‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18

பகுதி நான்கு : அலைமீள்கை – 1

எந்தையே, மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளில் எந்த அளவு தனித்தவர்கள் என்பதைப்போல் எண்ணுந்தோறும் பெருகும் விந்தை எதுவுமில்லை. என் கனவுகளில் எப்போதும் மானுடர் நிறைந்திருக்கிறார்கள். பிறந்தது முதல் துவாரகையிலேயே இருந்தவன் நான். போருக்கென கூட அந்நகரின் எல்லை கடந்து சென்றதில்லை. துவாரகையில் தோள்முட்டி உடல்தடுக்கி குரல்பின்னி வாழும் நெரிசல்களிலேயே இயல்பாக என்னை உணர்ந்திருக்கிறேன். சூழ்ந்திருக்கும் பெரும்பாலைநிலங்களில் வேட்டைக்கோ விளையாட்டிற்கோ செல்லும்போதுகூட உடன்பிறந்தார், ஏவலர், காவலர்கள், வழிகாட்டிகள் என்னை சூழ்ந்திருந்தார்கள். ஆகவே என் கனவுகளில் எப்போதும் நூறு முகங்கள், ஆயிரம் விழிகள் உடனிருந்தன. ஆயினும் ஒவ்வொரு முறையும் நான் தன்னந்தனியனாக என்னை உணர்ந்தேன்.

எத்தனை பேசினாலும் என் சொற்களை எவரும் செவிகொள்ளவில்லை என்றும், எங்கு இருந்தாலும் என்னை எவருமே பார்க்கவில்லை என்றும் தோன்றியது. நான் இங்கிருக்கிறேன், இவ்வண்ணம் இருக்கிறேன் என்பதை கூவி அறிவிப்பதே எனது கனவுகளில் எப்போதும் நான் செய்துகொண்டிருந்தது. கனவுகளில் அனைவருக்கும் அத்தனை தனிமை ஏன் வருகிறது? மெய்யாகவே அத்தனை பேரும் ஆழத்தில் தனித்தவர்கள்தானா? உறவுகள் என்பவை அனைத்துமே ஜாக்ரத்தில் மட்டும் நிறைந்திருக்கின்றனவா? நீர்ப்பாவைகள் நீரின் மேற்பரப்பை மட்டுமே சென்றடைகின்றன என்று ஒரு சூதர்சொல் உண்டு. ஆழம் அவற்றை அறிவதில்லையா? அன்றி பிறருடன் உறவாடி நாம் இயற்றுவன அனைத்தும் ஜாக்ரத்திலேயே முடிந்து, எஞ்சுவன மட்டுமே கனவிலும் ஊழ்கத்திலும் துரியத்திலும் எழுகின்றனவா?

தன்னந்தனியறையில் தானென்று மட்டுமே உணர்ந்திருக்கும் ஆத்மா தன்னை தான் காண்பதே கனவு நிலை என்பார்கள். எந்தையே, என் கனவில் எழுந்து என்னுடன் உரையாடி உடனிருந்த ஒருவர் தாங்கள் மட்டுமே. அதுவும் நினைவறிந்த முதல் இரண்டே தருணங்கள்தான். அறியாச் சிற்றிளமையில் ஒருமுறை நான் துவாரகையில் கற்பாலம் ஒன்றிலிருந்து நீருக்குள் தவறி விழுந்தேன். அன்று தாங்கள் ஒரு நீண்ட பயணத்தில் இருந்து மீண்டுவந்து அதை கொண்டாடும்பொருட்டு எண்பது மைந்தரையும் திரட்டி கடலாட அழைத்துச்சென்று கொண்டிருந்தீர்கள். மைந்தரும் தாங்களும் மட்டுமே இருந்தமையால் எவரும் எவரையும் தனித்தறியவில்லை. நீங்களே எண்பது வடிவு கொண்டுவிட்டதுபோல் நாங்கள் இருந்தோம்.

