உலகெலாம் [சிறுகதை]

[ 1 ]

“ஒவ்வொருவரையும் கொல்வதற்கு இங்கே அவருக்கான ஒரு பொருள் உண்டு” என்று எம்.சுகுமார மேனன் சொன்னார். அவருடைய கண்கள் போதையடிமைகளுக்குரியவை. ஆனால் அவர் எந்த போதை மருந்தையும் பயன்படுத்துபவர் அல்ல.

“அப்படியா?” என்றேன்.

“இதை சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை” என்று அவர் சொன்னார். “நம்பாமல் இருப்பதுதான் நல்லது. கீழே ரோட்டில் போய் பாருங்கள் ஆயிரக்கணக்கான எறும்புகள் சாலையை கடந்துகொண்டிருக்கும். ஒரு நிமிடத்திற்கு ஒரு காரும் பஸ்ஸும் கடந்துசெல்லும் சாலை. அவற்றுக்குத் தெரியாது. தெரிந்தால் அவற்றுக்கு வாழ்க்கை உண்டா என்ன?”

“ஆமாம்” என்றேன். அவர் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவை சிவந்து நீர்பரவியிருந்தன. கீழிமை திரைச்சீலை போல பல வளைவுகளாக வீங்கித் தொங்கியது. அவர் முகம் வெளிறி வீங்கியது போல் இருந்தது. உதடுகளும் கருகி சற்றே பெரிதாக இருந்தன.

“எனக்கு அந்த ரிப்போர்ட் கொடுத்தீர்கள் என்றால் நான் கிளம்பிவிடுவேன்” என்று நான் சொன்னேன்.

“அதைத்தான் சொல்ல வருகிறேன்” என்றர். “அந்த ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்றால் நானே வந்து அந்த இயந்திரங்களை பார்க்க வேண்டும். அவற்றின் செயல்திறன், அவற்றின் சாதனை, இன்னும் உள்ள சாத்தியங்கள் மூன்றையும் நானே கணிக்கவேண்டும். ஆனால் நான் அங்கே வரமுடியாது.”

“நீங்கள் எவரையாவது அனுப்பலாமே?”

“இங்கே அனைவருமே கிளார்க்குகள். தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் அல்ல.”

“தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்தானே அங்கே இருக்கிறோம்.”

“ஆமாம், ஆனால் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை சோதனையிட்டு மதிப்பிடத்தானே என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.”

நான் சலிப்புற்றேன். அவருடைய மனம் மிகமெல்ல இயங்குவதாக எனக்குப் பட்டது. இது இந்தவகையான தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் முதன்மைச் சிக்கல். தொழில்நுட்பம் மிகவிரைவாக வளர்ந்து கொண்டிருக்கும். மனிதர்கள் ஒரு கட்டத்தில் உறைந்துவிடுவார்கள்.

“அப்படியென்றால் என்ன செய்வது?” என்றேன்.

“நான் சொல்வதை நீ புரிந்து கொள்ளவில்லை” என்றார். “அங்கே சி.டாட் தொழில்நுட்பம் எப்போது வந்தது என்று உனக்குத் தெரியுமா?”

“சென்ற ஆண்டு” என்றேன்.

“மிகச்சரியாக மார்ச் பன்னிரண்டாம் தேதி” என்றார் சுகுமார மேனன். “எப்படி நினைவிருக்கிறது என்றால் அன்றைக்குத்தான் எனக்கு முதல் ஹார்ட் அட்டாக் வந்தது.”

“ஆமாம், நினைவிருக்கிறது” என்றேன்.

சுகுமார மேனன் சொன்னார். “அன்றைக்கு நான்தான் முழுப்பொறுப்பும். பதினெட்டு மாதங்களாகவே அது வந்து இறங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தேன். உனக்குத்தான் தெரியுமே, அரசுத்துறைகளில் வழக்கமான வேலைகள் ஒருவகையான ஒத்திசைவுடன் நடக்கும். எவரும் நடத்த வேண்டியதில்லை. பிழைகளையும் மீறல்களையும் கண்காணித்தால் போதும். ஆனால் புதிய ஒருவேலை என்றால் மொத்த அமைப்பும் திகைத்து உறைந்து நின்றுவிடும். ஒவ்வொருவரும் செயலற்றுவிடுவார்கள். செயலற்ற ஒருவர் பிற நூறுபேரை செயல்பட விடாமலாக்கிவிடுவார்.

அத்தனை பேரையும் செயல்படச் செய்வது என்பது உண்மையில் கற்பாறைகளைத் தீப்பிடிக்கச் செய்வதுபோல. நான் அதைத்தான் செய்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு சுவரிலாக தலையால் முட்டி முட்டி வழி உருவாக்கினேன். எத்தனை பிரச்சினைகள்… ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்தேன். இயந்திரங்கள் வரும்போது எல்லாம் சரியாகிக் காத்திருந்தது.

ஆனால் உனக்குத்தான் தெரியுமே, இந்த தொழில்நுட்பக் கருவிகளுக்கே ஒரு பிரச்சினை உண்டு. அவை மிகமுக்கியமான தருணங்களில் வேலை செய்யாமல் மக்கர் செய்யும். ஞாபகம் இருக்கிறதா, சென்றமுறை ஜி.எம் இன்ஸ்பெக்‌ஷன் வந்தபோது சரியாக ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை. ஆகவே நான் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் இரண்டாம் முறை சோதனை செய்தேன். மூன்றாம் முறையும் சோதனை செய்தேன். எத்தனை சோதனை செய்தாலும் ஒன்று மிஞ்சிவிடும். மூன்றாம் சோதனையில் தான் பவர்சேஞ்சிங் சுவிட்ச் இறுகியிருப்பது தெரிந்தது. என்ன சொல்ல, நான் பதினெட்டு நாட்கள் சரியாகத் தூங்கவே இல்லை.

ஒருவழியாக இயந்திரங்கள் வந்தன. அவற்றை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் முடிந்தது. கொண்டுவந்த மும்பையின் தொழில்நுட்பக் குழு என்னிடம் ஏற்றுக் கொண்டதற்கான கையெழுத்தை கேட்டார். நான் கையெழுத்தைப் போட்டேன். அடுத்து ஒரு சிறிய டீ பார்ட்டி. நான் “நீங்கள் செல்லுங்கள், பின்னால் வருகிறேன்” என்றேன்.

