எழுகதிர் [சிறுகதை]

இது ஒரு மிகப்பெரிய கொள்ளையின் கதை. ஐம்பதாண்டுகளுக்கு முன், அதாவது 1971 ல் நடந்தது. மிகச்சரியாகச் சொல்லப்போனால் பிப்ரவரி மாதம் இருபத்திரண்டாம் தேதி. அன்றைய செய்தித்தாள்களில் மிகப்பெரிதாகப் பேசப்பட்டது. குகையுறைநாதர் கோயிலில் நடந்த கொள்ளை. இன்று அது ஓரளவு அறியப்பட்டுவிட்டது. அன்று அப்படியொரு கோயில் அங்கே இருப்பது எவருக்குமே தெரியாது. புதர்கள் நடுவே கைவிடப்பட்டு கிடந்த மிகச்சிறிய கல் கட்டிடம். எங்கள் கொள்ளையால்தான் அது பரவலாக அறியப்பட்டது

அன்று நான் இருபத்திரண்டு வயதான இளைஞன். வேலையேதும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். படிப்பு எட்டாம் வகுப்புடன் நின்றுவிட்டது. அப்பா கொஞ்சம் வசதியானவர், கஷ்டம் தெரியாமல் வளர்த்துவிட்டார். அதுதான் என்னை கட்டுப்பாடில்லாதவனாக ஆக்கியது. அதற்குள்ளாகவே நிறைய பெண் அனுபவங்கள்.நிறைய செலவு. செலவுக்காக நிறைய திருட்டுகள். பெரும்பாலும் சொந்த நிலத்திலும் சொந்த வீட்டிலும்.

வடக்குப்புரையிடத்தின் ஆதாரபத்திரத்தை திருடி மாங்குளம் அப்புப் பெருவட்டரிடம் அடகுவைத்தேன். அந்தக்காசில் சங்கைப்பிடித்த கடன்களை அடைத்துவிட்டு எஞ்சிய பணத்துடன் திருவனந்தபுரம் சென்று அங்கே புகழ்பெற்றிருந்த செங்கல்சூளை என்னும் சேரியில் பெண்களுடன் கொண்டாடினேன். ஆறுமாதம் போனதே தெரியவில்லை. திரும்பிவந்து இன்னொரு திருட்டுக்கு திட்டமிடும்போது அப்பா ஆதாரபத்திரம் காணாமல்போனதை கண்டுபிடித்துவிட்டார். அப்புப்பெருவட்டரே கூப்பிட்டு சொல்லிவிட்டார்.

நான் வீட்டுக்குச் சென்றபோது அப்பா கருக்குப் பனைமட்டையால் என்னை அடித்தார். என் தசை கிழிந்து ரத்தம் தெறித்தது. ஒரு கட்டத்தில் எகிறி அப்பாவின் நெஞ்சில் உதைத்தேன். அவர் மல்லாந்து விழுந்தார். ‘நாறத்தாயோளி, கொன்னிடுவேன்!” என்று கூவி அருகே கிடந்த கல்லை எடுத்து அவர் தலையில் போடப்போனேன். அவர் இருகைகளையும் கூப்பி கண்மூடி அசையாமல் கிடந்தார். கொஞ்சம் கூட பயம் இல்லாமல். பிரார்த்தனை செய்பவர் போல.

என் கை நடுங்கிவிட்டது. கல்லைப்போட்டுவிட்டு அவரை திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். செல்லும் வழியெல்லாம் துப்பிக்கொண்டே இருந்தேன். வாயில் ஏதோ அசிங்கமான கசப்பு ஊறி ஊறி வருவதைப்போல. அருமனையிலிருந்து மார்த்தாண்டம் வந்தேன். அங்கிருந்து எங்கே போவது என்று தெரியாமல் கன்யாகுமரி வந்தேன். கன்யாகுமரியில் அலைந்தேன். வீட்டைவிட்டு கிளம்பியபோது இருந்த கசப்பு கன்யாகுமரிக்கு வந்தபின் பெருகியது. எல்லாவற்றின்மீதும் கசப்பு.

கன்யாகுமரியின் மறுஎல்லையில் கோவளம் பீச் அருகே கொஞ்சம் தனிமையான இடத்தில் ஒதுங்கி முத்தமிட்டுக்கொண்டிருந்த வட இந்திய ஜோடியை தாக்கினேன். அந்த இளைஞனை கல்லால் அடித்து துரத்திவிட்டு அந்தப்பெண்ணின் செயினை பறித்துக்கொண்டேன். அந்தக்காசில் வயிறுமுட்ட தின்றேன், குடித்தேன். குடித்தபின் கைகூப்பி கண்மூடி மண்ணில் கிடந்த செல்லங்காடு பெருவட்டர் என்ற மதிப்பும் மரியாதையும் மிகுந்த என் அப்பாவை நினைவுகூர்ந்து அழுதேன்.

இப்போது ஐம்பத்தெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுகூட அதே நடுக்கம் அப்படியே நீடிக்கிறது. எத்தனை நதிகளில் நீராடினாலும் எத்தனை தெய்வங்களை தொழுதாலும் என் பாவம் தீராது. அன்று அவர் என்னை சாபமிட்டுவிட்டதாக நினைத்தேன். அந்த அச்சமும் கழிவிரக்கமும் வளர்ந்துகொண்டே இருந்தது. மிகமிகக் கடுமையான வாழ்க்கையினூடாகச் செல்லும்போதெல்லாம் அவருடைய சாபம் அது என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் இன்று தெரியும், அப்படி அல்ல. அவர் என்னை சாபமிடவில்லை. அவரைப்போல என்னை நேசித்த இன்னொருவர் இல்லை. இந்த பூமிவாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மாபெரும் ஆசி அவருக்கு மகனாகப்பிறந்தது.

ஆனால் அதுவே என் சாபமும் ஆகியது, காரணம் முழுக்க முழுக்க நான்தான். சரி, அது வேறுகதை. அதை சொல்லித்தீராது. நல்லவேளை, இன்று நினைத்து நினைத்து ஆறுதலடையும் ஒன்று, எனக்கு மகன்கள் இல்லை. என் பழி அவர்களின் மேல் படியாது. அப்பாவின் சாபத்துக்குச் சமானமாக பிள்ளைகளின் சாபத்தையும் நான் ஈட்டிக்கொள்ளவில்லை. என் வாழ்க்கையில் நான் விபச்சாரிகள் அல்லாதவர்களிடம் உறவுகொண்டதே இல்லை.

நான் கொள்ளையின் கதையை சொல்லிக்கொண்டிருந்தேன். கன்யாகுமரியில் சில ஆண்டுகளிலேயே நான் அறியப்பட்ட கொள்ளையனாக ஆகிவிட்டேன். எதற்கும் துணிந்தவன். நான்குமுறை கைதுசெய்யப்பட்டேன். சிறிய சிறைத்தண்டனைகள். ஆனால் அவை என்னை மேலும் உறுதியானவனாக ஆக்கின.மேலும் கசப்படைந்தவனாக மாற்றின. என் முகமே மாறிவிட்டது. நான் எவரையும் மிரட்டவேண்டியதில்லை. ஒரு கேள்விபோதும், நான் யார் என ஒரு சாமானியன் புரிந்துகொள்வான். பத்தடி தொலைவிலேயே போலீஸ்காரர் என்னை அடையாளம் கண்டுகொள்வார். இன்னொரு கிரிமினல் என்னை ஐம்பதடிதொலைவிலேயே அறிந்துவிடுவான்.

அப்போதுதான் ஸ்ரீகண்டன்நாயர் எனக்குப் பழக்கமானான். அவன் திருவனந்தபுரம் அருகே நேமம் என்ற ஊரைச்சேர்ந்தவன் திருவனந்தபுரத்தில் ரௌடியாக அலைந்தவன். அங்கே ஏதோ செய்துவிட்டான், அனேகமாக மிகப்பெரிய எவர் மேலோ கைவைத்துவிட்டான். பெரும்பாலும் பெண் விவகாரம். அல்லது நம்பிக்கைத் துரோகம். அவன் கன்யாகுமரியில் கிட்டத்தட்ட ஒளிந்துதான் இருந்தான். திருட்டும் வழிப்பறியும் செய்வான். குடிப்பான், ஏதாவது சிறிய விடுதியில் இரவு தங்குவான். ஆனால் எங்கே எப்படி இருக்கிறான் என்று திட்டவட்டமாகச் சொல்லவே முடியாது.

தற்செயலாக அறிமுகமாகி சீக்கிரமாகவே ஒருவரை ஒருவர் அணுகினோம். இருவரும் சேர்ந்து திருடினோம், குடித்தோம், பெண்களிடம் புழங்கினோம். அவனிடம் என்னைக் கவர்ந்தது அவனுடைய தயங்காத தன்மை. எங்கும் எதற்கும் கூசுபவன் அல்ல. எந்தக் கீழ்மையையும் செய்பவன், எந்தச் சந்தர்ப்பத்திலும் மிகமிக இயல்பாக திகழ்வான். அவன் ஒரு மாபெரும் நடிகன். அவனால் எவருடைய உடல்மொழியையும் அப்படியே நடிக்க முடியும். அப்படியே பேசிக்காட்ட முடியும்.