நாங்கள் களியாடி, கூச்சலிட்டு, ஒருவரையொருவர் துரத்தியும் தள்ளியும் விளையாடியபடி உங்களுக்குப் பின்னால் வந்தோம். நான் கால் வைத்த கற்படி வழுக்கி என்னை சரித்து பின்னால் தள்ளியது. கொந்தளித்து எழுந்த அலை ஒன்றின்மீது நான் விழுந்தேன். மாபெரும் நாவென அது என்னைச் சுருட்டி உள்ளே எடுத்துச்சென்றது. எடைமிக்க நீர் வந்து என்னை சூழ்ந்துகொண்டது. என் மேல் அடுக்குகளாக ஏறி ஏறி அமைந்தது. என் உடலை எட்டுத் திசையிலிருந்தும் கவ்வி அழுத்திச் சுருக்கி சிறு விதை என ஆக்கியது. நீரை தண்மை என்று, ஒளி என்று, அலை என்று அறிந்திருக்கிறேன். அது கல்லென்று, இரும்பென்று எடை கொண்டது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

அது என்னை நெரித்து அழுத்தியது. என் உடலுக்கு உள்ளே இருந்த அனைத்தும் பிதுங்கி வெளிவந்துவிடுவதைப்போல. என் கால்கள் துழாவித் துழாவி தவிக்க ஆழத்திற்குள், மேலும் ஆழத்திற்குள் சென்றுகொண்டிருந்தேன். நான் அறிந்த அனைத்தும் தனித்து பிரிந்து குமிழிகளாகி விரிந்து மேலே சென்றன. நான் அறிந்து என்னுள் நுரைத்துக்கொண்டிருந்த ஒவ்வொன்றும் கொப்பளித்து மேலெழுந்து வந்தன. அன்னை முகம் தெளிந்தது. “அன்னையே!” என்று நான் அலறிய இறுதிச்சொல் அவ்வெடையில் நசுங்கி உடைந்தது.

அப்போது மேலிருந்து ஒரு கை நீண்டு வந்து என் குழலைப் பற்றியது. உந்தி என்னை மேலே தூக்கினீர்கள். நான் நீர்ப்பரப்பைப் பிளந்து எழுந்து வந்து வாய் திறந்து வெறிகொண்டு மூச்சை அள்ளி இழுத்து நெஞ்சில் நிரப்பிக்கொண்டேன். என் நெஞ்சிலும் வயிற்றிலும் நிறைந்திருந்த நீரை குமட்டி இருமுறை உமிழ்ந்தேன். முதல்முறை அது குருதிபோல் சுவைத்தது. பின் உப்பென்றாயிற்று. கைகளையும் கால்களையும் வீசி உந்தி எழுந்து கரையோரப்பாறை ஒன்றை பிடித்தேன். அதன் விளிம்பை காலால் உதைத்து என்னை பாலம் நோக்கி தூக்கிக்கொண்டு வருவதற்குள் என் உடன்பிறந்தார் என்னை மேலே தூக்கினார்கள்.

உடன் நீந்தி வந்து மேலேறி அருகமைந்து நகைத்து “நன்று, இப்போது கடலையே அறிந்துவிட்டாய்” என்று என்னிடம் சொன்னீர்கள். நான் தங்களை நோக்கிக்கொண்டிருந்தேன். தங்கள் முகம் அந்த ஆழத்தில் என்னை நோக்கி வந்த கணம் அப்போதுதான் எனக்கு நினைவில் எழுந்தது. தந்தையே, அக்கடலின் முகமாக இருந்தீர்கள். நீலப் பேருரு போன்று இருந்தீர்கள். உங்கள் தலையில் அந்தப் பீலி விழி திறந்திருந்தது. விழிகள் இரு மலர்களென விரிந்திருந்தன. அனைத்தையும் உண்ணத் திறந்தது போலவோ அனைத்தையும் உண்டு புன்னகைகொண்டது போலவோ உங்கள் செவ்விதழ் வாய்.

