விலங்கு, ஆடகம் -கடிதங்கள்

விலங்கு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

விலங்கு கதையை வாசித்து ஒருவகையான பரவசத்தில் இருக்கிறேன். அடிப்படையில் இலக்கியம் என்பது கற்பனைதான். ஒருவரிகூட தான் உண்மையில் நடந்ததை எழுதியதில்லை, உண்மையில் நடந்ததை எழுதுவதற்கு இலக்கியம் எதற்கு என்று லோஸா ஓர் இண்டர்வியூவிலே சொல்கிறார். உலகின் பல எழுத்தாளர்கள் இந்த வரியை வெவ்வேறு வகையிலே சொல்லியிருக்கிறாகள். தமிழிலே அந்த தெளிவு இருந்த எழுத்தாளர் என்றால் புதுமைப்பித்தன்தன். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற பலர் கதைகளிலும் கற்பனை உலகம் இருந்தது என்றாலும் புதுமைப்பித்தன் தொடங்கிய வழி நீட்சி அடையவில்லை என்றுதான் படுகிறது

 

இந்தக்கதை ஒரு இந்திய மாயயதார்த்தக்கதை. இந்தியாவின் மகத்தான மாயங்கள் இன்னமும்கூட புனைவுக்குள் வரவில்லை. இந்தக்கதை அப்படிப்பட்டது. இந்தக்கதையுடன் தொடர்புபடுத்தவேண்டிய கதை நீங்கள் எழுதிய காடன் விளி. இவை இந்தியாவின் தொன்மங்களை இன்றைய யதார்த்ததுடன் கலந்து ஒரு பெர்பெக்டான மாய யதார்த்த உலகத்தை உருவாக்கிவிடுகின்றன.

 

மாய யதார்த்தம் என்றால் அதில் வாசிப்பின் கொண்டாட்டம் இருக்கவேண்டும். ஒரே சமயம் குழந்தைக்கதையாகவும் இன்னொரு பக்கம் இலக்கியப்படைப்பின் ஆழத்துடனும் இருக்கவேண்டும். இங்கே அந்த வாசிப்பைத்தான் பலரால் உருவாக்கமுடியவில்லை. சிறுபத்திரிகையில் பழகிய செயற்கையான மொழி அவர்களுக்கு தடையாக இருக்கிறது. இந்தக்கதைபோல ஈஸியான ஒரு நடையில்தான் மாய யதார்த்தம் எழுதமுடியும். அதை ஆங்கிலத்தில் லோஸாவையோ மார்க்யூஸையோ படித்தவர்கள் அறிந்திருப்பார்கள்

 

அருண்குமார்.

 

 

விலங்கு சிறுகதை படித்தேன். உளவியல் ஆய்வாளர்கள்  மிகவும் விரும்பக் கூடியது. எந்த ஓர் உயிரும் ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தால் அதுவாக ஆகிவிடும் என்பதுதான் மையம். வெளியே வந்து இறக்கை முளைத்தால் கூடக் கூண்டிலிருந்தே பழக்கப்பட்ட கிளிக்குப் பறக்கத்தெரியாது. யானை நான் இவனுக்குக் கட்டுப்பட்டவன் என்று பாகன் சொல்லிச் சொல்லி வளர்வதால் கட்டுப்பட்டு நிற்கிறது. வீட்டிலேயே வளர்க்கப்பட்ட புலிக்கு வேட்டையாடவே தெரியாது. ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அதன் ஆழ்மனது வெளிப்பட்டு விடுகிறது.

