“பெண்பார்க்க போவதுவரை எனக்கு உண்மையிலேயே தெரியாது” என்றார் ஸ்ரீகிருஷ்ணபுரம் ராஜசேகரன் நாயர். ”அந்தக்காலத்தில் பெண்பார்க்கப்போவது என்ற சடங்கு பொதுவாக இல்லை. பெண்ணைப் பார்க்கவேண்டும் என்றால் தவறாகக்கூட எடுத்துக்கொள்வார்கள். நான் அடம்பிடித்ததனால்தான் கூட்டிச்சென்றார்கள். உடன் வந்தவர்கள் என் தாய்மாமன்கள் இருவர், என் சித்தப்பா ஒருவர். கிளம்பும்போதே அப்பா கடுமையாக எச்சரித்து அனுப்பியிருந்தார். என்னை பேசவே விடக்கூடாது என்று. அன்றுதான் சரஸ்வதியைப் பார்த்தேன்”
டேப் ரிக்கார்டர் ஓடிக்கொண்டிருந்தது. அவர் கைவிரல்களைக் கோத்து கும்பிடுவதுபோல மார்பின்மேல் சேர்த்துக்கொண்டு தலைகுனிந்து அரைக்கண்மூடி அமர்ந்திருந்தார். அவரே தன்னை ஒரு ஹிப்னாட்டிஸ மயக்கத்திற்குக் கொண்டுசென்றுவிட்டதுபோலத் தோன்றியது. உடல் மிக தளர்ந்து முகத்தசைகள்கூட தொங்கி அவர் மேலும் முதுமையை அடைந்திருந்தார். குரலும் தூக்கத்தில் பேசுவதுபோல ஒலித்தது
அவரை ஒரு நீண்ட பேட்டி எடுக்கவேண்டும் என நான் அணுகியபோது கடுமையாக எதிர்த்தார். “உயிரோடு இருப்பவர்களை போஸ்ட்மார்ட்டம் செய்யும் வழக்கம் இது. இதெல்லாம் வெள்ளைக்காரனுக்குச் சரி. நம் பண்பாடு வேறு”
நான் அவரிடம் மன்றாடினேன் “ஆமாம், ஆனால் சிலவிஷயங்களை நாம் பதிவுசெய்யவேண்டும். சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த முன்னோடிக் கலைஞர்கள் எவரும் தங்கள் வாழ்க்கையை பதிவுசெய்ததில்லை. ஆனால் சென்ற தலைமுறைக் கலைஞர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். உங்கள் குரு வள்ளத்தோள் நாராயணமேனன் முதல் உங்கள் சமகாலத்தவரான கலாமண்டலம் கிருஷ்ணன்நாயர் வரை அத்தனைபேரும் அவர்களின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாம் எத்தனைபெரிய ஆவணப்பதிவுகளாக இருக்கின்றன… அவற்றை நீங்கள் மறுக்கமுடியுமா?”
“ஆமாம்” என்று அவர் சொன்னார். “ஆனால் அவர்கள் எழுதினார்கள். நான்…”
“இல்லை. வள்ளத்தோள் கையால் எழுதவில்லை, சொன்னார். அவை பதிவுசெய்யப்பட்டன கலாமண்டலம் கிருஷ்ணன்நாயரும் பதிவுதான் செய்தார்”
“ஆனால் எனக்கு என் நாக்குமேல் கட்டுப்பாடு இல்லை. முன்பே நான் அப்படித்தான். நான் எதையாவது சொல்லிவிடுவேன்”
“சொல்லப்பட்டவை உண்மை என்றால் எதற்கு கவலைப்படவேண்டும்?
“எவரையாவது நான் புண்படுத்திவிட்டால்?”
“உங்கள் காலகட்டத்தைய முதன்மையான ஆளுமைகள் எவருமே இன்றில்லை. ஆகவே நீங்கள் தைரியமாக சொல்லலாம். வேண்டுமென்றால் அவற்றை இன்னொருமுறை நிதானமாக அமர்ந்து பார்த்து சரிசெய்யலாம். ஏதாவது மீறல் தெரிந்தால் பிரசுரிக்குமுன் வெட்டிவிடலாம். நான் வாக்குறுதி அளிக்கிறேன். உங்களால் ஒப்புக்கொள்ளப்படாத ஒரு வரி கூட நூலில் இடம்பெறாது”
அவர் அப்போதும் தயங்கினார். “கேரள கதகளி உலகின் தலைமகன் நீங்கள். உங்கள் வரலாறு என்பது வெறும் வாழ்க்கைக்கதை அல்ல. கதகளியின் ஒரு நூற்றாண்டின்கதை அது. ஒரு கலைஞனுக்கும் அவன் கலைக்குமான உறவின் கதை”
சொல்லிச்சொல்லித்தான் அவரை கரைக்கவேண்டியிருந்தது. நாங்கள் இதழாளர்கள் சொல்லும் வழக்கமான புகழ்மாலைகளை அவர் பொருட்படுத்தவில்லை. அந்த வயதைக் கடந்துவிட்டிருந்தார். கடைசியில் என் முதன்மை ஆயுதத்தை எடுத்தேன். ‘கியூட்’ ஆன பேரப்பையன். கொஞ்சி குலாவி அடம்பிடித்துப் பேசச்செய்துவிட்டேன்
”இப்படி எல்லாவற்றையும் சொல்வது ஒரு வேடிக்கைதான். கதகளியில் சொல்லியாட்டம் என்று ஒன்று உண்டு. பதம் பாடியபிறகு ஒவ்வொரு சொல்லாக அபிநயம் பிடித்து காட்டுதல். தெரிந்திருக்கும். பலசமயம் பதம் நாலுவரிதான் இருக்கும் சொல்லியாட்டம் நான்கு மணிநேரம் ஓடும். இது ஒரு சொல்லியாட்டம்…” பின்னர் உரக்க சிரித்து “இல்லை கலாசம் சவிட்டா” என்றார். அது கடைசியாக செண்டையின் தாளத்திற்கு ஏற்ப கால்வைத்து ஆடும் விரைவான ஆட்டம், முத்தாய்ப்பு.
நான் “இது ஆட்டக்கதையின் ரஸாபினயம் என்று சொல்லலாமே…” என்றேன் “எங்களுக்கும் இந்த ஆட்டத்தின் கதை முழுமையாக தெரிந்ததுபோல் இருக்கும்”
அவர் சிரித்து “எத்தனை சொன்னாலும் கதையறியாமல் ஆட்டம் காண்பதுதான் இது” என்றார்.
மலையாளத்தில் கதகளி சார்ந்த பழமொழிகளுக்கு அளவே இல்லை. அப்படியே பேசிக்கொண்டே செல்லலாம். ஆனால் அந்தப்பேச்சு அவரை இளகச்செய்தது. சிரிக்கத்தெரிந்த மனிதர். சிரிப்பினூடாகப் பேச்சுக்குள் நுழைந்தார். விரிவாக பேசினார். கதகளியின் முழு வரலாறும் சொற்களில் வந்தன. வெட்டத்துநாட்டு மரபு ,கப்ளிங்காட்டு மரபு, கல்லுவழி மரபு என்று பிரிந்துகிடந்த கதகளியை மகாகவி வள்ளத்தோள் நாராயணமேனன் தேக்கநிலையில் இருந்து மீட்டு ஆலயங்களின் முற்றங்களிலிருந்து அரங்குக்குக் கொண்டுவந்த கதை. கலாமண்டலம் என்னும் மாபெரும் கலைநிறுவனம் உருவான கதை. அந்த மறுமலர்ச்சியுகத்தில் அவரும் உடனிருந்தார்
அப்போதுகூட சககலைஞர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள், அன்றிருந்த கலையுலக அரசியல் எல்லாவற்றையும் சொன்ன அவரால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்லமுடியவில்லை. அவரை நெகிழவைக்க என்னிடம் ஒரு வழி இருந்தது. பழைய புகைப்படங்கள். அவர் மகன் கே.அனந்தகிருஷ்ணன் நாயரும் மகள் கே.ஜானகியம்மாவும் திருவனந்தபுரத்திலும் சென்னையிலும் இருந்தனர். அவர் தன் மருமகனும் கதகளி நடிகருமான ஸ்ரீகிருஷ்ணபுரம் குமாரன்நாயருடன் மாவேலிக்கரையில் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து பழைய புகைப்படங்களை திரட்டினேன்.
அவற்றை அவரிடம் காட்டியபோது அவருடைய மூளைக்குள் எங்கோ ஆழத்தில் உறைந்த விதைகள் முளைத்தெழுந்தன. முகத்தில் புன்னகையும் துயரமும் மாறி மாறி வந்தது. அவர் பேசத்தொடங்கினார். ஆனாலும் அவர் தன் மனைவியைப்பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. அவர் மறைந்து எட்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அவரை மனைவியைப்பற்றி பேசவைக்கவேண்டும் என்றே அன்று காலையை ஒதுக்கியிருந்தேன்.
அவருடைய மனைவி நிலக்குந்நில் சரஸ்வதியம்மாவின் படம் ஒன்றை அவரிடம் காட்டினேன். எண்பது வயதில் அவர் இறப்பதற்கு முன் மாத்ருபூமியின் புகைப்பட நிபுணர் ஜி.மது எடுத்த அழகிய படம். அவருடைய கண்கள் கனிந்தன. சுருக்கங்களில் கண்ணீர் வழிந்தது. கைகளைக் கோத்து மென்மையான விசும்பல்களுடன் அழுதுகொண்டிருந்தார். அவரைப் பார்த்தபடி அவர் மீண்டுவருவதற்காகக் காத்திருந்தேன். முதியவர்கள் மிகச்சீக்கிரத்திலேயே துயரிலிருந்தும் மீள்வார்கள். இன்னும் அதிக நேரமில்லை என்னும் உணர்வு. அதோடு துயரத்திற்குக்கூட கொஞ்சம் உடல்திறன் தேவையாகிறது.