நான் உங்களை ஒரு நடுக்குடன் நோக்கிக்கொண்டிருந்தேன். “தந்தையே, நீங்கள் யார்?” என்று கேட்க விழைந்தேன். “ஏன் இங்கு இவ்வண்ணம் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள்?” ஆனால் எனக்கு உங்களை விழி தூக்கி பார்க்க அச்சம் எழுந்தது. தலை தாழ்த்தி அமர்ந்திருந்தபோது உடல் நடுக்கு கொண்டது. என்னை தூக்கி அமரச்செய்தனர். தலைதுவட்டினர். கைகளை உரசினர். இல்லம் திரும்பலாம் என்று மூத்தவர் சொன்னார். “இல்லை, இன்றே அவன் கடலாடவேண்டும். இல்லையேல் இனி ஒருபோதும் அவனால் கடலை தொடமுடியாது” என்றீர்கள்.

“கடலில் இறங்கு” என்றீர்கள். நான் நடுநடுங்கி அமர்ந்திருந்தேன். கடலில் பாய்ந்து நீந்தியபடி “வா” என்று கைவிரித்தீர்கள். நான் உங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். “வா! வா!” என்றீர்கள். நான் உங்களை நோக்கி பாய்ந்தேன். நீங்கள் சிரித்தபடி விலகிச் சென்றீர்கள். என்னை அலை ஒன்று தூக்கி மேலெழுப்பியபோது அப்பால் இன்னொரு அலைமேல் உங்களை கண்டேன். அந்த அலையில் இருந்து பாய்ந்து உங்களை நோக்கி நீந்தி வந்தேன். உங்கள் சிரிப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அலைகளை தாவிக்கடந்து உங்களை நோக்கி நீந்தினேன். அருகணைந்தும் விலகியும் என்னுடன் அலையாடினீர்கள்.

அன்று அரண்மனைக்கு மீண்ட பின்னர் நீரில் விழுந்ததை மட்டும் அன்னையிடம் சொன்னேன். “அவர் உடனிருக்க உனக்கென்ன ஆகும்?” என்றார். நான் நீரில் விழுந்தது அவருக்கு எந்த அச்சத்தையும் அளிக்கவில்லை. மேலும் நீர் அருகே செல்லலாகாதென்றோ, எண்ணம் சூழ்ந்தே எதுவும் இயற்றவேண்டும் என்றோ அன்னையர் சொல்லும் எந்த எச்சரிக்கையும் அவர் சொல்லவில்லை. நான் அதை விந்தையாகவே உணர்ந்தேன். தங்களை ஆழத்தில் பார்த்த அக்காட்சியை எவரிடமும் கூறவில்லை. அதை எனக்குள் நானே வளர்த்துக்கொண்டேன்.

பின்னர் அது மறைந்தது. நான் எண்ணி மீட்டு எடுக்க முயலும்தோறும் அக்காட்சி மறைந்து அதை நான் மாற்றியமைத்துக்கொண்ட ஒரு வடிவமே என்னில் எழுந்தது. அது முற்றிலும் செயற்கையானது என அறிந்திருந்தேன் என்பதனால் உளக்கிளர்ச்சியையும் அளிக்கவில்லை. ஆனால் அவ்வண்ணம் ஒன்றை உருவாக்காமலிருக்கவும் என்னால் இயலவில்லை. பிறிதொரு நாள் எனக்கு காய்ச்சல் வந்தது. என் உடலில் அனல்பரவ மூச்சு எடைகொண்டு நீண்ட திரிகளாக மாறி மூக்கையும் நெஞ்சையும் அடைத்து இழுத்துக்கொண்டு அதிர்ந்தது. அந்த இரவில் அரைத்துயில் இருளில் என் நெஞ்சில் மேல் ஏறி அழுத்தியது. என் உடல் திறந்து இருளில் கரைந்து மறைந்துவிடுமென நான் உணர்ந்த கணத்தில் என் அருகிலிருந்து நீங்கள் கைபற்றி மேலே தூக்கினீர்கள்.

