மொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

வானில் அலையும் குரல்கள் தொழில்நுட்பம் சார்ந்த ஓர் உலகத்தை அறிமுகம் செய்கிறது. கதையை தொடக்கத்திலேயே அந்த மனம்பிறழ்ந்த மனிதரிலிருந்து தொடங்கியதனால்தான் கதைக்குள் செல்லமுடிகிறது. ஒரு உயர்தொழில்நுட்ப உலகில் மனம்பிறழ்ந்த மனிதர் என்பதே ஒரு விசித்திரமான கதைதான்

 

தோட்டானின் உலகில் என்ன நிகழ்கிறது என்று கதையிலே சொல்ல்ப்பபடவே இல்லை. அது முழுக்கமுழுக்க வாசகனின் ஊகத்துக்கே விடப்படுகிறது. அவர் ஆரம்பத்தில் தேடுவது என்ன? அவருடைய நரம்புகள் அறுந்து சிக்கலாகி கிடக்கின்றன. ஆகவே அவர் அந்த டயல்டோனை தேடுகிறர் அது அவரை ஒருங்கிணைவுடன் வைத்திருக்கிறது. அவருக்கு கொஞ்சம் தூக்கத்தை அளிக்கிறது

 

அந்த ஒருங்கிணைவை அடுத்த தொழில்நுட்பம் அழித்துவிடுகிறது. அவர் அலைமோதுகிறார். அப்போதுதான் குரல்களுக்கான தேடல். வானம் குரல்களால் ஆனது என அறிந்துகொள்கிறார். அங்கே தன் மனைவியின் குரலும் இருக்கும் என்று புரிந்துகொள்கிறார். ஆனால் அதை கேட்கவே முடியாது என்று தெரிகிறது

 

அந்த குரல்கள் அனைத்தையும் இணைத்து அவர் ஒரே ஒலியாக ஆக்கிக்கொள்கிறார். தன்னை தொகுத்துக்கொள்கிறார். அந்த ஓங்காரத்தில் முழ்கி மறைகிறார்/ அவர் முகம் மலர்ந்திருக்கிறது என்பது ஒரு முக்கியமான குறிப்பு

 

இவ்வளவு மெக்கானிக்கலான ஒர் உலகம் இவ்வளவு கவித்துவமாக ஆகமுடியும் என்பது ஆச்சரியம்தான். கதை ஆன்மிகமாக ஒரு பெரிய கனவை முன்வைக்கிறது. ஒரு தரிசனத்தையே சொல்கிறது

 

எம்.ராஜேந்திரன்

 

 

ஜெ.

 

வானில் அலைகின்றன குரல்கள் சிறுகதை இதுவரை தமிழ்ச் சிறுகதை உலகம் காணாத புதிய தளம். அறிவியல் தொழில்நுட்பமும் மரபும் இணையும் அற்புதமான கதை.அதுவும் தங்களுக்கு மிகவும் பழக்கமான துறை என்பதால் புகுந்து விளையாடி இருக்கிறீர்கள்.

 

ஒரு கதவு மூடினால் மற்றொன்று திறக்கும் என்பார்கள். அதேபோல கிறுக்கன் போலத் தோன்றினாலும் தோட்டானும் ஓர் அற்புதமான பாத்திரம்.யாராலும் முடியாத ஒன்றைக்கண்டிபிடிக்கும் ஆர்வமும்

அர்ப்பணிப்பு உணர்வும் அவரிடம் உள்ளதால்தான் அவரால் சாந்தியின் குரலைக்கண்டுபிடிக்க முடிகிறயது. மேலும் அவருக்கு லிசியின் குரலும் கிடைக்கும் என்னும் தேடலும் இருந்தது ஒரு காரணம். மரணத்தைத் தழுவிய தன் சாந்தியின் குரலைக் கேட்டாலாவது சாந்தி கிடைக்கும் என மரபு ரீதியாக எண்ணும் கிருஷ்ண பட்டும் அதைத் தொழில் நுட்பத் திறத்தால் நிறைவேற்றும் தோட்டானும் இணயும் புள்ளி தேடல்தான்.

 

நாமும் வாழ்வு முழுதும் எதையாவது தேடிக்கொண்டு தானே இருக்கிறோம். வருகின்ற எல்லாக் கதைகளும் வெவ்வேறு தளங்களில் உலவுவதால் வாசிப்பில் தேடலும் ஆர்வமும் மிகுதியாகின்றன

 

 

வளவ.துரையன்

 

மொழி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

மொழி கதையை நான் இப்படி வாசித்தேன். அந்தச் சின்ன கிராமத்தின் சின்ன சமூகமே வேறு வேறு மொழிகளால் ஆனது. ஒவ்வொருவரும் ஒரு சப்லேங்குவேஜில்தான் அதில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அல்லேலூயா என பேசும் ஒரு ஆள் அவருக்கே உரிய ஒரு மொழியில் பேசுகிறார். ஆசாரிக்கும் மூசாரிக்கும் வேறுவேறு மொழிகள். கரடிக்கும் அவர் நண்பர்களுக்கும் வேறுமொழி. ஒரு கூட்டத்தின் மொழி பாட்டாக இருக்கிறது

 

இத்தனை மொழிகளுக்கு நடுவே ஒரு மொழி. அது குழந்தைகள் தங்களுக்குள் உருவாக்கிக்கொண்ட மொழி. ஒரு பிரைவேட் மொழி அது. அந்தமொழி தெய்வங்களுக்குரிய மொழி. தூய்மையானது, உற்சாகமானது

 

எஸ்.சிவக்குமார்

 

அன்புள்ள ஜெ சார்,

மொழி கதையில் மொத்த இலக்கிய இயக்கத்திற்கான ஒரு படிமத்தை பார்த்த போல் இருந்தது. இருட்டில் இருக்கும் ஒரு குழந்தைக்கு இன்னொரு குழந்தை வெளிச்சத்தை நோக்கி ஒரு மீமொழியில் வழிகாட்டுகிறது. அதற்கு வெளியே இருப்பவர்களுக்கு அந்த மொழி புரிவதில்லை. அது சாத்தானின் மொழி என்கின்றனர். சற்று புரிந்தவர்கள் தேவ பாஷை என்கின்றனர். இன்னும் யோசித்தால் தன் சுயத்தை பூரணமாக வெளிப்படுத்தும் ஆசிரியன் முன்னால் தன்னையும் முழுமையாக வெளிப்படுத்த வாசகனுக்கு தயக்கம் இருப்பதில்லை.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்

முந்தைய கட்டுரைஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்