 

”ஒடி’ இதில் எங்கே வேறுபடுகிறதென்றால் அவ்விலங்கோ அல்லது மனிதனோ ஏதோ ஓர் உறுப்பை மட்டும் விட்டுவிட்டு முழுக்க வேறு வடிவமே தாங்குவதில்தான். மேலும் ஒவ்வொரு விலங்குக்குள்ளும் ஏதோஒரு மனிதகுணம் அமைந்திருக்கிறது. அதேபோல மனிதருக்குள்ளும் விலங்கு குணம் உள்ளது என்பதைத்தான் கதை சொல்லாமல் சொல்கிறது. சூழ்ச்சி, தந்திரம், நன்றிமறத்தல், அசுரபலம் எல்லாம் மனிதரிடம் மறைந்திருப்பது போலவே நன்றி காட்டல், இணையிடத்தில், தம் சந்ததியிடத்தில் பாசம் செலுத்தல், ஆபத்தில் அறிவைப் பயன்படுத்தல், போன்றவையும் விலங்கிடம் மறைந்துள்ளது “Man is a domestic animal” என அரிஸ்டாட்டில் சொன்னது நினைவுக்கு வருகிறது.

 

”மனுஷ மனசுங்கிறதே மிருகங்களோட பதிவுகளினாலே உருவானதுதான்” என்பது முழுக்காலும் உண்மைதானே? சிலநேரங்களில் அவன் அக்குணத்தைக் காட்டிவிடுகிறானே. உங்களின் ஒரு கதையில் அனுமனாக வேஷம் போடுபவர் அதுவாக மாறிவிடுவார். மேலும் அவருக்கு முழு வேஷத்தைக் காட்டினாலும் ஒரு பொட்டு வைத்து வேறுபடுத்துவார்கள். “பூர்ண வேஷம் அமைஞ்சா பிறவு திரும்ப வர முடியாது” என்னும் இக்கதையின் வரி அதை இப்[பொழுது நினைவூட்டுகிறது.

 

உண்மையில் இயற்கை உணவை விட்டு வந்து, புளி, காரம், எண்ணெய், கருவேப்பிலை என்றெல்லாம் சேர்த்து உணவுக்குச் செயற்கை ஊட்டுகிறன் மனிதன் என்ற கருத்து ஆழப்பதிகிறது. அந்தப் பூசாரி ஒடிதான் எனக் கதையின் பாதியிலே அவர் ஒடி செய்யச் சம்மதிக்காததால் ஊகிக்க முடிகிறது.

 

வளவ. துரையன்

ஆடகம் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

ஆடகம் கதை அந்த மழைக்காட்டை கண்முன் நிறுத்துகிறது. ராஜநாகம் வாழும் காடு என்பதே அப்படி ஒரு சில்லிடலை உருவாக்குகிறது

நான் ஒரு சின்ன விஷயம் யோசித்தேன். அந்தக்காடு ஏதேன் தோட்டம். அங்கே இருக்கிறது ராஜநாகம். ஆனால் இது பொன்னால நாகம். இது அருள்கிறது. வாழ்க்கையை அளிக்கிறது. ஆடகப்பசும்பொன்னை அளிக்கிறது

நாம் நாகம் என்று பார்ப்பதற்கும் மேற்கத்தியவர்கள் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு இதுதானே? ஏனென்றால் சில இந்தியப் பயணக்கட்டுரைகளில் ராஜநாகத்தை டெவில் என்றே வெள்ளைககரர்கள் எழுதியிருக்கிறார்கள்

 

ராஜ்

 

 

 

Hi Aasan

 

Sorry for not typing in Tamil. I would lose my excitement after reading Aatakam, if I start typing in Tamil now.

 

Aatakam sucked me in totally. I narrated the whole story to my family after reading it and suddenly the topic of conversation moved away from energy draining Corona-related news to dreams, snakes, schizophrenia and Gold rates(!!!) for one hour. Everybody started sharing their experiences about their dreams and their adventure with snakes in their old days.

 

The stories I have been reading in the last few days, I connected immensely with Aatakam.

 

My mother put her mobile phone and whatsapp away and is browsing your site for the last few minutes, which I think is a great change :)

 

-Prabhu

முந்தைய கட்டுரைலூப்,பொலிவதும் கலைவதும் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுருவி, லூப்- கடிதங்கள்