அப்போதுதான் ஜி.எம் கூப்பிட்டார். “ஆமாம் சார் வந்துவிட்டது, எல்லாம் சரியாக இருக்கிறது” என்று சொன்னபோது என் தோளில் ஒரு சுளுக்கு. குப்பென்று வியர்த்துவிட்டது. ரிசீவரை வைத்தபோது கழுத்து இறுகி தலையைத் திருப்ப முடியவில்லை. என் வலப்பக்கம் செயலற்றிருந்தது. யாரையாவது அழைக்கலாம் என்று மணியை நோக்கி கைநீட்டினால் அதை எட்டவே என்னால் முடியவில்லை. குரலும் எழவில்லை.

நல்லவேளையாக நான் நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்தேன். அந்த ஓசைகேட்டு மணிகண்டன் உள்ளே வந்தான். என்னைக் கண்டதுமே கூச்சல் போட்டான். உடனே டி.எஸ்.ஷெனாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். மாஸிவ் ஹார்ட் அட்டாக். என் வலதுகையும் காலும் இழுத்துக் கொண்டுவிட்டன. ஆஸ்பத்திரியிலேயே இரண்டாம் அட்டாக் வந்தது. அங்கிருந்து மணிப்பால் கொண்டு சென்றார்கள்.

மணிப்பாலில் சீஃப் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் ஜி.எஸ்.செறியான் எனக்கு உடனே ஆபரேஷன் செய்யவேண்டும் என்று சொன்னார். என் ரத்தக்குழாய்கள் சரி செய்யப்பட்டன. நீண்டகாலமாக அடைப்பு இருந்திருக்கிறது. என் இதயத்தசையில் பாதிக்குமேல் செத்துவிட்டன. அவற்றால் இனி அசைய முடியாது. என் இதயம் தன் சொந்த வலிமையால் இனி துடிக்காது. ஆகவே இன்னொரு துணை இதயம் பொருத்தியிருக்கிறேன். பேஸ்மேக்கர்.

பேஸ்மேக்கர் அருமையான பெயர் இல்லையா? அதிர்வை உருவாக்குவது. என் உயிர் எனக்குள் இருக்கும் அந்தச் சின்னக் கருவியில் இருக்கிறது. அதில் நவீன பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் வரை அது செயல்படும். அதன்பின் மாற்ற வேண்டும். என் உடலில் இருந்தே வெப்பத்தை எடுத்துக் கொண்டு அது ஆற்றலை உருவாக்கி அளிக்கும். என் இதயத்துடிப்பை அது ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறது.

சுகுமார மேனன் சிரித்து “என் மனைவி பயந்துவிட்டாள். அவளிடம் நான் சொன்னேன். இங்கே மலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு அல்லவா, இரட்டைக்கரள்…”

“ஆமாம், இரட்டைநெஞ்சு கொண்டவன், தைரியசாலி.”

“அதேதான். நான் இப்போது இரட்டைக்கரள் கொண்டவன், பயப்படாதே என்று சொன்னேன். என் உடலை உயிர்சக்தியும் மின்சக்தியும் சேர்ந்து இயக்குகின்றன. என் இதயம் பாதித்தசை, மீதி இயந்திரம். நான் கிட்டத்தட்ட ஒரு இயந்திரமனிதன் போல.”

சுகுமார மேனன் சொன்னார். சிகிச்சை முடிந்து நான் வேலைக்கு வந்தபோது எட்டுமாதம் ஆகிவிட்டது. டெலிஃபோன் எக்ஸேஞ்சை கமிஷன் செய்துவிட்டார்கள். எனக்கு மெயின்டெனென்ஸில் வேலை போட்டார்கள். எனக்கு அது எப்படியெல்லாம் செயல்படும் என்று தெரியவில்லை. தோராயமாகத் தான் கற்றுக் கொண்டிருந்தேன். தெரியுமே, நாம் இந்த வேலையில் நாம் செய்ய வேண்டியதென்ன என்று மட்டும்தான் கற்றுக்கொள்கிறோம். அதுவே சாத்தியம். மொத்த டெலிகம்யூனிகேஷன் சிஸ்டத்தையும் புரிந்துகொள்ள சயன்டிஸ்டுகளால் தான் முடியும்.

வந்த முதல்நாளே நான் ஒரு அமைதியின்மையை உணர்ந்தேன். பேனல் வார்டுக்குள் போனேன். நூற்றுக்கணக்கான பேனல்களில் நட்சத்திரங்கள் போல சிவப்பு பச்சை மஞ்சள் எல்.இ.டி. நுண்விளக்குகள் மின்னிமின்னி அணைந்து கொண்டிருந்தன. வானத்தையே ஒரு பொருளாக ஆக்கி அங்கே வைத்திருந்தனர். ர்ர்ர் என அதன் ஆதாரச் சுருதி ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு படபடப்பாக இருந்தது. பயம்போல. என்னை எவரோ பார்ப்பதுபோல.

அப்போதுதான் அந்த இரு விளக்குகளைக் கண்டேன், இரண்டு கண்களைப்போல. அது மைக்ரோவேவ் டிரான்ஸ்மீட்டர் மானிட்டர். அது என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. சீற்றத்துடன் என்னைப் பார்த்து முறைத்தது. அதை நோக்கி கைநீட்டி எதையோ சொல்லப் போனேன், அதற்குள் நான் விழுந்துவிட்டேன்.

அதன்பிறகு ஆஸ்பத்திரியில்தான் நினைவு வந்தது. மணிப்பாலில். முன்னரே டாக்டர் செறியான் என்னிடம் சொல்லியிருந்தார். என் பேஸ்மேக்கரின் கதிர்களுடன் ஊடுருவி அதை நிலையழியச் செய்யும் பிற கதிர்கள் உள்ளன. எல்லா கதிர்களுமே கொஞ்சம் சிடுக்கை உருவாக்கும். எக்ஸ்ரே, விமானநிலையத்தில் உள்ள ஸ்கேனர். ஆனால் மிக அபாயமானது மைக்ரோவேவ். அந்தக் கருவிகளிடமிருந்து விலகியிருக்கவேண்டும்.

நான் மைக்ரோவேவ் என்றதுமே அடுப்பு என நினைத்துக் கொண்டேன். அது என் வீட்டில் இல்லை. நான் விமானநிலையம் போகப்போவதில்லை. எக்ஸ்ரே எடுப்பது என்றால் அது இனிமேல் செறியானின் ஆணைப்படித்தான். புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கதிரே மைக்ரோவேவ் தான் என்று நான் அப்போது நினைக்கவே இல்லை. நாம் அப்படித்தானே, நம் சிந்தனைகள் ஒரு பழகிய பாதையில்தான் செல்கின்றன. மிக அருகே மலை நின்றிருந்தாலும் நமக்கு அதைப் பார்க்கத் தோன்றவில்லை என்றால் கண்ணுக்குபடாது.

