வான்கீழ் [சிறுகதை]

“ஏல நொண்டி, அப்ப நீயும் கைக்கு சீட்டு எறக்கியாச்சு என்னலே?” என்று அருணாச்சலம் நாடார் கேட்டார்.

குமரேசன் தயங்கிப் புன்னகைத்து “இல்லண்ணா, சும்மா” என்றான்.

“என்ன சும்மா? நீ அந்த குட்டிக்க கிட்ட பேசிட்டிருக்கிறத பாத்தாலே தெரியுமே… ஏலே கெந்தர்வனை கண்ணைப் பாத்துக் கண்டுபிடிக்கலாம்னாக்கும் சொல்லு, தெரியுமா?”

“இல்லண்ணே அப்டி ஒண்ணும் இல்லை…”

“லே, நீ ஒரு கண்ணாடியை எடுத்து உனக்க முகத்தை பாரு… உனக்கே தெரியும்.”

குமரேசன் சிரித்தபடி விலகிச் சென்றான். அப்பால் ராஜம்மை தங்கனிடம் பேசிச் சிரித்துக்கொண்டு விலகிச் சென்றாள். அவளுடைய நீண்ட பின்னல் பின்பக்கம் ஆடி நெளிந்தது. கையில் டீ கொண்டுவந்த பெரிய போணியும் பலகாரப்பையும் இருந்தன. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய கன்னங்கரிய மென்மையான கால்கள் பாவாடையின் அலைகளுக்குக் கீழே தெரிந்தன.

“லே டிஸ்கோ, போரும்லே வெள்ளம் இறக்கினது… போய் சோலியப்பாருலே.”

அவன் இடக்கால் ஒல்லியானது ஆகவே அதில் காலை ஊன்றி ஊன்றி நடக்கும்போது அவன் ஒரு நடனத்தை ஆடுவது போலிருக்கும். ஆகவே அவனுக்கு டிஸ்கோ என்று தோழர்கள் பெயரிட்டிருந்தார்கள். அவனுடைய சொந்தப் பெயரைச் சொல்லி கூப்பிடுபவர் அருணாச்சலம் நாடார் மட்டும்தான்.

மூன்று வாரங்களாக நடந்துகொண்டிருந்த டவர் எரக்‌ஷன் வேலைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டிருந்தன. மேலே இருக்கும் கிரேனிலிருந்து கீழிறங்கி வந்த இரும்புக்கயிற்றில் ராடுகளும் பிளேட்டுகளும் மாட்டப்பட்டன. அவை சீராக மேலேறிச் சென்றன. இரும்புக்கயிறு மேலேறுவதை பார்த்தால் தெரியாது. ஆகவே அந்த பொருட்கள் வண்டுகள் போல டவரின்மேல் ஊர்ந்து ஏறுவதாகத் தோன்றும். அவன் அண்ணாந்து பார்த்தான். மிகமிக உயரத்தில் ஒரு பறக்கும் கூண்டு போல டவரின் உச்சி நின்றிருந்தது. அங்கே மஞ்சள்நிறமான சிறுபூச்சிகள் போல கண்ணன், சிவபாலன், ஆப்ரகாம், பஷீர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அங்கே வெல்டிங் நடந்து கொண்டிருந்தது. அதன் பொறிகள் பறப்பது ஒளியற்று சிறிதாகத் தெரிந்தது.

“லே டிஸ்கோ, எங்கலே போனே… நம்பர் போட்டியாலே?” என்றார் ஏசையா.

“இந்நா போடுதேன்… பாதிபோட்டாச்சு.”

“இஞ்சபாரு, வேலை முடியல்லைன்னா எடுத்துப் போட்டு சப்பீருவேன்.. என்னைய உனக்குத்தெரியும்.”

குமரேசனுக்கு ஏசையாவை நன்றாகவே தெரியும். ஏசையா அன்பானவர். பிறர் பசித்திருக்க விடாதவர். சந்தைமுக்கு கடையில் வேலைக்கு இருந்த அவனை முதலாளி போகச் சொல்லிவிட்டதும் அவர் ஒருவர்தான் “ஏன்லே அளுவுதே?” என்று கேட்டார்.

அவன் கண்ணைத் துடைத்துக் கொண்டு இல்லை என்று தலையசைத்தான்.

“சொல்லுலே” என அதட்டினார்.

அவன் “வேலைக்கு வராதேன்னு சொல்லிப்போட்டாரு.”

“ஏன்.”

“நிக்கமுடியல்ல.”

“உனக்கு காலு வெளங்காதுல்லா, அது தெரியாதா அவனுக்கு?”

“அவரு சொன்ன சாமானை ஓடிப்போயி எடுக்கல்லே… அதனாலே என்னைய அடிச்சு…” என்று அவன் மீண்டும் விம்மினான்.

அவர் அவன் தலையை தொட்டு “போட்டுலே மக்கா… நீ எனக்க கூட வா…” என்றார்.

அவர் டெலிஃபோன் டவர் எரக்‌ஷன் காண்ட்ரக்டர் பாலசுந்தரத்திடம் வேலைபார்த்தார். முதன்மையாக வெல்டர். எல்லா வேலைகளையும் செய்வார். அவன் அவருடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் ஊரைவிட்டு கிளம்பியபோது அவனும் கிளம்பினான். பிறகு அவன் ஊருக்குச் செல்லவே இல்லை. அங்கே அவனுக்கு யாருமே இல்லை.

டவர்களுக்கான கான்கிரீட் அடித்தளத்தை வேறு கட்டுமான நிறுவனம் கட்டி அவர்களிடம் கையளிக்கும். அவர்கள் சென்று அங்கேயே முகாமடித்து ஒருமாதத்தில் கட்டி மேலெழுப்பி அதை டிபார்ட்மெண்டுக்கு கையளித்துவிட்டுச் செல்வார்கள். ஒரே மாதத்தில் ஆயிரம் அடி உயரம் வரை இரும்புக்கோபுரம் எழுந்துவிடும். அது முழுக்க முழுக்க முன்னரே டிசைன் செய்யப்பட்டு தனித்தனி உறுப்புகளாக வார்க்கப்பட்டு நீளமான லாரிகளில் அங்கே வந்து சேரும். அதை இறக்கி அடுக்கி அப்பகுதியெங்கும் நிறைத்து வைத்திருப்பார்கள்.

ஒரு டவருக்கு உரிய இரும்புப்பொருட்கள் ஒரு ஏக்கர் நிலம் அளவுக்கு ஆளுயரக் குவியல்களாக பரவியிருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண் உண்டு. அவற்றுக்கு மூன்றாம் குழு எண்ணும் இரண்டாம் குழு எண்ணும் முதலாம் குழு எண்ணும் உண்டு. அவற்றின் அடிப்படையிலேயே அவை அடுக்கப்பட்டிருக்கும் அவற்றை தூக்கி அவற்றின் எண்ணை நோக்கி அதற்குரிய இடத்தில் பொருத்தி ஸ்க்ரூவால் இறுக்குவதும் வெல்டிங் செய்து பொருத்துவதும்தான் வேலை. தானாகவே கோபுரம் எழுந்துவிடும். ஸ்க்ரூவை இறுக்குவதற்கு இயந்திரங்கள் இருந்தன.

