மொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

வானில் அலைகின்றன குரல்கள் ஒரு பெருமூச்சை அளித்த கதை. அதற்கு ஒரு காரணம் உண்டு. மறைந்த என் தந்தை திரு வீரராகவன் அவர்கள் ஆடிட்டராக இருந்தவர். ஒரே ஒரு பழைய சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் அவர் இருக்கிறார். மேனேஜர் உள்ளே இருக்கார் என்று நாகேஷ் சொல்வார். கதவைத்திறந்து அங்கே என்ன சத்தம் என்று இவர் கேட்பார். மௌலி இயக்கிய பழைய படம். அவருடைய ஒரு வீடியோ பதிவு இதுதான்

 

சென்ற ஐம்பது ஆண்டுகளாகவே இந்த ஒரு துண்டு படத்தை எங்கள் குடும்பத்தில் ஒரு பொக்கிஷம்போல சேர்த்து வைத்திருக்கிறோம். அவர் உயிருடன் இருப்பதாகவே தோன்றவைக்கிறது. இந்தக்கதையை வாசித்தபோது சினிமாவையும் அப்படி யோசிக்கலாம் என்ற எண்னம் வந்தது. எத்தனைநூறு முகங்கள் எங்கெல்லாம் நிறைந்திருக்கும் உலகம் அது

 

சிவசங்கர்

 

 

அன்புள்ள ஜெ

 

காற்றில் அலைகின்றன குரல்கள் நெகிழச்செய்த ஒரு கதை தொழில்நுட்பம் மாறுவதன் பகைப்புலத்தில் மாறவே மாறாமலிருக்கும் மெய்க்காதல் என்று இரண்டை அடையாளப்படுத்திக்காட்டுகிறது இந்தக்கதை. கிருஷ்ணபட்டின் காதல் அழகானது. அந்தக்குரலுடன் அவன் வாழ்வான். அதைவிட அழகானது தோட்டானின் காதல். அவர் தேடிக்கொண்டே இருக்கிறார். தன் காதல்மனைவி லிஸியை. அவள்குரலை

 

அவர் கடைசியாக அந்த குரல்களின் வெளியில் அவளுடைய குரலும் இருக்கும் அந்த முடிவின்மையில் தன்னையும் ஐக்கியப்படுத்திக்கொள்வார் என நினைக்கிறேன்

 

சரவணக்குமார் எஸ்

 

மொழி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

மொழி சிறுகதையில் அந்த கிராமமே கூடியிருக்கிறது. அங்கே வேடிக்கைகளாக வெளிப்பட்டாலும் கிராமத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் எல்லா சிக்கல்களும் தெரிகின்றன. மதம்ரீதியான பார்வை ஒன்று வெளிப்படுகிறது. அந்த நிலவறையை சாத்தானின் இடமாக அது பார்க்கிறது. வர்க்கரீதியான ஒரு பார்வை அங்கே வெளிப்படுகிறது. அவர்களுக்கு அது ஓர் ஆண்டையின் கருவூலம்.

 

அதேபோல பலவகையான கசப்புகள். குட்டி செத்திருக்கும் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறது ஒரு கிழவியின் குரல். கணவனுக்கும் மனைவிக்கும் இடையேகூட அத்தனை மோதல்கள். அந்த கிராமத்தின் எல்லா ‘கணக்குகளும்’ வெளிப்படுகின்றன.

 

அங்கே அந்த இருகுழந்தைகளும் நிர்வாணமாக வந்து நிற்கின்றன என்பது ஒரு பெரிய தரிசனம் போல இருந்தது. அவர்கள் முன் நிர்வாணமாக வர சின்னக்குட்டிக்கு தயக்கம். அவனும் நிர்வாணமாக வந்ததும் அவளுக்குப் பிர்ச்சினை இல்லை. அங்கே எத்தனைபேர் நிர்வாணமாக இருந்தாலும் அவளுக்கு ஒன்றுமில்லை

 

ராஜசேகர்

 

அன்புள்ள ஜெ

 

மொழி சிறுகதையைப் படித்தேன். ஆனையில்லா கதையின் இன்னொரு வடிவம் என்றே புரிந்து கொள்கிறேன். குழந்தைகள் தங்களுக்குரிய உலகில் ஏற்படுத்திக் கொள்ளும் படிமங்களான மொழியும் சைகையும் பிள்ளை அறையிலிருந்து வெளிவருவதற்கான மொழியாகிறது. இந்தக் கதையில் வரும் கிழவொ இன்னொரு புறம் ஓயாமற் எதையாவது அனத்திக் கொண்டு இருக்கிறது. முற்றாத இளங்குழந்தைகளும் முற்றிய முதிய குழந்தைகளும் என இரு முரண்களைக் காண முடிகிறது.

 

இதற்கிடையில் நடுவயதுக்காரர்களின் தம் தம் தருக்கத்தால் மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொன்றும் அதற்கேயுரிய மொழியுடன் துலங்கும் அழகை இந்தக் கதை உணர்த்துகிறது.

 

அரவின்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24
அடுத்த கட்டுரைஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்