என்ன செய்வது? உண்மையில் நான் வேலையை விட்டிருக்கவேண்டும். ஆனால் விருப்ப ஓய்வுகொடுத்தால் எனக்கு பென்ஷனேகூட கிடைக்காது, இன்னும் இருபதாண்டு சர்வீஸ் ஆகவில்லை. என் மகள் இப்போதுதான் கல்லூரியில் சேந்ந்திருக்கிறாள். அவளுடைய படிப்பு முடிந்தால் உடனே அடுத்தவள். குறைந்தது நான்காண்டுக் காலம் நான் வேலை செய்தாக வேண்டும்.

எனக்கு வேறுவழியில்லை. என் மருத்துவச் சான்றிதழ்களுடன் நான் சென்று ஜிஎம்மைப் பார்த்து மன்றாடினேன். பழைய ஜி.எம்.விஷ்ணு நம்பூதிரி இரக்கமானவர். அவர் என்னை இந்த நிர்வாகப் பொறுப்புக்கு மாற்றினார். என் பழைய அலுவலகம் அங்கே முஸ்தபா ரோட்டில் இருந்தது. இந்த எக்ஸேஞ்சிலிருந்து மிகவும் தள்ளி. அது ஒரு சாதாரண ஓட்டுக் கட்டிடம். பழைய ஃபைல்கள், பழைய மரச்சாமான்கள்.

ஆனால் சென்ற மாதம் அதை மூடிவிட்டார்கள். மொத்தம் மூன்று மாதம்தான் அங்கிருந்தேன். எல்லா அலுவலகங்களையும் இங்கே கொண்டு வந்துவிட்டார்கள். இங்கே என்னால் வரமுடியாது என்று புதிய ஜி.எம் நாராயணக் குறுப்பிடம் சொன்னேன். “சரி ராஜினாமா செய்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டார். நான் என்ன செய்வேன்? இதோ வந்து அமர்ந்திருக்கிறேன். எனக்குள் என்னுடைய பேஸ்மேக்கர் துடித்துக் கொண்டிருக்கிறது.

இங்கே வந்தபிறகு என்பொறுப்பு கூடிவிட்டது. இப்போது எக்ஸேஞ்சுக்கும் ரிலே ஸ்டேஷனுக்கும் நான்தான் பொறுப்பு. ஆமாம், நான் எதையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் கண்காணித்தாக வேண்டும், அறிக்கை கொடுத்தாக வேண்டும். என்னால் அதை ஒப்புக்குச் செய்ய முடியாது. உண்மையாக உழைத்துப் பழகியவன். மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டால் என் வாழ்க்கை அழிந்துவிடும். ஏற்கனவே நான் கடனில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவன்.

இங்கு வந்தபிறகு அங்கே வராமலிருக்க என்னால் முடியாது. இந்த ஒருமாதத்தில் மட்டும் எட்டுமுறை அப்பகுதிக்கு வந்திருக்கிறேன். முதல் முறை ரிலேரூமுக்குச் சென்றபோது என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த மைக்ரோவேவ் மானிட்டர் இருக்கும் அறைக்குள் நான் செல்லவில்லை. அதற்கு அடுத்த அறையில்தான் இருந்தேன். ஆனால் அதன் பார்வையை என்னால் உணர முடிந்தது. அந்த அறைக்குள் அது காத்திருக்கிறது. அதன் மெல்லிய ர்ர் ர்ர் என்ற ஓசையை நான் கேட்டேன். அதெப்படிக் கேட்கமுடியும்?

மறுகணம் புரிந்துகொண்டேன். என் பேஸ்மேக்கர் ஓசையிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஓசை வெளியே கேட்காது, என் தசைநார்கள் எலும்புகள் வழியாக என் செவிகளை அடையும் ஓசை அது. அல்லது என் நரம்புகள் வழியாக நேரடியாகவே மூளையை அடைகிறதா? என் நெஞ்சு படபடத்தது. கைகால்கள் முழுக்க அந்த ர்ர் ர்ர் கடந்துசென்றது. ஒரு மெல்லிய அதிர்வுபோல. கருவண்டின் சிறகுகளின் ஓசை உண்டு அல்லவா, அதுபோல.

என் உடல் வியர்த்து தளர்ந்தது. நான் என்னைப் பிடித்து அறைக்குக் கொண்டு செல்லும்படி சசியிடம் சொன்னேன். அது அங்கே இருக்கிறது. அதை என்னால் உணர முடிகிறது. பின்னர் என் அறைக்குள் இருந்தேன். மிகமிக மெல்ல ஒரு ர்ர் ர்ர். எங்கிருக்கிறது? என் ஆடைக்குள் அந்தச் சின்ன வண்டு மாட்டிக் கொண்டிருப்பது போல.

உண்மையில் அந்த பேட்டரி இருப்பது என் கழுத்தெலும்புக்கு கீழே. இதயத்தில் ஒரு எலக்ட்ரோட் இருக்கிறது. ஆனால் ர்ர் எல்லா இடத்திலிருந்தும் வந்தது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு இடத்திலிருந்து. கைவிரல் நுனிகளில், கால்கட்டை விரலில், நாக்கு நுனியில், காதுநுனியில். சிலசமயம் அது உள்ளே ஒரு குளிர்ந்த நடுக்கமாக கடந்துசென்றது. சிலசமயம் குடல் சற்றே புரள்வதுபோல. சிலசமயம் தலைக்குள் ஓர் உலுக்கல் போல.

சொன்னால் நம்பமாட்டாய், அப்போது எனக்குள் இருக்கும் பிம்பங்கள் வால்டேஜ் குறைந்த டிவியின் காட்சிபோல அதிரும். நேரில் பார்த்துக் கொண்டிருப்பவை மட்டுமல்ல, நினைவில் இருப்பவைகூட. உண்மையில் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் சொற்கள்கூட அதிரும். எப்படி என்று சொல்கிறேன். நான் வீட்டுக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்குபோஓஓஓஓஓ என்று நீண்டு சென்று கத்தவேண்டும் என்று ஆகும்.

இதெல்லாம் மனப்பிரமை என்று டாக்டர் சொன்னார். நான் கௌன்ஸிலிங் செல்லவேண்டும் என்றார். இல்லை, இவை உண்மையானவை. இவை அனைத்தும் மைக்ரோ வேவினால் உருவாகின்றன. அதை தெளிவாகவே அறிந்திருக்கிறேன். பலமுறை சோதனை செய்து பார்த்துவிட்டேன். என்னுடன் அந்த மைக்ரோவேவ் கருவி உறவாடுகிறது.