நான் அவர்களின் திருமணப் புகைப்படத்தை காட்டினேன். அவர் திகைத்துவிட்டார். அவர் அதைப் பார்த்து ஐம்பதாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டிருந்தது. அதை நான் கேரளகௌமுதி நாளிதழின் களஞ்சியத்திலிருந்து கண்டுபிடித்திருந்தேன். அதில் வள்ளத்தோள் நாராயணமேனன் அவருக்கு தாலி எடுத்து கொடுத்தார். குரு செங்கன்னூர் அதில் ஒல்லியான இளைஞனாக அவர் அருகே மாப்பிள்ளைத் தோழராக நின்றார்.
அந்த ஒரு புகைப்படத்திலேயே அன்றைய கதகளி நட்சத்திரங்கள், பின்னாளைய தொன்ம மனிதர்கள் பலர் இருந்தனர். செண்டைக்கலைஞர் வாரணாசி மாதவன் நம்பூதிரி, ஹரிப்பாடு ராமகிருஷ்ணபிள்ளை, பெண்வேடங்களில் புகழ்பெற்றவரான குடமாளூர் கருணாகரன் நாயர், மாங்குளம் விஷ்ணு நம்பூதிரி. ஒல்லியாக ஓரமாக நிற்பது கலாமண்டலம் கிருஷ்ணன்நாயர் என்று என்.ஆர்.பாபு சொல்லித்தான் எனக்கே புரிந்தது.
அவர் அந்தப்படத்தை வருடிக்கொண்டே இருந்தார். பின்னர் என்னிடம் புன்னகைத்து “அந்தக்காலத்தில் கதகளி நடிகனுக்கு பெண்கொடுக்க யோசிப்பார்கள்” என்றார்.
“ஏன்?”என்றேன். அவர் பேசத்தொடங்கிவிட்டார் என உணர்ந்தேன்.
“கதகளி மேல் பெரிய மோகம் இருந்தது. கதகளி நடிகனை போற்றினார்கள். ஆனால் கதகளி நடிகன் கலைஞன். கலைஞர்களின் வாழ்க்கைதான் தெரியுமே, அர்ஜுன விஜயம்தான்… எப்படி பெண்கொடுப்பார்கள்?” அவர் சிரித்து “ஆனால் நான் இயல்பால் ராமன். அதை எப்படி எவரிடம் சொல்வது?”
முப்பது வயதாகியது எனக்கு திருமணமாக. இருபது வயதிலிருந்தே அப்பா இரவுபகலாக பெண் தேடினார். என் தம்பிகள் நான்குபேருக்கும் திருமணம் நடந்தது. எங்கே சென்றாலும் கடைசியில் கதகளியில் முட்டி நின்றது பேச்சு. அப்பா சோர்ந்திருந்தார். அப்போது ஒரு இடம் வந்தது. ஏற்கனவே சென்று கேட்டபோது யோசிக்கிறோம் என்று தட்டிக்கழித்தவர்கள், இப்போது அவர்களே வந்தனர். பிடித்திருந்தால் ஆவணிக்குள் நடத்திவிடவேண்டும் என்றனர்.
சித்தப்பா “என்னடா இது, சந்தேகமாக இருக்கிறதே” என்றார்.
“என்ன சந்தேகம், பெண்ணுக்கு கிறுக்கு என்றாலும், கர்ப்பம் என்றாலும் ,வாயோ கண்ணோ இல்லை என்றாலும் சரிதான். பெண் என ஒருத்தி வந்தாலே போதும்” என்றார் அப்பா
நான் பயந்துவிட்டேன். பெண் கிறுக்கோ கர்ப்பமோ ஊனமுற்றவளோதான் என்று நம்பினேன். பெண்ணைப்பார்க்காமல் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றேன். அப்பா அடிக்க வந்தார். வசைபாடினார்.
ஆனால் சந்திரன்மாமா “சரி, போய்த்தான் பார்ப்போமே, அவனும் பார்க்கட்டுமே” என்றார்.
அப்பா ஒப்புக்கொண்டார். ஆனால் பெண்பார்த்தல் ஒரு சடங்குதான், பெண் எப்படி என்றாலும் திருமணம் உறுதி என்று திரும்பத்திரும்பச் சொன்னார். நான் உண்மையைச் சொல்கிறேனே, பெண் எப்படி என்றாலும் ஓரளவு அழகாக இருந்தால் திருமணம்செய்வது என்று நான் முடிவுசெய்திருந்தேன். எனக்கே சலித்துவிட்டிருந்தது.
உண்மையில் பெண்ணுக்கு கர்ப்பம் இருக்கவே வாய்ப்பு என என் மாமன்கள் நினைப்பது தெரிந்தது, ஆவணிக்குள் கல்யாணம் என அவர்கள் ஏன் அடம்பிடிக்கவேண்டும்? ஆவணிக்கு இருபத்தாறுநாட்களே இருந்தன. அத்தனை அவசரமாக எங்கும் திருமணம் நடப்பதில்லை. திருமணச்செலவுக்கு நிலத்தை விற்றோ ஒற்றியோ பாட்டமோ கொடுத்தோ பணம் திரட்டவே சாதாரணமாக ஆறுமாதம் ஆகும்
ஒட்டன் கோவிந்தன் எங்களை அழைத்துச் சென்றார். அக்காலத்தில் பெண்பேசுவது ஒட்டன் என்ற ஒரு தனி சாதி. அது கணியர் சாதியில் ஒரு பிரிவு. அவர்தான் எல்லா ஏற்பாடும். “பேருகேட்ட குடும்பமாக்கும். எட்டு வைக்கோல்போர் கூட்டும் அளவுக்கு வயல் உண்டு… பெண் பத்தாம்கிளாஸ் பாஸாக்கும்” என்று நூறாம்தடவையாகச் சொன்னார் “அவர்கள் நன்றாகச் செய்வார்கள். கேட்டு வாங்கலாம்.நானே பேசுகிறேன்…”
பெண்வீட்டில் எங்களை வரவேற்றபோது அவர்களிடம் எந்த கள்ளமும் தெரியவில்லை. சரஸ்வதியின் வீடு ஆற்றிங்கல், தெரியுமே. ஆற்றிங்கல் பகவதி கோயிலுக்கு மிக அருகே. பெரிய ஓட்டுவீடு. உள்ளே சென்று அமர்ந்தோம். எங்களுக்கு காப்பியும் பலகாரமும் வேலைக்காரிதான் கொண்டுவந்து வைத்தாள். அவள் அப்பா சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவள் மாமா வந்திருந்தார்
“பெண் வரட்டும்” என்று சந்திரன் மாமா சொன்னதும் சரஸ்வதி கையில் ஒரு செம்பில் நீருடன் கூடத்திற்கு வந்தாள். புன்னகையுடன் அதைக் கொண்டுவந்து எங்கள் முன் வைத்தாள். பொற்சரிகையிட்ட முண்டும் நேரியதும் அணிந்து முல்லைமலர் மாலை சூடியிருந்தாள். கழுத்தில் வெள்ளிக்கல் வைத்த நெக்லஸ். மார்பின்மேல் இறங்கிய சரப்பொளி மாலை. காதுகளில் அந்தக்கால கல்வைத்த அல்லிமலர் கம்மல். நெற்றியில் சந்தனக்கோடுக்கு மேல் குங்குமப்புள்ளி. இன்று பார்தததுபோல் இருக்கிறது அவள் முகம். கன்னத்தில் சிவந்த சிறிய பருகூட இப்போது போலத் தெரிகிறது.
சந்திரன் மாமா அவளிடம் “என்னம்மா பெயர்?”என்றார்.
மெல்லியகுரலில் “சரஸ்வதி” என்றாள்.
‘நம்ம பையன் கதகளிக்காரனாக்கும், தெரியுமா?” என்றார்.
“தெரியும்” என்றாள். அவள் உதடுகள் பெரியவை. பின்னாளில் நான் அவற்றை படகு என்பேன். செந்தூரப்படகு என்று கவிதையே எழுதியிருக்கிறேன். மாத்ருபூமியில் வெளிவந்திருக்கிறது. அவள் புன்னகைத்தபோது முகமே சிரிப்பாக மாறியது.
சித்தப்பா அவசரமாக “பையனுக்கு வீட்டில் ஒரு குறைவும் இல்லை. வயலும் வீடும் உண்டு. ஆட்டத்திலும் நல்ல வருமானம். மகாகவி வள்ளத்தோள் நாராயணமேனனுக்கு இவனை நேரில் தெரியும்” என்றார்.
அவள் மீண்டும் புன்னகைத்தாள். அப்படி ஒர் அழகன புன்னகை. குடமாளூர் கருணாகரன் சைரந்திரியாக வந்து பீமனை நோக்கி புன்னகைப்பதைப்போல. நீண்ட கண்கள். அக்கால வழக்கப்படி கெண்டைமீனின் வால்போல நீட்டி மையெழுதியவை.
நான் தவித்துப்போனேன். உண்மையில் மகிழ்ச்சி வரவில்லை. என் உள்ளம் எரிந்தது. இத்தனைபெரிய அழகியை எனக்கு அளிக்கிறார்கள் என்றால் ஏதோ பிழை இருக்கிறது, மிகப்பெரிய பிழை. அந்த பிழைக்குரியவளை அளிக்க ஒரு கதகளிக்காரனை கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அவர்கள் கதகளியைப்பற்றி நினைப்பதுதான் என்ன? என் கலையை கொண்டுவந்து இழிவுபடுத்துகிறேனா? எனக்கு அழுகை வந்தது. அப்படியே எழுந்து வெளியே சென்றுவிடவேண்டும் போலிருந்தது.