கீழிழுருந்து மேல்மேலாக அடுக்கிக் கொண்டே செல்வார்கள். மஞ்சள்குருவிகள் போல ஊழியர்கள் அதன் இரும்புப் பட்டைகள் மேல் தொற்றி அமர்ந்திருப்பார்கள். அவர்களின் இடுப்பிலிருந்து நைலான் பட்டைகள் கோபுரத்தின் கம்பிகளில் கட்டப்பட்டிருக்கும். எல்லா கருவிகளும் அவ்வாறு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். ஆனாலும் விபத்துக்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

அவன் வந்து இரண்டு ஆண்டுதான் ஆகிறது. அதற்குள் ஏழுமுறை வெவ்வேறு பொருட்கள் விழுந்து கீழே நின்றிருப்பவர்களுக்கு அடிபட்டிருக்கிறது. தலையில் ஹெல்மெட் எப்போதும் தேவை என்பது சட்டம். ஆகவே பெரும்பாலும் தோளிலோ கையிலோதான் அடிபடும். எலும்பு முறிந்துவிடும். மீண்டுவர பலமாதங்களும். ஒரே ஒருமுறை டீகொண்டுவந்த சுப்பராமன் என்ற பையனின் தலைமேல் விழுந்து அவன் அங்கேயே இறந்திருக்கிறான்.

டவர்கள் ஒருதுளிக் குருதியை வாங்காமல் முழுமை பெறுவதில்லை என்று அருணாச்சலம் நாடார் சொல்வதுண்டு. எவருக்காவது ஒரு சிறு காயமாவது வரும். ஒரு சொட்டு ரத்தம் அந்த உலோகக் கோபுரத்தில் படும். அது நிகழ்ந்ததும் “ரெத்தம் பாத்துப்போட்டே” என்று அருணாச்சலம் நாடார் சொல்வார். சிறிய காயம் என்றால் “நல்லவேளைடே, இம்பிடு போதும்னு நினைச்சுப்போட்டு” என்பார்.

அது ஒரு தெய்வம், மாடன் கூமன் காளன் போல. கரும்பனை போல உடல் பெருக்கி தலைக்குமேல் எழுந்து நிற்கும் விஸ்வரூப தெய்வங்களைப் பற்றி அவன் கேட்டிருக்கிறான். டவர் அவற்றையெல்லாம் காலடியில் சிறிய செடிகளை போல ஆக்கி அனைத்துக்கும் மேல் எழுந்து நிற்கும் பெரிய தெய்வம். “இரும்புமாடன்” என்று அருணாச்சலம் நாடார் சொல்வார்.

குமரேசன் எண்களை பெயிண்டால் பெரிதாக எழுதினான். அவை அந்த உலோகப்பட்டையில் சிறிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். கண்ணுக்கு நன்றாகத் தெரியும்படி மஞ்சள் பெயிண்டால் எழுதுவது அவன் வேலை. அவை ஒரே இடத்தில் தெளிவாக எழுதப்படவேண்டும். எழுதிய ராடுகளை தூக்கித் தண்டவாளம் போல போடப்பட்டிருந்த இரண்டு ஜி.ஐ பைப்புகள் மேல் வைத்து உருட்டிக் கொண்டு சென்று வெளியே வைத்தான். அவற்றை அங்கிருந்து எடுத்து அடுக்கினர் கணபதியும் கிறிஸ்துதாஸும்.

அவை அங்கிருந்து இன்னொரு அடுக்குக்குச் செல்லும். அங்கிருந்து கிரேன்களில் பொருத்தப்படும். கிரேன்களின் கொக்கிகளில் அவற்றை பொருத்த எட்டுபேர் நின்றனர். அவர்களை மேற்பார்வையிட ஜோசப் சார் நின்றார். தன் கையிலிருந்த பேடில் அந்த எண்ணை அவர் குறித்துக்கொண்டார்.

அத்தனை வேலைகளும் திரும்பத்திரும்ப செய்யப்படுவன என்பதனால் பெரிய குழப்பங்கள் இல்லாமல், பேச்சுக்களோ கூச்சல்களோ இல்லாமல், இயல்பாக நடைபெறும். ஆனால் வேடிக்கைப் பேச்சு அனுமதிக்கப்படுவதில்லை. கவனச்சிதறல் ஏற்பட்டால் மேலே சென்ற பொருளைத் திரும்ப கீழே கொண்டுவர வேண்டியிருக்கும். அதன்பிறகுதான் அடுத்த பொருள் மேலேற வேண்டும். அந்த இடத்திற்கு எந்தபொருள் தேவையோ அது மட்டும்தான் செல்லமுடியும். அங்கே வேறொன்று அமையவே முடியாது. வரிசை மாறமுடியாது.

அந்த எண்ணம் வந்த நாட்களில் குமரேசனை திகைக்க வைத்திருக்கிறது. அந்த இடத்தில் பற்பல அடுக்குகளாக பரவியிருக்கும் இரும்பு ராடுகளில் ஒவ்வொன்றுக்கும் ஓர் இடம் உள்ளது. பிற ஒன்று அமைய முடியாத இடம். அங்கே செல்வதற்காக அது காத்திருக்கிறது. அங்கே சென்றதும் அப்படியே அமைந்து விடுகிறது.

எழுதி முடித்து அவன் கைகளைக் கோத்து வளைத்து சொடக்குவிட்டான். அருணாச்சலம் நாடார் கைகாட்டினார். வேலைகள் நின்றன. அனைவரும் மதிய உணவு உண்ணும் பொருட்டு சென்று அமர்ந்தார்கள். மேலிருந்தவர்களுக்கு சாப்பாட்டை ஒரு கூடையில் வைத்து கட்டி கிரேனிலேயே அனுப்பினார்கள் மேலே செல்வதும் இறங்கி வருவதும் கடினமானவை. ஒருவரின் உடல் மட்டும் கொள்ளும் கூண்டு அமைக்கப்பட்ட இரும்பு ஏணிப்படி செங்குத்தாக மேலே உச்சிவரைக்கும் செல்லும். ஒவ்வொரு படியாக காலெடுத்து வைத்து மேலேறிச் செல்லவேண்டும். நான்கு இடங்களில் நின்று இளைப்பாற சிறிய தளங்கள் உண்டு. அனைவரும் பழகியவர்கள்தான் என்றாலும் கடுமையானது அது. சில கிரேன்களில்தான் மனிதர்களுக்கு லிஃப்ட் அமைக்கப்படும். அது பெரும்பாலும் டவர் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சீனியர்கள் மேலே செல்லவேண்டிய நிலை வரும்போது மட்டும்தான்.