தன்னை ஒரு கான்ஸ்டபிள் என இன்னொரு கான்ஸ்டபிளை நம்பவைக்க முடியும். ஃபுட் இன்ஸ்பெக்டர் என்று சொல்லி ஓட்டலில் நுழைந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான். பிராமணன் என்று சொல்லி கோயில் கருவறைக்கு வெளியே மண்டபம் வரைச் சென்றுவிடுவான். சட்டென்று பூணூலை மாட்டிக்கொண்டு நீத்தார்ச் சடங்குகள் செய்து தட்சிணை வாங்குவான், யாருமில்லை என்றால் மிரட்டி நகைகளையும் பிடுங்கிக்கொள்வான். கன்யாகுமரி வந்த ஒரு பெண்ணிடம் தன்னை ஒரு கல்லூரி ஆசிரியர் என்று சொல்லி நம்பவைத்து அவள் தங்கியிருந்த லாட்ஜுக்குள் சென்று இரவு அவளுடன் தங்கிவிட்டு வந்தான்.

அவன் கட்டற்றவன். அத்தனை சுதந்திரமான ஒரு மனிதனை அதற்குமுன் நான் பார்த்ததே இல்லை. அந்தச் சுதந்திரத்தால்தான் அவன் கிரிமினல் ஆனான். கிரிமினலுக்குத்தான் முழுமையான சுதந்திரம் சாத்தியம். ஸ்ரீகண்டன் நாயர் சமூகமரபு, ஒழுக்கம், அறம் எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. எந்த அடையாளத்திலும் பொருந்துபவன் அல்ல. அவனை ஒரு புகைப்படம் எடுத்தால்கூட அதில் அவன் இருக்கமாட்டான், அப்போது அக்கணத்தில் அவன் எப்படி தன்னை வெளிக்காட்டுகிறானோ அதுவே அந்தப்படத்தில் பதிவாகியிருக்கும். எதுவுமே அவன் அல்ல.

அவனுடைய அந்த கட்டற்ற தன்மை மற்ற கிரிமினல்களை அவனிடமிருந்து விலக்கியது. அவர்கள் அவனை அஞ்சினார்கள். அவனை அடிக்கவும் கொல்லவும்கூட முயன்றார்கள். ஆனால் அவன் பூனைபோல. ஆபத்து இருக்குமிடத்தை முன்னதாகவே எப்படியோ உணர்ந்து மறைந்து விடுவான். அவனை கொல்ல நினைத்த கச்சேரி லாரன்சும் உழப்பன் சண்முகமும் கடலில் பிணமாக ஒதுங்கினார்கள். அதன்பின் அவனை எதிர்கொள்ள அத்தனைபேரும் அஞ்சினார்கள்.

நான் அவனுடைய அடிமைபோல் ஆனேன். அப்படி ஒரு மனிதன் என்னை ஆட்கொள்ள முடியும் என்று ஒரு ஆண்டுக்குமுன் எவரேனும் சொல்லியிருந்தால் அடித்திருப்பேன். அவனுடைய பேச்சுத்தான் என்னைக் கவர்ந்தது. எதைச்சொன்னாலும் வெடித்துச் சிரிக்கவைக்க அவனால் முடிந்தது. ஒவ்வொன்றையும் கொஞ்சம் திருப்பி வைப்பான். நாம் சாதாரணமாக சொல்லும் ஒரு வார்த்தையையே கொஞ்சம் அழுத்தி அதை ஒரு காட்சியாக ஆக்கினால் வேடிக்கையாக மாறிவிடும் என்பதை அவன்தான் காட்டினான்.

அவனுடன் இருக்கும்போது என் முகம் மலர்ந்திருக்கும். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். காதலியைப்போல அவனையே நினைத்துக் கொண்டிருப்பேன். அவனுக்கு பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தேன். சேர்ந்து சாப்பிட்டால் அவனுக்குப் பரிமாறுவேன். அவனுக்கு நானே நல்ல ஆடைகளை வாங்கிக்கொண்டு சென்று கொடுத்தேன். அவன் அணிந்து வந்தால் பார்த்துக்கொண்டே இருப்பேன்.

அவன் நல்ல சிவப்புநிறம். சிவந்த உதடுகள். கெட்டியான கன்னங்கரிய மெழுகுபோன்ற மீசை. பெரிய மலர்ந்த கண்கள். அழகானவன். பெண்ணாக இருந்திருந்தால் மிகப்பெரிய அழகியாக இருந்திருப்பான். அவன் யார், அவனுடைய பின்னணி என்ன எதுவும் எனக்குத்தெரியவில்லை. ஒரே ஒருமுறை அவன் பேச்சிலிருந்து அவன் திருவனந்தபுரத்தின் செயிண்ட் ஜோசப் பள்ளியில் படித்தவன் என்று தெரிந்தது. உயர்குடியினர் படிக்கும் பள்ளி அது. அப்படியென்றால் அவன் வசதியான குடும்பப்பின்னணி கொண்டவன். எப்படி பொறுக்கியாக ஆனான்?

அவனுக்கு பெண்பித்து இல்லை. விபச்சாரிகளை அவன் அணுகவே விடமாட்டான். அவன் சில பெண்களை குறிவைப்பான். நம்பவே முடியாத இலக்குகள். ஆனால் சிலநாட்களிலேயே வென்றுவிடுவான். ஒரேநாளில் சொல்லிவைத்து சுற்றுலாவந்த கல்லூரிமாணவி ஒருத்தியை மயக்கி தன்மேல் பித்தாகச் செய்து அவன் விடுதிக்குக் கூட்டிவந்தான். அவனிடம் ஏதோ வசியம் இருப்பதுபோல. அவன் சூதாடுவதில்லை. வாழ்க்கையை வைத்துச் சூதாட திறமை இல்லாதவர்களின் ஆட்டம் அது என்று அவன் சொல்வான். சொல்லப்போனால் பெரிய பணச்செலவே இல்லை. சாப்பாடு, சினிமா, கொஞ்சம் குடி, அவ்வளவுதான். குடிகூட அவன் நிலைமறக்கும் அளவுக்கு இல்லை.

ஆனால் கையில் பணமிருந்தால் அள்ளி இறைப்பான். கேட்டவர்களுக்கெல்லாம் கொடுப்பான். வழியில் காணும் பசித்தவர்கள் அனைவருக்கும் கொடுப்பான். ஏழைக்கிழவிகளின் மடியில் ரூபாய் சுருள்களை பின்னாலிருந்து வீசிவிட்டு மறைவது அவனுடைய வேடிக்கைகளில் ஒன்று. ஒரு கொள்ளைக்குப்பின் நாலைந்து நாட்களிலேயே ஒரு பைசாகூட இல்லாமல் அவன் பலிமண்டபத்தின் அருகே நின்றிருப்பான். அவனை நான் புரிந்துகொள்ள முயன்றேன், ஆனால் அவனை அணுகவே முடியவில்லை.

அவன் தமிழ் நன்றாகப் பேசுவான். ஆனால் என்னிடம் முழுக்க முழுக்க மலையாளத்திலேயே பேசினான். நானும் மலையாளத்தை கொஞ்சம் தமிழ்நெடியுடன் பேசுவேன். அவன் என்னிடம் மலையாளத்தில் பேசுவதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று நினைத்தேன். அது எங்களுக்கு நடுவே ஓர் அந்தரங்கமான உணர்வை உருவாக்கியது. அவ்வப்போது தமிழ்ச்சொற்றொடர்கள் பேசிக்கொள்வோம். அது ஏன் அப்படி நிகழ்கிறது என்றும் புரிந்ததே இல்லை.

ஒருநாள் அவன் ஒரு திட்டத்தைச் சொன்னான். அவன் உண்மையில் மிகப்பெரிய கொள்ளை ஒன்றைச் செய்துவிட்டு கிளம்பிச் செல்வதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். அவனுடைய எதிரிகள் அவன் அங்கே இருப்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு காலம் ஆகிவிட்டிருந்தது. அவன் கன்யாகுமரியைச் சூழ்ந்திருக்கும் இடங்களை வேவுபார்த்துக்கொண்டே இருந்திருக்கிறான். பணக்காரர்களை, பெரிய கடைகளை. அப்போதுதான் குகையுறைநாதர் கோயிலைக் கண்டுபிடித்தான்.

கன்யாகுமரியிலேயே அதுதான் மிகப்பழைய கோயில். சோழர்காலத்தில் கட்டப்பட்டது. ஆனால் அப்படியே மறக்கப்பட்டுவிட்டது. ஒரு வயதான ஐயர் இரண்டுவேளை பூசை செய்வார். ஒரு கிழவி நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை முன்பகுதியை மட்டும் கூட்டிப்பெருக்கி வைப்பாள். வேறு ஊழியர்கள் இல்லை. பக்தர்கள் என எவருமே வருவதில்லை. திருவிழா ஏதும் இல்லை. புதர்மூடி பாதிப்பங்கு மணலில் புதைந்து கிடந்தது கோயில். இரண்டு ஆள் உயரமான கல்கட்டிடம், அதில் ஒர் ஆள் அளவுக்குத்தான் வெளியே தெரிந்தது. கற்பலகைகள்மேல் அமைந்த சுதைக்கூரை சிதைந்து மண்மூடி அதன்மேல் புல்செறிந்து காய்ந்து பரட்டைத்தலைபோல் நின்றிருந்தது.

கோயிலில் நகைகள் இருக்க வாய்ப்பே இல்லை என்று நான் ஸ்ரீகண்டனிடம் சொன்னேன்.

“என்ன இருக்கிறது என்று எனக்குத்தெரியும், பேசாமல் வா” என்று அவன் என்னிடம் சொன்னான்.

பித்தளைப்பாத்திரங்கள் சில இருக்கலாம். ஒருவேளை சிலைகள் இருக்கலாம். ஆனால் சிலைகளை எளிதாக விற்கமுடியாது, அதற்கான தொடர்புகள் எங்களுக்கு இல்லை. அவன் என் பதற்றங்களை பொருட்படுத்தவில்லை, “பேசாமலிரு, எனக்குத்தெரியும்” என்றான்.