அப்போதுதான் அவள் மாமா சொன்னார், அவளுக்கு ஒரு சகோதரி உண்டு என்று. அவர்கள் இரட்டையர். “லக்ஷ்மியை வரச்சொல்லுடி” என்றார்
வந்தது சரஸ்வதியேதான் என்று நினைத்தேன். அதே மலைப்புடன் பார்த்தேன். அவள் புன்னகையும் அதுவேதான்
“இவள் லக்ஷ்மி…மூத்தவள். மூத்தவள் என்று சொன்னால், அப்படி நினைத்துக்கொள்கிறது. இருவருக்கும் ஒரே நட்சத்திரம் ஒரே ஜாதகம்” என்றார் அவள் மாமா
என் இதயம் படபடவென்று அடித்தது. கைகள் வியர்த்தன. அந்தச் சந்தர்ப்பமே புதியதாக இருந்தது நான் துணிவாக நிமிர்ந்து பார்க்கக்கூடிய, பார்த்தாகவேண்டிய ஒருத்தி. அவளுடைய அதே வடிவம் கொண்ட இன்னொருத்தி, ஆனால் நான் விழிதூக்கி பார்க்கக்கூடாது, அது அவமரியாதை
“சரஸ்வதியை வரச்சொல்லு”
சரஸ்வதி வந்து லக்ஷ்மி அருகே நின்றாள். உண்மையில் அவள் ஒரு நிலைக்கண்ணடி முன் நிற்பதுபோலவே இருந்தது
“இதுதான் இப்போது சிக்கல்” என்றார் அவள் அப்பா “இரண்டுபேருக்கும் ஒரே நாளில் ஒரே பந்தலில் திருமணம் செய்யவேண்டும் என்றார்கள். மூத்தவளுக்கு எல்லாம் அமைந்துவிட்டது. இவளுக்கு தட்டித்தட்டிப் போயிற்று. இனிமேலும் நீட்டமுடியாது. கடைசியாக உடைக்கரை நாராயணன் நாயரின் மகன் கருணாகரனுக்கு பேசி முடித்திருந்தோம். முந்தாநாள் வந்து சொல்லிவிட்டார்கள், பையனுக்கு விருப்பம் இல்லை என்று. என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போதுதான் இவளே சொன்னாள், உங்களிடம் கேட்கலாமே என்று”
என் அகம் குளிர்ந்த தொடுகையை உணர்ந்தது. காதுமடல்கள் சூடாயின. கண்களை தாழ்த்திக்கொண்டேன். என்னை அவள் தெரிவுசெய்திருக்கிறாள்
“தங்கைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று லக்ஷ்மிதான் சொன்னாள். நாங்கள் உடனே கோவிந்தனுக்கு சொல்லி அனுப்பிவிட்டோம்”
நான் திடுக்கிட்டு அவர்களை பார்த்தேன். நான்கு கண்கள், அதில் யார் லக்ஷ்மி? என் கண்களை மெல்லிய சிரிப்புடன் பார்ப்பவளா? அவளா என்னை தெரிவுசெய்தாள்? இவள் அல்லவா?
“லக்ஷ்மிக்கு பேசியிருக்கும் பையன் செண்ட்ரல் கவர்மெண்டில் இருக்கிறான். எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர். தெரிந்திருக்கும் ஆதாரமெழுந்து கோவிந்தப்பிள்ளையின் மகன் அச்சுதன்”
“ஆமா தெரியுமே…” என்றார் சந்திரன் மாமா
“அவர்களுக்கு ஆவணியில் நடத்தியாகவேண்டும். பையன் ஜாதகம் அப்படி. ஆவணியில் இல்லையென்றால் மூன்று ஆண்டுகளுக்கு அவனுக்கு கல்யாணம் இல்லையாம். ஆவணியில் முடியாதென்றால் வேறு இடம் பார்க்கிறோம் என்றார்கள்… ஆகவேதான்…”
எனக்கு ஆறுதல் ஏற்பட்டது. உண்மையில் மாமாக்கள் சித்தப்பாக்கள் எல்லாருக்குமே ஆறுதல்தான். அது எனக்கு ஒரு புதையல் கிடைத்ததுபோன்ற நிகழ்வு
மாமா “எங்கள் பாக்கியம்… முடிவுசெய்துவிடுவோம். அவன் அப்பாவிடம் பேசிவிட்டுத்தான் வந்தோம். நிலக்குந்நில் பத்மநாபன் நாயரின் மகள் என்றால் அது சாட்சாத் மகாலக்ஷ்மியேதான் என்றார்” என்றார்
“லக்ஷ்மி இல்லை, சரஸ்வதி”என்றார் பத்மநாபன் நாயர்
அனைவரும் சிரித்தோம். எல்லாம் அப்போதே முடிவாகியது
திரும்பி வரும்போது எல்லாரும் முகம் மலர்ந்திருந்தோம். டாக்ஸியில் பெண்ணின் அழகைப்பற்றியும் அவள் வீட்டின் ஐஸ்வரியத்தைப் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தோம். ஆனால் மனம் சும்மா இருக்காதே. அது ஊசிநுழையும் இடைவெளிகளைத் தேடுமே, விரிசல்களைப் பெரிதாக்குமே.
மாமா “சரி, அவன் ஏன் இவளை வேண்டாம் என்று சொன்னான், அதுவும் கடைசி நேரத்தில்?” என்றான்
“அதுதானே, பெண்ணைப்பார்த்தால் தேவதைபோல இருக்கிறாள்” என்றார் சித்தப்பா
“அந்த மாப்பிள்ளை என்னிடம் சொன்னது வேறு ஒரு விஷயம்… அதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும்” என்றார் கோவிந்தன். “அவனிடம் அவன் நண்பர்கள் கேலி செய்தியிருக்கிறார்கள். இவன் இரண்டு பெண்களையும் மாறிமாறி செய்யலாமே என்று ஒருவன் சொன்னானாம். அந்தப்பெண்ணின் கணவனும் அப்படிச் செய்வானே என்று இன்னொருவன் சொன்னானாம். அவ்வளவுதான்…”
“சேச்சே, என்ன இது… இவன்களுக்கு வித்தியாசம் தெரியாமலிருக்கலாம். அவள்களுக்கு தெரியும்தானே?” என்றார் சந்திரன் மாமா
“அது இந்த சும்பக்கூனன்களுக்கு எங்கே தெரிகிறது? பெண் என்றால் வாய்ப்பு கிடைத்தால் படுத்துவிடுவாள் என்று நினைக்கிறார்கள்”
எனக்கு அந்தப்பேச்சு முதலில் ஒவ்வாமையை அளித்தது. பிறகு யோசிக்க யோசிக்க வேடிக்கையாக இருந்தது. மெய்யாகவே இப்படியெல்லாம் நினைக்கிறார்களா? எனக்கு அந்த ஆளின் முகம் அகத்தில் எழுந்தது. அந்த அப்பாவி முதலில் தனக்கு இரட்டைப்பரிசு என நினைத்திருப்பான். இரண்டுபேரையும் ஆள்வதைப்பற்றி கனவு கண்டிருப்பான். பிறகு ஒரு கட்டத்தில் திக்கென்று இருந்திருக்கும், மற்றவனுக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறதே. அவ்வளவுதான். அவனால் தாளவே முடிந்திருக்காது. ஆனால் அவனால் இதை கடக்கவும் முடியாது. இழந்துவிட்டோமோ என எண்ணி எண்ணி ஏங்குவான். அவன் வாழ்க்கை அழிந்துவிட்டது, அவ்வளவுதான்
திருமணம் நிச்சயமானபின் நான் சரஸ்வதியை மணமேடையில்தான் பார்த்தேன். ஆனால் அவளையே நினைத்து வெட்டவெளியில் அவள் உருவத்தைக் கற்பனைசெய்து பரவசத்தில் அலைந்தேன். வெட்கம் கூச்சம் ஒன்றுமே இல்லை. என்னை சுற்றத்தார் கேலி செய்தனர். என் அம்மா கண்டித்தாள். “என்னமோ கிட்டாதது கிட்டினதுபோல துள்ளாதே… ஊரெல்லாம் சிரிக்கிறார்கள்”
சிரிக்கட்டும். எனக்கு கிடைக்கச் சாத்தியமே இல்லாத பரிசுதான் கிடைத்திருக்கிறது. இந்த நாட்களின் கனவையும் பித்தையும் நான் கொண்டாடியே ஆகவேண்டும். அந்த இனிப்பை அப்படி அனுபவித்தேன். மலைமலையாக சீனியை குவித்துப்போட்டு அதன்மேல் எறும்பைத் தூக்கிப் போட்டதுபோல.
ஆனால் ஒரு கட்டத்தில் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. நான் எவளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்? சரஸ்வதியையா லக்ஷ்மியையா? இரண்டு முகங்களும் உடல்களும் ஒன்றுதானே? சரஸ்வதியின் கன்னத்தில் ஒரு பரு இருந்தது. மிகச்சிறிய பரு. அதுதான் அவள். ஆனால் நான் அவ்வப்போது கற்பனையில் அருகமர்த்தி அணைத்து முத்தமிட்டு புணர்ந்த பெண்ணின் கன்னத்தில் அந்தப் பரு இல்லையே. உண்மையில் நான் பார்க்கவில்லையா? அந்தச் சந்தேகம் என் திளைப்பை அப்படியே அணையச் செய்தது. சஞ்சலமும் கசப்பும் கொண்டவனானேன். தன்வெறுப்பில் ஒருநாள் முழுக்க இருந்தேன்.
ஆனால் அந்த இருளிலிருந்து மெல்ல இன்னொன்று முளைத்தெழுந்தது. மிக அந்தரங்கமானது, ஆகவே இருண்டது. நான் லக்ஷ்மியையும் அவ்வாறே கற்பனையில் அடைந்தேன். அவளுடன் திளைத்தேன். எங்கோ ஒரு புள்ளியில் குற்றவுணர்வு பழகியபோது அந்தத் திளைப்பின் சுவை இல்லாமலாகியது. அதனூடாக மீண்டுவந்தேன். சரஸ்வதியிடம் திரும்பி வந்தபோது எனக்கு அத்தருணம் குற்றவுணர்வால் கறைபட்டதாக இருந்தது. ஆனால் அதுவும் ஒருநாள்தான். மிகவிரைவிலேயே அதையும் கடந்தேன். அவ்வண்ணம் ஒன்றை ஒளித்துவைத்து அவளுடன் இருக்கமுடிந்தது மேலும் அவ்வனுபவத்தைக் கூர்கொள்ளச் செய்தது.