குமரேசன் தின்னர் விட்டு கைகளை கழுவினான். அதன்பின் துணிசோப்பு போட்டு மூன்றுமுறை கழுவினான். கொஞ்சம் வாடை மிஞ்சியிருக்கும். ஆனால் அவன் அதை விரும்ப பழகியிருந்தான். அருணாச்சலம் நாடாருடன் அங்கே அந்த வேலைக்கு வந்த சிலநாட்களில் அவனுக்கு உணவே இறங்கவில்லை. திரும்ப ஓடிவிடலாமா என்றுகூட தோன்றியது. அவர்தான் “லே, இது உனக்க சோறாக்கும்… ஒவ்வொருத்தன் சோறிலயும் ஒரு மணம் உண்டு. வேலைக்க மணமுள்ள சோறு கடவுளுக்க ஆசீர்வாதம் உள்ளதாக்கும் கேட்டுக்க” என்றார்.

அவன் வெல்டிங் கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டிருந்தான். சிறிய சிறிய பொருட்களை உருக்கி இணைப்பான். பெரும்பாலும் டவர் வேலை தொடங்குவதற்கு முன்னரே அதை அவனும் அருணாச்சலம் நாடாரும் சேர்ந்து அமர்ந்து செய்வார்கள். கண்ணப்பனும் லாரன்ஸும் அவனுடன் இருப்பார்கள்.

அவர்களுக்கு அவர்களின் முகாமிலேயே சமையல். அங்கிருந்து டிபார்ட்மெண்ட் வேனில் சோறும் கறியும் பெரிய கலங்களில் வந்தன. சமையற்காரர் குமாரன் அண்ணன் பரிமாறினார். பசிநேரம் தாளித்த குழம்பின் மணம் இனிமையாக இருந்தது. கொட்டகையில் அவனும் ஐசக் அண்ணனும் தனியாக தட்டுகளுடன் அமர்ந்தனர்.

ஐசக் “என்னவாக்கும் அருணாச்சலம் நாடார் கேட்டாரு?” என்றான்.

“என்ன?” என்றான் குமரேசன்.

“லே, நான் கேட்டேன் பாத்துக்க.”

“கேட்டேல்ல? பிறவு என்ன?”

“நீ எதுக்குலே அந்தக்குட்டிய வளைக்க பாக்குதே? ஏல உனக்கோ சட்டுகாலு. உன்னைய நாங்க டிஸ்கோன்னு விளிக்குதோம். அவ பாக்க நல்ல எருமைக்கண்ணு மாதிரி இருக்கா… இங்கிண இப்பம் எட்டுபேரு அவளைப் பாக்குதாக.. எஞ்சீனியருக்கு கூட ஒரு நோட்டம் உண்டு.”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“சத்தியமாட்டு. நேத்து அவ சாயை கொண்டு வந்தப்பம் இவரு தனியாட்டு நாலஞ்சு வார்த்தை பேசுறத பாத்தேன்… கண்ணு மின்னிட்டிருந்தது.”

“கெட்டுவாரா?”

“சேச்சே, சாதிமாறி கெட்டமாட்டாரு. அவரு வெள்ளாளராக்கும்… ஆனா நல்ல அமௌண்டு குடுப்பாரு… வேணுமானா. அவளுகளுக்கு அதுவும் பார்வை இருக்கும்.”

“நாறப்பேச்சு பேசாதே என்ன?” என்றான் குமரேசன்.

“நான் பலதும் கண்டவனாக்கும்” என்றான் ஐசக். “அவளுகளுக்கு தோலு வெளுப்பும் மினுப்பும் பிடிக்கும். பின்ன இந்தமாதிரி மண்ணில பொரளுத குட்டிகளுக்கு நல்ல சட்டை போட்டவனுகள்னா ஒரு இது… அதுவும் கண்ணாடி போட்டிருந்தா பிறவு சொல்லவே வேண்டாம்.”

குமரேசன் “போரும்… நான் அப்டி ஒண்ணும் நினைக்கல்ல… ஏன் கால நொண்டுதேன்னு கேட்டேன். முள்ளு குத்திச்சுன்னு சொன்னா, அம்பிடுதான்.”

“நாம ரெண்டாளும் இப்பம் நல்ல ஜோடி, சேந்து நொண்டுவோமான்னு கேக்கவேண்டியதுதானே?”

குமரேசன் ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய ஊனம் பற்றிய பேச்சு அங்கே எப்போதும் உண்டு. அதற்கு பதிலே சொல்லக்கூடாது.

“நாராயணனுக்கு அவளைக் கெட்டினா என்னான்னு ஒரு ஐடியா உண்டு. எனக்க கிட்ட கேட்டான். அவன் நல்ல உறப்புள்ள ஆணாக்கும். நல்ல வேலையும் இருக்கு. ஊரிலே அவனுக்கு வீடும் ஒண்ணரை ஏக்கர் மண்ணும் உண்டு… செரி கேட்டுப்பாருன்னு சொன்னேன். அவளுக்க கிட்ட அவன் பேசி வச்சிருக்கான்னு நினைக்கேன்.”

“அவ என்ன சொன்னா?”

“பாத்தியா கேக்குதே பாத்தியா? அப்ப உனக்கு கண்ணு உண்டு” என்று ஐசக் அண்ணன் சிரித்தார்.

“இல்ல, சும்மா.”

“அவளுக்கு பிடிச்சிருக்குன்னாக்கும் நாராயணன் சொல்லுகது… ஆனா இடையிலே ஏறி சந்திரனும் முட்டுதான். அவளுக்க கிட்ட அவனும் சிரிக்கான்… முத்துநாயகமும் அவளை சினிமாவுக்கு வாறியாடின்னு விளிச்சிருக்கான்… எல்லாவனும் அவளுக்கு தூண்டில் போட்டிருக்கானுக… எப்டீன்னாலும் ஒருத்தன்கிட்ட அவ விளுவா.”

விசில் ஓசை கேட்டது. அவன் கைகளை கழுவிக்கொண்டு ராடுகளை எடுக்கச் சென்றான்.

அருணாச்சலம் நாடார் அவனிடம் “எஸ் வரிசைய செக்பண்ணி இந்தாலே போடுலே” என்றார்.

டவர் முழுமையாகவே கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இரும்பு மேலே சென்றுகொண்டே இருந்தது. அன்று வெயில் இறங்குவதற்குள் முடிந்துவிடும் என்று சொன்னார்கள். அவன் கையை கண்மேல் வைத்து மேலே பார்த்தான். அது வானில் குத்துவதுபோல எழுந்து நின்றது.

ராஜம்மை சாயங்காலம் அனைவருக்கும் டீ கொண்டுவந்தாள். அருகில்தான் அவளுடைய அம்மா நடத்திவந்த டீக்கடை. அவள் அப்பா பனையிலிருந்து விழுந்து எழமுடியாமல் ஆன பின்னர் அம்மா அதைத் தொடங்கி நடத்திவந்தாள். டீ பலகாரத்திற்கு மட்டும் அங்கே சொல்லியிருந்தார்கள். அதை நான்கு கிலோமீட்டர் அப்பாலிருக்கும் கூடாரத்திலிருந்து கொண்டுவர முடியாது.