நான் சொன்னேனே, ஒவ்வொருவருக்கும் எமன் ஆக வருவது ஒருபொருள் என்று. எனக்கு அந்த மைக்ரோவேவ் மானிட்டர்தான். அதுதான். ஐயமே இல்லை. அது வந்த அன்றுதான் எனக்கு முதல் அட்டாக் வந்தது. அது என்னைப் பார்ப்பதை நான் அறிகிறேன். அந்தவழியாக எப்போது சென்றாலும் அது என்னை தன் ரகசியக் கைகளால் வந்து தொட்டுவிடுகிறது.

சென்ற மாதம் சூப்பர்வைசர்களின் அறைக்கு சென்றிருந்தேன். அங்கே அதை உணர்ந்தேன். என் நெஞ்சை அது பிடித்தது. நான் அலறிவிட்டேன். “மைக்ரோவேவ் மானிட்டர்… அதை அணையுங்கள்” என்று கூவினேன்.

“அது இங்கே இல்லை” என்றார் குமாரன்.

“இல்லை, இங்கேதான் இருக்கிறது… இங்கேதான் இருக்கிறது” என்று நான் அலறினேன்.

ஒரு சுவருக்கு அப்பால்தான் அது இருந்திருக்கிறது. இவர்களுக்கு அது தெரியவில்லை. நான் அதை என் நிலை சரியானபின் கட்டிடத்தின் அமைப்பை வைத்துக் கண்டடைந்தேன். சாதாரண செங்கல்சுவர்கள் மனிதர்களுக்குத்தான், மைக்ரோவேவ் கதிர்களுக்கு அல்ல.

சென்றவாரம் நான் டிஇ அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே அதே அதிர்வு. என் உடல் நடுங்கியது, வியர்த்து பதறிவிட்டேன். என்ன என்ன என்று அவர் கேட்டார்.

“அந்த மைக்ரோவேவ் மானிட்டர் இங்கே எங்கோ இருக்கிறது” என்றேன்.

“இங்கேயா? இது வேறு கட்டிடம்” என்றார்.

“இல்லை, இங்கே இருக்கிறது… எனக்குத்தெரிகிறது” என்றேன்.

என்னை மெல்லக் கூட்டி வந்துவிட்டார்கள். வந்ததுமே நான் ப்ளூபிரிண்டை எடுத்து பார்த்தேன். அந்த மைக்ரோவேவ் டிரான்ஸ்மிஷன் மானிட்டரின் ஒரு சானல் எக்ஸ்டென்ஷன் அங்கே இருக்கிறது. அவர் அதில்தான் கண்காணிக்கிறார்.

ஆமாம், அது என்னை சூழ்ந்திருக்கிறது. இந்த அறையை அதனிடமிருந்து பாதுகாத்து வைத்திருக்கிறேன். இதோ பின்பக்கப் படி வழியாக ஏறி வந்து திரும்பிச் செல்கிறேன். மைக்ரோவேவ் இருக்கிறதா என என் உடலே சொல்லிவிடும். மிகமிகக் கவனமாகவே நடமாடுகிறேன். ஆனால் அது அங்கே இருக்கிறது, எனக்காகக் காத்திருக்கிறது.

[ 2 ]

மீண்டும் நான்குமாதங்கள் கழித்து சுகுமார மேனனைச் சந்தித்தேன். டிவிஷனல் எஞ்சீனியரின் ஆபீஸுக்குச் சென்றிருந்தேன். படியிறங்கி வந்தபோது அவர் மிகமிக மெல்ல படி ஏறி வந்துகொண்டிருந்தார். மிகவும் களைத்திருந்தார். மிக வயதானவர் போல. போதை முற்றியவர் போல. உடலெங்கும் நிரந்தரமான நடுக்கம் இருந்தது.

“வணக்கம் சார்” என்றேன்.

“வணக்கம்! வணக்கம்!” என்றபோது அவர் என்னை அடையாளம் காணவில்லை என்று தோன்றியது.

“நன்றாக இருக்கிறீர்களா?”

“ஆ, நீலகண்டன்! நீலகண்டன் எப்படி இருக்கிறீர்கள்? எங்கே?”

நெடுங்காலம் ஆனதுபோலப் பேசினார். மானசீகமாக அவருக்கு நீண்டகாலம் ஆகியிருந்தது என்று தோன்றியது.

“இங்கேதான் சார் டிரான்ஸ்மிஷன்லே இருக்கேன்.”

“என்னை அக்கவுண்ட்டில் போட்டுவிட்டார்கள். அக்கவுண்ட் எனக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாவற்றையும் ஏஓ கிருஷ்ணமூர்த்தியே பார்த்துக்கொள்வார் என்றார்கள். அவர் ஐயர், அவருக்கு அக்கவுண்ட் என்றாலே பாயசம் போல. ஆகவே எனக்கு வேலையே இல்லை. ஓய்வெடுக்கிறேன்….”

“நல்லது சார்” என்றேன்.

அவருக்கு அங்கே மாறுதலை வாங்கிக் கொடுத்ததே நான்தான். ஜிஎம்மை நாங்கள் எட்டுபேர் நேரில் சென்று பார்த்து விஷயத்தைச் சொன்னோம். கொஞ்சம் எகிறினார். “சரி, அவருக்கு ஏதாவது ஆனால் நீங்கள்தான் பொறுப்பு. நாங்கள் எட்டுபேரும் சாட்சி, கூண்டில் ஏறக்கூட வேண்டியிருக்கும்” என்று நான் சொன்னேன். திகைத்துவிட்டார். “சரி சரி, எதையாவது செய்து தொலையுங்கள்… எனக்கென்ன?” என்றார்.

ஆனால் சுகுமார மேனன் என் கையைப் பிடித்துக் கொண்டார். “நான் இப்போது வந்தது டி.இயை பார்த்து ஒரு மனு கொடுப்பதற்காக… நீயே வந்து அவரிடம் ஒரு வார்த்தை சொல்.”

“என்ன மனு?” என்றேன்.

“என் வீட்டுக்கு அருகே மிகப்பெரிய மைக்ரோவேவ் டவர் வந்திருக்கிறது” என்று சுகுமார மேனன் சொன்னார் “நானே அதை கொஞ்சம் தாமதமாகத்தான் பார்த்தேன். என் தலைக்குமேல் நின்றிருக்கிறது அது.”

