மொழி,துளி- கடிதங்கள்

துளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

நீண்ட காலத்திற்குப் பின் தமிழிலே வாசிக்கிறேன். இணையத்தில் மேய்வதுண்டு, கதை என்று எதையும் வாசிப்பதில்லை. ஆங்கில வாசிப்பு உண்டு. இந்த ஓய்வில் உங்கள் கதையை வாசிக்க நேர்ந்தது. துளி ஓர் அற்புதமான கதை.

 

இந்தக் கட்டுரையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். மிருகங்களுக்கும் மொழிகள் உண்டு என்று இந்தக்கட்டுரை சொல்கிறது. மிருகங்களின் மொழியை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அவற்றுடன் பேசமுடியும். மொழி, மனிதர்களுக்கு மட்டுமானதல்ல!: ஏவா மேய்யர் நேர்காணல்

 

இன்றைக்கு அப்படி மிருகங்களுடன் பேசுபவர்கள் ஒருசாரார் மட்டும்தான். அவர்கள் மிருகங்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள். அவர்கள் மிருகபாஷையை சப்ஜெக்டிவாக புரிந்துகொள்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் அப்ஜெக்டீவாக மிருகங்களைப் புரிந்துகொள்ளும் காலம் வரும்

 

துளிகதையில் அந்த நாயும் யானைகளும் அந்த கிராமத்தின் டெக்ஸ்சருக்குள் கலந்துவிட்டன. ஆகவே அவற்றுக்கு அந்தக் கிராமம் புரிகிறது. அவர்களுக்கு அந்த மிருகங்களையும் புரிகிறது. யானை நாய் இரண்டின் பழக்கவழக்கங்களையும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்

 

உண்மையிலேயே நாய்களுக்கு யானைகளுடன் நல்ல நெருக்கமான உறவு உருவாகும். ஆப்ரிக்க காட்டில் பலமுறை பதிவாகியிருக்கிறது. பொதுவாக மந்தையாக வாழும் விலங்குகள் ஒன்றையொன்று புரிந்துகொள்வது எளிது. நாய்களுக்கு மாடுகள், குதிரைகளுடன் நல்ல புரிதல் உண்டு. ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்களை அமெரிக்காவின் ரேஞ்ச்களிலே பார்க்கலாம். நாய் அப்படி யோசித்து திட்டமிட்டு மாடுகளை மேய்ப்ப்பதை நான் கண்டிருக்கிறேன்.

 

நாய் மாடுகளுக்கு மூத்திரத்தால் முத்திரை போட்டுவிடும். மந்தையிலிருந்து விலகிச்செல்லும் டெண்டென்ஸி உள்ள மாடுகளுக்கு மூத்திரத்தால் சீல் வைத்துவிடும். சண்டைபோடும் மாடுகளுக்கு நடுவே சமாதானம் செய்து வைக்கும். அதன் வழி இரண்டு மாடுகள்மேலும் மூத்திரம் அடிப்பதுதான். ஒரே மணம் என்று சொல்லுகிறது. மாடுகள் சமாதானமாகிவிடும்.

 

நுட்பமான செய்திகளால் ஆன அழகான கதை. ஒரு முழு ஈக்கோ பேலன்ஸ்ட் வில்லேஜ் என்று தோன்றியது

 

அருண் மகாதேவன்

 

அன்புள்ள ஜெ

 

துளி கதையில் வரும் ஒரு சம்பவத்தை நான் கண்டிருக்கிறேன். என் வீட்டில் இரண்டு நாய்கள் வளர்த்தோம். இரண்டும் டாபர்மான் ஆண். அதில் ஒன்றை தலையில் தொட்டு கொஞ்சினால் உடனே மற்றநாய் குரலெழுப்பும். வீட்டுக்கு மறுபக்கம் இருந்தாலும் சரி, அறைக்குள் இருந்தாலும் சரி. கண்ணால் பார்க்கவேண்டியதே இல்லை. மிக ஆச்சரியமான விஷயம் இது. ஆனால் இது மிருகங்களிடம் உள்ள ஒரு நுட்பம் என்று சொன்னார்கள். மணமோ வேறேதோ அவர்களுக்கு தொடர்புக்கு இருக்கிறது

 

அர்விந்த் குமார்

மொழி [சிறுகதை]

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு

 

வணக்கம்

 

மொழி அற்புதமான சிறுகதை. குழந்தைகள் இப்படி அறைக்குள்ளே  சென்று தாழிட்டுக்கொள்ளாத வீடுகளே இருக்காது. அதை அழகாக கதையாக்கிவிட்டிருக்கிறீர்கள். வாசிக்க வாசிக்க படபடப்பில் என்றுமே செய்யாத ஒரு காரியமாக இறுதிவரிக்குச் சென்று பாப்பா வெளியே வந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு பிறகு வாசிப்பை தொடர்ந்தேன்.

 

அனந்தனும் பாப்பாவும் பேசிக்கொள்ளும் அம்மொழி அழகோ அழகு. முன்பு அஜியின் தமிழாசிரியைக்கு எழுதிய கடிதமொன்றில் நண்பர்கள் பேசிக்கொள்ளும் ஒரு பிரத்யேக மொழியை குறிப்பிட்டிருப்பிர்கள் அது நினைவுக்கு வந்தது. இடையிடையே அந்த பங்கிக்கிழவி வேறு கூடுதலாக பதட்டப்பட வைத்துக்கொண்டிருந்தாள், பெண்களின் அழுகையும் ’குட்டி செத்துருச்சா’ என்று அனந்தன் கேட்பதுெம், அந்த அறையை வெளியிலிருந்து திறக்கவே முடியாது என்று புரிய வைக்கும் அதன் அமைப்பின் விவரிப்பும், விசாலமும் கரடிநாயருமாய் கதறுவதுமாக காட்சிக்குளேயே போய் மனம் பதைக்க நின்று கொண்டுதான் வாசிக்க முடியும் இதை.

 

குழந்தைகளுக்கு மட்டுமே புரியும் அந்த அழகிய மொழியை பிசாசுக்க மொழி என்பதும் திடீரென வரும் ’’அல்லேலுயா’’வும் வாய்விட்டு சிரிக்க வைத்தது. தினம் தினம் கொண்டாட்டமாய் கதை வாசிக்கிறோம்

 

 

அன்புடன்

லோகமாதேவி

 

அன்புள்ள ஜெ

மொழி கதையை ஒரு உற்சாகமான அனுபவமாக வாசித்தேன். ஒரு பயணம் மாதிரி. அருவிக்குளியல் மாதிரி. எதையுமே யோசிக்காத வாசிப்பு

 

ஆனால் வாசித்து முடித்தபிறகு ஒரு துணுக்குறல் வந்தது. குழந்தையின் கள்ளமற்ற கதையைச் சொல்லும் அந்த கதையில் ஒரு கிழவி தீமையே உருவானவளாக இருக்கிறாள். குழந்தை எப்படியும் செத்துவிடும் என எதிர்பார்த்து ஒப்பாரி பாட வந்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட முரண்பாடு. நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் அந்த கிழவி ஒரு துணுக்குறவைக்கும் கதாபாத்திரம்

 

அந்தக்கிழவி முதல் குழந்தை வரை ஒரு பெரிய கிராஃப் இருக்கிறது. இதைத்தான் கிளாஸிக் பேலன்ஸ் என்று சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்

 

ராஜேஷ் எஸ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19
அடுத்த கட்டுரைகோட்டை, வேட்டு – கடிதங்கள்