அவள் டீயும் பச்சரிசி சுறுக்காவும் உளுந்துவடையும் பரிமாறியபோது ஒவ்வொருவரும் கேலியாக ஒவ்வொன்று சொன்னார்கள். அவள் எல்லாவற்றுக்கும் சிரித்தபடி பதில் சொன்னாள். வேடிக்கைப்பேச்சில் அவளை எவரும் மடக்கிவிடமுடியாது. டீக்கடையில் வருபவர்களிடம் பேசிப்பேசி பழகிவிட்டிருந்தாள்.

“லே, நம்ம கோணை செல்லப்பன் ஒரு பிரச்சினை சொன்னான்… அவனுக்க எருமைக்க மடியும் காம்பும் உடம்பும் ஒரே மாதிரி கறுப்பா இருக்கதனாலே கண்டுபிடிக்க முடியல்லியாம்,”

அனைவரும் சிரித்தனர். அவள் “வடை வைக்கவா?” என்றாள்.

“நீ என்னடி சொல்லுதே?”

“அண்ணா, எருமைக்கு கொம்பும் நல்லா கறுப்பாத்தானே இருக்கும்?”

“செத்தாம்லே!”

அதற்கும் சிரிப்பு. அவள் அப்பால் சென்றுவிட்டாள்.

“அவள பேசி மடக்க முடியாது மக்கா. நாளைக்கு நல்லா வேற யோசிச்சு கொண்டுவா என்ன?”

குமரேசன் அவள் நாராயணனிடமோ சந்திரனிடமோ கண்களால் பேசுகிறாளா என்று பார்த்தான். அவள் அவர்களிடம் அனைவரிடம் பேசுவது போலத்தான் சிரித்து ஓரிரு சொற்கள் சொன்னாள். பந்தி விருந்தில் நெய்விடுவதுபோல அவளுடைய பேச்சு. மிகச்சரியாக இரண்டு துளி, ஒவ்வொருவருக்கும். ஆனால் சந்திரனும் நாராயணனும் பரவசநிலையில்தான் இருந்தனர். அவர்களின் முகங்கள் மலர்ந்திருக்க கண்கள் கஞ்சா அடித்ததுபோல விரிந்திருந்தன.

குமரேசன் சோர்வாக உணர்ந்தான். அவர்கள் இருவருமே எல்லா தகுதியும் கொண்டவர்கள். சந்திரன் கொஞ்சம் மாநிறமும் கூட. சுருட்டை முடிக்காரன். அவர்களுடன் அவனுக்கு ஒப்புமையே இல்லை. அவன் ஒல்லியானவன், இன்னும் வேலை நிலைக்கவில்லை, வேண்டியவர்கள் என்று யாரும் இல்லை, நொண்டியும்கூட.

“ஏம்லே சடைஞ்சு போயிட்டே?” என்றான் ஐசக் அண்ணன்.

“இல்ல.”

“நான் சொன்னதைக் கொண்டா? லே, பாக்க நல்லாருக்க குட்டின்னா எல்லாரும் முட்டத்தான் செய்வானுக. நாமளும் முட்டலாம். வந்தா லாபம். வரேல்லன்னா ஒரு நல்ல இனிப்பு நாக்கிலே நுணையுத சுகம் இருக்குல்லா?”

நான் அப்படி இல்லை என்று குமரேசன் சொல்லிக் கொண்டான். நான் செத்துப் போய்விடுவேன். நான் இங்கிருந்து எங்கேயாவது ஓடிப்போய்விடுவேன். அவனுக்குக் கண்ணீர் வந்தது.

“ஒண்ணு செய், அவளுக்க கிட்ட அவளுக்க அழகை புகழ்ந்து என்னமாம் சொல்லு… அப்ப அவ கண்ணு எப்டீன்னு பாரு. பிடிச்சிருந்தா ஒரு சந்தோசம் தெரியும்லே… எரிச்சல் தெரிஞ்சா விட்டிரு. சும்மா திரும்பிட்டு போனாள்னா மறுக்கா முட்டிப்பாரு.”

அவன் அவளிடம் என்னால் கண்களை நோக்கி பேசவே முடியாது என்று எண்ணிக் கொண்டான். அங்கே வந்தபின்னர் ஒவ்வொரு நாளும் அவளைப் பார்த்தான். பலநூறுமுறை மனதால் பேசினான். அன்றுதான் ஒரு வார்த்தை கேட்டான். அவள் சாதாரணமாக ஒரு சொல் பதில் சொன்னாள். அவ்வளவுதான். அதற்குள் அவன் கால்கள் தளர்ந்துவிட்டன. கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன.

அந்தியில் வேலை முடிந்தது. படிகள் வழியாக மேலிருந்தவர்கள் இறங்கி வந்தனர். எஞ்சீனியர் எல்லா கணக்குகளையும் சரிபார்த்து ஏசையா, குமரேசன் ஜோசப் சார் மூவரிடம் கையெழுத்துக்கள் வாங்கிவிட்டு பைக்கில் கிளம்பிச்சென்றார். மேலிருந்து இறங்கியவர்கள் நன்றாகக் களைத்திருந்தனர். ஒருவருக்கொருவர் முனகலாகப் பேசிக்கொண்டனர் . பீடிகளை வாங்கிப் பற்றவைத்தனர்.

“இண்ணையோட வேலை முடிஞ்சாச்சா?” என்று அவன் ஐசக்கிடம் கேட்டான்.

“முடிஞ்சாச்சு… நாளைக்கு சில்லறை பணிகள் இருக்கும். எஞ்சீனியர் மேலே போயி பாப்பார். பெரிய எஞ்சீனியர் வரணும்… கைமாறுகதுக்கு ஏளெட்டுநாள் ஆயிடும்.”

அதுவரை அவர்களுக்கு ஓய்வுதான். ஆனால் கூலி உண்டு. அப்போது பெரும்பாலும் குடித்துவிட்டு படுத்தே கிடப்பார்கள். சினிமா பார்ப்பார்கள்.

அனைவரும் தின்னர் டப்பாவில் கைவிட்டு கழுவிக் கொண்டார்கள். பின்னர் சோப்பு போட்டு கழுவினர். ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்றார்கள். குமரேசன் அங்கேயே இருக்கவேண்டும். அவன்தான் ஸ்டோர் காவல். வேறு ஒரு செக்யூரிட்டியும் உண்டு, ஆனால் அவர்களின் குழுவில் இருந்தும் ஒருவர் இருந்தாகவேண்டும்.

