ஆடகம் [சிறுகதை]
தினமும் இரவு 12 கழிந்து உங்கள் தளத்தில் அடுத்து என்ன என்று பார்த்த பின் உறங்குவது வழக்கமாகிவருகிறது. நேற்று திறந்த உடனே இருந்த பாம்பு படம் என்னை ஆச்சிரயத்தில் ஆழ்த்தியது ஏனென்றால் அன்று முழுவதும் நான் பாம்பை பற்றி நினைத்துக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தேன். இரவே படித்தேன் பயங்கரமான ஊக்கமும் புத்துணர்ச்சியையும் உணர்தேன்.
காலையில் மீண்டும் படித்தேன் அந்த ராஜ நாகம் என்னையும் கொத்தியது “வாழ்கையை ஆனந்தமா வாழுடா” என்று அதட்டியும் அன்போடும் சொன்னது. எண்ணி பார்க்கையில் வெறும் அர்த்தமற்ற உள சோர்வால் வாழ்க்கையின் வாழ்தலின் உச்சங்களை , உன்னத அனுபவங்களை இழந்திருக்கிறேன். இப்போதும் இதெல்லாம் ஒரு இரண்டு நாள் அனுபவம் தான் என்று உள்ளிருந்து எதுவோ சொல்கிறது. உண்மை. அனுபவங்கள் கலைவதுதான் ஆனால் உண்மையான அனுபவம் கொடுக்கும் ஊக்கம் குறைவதில்லை என்றுதான் நினைக்கிறன். இன்று இந்த நொடி இருக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய கருணையும் கொடையும்.
இன்று பார்க்க வேண்டிய பட லிஸ்டில் நாகரஹாவும் சேர்ந்துகொண்டது :)
விஷ்ணு
அன்புள்ள ஜெ,
இன்று வெளிவந்த ஆடகம் வாசித்தேன். இனிமையான ஒரு வாசிப்பனுபவம். நான் ஆகும்பேக்கு சென்றிருக்கிறேன். நீங்கள் ஆகும்பே பற்றி எழுதியதை வாசித்தபிறகுதான் போனேன். அங்கே போனதுமே எல்லா நண்பர்களுக்குமே சளி பிடித்துவிட்டது. திரும்பி வந்துவிட்டோம்
இந்தக்கதையில் ஆகும்பேயின் வர்ணனை அபாரமாக உள்ளது. அப்படியே அந்த இடங்களுக்கெல்லாம் போனதுபோல. புத்தர்சிலை உள்ள அந்த ஓட்டலில்தான் தங்கியிருந்தோம். ஆகும்பே ஊரின் அழகே மழைநீர் அப்படி தெள்ளத்தெளிவாக ஓடும் என்பதுதான்.
கதையில் ஒருவன் அதை சாவதற்கு உகந்த இடம் என நினைக்கிறான். வாழ்வதற்கு உகந்த இடம் தேடுபவனாக அவனை ஆக்குகிறது அந்த கிங் கோப்ரா. நாகரகாவு அழகான படம். இப்போதுதான் பார்த்தேன். தமிழில் வந்த ராஜநாகம் படத்திலுள்ள கண்ணன் கீதையும் என்றபாட்டும் அழகான பாட்டு. நான் சின்னவயசிலே அதை ரேடியோவில் கேட்டேன். இப்போதுதான் மீண்டும் கேட்கிறேன்
சரவணக்குமார்
“ஆனையில்லா!” [சிறுகதை]
அன்புள்ள ஜெ
மீண்டும் ஆனையில்லா கதையையெ வாசித்தேன். இத்தனை கதைகள். ஒரு கதையில் இருந்து இன்னொன்றுக்கு போக அவ்வளவு மனநிலை வேறுபாடுகள் தேவைப்படுகின்றன. ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் உணர்வுரீதியாக சம்பந்தமே இல்லை. உதாரணமாக அருகருகே வந்த இரு கதைகள் ஆனையில்லா, பூனை. ஆனால் பூனை கதையில் உள்ளே ஒரு பெரிய வீழ்ச்சியின் தேங்கிநிற்பதன் சோகக்கதை உள்ளது
ஆனையில்லா மிக இயல்பான ஒரு பகடிக்கதை. இன்றைக்கு நாம் கொரோனோவுடன் சம்பந்தப்படுத்திக்கொள்ளலாம். நாளைக்கு அன்றைக்கு வரும் ஒன்றுடன் சம்பந்தப்படுத்திக்கொள்ளலாம். ”தோளுக்குமேலே தொண்ணூத்தொன்பது, தொடைச்சுப்பாத்தா ஒண்ணுமில்லே’ என்று திருநெல்வேலிப்பக்கம் ஒரு பிள்ளைகள் பாடும் பாட்டு உண்டு. அந்தப்பாட்டின் தாத்பரியம்தான் இந்தக்கதையும்
அகிலா ராஜ்
அன்புள்ள ஜெ
யானையில்லா கதையை இப்போதுதான் படித்தேன். இடுக்கண் வருங்கால் நகுக என்ற வரிக்கு அழகான உதாரணம். யானையின் குண்டியில் கிரீஸ் போடுவதற்கெல்லாம் கிராமத்து இன்னொசென்ஸ் வேண்டும். மானம் மரியாதையா ஒரு ஆனையை சீவிச்ச விடமாட்டீங்களாடே என்ற வரியை வாசித்தபோது வெடித்துச் சிரித்துவிட்டேன்
சண்முகம், மதுரை