‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21

பகுதி நான்கு : அலைமீள்கை – 4

அவைக்கூடல் முறையாக முடிந்ததும் ஒவ்வொருவரும் இயல்பானார்கள். எல்லாம் நிறைவாகவே நடந்துவிட்டது என்னும் எண்ணம் மூத்தவர் ஃபானுவுக்கு உருவானதை உணரமுடிந்தது. ஒவ்வொருவரும் அருகிருந்தவர்களிடம் எளிமையாக உரையாடலாயினர். அரங்கே வெற்றுப்பேச்சுகளின் கூட்டு முழக்கமாக ஆகியது. மூத்தவர் சுஃபானு என்னை நோக்கி “இன்று கடலாடச் சென்றிருந்தீர்கள் அல்லவா?” என்றார். அதை ஏன் அவர் கேட்கிறார் என்பதை உடனே நான் புரிந்துகொண்டேன். அங்கிருந்த அனைவருக்கும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் எவரை சந்திக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும் என்பதை காட்ட விரும்புகிறார்.

“ஆம், இன்று நான் சற்று ஓய்வாக உணர்ந்தேன்“ என்றேன். சுஃபானு சிரித்து “ஆம், இங்கு நாம் நெடுநாட்களாக ஓய்வு நிலையிலேயே இருக்கிறோம். போர் வருகிறது என்ற எண்ணத்தால் ஓய்வை குற்றவுணர்வின்றியே நுகர்ந்தோம். ஆனால் இப்போதைய நிலையில் பெரும்பாலும் நாம் வாள்களை உருவ வாய்ப்பின்றியே வெற்றியை அடைந்துவிடுவோம் என்று படுகிறது. வென்றபின் அதன்பொருட்டு குற்றவுணர்ச்சியை நாம் அடையக்கூடும்” என்றார். அனைவரும் நகைத்தனர். அத்தருணத்தில் உவகை ஒலி எழுப்ப வேண்டுமென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. நான் சிரித்து “வெற்றிக்குப் பின் இங்கு வாழ்வது எப்படி என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றேன். சுஃபானு மேலும் செயற்கையாக சிரித்து “நாம் அனைவரும் அதை நன்கு பயின்றிருக்கிறோம்” என்றார்.

அப்போது ஓர் எண்ணம் எனக்கு வந்தது. அது இயல்பான ஒரு செயல் அல்ல, சுஃபானு என்னை உளம்கொண்டிருக்கிறார். எவ்வகையிலோ என்னை அவர் வேறிட்டறிகிறார். அவ்வண்ணம் ஓர் அவையில் எவரும் என்னை நோக்குவதில்லை. அது எனக்கு அமைதியின்மையை உருவாக்கியது. சுஃபானு அப்பாலிருந்த யாதவ குடித்தலைவர் முக்தரிடம் “ஷத்ரியர் தரப்பிலிருந்து நம்மை நோக்கி வருவதற்கு அன்னை லக்ஷ்மணையின் மைந்தர் முன்னரே ஒருக்கமாக இருந்தனர். அவர்களுக்கு சில பொய்யான சொல்லுறுதிகளை அளித்து பிரத்யும்னனின் தரப்பு தங்களிடம் இழுத்தது. ஆனால் ஷத்ரியர்களின் ஆணவத்தின் முன் அடிமையென்று இருக்க இயலாது என்று உணர்ந்த அவர்கள் விலகினார்கள். அச்சினத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை தங்கள்பால் அழைத்தனர் சாம்பனின் தரப்பினர். அங்கு சென்ற பின்னர்தான் தொல்குடியினராகிய மலைமக்கள் ஒருபோதும் இழிகுலத்தாராகிய அசுரருடன் இணைந்து இருக்க இயலாதென்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதன் விளைவாகவே இன்று நம்மை நோக்கி வந்திருக்கிறார்கள்” என்றார்.