கோயிலில் எப்படி நுழைவது என்று எனக்குப்புரியவில்லை. அதன் கதவு மிகத்தடிமனானது. வெண்கலப் பூட்டும் கனமானது, மிகப்பழையது. கூரையும் தடிமனான கல்லால் ஆனது. ஆனால் ஸ்ரீகண்டன் ஒவ்வொன்றையும் மிகமிக கவனமாக திட்டமிட்டுச் செய்தான். கோயிலை பலநாட்கள் தொடர்ந்து நோட்டமிட்டான். எல்லா வாய்ப்புகளையும் பரிசீலித்தான்

அந்த அர்ச்சகர் கோயிலை திறந்தபின் சாவியை கோயிலின் உள்ளே கருவறைக்கு வெளியே ஒரு ஆணியில் தொங்கவிடுவார். அவன் ஒருநாள் அவர் மடப்பள்ளியில் இருக்கையில் சென்று அதைப் பார்த்து அதன் வடிவத்தை மனதில் பதியவைத்துக்கொண்டான் . அதைப்போல ஒன்றை செய்து எடுத்துக்கொண்டு சென்றான். அவர் கிணற்றில் நீர் மொண்டுவரச் சென்ற இடைவெளியில் அதை அங்கே மாட்டிவிட்டு அசலை எடுத்து வந்துவிட்டான்.

அருகே இடிந்த பழைய கட்டிடம் ஒன்றுக்குள் நான் மெழுகுக் கட்டைகளுடன் காத்திருந்தேன். அதை விதவிதமாக பதித்து அச்சு செய்தோம். ஒருமணிநேரத்தில் அசலை திரும்ப கொண்டு மாட்டிவிட்டு அவர் கண்களை ஏமாற்றும் பொருட்டு மாட்டிய டம்மியை திரும்ப எடுத்து வந்துவிட்டோம். மொத்த நடவடிக்கைகளையும் அய்யர் எங்களை பார்க்காமலேயெ செய்தோம்.

ஒரு விடுதியில் தங்கி அந்தச் சாவிக்கு நகலை செய்தான் ஸ்ரீகண்டன். அவன் அந்த வேலைக்கு எவரையும் நம்பவில்லை. நாகர்கோயில் வடசேரியில் மிக எளிதாக அதற்கு நகல் செய்து தருவார்கள் என்று நான் சொன்னேன். ஆனால் பழைய பூட்டு என்பதனால் அவர்கள் சந்தேகம் கொள்ளக்கூடும், போலீஸுக்கு தெரிவிக்கலாம், அல்லது பங்கு கேட்கலாம் என்று ஸ்ரீகண்டன் சொன்னான். அவனே ஒரு செம்புத் தாம்பாளத்தை கட்டரால் வெட்டி உரசி உரசி அந்த சாவியின் நகல்களைச் செய்தான்.

“எதற்கு இரண்டு நகல்கள்” என்றேன்.

“சிலசமயம் உள்ளே சென்றபின் விளிம்பு மழுங்கிவிடலாம்” என்றான்.

எந்த வாய்ப்பையும் அவன் விட்டுவைக்கவில்லை. பாழடைந்த கட்டிடத்தின் அருகே ஒரு கடப்பாரையைக் கொண்டுசென்று மண்ணில் புதைத்து போட்டேன். முழநீளத்தில் வெட்டப்பட்ட  துத்தநாகப் பூச்சுள்ள எட்டு இரும்புப் பைப்புகளையும் கொண்டுசென்று புதைத்துப் போட்டேன். அவை எதற்கு என நான் கேட்கவில்லை. எல்லாமே அவனுடைய திட்டங்கள்.

பிப்ரவரி இருபத்திரண்டாம் நாள் இரவு ஒரு மணிக்கு நாங்கள் கிளம்பினோம். பாழடைந்த கட்டிடத்தை அணுகியதும் நானும் அவனும் நீலநிறமான உடைகளை மாற்றிக்கொண்டோம். பைக்குள் கொண்டுவந்த உயரமான கம்-பூட்டுகளை பைக்குள் எடுத்து காலில் அணிந்து கொண்டோம். நான் ஒரு பட்டன் கத்தியும் ஒர் அரிவாளும் வைத்திருந்தேன். அவன் ஒரு காக்கித்துணிப்பை வைத்திருந்தான். அதற்குள் ஒரு கட்டரும், சுத்தியலும் இருந்தன. பாழடைந்த கட்டிடத்திற்கு அருகே முந்தையநாளே புதைத்துப்போட்ட கடப்பாரையையும் பைப் உருளைகளையும் எடுத்துக்கொண்டோம்

பூட்டு எளிதில் திறக்கவில்லை. ஒரு சாவி முழுமையாகவே முனைமடிந்துவிட்டது. இரண்டாம்சாவிதான் பூட்டை திறந்தது. ஓசையில்லாமல் உள்ளே சென்றோம். உள்ளே வௌவால்கள் பறந்துகொண்டிருந்தன. நாங்கள் எந்த விளக்கையும் பயன்படுத்தவில்லை. அந்த இடம் கிட்டத்தட்ட ஆளில்லாத திறந்த வெளி. ஒரு வெளிச்சம் நெடுந்தொலைவுக்கு காட்டிக்கொடுக்கும். இருட்டுக்குப் பழகிய கண்களால் வழிகண்டு பிடித்து சென்றோம். கருவறையும் பூட்டியிருந்தது. ஆனால் சிறிய காத்ரெஜ் பூட்டு. அதை அவன் கட்டரால் வெட்டி திறந்தான்.

வாசல்நடையாக அமைந்த பெரிய கற்பாளத்துக்கு அப்பால் பள்ளமாக இருந்த கருவறையின் தரையில் பாவியிருந்த கற்பலகைகள் பலவகைகளிலும் பெயர்ந்திருந்தன. அவற்றுக்கு நடுவில் குத்துச்செடிகளின் வேர்கள் எழுந்திருந்தன. நாங்கள் உள்ளே நுழைந்தபோது ஏராளமான பெருச்சாளிகள் உள்ளிருந்து சிதறியோடி பொந்துகளுக்குள் சென்றன.

பென்-டார்ட்ச்சை அடித்து பார்த்தோம். ஒரு பெரிய பெருச்சாளி உடலெங்கும் புண்ணுடன் மயிர்களைச் சிலிர்த்து குறுகி நின்றது. தாக்கவரும் பன்றிபோல் தலையை தாழ்த்தியிருந்தது. அந்த அறைக்குள் ஒன்றுமே இல்லை. இரண்டு சிறிய பித்தளைவிளக்குகள் தவிர.

“இங்க ஒண்ணுமில்லை” என்று நான் சொன்னேன்.

இரு என அவன் கைகாட்டினான். அங்கே தாழ்வான சிவலிங்கம் இருந்தது. ஒன்றரை சாண் உயரமிருக்கும். தேய்ந்து பளபளவென்றிருந்தது. அதைப்பொருத்தியிருந்த ஆவுடை என்னும் பீடம் கல்தரையில் பதிந்து கீழே அழுந்திப் புதைந்திருந்தது.

அவன் என்னிடம் கையசைவால் கதவை மூடும்படிச் சொன்னான்

“உள்ளிருந்தா?” என்றேன்

“கதவைமூடினால் சத்தம் கேட்காது”

அந்த சிவலிங்கத்தை அணுகி அதை பிடித்து அசைத்துப்பார்த்தான். “இது கல்லு” என்றேன்

பேசாமலிருக்கும்படி அவன் கைகாட்டினான். சிவலிங்கத்தை பலமுறை அசைத்தபோது அது அசைந்தது. அது அங்கே நிறுவப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவன் என்னிடம் பிடிக்கும்படிச் சொன்னான். நானும் அவனும் சேர்ந்து அதைப்பிடித்தோம். இழுத்து இழுத்து அசைத்து பின்னர் பிடுங்கி எடுத்துவிட்டோம். ஸ்ரீகண்டன் அதை தூக்கி ஓரமாகப் போட்டான். அந்த சிவலிங்கம் பதிக்கப்பட்டிருந்த குழியை கூர்ந்து பார்த்தான். அது சதுரவடிவமான ஒரு வெட்டு மட்டும்தான்

அதன்பின் அவன் கடப்பாரையால் ஆவுடைப்பீடத்தை நெம்பி பெயர்த்து எடுக்க தொடங்கினான். அவன் மூட்டைக்குள் பழைய துணிகளை வைத்திருந்தான். அவற்றை அந்தப்பாறையின் இடுக்கில் விட்டு அதன்மேல் ஓசையே இல்லாமல் கடப்பாரையால் அறைந்தான். மிகச்சரியாக கல்பொருத்துக்களில் கடப்பாரையை விழச்செய்தான். அதை அசைக்கவே முடியாது என்று தோன்றியது. ஆனால் கடப்பாரை நுழையும் இடைவெளி வந்ததும் அதில் அதன் நுனியை பொருத்திவிட்டு என்னிடம் நெம்பும்படி சொன்னான். நான் முழு எடையுடன் நெம்பினேன். கல் பெயர்ந்து வந்தது,

மிகமெல்ல அது எழுந்து வருவது ஒரு வாய் திறப்பது போல இருந்தது. அதை ஒரு இஞ்ச் மேலே தூக்கி அதன் அடியில் கல்லை வைத்து நிறுத்தினோம். மீண்டும் ஒரு இஞ்ச். அதையும் கல்லைவைத்து நிறுத்தியபின் மறுபக்கம் நெம்பி ஒருஇஞ்ச் தூக்கினேன். மேலுமொரு இஞ்ச். அவன் அருகே அமர்ந்து கல்லை வைத்தான். நாற்புறமும் நெம்பி நெம்பி அந்தக்கல்லை மேலே எழுப்பினோம். அது ஒரு முழம் தடிமன் கொண்ட, மூன்றடிக்கு மூன்றடி அளவுள்ள சதுரமான மிகப்பெரிய கல். நெம்புகோல்முறையால் மட்டும்தான் அதை அசைக்க முடிந்தது.