அதே தருணம் மீண்டும் நிகழ்ந்தது. அன்று கண்ட உங்கள் முகத்தை மீண்டும் நான் கண்டேன். அக்கனவு என்றும் என்னுடன் இருந்தது. எவருடனும் நான் பகிர்ந்துகொண்டதில்லை. தன்னந்தனியாக அமர்ந்து நான் கண்ட கனவு. நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ஒருமுறை உங்களை கனவில் கண்டேன். இம்முறை கனவு கண்டு எழுந்தமர்ந்தபோது நான் எதையும் அறிந்திருக்கவில்லை. எனினும் அனைத்தையும் உணர்ந்துகொண்டிருந்தேன். அதன்பின் கிளம்பி இங்கே தங்களை பார்க்கவந்தேன்.

சத்யபாமையின் பத்து மைந்தர்களில் எட்டாமவனாகிய பிரதிபானு இளைய யாதவரை வணங்கி சொன்னான். “நீண்ட அலைவுக்குப் பின் வழிகண்டேன். நெடும் பயணம் முடிந்து வந்துள்ளேன். தந்தையே, என் சொற்களை உங்களிடம் சொல்வதனூடாகவே நான் என்னை வகுத்துக்கொள்ளவேண்டும்.” மந்தரத்தின் நடுவே அமைந்த சிறுகுடிலில் முகப்புத் திண்ணையில் இளைய யாதவர் மென்கை குடிகொண்ட உதடுகளுடன் அவன் சொற்களை கேட்காதவர் போலவும், அவனை நன்கறிந்தவர் போலவும் அமர்ந்திருந்தார்.

தந்தையே, சில நாட்களுக்கு முன் அங்கே துவாரகையில் மூத்தவர் பானு தன் இளையவர் அனைவரையும் அவைக்கு அழைத்திருந்தார். மத்ரநாட்டு அரசி மைந்தர்கள் யாதவர்களுடன் சேர்ந்து செயல்பட முடிவெடுத்திருக்கும் செய்தியை முன்னரே அறிந்திருந்தேன். எச்செய்தியும் எங்களுக்கு உடனடியாக வந்துசேரும், எச்செய்தியும் எவராலும் உறுதிப்படுத்தப்படாது. அதன் பொருட்டு ஓர் உண்டாட்டு என்று எனக்கு சொல்லப்பட்டது. அவ்வண்ணம் ஒரு உண்டாட்டு நிகழ்த்துவது யாதவர்கள் வல்லமை கொண்டிருக்கிறார்கள் என்னும் செய்தியை பிறருக்கு உணர்த்துவதற்கு இன்றியமையாதது என்று மூத்தவருக்கு எவரோ சொல்லியிருந்தார்கள். எங்களுக்கான அழைப்பு மூத்தவர் சுபானுவிடமிருந்து வந்திருந்தது.

துவாரகையின் அரண்மனையில் நாங்கள் காத்திருந்தோம். பெரிய கூடத்தில் அமர்ந்திருக்கையில் நிகழப்போவதென்ன என்று ஒருவரோடொருவர் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டோம். ஒவ்வொருவரும் அறிய விரும்பினோம், அறிந்திருக்கிறோம் என்று காட்டவும் விரும்பினோம். அப்போது சிற்றமைச்சர்கள் வந்து வரவறிவித்தனர். நாங்கள் எழுந்து நின்றோம். லக்ஷ்மணையின் மைந்தர்கள் எண்மர் அங்கு வந்தனர். நாங்கள் முகமன் உரைத்து வரவேற்று அமரச்செய்தோம். அவர்களைப் பார்த்து நெடுங்காலமாயிற்று என எண்ணிக்கொண்டோம். நெடுங்காலமொன்றும் ஆகவில்லை, மிக அண்மையில்தான் கண்டோம் என்று நினைவுகூர்ந்தேன். ஆனால் உள்ளத்தால் அகன்றுவிட்டிருந்தனர். எல்லா அகல்வையும் நம் அகம் காலமென்றும் தொலைவென்றும் ஆக்கிக்கொள்கிறது.

