வருக்கை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
வருக்கை கதையை இந்த வரிசைக் கதைகளில் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் கண்டவரை ஒரு சின்ன விஷயம் அதில் உள்ளது. அதவாது பெண்களின் மனம். பெண்கள் ஏன் கள்ளன்களால் கவரப்படுகிறார்கள்? அது ஒரு அடிப்படையான உயிரின் இயல்புதானா? ஏனென்றால் இப்படி பெண்களைக் கவர்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எவருமே பெரிய உடல்வலிமை உடையவர்கள் அல்ல. அவர்கள் மூளைக்கூர்மைகொண்டவர்கள். நகைச்சுவையாக அதை வெளிப்படுத்துபவர்கள். நன்றாகப் பேசுபவர்கள்
பேசிப்பேசியே ஒருவன் தன்னை சுல்தானாக பெண்கள் முன் நிறுத்தமுடியும் என உங்கள் கதையில் ஒரு கதாபாத்திரம் முன்பு ஒருமுறை கூறியது. இங்கே காளைமாணிக்கம்தான் ஆற்றல்மிக்கவன். காளை என்ற அடைமொழி கொண்டவன். ஆனால் கள்ளன் கூர்மையானவன். காளையை கள்ளன் வெல்கிறான். இதுதான் கதை. உடலை மூளை வெல்கிறது
எஸ்.கண்ணன்
வருக்கை சிறுகதை ஆனையில்லாவைத் தொடர்ந்து மிகவும் ஜாலியான கதை “வருக்கை”. அந்தக் கால டி.ஆர். ராஜகுமாரி மற்றும் டி.ஆர் மகாலிங்கம் பற்றியெல்லாம் கூறுவதிலிருந்து கதையின் காலம் தெரிகிறது. கிராமங்களில் முடிவெட்டும் கடைகளில் பேசப்படும் வம்புகள் மிகச்சுவாரசியமானவை. கதை அதை நன்கு சொல்லிச் செல்கிறது.
தங்கன் மிகவும் யதார்த்தமான பாத்திரம். தன் திருட்டுத்தனத்திற்கு அவன் பைபிளையும் ஏசுவின் பிரசங்கத்தையும் சாட்சிக்கு அழைப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. காணாமல் போன ஆட்டுக்கு அவன் கொடுக்கும் விளக்கமும் நம்பக்கூடிய அளவிற்கு இருப்பது அக்கள்ளனின் பேச்சுச்சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. ஏசுவையும் பைபிளையும் இப்படி ஒரு கள்ளன் தன் பக்கம் இழுப்பது வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கொடுப்பது போலாகிவிடும்.
போதாதற்கு பாஸ்டர் தவளை மாதிரி கூவுகிறார் என்னும் உவமை வேறு. தொடக்கத்தில் வரும் ஒய்.விஜயாவின் வடையும், இந்திரனின் சாமானும் கதை எப்படிப் போகும் எனக் கோடிட்டுக் காடுவதாக நான் நினைக்கிறேன். அதேபோல மறைமுகமாக கோமதி—கள்ளன் உறவு சொல்லப்படுகிறது. கள்ளன் என்று சொன்னதுமே அவள் முகம் சிவப்பதும் அவள் போணியை முகர்ந்து மணம் பிடிப்பது கள்ளனையே முகர்வதைப் போல் நினைக்கிறாள் என்றும் ஊகிக்க முடிகிறது.
ஆனால் கதைசொல்லிக்கும் கோமதியக்காவைப் பிடிக்கும்; கோமதியக்காவுக்கும் கதைசொல்லியைப் பிடிக்கும் என்பதிலிருந்து இன்னும் வாசகன் நிறைய ஊகிக்கலாம்.
வளவ துரையன்
எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
அன்புள்ள ஜெ
எம்.கே எடுக்கும் அந்த முடிவு , ஏனோ மிகவும் மனதைத் தொந்தரவு செய்தது. என்னுடைய தாத்தா கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமை குழுவில் இருந்தவர். ஒரு காலத்தில் அவருடைய கம்பீரம், தன் குடும்ப நலன்கள் அனைத்தையும் துறந்து அவர் வாழும் இந்த சாகச வாழ்க்கை எல்லாமே எங்களைப் பெரிதும் கவர்ந்தவை. இன்று அவர் ஒரு முதியவர், முதுமை தரும் அனைத்து சிக்கல்களும் அவருக்கு இருக்கிறது. அனைத்தையும் எல்லோருக்கும் தரும் பெரும் உள்ளம் கொண்டவர்.
சமீபத்தில் ஒரு முறை தன்னுடைய பேரனுக்கு மட்டும் பத்திரமாகத் தான் வாங்கிவந்த தின் பண்டங்களைக் கறந்து வைத்து இறந்ததை பற்றி அம்மா ஒரு முறை சொன்னாள். நாம் நாயகர்களாகக் கண்டவர்களை முதுமையும் காலமும் எத்தனை சிதைத்து விடுகிறது. எம். கே இதைத் தான் பயந்தாரா, காலத்தால் முதுமையால் எச்சம் இல்லாமல் தோற்க அடிக்கப்படுவதை. இந்த களம், அறிவுஜீவிகள் அடையும் இந்நரகம், உங்கள் படைப்புகளில் என்றும் இருக்கும் ஒரு அச்சம், வெறும் முள் போலப் பல இடங்களில் இது வருகிறது,
வெண்முரசில் விதுரன் கடைசியில் வந்து சேரும் இடம் , அறிவு யோகமாக ஆகாது போகும் போது மனிதர்கள் கொள்ளும் வெறுமை. இந்த கதையில் எம்.கே அதை தன் இறப்பால் வெல்கிறார்.
அசோக் சாம்ராட்.
அன்புள்ள ஜெ..
எண்ண எண்ண குறைவது கதை எனக்கு நெருக்கமான கதையாக தோன்றியது
நத்தம் போலும் கேடும் என்ற குறள் மீதான என் ஈடுபாடும் வினோபா மீதான சின்ன வயது அறிமுகமும் எனக்கு இந்த கதை உணர்வுப்பூர்வமான நெருக்கமான உணர்வை அளித்தது.
ஒருவேளை , இந்த அம்சங்கள் இல்லாமல் , வெற்று மனதுடன்,படித்திருந்தால் வேறொரு புரிதலை அளித்திருக்குமோ என்னவோ ;
http://www.pichaikaaran.com/2020/03/blog-post_23.html?m=1
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்