தங்கத்தின் மணம், துளி- கடிதங்கள்

தங்கத்தின் மணம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ..

 

தங்கத்தின் மணம் கதையைப் படித்தபோது , யோக முழுமையை அடைந்து நிறை வாழ்வை அடைய இருக்கும் கடைசி கணத்தில் , தவத்தை இழந்து மலத்தை தேட ஆரம்பிக்கும் நாகம் என்ற படிமம் துணுக்குறலை அளித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து,மீண்டு தொடர்ந்து படிக்க வெகு நேரம் ஆயிற்று

 

துரியோதனனின் இறுதி தவத்தை கலைத்து , உன் இறுதி யோகமும் முழுமை அடையாது என்ற சாபம் பெறும் மகாபாரத கிருஷ்ணன் உட்பட பல்வேறு காட்சிகள் மனதில் எழுந்து வந்தவண்ணம் இருந்தன

 

நாகம் என்பதன் ஆன்மிக குறியீடுகளை மறந்து விட்டு எளிமையாக பார்த்தாலும் , தங்கத்தை அடையும் பாதை தங்கத்தால் வேயப்பட்டதன்று.

தாங்கவொண்ணா சோதனைகளும் கடைசி நொடியில் அனைத்தும் கைநழுவும் சாத்தியங்களும் கொண்டது என்றகோணம் கிடைக்கிறது.

 

எதற்கு தேவையின்றி யானையுடன் போராட வேண்டும் , கிடைக்கும் முயலுடன் சந்தோஷமாக வாழலாமே

என நினைப்போருக்கு உச்ச கட்ட வலியும் இல்லை. உச்சகட்ட அனுபவங்களும் இல்லை

 

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

 

அன்புள்ள ஜெ

 

தங்கத்தின் மணம் எனக்குப் பிடித்த கதை. தங்கம் நம்மை வெவ்வேறு வகையில் ஆட்டிவைக்கிறது. அது செல்வம்தான். ஆனால் நாம் அதை வெவ்வேறு வகையில் வளர்த்திருக்கிறோம். காலம் பொன்போன்றது, பொன்னுபோல வச்சு காப்பாத்துவார் என்றெல்லாம் சொல்லும்போது பொன் என்றாலே வேறு அர்த்தம் வந்துவிடுகிறது.

 

இளமையில் பொன் என்பது காமம். பொன்னுலகம். அந்தப்பொன் தேடிப்போவதன் கதை இது. காணாப்பொன்னினு போணோரே என்ற வரியை ஞாபகப்படுத்திக்கொண்டேன். அந்தப்பொன் ஒருபக்கம் மலம் மறுபக்கம் பசி என அலைக்கழிக்கிறது

 

ஜெயக்குமார்

 

துளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

வெளிவந்துகொண்டே இருக்கும் கதைகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை மிகவும்  பிடித்திருக்கிறது. எனக்கு என்னவோ துளி கதை மிகவும் பிடித்திருந்தது. இத்தனைக்கும் என் 25 வயதில் இலக்கியம் படிக்க ஆரம்பித்தது முதல் மிகப்பிடித்தமான கதைகள் மிகவும் சிக்கலான இண்டெலக்சுவல் கதைகளாகவே இருந்திருக்கின்றன. சொல்லப்போனால் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தலர் கார்லோஸ் புயன்டஸ். ஆனால் மிகச்சிக்கிரத்திலேயே சலித்துவிட்டேன். ஏன் சலிப்பு வருகிறது என்று பார்த்தேன். அந்தக்கதைகளில் மனம் உச்சத்துக்குச் செல்லும் அனுபவம் இல்லை. சிக்கலான கதை ஒரு சோர்வைத்தான் அளிக்கிறது. அந்தக்காலகட்டம் உலக அளவிலேயே முடிந்துவிட்டது என்ற எண்ணம் வந்துவிட்டது. வாழ்க்கையின் ஒளியை ஓரிரு வரிகளிலேயே காட்டும் கதைகள் மேல் ஈடுபாடு வருகிறது.

 

நாம் நம்முடைய இளமைப்பருவத்தில் இன்றைய சூழலில் பெரிய அழுத்தத்தைச் சந்திக்கிறோம். வேலைச்சூழல். அந்த அழுத்தம் கதைகளிலும் இருந்தால் அது வாழ்க்கை என நினைக்கிறோம். அது உண்மை அல்ல.