காத்ரவான், பலன், பிரபலன், ஊர்த்துவாகன், மகாசக்தன், சகன், சிம்மன், அபராஜித் ஆகியோர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியான உடல்மொழியும் முகமெய்ப்பாடும் கொண்டிருந்தனர். ஒற்றை உணர்வையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். அவர்களின் மூத்தவர் பிரகோஷனும் அவருடைய மதிசூழாளரான ஓஜஸும் மட்டும் வரவில்லை. எண்மரும் அங்கு வரும் வரை தங்கள் பணிகள் குறித்து ஐயம் கொண்டிருந்தனர். மூத்தவர் செய்வதென்ன என்று அறியாமலும் இருந்தனர். பிரகோஷன் அம்முடிவை எடுத்திருந்தார். ஆனால் அதை அவர்களுக்கு விளக்கியிருக்கவில்லை. அவ்வழக்கமே அவர்களிடம் இல்லை. உண்மையில் சற்றேனும் சூழ்நிலையை விளக்கும் வழக்கம் பிரத்யும்னனின் அவையில் மட்டுமே இருந்தது.

மத்ரநாட்டரசி லக்ஷ்மணையின் மைந்தர் முதலில் ருக்மிணியின் மைந்தர் பிரத்யும்னனுடன் இணைந்திருந்தனர். பின்னர் அங்கிருந்து சாம்பனுடன் இணைந்தனர். தங்களை ஷத்ரியர்கள் என முன்னிறுத்தும் பொருட்டு அவர்கள் பிரத்யும்னனை நாடினர். ஆனால் பிரத்யும்னனின் அவையில் அவர்கள் சிறுமை அடைந்தே இருந்தனர். அவர்கள் வரவேற்கப்பட்டனர், கொண்டாடப்பட்டனர். ஆனால் அவர்கள் கூறும் கருத்துக்களை எவரும் செவி கொள்ளவில்லை. அவர்கள் கூறும் கருத்துக்களை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே “அவற்றை ஏன் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம்? அவற்றை இன்னும் விரிவாக பேசிவிட்டோமே” என்றனர். “நீங்கள் சிலவற்றை செவிகொள்ள வேண்டும்” என்று சொல்லத்தொடங்கினர். அவ்வப்போது “எதையும் புரிந்துகொள்ளாமல் இக்கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றனர். “முதலில் சூழலை புரிந்துகொள்ளுங்கள். அதன்பின் கருத்துக்களை முன் வையுங்கள்” என்று அறிவுறுத்தினர்.

ஷத்ரிய மைந்தர்களில் மிக இளையவராகிய விசாருவோ சாருவோ பேசிக்கொண்டிருக்கையில்கூட மத்ரநாட்டு இளவரசர்களில் மிக மூத்தவரான பிரகோஷன் எழுந்து ஒரு சொல் ஊடுசொல்வது ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆனால் பிரகோஷன் பேசும்போது அவர்கள் அனைவருமே விழிகள் அலைபாய வேறெங்கோ சித்தம் செலுத்தினர். கையணிகளை சரிசெய்துகொண்டனர். ஏவலரை அழைத்து ஏதேனும் செய்கை காட்டி ஆணையிட்டனர். ஒருவரோடொருவர் விழிதொட்டு உரையாடினர். இதழ்களில் மெல்லிய புன்னகை காட்டினர். அவர் சொல்லி முடித்ததும் மென்மையான குரலில் “அது நல்ல கருத்து, எண்ணவேண்டியது” என்று சொல்லி அப்படியே கடந்து சென்றனர். அல்லது அவரால் எரிச்சலூட்டப்பட்டு, ஆனால் மதிப்பின்பொருட்டு தாங்கிக்கொண்டதுபோன்ற பாவனையில் புன்னகைத்து ஏதேனும் சொன்னார்கள்.

