரு கதவு மூடினால் மற்றொன்று திறக்கும் என்பார்கள். மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலோரிடம் ஏதாவது ஒரு தனித்திறன் மறைந்துகொண்டுதான் இருக்கிறது.மேடைப் பேச்சு, பாடுதல், ஓவியம் வரைதல், . இதுபோன்று நான் கண்டிருக்கிறேன். ஆனால் அவளின் இத்திறன் புது வகையாய் உள்ளது

 

தங்கள் கதைகளில் இது சிறப்பான இடத்தைப் பெறுகிறது

 

வளவ துரையன்

 

முந்தைய கட்டுரைஇடம், ஆயிரம் ஊற்றுக்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைலூப் ,சூழ்திரு -கடிதங்கள்