மிக மரபான ஒரு பேச்சு அது. ஆனால் ஒருகணம் என்னை வந்து தொட்டுச் சென்ற சுஃபானுவின் கண்கள் வேறுவகை உணர்வு ஒன்றை காட்டின. “இந்த அவை அவர்கள் இயல்பாக இருக்குமிடம். அவர்களுக்குரிய பீடம் இங்குதான் முன்னரே போடப்பட்டிருக்கிறது. அவர்கள் இங்கு வருவதன் வழியாக நமக்கு ஆற்றல் சேர்த்திருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் இங்கு வருவதுடன் இங்கே போர் முடிந்துவிட்டதென்றே பொருள். இனி பூசலிடுபவர்கள் ஒன்றுக்கு மூன்று முறை எண்ணவேண்டும். நம்மிடம் படை வல்லமை இருக்கிறது. போர் வல்லமை சற்றே குறைவு, அதை அவர்கள் ஈடுகட்டுகிறார்கள். அவர்களை வரவேற்கும் முகமாக இந்த உண்டாட்டை ஒருக்கியிருக்கிறோம்” என்றார்.

அப்பால் ஃபானு ஏதோ சொல்ல அனைவரும் கைகளைத் தூக்கி வாழ்த்தினர். ஃபானு திரும்பி “உண்டாட்டு தொடங்குக…” என்றார். அரசரின் ஆணையை ஏற்று அவைநிமித்திகன் கொம்பொலி எழுப்பினான். ஊட்டறை நோக்கி அனைவரும் நிரைவகுத்துச் சென்றனர். இரு குலங்களையும் அவையில் பிரித்து அமரச்செய்திருந்தனர். ஆகவே உண்டாட்டு அறையில் அனைவரும் கலந்து அமரும்படி ஒருக்கியிருந்தனர். குடிமுறைமை இல்லாமல் தன்னியல்பான அமர்வு என்றால் அரசருக்கு என அரியணை நிகர்த்த பீடம் போடப்படாது. அவரும் பிறரைப்போல இயல்பாக ஏதேனும் ஒரு பீடத்தில் சென்று அமர்வார். அங்கே குலங்கள் கலக்கும் அமர்வுக்கு அதுவே உகந்தது என சுஃபானு முடிவு செய்திருந்தார்.

மூத்தவர் ஃபானுவுக்கு தனி இருக்கை போடப்படவில்லை. அவர் சென்று இயல்பாக அமர்ந்தார். அவரிடம் சிரித்துப் பேசியபடி சென்ற பிரகோஷன் அங்கே முறைமை ஏதுமில்லை என்பதை ஓரக்கண்ணால் பார்த்த பின் அவர் அருகே சென்று இன்னொரு இருக்கையில் அமர்ந்தார். ஒவ்வொருவரும் சென்று அமர்ந்தனர். அனைவர் முன்னிலும் பீதர்நாட்டு வெண்ணைக்களிமண் தாலங்கள் வைக்கப்பட்டன. பளிங்குக் குடுவைகளில் யவனமதுவும் பீதர்நாட்டு எரிமதுவும் வந்தன. தொடர்ந்து அன்னமும் ஊனும் வந்தன. மூத்தவர் ஃபானு முதல் அப்பத்தை எடுத்து யாதவ முறைப்படி அதை இரண்டாகக் கிழித்து பாதியை பிரகோஷனின் தட்டில் வைத்து “தங்கள் நலனுக்காக” என்றார். “அன்னம் பெருகுக! உயிர் பெருகுக! புகழும் வெற்றியும் செல்வமும் நிலைகொள்க!” என்றார்.

ஃபானு அதைச் செய்வது எப்போதுமுள்ள வழக்கம், ஆனால் அன்று ஒருகணம் அவர் விழிகள் நிலை தடுமாறுவதை கண்டேன். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. தாங்கள் இருந்த நாள் முதலே துவாரகையில் கடைபிடிக்கப்படும் அம்மரபு எங்களை ஒரு குடியென நிலைநிறுத்துவது. யாதவ குடிகள் காடுகளில் தங்கி அந்தியுணவு அருந்துகையில் ஒவ்வொரு முறையும் கிடைத்தலைவர் அவ்வகையில் அன்னம் பகுப்பதுண்டு. பகுக்கப்பட்ட அன்னமே பெருகும் என்பது யாதவர்களின் நம்பிக்கை. அன்னம் தன்னை நிலையமைத்துக்கொள்ளும் விழைவு கொண்டது. உயிர்க்குலங்களின் வேண்டுதலே அதை பெருக்குகிறது என்பார்கள். “பெருகுக!” என்ற சொல்லுடன் அன்னத்தை பகுப்பதும் “உடலென்று அமைக” என்று சொல்லி உண்பதும் தொல்வழக்கம்.