எங்கள் திருமணம் ஆற்றிங்கல்தேவி சன்னிதியில் நடைபெற்றது. அவர்களின் வீட்டுமுற்றத்தில் மாபெரும் பந்தலில் சாப்பாடு. மிகச்சிறப்பான கல்யாணம். பெண்கள் இருவருமே பொற்சரிகை வைத்த வெண்ணிறமான முண்டும்நேரியதும் அணிந்திருந்தனர். தலையில் முல்லைப்பூ மாலைகள். ஒரேபோன்ற அட்டிகைகள், நகைகள். ஒருவருக்கு ஒன்று கூடியோ குறைந்தோ போய்விடக்கூடாது என்று பெற்றோர் அத்தனை கவனம் எடுத்துக்கொண்டார்கள்.
கண்பட்டுவிடப்போகிறது என்று மீனாட்சி அத்தை என்னிடம் சொன்னாள். “தேவி எழுந்தருளியதுபோல இருக்கிறாள் பெண். எல்லாம் உன்னுடைய யோகம் என்று நினைத்துக்கொள்” என்றாள்.
நானும் மகிழ்ச்சியில் தவித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அன்றைய நிலையை நான் பலமுறை நினைவில் மீட்டி வளர்த்து பதிவுசெய்துகொண்டேன். அதைத்தான் இப்போது சொல்கிறேன். இதை இன்றுவரை எவரிடமும் சொன்னதில்லை. இன்றைக்கு சரஸ்வதி, லக்ஷ்மி இருவருமே இல்லை. லக்ஷ்மியின் கணவரும் இல்லை. இன்றைக்கு அனைவருமே தெய்வத்திடம் சென்றுசேர்ந்துவிட்டார்கள். எல்லாமே தெய்வத்திடம் மீள்கின்றன.
தெய்வத்திடம் மீண்டுவிட்டபின் எதுவுமே அசிங்கம்,பாவம் என்று இல்லை. எல்லாமே தெய்வத்தின் வெளிப்பாடுகள்தான். அதைத்தான் பரதசாஸ்திரம் சொல்கிறது. நவரசங்களில் துக்கமும் அச்சமும் குரூரமும் உண்டு. ஆபாசமும் உண்டு. பீபத்ஸம் இல்லாத கதகளி முழுமை அடைவதில்லை. நவரசங்களும் ஈஸ்வரியின் தோற்றங்களே என்கின்றது தேவிபாகவதம். பீபத்ஸரூபிணி என்றே தேவியை ஒரு தோத்திரம் சொல்கிறது.
என்ன சொல்லிக்கொண்டிருந்தேன், அந்த மணமேடை. அங்கே நின்றிருந்தபோது நான் இருவராக பிளந்திருந்தேன். இருவரையுமே மணந்தேன். இரண்டுமுறை மாலைமாற்றினேன். இரண்டுமுறை தாலிகட்டினேன். இருவரையும் தடையின்றி மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன். குற்றவுணர்ச்சியே இல்லை. எந்த தயக்கமும் இல்லை.
அந்த மணமண்டபத்தில்கூட அத்தனை ஆண்களின் மனதும் அவ்வாறுதான் எண்ணிக்கொண்டிருந்தது என்று தெரிந்தது. கழிப்பறை செல்லும்போது ஒரு பேச்சு காதில் விழுந்தது. “ஏன் இரண்டுபேரையும் ஒரே சமயம் கட்டிக்கொடுக்கவேண்டும் தெரியுமா? ஒருத்தி புருஷன்கூட போனால் இன்னொருத்தி என்ன பண்ணுவாள்? அவளுக்குப் பதில் இவள் அவன் படுக்கைக்குப் போய்விட்டாள் என்றால்?ஹஹஹ!” எவரோ வயோதிகரின் பேச்சு.
அன்றுமாலை களைத்திருந்தேன். திருமணச்சடங்குகளின் மிகப்பெரிய அழகே சந்தோஷத்தால் வரும் களைப்பை அன்றுதான் அடையமுடியும் என்பதுதான். அதன்பிறகு குரு செங்ஙன்னூர் தலைமையில் கலாமண்டலத்தில் என்னை முத்ராவல்லஃப பட்டம் தந்து கௌரவித்தபோதும், பிறகு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோதும் தான் அடைந்தேன். மாப்பிள்ளைக்கான அறையில் தனித்திருந்தேன். என்னுடன் அவனும் இருந்தான். லக்ஷ்மியின் கணவன்.
இருவரும் பட்டு ஆடைகளை மாற்றி பருத்தி அணிந்துகொண்டோம். எனக்கு அவன் என்னுடன் அந்த அறையில் இருப்பது ஏனோ தொந்தரவு செய்தது. உடல் பதறிக்கொண்டே இருந்தது. அப்போதுதான் அந்தக் கிழவர் சொன்ன மனநிலையில் இருந்து நான் மீளவே இல்லை என்று தோன்றியது, அவனை நேருக்குநேர் பார்க்க என்னால் முடியவில்லை. அவனும் சற்று நிலையழிந்தவனாக இருந்தான்.
பின்னர் என்னிடம் ஒரு சிகரெட்டை நீட்டி “சிகரெட்?”என்றான்.
“வேண்டாம்” என்றேன்.
“நான் பிடிக்கலாமா?”என்றான்.
“அதனாலென்ன?” என்றேன். அவன் சிகரெட் பற்றவைத்துக்கொண்டான். பின்னர் என்னிடம்
“நீங்கள் கதகளி ஆர்ட்டிஸ்ட் இல்லையா?”என்றான்.
“ஆமாம்” என்றேன்.
“நான் கதகளி ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறேன். புரியவில்லை” என்றான். “எனக்கு அதற்கான பொறுமையும் இல்லை ரசனையும் இல்லை. நானெல்லாம் தினம் ஒரே ஒரு வேடம்தான் போட்டு ஆடுகிறேன். எக்ஸைஸ் ஆபீசர்” என்றான்.
அவன் சிரித்தபோது மிக நெருக்கமானவனாக ஆனான். “நான் இந்த வேலையில் நீடிக்கப்போவதில்லை. ஏதாவது தொழில்செய்யலாம் என நினைக்கிறேன்” என்றான்.
நான் அவனிடம் “என்ன தொழில்?”என்றேன்.
“ஏதாவது… பார்த்துக்கொண்டிருக்கிறேன்… என்னால் இந்த வேலையில் அடங்கிச் சுருள முடியவில்லை. அப்பாவுக்காக வேலைக்குச் சென்றேன். இனி கவலையில்லை”
“ஏன்?” என்றேன்.
“இதோபார், நாமெல்லாம் கல்யாணம் பண்ணும்வரைதான் அப்பாவுக்கு பிள்ளைகள். அதன்பின் நாமும் ஆண்கள் ஆகிவிடுகிறோம். அப்பாக்கள் நம் விஷயத்தில் தலையிடக்கூடாது” என்றான்.
“அதை அப்பாக்கள் புரிந்துகொள்ளவேண்டுமே” என்றேன்
“உன் அப்பாவைப் பார்த்தேன், அவரும் என் அப்பா மாதிரித்தான் என்று தோன்றியது. நம்மை உருவாக்குவதற்கு நீட்டிய குச்சியை இதுவரை மடக்கவில்லை”
நான் வெடித்துச் சிரித்தேன்.அதன்பின் நாங்கள் பேசிப்பேசிச் சிரித்துக்கொண்டே இருந்தோம்.
அன்று உடைந்த தடைதான். பதினொரு வருடங்களுக்கு முன்பு திருவல்லாவில் மறைவது வரை அச்சுதன் நாயருக்கும் எனக்கும் மிகமிக நெருக்கமான நட்பு இருந்தது. முடிந்த இடத்திலெல்லாம் என்னை வந்து பார்ப்பார். பேச ஆரம்பித்தால் சிரித்து சிரித்து மூச்சுதளர்வோம். எனக்கு பரிசோ விருதோ கிடைத்தால் முதல் வாழ்த்து அவரிடமிருந்துதான் வரும். என்னைப்பற்றி வந்த எல்லா நாளிதழ்ச் செய்திகளையும் வெட்டி ஒரு ஃபைல் போட்டு வைத்திருந்தார் என்று அவர் மகள் சாரதா கொண்டுவந்து காட்டினாள். இத்தனைக்கும் அவர் மிகப்பெரிய கோடிஸ்வரர். முந்திரிப்பருப்புச் சக்கரவர்த்தி என்று அவரைச் சொல்வார்கள். உங்களைப்போன்ற இதழாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆனால் அன்றிரவு முதலிரவு அறைக்குள் செல்வதற்கு முன் ஒன்று நிகழ்ந்தது.எதுவும் அப்படி முழுமை அடைய விடாத ஒன்று இந்த பூமியின் சுழற்சியில் உள்ளது. இதன் இயக்குவிசையின் ரகசியமே அதுதானோ என்னவோ. நாராயணக் கணியார் என்பவர் என்னிடம் வந்து பேசினார். அவர் ஒரு சோதிடர், ஆயுர்வேத மருத்துவர். என்னருகே அமர்ந்து தாழ்ந்தகுரலில் “பிள்ளை, உங்களிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும்” என்று ஆரம்பித்தார்.