அனைவரும் சென்றபின் குமரேசன் அங்கே கட்டப்பட்டிருந்த கூடாரத்தின் முன்னால் போடப்பட்ட நாடா கட்டிலில் அமர்ந்தான். உடல் அசதியாக இருந்தது. செல்பவர்கள் அனைவரும் இன்னும் சற்றுநேரத்தில் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அவன் ஒரு பீடி பற்றவைத்தான். அதை இழுத்து நீலப்புகையை விட்டுக்கொண்டிருந்தபோது தொலைவில் அவன் ராஜம்மையின் அசைவைக் கண்டான். உள்ளம் திடுக்கிட்டது. பீடியை கீழே போட்டுவிட்டு எழுந்து நின்றான்.

ராஜம்மையேதான். அவள் அருகே வந்து “நான் இங்க என்னமாம் போட்டுட்டுப் போனேனா?” என்றாள்.

“என்னது?”

“சாவி… டீஈ சாருக்க அறைக்க சாவி… கீள விளுந்துபோட்டு.”

“பாக்கல்லியே.”

அவள் தேட ஆரம்பித்தாள். அவள் முன்பு சென்ற இடங்களில் எல்லாம் பார்த்தாள். அவன் அவளுடைய அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன ஒரு மின்னும் கருமை. உதடுகள் கூட நல்ல கருப்பு. கண்கள் மட்டும் சிப்பிகள் போல வெண்மை. அந்தியின் வெளிச்சத்தில் அவள் கன்னங்களும் கழுத்தும் விளைந்த நாகப்பழத்தின் மென்மையான பளபளப்பைக் கொண்டிருந்தன.

“அய்யோ அம்மை வந்தா நான் என்ன சொல்வேன்…” என்று அவள் ஏங்கினாள். கண்களில் கண்ணீர் துளித்தது.

“இரு நான் தேடித்தாறேன்…” என்றான். “நீ அதை எங்க வச்சே?”

“நான் டீயும் வடையும் கொண்டு வாரப்ப டீ.ஈ சார் போனபிறவு பியூன் ரூமை பூட்டி சாவிய எனக்ககிட்ட குடுத்தாரு.”

“ஆரு?”

“பியூன் கிருஷ்ணபிள்ளை.”

“செரி.”

“அதை நான் கொண்டுவந்தேன்…”

“நீ டீ கொண்டுவந்தேல்லா? அப்ப சாவிய எங்க வச்சே?”

“இங்க” என்று அவள் தன் தாவணியின் முடிச்சை காட்டினாள். இங்க முடிச்சுபோட்டு இப்டி செருகி வச்சேன்.”

“ஓ” என்று அவன் சொன்னான். “நீ கை களுவினேல்லா?”

“ஆமா போறதுக்கு முன்னாலே.”

“அப்ப முகம் துடைச்சியா.”

“ஆமா.”

“அங்க கெடக்கும்… வா காட்டுதேன்.”

அவள் முகம் கழுவிய இடத்தில் சேறு காய்ந்திருந்தது. பித்தளைச் சாவி பாதி புதைந்து கிடந்தது.

“அய்யோ!” என்று பாய்ந்து எடுத்துக்கொண்டாள். “யப்பா! என்னமா இருக்கு தெரியுமா?”

“ஏன்? ஜங்சனுக்கு போனா வேற சாவி கிடைக்கும். இல்லேன்னா வெல்டரிட்ட சொன்னா உடைச்சு குடுப்பான்.”

“உடைக்கிறதா? அது டிஇ ஆபீஸ் தெரியுமா? நானாக்கும் துடைச்சு கிளீன் செய்து வைக்குதது. நாலாம் மாடியிலே… அங்க பாத்தியா, அங்க.”

“ஆமாம்” என்றான் குமரேசன். “அந்த நரைச்சதலை ஆளுதானே டிஇ?”

“அவருதான்… அவராக்கும் இந்த எடத்துக்க ராஜா… இந்த எடம் முளுக்க அவருக்க காலுக்க கீளயாக்கும். அம்மை அவருக்க காரைப் பாத்தாலே கும்பிடுவா.”

“அது உங்களுக்கு… இங்க பாத்தியா இந்த டவராக்கும் எங்க சாமி… இரும்புமாடன்.”

அவள் அண்ணாந்து பார்த்தாள். அவன் அவளுடைய குருத்து போன்ற அழகான கழுத்தை பார்த்தான்.

அவள் அவனிடம் திரும்பி “மேலே போகலாம் இல்லியா?” என்றாள்.

“போலாமே.”

“நீ போவியா?

“பின்ன?”

அவன் ஒரே ஒருமுறைதான் மேலே போக முயன்றான். அவனால் ஏற முடியவில்லை.

“நான் போலாமா?”

“மேலயா?”

“ஆமா.”

அவன் ஒரு கணத்தில் துணிந்தான். “நான் கூட்டிட்டுப் போறேன்… வாறியா?” என்றான்.

“அய்யோ… இப்பமா?”

“இப்பம் போகமுடியாது. வெளிச்சமில்லை” என்றான். “நாளைக்கு காலம்பற ஒரு நாலரை மணிக்கு வா… அஞ்சு அஞ்சரைக்கு மேலே போகலாம்… ஆறரை ஏளுக்குள்ள கீளே வந்திடலாம்…”

“அய்யோ.”

“இந்த செக்கூரிட்டி காலம்பற அவருக்க வீட்டுக்குப் போயிட்டு எட்டுமணிக்குத்தான் வருவாரு… எங்காளுக எட்டரை ஒம்பதுக்குத்தான் வருவாங்க.”

கண்கள் விரிய “வரட்டா?” என்றாள்.

“வா” என்றான்.

“சத்தியமாட்டு வருவேன்.”

“வான்னு சொன்னேன்லா?”

“செரி வாறேன்.”

“நான் காத்திருக்கேன்.”

“செரி” என்றபின் மெல்ல குதித்து “அய்யோ!” என்றாள் “சத்தியம்தானே? வெளையாட்டு இல்லல்ல?”

“சத்தியமா.”

“அய்யோ!” என்று மீண்டும் கைகொட்டிக் குதித்தாள்.

“டீயெல்லாம் குடிக்க நிக்கவேண்டாம்…” என்றான்.

“அய்யோ இல்ல, அடுப்ப பத்தவச்சா அம்மைக்குத் தெரியும்… நான் தெரியாம வாறேன்.”

“சரி…” என்றான்.

அவள் பெருமூச்சுகளாக விட்டாள். மீண்டும் டவரை அண்ணாந்து பார்த்தாள். பிறகு அவனிடம் “நீ எதுக்கு பீடி பிடிக்கே?” என்றாள்.

“சும்மா.”

“நாத்தம்” என்றாள். பிறகு “சத்தியமா மேலே போறம்ல?” என்றாள்.

“சத்தியமாட்டு” என்றான் குமரேசன்.

அவள் சென்றபோது தளர்ந்த நடைகொண்டிருந்தாள். இருமுறை திரும்பிப் பார்த்தாள் இருட்டு பரவிய நேரம் அவளுடைய புன்னகை வெண்ணிறமாக துலங்கித் தெரிந்தது.