 

அந்தமாதிரி கதைகளில் நான் ஈடுபாடுகொண்டிருந்தது நான் பிஎச்டி செய்துகொண்டிருந்தபோது. அப்போது நான் என்னை உலகிலுள்ள அத்தனை சிக்கல்களையும் அறிந்த மண்டைகொண்ட அறிவுஜீவி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதோடு ஹைப்பர் டிப்ரஷனிலும் இருந்தேன். அமெரிக்காவில் ஆய்வுசெய்பவர் வாழ்க்கைமுழுக்க நீடிக்கும் ஹைப்பர் டிப்ரஷன் இல்லாமல் வெளியே வரவேமுடியாது. டிப்ரஷன் இருந்தால் நாம் டிப்ரஷனையே நாடுவோம். மேலும் மேலும் டிப்ரஸ் ஆகிவிடுவோம். இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்

 

அழுத்தமும் சோர்வும் சிக்கலும் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் என்று இப்போது படுகிறது. ஒரு தூண்டிலுடன் அமைதியான ஏரிக்கரையில் அமர்ந்து மீன்பிடிக்கும் அனுபவமும் வாழ்க்கைதான். அந்த அமைதியைச் சொல்லும் கதைகள்மீதுதான் இன்றைக்கு என் மனம் ஆர்வம் கொள்கிறது

 

ராம்

 

அன்புள்ள ஜெ,

நலமறிய ஆவல்.

துளி கதையில ஒருயானையில்ல, ரெண்டானையைக் காட்டிச் சும்மா அட்டகாசம் பண்ணீட்டிங்க போங்க. பதக் பதக்கென்றது படிக்கும்போதே. கோபாலகிருஷ்ணன் யாருக்கும் அடங்காமல், மதம் பிடித்து ஊருக்குள் நுழைந்து துவம்சம் செய்துவிடுவானோ என்று பாதி கதைக்குமேல  படிக்கும்போதே மனசுக்குளே பயம். ஊருக்குள் மற்றவர்களுக்கும் இதேபயம்தானே. ஆனைக்குமட்டுமா மதம் புடிக்கப் பார்த்துச்சு, மனுசங்களுக்கும் தானே.ஆனையவிட கொடிய மிருகமல்லவா மனிதர்கள். கருப்பனுக்குத்தான என்ன  அறிவு. அதோட செய்ககளும், சேஷ்டையும் ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது.

 

“கருப்பன்  தரையில் வயிற்றை அழுத்தி நீந்துவதுபோல முன்னால் சென்று கோபாலகிருஷணனின் பின்காலை முகர்ந்தபின் பாய்ந்து விலகினான். மீணடும்  நீந்திச்சென்று இன்னொருகாலை முகர்ந்தான்”  ரொம்பவே ரசித்தேன்  இந்த வரிகளை. கருப்பனின்  எல்லாச் செய்கைகளை படிக்கும்போது மிக ரசித்துச்  சிரித்துப் படித்தேன். சுவாரஸ்யமான கதைப்பாத்திரம். அப்படியே நாய்களைப்பற்றிய கிராமத்து பழைய நினைவுகளுக்குக் கூப்பிட்டு போயிடுச்சு கதை நடுவில். நாய்  தன்னைவிடப்பெரிய மிருகமான ஆனைமேலே பயஉணர்விருந்தாலும், தன் இயல்பு சேஷ்டை  அறிவுகுணத்தையேக் கோபாலகிருஷ்ணனிடமும் கொச்சுகேசவன்கிட்டயும் காமிச்சிக்கிட்டு இருக்கு.

 

 

கோபாலகிருஷ்ணனின் காலடியில் மூத்திரம் பெஞ்சாலும் கொச்சுகேசவன் முன்காலையும் ஒருச்சொட்டு (துளி) மூத்திரம் போய் பெய்யணமுன்னு என்ன ஒரு துண்ணறிவு அதுக்கு. நிறைய பெய்யமுடியால  அதால, கஷ்டப்பட்டு ஒரு சொட்டு.  இந்த செய்கை புரிந்துகொள்ளமுடியாத புதிராவே  இருந்தது. கருப்பன் அல்லவா ரெண்டு ஆனையயும் சேர்த்துவச்சவன். இந்த ரெண்டு ஆனைகளுக்கும்தான் என்ன ஒரு அறிவு. ஒன்றோடொன்று ஒட்டியொரசிக்கொண்டு மூத்திரவாடைய முகர்ந்துக்கிட்டுயென விலங்குகளுக்கே உள்ள சிறப்பு அறிவு  அல்லவா. கண்ணாம்வீட்டு சரோஜவ இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம். நகைசுவைக்காகச் சொன்னேன். மிக மிக அருமையான கதை ‘துளி’.

என்றும் அன்பும், நன்றியுடன்,

– முத்து காளிமுத்து

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–23
அடுத்த கட்டுரைஆனையில்லா, அங்கி -கடிதங்கள்