“சொல்லுங்கள்” என்றேன்
“நீ இப்போது கட்டியிருப்பது இரட்டையர்களில் ஒருத்தியை. இரட்டையர்கள் என்றால் தெரியுமே, ஒரே உடல், ஒரே உள்ளம், உயிர்தான் இரண்டு” என்று அவர் சொன்னார். “அவர்களின் உணர்ச்சிகள் ஒரேபோல இருக்கும். ஒருத்திக்கு கோபம் வந்தால் இன்னொருத்திக்கும் கோபம் வரலாம். காரணமே இல்லாமல் அந்தக்கோபம் வரலாம். ஒருத்திக்கு வரும் காமம் இன்னொருத்திக்கும் வரும்… அதேபோல”
அவர் என்ன சொல்லவருகிறார் என்று எனக்குப் புரிந்தது. நான் கோபத்துடன் “சரஸ்வதிக்கு அச்சுதன் நாயர் மேல் காமம் வரலாம் என்று சொல்லவருகிறீர்கள் இல்லையா?” என்றேன்
“இல்லை, அப்படி இல்லை…”
“வந்தால் வரட்டும்… பரவாயில்லை” என்றேன். “நீங்கள் போகலாம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்”
ஆனால் முதலிரவில் நான் உள்ளூர குழம்பியிருந்தேன். அது எனக்கே தெரியவில்லை. முதலிரவின் பரவசங்கள், கொந்தளிப்புகள் அன்றெல்லாம் மிக ஆழமானவை. அதெல்லாம் இன்று உங்களுக்குப் புரியாது. நான் அதற்கு முன் என் சொந்த அக்கா தங்கைகள் அன்றி எந்தப்பெண்ணிடமும் பேசியதில்லை. ஒர் இளம்பெண்ணை கண்ணோடு கண் நோக்கிப் பேசுவதை என்னால் கற்பனையே செய்ய முடியாது. சரஸ்வதியிடமே ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. நேருக்குநேர் பார்த்ததே இல்லை. ஆனால் ஒரே அறையில் அமர்ந்திருக்கிறோம். ஓர் ஆணும்பெண்ணும் கொள்ளும் மிகநெருக்கமான உறவுக்காக. நாங்கள் அப்படி உறவுகொள்ளப் போவது வெளியே பேசிச்சிரித்துக்கொண்டிருக்கும் அத்தனைபேருக்கும் தெரியும்.
அது ஒருகோணத்தில் விசித்திரமானது என்றும், ஒவ்வாதது என்றும் உங்களைப் போன்றவர்களுக்குத் தோன்றலாம். என்னை பேட்டி எடுத்த ஒரு வெள்ளைக்காரப்பெண் அதை நான் சொன்னதும் அலறிக்கொண்டு எழுந்துவிட்டாள். ஆனால் அதை ஓர் அழகான விஷயமாகவே நான் பார்க்கிறேன். ஓர் ஆணும் பெண்ணும் அப்படி சந்தித்து உடனே மிக நெருக்கமாக ஆகிவிடுவதில் கவித்துவமான ஏதோ ஒன்று இருக்கிறது இல்லையா? இரண்டு மின்சார முனைகள் தொட்டுக்கொள்வதைப்போல? முற்றிலும் புதிய ஒருவரை தொட்டு அணைத்து முத்தமிட்டு உடலிணைந்து அறிவது என்பது ஒருவகையில் ஒருவன் ஒரு புதிய தெய்வத்திற்கு தன் உடலை ஆவேசிப்பதற்காக அளிப்பதுதானே? பழங்காலத்தில் குரங்குகளாக இருந்த மனிதர்கள் அப்படித்தானே இருந்திருப்பார்கள்?
உண்மையில் எனக்கு அது ஓர் அழகான அனுபவம். ஒரு கதகளி நிகழ்வுபோல. முதலில் ஊரெங்கும் முழங்கும் கேளிகொட்டு. அதன்பின் குத்துவிளக்கு ஏற்றப்படுகிறது. ஏழுதிரிகளின் வெளிச்சம். அதன்பின் திரைநோட்டம். பொற்திரை நலுங்குகிறது. வெள்ளிக் கைநகங்கள் வந்து சரிகைவிளிம்பை பிடிக்கின்றன. கிரீடமுனை தெரிகிறது. ஒருகணத்தில் கீற்றென முகம் தெரிந்து மறைகிறது. விழிகளின் துடிப்பு தெரிகிறது. பின் திரைவிலக்கி முழுவடிவம். மெல்ல மெல்ல பதம் ஆடுதல். சிருங்காரம்,கருணம். பூக்களைப் பறித்து மாலையாக கட்டுவதைப்போல. பின்னர் சொல்லியாட்டம். இறுதியாகக் கலாசம். முடிந்தபின் மங்களம்.
அது ஒரு முழுமையான கலையனுபவம். முன்னரே அறிந்த இருவர் என்றால் அது நிகழாது. முன்னரே பேசியிருந்தால்கூட நிகழாது. வடக்கே ருத்ரப்பிரயாகில் அலகநந்தாவும் மந்தாகினியும் ஒன்றாக இணைவதுபோல. ஒருவரை ஒருவர் அப்படித்தான் தெரிந்துகொள்ள முடியும். சரேலென்று எல்லா திரைகளையும் விலக்கி நேருக்குநேர் காணுதல்., ஆவேசமாக ஒன்றாகுதல். ஒவ்வொரு திரையாக விலக்குவதெல்லாம் நாடகம். ஒரு திரையை விலக்க ஒன்பது திரையை போட்டுக்கொள்வார்கள். காதலிப்பவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் வேடமிட்டுக்கொண்டு காட்டுகிறார்கள். பின்னர் அதை கிழித்து ஒருவரை ஒருவர் பார்க்க முயல்கிறார்கள். சரி விடுங்கள், இது எங்கள் காலகட்டத்தின் பார்வை.
நான் சொல்லிவந்தது என்னவென்றால், முதலிரவிலேயே எனக்கு ஒரு சிறுநெருடல் இருந்தது என. அது இந்த வலைப்பின்னலில் தெய்வம் வைக்கும் முடிச்சு என. சரஸ்வதியின் கன்னத்தில் அந்தப் பரு இல்லை. அது மறைந்துவிட்டிருந்தது. ஒருகணம் அது லக்ஷ்மியா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. அது ஒரு கிளுகிளுப்பை அளித்தது. மறுகணம் திக்கென்றது, சரஸ்வதி அங்கே சென்றிருக்கிறாளா? இந்தக் குழப்பத்தை அவளிடம் கேட்கமுடியுமா? அதன்பின் அது எவ்வளவு முட்டாள்தனம் என்று தெரிந்தது, சரஸ்வதிக்கு தெரியாதா என்ன?
ஆனால் முதல்சிலநாட்களில் வெறும் காமத்திலாடிக்கொண்டிருந்தபோது எனக்குள் லக்ஷ்மி இருந்தாள். நான் மாறிமாறி இருவரையும் மானசீகமாக புணர்ந்தேன். இத்தனை வயதுக்குப்பின் அதை நான் சொல்லலாம், என்னை எவராவது வெறுத்தால் அவர்கள் தங்களைத் தாங்களே வெறுக்கிறார்கள் என்று நான் புன்னகைசெய்துகொள்வேன். அனேகமாக இந்த புத்தகம் வெளிவரும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன். மேலே எங்கிருந்தோ சிரிப்பேன். மனிதர்களைப் பார்த்துச் சிரிக்க தேவர்களுக்கு உரிமை உண்டு. இத்தனை மேடைகளில் கதகளிகளில் தெய்வமாக வந்தவன் நான், எனக்கு தேவபதவி கண்டிப்பாக உண்டு. உங்களுக்கு சந்தேகம் இல்லையே?
என் குழப்பம் இதுதான். இவள் கொள்ளும் இந்த உணர்வுகளை, இதற்குரிய இந்த மெய்ப்பாடுகளை அவளும் அடைவாளா என்ன? இந்த விழியிமை சரிதல், உதடுகள் கொதித்து உருகுதல், முகம் சிவந்து அனல்கொள்ளல், மூச்சிரைப்பு, மென்வியர்வை, குழறல்குரல். அல்லது அங்கே அவள்கொண்டவை இங்கு எழுகின்றனவா? நான் இருவராக பிரிந்தேன். அங்கிருந்தேனா, இங்கிருந்தேனா? அது ஒரு அவஸ்தை. இனிமையா கசப்பா என்று பிரித்தறிய முடியாத அலைக்கழிதல்.
பகலில் எங்கேனும் அவளைப் பார்ப்பேன். அது எவர் என உணரமுடியாது. அவள் என்று எண்ணினால் இவள் என்னை நோக்கி விழிசிரிப்பாள். இவள் என எண்ணினால் அவள் என்னை வெற்றுநோக்குடன் இமைசரித்து கடந்துசெல்வாள். ஒவ்வொரு கணமும் அவளைப் பார்க்கையில் எவர் என்றே என் மனம் பதற்றம் கொண்டது. ஏதோ மாயத்தால் அவர்கள் இடம் மாறிவிட்டால் என்ன செய்யமுடியும்? நான் பின்தொடர்ந்து சென்று புறம்புல்கியவள் அவள் என்றால்? கைபற்றி இழுத்தவள் மற்றவள் என முகம் காட்டினால்? முத்தமிட்டுவிட்ட பின் வேறு என்று கண்டடைந்தால்? உண்மையிலேயே அவ்வாறு நடந்ததா? அதை அவர்கள் திறமையாக மறைத்துக்கொண்டார்களா?
எத்தனை கொந்தளிப்பு. அவள் வீட்டில் இரண்டு நாட்கள்தான் இருந்தோம். நான் சரஸ்வதியுடன் என் வீட்டுக்கு வந்துவிட்டேன். வழக்கமாக பெண்வீட்டில் நாற்பத்தொரு நாட்கள் இருக்கும் வழக்கம் உண்டு. இந்தச்சிக்கலை அனைவரும் உணர்ந்திருந்தமையால் தான் உடனே கிளம்பச் சொல்லிவிட்டனர்.
ஆனால் கிளம்பியதுமே நான் ஓர் இழப்புணர்வை அடைந்தேன். இரண்டில் ஒன்றை நழுவவிட்டுவிட்டேன். இனி எனக்கு பாதிதான். ஒருவேளை சிறந்ததே அதுதானோ? என்ன இருந்தாலும் என் கலையை அடையாளம் கண்டுகொண்டவள் அவள். என்னை தெரிவுசெய்தவளும் அவள்தான். நான் ஏக்கம் கொண்டேன். எனக்கு நிழல்தான் கிடைத்திருக்கிறது. என் கையிலிருந்து முதலுருவம் நிரந்தரமாக நழுவிச்சென்றுவிட்டது
இவளுக்கு கலையில் ஆர்வமில்லை. கதகளியை கடைசிவரை இவள் புரிந்துகொள்ளவுமில்லை. என் ஆட்டம் எதற்கும் வந்ததில்லை. வெளிநாட்டுக்கு வந்திருக்கிறாள். ஆட்டம் தொடங்கியதும் அறைக்குச் சென்றுவிடுவாள். கதகளி அவளைப் பொறுத்தவரை என்னுடைய ஒரு அந்தரங்கமான செயல்பாடு. ஆச்சரியம்தான். உலகமே காணும் ஒன்றை அவள் காணவில்லை, அவள் மட்டுமே கண்ட பலவற்றை உலகம் அறியாது.