நாங்கள் உண்ணத்தொடங்கினோம். “நமது படைகளை ஒருங்கிணைக்க வேண்டும்” என்று ஃபானு சொன்னார். “இன்று நமது படைகள் தனித்தனியே குலங்களாகவே பிரிந்துள்ளன. அது நன்றல்ல. அவ்வாறு குலங்களாக பிரிகையில் பூசல்களும் பெருகுகின்றன. வெற்றிகளை ஒப்பிட்டுக்கொள்ளத் தொடங்குகிறார்கள். நமது ஒவ்வொரு படைக்குழுவிலும் அந்தகர்கள் விருஷ்ணிகள் போஜர்கள் அனைவரும் இருக்கவேண்டும். மத்ரர்கள் அத்தனை படைப்பிரிவுகளிலும் பங்குகொள்ள வேண்டும்.” மீண்டும் அவர் முகம் மாறுவதை கண்டேன். அதை அருகிருந்து கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். “ஆம், அதை நாம் பேசி முடிவெடுப்போம்” என்றார் பிரகோஷன். அப்போதுதான் மூத்தவர் ஃபானுவின் விழிகள் மாறியது பிரகோஷனின் விழிகளை அருகிருந்து கண்டமையால் என புரிந்துகொண்டேன்.

தன் கலத்திலிருந்த மதுவை பிரகோஷனின் கலத்தில் ஊற்றியபடி ஃபானு சொன்னார் “ஒன்றெனப் பெருகுவோம். இந்தப் பெருநகர் நமக்கு நமது தந்தையால் அளிக்கப்பட்டது. இங்கு நாம் செழிப்போம்.” அனைவரும் கை தூக்கி பேரொலி எழுப்பி வாழ்த்துரைத்தனர். நான் பிரகோஷனை நோக்கிக்கொண்டிருந்தேன். நெடும்பொழுதுக்குப் பின்னரே ஒன்றை உணர்ந்தேன், ஃபானு கிழித்துக்கொடுத்த அந்த அப்பத்தை அவர் தன் தட்டின் ஒரு ஓரமாக தனியாக வைத்திருந்தார். அதை உண்ணவில்லை. பலமுறை இயல்பாக கை அங்கு சென்றபோதும் கூட அதை தொடாமல் தவிர்த்தார். பிறர் உண்டுகொண்டிருந்த போது மிக இயல்பாக அதை எடுத்து ஏவலர் எடுத்துகொண்டு சென்ற ஒழிந்த தட்டொன்றில் போட்டு அகற்றினார்.

அவர் விழிகளில் ஃபானு கண்டது என்ன என்று எனக்குத் தெரிந்தது. அதை அவர் எச்சில் என்று எண்ணுகிறார். அவருடைய மிச்சிலை உண்டு வாழும் நிலைக்கு தன்னை கொண்டுவந்து விட்டோமோ என்று ஐயுறுகிறார். எனில் படைக்கலப்பை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்வார்? மத்ரநாட்டுக்கு என்று துவாரகையில் அவர் சேர்த்து வைத்திருக்கும் படையை துண்டுகளாக உடைத்து செயலற்றதாக்கும் திட்டம் என்று அவர் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. அங்கு இருந்து எழுந்து செல்கையில் அவர் அவ்வாறே கருதுவார் என நான் உறுதிகொண்டேன். நான் விழியோட்டி பார்த்தேன், மத்ரநாட்டார் பிறருடைய விழிகளை சந்தித்தபோதும் அவ்வாறே தோன்றியது. சலிப்புற்று என் கையிலிருந்த ஊன்துண்டை கீழே வைத்துவிட்டு சாய்ந்து அமர்ந்து நெளியும் திரைச்சீலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.