உண்மையில் அது சொல்லமைவில் உள்ள வேறுபாடு. லக்ஷ்மணையின் மைந்தர் இளமையிலிருந்தே மத்ரநாட்டில் வளர்ந்தவர்கள், அங்கேயே கற்றவர்கள். அங்கே எதையும் நேரடியாக, மிக விரிவாக சொல்வது வழக்கம். அங்குள்ள அவைகளில் வந்தமரும் மலைப்பழங்குடித்தலைவர்கள் மிக விரிவாக பேசுபவர்கள். ஒவ்வொருமுறையும் எல்லா குலமுறை கிளத்தல்களும் மரபுமுறை வழுத்தல்களும் கூறப்படவேண்டும் என்றும் முறைமைகள் முற்றாகவே கடைப்பிடிக்கப்படவேண்டும் என்றும் விழைபவர்கள். அவர்களிடம் பேசுவதற்குரிய மொழியையே லக்ஷ்மணையின் மைந்தர்கள் அறிந்திருந்தனர்.

மாறாக ஷத்ரிய மைந்தர் ஷத்ரிய ஆசிரியர்களிடம் அரசுசூழ்கை பயின்றவர்கள். அதே கல்விபெற்ற பிறரிடம் பேசிப் பழகியவர்கள். ஆகவே அவர்களிடம் பலவற்றுக்கு சுருக்கமான சொல்லாட்சிகள் இருந்தன. உவமைகளும் உருவகங்களும் அவர்களின் எண்ணங்களை சுருங்க உரைத்தன. ஆகவே அவைகளில் அவர்கள் சீரிய முறையில் வெளிப்பட்டனர். அவ்வெளிப்பாடு பழகியிராத மத்ரநாட்டவர்களுக்கு அவர்களின் பேச்சு புரியவில்லை. ஆகவே அவர்கள் அவையில் ஏற்கெனவே பேசியவற்றையே மீண்டும் பேசினார்கள். சுருக்கமான அணிப்பேச்சுக்குப் பழகிய ஷத்ரியர்களுக்கு மத்ரர்களின் நீண்ட நேர்ப்பேச்சு உகக்கவில்லை. ஆகவே அவர்கள் பேச்சில் ஊடுருவினார்கள். பிரகோஷன் அவைப்பொழுதை வீணடிப்பதாக எண்ணினார்கள். அதை தாங்கள் ஏற்கெனவே பேசிவிட்டோம் என்றோ முன்னரே புரிந்துகொண்டோம் என்றோ சொல்லும்பொருட்டு இடைமறித்தனர்.

ஆனால் இடைமறிப்பதென்பது மத்ரநாட்டில் பெரும் முறைமீறல். சிறுமைப்படுத்தல். அது மத்ரர்களை கொதிக்கச்செய்தது. ஒருமுறை பிரகோஷன் சீற்றத்துடன் தன் பேச்சு இடைமறிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியபோது பிரத்யும்னனின் அமைச்சர்களில் ஒருவர் “இந்த அவையில் இளவரசர்கள் காட்டும் பெருந்தன்மையை சற்றேனும் புரிந்துகொள்ளுங்கள். வேறெந்த அவையிலாவது நீங்கள் ஷத்ரிய இளவரசர்களை எதிர்த்து பேசியிருக்க முடியுமா? மலைமகன்களின் இடம் இங்கு உங்களுக்கு அளிக்கப்படவில்லை. முற்றிலும் இளவரசர்களுக்கு நிகராகவே நீங்கள் கருதப்படுகிறீர்கள்” என்றார். திடுக்கிட்டு அவையினரை நோக்கிய பிரகோஷன் அவர்கள் அனைவரும் அந்தச் சொற்களுக்குரிய முகம் கொண்டிருப்பதை கண்டார்.