நான் திருமணமான புதிதில் உரப்புரையில் ஆடி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். வேடம் இல்லாமல் நான் ஆடிக்கொண்டிருந்ததை இவள் வந்து பார்த்தாள். “அய்யே, இது என்ன குரங்காட்டம்?”என்றாள்.
அவ்வளவுதான், பாய்ந்து வந்து முடியைப்பிடித்து அறைந்துவிட்டேன். காலால் உதைத்து இழுத்து வெளியே வீசினேன். கையில் கிடைத்த கழியுடன் அடிக்கப் பாய்ந்த என்னை செண்டை வித்வான் சிவன்பிள்ளை பிடித்து தடுத்தார். அவள் அப்படியே செயலிழந்துவிட்டாள். கண்ணீருடன் வெறித்து பார்த்தபடி விழுந்துகிடந்தாள். வேலைக்காரி குட்டியம்மை அவளை அள்ளித் தூக்கி அழைத்துச்சென்றாள்
இன்று யோசிக்கையில் அதுவும் இயல்பானதே என்று தோன்றுகிறது. ஆண்பெண் உறவில் அதுவும் உண்டு. ஆணவம் உரசிக்கொள்ளுதல், வன்முறை வெளிப்படுதல். அதிகம் தாமதியாமல் அதுவும் வெளியாகவேண்டியதுதான். அதையும் சேர்த்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டியதுதான். எது எல்லை, எது உச்சம் என்று. ஆண் என்றால் என்னவென்று மயக்கங்களும் கற்பனைகளும் இல்லாமல் அவள் அறிந்துகொள்ளவேண்டுமே.
ஆனால் அன்று பதற்றம் அடைந்திருந்தேன். என் ரகசியத்தை நானே வெளிக்காட்டிவிட்டேன் என்று. அவள்மேல் சென்ற சிலநாட்களாகவே நான் ஒவ்வாமை கொண்டிருப்பதை அவள் உணர்ந்திருந்தாளா? அவளிடம் எல்லாவற்றையும் மறைத்து மன்னிப்பு கோரவேண்டும் என்று எண்ணினேன். அன்று நாங்கள் சந்திக்கவில்லை. அடுத்தநாள் இரவு சந்தித்தபோது நான் அவளிடம் கால்தொட்டு கண்ணீர்விட்டு என்னை மன்னிக்கும்படி கோரும் மனநிலையில் இருந்தேன்.
ஆனால் அவ்வாறு நிகழவில்லை. உள்ளே வந்ததுமே அவள் உம்மென்றிருந்தாள். நான் சற்றே பேச்சை எடுத்தேன். “நீ செய்தது தவறு” என்றேன். எனக்கு தேவையாக இருந்தது அதுதான். ஒரு பேச்சுக்காகவாவது அவள் ஆமாம், தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று சொல்லியிருந்தால் அழுதிருப்பேன்.
ஆனால் அவள் என் கண்களைப் பார்த்து “அம்மா அப்போதே சொன்னாள், கதகளிக்காரன் வேண்டாம் என்று. அக்காதான் கேட்கவில்லை” என்றாள். என் மிகமிகப் பலவீனமான இடத்தில் ஆழமாக கத்தியை இறக்கினாள். அதற்குள் அதை அவள் கண்டடைந்திருந்தாள். சொன்னேனே, அதுவும் நல்லதுதான். பெண் என்றால் என்னவென்று எனக்கும் தெரிந்ததே.
ஆனால் நான் கொந்தளித்தேன். “ஆமாம், அவளுக்குத்தான் உண்மை தெரியும். அவள்தான் கலையை அறிந்தவள். அவளுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதனால்தான் என்னை உனக்காகச் சொன்னாள். நீ என்னை அடைவது அவளே அடைவதுபோல என்று நினைத்திருப்பாள். உனக்கு கலை என்றால் என்ன என்று என்ன தெரியும்?” என்றேன். அது அவளை என்ன செய்யும் என எனக்குத்தெரிந்திருந்தது
ஆனால் உடனே அவள் எதிர்வினையாற்றினாள். “ஆமாம், எனக்கு கதகளிக்காரனுடன் வெளியே செல்லமுடியாது என்று தெரியும்.ஒரு சர்க்கார் ஆபீஸருக்கு இருக்கும் மரியாதையில் நூறில் ஒருபங்குகூட முகத்தில் சாயம்பூசி துள்ளுபவனுக்கு இருக்காது” என்றாள்
நான் அவளை அறைந்தேன். அவள் பற்களைக் கடித்துக்கொண்டு என்னை முறைத்துப்பார்த்தாள். நான் அறையை விட்டு வெளியே சென்று இருட்டில் வானை நோக்கி நின்றேன். எல்லா ஆடைகளையும் அவிழ்த்து ஒருவர் முன் ஒருவர் நிர்வாணமாக நின்றுவிட்டோம். ஒன்றும் மிச்சமில்லை. செத்துவிடலாம் போலிருந்தது. அத்தனை கேவலமானவனாக என்னை நான் உணர்ததே இல்லை. இரண்டுநாட்களுக்கு முன்புவரை தெய்வீகமானது என்றும், தூயது என்றும், இனியது என்றும் தெரிந்தவை எல்லாம் சீரழிந்து கிடந்தன. மலச்சாக்கடையில் முல்லைப்பூ மாலை விழுந்துவிட்டதுபோல. எல்லாமே முடிந்துவிட்டது.
ஆனால் அப்படி இல்லை. இரண்டே நாட்களுக்குள் சரியாகிவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம். தொட்டுக்கொண்டோம். அணைத்தோம். உறவுகொண்டோம். இருவரின் அந்தரங்கமும் எல்லைகளும் இருவருக்கும் புரிந்தன. அதன்பின் அவள் கதகளி பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. நான் அவளிடம் பிறகெப்போதும் அதைப்பற்றிப் பேசவில்லை. அவளை நான் கைநீட்டி அடித்தது அதுவே கடைசி.
இதையும் சொல்கிறேனே, முதல்சண்டைதான் உண்மையில் திருமணம் என்பதன் உச்சப்புள்ளி. அவரவர் எல்லையும் இடமும் தீர்மானமாகி விடுகின்றன. எதைக் காட்டவேண்டும், எதை மறைக்கவேண்டும், எவ்வளவு பற்றிக்கொள்ளவேண்டும், எவ்வளவு விட்டுவிடவேண்டும் என்பதெல்லாம் தெளிவாகிவிடுகின்றன
அதன்பின்னரும் என்னிடம் அந்த அலைக்கழிப்பு இருந்ததைச் சொல்லியே ஆகவேண்டும். எங்கோ எனக்குரியவள் காத்திருக்கிறாள், நான் அவளைவிட்டு விலகியிருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன். கிளம்பி சென்று அவளைப் பார்த்தாலென்ன என்று கற்பனைசெய்தேன். அச்சுதன் நாயர் அப்போது கொச்சி துறைமுகத்தில் வேலைபார்த்தார். லக்ஷ்மி அவருடன் அங்கே இருந்தாள். எத்தனை முறை சென்று அவள்முன் நிற்பதை கற்பனை செய்திருப்பேன். விதவிதமான உணர்ச்சி மிக்க தருணங்கள். பகற்கனவுகளுக்கு எல்லை உண்டா என்ன? அதில் ஆணவமும் காமமும் சரியான அளவில் ஒன்றையொன்று ஊக்குவிக்கின்றன. அது ஒரு நுரை
பின்னர் ஒன்று நிகழ்ந்தது. இது 1957ல் நடந்தது. அப்போது எனக்கு வயது முப்பத்தொன்று. நான் கலாமண்டலம் கதகளி யோகத்தில் ஆடிக்கொண்டிருந்தேன். நிளாநதிக்கரையில் வள்ளத்தோள் உருவாக்கிய கலாமண்டலத்தில். அவளையும் அங்கே அழைத்துச்சென்றிருந்தேன். கலாமண்டலத்தில் தம்பதிகள் தங்க இடமில்லை. ஆகவே செறுதுருத்தியிலேயே ஒரு சிறுவீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். அனந்தனை அவள் கருவுற்றிருந்த காலகட்டம். திருவனந்தபுரத்தில் ஒரு கதகளியோகம் உருவாக்கும் எண்ணம் சிலருக்கு வந்தது.என்னை தூதனுப்பி அழைத்தார்கள்
வழக்கமாகவே ஒரு வடக்கு-தெற்கு போராட்டம் கேரளத்தில் உண்டு என்று அறிந்திருப்பீர்கள்.வள்ளத்தோளுக்கு கொஞ்சம் வடக்குப்பாசமும் பெருமிதமும் உண்டு. சில இடங்களில் அவர் அதைச் சொன்னதும் உண்டு. கவித்ரயம் என்று புகழ்பெற்ற மூன்று கவிஞர்களில் குமாரன் ஆசான், உள்ளூர் பரமேஸ்வர அய்யர் இருவருமே தெற்கத்தியர்கள். ஆகவே அதில் ஒரு பெருமை தெற்கே இருந்தது. கதகளியை வள்ளத்தோள் வடக்கே கடத்திக்கொண்டு சென்றுவிட்டார் என்றார்கள். கலாமண்டலம் புகழ்பெற்று கதகளியின் தலைமையிடமாகவே ஆனபோது அந்த மையத்தை உடைத்தாகவேண்டும் என்ற திட்டம் உருவாகியது. ஏனென்றால் அதற்கு முன்பு இருந்த கதகளியின் மூன்று மரபுகளுமே தெற்குக் கேரளத்தைச் சேர்ந்தவை