உண்டாட்டுகளின் முடிவில், தலையை நனைத்து எடைகொள்ளச் செய்துவிட்ட மதுவின் மயக்கில் எவரும் எவரையும் நோக்காமல் ஆவார்கள். ஒவ்வொருவரும் அங்குள்ள அனைவரையும் நோக்கி எதையேனும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நான் மது அருந்தவில்லை. காலையிலிருந்து தொடர்ந்த பலவகையான உள அலைவுகளால் எனக்கு மது அருந்தத் தோன்றவில்லை. இனி எந்த உண்டாட்டிலும் மது அருந்துவதில்லை என எனக்கே ஆணையிட்டுக்கொண்டிருந்தேன். ஆகவே எனக்கு மதுவை எவரும் ஊற்றித் தரவில்லை. நான் அருந்தினேனா என்று நோக்கவுமில்லை.

நான் உண்டாட்டுகளில் மதுவை விரும்பி அருந்துபவன். மது அருந்துவதனூடாக ஒவ்வாமைகளையும் சலிப்புகளையும் கடந்து சென்றுவிடலாம் என்று அறிந்திருந்தேன். ஓர் அவை என்னை அழுத்திச் சிறியவனாக்குகையில் மதுவினூடாக நான் விரிந்து எழுவேன். அங்கே என்னை காட்டிக்கொள்வேன். மது என்னை மிகைக்களி கொண்டவனாக்குகிறது என அனைவரும் அறிந்திருந்தனர். எழுந்து சென்று ஒவ்வொருவரையும் தழுவிக்கொள்வேன். ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன். தோளில் அறைந்தும் கைபிடித்து உலுக்கியும் உரக்க பேசுவேன். அனைவரையும் உறவுமுறை வைத்து அழைப்பேன். மதுமயக்கு அளிக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வேன்.

ஆனால் ஒவ்வொருமுறையும் அது எல்லைமீறிச் செல்லும். எங்கே அது என் கையை விட்டுச் செல்கிறது என்று என்னால் உணரமுடியாது. என்னை எவரேனும் சிறுமைசெய்வார்கள். சினம்கொண்டு கண்டிப்பார்கள். அது என்னை சீற்றம்கொண்டவனாக ஆக்கும். சில தருணங்களில் நானே எதையேனும் சொல்லி பூசலிடத் தொடங்குவேன். அது முதிர்ந்து அழுகையும் குமுறலும் என்று ஆகும். வசைபாடுவதும் நெஞ்சில் அறைந்து எழுந்து நின்று அறைகூவுவதும்கூட உண்டு. பின்னர் சோர்ந்து அறைமூலையில் விழுந்து சுருண்டு துயில்கொள்வேன். காலையில் எழும்போது நிகழ்ந்ததென்ன என்பது பொதுவாக நினைவில் இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தமாக பெரிய அளவில் ஏதோ நிகழ்ந்துவிட்டதென்று தோன்றும்.