அது முழுமையாகவே எழுந்து மேலே வந்ததும் அதற்கு அடியில் அந்த ஜிஐ பம்புகளின் துண்டுகளை உருளைகளாக கொடுத்தோம். கடப்பாரையால் மிகமிக மெல்ல உந்தி விலக்கி அந்த பெரிய பாறைவெட்டை அப்பால் கொண்டுசென்றோம். முடிந்தபோது நான் வியர்த்திருந்தேன். மூச்சுவாங்க நின்றேன்.

அவன் பென்.டார்ச்சை அடித்து உள்ளே பார்த்தான். உள்ளே மேலும் பெரிய ஒரு கல்லமைப்பு இருந்தது. கவிழ்த்துவைக்கப்பட்ட தாமரைபோல. அல்லது அதன் ஏதோ ஒரு வடிவம். அவன் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான்.

 “என்ன?” என்றேன்.

 “சிலசமயம் பாம்பு இருக்கும்” என்றான்.

 “ஏன்?” என்றேன்.

 “பாம்பு குடியேறுவதற்காகவே பொந்துவழிகள் விட்டு இதை கட்டியிருப்பார்கள்”

அந்த ரகசிய அறை பாம்புவாழ மிக ஏற்றது. எலிகள் நிறைந்தது, காற்றோட்டம் உண்டு, இருட்டானது.

 “இல்லை, நான் நல்லாவே பாத்தேன்” என்றேன்.

ஆனால் அவன் வெளியே நின்றபடியே கடப்பாரையால் உள்ளே பலமுறை தட்டினான். கீழே இருந்து நாகம் ஒன்று படமெடுத்து சீறியது. நான் மெய்விதிர்த்து பின்னால் சென்றுவிட்டேன். அவன் கடப்பாரையால் சட்டென்று அதை குத்தி அழுத்தி கொன்று தூக்கி வெளியே கொண்டுபோட்டான். அதன்பின்னரும் தட்டிக்கொண்டிருந்தான். நினைத்ததுபோலவே இன்னொரு நாகம்.

நாங்கள் அந்தக் குழியிலிருந்து ஏழு நாகப்பாம்புகளை எடுத்தோம். அவை மேலே கருவறைக்குள் வராமல் அடித்தளம் வழியாகவே உள்ளே வந்து சென்றுகொண்டிருந்திருக்கின்றன. பாவம் அய்யர் இத்தனை பாம்புகளுக்குமேல் அவர் நாளெல்லாம் புழங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

அவன் மீண்டும் இறங்க தயங்கினான். பின்னர் அந்த துணியை எடுத்து தீப்பெட்டியை உரசி பற்றவைத்து உள்ளே போட்டான். அது பற்றி எரிந்து புகையுடன் உள்ளே நெளிந்தபோது கல்லிடுக்குகளில் இருந்து இரண்டு விரற்கடை நீளமுள்ள சிறிய நாகப்பாம்புகள் புழுக்களைப்போல நெளிந்து மேலே வந்தன. அவன் “டார்ச், டார்ச், விட்டிராதே” என்றான். ஒவ்வொன்றையும் மிகமிகத் திறமையாக அவன் கடப்பாரையால் குத்திக் கொன்றான். மொத்த இருபதுக்கும் மேல்.

“இதெல்லாமே விஷம் உடையவையா?” என்றேன்.

“இவற்றில் எத்தனை நச்சுப்பாம்புகள் என்று சொல்லமுடியாது…ஆனால் எதற்கு ரிஸ்க்?”என்றான்.

மீண்டும் துணிகளை கொளுத்தி உள்ளே போட்டோம். புகை எழுந்தபின்னரும் பாம்புகள் எவையும் வெளியே வரவில்லை. “பொரிக்காத முட்டைகளும் இருக்கும். ஆனால் அவை ஆபத்தில்லை” என்றான்

அதன்பின் அவன் உள்ளே இறங்கினான்.அவனுடைய இடைவரை ஆழம் இருந்தது. கடப்பாரையால் தட்டித்தட்டிப்பார்த்தான். பலமுறை தட்டியபோது அந்த தாமரையின் நடுவில் வட்டமாக ஒரு கல் அசைவுகொண்டு விளிம்பு காட்டியது. அப்படி ஒரு கல் பொருத்தப்பட்டிருப்பதே தெரியவில்லை. அவன் சுத்தியலால் பலமுறை தட்டினான். பின்னர் ஓங்கி ஒரே அறை. மெல்லிய மணியோசையுடன் அது வெடித்தது. அவன் அதை கடப்பாரையால் நெம்பி இரு துண்டுகளாக தூக்கி மேலே போட்டான்.

உள்ளே குனிந்து டார்ச் அடித்தான். அங்கே ஒரு மண்கலம் இருந்தது. அது மூடப்பட்டிருந்தது, முதலில் ஏதோ கிழங்கு போல தோன்றியது. பின்ன்ர் ஒரு உருண்டைபோல. அவன் அதை நன்றாகக் கூர்ந்து பார்த்தான். பிறகு என்னிடம் கட்டரை தரும்படிச் சொன்னான். கட்டரைக்கொண்டு அதைப்பிடித்து கைதொடாமல் தூக்கினான் நான் அதை வாங்க கைநீடினேன். “தொடாதே, இதில் விஷம் இருக்கலாம்” என்றான்.அதை மேலே வைத்துவிட்டு அவன் தொற்றி மேலே வந்தான்.

“இதை எடுக்கவா வந்தோம்?” என்றேன்.

பேசாதே என்று அவன் கைகாட்டினான். “உன் சட்டையைக் கழற்று” என்றான்

என் சட்டையை அதன்மேல் மடித்துப் போட்டு அதன்மேல் கைவைத்து அந்த கலத்தை பிடித்துக்கொண்டான்

“மண்கலமா?”

”இல்லை செம்பு… ஆனால் மேலே நவச்சாரக்கலவை போல ஏதோ பூசப்பட்டிருக்கிறது. நஞ்சாக இருக்கலாம்”

அவன் அதை கட்டரால் உடைத்தான். ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கி அதற்குள் கடப்பாரையை செலுத்தி பிளந்தான். அந்த கலத்தின் மூடியின் விளிம்புகள் உருக்கி ஒட்டப்பட்டிருந்தன. அது திறந்துகொண்டபோது உள்ளிருந்து மண் பொழிந்தது

“மண்ணா?” என்றேன்

அவன் பேசாமலிருக்கும்படி கைகாட்டினான்

நான் ஒரு பொசுங்கும் மணத்தை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன். அவன் கைபிடித்துணியாகப் பயன்படுத்திய என் சட்டையில் கலத்தில் பட்ட பகுதிகள் அமிலம் பட்டதுபோல் பொசுங்கியிருந்தன

அவன் அந்த மண்ணை கட்டரால் கிண்டினான். அது மண்ணல்ல ஏதோ தானியம் என்று தெரிந்தது

“தானியமா?” என்றேன்

”நவதானியம்..” என்றான்

ஆனால் அதில் அரிசி இல்லை. மிகச்சிறிய மணிகள் கொண்ட தவசங்கள் அவை. அவன் அவற்றில் இருந்து சிறிய ஓட்டுச்சிப்பிகள் போன்றவற்றை கட்டரையே கிடுக்கியாகப் பயன்படுத்தி பொறுக்கி அப்பால் விரித்து வைத்த தன் பையின்மேல் போட்டான்.சிறிய கூழாங்கற்களையும் எடுத்து வைத்தான்

துணியை சுற்றி பொட்டலமாக்கி எடுத்துக்கொண்டு “போவோம்” என்றான்

“என்ன எடுத்தோம்? இதுவா? இது என்ன?”

“வா பேசாமல்”

அவன் வெளியே சென்றான். நான் அவனை தொடர்ந்து சென்றேன். இம்முறை அவன் மிகமிக விரைவான நடைகொண்டிருந்தான். பாழடைந்த கட்டிடத்தில் ஆடைகளை மாற்றிக்கொண்டோம். அங்கிருந்து நேராக பஸ்ஸ்டாப் சென்றோம். முதல் பஸ்ஸில் நாகர்கோயில். மீனாட்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் டீ சாப்பிட்டுவிட்டு நெல்லைக்கு பஸ் ஏறினோம். நெல்லையில் இறங்கி ஓட்டலில் டிபன் சாப்பிட்டோம்.

“நாம் எடுத்தது என்ன?” என்றேன்

“சொல்கிறேன்” என்று அவன் சொன்னான். நாங்கள் கடைக்குச் சென்று ஆடைகளும் இரண்டு ஏர்பேக்குளும் வாங்கிக்கொண்டோம். ஒரு சிறு விடுதியில் வாடகைக்கு அறை எடுத்தோம்.

