கோட்டை ,விலங்கு- கடிதங்கள்

Accidental angel of 2 small hills

 

கோட்டை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

கோட்டை சிறுகதையில் முதன்மையாக சொல்லப்படுவது என்ன என்று நான் யோசித்தேன். அணைஞ்சியின் பேச்சில்தான் குறிப்புகள் இருக்கவெண்டும் என்று பட்டது. அணஞ்சி கொக்கின் அலகு அதை அழைத்துச்செல்வதுபோல ஞானமார்க்கத்துக்கு அழைத்துச்செல்வது குறி என்கிறாள். அதை அவள் ஒரு தீய விஷயம் என்று சொல்லவில்லை. அதை அவள் ஒரு பிரைமரி ஃபோர்ஸ் என்றுதான் சொல்கிறாள்

 

ஆனால் ஏன் அதை அத்தனை எதிர்மறையாக அணுகுகிறார்கள்? அந்த ஆற்றலை வெறும் வன்முறையாக கையாள்வதைத்தான். அது க்ரியேட்டிவ் ஆற்றல் அதை தாக்குதலாக கோட்டையைப்பிடிப்பதாக ஆக்கிக்கொள்கிரார்கள். அதைத்தான் அணஞ்சி சொல்கிறாள்

 

ராஜ்குமார் ஸ்திதன்

 

அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்,

 

தொடர்ந்த துயரங்களூடும் தங்கள் தளத்தின் சிறுகதைக் கொண்டாட்டம்தான் ஒரே ஆறுதலாக இருக்கிறது.யாதேவி முதல் நேற்றைய கோட்டை வரையிலான தங்களின் சிறுகதைகளையும்,அதற்கு வாசகர்களின் பின்னூட்டங்களையும் தொடர்ந்து படித்து வருகிறேன். அதற்கு முதலில் நன்றி.

 

கோட்டை சிறுகதையில் என்னை மிகவும் ஈர்த்தது அந்த சிறுவனின் பாத்திரம்தான். கருணன் அண்ணனிடமிருந்து ஏறக்குறைய லஞ்சமாகக் கிடைத்த ஐம்பது பைசாவை பீடி வாங்கி இழுத்துப் பார்த்தாலென்ன என்று நினைக்கும் பையனை நாம் உடனே இது பிஞ்சிலே பழுத்து விடும் போல் இருக்கிறதே என்று அவ்வளவு சாமானியமாக நினைத்துவிட்டால் நாம் கதையை இன்னும் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை.     ஒரு சிறு மாங்காய்க்காக  அடித்துப் புரளும்  சிறுவனாக அவனை நினைக்கத்தோன்றவில்லை.கதையில் வரும் குறிப்புகள் அவனை இன்னும் ஒரு படி மேலே வைத்துத்தான் பொருத்திப்பார்க்கவேண்டியிருக்கிறது.

 

அவன் தன்னைச் சுற்றி நடப்பனவற்றை ஐம்புலன்கள் வழியாகவும் உள்வாங்கி சீரணித்துக்கொண்டிருக்கிறான் என்பதை கதை தன் வழியே சொல்லிச் செல்கிறது. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் எலியை அவசரமாக உள்ளே தள்ளும்போது அவன் அடையும் உணர்ச்சித்தூண்டலாகட்டும்,பச்சைவரிக்கை மாம்பழத்தின் சுவையில்கண்மூடித் திளைப்பதிலாகட்டும்,பெஞ்சில் அமர்ந்து கொண்டு தன்னை பெரியவனாக பாவித்துக்கொண்டு வெற்றிலைக்காம்புகளை மெல்லுவதாகட்டும், அணைஞ்சிக் கிழவி வந்தது முதல் மாமி வீட்டில் நடக்கும் அத்தனையையும், லீலா அக்கா தளர்வான ஆடையுடன்   மேலாடையை அள்ளிப்போட்டு வந்த கோலம் உட்பட, கூர்மையுடன் பார்ப்பதும் கேட்பதுமட்டுமல்லாமல் ஓரளவிற்கு அவன் வயதுக்கு மீறிய புரிதலை அடைவதாகட்டும்,பட்டாளத்து சிகரெட்   முல்லைப்பூ மணம்தானா என்பதை அருகில் சென்று முகர்ந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வதிலாகட்டும் ஆக இவையெல்லாமும் நமக்குச் சொல்லாமல் சொல்வது இனிஅவனை ஞான   மார்க்கத்துக்குக் கூட்டிப்போகும் இந்திரியங்களாக இருக்கப்போவது ஐம்புலன்களின் கூட்டணிதானே தவிர கிழவி கூறியதைப்போல அவனுடைய கீழ் மூக்கு மட்டுமல்ல என்பது என் கருத்து.

 

”என்னெண்ணு இப்டி போட்டு செய்யுதானுக?” என்று  நாணி மாமியும்,”ஆரை ஜெயிக்குதானுக இவனுக?”என்று சாந்தா அக்காவும் புலம்புவது எப்படி இருக்கிறது என்றால் பையன்கள் சேர்ந்து வைக்கோல் போரில் மறைவாக அமர்ந்து மாம்பழத்தை சப்பிச் சுவைத்துவிட்டு சண்டையென்று வரும்போது ”உனக்க மாம்பழம்தான் புளிப்பு…பீப் புளிப்பு…தூ தூ தூ”என்று துப்புவது   போல்  இருக்கிறது.எல்லோரும் அந்த ஜெயிப்பு தோப்பு ஆட்டத்தில் தோய்ந்தவர்கள்தானே?அந்த சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள்தானே?”இதில் கோட்டையில் கொடியை நாட்டினாத்தானே நிறைவு” என்று கிழவி புலம்புவதன் உட்பொருள்தான் என்ன?கோட்டைக் கதவைப் பறக்கத் திறந்து விடுவானேன் பிறகு புலம்புவானேன்.