ஒன்றுமே செய்யாமல், குறிப்பிடும்படி எதுவுமே நிகழாமல், வெல்லாமல் இழக்காமல் சென்றுவிட்ட வாழ்க்கையை அந்தச் சிறுபொழுது பலமடங்கு செறிவும் இசைவும் கொண்டதாக ஆக்கிவிடுகிறது என்றே என் அகத்தில் தோன்றும். அது உண்மையில் ஒரு நிறைவையே அளிக்கும். நான் வாழ்விலிருந்து உதிரவில்லை, எட்டுக் கைகளையும் கொக்கியாக்கி வாழ்வின்மேல் தொங்கிக்கொண்டிருக்கிறேன் என்ற நிறைவு அது. நான் மது அருந்திவிட்டு செய்த பூசல்களைக் குறித்து எவரேனும் என்னிடம் சொன்னார்கள் என்றால் அதன் பொருட்டு பொறுத்தருளும்படி கோரி கைகள் கூப்பி வணங்கி மீளமீள பிழைகூறி நின்றிருப்பேன். அப்போதுகூட என்னுள்ளத்தில் ஏதோ ஒன்று மகிழ்ந்துகொண்டிருக்கும். நான் ஒன்றும் இல்லாமலாகிவிடவில்லை, இதோ எல்லாக் கீழ்மைகளுடனும் சிறுமைகளுடனும் நானும் இருந்துகொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால் அன்று அவர்களிடமிருந்து பிரித்துக்கொள்ளவும் பிறிதொருவனாக ஆக்கிக்கொள்ளவும் விழைந்தேன். அவர்கள் அனைவரும் அடியிலாத சேற்றுப்பரப்பில் மெல்ல மெல்ல தாழ்ந்து சென்றுகொண்டிருப்பதாகவும் எனக்கு மட்டும் ஒரு மெல்லிய கொடி பிடிகிடைத்துவிட்டதாகவும் தோன்றியது. அவர்களை அணுகிப் பார்க்க வேண்டும் என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருப்பதை கூர்ந்து அறிய வேண்டும் என்றும் எண்ணம் எழுந்தது. அதற்கு என் உள்ளத்தின் மீது மதுவை ஊற்றி நனைத்துக்கொள்ளக் கூடாது.

மூத்தவர் குழறிய குரலில் “இத்தனை பேர் வந்தபிறகு நான் இனி எதைப்பற்றி எண்ண வேண்டும்?” என்றார். “போர்! ஆம், நாளை காலையே போர்.” சுஃபானு “ஆம், நாம் நாளை அதைப்பற்றி பேசுவோம்” என்றார். “நாளையா? நாம் இப்போதே கிளம்பிச்செல்வோம். பிரத்யும்னன் வரட்டும். அனிருத்தன் வரட்டும். அல்லது நகர் நீங்கி ஓடிப்போன யாதவ அரசரே வரட்டும். யார் வந்தாலும் போராடிப் பார்ப்போம்” என்றார் ஃபானு. “நாம் போராடுவோம்!” என்று சொன்னார் சுஃபானு. அவரும் குழறிக்கொண்டிருந்தார். “படைகளை எழச்சொல்… என் ஆணை இது.” சுஃபானு “ஆம், ஆணை! ஆணையிட வேண்டியதுதான்!” என்றார். “நாம் வென்றுவிட்டோம்” என்றார் ஃபானு.

அங்கு நின்று ஒற்றைப்பார்வையிலேயே ஒரு வேறுபாட்டை உணர முடிந்தது. ஒருவகையான வெற்றிக்களிப்பிலும் என்ன செய்வதென்றறியாத குழப்பத்திலும் உள்ளாழத்திலிருந்து எழுந்த அச்சத்திலும் ததும்பிக்கொண்டிருந்தனர் யாதவ மைந்தர். ஆனால் லக்ஷ்மணையின் மைந்தர்கள் அங்கு வரும்போதே சிறு ஒவ்வாமை கொண்டிருந்தனர். அதை மறைக்கும்பொருட்டு மிகையாக மது அருந்தினர். மேலும் மேலும் ஒவ்வாமை கொண்டனர். ஆகவே குடிக்கும்தோறும் சொல்லவிந்தனர். பெரும்பாலும் பிறர் சொல்வதை ஆம் என்றோ உண்மை என்றோ சொன்னார்கள். கை நீட்டி சுட்டிக்காட்டி எதையோ சொல்ல வந்து அச்சொல் உள்ளத்தில் எழாமல் வாயை மட்டும் அசைத்து விழிவிரித்து நோக்கினர்.