சுகுமார மேனன் சொன்னார். சென்றவாரம் ஒருநாள் இரவு தூக்கம் வரவில்லை. நெஞ்சு அழுத்தம் கூடிவிட்டது. மூச்சுத்திணறியது. ஆகவே வெளியே வந்தேன். இருட்டில் நின்று வானைப் பார்த்தேன். அங்கே ஒரு சிவந்த எரிநட்சத்திரம்… அது அசையாமல் அப்படியே நின்றது. ஒரு எரியும் கண்போல. நான் பயந்து அலறி உள்ளே ஓடிவிட்டேன். என் அறைக்குள் புகுந்து போர்வையை மூடிக்கொண்டு முழு இரவும் அமர்ந்திருந்தேன்.

காலையில் எழுந்து பார்த்தேன், அது மைக்ரோவேவ் டவர். அவ்வாறு டவர்கள் வரப்போகின்றன என்று தெரியும். ஆனால் அத்தனை சீக்கிரம் வந்துவிடும் என நினைக்கவில்லை. அவற்றை ஓரிரு வாரங்களில் கட்டி எழுப்பமுடியும் என்பதும், அவை எப்படி கட்டப்படும் என்பதும் எனக்குத் தெரிந்ததுதான். ஆனால் அப்படி ஒரு ராட்சத வடிவம் என் தலைக்குமேல் எழுந்து நிற்பதை திடீரென்று கண்டபோது என்னால் தாங்க முடியவில்லை.

இவை இரும்பாலான காளான்கள் போல. ஒரே இரவில் ஊரெல்லாம் முளைத்து எழுந்துவிட்டன. மைக்ரோவேவால் ஆன ஒரு கூரைப்படலத்தை நாம் அனைவருக்கு மேலும் இவை நெய்துவிட்டன. மைக்ரோவேவ் எல்லாவற்றையும் ஊடுருவும். மரங்களை மனிதர்களை சுவர்களை. அப்படியென்றால் மைக்ரோவேவ் இல்லாத இடமே இல்லை. இதோ என் உடலை மைக்ரோவேவ் துகள்கள் கோடிக்கணக்கில் ஊடுருவிக் கடந்துசெல்கின்றன.

இங்கிருந்தே பார், நமது இரும்புக்கோபுரங்கள் வானமெங்கும் மைக்ரோவேவ் கதிர்களை உமிழ்கின்றன. கூடைகளை விரித்து அள்ளிக் கொள்கின்றன. அவற்றை ஒயர்கள் வழியாக நம் டெலிபோன் எக்ஸேஞ்ச் கட்டிடத்திற்குள் கொண்டு வருகின்றன. அங்கிருந்து மீண்டும் செல்கின்றன. அவை அலையடித்துக் கொண்டே இருக்கின்றன. பல்லாயிரம் பல்லாயிரம் செவிகளில் குரல்களாகின்றன. இசையாகின்றன. எண்ணங்கள் ஆகின்றன.

எத்தனை ஆயிரம் மைக்ரோவேவ் டவர்கள். மைக்ரோவேவ் கதிர்கள் இந்தப்பூமிக்கு மேல் மழைபோலப் பொழிந்து கொண்டிருக்கின்றன. உலகமே மைக்ரோவேவ் அலையால் குளிப்பாட்டப்படுகிறது. இந்த உலகம் இன்று மைக்ரோவேவ் அலைகளால் சேர்த்து நெய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துளியும் இணைக்கப்பட்டு ஒற்றை அமைப்பாக ஆக்கப்பட்டிருக்கிறது.

என் பேஸ்மேக்கர் என் உடலுக்குள் ஒளிந்திருக்கிறது. உடலென்பது ஒரு கோட்டை என்று சொல்லலாம். அதற்குள் நாம் சிறை வைக்கப் பட்டிருக்கிறோம். உள்ளே அதுவே அனுமதித்தவை மட்டுமே செல்லமுடியும். மூச்சு, சாப்பாடு. ஆனால் இதோ இந்த பேஸ்மேக்கர், இது ஓர் உளவாளி போல உள்ளே அமர்ந்திருக்கிறது. இது ஒரு டிரோஜன் ஹார்ஸ். மைக்ரோவேவ் அலைகள் என்னுள் கடப்பதற்கு இது ஒரு வாசலை அமைக்கிறது. என்னால் மூடமுடியாத வாசல் இது. என்னை மைக்ரோவேவ் கதிர்கள் ஆட்கொள்கின்றன. நான் அவற்றால் எடுத்துக் கொள்ளப்படுவேன்.

ஆகவேதான் வந்தேன். என்னால் முடியவில்லை. என்னால் ஒரு இடத்திலும் வாழமுடியவில்லை. என் வீட்டருகே இருக்கும் டவரை அகற்றமுடியுமா என்று மனுகொடுத்தேன். அதை நிராகரித்துவிட்டார்கள். எனக்கு பேஸ்மேக்கர் வைக்கப்பட்டிருக்கிறது, பேஸ்மேக்கர் வைத்தவர்களும் உயிர்வாழவேண்டும் என்று இன்னொரு மனு கொடுத்தேன். நான் கௌன்ஸிலிங்குக்கு போகவேண்டும் என்று டிஇ சொன்னார். என் உடலில் பேஸ்மேக்கர் இருந்து மைக்ரோவேவால் அதிர்கிறது. இதைச் சொன்னால் எனக்கு மனநலப் பிரச்சினை என்கிறார்கள், இரக்கமே இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

“நீ வந்து டீஇயிடம் சொல். நான் செத்துவிடுவேன் என்று சொல். இல்லாவிட்டால் நான் வந்து இங்கே படுத்து சாவேன். என்னால் இனி தாங்க முடியாது. இல்லாவிட்டால் இந்த டவர்களே இல்லாத ஏதாவது இடத்திற்கு எனக்கு மாற்றல் தரச்சொல். காஞ்சாம்பாறா எக்ஸேஞ்சுக்கு. ஆனால் அங்கேகூட டவர் இருக்கிறது. கடல்நடுவே ஏதாவது இடத்திற்கு… நான் இனி இங்கே இருக்க மாட்டேன்” என்றார் சுகுமார மேனன்.

“சார் நீங்கள் சொல்லி மனுவை கொடுங்கள். நான் நண்பர்களுடன் வந்து நாளைக்கே டிஇயிடம் பேசுகிறேன்” என்று சொன்னேன்.

“கண்டிப்பாகப் பேசவேண்டும்” என்றார்.

“பேசுகிறேன்.”

“சத்தியமாக?”

“சத்தியமாக…”

நான் அவரிடம் விடைபெற்று கீழே போனபோது மிகச் சோர்வாக உணர்ந்தேன்.