அதன்பிறகுதான் அவன் அந்தப்பொட்டலத்தை எடுத்தான். எனக்கு அப்போதுகூட அந்த சில்லுகளும் கற்களும் என்ன என்று தெரியவில்லை. மண் ஓடுகள், கூழாங்கற்கள் என்றே நினைத்தேன். அவன் அவற்றை கழிப்பறையில் நீரில் நன்றாகக் கழுவிக்கொண்டுவந்து காட்டினான். நான் திகைத்து விட்டேன்

அவை பொற்காசுகள், வைரங்கள் உட்பட அரிய கற்கள். நூற்றெட்டு பொற்காசுகள் இருந்தன. ஒவ்வொன்றும் இருபது கிராம் எடைகொண்டவை. பதினெட்டு கற்கள். என்னால் அவற்றை தொட முடியவில்லை. என் நெஞ்சு படபடத்துக்கொண்டே இருந்தது

அவன் “இவை நவமணிகள். பிறமணிகளும் மதிப்புள்ளவைதான். ஆனால் வைரக்கற்களின் விலையை நம்மால் மதிப்பிடவே முடியாது. மிகச்சரியாக மதிப்பிட்டு இவற்றை விற்கும் ஓர் இடத்திற்கு நாம் சென்றாகவேண்டும்” என்றன்

“ஆம்” என்றேன்

“நல்லவேளையாக நம்மிடம் தங்கமும் இருக்கிறது. நமக்கான இடத்தை நாம் கண்டடைவதுவரை நம்மால் செல்லமுடியும்”

அவன் தங்கத்தை தனியாக எடுத்து நான்கு சிறு பைகளுக்குள்ளாக போட்டான். அவற்றை எங்கள் பைகளில் வெவ்வேறு இடங்களில் பிரித்து வைத்துக்கொண்டோம்.

கற்களில் இருந்து அவன் வைரங்களை மட்டும் பிரித்தெடுத்தான். உப்புக்கல் போன்ற வெண்ணிற வைரங்கள் நான்கு. நீலநிற ஓட்டம் கொண்ட வைரங்கள் மூன்று. ஒரு வைரம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. எடுத்துப்பார்த்தால் அதற்குள் ஓடிக்கொண்டிருந்த சிவப்புத்தீற்றல் சுடர்கொண்டது. அதுதான் மிகப்பெரியது, சிறிய நெல்லிக்காய் அளவு.

“இது கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளது என நினைக்கிறேன்” என்றான்

“கோடியா?”என்றேன்

“பலகோடி” என்றான்.”இவற்றின் தொல்மதிப்புதான் முக்கியமானது. இதைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். திருவனந்தபுரம் அருகே ஒரு கோயிலை நாங்கள் முன்பு கொள்ளையடித்தோம்”

“நாங்கள் என்றால்?”

அவன் ஒன்றும் சொல்லாமல் அதை திருப்பிப்பார்த்தான். “இதை இளஞ்சூரியன் என்கிறார்கள். அருணபிந்து. இது இந்திரனுக்குரியது, கிழக்கு திசைக்கு உரியது. இது எவரிடமிருந்தாலும் தன் வழியை தானே தீர்மானிக்கும். கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும் என்கிறார்கள்”

“அப்படியா?”என்றேன்

“நாம் இங்கே இருக்கக் கூடாது. கோயில் கொள்ளையிடப்பட்ட செய்தி இதற்குள் போலீஸுக்கு தெரிந்துவிட்டிருக்கும். நம்மை எவரேனும் பார்த்திருக்கலாம். பார்க்காவிட்டாலும் போலீஸ் ஊகித்துவிட வாய்ப்புண்டு. அங்கே உள்ள சல்லிப்பயல்களை இதற்குள் பிடித்து சுளுக்கு எடுப்பார்கள். அவர்கள் நம்மைப்பற்றிச் சொல்லியிருப்பார்கள்”

நாங்கள் உடனே அறையைக் காலிசெய்துகொண்டு மதுரை பஸ்சை பிடித்தோம். பகல் முழுக்க பயணம் செய்து நள்ளிரவில் சென்னையைச் சென்றடைந்தோம்

நான் சென்னையில் “களைப்பாக இருக்கிறது, எங்காவது தங்கி தூங்கவேண்டும்” என்றேன்

“எங்கு தங்கினாலும் ஆபத்து. சென்றுகொண்டே இருக்கவேண்டும்.தூங்குவதற்குச் சிறந்த இடம் ரயில்தான்” என்றான்

அப்போது படுக்கை வசதி கிடைத்த ரயில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ்தான். அதில் ஏறிப் படுத்துக்கொண்டோம். என் மனம் குழம்பிக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. ஆனால் களைப்பு மிகுதியாக இருந்தது. ஆகவே தூங்கிவிட்டேன். காலையில் கண்விழித்தபோது ஸ்ரீகண்டன் நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான். எங்கள் திருட்டு பற்றிய விரிவான செய்தி இருந்தது. எங்களை அடையாளம் கண்டுகொண்டதாக ஏதுமில்லை

“நம்மை இரண்டுபேர் தேடுவார்கள்” என்று ஸ்ரீகண்டன் சொன்னான். “திருவனந்தபுரத்தவர்கள் தேடுவதும் ஆபத்து நிறைந்தது. அவர்களுக்கு நாம் எங்கெங்கே செல்லக்கூடும் என்று தெரியும். இந்தத் திருட்டை கேள்விப்பட்டதுமே நான் என்று கண்டுபிடித்துவிடுவார்கள்”

“நாம் என்ன செய்வது?”

“சென்றுகொண்டே இருப்பது, வேறு வழியே இல்லை. முதலில் இந்த தங்கத்தை விற்கவேண்டும்”

காக்கிநாடாவில் இறங்கினோம். நடுத்தரமான ஒரு நகைக்கடையை பார்க்கவேண்டும் என்றான் ஸ்ரீகண்டன். சிறியவர்களிடம் காசு இருக்காது, பெரியவர்களிடம் போலீஸ் தொடர்பு இருக்கும். நடுத்தரக்கடைகள் பெரும்பாலும் திருட்டுநகை வாங்குபவை. அவனே கடை ஒன்றை தேர்வுசெய்து சொன்னான். தங்கக்காசு ஒன்றை என்னிடம் அளித்து விற்று வரும்படி சொன்னான். “அவன்கிட்ட சொல்லு…அவன் பணம் ஏற்பாடு செய்தான்ன்னா இன்னும் பத்து காசுகளோட சாயங்காலம் வாரேன்னு” என்றான்

நான் அந்தக் கடையை அடைந்தேன். அந்தப் பொற்கொல்லன் என்னைப்பார்த்ததுமே கண்டுபிடித்துவிட்டான். அவன் கண்கள் மாறின. நான் தங்கத்தைக் காட்டியதுமே அவன் திகைத்தான். “இது புதையல்!” என்றான்.

“ஆமாம் இன்னும் இருபது காசு இருக்கிறது… இதை நீ வாங்கினால் சாயங்காலம் வருகிறேன்” அவன் எனக்கு பணம் தந்தான்.

மேலும் ஒரு கடையில் இன்னொரு காசை விற்றோம். உடனே பேருந்தைப்பிடித்து விசாகப்பட்டினம் செல்லலாம் என்று அவன் சொன்னான்

“நாம் தங்கத்தை விற்கப்போவதில்லையா?”என்றேன்

“இல்லை மொத்த தங்கமாக கொடுத்தால் மிகமிகக்குறைவாக விலைபேசுவார்கள். நம்மை பிடித்து தங்கத்தை பிடுங்கிக்கொள்ளவும் முயல்வார்கள். வைரம் பறிபோய்விடும்”என்று அவன் சொன்னான். “நாம் மேலும் தங்கத்துடன் வருவோம் என்பதனால்தான் அவன் உரிய விலை தருகிறான். நாம் தப்பிவிடவேண்டும்”

நாங்கள் அங்கே தங்கவில்லை. நேராக ரயில்நிலையத்திற்குச் சென்றோம்

”நாம் எங்கே செல்கிறோம்?” என்றேன்

“சூரத். அங்கேதான் வைரங்களை விற்கமுடியும்” என்றான். “எனக்கு சிலரை தெரியும்..”

ஆனால் ரயில்நிலையத்திற்கு வந்ததும் அவன் புவனேஸ்வர் போகும் ரயிலில் ஏறினான். நான் “என்ன செய்கிறாய்!?”என்று கூவினேன். ‘மூன்றாம் பிளாட்பாரத்தில் நாக்பூர் ரயில் நிற்கிறது…”

”இல்லை இதுதான் பாதுகாப்பானது… நம்மை சூரத்தில் எதிர்பார்ப்பார்கள்”

எனக்கு ஏனோ சரியாகத்தெரியவில்லை. புவனேஸ்வர் ரயிலில் டிடியிடம் லஞ்சம் கொடுத்து பெர்த் வாங்கிக்கொண்டோம். ஆழ்ந்து தூங்கினோம்.நான் கனவில் அந்த ஒளிவிடும் வைரத்தைக் கண்டேன். ஆனால் அது ஒரு மலைச்சரிவில் இரு மலைகளுக்கு நடுவே கிடந்தது. அந்த வைரம்தான், ஆனால் அது வளர்ந்தபடியே மேலெழுந்து வந்தது. விழித்துக்கொண்டபோது எனக்கு என்னவோ படபடப்பாகவே இருந்தது

ரயிலிலேயே பல்தேய்த்து கழிப்பறையில் குளித்தோம். அங்கேயே உடைகளை மாற்றிக்கொண்டோம்.

புவனேஸ்வரிலும் நாங்கள் தங்கவில்லை. ரயில் நிலையத்தில் இறங்கியதுமே அவன் அடுத்த ரயிலுக்காகப் பரபரக்க ஆரம்பித்தான்.