அந்த இளிவரல் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது ஏவலர் அருகிருந்த சிற்றறையின் கதவை சற்றே திறந்து உள்ளே ஒருவரை கொண்டு வந்தார்கள். உண்மையில் அது ஒரு பொருள் என்றுதான் நான் எண்ணினேன். சற்று பெரிதாக சமைக்கப்பட்ட ஏதோ உணவு. உணவுப்பொருட்களை வெண்பட்டால் போர்த்திக்கொண்டு வருவது துவாரகையில் பழக்கம். அது யவனர்களிடமிருந்து வந்தது. அவர்கள் உண்ணுங்கலத்தில் அன்றி வேறெங்கும் உணவு திறந்திருப்பதை விரும்பாதவர்கள். ஆனால் மெல்லிய வெண்பட்டு அணிந்து மரத்தாலம் போன்ற ஒன்றில் உடல் சுருக்கி அமர்ந்திருந்தவர் ஒரு முதியவர் என்பதை உணர்ந்து நான் அப்போது இருந்த உளநிலையில் அவரை கைசுட்டி நகைத்தேன். “என்ன இது? இது சமைக்கப்பட்ட உணவா என்ன?” என்றேன்.

பிறர் என்னைப் பார்த்தபின் அவரை பார்த்தனர். “விந்தையான மனிதர்” என்று ஒரு யாதவ குடித்தலைவர் சொன்னார். “ஆம், இரண்டாக ஒடிந்து இருக்கிறார்” என்றார் இன்னொருவர். அப்பால் இருந்த இன்னொருவர் “அவரை ஏதோ சிறு பேழையில் வைக்க முயன்றிருக்கிறார்கள்” என்றார். அனைவரும் அவரை நோக்கி சிரித்தனர். “அஷ்டவக்ரர்!” என்றார் ஒருவர். “தசவக்ரர்.” இன்னொரு குரல் “சதவக்ரர்” என்றது. “அதற்கு இந்த உடலில் இடமேது? இவர் வக்ரர்! ஒற்றை வளைவுதான்…” ஒருவர் எழுந்து அவர் அருகே வந்து “நான் சொல்கிறேன், இவரை வில் என நினைத்து எவனோ நாணேற்ற முயன்றிருக்கிறான்” என்றார். பெருஞ்சிரிப்புகள், கூச்சல்கள்.

அவருடைய கண்கள் ஆழத்தில் வளைக்குள் தெரியும் பெருச்சாளியின் கண்கள்போல் மின்னிக்கொண்டிருந்தன. அவரை அவர்கள் தாழ்ந்த பீடத்தில் அமர்த்தினர். அவரை கொண்டு வந்த ஏவலன் தலைவணங்கி என்னிடம் “இங்கே இவரை கொண்டு வரும்படி சொன்னார்கள். அழைப்பு வரும் என்று நெடும்பொழுதாக எதிர்பார்த்து பக்கத்து தனியறையில் காத்திருந்தோம். அதன் பின் அனைவரும் மறந்துவிட்டார்கள் என்று உணர்ந்து இவரை திரும்ப கொண்டு செல்லலாம் என்று இவரிடமே ஒப்புதல் கேட்டேன். ஆனால் இவர் அவைக்கு வர விரும்பினார்” என்றான்.

அவர் அவனை கையசைத்து செல்லும்படி பணித்துவிட்டு என்னை நோக்கி “அந்தணனாகிய என் பெயர் கணிகன்” என்றார். எனக்கு அவரை பார்த்தபோது அப்போதும் அது ஒரு மானுடத்தோற்றம் என்று தோன்றவில்லை. ஆகவே அக்குரல் அவரிடமிருந்து எழுந்தது விலங்கொன்று பேசத்தொடங்கியதுபோல வியப்பை அளித்தது. “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று நான் கேட்டேன். ”இறுதியாக நான் அஸ்தினபுரியில் இருந்தேன். மண்மறைந்த மாவீரர் துரியோதனனும் அவர் மாதுலர் சகுனியும் என் புரவலர்களாக இருந்தனர். அவர்கள் களம்பட்ட பின் அங்கிருந்து கிளம்பி சில குருநிலைகளில் தங்கினேன்” என்றார்.

