மொழி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
மொழி ஓர் அழகான கதை. உண்மையில் கலை என்பது அறிவார்ந்தது அல்ல முழுக்கமுழுக்க அது ஒரு வாழ்க்கைக்கொண்டாட்டம் என்பதைக் காட்டுகின்றன இக்கதைகள். தன்னிச்சையாக எழுதவை. எந்த பிரயாசையும் இல்லாமல் எழுதப்படுபவை. ஒருமுறை திரும்ப எழுதினால்கூட இந்தக்கதையை எழுதிவிடமுடியாது. ஒருமுறை வடிவம், மொழி ஆகியவற்றைப்பற்றி யோசித்தால்கூட இந்தக்கதை வராது அப்படி ஓர் இயல்பான மலர்வு கொண்ட கதை
இத்தகைய கதைகளில் யோசிக்க ஒன்றுமே இல்லை. நல்ல ஒரு ஓடையில் நீராடுவதுபோல களிக்க வேண்டியதுதான். யோசித்தால் கதை போய்விடும். ஆனால் பின்னர் நினைக்கும்போது கதை விரிகிறது. எத்தனை மனிதர்கள். ஒரு கிரைஸிஸ். ஆனால் அதைக்கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எதிர்கொள்கிறார்கள். அறைக்குள் பிசாசு இருக்கிறது, அல்லேலூயா என்று ஒருகுரல். சந்தர்ப்பம் வந்ததுமே ஒப்பாரி பாட வந்திருக்கும் ஒரு கூட்டம். மதசாதி வேறுபாடின்றி வந்து உதவும் மக்கள். வேறுபாடுகள், ஒற்றுமைகள்
அப்படி பார்க்கும்போதுதான் எத்தனை பெரிய கோலம் என்ற பிரமிப்பும் ஏற்படுகிறது. ஒரு விமர்சகன் இந்தக்கதையிலுள்ள கதாபாத்திரங்களை எல்லாம் எண்ணி பட்டியலிட்டால் ஒரு நாவலுக்குரிய அளவுக்கு கதாபாத்திரங்கள் இருப்பதைக் காணலாம். எல்லாருக்கும் தெளிவான குணச்சித்திரம் இருக்கிறது
நன்றி ஜெ
மகாதேவன்
ஆடகம் [சிறுகதை]
அன்பின் ஜெ, வணக்கம்!.
”அவ வாயில வசம்ப வச்சி தேய்க்க…., செத்த நேரம் வாய மூடுதா பாரேன் மூதேவி…” என்று அனத்தியபடியே “ஏய்.., ஒம்பொண்டாட்டிய டீ தண்ணி போட்டு எடுத்தாறச்சொல்லு…” என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் கட்டளையிட்டபடி வலது தோளில் கிடக்கும் ஈரிழை துண்டால் விலாப்பக்க வியர்வையை விரட்டியடிக்கும் பாவனையில் துடைத்துவிட்டு ஒருகால் மடக்கி வாசல் திண்ணையில் உட்கார்ந்துவிட்டாரென்றால், துக்கத்தையும் மீறிய ஒரு ஆசுவாசம் துக்கவீட்டுக்காரர்கள் மத்தியில் தெரிய ஆரம்பிக்கும். வழிகூட்டி விடும் சடங்கில் ஆரம்பித்து, தலை திவசத்துக்கு, போய் சேர்ந்தவரின் பிரியமான பிராண்ட் சுருட்டை மறக்காமல் வாங்கிவந்து படையல் இலையில் வைப்பதுவரை மொத்த கவலையையும் ஏற்றுக்கொள்ளும் தாத்த ஒருவர் எங்கள் தெருவில் இருந்தார். இறந்துபோய் இருவது வருஷமாகிறது. இறைச்சக்கார (இறைச்சிக்கடைக்காரர்) தாத்தாவை கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் பெருவட்டர்.