குமரேசன் மீண்டும் கட்டிலில் படுத்தான். இரவுக்கு அவனுக்கு அங்கேயே ரொட்டி வைத்திருப்பான். அன்றைக்குச் சப்பாத்திச் சுருள். அதை சாப்பிட்டான். மூச்சு திணறுவதுபோல் இருந்தது. அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து ஸ்டோர் யார்டைச் சுற்றி நடந்தான். பெரும்பாலும் காலியாகிவி ட்டிருந்தது. டார்ப்பாய்களும் கட்டுகம்பிகளும் உதிரி இரும்புச் சாமான்களும் மட்டும்தான் எஞ்சியிருந்தன.

செக்யூரிட்டி அலக்ஸாண்டர் வந்தார். பழைய மிலிட்டரிக்காரர். பெரிய புஸ்தி மீசையில் கன்னங்கரிய சாயம் பூசியிருந்தார். அழுக்குப்பச்சை யூனிஃபாம். அவனை அவர் பொருட்டாக நினைப்பதோ பேசுவதோ இல்லை. கொசுவத்தி கொளுத்தி வைத்து லைட் போட்டு அமர்ந்து காலை நாளிதழை கூர்ந்து படிப்பார். கொஞ்சநேரம் ரேடியோவில் பாட்டு கேட்பார். இரவு கொஞ்சம் கவிந்ததும் பையில் இருந்து ரம் எடுத்து தண்ணீர் கலந்து குடிப்பார். அதன் பின் வீட்டிலிருந்து கொண்டுவந்த சோற்றை சாப்பிடுவார். பிறகு விடியற்காலை நான்கு மணிவரை தூக்கம். நான்கு மணிக்கு ஆபிரகாம் மில்லின் சங்கு ஊதியதுமே கிளம்பிவிடுவார். ஏழுமணி கழிந்து திரும்பி வந்து டியூட்டியில் இருப்பதுபோல கெத்தாக அமர்ந்திருப்பார். எல்லா வண்டிகளுக்கும் சல்யூட் அடிப்பார்.

குமரேசன் கொசுவத்தி ஏற்றிவைத்தான். வானைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். நட்சத்திரங்கள் பெருகிப் பரவியிருந்தன. வானம் ஒரு பெரிய நதிபோல ஒழுகிச் செல்வதாக அவனுக்குப் பட்டது. அது நிலைத்திருப்பதாக தோன்றியபோது அவன் ஒழுகிச் சென்றான்.

இரவின் ஓசைகளும் காற்றும் வெப்பமும் மாறிக்கொண்டே இருந்தன. அவன் அப்படி இரவெல்லாம் விழித்திருந்ததே இல்லை. வழக்கமாக எல்லாரும் சென்றபின் கயிற்றுக்கட்டிலில் படுத்தால் விடியற்காலை சங்கு கேட்கும்வரை ஒரே தூக்கம்தான். செக்யூரிட்டி அலக்ஸாண்டர் சென்றபின் மீண்டும் ஒரு தூக்கம், வெயில் வரும்வரை.

இந்த இரவு இப்படியா, இல்லை எல்லா இரவுகளும் இப்படி உருமாறிக் கொண்டே இருக்கின்றனவா? வண்டிகளின் ஓசை நின்றது. எப்போதாவது ஒரு லாரியின் இரைச்சலும் வெளிச்சமும் கடந்து சென்றன. சீவிடுகளின் ரீங்காரம்.

வடக்கே மலைப்பகுதியில் இருந்து வந்த காற்று இளங்குளிருடன் இருந்தது. தென்மேற்கே கடலில் இருந்து வந்த காற்றில் மென்மையான நீராவியும் வெப்பமும். ஆனால் சற்றுநேரத்திலேயே காற்று சுழன்று எதிர்த்திசையில் வீசத்தொடங்கியது. மிக அருகே ஒரு மரத்தில் ஏதோ பறவை வந்து அமர்ந்து நாய் குரைப்பதுபோல ஓசையிட்டது. வானில் காகங்கள் பறந்துகொண்டே இருந்தன. காகங்களா? இல்லை வௌவால்களா?

நட்சத்திரங்கள் நடுங்கின. உதிர்ந்து விழுந்துவிடும்போல. அவற்றுக்கு நடுவே டவரின் உச்சியில் அமைக்கப்பட்ட சிவப்பு விளக்கு. ஒரு தனி நட்சத்திரம்போல. அது விமானங்களுக்கு தெரிவதற்காக என்றார்கள். விமானங்கள் பார்க்கையில் என்ன தெரியும்? மண்ணில் ஒரு நட்சத்திரமா? அவன் அண்ணாந்து அந்தச் சிவப்பு விளக்கை பார்த்துக் கொண்டே இருந்தான். அது எழுந்து வானில் பறப்பது போலிருந்தது. அரைத்தூக்கத்தில் தன் தலை அசைந்ததனால் என்று கண்டான்.

நட்சத்திரங்கள் இடம் மாறின. காற்றில் குளிர் கூடிக்கூடி வந்தது. கூடாரத்தின்மேல் அத்தனை பனி படர்ந்திருக்கும் என அவன் நினைக்கவில்லை. கையால் தொட்டால் ஈரமாக இருந்தது. தட்டினால் நீர் தெறித்தது. உலோகப்பரப்புகள் அரையிருளில் மின்னிக் கொண்டிருந்தன. ஒரு லாரி சென்றபோது அனைத்தும் தீக்கனல்போல ஆகி அணைந்தன.

நான்குமணிக்கு சங்கொலி எழுந்தது. அருகே ஒரு யானை நின்று பிளிறியது போல. அவன் உடல் நடுங்கி அதிர்ந்தது. எழுந்து ஓடிவிடலாம் என்று எண்ணினான். அவனால் அத்தனை படிகளை ஏறமுடியாது. அதில் ஏறுவதற்கு ஒரு பயிற்சி தேவை. பிடியை விட்டு விழுந்துவிட்டால் கீழிருப்பவர்மேல் விழநேரிடும். எத்தனை தொலைவு! ஆயிரத்துநூறு அடி. அவன் அண்ணாந்து நோக்கினான், நெஞ்சு திடுக்கிட்டு அதிர மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அலக்ஸாண்டர் எழுந்து பையை தூக்கிக்கொண்டு கிளம்பிச் சென்றார். நாய்கள் அவரைக் கண்டு குரைக்கும் ஒலி அப்பால் கேட்டது. மீண்டும் ஒரு லாரி கடந்துசென்றது. லாரி அல்ல, பால்வண்டி. திருவனந்தபுரம் செல்வது.

அவள் ஆசைப்பட்டாள், ஆனால் வரமாட்டாள். வரமுடியாது. வந்தாலும் அதில் கொஞ்சதூரம் ஏறிவிட்டு இறங்கிவிடுவாள். அல்லது ஏறவே துணியமாட்டாள். அதுவே நடக்கப்போகிறது. அவளை அவனுக்குத் தெரியும். ஆனால் உள்ளூர தெரிந்திருந்தது, அப்படி அல்ல என்று.