என் அருகே நின்றிருந்த யாதவர் ஒருவர் கை நீட்டி  “பேசுகிறது! அது பேசுகிறது!” என்றார். “வாயை மூடுங்கள்” என்று அவரிடம் சொல்லிவிட்டு நான் மீண்டும் “இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன். “நான் சாந்தீபனி தவச்சாலைக்கு சென்றேன். இளைய யாதவரை சந்திக்க விழைந்தேன். அங்கே அவர் இல்லை. இங்கு இருப்பார் என்றார்கள். அவரை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன். அவர் முன்பு என்னை இங்கு வரும்படி ஆணையிட்டிருந்தார்” என்றார். “இங்கிருந்து அவர் நீங்கி நெடுநாட்களாகின்றன. மாபாரதப் போர் தொடங்குவதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே அவர் இங்கிருந்து சென்றுவிட்டார்” என்றேன்.

என் பின் நின்றிருந்த ஒரு யாதவ முதியவர் “உண்மையில் இந்நகருக்கும் அவருக்கும் இன்று தொடர்பில்லை” என்றார். “இப்போது இந்நகரின் அரசர் சத்யபாமையின் மைந்தரும் அந்தகக் குடித்தலைவருமான ஃபானு” என்றார். பின்னிருந்து ஒருவர் “அவர் விருஷ்ணிகளின் தலைவர்” என்றார். “ஆம், விருஷ்ணிகளின் தலைவரும்கூட” என்று இவர் சொன்னார். “ஆனாலும் அந்தகர்களின் குடியில் பிறந்தவர். குடிப்பிறப்பு அன்னைமுறை என அமைவது அந்தகர்களின் மரபு” என்றார். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள நான் அவரிடம் “அவர்கள் சொல்வது உண்மை. இங்கு என் தந்தை இப்போது எவ்வகையிலும் இல்லை. நகரமே அவரை மறந்துவிட்டிருக்கிறது. அவர் எப்போது வருவார் என்று இப்போது கூறவும் முடியாது” என்றேன்.

“ஆம், இங்கு வந்ததுமே நான் நிலைமையை அறிந்துகொண்டேன். அது இயல்பானதுதான்” என்று அவர் சொன்னார். “அவர் இங்கிருக்க வாய்ப்பில்லை என்று இந்நகரத்தில் நுழைந்ததுமே நான் அறிந்தேன்.” நான் “நீங்கள் இந்நகருக்கு முன்பு வந்திருக்கிறீர்களா?” என்றேன். “உண்மையில் நான் பாலைநிலத்தில் வாழ்ந்தவன். அஸ்தினபுரியில் சில காலம் இருந்தேன் என்பதைத் தவிர்த்து நான் எந்த ஊருக்கும் சென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு ஊரைப்பற்றியும் அறிந்துகொண்டிருக்கிறேன். அகன்றிருப்பவர்கள் மேலும் அணுகி அறிகிறார்கள், நெடுந்தொலைவில் இருக்கும் கணவன் மனைவியையும் குழந்தைகளையும் எண்ணிக்கொண்டிருப்பதுபோல.”

“ஆகவே இந்நகரின் ஒவ்வொரு அடையாளமும் எனக்கு தெரியும். இதன் எல்லை கடந்து உள்ளே வந்ததுமே இங்கு ஒவ்வொன்றும் மாறியிருப்பதைக் கண்டே. ஏன் என்று உடனே புரிந்துகொண்டேன். ஆனால் நான் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். என் உடல்நிலை இவ்வண்ணம் இருக்கையில் இத்தனை தொலைவு கடந்து வருவது எனக்கு எளிதல்ல. மீள்வதற்கு சற்றே நான் தேறியாக வேண்டும். ஆகவே இங்கு சில காலம் இருந்தே ஆகவேண்டும்” என்றார். “இங்கு நீங்கள் இருக்கலாம். இங்கு அந்தணர்கள் எப்போதுமே விரும்பப்படுகிறார்கள்” என்றேன்.