இங்கே அதற்கு முன்கை எடுத்தவர்கள் எல்லாருமே பெரியமனிதர்கள். பணத்திற்குக் குறைவில்லை. மகாராஜாவே அதற்கு தலைமை வகித்தார். குரு குஞ்சுக்குறுப்பு தலைமையில் திறமை வாய்ந்த கதகளிக்காரர்களின் சங்கமும் உருவாகியது. மாவேலிக்கரை அச்சுதன்நாயர், சங்ஙனாச்சேரி அனந்தன் நாயர் போன்ற பெரிய ஆட்டக்காரர்கள் அதில் இருந்தனர். ஆனாலும் அவர்களுக்குப் போதவில்லை. வள்ளத்தோளின் காலடியிலிருந்தே ஒரு செங்கல்லை உருவவேண்டும் என்று விரும்பினார்கள். ஓரிருவர் அப்படி விட்டுவந்தால் வள்ளத்தோள் நிலைகுலைவார் என எதிர்பார்த்தார்கள். நான் பிறப்பால் தெற்கன், ஆகவே என்னை அணுகினார்கள்
நான் அங்கே அப்போது பத்துப்பதினைந்து இடங்களுக்கு கீழே இருந்தேன். எனக்கு மேலே இருந்தவர்கள் எல்லாருமே மிகப்பெரியவர்கள். அத்தனை கொம்பன் யானைகளையும் குத்தி விலக்கினால்தான் என்னால் வழி உருவாக்கி மேலே செல்லமுடியும். பணமும் அன்றைக்கு பெரிதாக இல்லை. வள்ளத்தோளே நன்கொடைகளுக்காக ஓடி அலைந்த காலம். இவர்கள் எனக்கு அங்கே நான் வாங்கிக்கொண்டிருந்ததைப்போல இருபது மடங்கு பணம் தருவதாகச் சொன்னார்கள், ஆம், இருபது மடங்கு. அதோடு என்னை முதன்மை ஆட்டக்காரனாக நிறுத்துவதாகவும் சொன்னார்கள்
சொல்வதற்கென்ன, நான் முடிவுசெய்துவிட்டேன். கிளம்பவிருப்பதை வள்ளத்தோளிடம் சொல்லவேண்டும். அவருடைய நிமிர்வு எனக்குத்தெரியும், என்னை வற்புறுத்த மாட்டார். வருந்தினாலும் அது வெளியே தெரியாது. யானையின் வலி அதன் கண்ணில் மட்டுமே தெரியும் என்பார்கள். சொல்வதற்கு முந்தையநாள் இயல்பாக சரஸ்வதியிடம் நாம் நாளையோ மறுநாளோ கிளம்பவேண்டும் என்றேன். ஏன் என்று கேட்டாள். எல்லாவற்றையும் சொன்னேன்
உண்மையில் அவள் மகிழ்ச்சி அடைவாள் என்று நினைத்தேன். திருவனந்தபுரம் வந்தால் அவளுடைய வீட்டுக்கு வாரமொருமுறை செல்லலாம். ஏன் அங்கேயே அம்மாவுடன் தங்கக்கூடச் செய்யலாம். கருவுற்றதிலிருந்தே அவள் தனிமையை உணர்ந்துகொண்டிருந்தாள், அவ்வப்போது கடுமையான பயத்தையும் அடைந்துகொண்டிருந்தாள். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. அவள் புருவங்கள் சுருங்கியிருந்தன. கண்கள் தழைந்திருந்தன
“என்ன?” என்றேன்
“அவரிடம் சொல்லிவிட்டீர்களா?”
“இல்லை”
“சொல்லவேண்டாம்”
“என்ன சொல்கிறாய்?”
“சொல்லக்கூடாது, அவ்வளவுதான்”
“ஏன்?”
“குருசாபம் வேண்டாம்… என் பிள்ளைகளுக்கு அது வந்துசேரும்”
“இதோபார்”
“வேண்டாம்!”
அந்த கண், அந்த முகம், அந்த தோரணை. எந்த ஆணும் மறுசொல் சொல்லமுடியாது. நான் மறுநாளே திருவனந்தபுரத்திற்கு கடிதம் எழுதிவிட்டேன், என்னால் வரமுடியாது, என் குருவுடன் இருப்பேன் என்று. அதைப்பற்றி ஒரே வார்த்தையில் அவளிடம் சொன்னேன். அவள் தலையசைத்தாள். பிறகு பேசிக்கொள்ளவே இல்லை
அடுத்த ஆண்டே வள்ளத்தோள் மறைந்தார். அவர் இறந்த அன்று நான் குழந்தைபோல அவள் மடியில் விழுந்து அழுதேன். “என் காவல்தெய்வமே, நீ இல்லாவிட்டால் இன்றைக்கு நான் சங்கறுத்துக்கொண்டு செத்திருப்பேனே” என்று கதறினேன். என்னை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்
அதன்பின் அவள் என் மனதில் மாறத்தொடங்கினாள். அது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. எனக்குள் சரஸ்வதி மட்டும்தான். அவளுக்கு சமானமாகவோ மாற்றாகவோ எவருமில்லை. அவள் மட்டுமே. மற்றவளின் முகம் அவ்வப்போது நினைவுக்கு வரும். அதை ஒவ்வாமையுடன் கோபத்துடன் தள்ளி விலக்குவேன். மெல்லமெல்ல லக்ஷ்மி மேல் ஒரு அருவருப்பையே உருவாக்கிக்கொண்டேன். எதையும் உருவாக்கிக் கொண்டால் வளர்க்கலாம்.வளரத்தொடங்கினால் கட்டின்றி பெருகும்
அதன்பின் பல குடும்ப நிகழ்ச்சிகளில் நான் லக்ஷ்மியை பார்த்தேன். ஒவ்வொருமுறையும் அவளிடம் இவளிடமில்லாத ஒரு வேறுபாட்டை கண்டுபிடித்தேன். ஒரு சிறிய உடல்வேறுபாடு. சிறிய அசைவு. பார்வையின் ஒரு மாற்றம். குரலில் வேறு தொனி. அவ்வாறு கண்டுபிடித்துக் கண்டுபிடித்து பெருக்கிக்கொண்டே இருந்தேன். அவளில் இல்லாத ஒவ்வொன்றாக சரஸ்வதியில் கண்டுபிடித்தேன். அவ்வாறு கண்டடைவதே அவளை அடைவதாக இருந்தது
இப்போது எண்ணும்போது ஒற்றைப் பேரலைபோல அவளுடைய பிம்பங்கள் வந்து என் மேல் அறைகின்றன பேசும்போது அவ்வப்போது நாக்கைக் கடித்துக்கொள்ளுதல் எதையாவது நினைவுறும்போது புருவத்தை தூக்கிக்கொள்ளுதல் சுட்டுவிரலால் காற்றில் சுழித்து எதையோ எழுதிக்கொள்ளுதல் கூந்தலிழையை காதுக்குப்பின் செருகும்போது தலையை சற்றே சரித்தல். அப்படி எத்தனை தனித்தன்மைகள். இன்றைக்கு இந்த முதுமையில் எண்ணிப்பார்க்கையில் இன்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது.பெண்ணழ்கைச் சொல்லிச்சொல்லி ஆதிசங்கரனுக்கே சொல் போதவில்லை.
அவள் சமையலறையில் எடுக்கவிருக்கும் ஒவ்வொரு பொருளையும் சுட்டுவிரலால் தொடுவாள். அந்தபெயரை உதடுக்குள் சொல்லிக்கொள்வாள். அஃறிணைப்பொருட்களுடன் பேசும் வழக்கம் அவளுக்கு உண்டு. அவியலிடம் “அப்படிவா வழிக்கு… மசியமாட்டாயா?” என்பாள். “எங்கே போய் தொலைந்தாய்? கையில் சிக்கினால் இன்றைக்கு உனக்கு இருக்கிறது” என அவள் சொல்வது அகப்பையிடம். புடவைகளை ஒவ்வொன்றாக எடுத்து தோளிலிட்டு கண்ணாடியில் பலமுறை பார்ப்பாள். “எப்படி இருக்கிறது?” என தனக்குத்தானே கேட்டுக்கொள்வாள். ஐம்பது புடவையை எடுத்துப்பர்க்காமல் ஒன்றை அவளால் தேர்ந்தெடுக்க முடியாது.
வெளியே செல்லும்போது பலமுறை செருப்பை போடுவாள். செருப்பில் கால்நுழைத்த பிறகுதான் ஏதாவது மறந்திருப்பது நினைவுக்கு வரும். யோசிக்கும்போது காகிதத்தில் முட்டைமுட்டையாக போடுவாள். அவள் எழுதிய கடிதங்களிலெல்லாம் அந்த முட்டைகள் கடைசியாக இருக்கும். அவளால் நீளமான கடிதங்கள் எழுத முடியாது.சுருக்கமான செய்திகள் மட்டும்தான்.நான் அந்த முட்டைகளில்தான் அவள் என்னிடம் நிறைய சொல்வதாக நினைத்துக்கொள்வேன். பேசும்போது நடுநடுவே ஆமோதிப்பதுபோல் ம்ம்ம் என்பாள். அந்த முட்டைகளும் ஒருவகை ம்ம்ம் கள்தான்.
நகைகள் மேல் மோகம் உண்டு. ஒவ்வொரு நகையாக வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கையில் முகம் மோகினி போல் இருக்கும். நகைகள் என்பவை பெண்மையின் உலோக வடிவங்கள். வளைவுகள், செதுக்குகள், நுட்பங்கள். நகைகளை முதலில் செய்தவன் பெண்ணை நன்கறிந்தவன். அவளுக்கு இனிப்பு பிடிக்காது, ஆனால் மாம்பழம் மேல் பித்து. திருவனந்தபுரம் பத்மநாபசாமிகோயில் பிடிக்காது, காந்தளூர் மகாதேவர் கோயில் மிகமிகப் பிடிக்கும். எத்தனை எத்தனை… பார்க்கப்பார்க்க பெருகிப்பெருகி அவளென்றே ஆனவை. ஒவ்வொன்றும் அவளில் ஒரு துளி. ஒவ்வொரு துளியும் முழுமையாகவே அவள்.