[ 3 ]

மீண்டும் பன்னிரண்டு நாட்கள் கழித்து சுகுமார மேனனைப் பார்த்தேன். என் அலுவலகத்தின் வாசலில். அவரை அங்கே பார்க்கமுடியும் என நினைக்கவே இல்லை. என் அலுவலகத்திற்குப் பின்னால்தான் டிரான்ஸிஷன் அறை. ஆயிரக்கணக்கான பேனல்கள் ஓடிக்கொண்டிருந்தன. மைக்ரோவேவ் மானிட்டர் அங்குதான் இருந்தது.

“சார், என்ன இங்கே?”

“நான் அதை நேரில் பார்க்கலாம் என்று வந்தேன். நேரில் பார்த்துவிட வேண்டியதுதான். இனி அஞ்சி ஓடி ஒளிவதில் பயனில்லை. நேருக்குநேர் பார்த்துப் பேச வேண்டியதுதான்.”

“எதை?” என்றேன்.

“அந்த மானிட்டரை. என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் அந்த பிசாசை… அது எங்கே? காட்டு.”

“சார், இது ஒரு ஹைடெக் அலுவலகம். இங்கே நீங்கள் நுழையக்கூடாது. இது சட்டவிரோதமாக நுழைவதாகவே கருதப்படும்.”

“எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. எத்தனை நாள்தான் பயப்படுவது? நான் ஒவ்வொரு அலுவலகமாகச் சென்று காலைப்பிடித்தேன். மைக்ரோவேவ் என்னை கொல்கிறது. நான் பேஸ்மேக்கர் வைத்திருப்பவன். என்னை அழிக்கவேண்டாம் என்று கெஞ்சினேன். நான் சொல்வதை எவருமே கேட்கவில்லை. என்னை அடித்துத் துரத்தினார்கள்.”

“சார் நீங்களே டெக்னிக்கல் ஆள். சிக்னல்கள் செல்வது மைக்ரோவேவ் வடிவில் அல்ல.”

“அதெல்லாம் எனக்குத்தெரியும்… நீ என்னை உள்ளே விடுவாயா மாட்டாயா? நான் அந்த வெறிபிடித்த கருவியிடம் என் நெஞ்சை திறந்து வைக்கிறேன். அது என்னை கொல்வதென்றால் கொல்லட்டும். இந்தச் சித்திரவதையை என்னால் இனி தாளமுடியாது. என் உடம்பெங்கும் அதிர்வுகள். விரல்கள், காது மூக்கு நாக்கு முனைகள்… கண்களில்கூட. காட்சிகளில்கூட. எப்படி நான் உயிர்வாழ்வது?”

“சார் இப்போது அதை ஆஃப் செய்து வைத்திருக்கிறோம்… மெயிண்டெனென்ஸ் நடந்துகொண்டிருக்கிறது.”

“உண்மையாகவா? நீ பொய் சொல்கிறாய்.”

“இல்லை. பாருங்கள் நீங்கள் நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தானே?”

“ஆமாம்.”

“அதை ஆன் செய்யவில்லை, நம்புங்கள்.”

“எப்போது ஆன் ஆகும்?”

“நள்ளிரவு ஆகிவிடும்… நீங்கள் நாளை வாருங்கள். இப்போது உங்களை நான் ஆட்டோ ஏற்றி விடுகிறேன்.”

அவர் தயங்கி பின் “நான் நாளை வருவேன்” என்றார்.

“வாருங்கள். பேசிவிடுவோம்.”

அவரை ஆட்டோ ஏற்றிவிட்டேன். ஆட்டோ ஓட்டுநரிடம் விலாசத்தைச் சொல்லி அனுப்பினேன். அவர் மனைவிக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னேன்.

செக்யூரிட்டியிடம் அவரை இனி எக்ஸேஞ்சுக்குள் விடக்கூடாது என்று சொன்னேன். அவர் ஐடி கார்டை காட்டினாலும் விடக்கூடாது என்று ஆணையிட்டேன்.

அன்று முழுக்க நான் நிலைகுலைந்தவனாகவே இருந்தேன். என் இயந்திரங்கள் பல்லாயிரம் சிறு கிளிகள் போல சிலைப்பொலி எழுப்பிக் கொண்டிருந்தன. மிகக்குளிரான அறை. உறைந்த சுவர்கள். வெளியுலக ஓசையே இல்லை. அது ஒரு பாதாளம். அல்லது இந்நகரின் இதயம். அல்லது மூளை. இங்கே இந்த இயந்திரங்களின் பல்லாயிரம் இணைப்புக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

நான் அன்று அலுவலகத்திலிருந்து கிளம்பியதும் நேராக ஒரு சினிமா பார்க்கச் சென்றேன். மிஸ்டர் இண்டியா என்ற படம் ரிலீஸ் ஆகியிருந்தது. எனக்கு ஸ்ரீதேவி பிடித்தமான நடிகை. அனில் கபூர் கண்ணுக்குத் தெரியாதவராக வந்து ஸ்ரீதேவியைக் கொஞ்சினார். இல்லாத ஒருவரின் முத்தங்களை ஏற்று ஸ்ரீதேவி காமம் கொண்டார். நெளிந்து குழைந்து சிலிர்த்து நாணி சுருண்டு சீறி எழுந்து. நடிகை என்றால் அவர்தான்.

என் மனைவி வீட்டில் இல்லை. நான் பின்னிரவில் சென்று கதவைத் திறந்து ஒரு சப்பாத்தி போட்டு ஊறுகாயுடன் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டேன். டெலிஃபோன் அடித்துக் கொண்டே இருந்தது. அதை எடுத்தபோது எவர் எங்கிருந்து என்று எதுவுமே தெரியவில்லை.

அழைத்தவர் சுகுமார மேனனின் மனைவி கல்யாணி.

“நீலகண்டன் தானே? நான் கல்யாணி… மிஸிஸ் சுகுமார மேனன்.”

“சொல்லுங்கள் மேடம்.”

“சார் எங்கே? வீட்டுக்கு வருவதாகச் சொன்னீர்கள். வரவே இல்லை.”

“வரவே இல்லையா? நான் ஆட்டோவில் ஏற்றிவிட்டேனே?”

“இங்கே வரவில்லையே.”

பதறிவிட்டேன். இருந்தாலும் “இருங்கள். ஒருவேளை அலுவலகத்தில் இருப்பார். அலுவலகத்தில் இருப்பேன் என்று சொன்னதாக ஞாபகம்… நான் பார்க்கிறேன்” என்றேன்.