“கல்கத்தா ரயில் ஆறுமணிநேரத்தில் வரும்… நான் போய் ரிசர்வ் செய்துவிட்டு வருகிறேன். நீ இங்கே இரு. அதன்பின் நாம் சாப்பிடலாம்” என்றான்

“இதோபார், நாம் கிளம்பி நீண்டநாள் ஆகிறது. நாம் இன்னும் ஏன் ஓடவேண்டும். எங்காவது ஓர் அறை எடுத்து பதுங்கிக்கொள்வோம். பணம் இருக்கிறது… என்னால் இனி ஓடமுடியாது”

“முட்டாள் எங்கே தங்கினாலும் யாராவது கவனிப்பார்கள். எவர் நம்மை கவனித்தாலும் ஆபத்து”

“நாம் குளிக்கவில்லை. சரியாகப் படுத்து தூங்கினே பலநாட்கள் ஆகின்றன”

“இந்த ரயில்நிலைய காத்திருப்பு அறை வசதியானது. குளிக்கலாம்.”

“என் ஆடைகளை துவைக்கவேண்டும்”

“ஏன், வேறு ஆடைகள் வாங்கிக்கொள்ளலாம்… இங்கே பழைய ஆடைகளை விற்கும் கடைகள் உண்டு. துவைத்துக் காயவைப்பதற்காக தங்குவது மிகப்பெரிய அபாயம்”

“நீ இத்தனை பயப்படுவாய் என நான் நினைக்கவில்லை”

“வாயை மூடு!” என்று அவன் என்னை அறைய வந்தான். “பயமா? எனக்கா? அறிவுகெட்டவனே”

“பிறகு எதற்காக ஓடுகிறாய்?”

“நான் எனக்கான இடத்தை அடையவேண்டும்… அங்கேதான் நிம்மதியாக தங்கமுடியும்”

“அது எந்த இடம்?”

“தெரியவில்லை… அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்”

நான் பெருமூச்சுவிட்டேன். பிறகு ஒன்றும் சொல்லவில்லை. நகருக்குள் சென்று நாலைந்து சட்டை பாண்டுகள் வாங்கிக்கொண்டோம்,

அழுக்குச்சட்டைகளை வீசினோம். திரும்பி ரயில்நிலையம் வந்தோம். அங்கேயே குளித்து உடைமாற்றினோம். நான் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்

கல்கத்தா ரயிலில் நான் ஆழ்ந்து உறங்கினேன். அங்கே இறங்கியபோது புத்துணர்ச்சியுடன் இருந்தேன். அவன் களைத்திருந்தான். சரியாகத் தூங்கவில்லை என்று தெரிந்தது.

“இந்த ரயில்நிலையமே சரியில்லை. பெருங்கூட்டமாக இருக்கிறது. நாம் இனிமேல் ரயிலில் பயணம்செய்யவேண்டியதில்லை. பஸ்ஸில் போகலாம்” என்றான்

“நாம் எங்கே போகப்போகிறோம்” என்றேன்

“நாம் இங்கிருந்து சென்றுவிடவேண்டும். இங்கே தங்கக்கூடாது, அதுதான் முக்கியம்”

“ஆனால் நாம் போதுமான அளவுக்கு விலகி வந்துவிட்டோம். இந்தப்பாதையை எவரும் ஊகிக்கவே முடியாது”

“இல்லை நாம் கிழக்கே செல்லலாம். அது இந்திய அரசுக்கே சம்பந்தமில்லாத பகுதி”

“சொல்வதைக்கேள்… அங்கே அத்தனைபேரும் சீனர்கள் போல் இருப்பார்கள். நாம் தனித்து தெரிவோம்”

“நாம் அரசாங்கத்து ஆட்கள் என்று சொல்வோம்… ஒன்றும் ஆகாது”

“அங்கே நம்மை தெளிவாகச் சோதனை செய்வார்கள்…”

“அதனால்தான் சொல்கிறேன். அத்தனை சோதனைகள் இருந்தால் எவருக்கும் தெரியாமல் போகும் வழிகள் கண்டிப்பாக இருக்கும்”

“நீ கிறுக்கன்போல பேசுகிறாய்”

“வாயைமூடு… நான் கிளம்புக்கொண்டிருக்கிறேன். நீ வருவதென்றால் வா”

“இதோபார்”

‘“சரி நீ கிளம்பு… தான் தனியாகப் போகிறேன். நாம் பங்கிட்டுக்கொள்வோம்”

‘“இல்லை நானும் வருகிறேன்”

கல்கத்தாவில் மீண்டும் தங்கத்தை விற்றோம். கல்கத்தாவிலிருந்து பஸ்ஸில் பாட்னா சென்றோம். அங்கிருந்துதான் அன்றைக்குச் சிலிகுரிக்கு பஸ் இருந்தது.சிலிகுரியிலிருந்து குவாஹாத்தி. அங்கே மேலும் கொஞ்சம் பொன்னை விற்றோம்.

குவாஹாத்தியிலிருந்து ஷில்லாங் சென்றோம்.அவன் நிலைகொள்ளமலேயே இருந்தான். அன்றெல்லாம் அங்கே சாலை என்பதே கிடையாது. எல்லாமே மண்தடங்கள். வண்டிகள் இடுப்பெலும்பை முறிப்பவை. ஊர்ந்து ஊர்ந்து மலைப்பாதைகளில் சுற்றிச் சுற்றிச் செல்லும். “இவர்கள் என்ன ஆமையில் சவாரிசெய்து பழகியவர்களா?”என்று அவன் கேட்டான். ஷில்லாங் வழியில் ஒருமுறை டிரைவரை விலகி அமரச்செய்துவிட்டு அவனே ஓட்டினான்

ஷில்லாங்கிலிருந்து இம்பால் செல்ல அவன் முடிவுசெய்தபோது நான் கொந்தளித்தேன். அப்போதே மணிப்பூர் பிரிவினை இயக்கங்கள் வலுவாக வேரூன்றிவிட்டிருந்தன. பழங்குடிகள் நடுவே மிகப்பெரிய கலவரங்கள் நடந்துவிட்டிருந்தன. “இம்பாலுக்கு எதற்காகச் செல்கிறோம்? அங்கே தங்கத்தை விற்கக்கூட ஆளிருக்காது”

“இல்லை எங்கும் தங்கத்திற்கு ஆளிருக்கும்”

“ஆனால் ஏன் அங்கே செல்லவேண்டும்?”

“பார், இங்கே போலீஸ் என்பதே இல்லை. இந்த மலைப்பாதைகளைப்போல ரகசியமான வழிகளே இல்லை”

“ஆனால் எங்காவது நாம் செல்லவேண்டும் அல்லவா?” என்றேன் “இப்படியே போய்க்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்?

“இனி வேறுவழியில்லை. இம்பால் செல்வோம்”

“நம்மிடம் வைரமும் பொன்னும் இருக்கிறது… அதை வைத்துக்கொண்டு அத்தனை தூரம் அன்னிய நிலத்திற்குள் செல்வதென்பது…”

“நீ வருவாயா மாட்டாயா?”

நான் கண்ணீர் மல்கினேன். “இதோபார் உன்னுடன் சேர்ந்து சாகவும் நான் தயார். ஆனால் ஏதாவது அர்த்தமிருக்கவேண்டும். சும்மா கிறுக்குத்தனமாக…”

“என் கிறுக்குத்தனம்தான் இது. வருவதென்றால் வா”

“நான் சொல்வதைக்கேள்”

“வருவதென்றால் வா!”என்று அவன் கூச்சலிட்டான். கண்களில் வெறும் கிறுக்குத்தனம்”

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவனுடன் சென்றேன். நாங்கள் இம்பாலுக்குச் சென்றோம். அன்று அது ஒரு சிறிய மலையூர். டான்போஸ்கோவைச் சேர்ந்த கிறித்தவப் போதகர்கள் சிலர் அங்கே இருந்தனர். ஸ்ரீகண்டன் அதை உடனே கண்டுபிடித்தான். எவர் கேட்டாலும் “டான்போஸ்கோ” என்றான். ராணுவமும் துணைராணுவமும் மட்டுமல்ல பழங்குடியினரும் எங்களை தடுக்கவில்லை.

இம்பாலில்கூட நாங்கள் ஒரு பகலில் நான்கு மணிநேரம் மட்டும்தான் இருந்தோம். அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மாருக்குள் நுழையும் வழியை அவன் கண்டுபிடித்தான். அன்று அது பர்மா என அழைக்கப்பட்டது

“பர்மாவா? அது மூடப்பட்ட நாடு அல்லவா?” என்றேன்

“ஆம், ஆனால் அங்கே மூன்றில் ஒரு பங்கு கூட அரசுக் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்”

நான் தடைசொல்வதையே விட்டுவிட்டிருந்தேன். அவனுக்குள் இருந்து ஏதோ ஒன்று இயக்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. நாங்கள் கிளம்பி ஒருமாதம் கடந்துவிட்டது. ஒருமுறைகூட ஓர் ஊரில்கூட அவன் தங்கவில்லை. அவன் கண்கள் அலைமோதிக்கொண்டே இருந்தன

ஆனால் அவனுடைய உருமாறும் திறன் அவனை காப்பாற்றியது. அந்தந்த இடத்தில் அப்படியே அவன் மாறினான். சிறுவியாபாரியாக, ரயில்வே போர்ட்டராக, போலீஸ்காரராக. அதை அவனை எதிர்கொண்ட அனைவருமே நம்பினார்கள். அவன் காற்று போன்றவன், அவனைத் தடுக்கும் வேலி ஏதுமில்லை. அதை ஏற்கனவே நான் உணர்ந்துகொண்டிருந்தேன். ஆகவே அவனால் மியான்மார் எல்லையைக் கடக்கமுடியுமா என்றெல்லாம் சந்தேகப்படவில்லை

நாங்கள் மியான்மார் எல்லையை காட்டுப்பாதை ஒன்றின் வழியாக மிக எளிதாகக் கடந்தோம். உலகப்போர் காலத்தைய பழைய ஜீப்புகளிலும் டிரக்குகளிலுமாக மண்டாலே என்னும் ஊரைச் சென்றடைந்தோம். செல்லும் வழி எங்கும் சின்னஞ்சிறிய ஊர்கள். அல்லது காட்டுத்தங்கல்கள். அங்கும்கூட அவன் எங்கும் தங்கவில்லை. ஓர் ஊரில் இறங்கியதுமே அடுத்த ஊருக்கான வண்டியைத் தேடிச்செல்வான். ஏதாவது ஊருக்கு ஒரு வண்டி நின்றிருக்கும். ஏறிவிடுவான்.