பிள்ளை பிறந்தபின் அவள் மற்றொருத்தியானாள். அன்னைமட்டுமே ஆனாள். வெறிகொண்ட அன்னை, அடுத்த குழந்தை பிறந்தபின் வெறியடங்கிய சற்றே சலித்த அன்னை. அதன் பின்னர் அவர்கள் வளரவளர கவலையே உருவான அன்னை. அவர்கள் வளர்ந்தபின்னர் கொஞ்சம் விலகிய அன்னை. அனைத்தையும் மன்னிப்பவள், ஏற்றுக்கொள்பவள். பின்னர் பிள்ளைகளிடமிருந்து விலகி என்னிடம் மீண்டும் வந்துசேர்ந்தாள். அதைத்தான் இரண்டாம் தேனிலவு என்கிறார்களே… என்னுடன் அவள் ஐம்பதாண்டுக்காலம் வாழ்ந்தாள். ஐம்பது ஆண்டுகளில் என்னென்னவோ நிகழ்ந்தன. பிள்ளைகளின் திருமணம், பேரப்பிள்ளைகள். இன்பங்கள் கூடவே சேர்ந்து அழுத துன்பங்கள். அவ்வப்போது எழுந்து பின்னர் மறைந்த கசப்புகள்.
நிறையச் சொல்லிவிட்டேன். நான் சொல்லவருவது வேறு என நினைக்கிறேன். பின்பு நான் லக்ஷ்மியை பார்க்கையில் சரஸ்வதிக்கும் லக்ஷ்மிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதைக் கண்டேன். முற்றாகவே அவர்கள் வேறு வேறு. அனந்தனின் திருமணத்தில் அவர்கள் அருகருகே நின்றிருக்கும் படம் இருக்கிறது. சம்பந்தமே இல்லாத இருவர் என்றுதான் எனக்கு தோன்றியது.
சரஸ்வதி இறந்தபோது நான் அனந்தனின் வீட்டில் இருந்தேன். பன்னிரண்டு நாட்கள் அவள் ஆஸ்பத்திரியில் இருந்தாள். அனந்தன் அங்கே அவளுடன் இருந்தான். அவன் ஃபோனில் சொல்ல அவன் மனைவி கார்த்திகா என்னிடம் வந்து சொன்னாள். அவள் வரும்போதே எனக்கு தெரிந்துவிட்டது. உண்மையில் நான் அதை பன்னிரண்டு நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். என்னிடம் மிகமெல்ல அதைச் சொல்லவேண்டும் என்றும் எனக்கு அதிர்ச்சிகள் வந்துவிடக்கூடாது என்றும் அவள் நினைத்திருந்தாள். ஆனால் எனக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. “அப்படியா?”என்று மட்டும் கேட்டேன்.
அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, கூடவே ஆறுதலாகவும். எல்லா சடங்குகளிலும் நான் இருந்தேன். பெரிய களைப்பைத்தான் உணர்ந்தேன். உடல்களைப்பு அல்ல. காலம் ஒரு களைப்பை அளிக்கிறது. அது இளைஞர்களுக்கு புரியாது. காலம் ஒரு எடை. அது உடல் நலியாமல் நமக்குத் தெரியாது. நான் வீட்டில் எதையுமே உள்வாங்காதவனாக வெறுமே அமர்ந்திருந்தேன். என்னிடம் வந்து துக்கம் கேட்டார்கள், விடைபெற்றுக்கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் நான் ஒரே வகையான முகத்தை காட்டி, ஒரேவகையான சொற்களைச் சொன்னேன். “அப்படியா? சரிசரி. பார்ப்போம். சந்தோஷம்!” சந்தோஷமா? ஆமாம், வெறும் சொல் அது.
சரஸ்வதி மறைந்த செய்திகேட்டதும் லக்ஷ்மி வந்திருந்தாள். அவளும் பலமாதங்களாக நோயுற்று அவ்வப்போது ஆஸ்பத்திரியில்தான் இருந்தாள். ஆனால் வந்தாகவேண்டும் என அடம்பிடித்தாள். ஆகவே காரிலேயே படுக்கவைத்து கூட்டிவந்தனர். அச்சுதன் நாயர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டிருந்தார். அதிலிருந்தே லக்ஷ்மி சோர்ந்து தனிமையில்தான் இருந்தாள். சகோதரிகளிடையே இருபது முப்பதாண்டுகளாகவே பெரிய பேச்சுவார்த்தையெல்லாம் கிடையாது. தேவையென்றால் போனில் பேசிக்கொள்வார்கள். நேரில் சந்தித்தால்கூட ஓரிரு வார்த்தைகளுக்குப்பின் ஒன்றும் சொல்வதற்கு இருக்காது. அருகருகே சும்மா அமர்ந்திருப்பார்கள்.அவர்களும் ஒருவருக்கொருவர் சலித்திருந்திருக்கலாம். அவர்களை புன்னகைக்கச் செய்ய பேரப்பிள்ளைகளால் மட்டுமே முடிந்தது.
சடங்குகள் முடிந்து மறுநாள் லக்ஷ்மி தன் மகள்களுடனும் மகனுடனும் கிளம்பிச் சென்றாள். செல்வதற்கு முன் என்னை வந்து பார்த்து விடைபெற்றாள். “வருகிறேன், இனி பார்ப்போம் என்று தோன்றவில்லை” என்றாள். நான் “ஈஸ்வரஹிதம்” என்று மட்டும் சொன்னேன். அவள் கிளம்பிச் சென்றாள். களைத்து தளர்ந்த கிழவி. பேரனின் தோளைப்பிடித்தபடி குனிந்து தள்ளாடி காரை நோக்கிச் சென்றாள். அவள் எவரென்றே எனக்குத் தெரியாதென்று தோன்றியது.அவள் அதன்பின் எட்டுமாதங்கள்தான் இருந்தாள். அவள் சாவுக்கு நான் செல்லவில்லை.
சரஸ்வதியின் சாவின்போது எனக்கு எந்த உணர்வுகளும் இருக்கவில்லை. இயல்பாக இருந்தேன். நன்றாக சாப்பிட்டேன். வழக்கமான மாத்திரைகளை போட்டுக்கொண்டு நன்றாகவே தூங்கினேன். ஆனால் அத்தனைபேரும் கிளம்பிச்சென்றபின் நான் வீட்டில் தனியாக ஆனபோது ஒருநாள் தற்செயலாக நிகழ்வதுபோல ஓர் எண்ணம் வந்தது, சரஸ்வதி என்னுடன் இல்லை. நெஞ்சை ஒரு கை பிடித்து அப்படியே கசக்குவதுபோல. மாரடைப்பே வந்துவிட்டது என நினைத்தேன். வியர்த்து கண்கள் மங்கலாகி அப்படியே அமர்ந்திருந்தேன். மீண்டுவந்தபின்னரும் நெஞ்சு அடித்துக்கொண்டது.
அதன்பின் தூக்கமே இல்லை. இரவும் பகலும் நிலைகொள்ளாமை. கைகள் பதறிக்கொண்டே இருந்தன. நாக்கு உள்ளே இழுத்துக்கொண்டதுபோல. நெஞ்சுக்குள் தூக்கமுடியாதபடி பாரம். மாத்திரையை கூட்டித்தரும்படி டாக்டரிடம் சொன்னேன். மாத்திரைகள் இரண்டுமணி நேரம் தூங்கவைத்தன. விழித்துக்கொண்டால் மீண்டும் அதே படபடப்பு. அதை ஒருசமயம் மூச்சுத்திணறலாக, இன்னொருசமயம் கடுமையான தாகமாக ,இன்னொரு சமயம் சிறுநீர் முட்டலாக, இன்னொரு சமயம் கடுமையான புழுக்கமாக உணர்ந்தேன். எல்லாமே பொய்யானவை
ஐந்தாறுநாட்களுக்குப்பின் பதற்றம் அடங்கியது. ஆனால் அதைவிட பெரிய வெறுமைக்கும் ஏக்கத்திற்கும் கொண்டுசென்றது. வெறுமை என்றால் என்னவென்று சொல்ல? நீங்கள் ஐம்பது ஆண்டுக்காலம் சேர்த்துவைத்த செல்வமெல்லாம் ஒட்டுமொத்தமாக இல்லாமலானால் உங்களுக்கு ஏற்படும் முதல் ஒருமணிநேர அர்த்தமின்மையுணர்வு இருக்கிறதே அது அப்படியே நாட்கணக்காக குன்றாமல் நீடித்தால் எப்படி இருக்கும்? அதுதான்.
அப்போதுதான் ஒருநாள் தற்செயலாக பழைய ஆல்பம் ஒன்றை பார்த்தேன். ஜானகியின் மகள் பிரதீபா அவளுடைய ஆல்பத்தில் ஒட்டிவைத்திருந்தாள். பழைமையான கறுப்புவெள்ளை புகைப்படம். சற்றே காவியடித்தது. 1954,ஜனவரி 18 ஆம் தேதியில் எடுத்தது. திருவனந்தபுரம் மினர்வா ஸ்டுடியோவின் எம்ப்ளம் இருந்தது. அதில் சரஸ்வதியும் லக்ஷ்மியும் அருகருகே ஒரே போல சரிகைமுண்டு உடுத்து மல்லிகைமாலை தலையில் சூடி நின்றிருந்தனர். ஒருத்தி இன்னொருத்தியின் தோளை தழுவியிருந்தாள். நாணத்துடன் சிரித்தபடி காமிராவை பார்த்தனர்.
இருவரில் எவர் சரஸ்வதி என கண்டுபிடிக்கவே முடியவில்லை. இருவரும் ஒரேமுகமும் சிரிப்பும் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு முன், எங்களால் தொடப்படுவதற்கு முன், அவர்கள் ஒருவராகவே இருந்தனர். அந்த இரு சிரிப்புகளையும் பார்த்துக்கொண்டே நெடுநேரம் இருந்தேன். என் முகம் என்னையறியாமலேயே மலர்ந்துவிட்டிருந்தது. அன்று நான் எல்லா வெறுமையில் இருந்தும் விடுபட்டேன். என் பழைய கதகளிச் சமையங்களை சென்று எடுத்துப் பார்த்தேன். சலங்கையை காலில் கட்டிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தபடி மெல்ல தட்டிப்பார்த்தேன்.
***