அதன்பின் பைக்கை எடுத்துக்கொண்டு அவருடைய வீடு வரைச் சென்றேன். சாலையின் இருபக்கங்களிலும் பார்த்துக்கொண்டே சென்றேன். அவர் எங்குமில்லை.

பதற்றம் அடங்கியபின் என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். ஆட்டோக்காரர் எனக்குத் தெரிந்தவர். அவருக்கு இவர் நிலைமையும் தெரியும். அவர் வீட்டுமுன்புதான் இறக்கிவிடுவார். சுகுமார மேனன் ஆட்டோவில் வந்து வீட்டுமுன் இறங்கியிருப்பார். ஆட்டோ திரும்பியதும் வீட்டுக்குள் நுழையாமல் திரும்பவும் சாலைக்கு வந்திருப்பார். இன்னொரு ஆட்டோ பிடித்திருப்பார்.

எங்கே செல்ல வாய்ப்பு? எனக்கு ஒரு நடுக்கம் வந்தது. அவர் எக்ஸேஞ்சுக்குத்தான் போயிருப்பார். ஆமாம், ஐயமே இல்லை. ஆனால் செக்யூரிட்டியிடம் சொல்லியிருந்தேன்.

நான் எக்ஸேஞ்சுக்குச் சென்றேன். செக்யூரிட்டியிடம் “சுகுமார மேனன் இங்கே வந்தாரா?” என்றேன்.

“இல்லை சார் வரவே இல்லை” என்றார்.

“உறுதியாகச் சொல்லுங்கள்” என்றேன்.

“சார் நான் இங்கேயே இருக்கிறேன். வரவில்லை.”

அப்படியென்றால் எங்கே போயிருப்பார்? வெளியே எங்காவது அமர்ந்திருப்பாரா?

அப்போது நினைவுக்கு வந்தது, அவர் பின்வாசல் வழியாக உள்ளே நுழைவதைப் பற்றிச் சொன்னது. அவருக்கு தெரிந்த ஏதாவது வழி இருக்கும். அதைத் தேடுவதில் பொருளில்லை. அதற்குப் பதிலாக அவர் உள்ளே இருக்கிறாரா என்று பார்க்கலாம்.

நான் மேலே சென்றேன். இரவு டியூட்டியில் உண்ணிகிருஷ்ணன் இருந்தான். அவனிடம் உள்ளே போகவேண்டும் என்றேன். நான் உள்ளே போக அனுமதி இல்லை. ஆனால் நிலைமையை சொன்னதும் அவன் என்னை உள்ளே கூட்டிச் சென்றான். அங்கே அவன் சுகுமார மேனனை பார்க்கவே இல்லை.

உள்ளே பேனல்ரூம் பூட்டப்பட்டிருந்தது. “யார் பூட்டியது?” என்றேன்.

“நான்தான்… இரவு ஒன்பது மணிக்கு பூட்டுவோம்.”

“அதற்கு முன்னால் யாராவது உள்ளே போனார்களா?”

“இல்லையே.”

எனக்கு அப்போதும் சந்தேகம் இருந்தது. அவர் எவருக்கும் தெரியாமல் உள்ளே சென்று ஒளிந்திருக்கக் கூடும். “எதற்கும் திறந்து பார்ப்போம்.”

நாங்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றோம். உள்ளே வானின் ஒரு துண்டு. சதுரவடிவ வானம். பல்லாயிர விண்மீன்கள். பல்லாயிரம் மின்சொற்கள்போல ஒலிகள்.

சுகுமார மேனன் அந்த மைக்ரோவேவ் டிரான்சிஷன் மானிட்டரின் அருகே சுருண்டு கிடந்தார். நான்தான் முதலில் கண்டேன். “சார்” என அழைத்தபடி ஓடிச்சென்று அவரை அள்ளினேன்.

[ 4 ]

சுகுமார மேனன் மணிப்பால் ஆஸ்பத்திரியில் நினைவு மீண்டார். நான் தூக்கும்போதே உயிர் இருப்பதை உணர்ந்திருந்தேன். மெல்ல ஒரு கார்ப்பெட்டில் வைத்து அப்படியே தூக்கி அலுவலக வேனிலேயே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றோம். அங்கே மறுநாள் காலையில்தான் நினைவு மீண்டார். எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. ஆபத்து நீங்கிய பின்னர் மணிப்பாலுக்கே கொண்டுசென்றதாக அறிந்தேன். அங்கே பேஸ்மேக்கர் சரிசெய்யப்பட்டது. அவர் நன்றாக இருக்கிறார் என்றார்கள். அதன்பிறகே நான் பார்க்கச் சென்றேன்.

வெண்ணிற விரிப்பிட்ட படுக்கையில் அமர்ந்திருந்த சுகுமார மேனன் முற்றிலும் வேறு மனிதராக இருந்தார். பத்துவயது குறைந்திருந்தது. முகத்திலிருந்த வெளிறலும் சுருக்கங்களும் தொய்வுகளும் மறைந்துவிட்டிருந்தன. கண்கள் சிரிப்புடன் புதியவையாக இருந்தன.

“சார் எப்படி இருக்கிறீர்கள்?”

“பார்த்தாயே, நன்றாக இருக்கிறேன்.”

“ஆமாம், புதிய மனிதர் போல இருக்கிறீர்கள்.”

“உண்மை, புதிய மனிதன்” என்றார்.

அன்றைக்கு ஏன் உள்ளே சென்றீர்கள் என்று கேட்கலாம் என்று நினைத்தேன், கேட்கவில்லை. ஆனால் அவரே சொன்னார்.

“நான் அந்த மானிட்டர் கருவியை உடைத்துவிடலாம் என்றுதான் உள்ளே போனேன். முன்னரே உள்ளே போய்விட்டேன். ஆனால் உள்ளே போனதுமே எனக்கு ஓர் அதிர்வு வந்தது. அது தன் கைகளால் என் நெஞ்சைப் பிடித்துக் கொண்டது.”

சுகுமார மேனன் சொன்னார். சில இடங்களில் மண்ணில் விழுந்துகிடக்கும் கற்சிலைகளை வேர்கள் பிடித்து கவ்விச் சுற்றியிருக்குமே. அதைப்போல. ஒருகணம்தான், என் நெஞ்சு அதன்பிடியில் சென்றுவிட்டது. சரசரவென்று என் இதயத்தை சுற்றிக்கவ்வியது. சல்லிவேர்களால் என் கைவிரல்நுனிகள் வரை பிடித்துக்கொண்டது. என் உடலின் ஒவ்வொரு நரம்பும் முழுமையாகவே அந்தக் கருவிகளுடன் இணைந்து கொண்டது.