 

எதோ பட்டாளத்திலிருந்து திரும்பினவன் புதுசாக் கண்டவனாட்டம் காஞ்ச மாடு கம்பிலே விழுந்தது மாதிரி இருந்துட்டான் போல.அதற்கு இவ்ளோ களேபரமா?இத்தனைக்கும் பாதிக்கப்பட்டவளான புது மணப்பெண் கணவனுடன் சந்தோஷமாகத்தானே கோயிலுக்குப் போய் வருகிறாள். இந்தப் பெண்கள் இருவருமே தற்போது கணவன் துணையில்லா மல் இருப்பதுவும் இந்தக் களேபரத்திற்குக் காரணம்.இதன் வழியாக இவர்கள்இதைப்பற்றி பேசிப்பேசியே தங்களது விரகத்தைத் தீர்த்துக் கொள்கிறார்களோ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

 

நடைமுறையில் பொதுவாக விதவைத் தாய்மார்கள் தன் மகளோ,மகனோ தாம்பத்திய சுகம் காண்பதில் ஒரு வித மனப் புழுக்கத்தோடு பார்ப்பது உள்ளது தானே.அந்த மனப்புழுக்கந்தான் பசு மாட்டைத் திட்டும் சாக்கில் தன் மருமகனை ”சவத்துக்கு ஒரே நெனைப்பாக்கும், வந்து பாருடீ அணைஞ்சி.. பிள்ளை கெடந்து துடிக்கா”என்று மருத்துவச்சியை அழைத்துப் போகிறாள் மாமியார். எது எப்படியோ இந்த சம்சார பந்தத்தில் ஆணாயினும்,பெண்ணாயினும் அங்கே பந்தக் காலிலே கட்டப்பட்ட கண்ணுக்குட்டி போல கம்பத்தைச் சுற்றி சுற்றி வந்து கழுத்து இறுக்கிக் கிடக்க   வேண்டுவதுதானே எல்லோருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது.

 

அன்புடன்,

இரா.விஜயன் புதுச்சேரி.

 

விலங்கு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

விலங்கு  கதையை வாசித்தேன். இந்த ஓய்வுக்காலம் மிக நல்லது. கதைகலை ஒன்றுக்குமேல்தடவை வாசிக்க முடிகிறது.

 

வ்லங்கு ஒரு சுழற்று சுழற்றிவிடுகிறது. தெய்வம் என்றால் என்ன மிருகம் என்றால் என்ன? மனிதன் நடுவே இருக்கிறான். அவன் தனக்குமேலே தெய்வத்தை வைக்கிறான். கீழே விலங்கை வைக்கிறான். ஆனால் தெய்வத்துக்கு விலங்கு அம்சத்தை அளிக்கிறான். செங்கிடாய்க்காரன் ஒரு விலங்கு. ஆனால் தெய்வம். ஆனால் மனிதனாக வந்திருக்கிறார் மூளையை கிறுகிறுக்க வைக்கிறது இது.

 

உண்மையிலேயே பழங்கால மனிதன் மிருகங்களை எத்தனை வியப்புடன் பார்த்திருப்பான் என்ற சிக்கலான ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டேன்.எப்போது அவன் இந்த மிருகங்கள் எல்லாமே கான்செப்ட்ஸ் தான் என்பதை புரிந்துகொண்டான். ஆச்சரியமான விஷயம். குகை ஓவியங்களில் மிருகங்கள் எலும்புக்கூடுகள் வெளியே தெரியும்படி வரையபப்ட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

 

சுந்தரராஜன்

 

 

அன்புள்ள ஜெ

 

விலங்கு சிறுகதையை வாசிக்கையில் என் பழைய பாலக்காடு வாழ்க்கை ஞாபகம் வந்தது. பாலக்காட்டில் மலையர், புள்ளுவர் போன்ற மலைப்பழங்குடி மக்களின் மந்திரவித்தை அது. அதை அங்கே உள்ளவர்கள் பயங்கரமாக பயப்பட்டார்கள். விலங்காக மாறி அவர்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிடுவார்கள் என்று நினைத்தார்கள்

 

நம் தமிழ் இலக்கியங்களிலே கூட முனியாண்டி அய்யனார் போன்ற நாட்டுப்புற தெய்வங்கள்தான் உருமாறி வந்து பெண்களை கவர்ந்துசெல்கின்றன. சங்கர் சினிமாவிலேகூட பாட்டில் வந்திருக்கிறது

 

இப்படி உருமாறி வருவதென்பது தாழ்ந்தசாதியினரின் ஒரு விருப்பமா? அல்லது அவர்களைப்பற்றிய உயர்சாதியினரின் பயமா? யோசிக்கவேண்டிய விஷயம் அது

 

ஜோதிகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேரில்திகழ்வது, துளி -கடிதங்கள்