அன்றுதான் அந்த அவையில் தங்கள் இடமென்ன என்பதை அவர்கள் உணர்ந்தனர். அன்றே அவர்கள் அங்கிருந்து சாம்பனின் அவைக்கு சென்றனர். சாம்பனின் அவை அவர்களின் வருகையை கொண்டாடியது. அவர்களை தூய ஷத்ரியர்கள் என்று முன் நிறுத்தியது. அவர்களின் வருகையால் ஷத்ரியர்களின் தரப்பொன்று தங்களுக்கு வந்துவிட்டதாக பறைச்சாற்றிக்கொண்டது. ஒவ்வொருமுறையும் “தங்களைப் போன்ற ஷத்ரியர்களின் வருகை இங்கு அவைநிறைவை உருவாக்குகிறது” என்று சாம்பன் சொன்னார். ஷத்ரியர்களுக்குரிய அனைத்து அவை முறைமைகளும் அவர்களுக்கு செய்யப்பட்டன. அவர்களின் சொற்கள் அரசியல்சூழ்கைகளில் தலைக்கொள்ளப்பட்டன. அசுரர்களும் நிஷாதர்களும் அவைகளில் பெரும்பாலும் பேசுவதே இல்லை. ஆகவே பிரகோஷன் அங்கே விரிவாகப் பேசுவது ஏற்கப்பட்டது. அவரும் அவையையே அவர்தான் நடத்துவதாக எண்ணிக்கொண்டார்.

பின்னர் நிஷாதர்களின் படைகளும் அசுரர்களின் படைகளும் நகருக்குள் வரத்தொடங்கின. அவற்றைக் கொண்டு சாம்பனின் படையணிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் அசுர, நிஷாத குடியினரே படைத்தலைவர்களாக அமைக்கப்பட்டனர். நிஷாத குடியினருக்கு நிஷாத குடியினர் படைத்தலைமை கொண்டனர். அசுர குடியினருக்கு அசுரர். அரசகுடியினர் என முதற்தலைமை கொண்டவர்கள் அனைவரும் சாம்பனின் குடியைச் சார்ந்தவர்களோ அன்றி அவர் மணஉறவு கொண்ட குடியைச் சேர்ந்தவர்களே. ஒருமுறை கூட, ஒரு படைத்தலைமைக்குக் கூட, லக்ஷ்மணையின் மைந்தர் எவரும் அழைக்கப்படவில்லை.

லக்ஷ்மணையின் மைந்தர்கள் அதை பிரகோஷனிடம் சொன்னார்கள். இறுதியில் பிரகோஷன் அதை நேரடியாகவே சாம்பனிடம் கேட்டார். சாம்பன் சிரித்தபடி “அவைப்பொறுப்புகளில் நீங்கள் சிறந்தவர்கள். ஆனால் படைப்பொறுப்பை தங்களுக்கு அளிப்பதில் இடருண்டு, புரிந்துகொள்ளுங்கள். மலைமக்கள் எங்குமே படைநின்று போரிட்டு வென்றதாக வரலாறில்லை. சிறு குழுக்களாகச் சென்று களவுத்தொழில் செய்வது போன்றதல்ல போர். அதில் எழுவதல்ல, விரிவதல்ல, நின்றிருப்பதே முதன்மை. அதற்கு போராற்றலைவிட திரளாற்றல் தேவை. அது மலைமக்களுக்கு இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றார்.

உளம் புண்பட்டு அந்த அவையிலிருந்து பிரகோஷன் திரும்பி வந்தார். “நாம் இங்கு இவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம்” என்று கூவினர் இளையோர். “போரில் நில்லாதோர் எந்தச் செல்வத்தையும் அவைமுதன்மையையும் அடையமுடியாது. அவ்வாறு அளிக்கப்படுவதெல்லாம் வெறும் நடிப்புகளே” என்றார்கள். நடந்ததை அவர்கள் தங்கள் அன்னையிடம் சொல்லி குமுறினார்கள். அன்னை அதற்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. மறுநாள் அவைக்குச் செல்லாமல் தனித்திருந்தார்கள். தங்களைத் தேடி சாம்பனே வரட்டும், அவரிடம் பேசவேண்டுவதை பேசலாம் என்று காத்திருந்தார்கள். ஆனால் அங்கே படைத்திரள்வு நடந்துகொண்டிருந்தது. எவரும் அவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