நான் சாகப்போகிறேன் என்ற எண்ணம் எழுந்தது. திமிறி எழமுயன்றேன். ஆனால் என் உடல் என்னுடன் இல்லை. அது முழுக்க முழுக்க அந்த ஒட்டுமொத்த சிஸ்டத்தின் ஒருபகுதியாக இருந்தது. என் தன்னுணர்வும் கரைந்து கொண்டிருந்தது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணம் வந்ததும் நான் இயல்பாக ஆனேன். என்னை அப்படியே விட்டுவிட்டேன். எங்கும் பிடித்து இழுக்கவில்லை. தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

அதன்பின் ஒன்று நிகழ்ந்தது. அதை உன்னிடம் சொல்கிறேன், எவரிடமும் சொல்லப் போவதில்லை. சொன்னால் நம்பமாட்டார்கள். நான் ஒரேகணத்தில் உலகளாவ விரிந்தேன். உலகம் முழுக்க. ஆம், இந்த கோளம் முழுக்க நான் இருந்தேன். நகரங்களுக்குமேல், காடுகளுக்குமேல், மலைகளுக்கும் பாலைவனங்களுக்கும் மேல், நீலக்கடல்வெளிக்கு மேல் பரவியிருந்தேன்.

எத்தனை நேரம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருசில கணங்களாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த விரிந்து விரிந்து விரிந்து பரவும் அனுபவத்தை என்னால் ஆயிரக்கணக்கான மணிநேரம் சொல்லமுடியும். எத்தனை சொன்னாலும் புரியவைக்கவும் முடியாது.

அதன்பின் நான் என்னை உணர்ந்தது டாக்டர் கம்மத்தின் ஆஸ்பத்திரியில் நினைவு மீண்டபோது. என் உடலில் அந்த விரிவின் அதிர்வு மிச்சமிருந்தது. என் உடல் ஒரு பெரிய நாக்காக ஆகி இனிமையொன்றில் திளைத்துக் கொண்டிருந்தது. மீண்டும் அப்படியே மயக்கமானேன்.

இங்கே விழித்துக் கொண்டபோது நிகழ்ந்தது என்ன என்று என்னால் தொகுத்துக் கொள்ள முடிந்தது. நீ நம்புவாயோ இல்லையோ, அந்தக்கருவி அவற்றின் பிரம்மாண்டமான நெட்வர்க்கில் என்னை சேர்த்துக் கொண்டது. உலகையே அணைத்து ஒன்றென்றாக்கி ஆளும் அதன் மாபெரும் இயக்கத்தில் நானும் இருந்தேன்.

சரி, அது என்னவென்றாலும் ஆகட்டும். ஆனால் இந்த படுக்கையில் இப்படி இருக்கையில் என் பேஸ்மேக்கரின் அதிர்வை உணர்கிறேன். இந்தக்காற்றிலுள்ள மைக்ரோவேவ் என்னை ஊடுருவுகிறது. என் பேஸ்மேக்கரை அது தீண்டி உயிர்பெறச் செய்கிறது. என் இதயத்தை அது கையிலெடுத்துக் கொள்கிறது. நான் விரியத் தொடங்குகிறேன். இந்த விடுதலையை இந்த முழுமையை இந்த நிறைவை நான் அறிந்ததே இல்லை.

நான் விடைபெறும்போது திகைத்துப் போயிருந்தேன். அது ஒரு மனமயக்கம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் எதுவானாலும் அது அவரை மீட்டிருக்கிறது. முன்னிலும் ஆற்றல் கொண்டவராக ஆக்கியிருக்கிறது. அது நல்லது.

அன்று அந்த கருவிமுன் சென்று நின்றேன். அது ஓர் எளிமையான மீட்டரிங் கருவி. அதனுடன் இணைந்த பேனல்களை நோக்கியபடி நடந்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தருணத்திற்கு ஒன்றென இங்கே வெளிப்படுகின்றன. ஒவ்வொரு இயற்கைப் பொருளும் ஒரு மூலக்கருத்தின் தூலவடிவம் என்கிறார்கள். ஒவ்வொரு படைப்பும் ஒரு உருவகத்தின் வெளிப்பாடு என்கிறார்கள். கருத்துக்கள் முடிவின்மை கொண்டவை. ஏனென்றால் அவை வளர்ந்து கொண்டே இருப்பவை.

அப்படியென்றால் பொருட்களும் வளர்கின்றன. அவை தங்களுக்குள் உரையாடி ஒன்றோடொன்று கோத்துக் கொண்டு ஒன்றையொன்று நிரப்பி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் அளித்தபடி முடிவிலாது எழுந்து கொண்டிருக்கின்றன. விசித்திரமான எண்ணங்கள். இப்படி எண்ணக்கூடுபவன் என சுகுமார மேனன் என்னைப் பற்றி அறிந்திருக்கிறார். ஆகவே என்னிடம் மட்டும் இதையெல்லாம் சொல்கிறார்.

[ 5 ]

சுகுமார மேனன் மேலும் பதினெட்டு ஆண்டுகள் உயிருடன் இருந்தார். மிகமிகத் திறமையான அதிகாரியாக செயல்பட்டார். வடகேரளத்திலும் தெற்கு கர்நாடகத்திலும் தொலைபேசிக் கட்டமைப்பை நிறுவியதில் அவருடைய சாதனை மிக முக்கியமானது. அதற்காக அவருக்கு சஞ்சார்ஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. அவர் ஜிஎம் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற அன்று அன்றைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சரே அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஓய்வுக்குப்பின் அவர் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஆலோசகராக இருந்தார். இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். எர்ணாகுளத்தில் அவருடைய மகளுடன் தங்கியிருந்தார். ஒருமுறை அவரை அவர் மகள்வீட்டுக்குச் சென்று சந்தித்தேன். அப்போது தொலைத்தொடர்பு பணிகளில் இருந்து விலகிக்கொண்டு இசைகேட்பதாகவும், அதிலேயே மூழ்கியிருப்பதாகவும் சொன்னார்.

அவர் மனைவி என்னிடம் “ஆனால் தந்திவாத்தியங்கள் மட்டும்தான் கேட்பார். மனிதக்குரலும் கிடையாது, காற்று வாத்தியங்களும் கிடையாது” என்றார்.

“ஏன்?” என்று நான் கேட்டேன்.

“நரம்புகள் அதிர்வதில் மிகமிக மர்மமான ஒன்று உள்ளது” என்று சுகுமார மேனன் சிரித்தார்.

நான் நெடுங்காலம் அச்சிரிப்பை நினைவில் வைத்திருந்தேன்.

***

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–43