ஆகவே அவளைக் கண்டதும் அவன் ஆச்சரியம் அடையவில்லை. அத்தனை பதற்றத்தையும் முன்னரே அடைந்திருந்தமையால் அவன் உடல் முழுக்க களைப்பே இருந்தது. அவளிடம் எரிந்து விழுந்து விடுவோம் என்றுதான் எண்ணினான். அவள் முந்தையநாள் அணிந்திருந்த அதே நீல தாவணியும் பாவாடையும் வெள்ளை ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். கழுத்தில் அதே வெண்ணிறப் பாசிமணிமாலை.

அவள் அருகே வந்து ரகசியக்குரலில் “செக்கூரிட்டி போயாச்சா?” என்றாள்.

“ம்” என்றான்.

“போலாமா?”

“ம்.”

“டீ குடிக்கிறியா?”

“டீயா?”

“ஆமா, நான் போட்டேன்.”

“எப்டி?”

“வெளியே வெந்நீர் அடுப்பிலே காகிதத்த எரிச்சு போட்டேன்… இந்தா.”

செம்பில் இருந்த டீ சூடாக இருந்தது. பழைய எருமைப்பாலின் மணம். அவன் குடித்துவிட்டுத்தான் அவளைப் பார்த்தான். “நீ குடிச்சியா?”

“இல்ல, என்னால குடிக்க முடியல்லை.”

“ம்.”

“போலாமா?”

“வா” என எழுந்துகொண்டான்.

“உனக்கு கஷ்டம்னா வேண்டாம்.”

“ஒண்ணுமில்லை.”

“போலீஸ் பிடிக்குமா?”

“எதுக்கு? இது என்னோட எடம்ல? வா”

அவன் அவளைக் கூட்டிச் சென்று டவர் அருகே நிறுத்தினான். அவள் அண்ணாந்து பார்த்து “ய்ய்யம்மோ” என்றாள்.

“இங்கபார், சில ரூல்ஸ் இருக்கு. ஒண்ணு நிக்கவேண்டிய தடம் தவிர எங்கயும் நிக்கப்பிடாது. கீழே பாக்கக்கூடாது. மேலேயும் பாக்கக்கூடாது. படிய மட்டும்தான் பாக்கணும். ரெண்டு கையாலயும் பிடிச்சுகிடணும். முகம் துடைக்கவோ தும்மவோ எதுக்காகவும் கைப்பிடிய விட்டிரப்பிடாது…”

“சரி.”

“போ.”

அவள் தயங்கினாள்.

“ஏறு” என்றான். அவனுக்கு அத்தனை செய்திகள் எப்படி தெரிந்திருந்தன என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவன் கேட்ட கவனித்த எல்லாமே அவனுக்கு தெரிந்தவையாக இருந்தன. அவன் மானசீகமாக நூற்றுக்கணக்கான முறை மேலே ஏறியிருந்தான்.

அவள் முதல் காலை எடுத்து வைப்பதற்கு முன் படியை தொட்டுக் கும்பிட்டாள். பிறகு பாவாடையை நன்றாக தூக்கிச் செருகிக்கொண்டு ஏறினாள்.

அவள் மூச்சுவாங்குவாள் என அவன் நினைத்தான். ஆனால் மிக மிக எளிதாக அவளால் ஏறமுடிந்தது. ஒருநாளுக்கு நூறுகுடம் தண்ணீர் சுமப்பவள் என நினைத்துக் கொண்டான்.

அவன் தன் வலுவான காலை ஊன்றி மேலேறினான். முன்பு செய்த பிழை என்னவென்றால் அவனால் அடுத்த காலை வைக்க முடியவில்லை என்பதுதான். வலுவான காலை எடுத்து வைக்க வேண்டுமென்றால் மெலிந்த காலை ஊன்றவேண்டும். மெலிந்த காலை எடுத்து வைத்தால் அதைக்கொண்டு உந்தி எழமுடியவில்லை. அது பத்துப்பதினைந்து படிகளுக்கு அவனுக்கு மரணவலியாக இருந்தது. அதன் பின் கண்டு கொண்டான். ஒவ்வொரு முறையும் வலுவான காலையே எடுத்து வைத்தான். வலதுகாலை உந்தி துள்ளி முழுமூச்சாக கைகளால் எம்பி உடலை தூக்கி மேலேறினான். தன் கைகள் ஆற்றல் மிக்கவை என அவனுக்கு தெரிந்திருந்தது.

முதல் தட்டில் நின்றபோது அவள் சிரித்துக் கொண்டிருந்தாள் “ஏறி வா ஏறி வா” என்று அவனை கைநீட்டி அழைத்தாள். இருட்டில் அவள் பற்களும் கண்களும் வெண்மையாகத் தெரிந்தன.

அவன் மூச்சுவாங்க அவள் அருகே நின்றான். அப்போதே எக்ஸேஞ்ச் கட்டிடம் கீழே சென்றுவிட்டிருந்தது. அதன் விளக்குகள் தரையில் எனத் தெரிந்தன.

“சின்னதா ஆயிடுச்சு” என்று சுட்டிக்காட்டினாள். “ரோடு வீடு எல்லாமே சின்னதா ஆயிடுச்சு”

“இப்பதானே ஏற ஆரம்பிச்சிருக்கோம்…”

“ஆமா இன்னும் எட்டு தட்டு இருக்கு இப்டி நிக்கிறதுக்கு.”

“களைப்பா இருக்கா?”

இல்லை என்று தலையை அசைத்தாள். அவள் வியர்வையின் மணம் அருகே எழுந்தது. இனிமையான சிறிய விலங்கொன்றின் வாசனை.

அவர்கள் மீண்டும் மேலேறிச் சென்றனர். மெல்லமெல்ல அவள் அந்தக் கிளர்ச்சியெல்லாம் அடங்கி அமைதியானவள் ஆனாள். கனவில் செல்பவள் போல மேலே சென்று கொண்டே இருந்தாள். இரண்டு தட்டுகளில் அவள் இளைப்பாறவே இல்லை.

“அய்யோ பஸ்ஸு… பஸ்ஸூ தீப்பெட்டி மாதிரி.”

“கீழே பாக்காதே.”

காற்று அவர்களின் ஆடைகளை சிறகுபோல படபடக்கச் செய்தது. வியர்வையே இல்லை, உடனே அது ஆவியாகிவிட்டது. குளிரில் உடம்பு சிலிர்த்துக்கொண்டே இருந்தது.

மேலும் சென்றபோது அவன் தன்னந்தனிமையை உணர்ந்தான். சுற்றிலும் வெறும் வானம் மட்டும். டவர் மெல்ல ஆடியது.

“ஆடுது” என்றாள்.

“காத்திலே கொஞ்சம் ஆடும்… ஆடினாத்தான் பலமா இருக்குன்னு அர்த்தம்”

“கீழே ஆடுமா?”

“இல்ல கீழ உறுதியா இருக்கும் மேலே கொஞ்சம் ஆடும்.”

