மொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்

 

 

மொழி [சிறுகதை]

வணக்கம்,

 

உங்கள் அறம் தொகுதியை என் தந்தை அறிமுகம் செய்தார். அதன் பிறகு உங்கள் கதைகளையும் இணையதளத்தையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.

 

மொழி சிறுகதையே என்னை உங்களுக்கு கடிதம் எழுத தூண்டியது. மிகவும் அழகான கதை. பலமுறை படித்தும் சலிக்கவில்லை.

 

அதில் வரும் கதாபாத்திரங்களும், அவர்கள் அந்த சூழ்நிலையில் என்ன செய்கிறார்கள் என்பதும் (ஒரு அழகான டோமினோ விழுவது போல – ஒன்று தொட்டு இன்னொன்று) சங்கிலி தொடர் போன்ற நிகழ்ச்சிகளும் மிக அருமை.

 

இறுதியில் பெரியவர்களின் கவலையை குழந்தைகளின் விளையாட்டு வெற்றி கொள்வது அழகு.

 

இந்த ஊரடங்கு நேரம் உங்கள் கதைகளால் சற்று  ஆறுதலாக் கழிகிறது.

 

நன்றி,

சத்யா

 

 

அன்புள்ள ஜெ,

 

 

மொழி சிறுகதையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். கவித்துவமான சிறந்த குறிப்புக்கள் உள்ள கதைகளை விட நேரடியான கவித்துவம் வெளிப்படும் இந்தவகையான கதைகளே என்னைப்போன்ற ஒருத்திக்கு பிடித்தமானவையாக இருக்கின்றன. இதில் அனந்தன் இருட்டு என்று சொல்லப்படும்போது தன் தங்கையிடம் ஆனை என்று சொல்கிறான். இருட்டை அவன் ஆனை என்று காட்சிப்படுத்தி வைத்திருக்கிறான்.

 

 

இது குழந்தைகளின் இயல்பு. என் மகன் சின்னவயசாக இருந்தபோது ஆட்டை சவிக்கி என்றே சொல்லிக்கொண்டிருந்தான். பிறகுதான் கண்டுபிடித்தேன், அவன் அதை சைக்கிள் என்று சொல்கிறான். அதன் இரு கொம்புகளையும் அவன் சைக்கிள் என்று நினைத்திருந்தான். இந்தவகையான ஒரு கதை கற்பனையில் வராது. குழந்தைகளின் கற்பனைக்குள் போனால்தான் வரும்.

 

மாதங்கி

சென்னை

 

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

வானில் அலைகின்றன குரல்கள் படித்தவுடன் நினைவுக்கு வந்தவர் திரை இசைப் பாடகி சொர்ணலதா.  காற்றின் அலைகளில் உயிரினங்களின் குரல்கள் எங்கோ சேமிக்கப்படுகின்றன போலும். குரலைக் கொண்டே தன் மனைவியை மீட்டுருவாக்கிக் கொள்ள முயலும் பட், உங்களின் சிறிய விவரணைகளாலேயே ந்ம்மைக் கசிய வைக்கிறார்.  அவளின் உருவமே அவளின் தந்தை, உடன் பணியாற்றும் தோழர்கள் உட்பட அனைவரிடத்திலும் அவளது குரலின் இனிமை எடுபடாதவாறு மறைத்து விட்டது. அவளது கணவன் மட்டுமே அவளை அவளது குரலுக்காகவே நேசித்திருக்கிறான். நினைத்து உணர்ந்து அசை போட வைக்கும் கதை. நன்றி ஜெ !

அன்புடன்
நாரா.சிதம்பரம்.

 

 

அன்புள்ள ஜெ,

 

 

வானில் அலைகின்றன குரல்கள் கதை எத்தனை ஆழமான குறியீட்டுத்தன்மை கொண்டது என எண்ணி வியந்தேன். தோட்டான் ஓங்காரத்தில் அமர்ந்திருக்கிறார். வானமெல்லாம் குரல்கள் நிறைந்திருப்பதை கதைசொல்லி அவருக்குச் சொல்கிறான். அவர் அத்தனை குரல்களையும் ஒன்றாக்கி மீண்டும் ஓங்காரத்தை கண்டடைகிறார்

 

ஓங்காரம் உடைந்தால் குரல்கள், ஒலிகள். ஒன்றாக இணைந்தால் அது ஓங்காரம்

 

சுவாமி

முந்தைய கட்டுரைதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேரில் திகழ்வது [சிறுகதை]