நான் நாட்கணக்கு காலக்கணக்கு அனைத்தையும் இழந்தவனாக ஆனேன். பித்துபிடித்த கண்களுடன் அவனுடன் சென்றுகொண்டிருந்தேன். அவனும் நானும் பேசிக்கொள்ளவே இல்லை. சொல்லப்போனால் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பியபின் நானும் அவனும் அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டோம். தேவையானவற்றை மட்டுமே பகிர்ந்துகொண்டோம். இருவரும் உடனிருந்தோம், அவ்வளவுதான்

மண்டாலேயிலிருந்து நாய்பிடாவ் என்னும் ஊருக்குச் சென்றோம். மேலும் எங்கே செல்வது என்று அங்குதான் அவனிடம் நான் கேட்டேன். ஆனால் என் குரல் தாழ்ந்திருந்தது. ரகசியம்போல ஒலித்தது

“தாய்லாந்துக்குள் செல்வோம்” என்றான்

“சரி” என்று நான் சொன்னேன்

இப்போது சொன்னால் நம்பமுடியாது. ஆனால் அன்றெல்லாம் எந்த நாட்டின் எல்லையும் இந்த அளவுக்கு பாதுகாக்கப்படவில்லை. ஏனென்றால் உலகளாவிய தீவிரவாதம் அன்றில்லை. அதேசமயம் கஞ்சா, அபின் போன்றவற்றின் ரகசிய வியாபாரம் உச்சநிலையில் இருந்தது. ஆகவே ரகசியப்பாதைகள் நிறைந்திருந்தன

சியாங் மாய் என்னும் நகரை அடைந்தோம். அங்கிருந்து சம்பாங் என்னும் நகரை. அங்கிருந்து பிட்சௌனுலோக். இவை ஒவ்வொன்றுமே வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள். சுற்றுலாப்பயணிகள் கொண்டாடவேண்டிய இடங்கள். பார்க்கவும் மகிழவும் ஏராளமானவை இருந்தன. ஆனால் எங்கும் நாங்கள் சிலமணிநேரம் கூட தங்கவில்லை. மிகமிக வசதிக்குறைவான வண்டிகளிலேயே தூங்கப் பழகிவிட்டிருந்தோம். வண்டிகளுக்காகக் காத்திருக்கும்போதும் தூங்கினோம்.

எங்களிடம் வைரங்கள் இருப்பதையே மறந்துவிட்டிருந்தோம். ஆகவே எவருமே எங்களை சந்தேகப்படவில்லை. எங்களை மியான்மாரிலிருந்து தப்பி தாய்லாந்துக்குச் சென்றுகொண்டே இருந்த பலநூறு இந்தியவம்சாவளியினரில் ஒருவராக எண்ணிக்கொண்டார்கள். நாங்களும் அதற்கேற்ப பிச்சைக்காரத் தோற்றம் கொண்டுவிட்டிருந்தோம்.

பாங்காங்கில் நுழைந்தபோது அவன் அரவானியாக மாறினான். மிக இயல்பாக. அவனுடைய முகம் கண்கள் நடை அசைவுகள் எல்லாமே மாறின. முதலில் எனக்கு திகைப்பாக இருந்தது. “என்ன இது” என்றேன்.

“தாய்லாந்தில் அதிகமாக கண்காணிக்கப்படாதவர்கள் அரவானிகள்தான்” என்றான்

நான் “ஆனால்…” என்றேன். மேற்கொண்டு சொல்லமுடியவில்லை

ஆனால் ஓரிரு மணிநேரங்களுக்குள்ளாகவே என் கண்கள் வழியாக என் மனமும் அவன் அரவானிதான் என நம்பத்தொடங்கியது. ஒருகணம்கூட அவன் பிறிதொன்றாக இருக்கவில்லை. அப்படியே இருந்தான். முழுமையாக. ஏனென்றால் அவன் முதலில் மாற்றிக்கொள்வது உள்ளூரத்தான்.

“கிழக்கே வந்தபோது அர்ஜுனன் பெண்ணாக மாறியதாக சொல்வார்கள்” என்று ஒருமுறை அவனிடம் சொன்னேன்

அவன் என்னை திரும்பிப் பார்த்தான். கண்கள் போதை கொண்டவை போல தோற்றம் தந்தன.

பாங்காங்கை அடைந்தபோது நான் அதுவரை இருந்த உறைநிலையிலிருந்து மீண்டேன். தெருவிலேயே  ஒரு பார்பரிடம் சவரம் செய்துகொண்டேன். புதிய ஆடைகளை வாங்கிக்கொண்டோம். நீண்ட காலத்திற்குப் பின் ஓர் அறையை அமர்த்திக்கொண்டோம். ஸ்ரீகண்டன் அன்றுபகல் முழுக்க நகரில் சுற்றினான். நான் ஒரு தூக்கம்போட்டு எழுந்து அமர்ந்திருந்தேன்.

அவன் வந்ததுமே “நாம் சாயங்காலம் கிளம்புகிறோம்… கொலாலம்பூருக்கு டாக்ஸியில் செல்கிறோம்” என்றான்

என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. நான் எழுந்து அவனை ஓங்கி அறைந்தேன். அவன் பின்னால் சரிந்து கீழே விழுந்தான். அவனை ஓங்கி மிதித்தேன். அவன் என் காலைப்பிடித்து சுழற்றி என்னை விழச்செய்தான். என்னைத் தூக்கி மண்ணில் அறைந்தான். அவனுடைய உடலாற்றல் எனக்குத்தெரியும். என்னைவிட எடைகுறைவானவன். ஆனால் மிக உறுதியான தசைகள். அதோடு பூனைபோல நெகிழ்வானவை அவன் எலும்புகள்

என்னை அறைந்து வீழ்த்தி என்மேல் ஏறி அமர்ந்து அவன் சொன்னான். “நீ என்னுடன் வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை… எனக்கு ஒன்றும் வேண்டாம். அந்த அருணபிந்து மட்டும் போதும். மிச்சத்தையெல்லாம் நீயே வைத்துக்கொள். நான் கிளம்புகிறேன்”

அவன் பெட்டியை திறந்து தங்கத்தையும் வைரங்களையும் எடுத்து என்முன் போட்டான். அருணபிந்து என்ற அந்த இளஞ்சிவப்புக் கோடுள்ள வைரத்தை மட்டும் எடுத்து தன் பைக்குள் வைத்துக்கொண்டான்.

அவன் கிளம்பியபோது நான் ஓடிச்சென்று அவன் கால்களைப் பிடித்தேன். ”என்னை விட்டுவிட்டுச் செல்லாதே… என்னை உதறிவிடாதே” என்று கெஞ்சினேன். “நான் உன்னுடன் வருகிறேன்…எங்குவேண்டுமென்றாலும் வருகிறேன். நான் உன் அடிமை… எனக்கு நீதான் வேண்டும்… வேறெதும் வேண்டாம்!”

அவன் என்னை உதைத்து உதறினான். “இல்லை, இனி நீ என்னுடன் வரவேண்டியதில்லை. நீ இங்கேயே இரு. இங்கே எல்லாவற்றையும் விற்கமுடியும்… நான் போகிறேன்”

“நீ எங்கே போகிறாய்… இதோபார்..”

“கொலாலம்பூர். அங்கிருந்து சிங்கப்பூர், அங்கிருந்து…”

“நானும் வருகிறேன்… எந்த எல்லைவரையானாலும் நானும் வருகிறேன்”

“வேண்டாம்…” என்று சொல்லி அவன் வெளியே சென்றான். நான் அவனுக்குப்பின்னால் ஓடினேன். என் அறையெங்கும் தங்கமும் வைரமும் சிதறிக்கிடப்பதை உணர்ந்து திரும்ப அறைக்குள் சென்று அவற்றை அள்ளி பைக்குள் போட்டுக்கொண்டு ஷூக்களை மாட்டிக்கொண்டு அவனை தொடர்ந்து ஓடினேன்

தெருவில் பைத்தியம்போல அவன் பெயரைச் சொல்லி கூவியபடி நான் ஓடினேன். “ஸ்ரீ ஸ்ரீ! என்னை விட்டுவிடாதே… நானும் வருகிறேன்… நான் செத்துவிடுவேன்!”

அவனை நான் டாக்சி நிலையத்தில் கண்டுபிடித்தேன். ஓடிச்சென்று அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதேன்.

