தங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்

தங்கத்தின் மணம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

தங்கத்தின் மணம் போன்ற ஒரு கதையை பொதுவாக வாசகர்கள் எவரும் வரையறுத்துச் சொல்லி வாசித்துவிட முடியாது. ஏனென்றால் அதிலுள்ளவை கவித்துவமான படிமங்கள் மட்டும்தான். அவற்றுக்கு இந்தியமரபில் என்ன அர்த்தம் உள்ளது என்று பார்க்கவேண்டும். அதனைக்கொண்டு பின்னிப்பின்னி இந்தக்கதை எதை உருவாக்குகிறது என்று பார்க்கவேண்டும்.

 

எதை வாசித்தாலும் அது subjectiveஆனதுதான். பொதுவான ஒரு அர்த்தம் எதையும் சொல்லவே முடியாது. ஏனென்றால் இது meaning தளத்தில் செயல்படும் கதை அல்ல. இது ஒரு கவித்துவமான விஷயம் மட்டும்தான். ஆகவே என் வாசிப்பை மட்டும் சொல்கிறேன். சரியில்லை என்றாலும் ஒன்றுமில்லை.

 

நாகம், நாகமணி என்பதெல்லாம் நம் மரபிலே உள்ள விஷயங்கள். பொதுவாக உலகம் முழுக்கவே நாகம் என்பது காமம். இந்தியாவில் அது id என்பதன் அடையாளமாகவே கருதப்படுகிறது. சிவனின் கழுத்தில் கிடக்கிறது. அதை கதையிலேயே சொல்கிறது

 

அந்த நாகம் உயிர்வாழ்வதற்காக அளிக்கப்பட்ட நஞ்சு. அது கடைசியாக அதை உமிழ்ந்துவிட்டு தவம் செய்கிறது. அதன்மேல் மலம் படுகிறது. ஆகவே அது தவத்தைக் கலைத்துக்கொண்டு செல்கிறது. அந்த் நஞ்சுதன் நாகமணி. அது காமம். அது அந்தப்பையனில் எழுவதுதான் கதை. முதல்காமம் என்று சொல்லலாம். அது விழித்தெழுவதன் பொன்னும் நாற்றமும் என்று கதையைச் சொல்லலாம். பொன்னாக மின்னுகிறது உலகம். ஆனால் அது அசிங்கத்தில் மூடிவைக்கவேண்டியதும்கூட.

 

அந்த மலத்தை காமமலம் என்று சொல்லலாம். ஆணவம் கன்மம் ஆகிய மலங்களுக்குப்பிறகு வரும் மலம். அதில் பொத்திவைக்கவேண்டிய விஷம். அது அந்த மலத்தை பொன்னாக்குகிறது.

 

இப்படியே வாசித்தால் எங்கெங்கோ சுழற்றிக்கொண்டுசெல்கிறது கதை

 

எஸ்.ராமச்சந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

தங்கத்தின் மணம் என்ற வரியில் தொடங்கினால் கதைக்குள் எளிதாகச் செல்லமுடிகிறது. தங்கமும் அதன் நாற்றமும். தங்கம் என்றால் டீனேஜில் எழும் காமத்தின் ஒரு வடிவம். அதன் நாற்றம். அதன் கனவுகள். சென்ஸ் களெல்லாம் மிகமிககூர்மையாகிவிட்டன. பசி பலமடங்காகிவிடுகிறது. காய்ச்சல் வருகிறது. கனவுகள் வருகின்றன. அந்த உலகமே அவனுக்கு மாறிவிடுகிறது. அவன் முகம் கதைகளியில் வரும் கந்தர்வன் போல இருந்தது என்று போற்றி சொல்கிறார்

 

நம்மூரில் இதை மோகினி அடித்ததுபோல என்று சொல்வார்கள். மோகினியால் பிடிக்கப்பட்டவன் அந்தப் போதையில் சாவை நோக்கிச் செல்வான். அவனை பிறர் மீட்கமுடியாது. இது நாகமோகினி. நாகயக்ஷி என்று கதை சொல்கிறது. அடுக்கடுக்காக வரும் கவித்துவமான படிமங்கள் வழியாகத்தான் கதை சொல்லப்படுகிறது. நாகலிங்கப் பூவின் மணம் தொலைவில் இனியது. அருகே சென்றால் பீநாற்றம் என்கிறான். நாகலிங்கப்பூ பொன் நிறமானது. பொன்னின் மணம் என்பது அதுதான்

 

கே.சிவக்குமார்.

ஏதேன் [சிறுகதை]

 

அன்புள்ள ஜே

 

ஏதேன் கதை இதுவரை வந்தக் கதைகளிலேயே சுருக்கமானது. ஆனால் இந்தச் சூழலுக்கு பொருந்தும் ஓர் அம்சம் இதில் இருந்தது. சாம் சொல்லும்போது வீட்டில் நிறைய சாமான் வாங்கி வைத்து பேங்கில் பணமும் வைத்துக்கொண்டு அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு தாரும் என்று கிறிஸ்துவிடம் கேட்க நமக்கு தகுதி உண்டா என்று சொல்கிறான். இதையே இங்கே என் மாமனார் சொன்னா. கரோனாவுக்காக சாமான் வாங்க அலைமோதினார்கள் என் கணவர். வாங்கி வைக்கலாம் ஆனால் கடவுளையும் நம்பணும். அன்னன்னைக்குள்ள அப்பமுன்னு சொல்லிறோமே என்று அவர் சொன்னார். அந்தவரியை இங்கேயும் வாசித்தபோது ஆச்சரியமாக இருந்தது

 

ஜாய் ஜாக்குலின்

 

அன்புள்ள ஜெ

 

ஏதேன் என்ற வரி வழியகாவே கதை வேறு ஒரு லெவலுக்குச் சென்றது. மனிதன் முதலில் தோன்றிய இடம் ஆப்ரிக்கா. ஆதாமும் ஏவாளும் அங்கேதான் இருக்கமுடியும். ஏதேன் போலவே அந்நிலமும் பண்படுத்தப்படாதது. பிதாவின் சொத்தாக இருப்பது. அந்த இடத்தைக் கைப்பற்ற சென்றவன் அந்நிலம் ஏதேன் என்று உணர்ந்து திரும்பி வருகிறான்

 

அவர்களுக்கு விவசாயம் தெரியாமலிருக்கலாம். ஆனால் பேதம் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லை. ஆகவே சுவை இருக்கிறது. சாப்பாடே பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது. வேறேதும் தேவையில்லை என்று உணர்கிறார்கள். அதை உணர்ந்தமையால்தான் சாம் அங்கே கொண்டாட்டமாக இருக்கிறான்

 

அவன் ஏசுவுக்கு நெருக்கமானவன் என்று கதை கேட்பவன் சொல்கிறான். உண்மையில் ஏதேனில் கடவுளை மிக நெருக்கமாகக் கண்டேன் என்று சொல்பவன் சாம்தான்

 

ராஜ்

முந்தைய கட்டுரைஆடகம், ஆனையில்லா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்