ஏழு நாட்கள் அவ்வாறு அவைக்குச் செல்லாது ஒழிந்தபோது சாம்பனின் இளையோன் வசுமான் அவர்களை நாடி வந்தான். “மூத்தவரே, தாங்கள் அவைக்கு வரவில்லை என்பதை மூத்தவர் கண்டார். அவைக்கு வந்து முறைமைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டார்” என்றான். அச்சொல்லால் சீண்டப்பட்டு எழுந்த காத்ரவான் “எங்களுக்கு ஆணையிடுவதற்கு அவர் யார்?” என்று கூவினார். “யாரா? அரசர், ஆணையிடும்பொருட்டு அங்கு அமர்ந்திருப்பவர். இது ஆணை. வராதொழிந்தால் சிறைசெய்து அழைத்துவரவும் அவரால் ஆணையிட முடியும்” என்றான் வசுமான். கொதித்த உடன்பிறந்தோரை ஆறுதல் சொல்லி அமையச்செய்து “நன்று, வருகிறோம். செல்க!” என்றான் ஓஜஸ்.

அன்று அவன் சென்ற பின்னர் அவர்கள் செயலற்று அமர்ந்திருந்தனர். பொழுது சென்றுகொண்டிருந்தது. அவர்கள் உணர்ந்தனர் தனித்திருக்க இயலாது என்பதை. மூன்று தரப்புகளில் ஒரு தரப்பில் நிலைகொண்டேயாக வேண்டும் என்பதை ஓஜஸ் சொன்னான். உடனே அன்றே கிளம்பி யாதவகுல மூத்தவர் பானுவிடம் வந்து தாங்கள் யாதவரிடம் சேர்ந்துகொள்வதை அறிவித்தனர். அவ்வாறுதான் இக்கூட்டு அமைந்தது.

அவர்களை வரச்சொல்லிவிட்டு ஓஜஸும் பிரகோஷனும் வந்துகொண்டிருந்தனர். தங்கள் மூத்தவரை பானு எப்படி வரவேற்பார் என்பது அவர்களை குழப்பிக்கொண்டிருந்தது. வரும் வழியிலேயே சாம்பனின் படைகள் அவர்களை சிறைசெய்யவும்கூடும் என்ற அச்சமும் இருந்தது. நாங்கள் அவர்களிடம் இயல்பாக பேச முயன்றோம். அவர்கள் நிலைகொள்ளாமலேயே இருந்தார்கள். வெளியே சங்கொலி எழுந்தது. அவர்கள் சற்று ஆறுதல்கொண்டார்கள். ஏவலன் வந்து “இளவரசர் பிரகோஷன்” என்று அறிவித்ததும் மூத்தவர் பானு பக்கத்து அறையிலிருந்து வெளிவந்து நின்றார். அவர் அருகே சுபானுவும் நின்றார். லக்ஷ்மணையின் மைந்தர்களின் முகம் மலர்ந்தது.

பிரகோஷன் ஓஜஸுடன் உள்ளே வந்ததும் பானு முன்னால் சென்று அவரை கட்டித்தழுவி “வருக, இளையோனே!” என அழைத்தார். “உங்களை வருபவர்கள் என நான் கருதவில்லை. செல்லவில்லை என்றே என் உள்ளம் கருதுகிறது” என்றார். பிரகோஷன் விழிநீர் மல்கிவிட்டார். அவரால் பேச முடியவில்லை. “வருக!” என அவரை பானு உள்ளே அழைத்துச் சென்றார். அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடி அவைக்குள் நுழைந்தோம். அதுவரை இருந்த எல்லா தயக்கங்களும் அகல சிரித்து நகையாடி கொண்டாடத் தொடங்கினோம்.

முந்தைய கட்டுரைவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
அடுத்த கட்டுரைஆடகம், கோட்டை -கடிதங்கள்