மொழி [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
‘மொழி’ சிறுகதை வாசித்தேன். “எல்லாச் சொல்லும் பொருளற்றவையே” என்று தொல்காப்பியர் மாற்றிப் பாடியிருக்கவேண்டுமா என்ன? அனந்தன் பேசுவதை முதலில் வாசித்தபோது கொச்சையான மலையாளத்தில்தான் பேசுவதாக நினைத்தேன். கொஞ்சநேரம் கழித்துத்தான் அது யாருமறியாத பாஷை என்று புரிந்தது. குமாரன் நாயர் வேறு “மலையாளம் இவ்வளவு கேவலமாவாட்டே இருக்கும்” என்கிறார்.
அந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் முயற்சி செய்தேன். கதவை ‘ராட்டிலு’ என்கிறான் அனந்தன். (அல்லது அது கொண்டியைக் குறிக்கும் சொல்லா?) அதேபோல் மூசாரி கொண்டியை மேலே தள்ளி இழுக்கச் சொல்வதை “ஞீ மூளி ஆக்கு” என்று மொழிபெயர்க்கிறான். அவன் பேசும் மொழியில் ‘பண்டம்’ என்ற சொல்லைத் தவிர வேறெந்த சொல்லும் புரியவில்லை, அந்த சொல்லும் ‘ஆனையில்லா’ முதலான கதைகளைப் படித்ததனால் புரிந்தது.
இருநூறாண்டுகளுக்குமுன் கோயிலில் இருந்த கல்வெட்டுகளை “தேவர்கள் ஏதோ தெய்வபாஷையில் எழுதி வைத்திருக்கிறார்கள்” என்று நாம் நம்பிக் கொண்டிருந்ததாகவும், “இல்லை, உங்கள் முன்னோர்கள் உங்கள் தாய்மொழியான தமிழில் எழுதியவைதான்” என்று வெள்ளைக்காரன் கண்டுபிடித்துச் சொன்னதாகவும் ஒரு துணுக்கு படித்திருக்கிறேன். கல்வெட்டில் இருக்கும் எழுத்துருவை இப்போது நாம் பார்த்தாலும் அது அனந்தன் பேசியதுபோன்ற மொழியில்தான் இருப்பதாகத் தோன்றும். நாம் அறியாத பாஷை தேவபாஷையாகவோ பிசாசு பாஷையாகவோ தானே இருக்கவேண்டும்? கோவிலில் இருப்பதால் தெய்வபாஷை, அவ்வளவுதான்.
கதையில் என்னைக் கவர்ந்தது அனந்தன் கதாபாத்திரம்தான். அத்தனை ஆண்டுகள் அங்கே இருந்தும் நிலவறையில் இருக்கும் மழைத்தூம்பு வேறெவருக்கும் தெரியவில்லை. தனக்குக் கருப்பட்டி கேட்டால் அடிப்பார்கள் என்பதை அறிந்து தங்கைக்காகக் கேட்கிறான். அவளுக்குக் கொடுப்பதையும் அவனே பிடுங்கித் தின்கிறான். யாருக்கும் புரியாத ஒரு பாஷையையே உருவாக்கியும் வைத்திருக்கிறான். சுவையான சித்தரிப்புதான்.
அதெல்லாம் இருக்கட்டும். நாரோயிலில் சகல ஜீவராசிகளும் கருப்பட்டி பைத்தியம் பிடித்து அலைவது ஏன்? கள்ளு சாராயத்தை விடக் கருப்பட்டி போதைதான் அங்கு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறதோ? கருப்பட்டி கொடுக்கவில்லை என்று ஆனை வீட்டிற்குள் நுழைகிறது, இரண்டுவயதுக் குழந்தை நிலவறைக்குள் நுழைந்து பூட்டிக்கொள்கிறது. இந்த போதையிலிருந்தும் விடுபட விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தேவையோ?
அன்புடன்,
த.திருமூலநாதன்.
அன்புள்ள ஜெ
நான் ஒருமுறை ரயிலில் மேல் பர்த்தில் படுத்திருந்தேன். கீழே ஒரு தாய் தன் குழந்தையுடன் இருந்தாள். நல்ல தூக்கம். நடுவில் பிள்ளை அழுதபோது நான் விழித்துக்கொண்டேன். அந்த அம்மா பிள்ளையை சமாதானப்படுத்தினாள். அது என்ன ஒரு மொழி. வெறும் ப்ளாப்பரிங்,
இது இங்கே நடந்தது அல்ல. அமெரிக்காவில். அவள் ஸ்பானிஷ் பெண். ஆதலால் அது ஆங்கில மொழி அல்ல. ஆனால் அது ஸ்பானிஷ் மொழியும் அல்ல. மொத்தமாகவே வேறு ஒரு மொழி. அந்த அம்மா அவள் பிள்ளைக்காக உருவாக்கிக்கொண்ட ஒன்று. ஒருவேளை அவள் அம்மா அவளிடம் அப்படிப் பேசியிருக்கலாம். அற்புதமான ஒரு மொழி. கடவுள் பேசும் மொழி என அப்போது நினைத்தேன். இன்றைக்கு மொழி என்ற அழகான சிறுகதை அதை ஞாபகப்படுத்தியது. நன்றி
எஸ்.வரதராஜன்
துளி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
துளி சிறுகதையைப் படித்தேன். யானைகளுக்குள் இருக்கும் சங்கேத மொழியும் அதன் நுண் மணம் அறியும் திறனும் பிரமிக்கவைத்தது. சிறு பிள்ளைகள் இருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு மீண்டும் பேசும்போது இப்படியாக இருவர் மீது இருக்கும் ஒருதுளியிலே ஐக்கியமாவர். அப்படி இங்கு கருப்பன் முறுக்கிக் கொண்டு இருக்கும் கோபாலக்கிருஷ்ணன் காலிலும் கொச்சுக்கேசவன் காலிலும் ஒரு துளி பெய்துவிட்டு மணத்தால் ஒன்றுபடுத்துகிறான். டிக்கனாரும் தங்கையாநாடாரும் மாதேவன் பிள்ளையும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ஒருவர் மேல் மற்றொருவர் துளிதுளியாய் தூற்றிக் கொண்டு அதில் நிறைவடைவது போல…
அரவின் குமார்
அன்புள்ள ஜெ
துளி என்ற சொல்லில் இருக்கிறது கதை. அந்தக்கதையில் இருப்பதே ஒரு துளி தேன் சொட்டுதான். ஜாஸ்தியெல்லாம் இல்லை. ஒரு துளிபோதும் என்று கதைக்குள்ளேயே பேசிக்கொள்கிறார்கள். அணஞ்சீ அது நாயாக்கும். பெருமாள் சங்குசக்கரத்தோட வந்து முன்னால நின்னாலும் மோந்துதான் பாக்கும் என்ற வரி சிரிப்பு என்றால் அதற்கு உடனே சைவ மர்பில் இருந்து பதிலடிவருவதும் ஊடே கிறித்தவம் புகுவதும் அதற்கு மறுபடி பதில் வருவதும் எல்லாம் அந்தக்கிராமத்தின் அழகான உறவுப்பின்னலைக் காட்டுபவையாக இருந்தன. அழகான கதை
மகிழ் செந்தூரன்.