”ஒரு சிறுகதை என்ன செய்துவிட முடியும்?” வாசகன் ஒருவனை மணிக்கணக்கில் வேறொரு வாழ்வை வாழ வைக்கும். இன்றைய காலைநடையில் ”ஓலைச்சுவடி” இதழுக்காக 2020 ஜனவரி 1 அன்று சத் தர்ஷனில் நீங்கள் அளித்த பேட்டியை (சுட்டி : https://youtu.be/0nlkSvv40vI) கேட்டபடி தொடங்கிய இன்றைய காலைப்பொழுது. உங்களின் பேட்டியை சத் தர்ஷனில் ஏகாந்த நிலையில் நேரடியாக கேட்டிருந்தாலும், பறவைகளின் கீச் சத்தமும், உணவு இடைவேளையை குறிக்க எழுப்பப்பட்ட மணியோசையையும் பேட்டியின் இடையே கேட்கையில் அந்த நாள் மீண்டுவருகிறது.
வலிய பொருத்திக்கொண்டிருக்கும் வீடடங்கு பணிச்சூழல். உலகம் முழுவதிலும் உள்ள சக அலுவலக நண்பர்களோடு நாள் முழுவதும் வீடியோ காலில் அமர்ந்திருக்க வேண்டும். லுங்கியும், பிளேசருமாய் அட்டண்ட் செய்யும் கஸ்டமர் வீடியோ கான்பரன்ஸிங் மீட்டிங்குகள் என்று சற்று வித்தியாசமாகத்தான் பொழுது போகிறது.
கோலப்பன்,லாரன்ஸோடு சேர்ந்து என்னையும் கரடி நாயர் வீட்டு பத்தாயத்துக்கு பக்கத்தில் படபடப்போடு காத்திருக்க வைத்த கதை. இறுக்கமானதொரு சூழ்நிலையில் ஆரம்பித்து, பகடியான மனநிலைக்கு எந்த இடத்தில் கதைமாறுகிறது என்று உணராதபடி, உரைநடையில் உருமாற்றம் பெரும் கதைக்களம். பெருவட்டர் வாயில் வழியும் வெற்றிலைச் சாற்றை வளைத்து துடைப்பதையும், பொத்திப்பொத்தி நடந்துவரும் ஆணிக்கால் செல்லன் பிள்ளையையும் சரியாக கவனிக்காமல் கடந்துபோகிறவர்கள் இந்தக்கதையை முதல் வரியிலிருந்து மீண்டும் கவனம் கூர்ந்து படிப்பது உத்தமம்.
கண்ணன் எதனால் தவளைக்கண்ணன் ஆனான்? கரடி நாயர் காரணப்பெயர் எதனால் வந்தது? மனைவியை மிரட்டும் கரடி நாயர் கரடி நாயரை கண்டிக்கும் பெருவட்டர் பெருவட்டரை அதட்டும் போற்றி மாடன் மோட்சம் கதையின் உரைநடையை எத்தனை முறை படித்தாலும் சிரித்து மாளாது. அந்த வரிசையில் சேரப்போகும் கதை இது.. கதைக்கு பொருத்தமாக கண்ணால் சிரிக்கும் தேவதையின் போட்டோ… என்ன.. அம்மணக்குண்டி படமொன்றை தேடிப்போட்டிருக்கலாம்…
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.
அன்புள்ள ஜெ
ஆடகம் கதை ஒரு நீண்ட கவிதை. ராஜநாகம் என்ற ஒரு வார்த்தையிலிருந்து அவ்வளவு தொலைவு செல்கிறது அந்தக்கதை. ராஜா என்றாலே பொன்தான். கனகசிம்மாசனத்தில் இருப்பவன். கனகன் என்றே சில நூல்களில் சொல்கின்றனர்
ராஜா ஆசீர்வாதம் பண்ணினால் பொன். அதையே தண்டனையாக அளித்தால் சாவு. அந்தக்கதைசொல்லிக்கு ராஜா ஆசீர்வாதம் அளித்திருக்கிறார். அவன் பக்தியுடன் சென்று அமர்ந்திருக்கும் அந்த இடம் அழகானது
ஆகும்பேக்கு ஒருமுறையாவது போகவேண்டும்
சிவராமன்