அவன் சலிப்புடன் “சரி, நீயும் வா” என்றான்

டாக்ஸியில் நாங்கள் ஏறிக்கொண்டோம். அது கொலாலம்பூரை நோக்கிச் சென்றது. மலேசிய எல்லையை சட்டவிரோதமாகக் கடத்திவிடுவதற்கு அவன் பெருந்தொகைபேசி முன்பணமும் கொடுத்திருந்தான்

நான் ஒரு தவறுசெய்துவிட்டேன். அவசரத்தில் என் அறையில் ஒரு தங்கக்காசை விட்டுவிட்டேன். அறையை சோதனையிட்ட உரிமையாளர் அதைக் கண்டுபிடித்தார். அந்த விடுதி தாய்லாந்தின் மற்ற பல விடுதிகளைப்போல ஒரு மாபெரும் கிரிமினல் குழுவின் சங்கிலியில் ஒரு கண்ணி. உரிமையாளர் தன் மேலிடத்திற்குத் தெரிவித்தார். அவர்கள் எங்களைத் தேடத்தொடங்கினார்கள்

இரண்டே மணிநேரத்தில் எங்களைக் கண்டுபிடித்தனர். எங்கள் டாக்ஸியும் அவர்களின் வலைப்பின்னலைச் சேர்ந்ததுதான். டாக்சி வழிவிலகிச் செல்வதை ஸ்ரீகண்டன்தான் முதலில் கண்டுபிடித்தான். அவன் கேட்ட எந்தக்கேள்விக்கும் டிரைவர் பதில் சொல்லவில்லை. ஒருகணத்தில் ஸ்ரீகண்டன் அவனை அடித்து கதவைத்திறந்து வெளியே வீழ்த்திவிட்டு காரை கைப்பற்றிக்கொண்டான்.

ஆனால் நாங்கள் நெடுந்தொலைவு செல்லமுடியவில்லை. எங்களை அவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். ஸ்ரீகண்டன் காரை மிகத்திறமையாக திருப்பி சிறிய காட்டுப்பாதைகளில் ஓட்டினான். ஊடுவழிகளினூடாக திருப்பித்திருப்பிக் கொண்டுசென்றான்

ஆனால் அது அவர்களின் ஊர். அவர்கள் நன்கறிந்த வழி. அவர்கள் எங்களை மறித்துக்கொண்டார்கள். எதிரிலும் அவர்களின் கார்கள் தெரிந்தபோது ஸ்ரீகண்டன் “இறங்கு… ஓடிவா” என்று கூவியபடி காரிலிருந்து இறங்கி காட்டுக்குள் ஓடினான்

நான் அவனை தொடந்ந்து ஓடினேன். கார்கள் கிரீச் ஓசையுடன் நின்றன. அவற்றிலிருந்து இறங்கி ஓடிவந்தார்கள். அதனைபேரும் துப்பாக்கி வைத்திருந்தார்கள். சுட்டுக்கொண்டே துரத்தினார்கள்.

நான் தோளில் குண்டுபட்டு குப்புற விழுந்தேன். அந்த விசையில் ஒரு பள்ளத்தின் சரிவில் உருண்டு கீழே ஆழத்திற்குச் சென்றுவிட்டேன். அங்கிருந்து எழுந்து நின்று பார்த்தபோது அவர்கள் ஸ்ரீகண்டனைச் சுடுவதைக் கண்டேன். அவன்மேல் குண்டுகள் பாய்ந்தன. அவன் உடல் துள்ளி துள்ளி முன்னால் சென்று மறைந்தது

அதை நான் தெளிவாகக் கண்டேன். அல்லது அப்படி நினைத்துக்கொண்டேன். நால் அலறினேன். அவனை நான் கடைசியாகக் கண்ட கணம் அவன் வெறியுடன் ஓடிக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் சூரியன் இருந்தமையால் அவன் ஒரு சிவந்த நிழலுரு போலத் தோன்றினான்.

என்னை அவர்கள் தூக்கி மேலே எடுத்தார்கள். என் தங்கத்தையும் வைரங்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள். அவை எனக்கு எங்கிருந்து கிடைத்தன என்று அவர்கள் அறிய விரும்பியமையால் என்னைக் கொல்லவில்லை. அவர்களின் மருத்துவரைக் கொண்டே என்னை காப்பாற்றினார்கள்.

என்னை அவர்கள் நாட்கணக்கில் சித்திரவதை செய்தார்கள். அவனைச் சுட்டுக்கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். அவனிடமிருந்து அவர்கள் எடுத்தது ஒரு துணியில் பொதிந்து பையில் வைத்திருந்த ஒரு சிறு கூழாங்கல்லும் கொஞ்சம் தாய்லாந்து, மலேசிய கரென்ஸிகளும் மட்டும்தான்.

அந்தக்கல்லை அவர்கள் என்னிடம் காட்டினார்கள். அது என்னவென்று சொல்லமுடியுமா என்றனர். அது அவனிடமிருந்த அந்த வைரம்போலவே இருந்தது, ஆனால் வெறும்கூழாங்கல். அதிலிருந்த ஒளி முற்றாகவே மறைந்துவிட்டிருந்தது. நான் அதை வெவ்வேறு வெளிச்சங்களில் வைத்து பார்த்தேன். கூழாங்கல்லேதான்.

“இதை எங்கே எடுத்தீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள் சொன்னதைப் பார்த்தால் அவன் தன் பையில் அந்த வைரத்தை வைத்த அதே இடத்தில்தான் இருந்திருக்கிறது. அதுவேதான், ஆனால் அது அல்ல.

“அந்த உடலை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அங்கே காட்டில் ஒரு பள்ளத்தில் வீசிவிட்டதாகச் சொன்னார்கள். ஆழமான மண்வெடிப்பு அது. அவனை நரிகள் தின்றுவிட்டிருக்கும்.

என்னை அவர்கள் அடித்துக்கொண்டே இருந்தனர். அந்த புதையல் எங்கே இருக்கிறது என்றனர். நான் அது இந்தியாவின் தெற்கே கன்யாகுமரியில் என்றபோது அவர்களால் நம்பமுடியவில்லை. அத்தனை தொலைவு ஏன் வரவேண்டும்? எப்படி எவராலும் தடுக்கப்படாமல் வரமுடியும்?

நான்கு வாரங்களுக்குப்பின் அவர்கள் சற்று கவனக்குறைவாக இருந்தபோது நான் அவர்களிடமிருந்து தப்பினேன். மீண்டும் மியான்மாருக்கே சென்றேன்.நான் கொலாலம்பூர் செல்வேன் என நினைத்து அவர்கள் அந்தவழிகளில் தேடியிருக்கலாம். நான் தப்பிவிட்டேன்.

பர்மா வழியாக் இந்தியாவுக்குள் நான் வந்து சேர ஏழு ஆண்டுகளாயின. நடுவே பர்மாவில் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தேன். பல்வேறு குற்றக்குழுக்களுடன் இருந்தேன். நான் அடைந்த சித்திரவதைகளைச் சொல்லப்போனால் அது வேறு ஒரு கதை. ஒன்றுமட்டும் சொல்கிறேனே, கைகூப்பி மண்ணில் கிடந்த செல்லங்காட்டு பெருவட்டர் சித்தன் நாடாரை நினைத்து நினைத்து ஆயிரம் முறையாவது கண்ணீர் விட்டிருப்பேன். அவரை நான் என் அப்பா என்று சொல்வதில்லை. அதற்கான தகுதியை நான் இழந்துவிட்டேன்.

ஒவ்வொரு அடி விழும்போதும், ஒவ்வொரு வலியிலும் “நான் ஈடு செய்துவிட்டேன். பரிகாரம் செய்துவிட்டேன்” என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். அந்த வார்த்தைதான் என்னை அனைத்திலும் வீழாமல் நிற்கச் செய்தது. என்னைக் கவசமாக காப்பாற்றி இங்கே இதுவரை கொண்டுவந்திருக்கிறது. செல்லங்காட்டு பெருவட்டர் எனக்கு அளித்த பெரும்கொடை என்றேனே, அது இதுதான். இந்த மாபெரும் குற்றவுணர்ச்சி. என் வாழ்க்கைக்கே ஆதாரமான பிடிப்பு இதுதான்.

நூறுமுறையாவது தற்கொலை செய்துகொள்ள எண்ணியிருப்பேன். தற்கொலை செய்துகொள்ளும் உரிமை எனக்கு இல்லை என்று எண்ண வைத்தது இந்தப் பிழையுணர்ச்சிதான். முழுக்க அனுபவித்து இந்தப் பிறவியிலேயே கணக்கை தீர்க்கவேண்டும் என்றே நினைத்தேன். ஒவ்வொருமுறை சாவின் விளிம்புவரைச் சென்று திரும்பும்போதும் கடனில் ஒரு பகுதியை கட்டிவிட்டேன் என்றே நினைப்பேன்

இந்தக்கதையை நான் சொல்ல வந்தது வேறொன்றுக்காக. நான் மீண்டும் கல்கத்தா வந்து அங்கே ஓர் ஓட்டலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு நாளிதழில் செய்தி ஒன்றைப் பார்த்தேன். இந்தியாவின் தூதர் அந்நகருக்கு விஜயம் செய்த செய்தியுடன் வந்த புகைப்படம். உடன் ஜகார்த்தாவின் ஒரு தெரு. அதில் ஸ்ரீகண்டன் சென்றுகொண்டிருந்தான். அவனேதான். அது என் பிரமை அல்ல, முழுக்க முழுக்க உண்மை. இந்தப்பூமியில் எவரையேனும் எனக்கு மிகமிக நன்றாகத் தெரியும் என்றால், ஒரு விரலைக்கொண்டே அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றால் அது அவனைத்தான்.

மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின் மணிலாவை டிவியில் காட்டினார்கள். காமிரா சுழன்று வந்தபோது அந்தத் தெருவில் ஒரு டிரக்கில் அவன் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவனேதான். அவன் சாகவில்லை. அவனிடம் அந்த மணி இருக்கிறது. அருணபிந்து. அல்லது அதன் ஒளி மட்டுமாவது அவனிடம் இருக்கிறது.

அவன் கிழக்குநோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறான். இதோ ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன. ஒருவேளை அவன் இன்னும் சென்றுகொண்டேதான் இருப்பான்.

===========================================================================

முந்தைய கட்டுரைசூழ்திரு, குருவி -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–33