மேலும் ஏறிச்சென்றபோது கைகள் நன்றாகவே களைத்திருந்தன. தோள்தசைகள் வலித்தன.

“களைப்பா இருக்குன்னா உக்காரலாம்.”

“வேண்டாம், போவோம்.”

அவள் முதலில் இறுதித்தட்டில் ஏறி நின்றாள். அங்கே டவர் ஊசல் போலவே ஆடியது. அவன் ஏறி வந்து அவளருகே நின்றான்.

அவள் இருகைகளாலும் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு சுற்றிலும் நோக்கினாள். சூரியன் எழத்தொடங்கவில்லை. ஆனால் வானம் துலங்கியிருந்தது. மணிவெளிச்சம் என்பார் அருணாச்சலம் நாடார். ஒளி கண்ணுக்குள் இருந்து சென்று பொருட்களைத் தொட்டது.

பச்சைவிரிப்பு போல சூழவும் நிலம் தெரிந்தது. மிகச்சிறிய பெட்டிகள் போல வீடுகள். பஸ் ஒன்று சிறியபெட்டியாக மிகமெல்ல ஊர்ந்து சென்றது. வானம் வளைந்து வந்து மண்ணில் படிந்திருந்தது. மிகத்துல்லியமான வட்டம்.

அவள் சுற்றிச்சுற்றிப் பார்த்தாள். “வானம் இம்பிடு வட்டமா இருக்கு” என்றாள் “கண்ணாடிக் கிண்ணிய கவுத்து வச்ச மாதிரி.”

வடக்கே இருந்த வேளிமலை அடுக்குகள் மிக அருகே வந்துவிட்டிருந்தன. குறைவான வெளிச்சத்தில் அவை துலங்கித்தெரிந்தன. ஒவ்வொரு பாறையும் புடைத்து எழுந்திருந்தது. மலையின் விளிம்புக் கோட்டில் மரங்களைக்கூட பார்க்க முடிந்தது.

“மலைக்க மேலே மரம்!” என்று அவள் அந்த மலையைச் சுட்டிக்காட்டினாள். “ஆனை முதுகிலே முடி மாதிரி இருக்கு”

அவனுக்கும் உடனே அப்படி தோன்றியது. நெருக்கமாக நின்றிருக்கும் யானைகள்.

“நம்மள கீழே நின்னா பாக்கமுடியுமா?”

“முடியும்… சின்னதா தெரியும்.”

“நான் எப்டி தெரிவேன்?”

“சின்ன நீலக்குருவி வந்து ஒக்காந்திட்டிருக்குத மாதிரி.”

அவள் “ஸ்ஸ்ஸ்ஸ்” என்றாள்.

சுற்றிச்சுற்றிப் பார்த்துக் கொண்டே நின்றாள். “எவ்ளவு எடமிருக்கு… வானம் வரை” என்றாள். “கடல் அந்தப்பக்கமா?”

“அந்தாலே… அங்க நீலமா தெரியும்… ஆனா இப்ப தெரியாது.”

காலடியில் மிகக்கீழே பறவைகள் பறந்துசெல்லத் தொடங்கின. காகங்கள் வெண்கொக்குகள்.

“அய்யோ எல்லாமே கீழே பறக்குது.”

“நாம மேலே நின்னுட்டிருக்கோம்.”

“வானத்திலயா?”

“ஆமா, மேகங்கள்கூட இங்க வரும்.”

“இங்க வருமா?”

“மழைக்காலத்திலே வரும்.”

அவள் பெருமூச்சுவிட்டாள். மீண்டும் மீண்டும் அவளிடமிருந்து பெருமூச்சுக்கள் வந்து கொண்டிருந்தன.

“நாம செத்துப்போனா இதுக்கும் மேலே போயிருவோம் இல்ல?” என்றாள்.

“எங்க?”

“சொர்க்கத்துக்கு.”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

கிழக்கே வானம் சிவப்பாக தொடங்கியது. அவள் திரும்பி அதை பார்த்துக் கொண்டிருந்தாள். உலைமுன் நிற்பவள் போலிருந்தது அவள் முகம்.

அவன் அவள் கண்களுக்குள் சிவப்புநிறம் தீப்பொறி போல தெரிவதை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் தலைமுடி பறந்து கொண்டிருந்தது. ஆடைகள் பறந்து கொண்டிருந்தன. பின்னணியில் வானம். அவளே வானில் பறந்து கொண்டிருப்பவள் போல.

மிகமெல்ல ஒளி கூடிக்கூடி வந்தது. மேகங்கள் ஒளிகொள்ளத் தொடங்கின. நிறைய இடங்களில் அவை சிவந்து எரிந்து கொண்டிருப்பது போல தெரிந்தது. அவற்றின் நடுப்பகுதி கருமையாக இருக்க ஓரங்கள் ரத்தம் போலிருந்தன. அந்த மேகங்கள் அங்கே இருப்பது முன்பு கண்ணில் படவே இல்லை.

பின்னர் அவை பொன்னிறம் கொண்டன. அவற்றின் விளிம்புகள் பிளேடு நுனிகள்போல மின்னின. அவன் சூரியனைக் கண்டான். மிகச்சிறிய ஒரு விளிம்பு. உருகி உருகி நெளிந்து கொண்டிருந்த பொன்னிறமான தாம்பாள வட்டம்.

அவன் அவளுடைய விசும்பலோசையை கேட்டான். திடுக்கிட்டு அவளை பார்த்தான்.

“ஏட்டி என்ன?”

அவள் தலையசைத்தாள்.

“என்னட்டி?”

அவள் உதடுகளை இறுகக் கடித்தாள். கழுத்தில் தசை இறுகி அசைந்தது.

“பயமா இருக்கா?”

அவள் இல்லை என தலையசைத்தாள்.

“எறங்கிரலாமா?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவள் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. முகம் சிவந்து எரிவதுபோலிருக்க, கண்ணீர் பளபளத்து கன்னங்களில் ஓடியது.

அவள் கைப்பிடியை பிடித்திருந்தாள். கரிய கைகள், குழந்தைகளுக்குரிய மென்மையான சருமம் கொண்டவை. அவள் நகங்களும் சற்றே கருமை கலந்த செம்மை. வாழைப்பூ நிறம்போல.

அவளுடைய விசும்பலோசை அவனை பதறச்செய்தது. “ஏம்டி?” என்றான். அப்போது இயல்பாக அவள் கைமேல் தன் கையை வைத்துவிட்டான்.

அவள் திரும்பி அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள். தன் முகத்தை அவன் மார்பில் பதித்து உடலை இறுக்கி ஒண்டிக்கொண்டாள். அந்த விசையில் அவன் சற்றே பின்னடைந்தபின் அவளை கைகளால் தழுவி இறுக அணைத்தான். குனிந்து அவளுடைய தலையின் வகிட்டில் முத்தமிட்டான். உழுதுபோட்ட புதுமண்ணின் மணம்.

***

முந்தைய கட்டுரைபொற்கொன்றை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : மருத்துவர் ஜெயமோகன்