“நான் நூல்நவின்றவன். நாட்கோன்மையில் மிகவும் உதவியானவன், அமைச்சு அறிந்த அந்தணன்” என்று அவர் சொன்னார். “எனது இடம் நெறிநூல் ஆய்வு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக அதிலேயே வாழ்ந்திருக்கிறேன். நான் கற்ற அத்தனை நெறிநூல்களையும் நினைவுகூரவும், தருணத்திற்கு உகக்க அவற்றை தொகுக்கவும், உரிய முறையில் பயன்படுத்தவும் என்னால் இயலும்” என்றார். “பயன்படுத்துவது என்றால்?” என்றேன். “உருமாற்றுவது” என்றார். நான் வியப்புடன் “நெறிகளை உருமாற்றுவதா?” என்றேன். “உருமாற்றுவதனால் என்ன பயன்? நெறிகள் என்பவை எங்கோ எவருக்கோ என சொல்லப்பட்டவை. எங்கும் எவருக்கும் என நிலைகொள்பவை. நம் தேவைக்கேற்ப அவற்றை மாற்றிக்கொள்வதனால் என்ன பயன்?”

அவர் “கடல் அங்கிருக்கிறது, அலைகொண்டிருக்கிறது, முடிவிலியாக தோற்றம் அளிக்கிறது. நமக்குரியவற்றை நமக்குரிய கலத்தில் மொண்டால் மட்டுமே அதனால் நமக்குப் பயன்” என்றார். “ஆம், ஆனால் அது கடல் அல்ல” என்றேன். “இல்லை, கடலின் எவ்வியல்பையும் கலத்தில் அள்ளிய நீரில் நாம் பார்க்க இயலாது, அதை கடலென்று சொல்லலாம்” என்றார் அவர். “ஆனால் நமக்கு கடல் எவ்வகையிலேனும் பயன்படும் என்றால் அவ்வாறுதான்.” நான் “விந்தையானது” என்றேன்.

அவர் “அவ்வாறு இடமும் காலமும் கருதி பிரித்தெடுக்கப்பட்ட ஒரு நெறி, தனி ஒரு மனிதரால் முன்வைக்கப்படும் நெறி, எந்நிலையிலும் பொதுவான நெறி அல்ல. பொதுநெறியிலிருந்து பிரிந்தது அது. ஆனால் அதற்கு பொதுநெறியின் நோக்கம் இல்லை. ஆகவே பொதுநெறியின் இயல்புகளும் எதுவுமில்லை” என்றார். “நெறியின் மாறாத இடர் என்பது இதுதான். அது பொதுநெறியாகவே நிலைகொள்ள இயலும், அந்நிலையில் அதற்கு எந்தப் பயனும் இல்லை. பயன்படுகையில் அது தனிநெறி. பொதுநெறிக்குள்ள எந்த இயல்புகளும் அதில் இல்லை.”

அவர் கண்களைச் சிமிட்டி புன்னகைத்து “ஆனால் ஒவ்வொரு தனிநெறியும் அப்பெரும் பொதுநெறியின் இன்னொரு வடிவென்றே தன்னை முன் நிறுத்துகிறது. பொதுநெறிக்கு வேதங்களின் சான்றொப்புதல் உள்ளது. மூதாதையரின் ஏற்பு உள்ளது. வழிவழி வந்த அனைத்து நம்பிக்கைகளும் அதில் உள்ளன. தெய்வங்கள் அதை சூழ்ந்து அமைந்துள்ளன. அது அடையும் அனைத்து ஆற்றலையும் இச்சிறு தனிநெறி தானும் அடைகையிலேயே அது பயனுள்ளதாகிறது. அரசன் தன் இயல்புக்கும் தேவைக்கும் உகந்த தனிநெறிக்கு தெய்வங்களின் பொதுநெறி என்னும் அடையாளத்தை அளிக்கும் பொருட்டே அமைச்சென்றும், அந்தணர் என்றும், முனிவர் என்றும், தெய்வங்கள் என்றும் நான்கு வகை அவைகளை அமைத்திருக்கிறான்” என்றார்.

நான் “விந்தை! இப்படி ஒரு எண்ணத்தை நான் அறிந்ததே இல்லை” என்றேன். “நான் அவற்றை உரைக்கவே இங்கு வந்தேன். எனது உதவி இங்கு அரசருக்கு தேவைப்படுகிறது” என்றார்.

முந்தைய கட்டுரைவேரில் திகழ்வது [சிறுகதை]
அடுத்த கட்டுரைஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்