ஏகம் [சிறுகதை]

காரில் செல்லும்போது இயல்பாகவே விவாதங்கள் எழுகின்றன, ஏனென்றால் அத்தனை சிறிய ஒரு உருளைக்குள் ஐந்துபேர் உடலைக் குறுக்கி அமர்ந்திருப்பது பிறிதெங்கும் இல்லை. ஒருவேளை மானுடகுலத்தின் வரலாற்றிலேயே அதைப்போல ஒரு விசித்திர நிலை முன்பு இருந்ததில்லை.

கருத்துக்கள் உடலிலேயே ததும்பியிருக்கின்றன, நிலைமின்சாரம் போல. ஒருவரை ஒருவர் தொட்டாலே பாய ஆரம்பித்துவிடுகின்றன.நேர் முனைகள் விலக்க எதிர்முனைகள் இணைய இணைந்தவை நேர்முனைகளென்று மாற அதன்பின் ஓயாத பேச்சுதான். காரில் நெடுநேரம் செல்கையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்கிறார்கள். ஒருவரிலிருந்து ஒருவர் விலகவும் செய்கிறார்கள்.

இலக்கியத்தில் கருத்துக்களுக்கான இடம் பற்றி பேசிக்கொண்டுவந்தோம். ஜே.கருணாகரின் கதைகளில் இருந்து தொடங்கிய பேச்சு. அவருடையவைகருத்துநிலை கதைகள்’ என கோபாலன் சற்றே அலட்சியமாகச் சொன்னார். அது தமிழ் இலக்கியச்சூழலில் புழங்கும் ஒரு ஐந்துரூபாய் நோட்டு. கைபட்டு கைபட்டு களிம்பேறி விளிம்புகள் நைந்தது.

நான்கருத்துக்கள் இல்லாம இலக்கியம் இல்லை. அப்டி ஒண்ணை எழுதிப்பாத்திடலாம்னு நவீனத்துவ காலகட்டத்திலே சிலர் முயற்சி செய்ஞ்சாங்க. அது அமுக்கிவிட்ட குசுதான்னு இப்ப தெரியுதுஎன்றேன்.ஒரு கருத்துக்குரிய கூரிய உவமை வந்துவிட்டால் அதன்பிறகு பேச ஆரம்பிப்பது எளிது.

கருத்துக்களை எப்டி சொல்லியிருக்குங்கிறதுதான் இலக்கியத்தோட அளவுகோல். ஒற்றைப்படையான உணர்ச்சிக் கூச்சலா சொல்லியிருக்கா? மறுபக்கத்தை சொல்லாம போதனையா இருக்கா? எல்லாரும் சொல்லுற பொதுக்கருத்தா இருக்கா? இலக்கியத்துக்கு வெளியே இருக்கிற அரசியல், சமூகவியல், உளவியல் கருத்துக்களை கொண்டுவந்து பதிச்சது மாதிரி இருக்கா? இதான் கேள்வி. அப்டி இருந்தா இலக்கியம் இல்லை

ஆனா ஒரு எழுத்தாளன் அவனே கண்டடைஞ்ச கருத்து அவனோட தரிசனமா வளந்து கதையிலே இருக்கும்னா அது பேரிலக்கியம். அதனாலேதான் டால்ஸ்டாயும் டாஸ்டாயெவ்ஸ்கியும் தாமஸ் மன்னும் விக்டர் ஹ்யூகோவும் மாஸ்டர்ஸ்நானே ஒருமாதிரி வகுத்துச்சொல்லிவிட்ட நிறைவு எனக்கு ஏற்பட்டது

பேச்சு இடைவெளிவிட்டபோது அந்த பேசுபொருள் அறுபட்டது. அறிவு ஸ்டீரிங்கை திருப்பியபோது கை என்மேல் பட்டது. சிக்னலில் இருந்து வலப்பக்கமாகச் சென்றார்.

சரி இலக்கியம் போரும்.. காருக்குள்ளே இலக்கியம் ரொம்ப உக்கிரமா இருக்குஎன்றார் சுந்தர்

இப்டி காரிலே இடிச்சுக்கிட்டு உக்காந்திட்டிருக்கிற நிலைமை பூமியிலே முன்னாடி இருந்திருக்கா?” என்றேன்

குகைக் காலகட்டத்திலே இருந்திருக்கும்என்றார் கிருஷ்ண சாமி

திருக்கோவிலூர்லே ஒருவாட்டி இப்டித்தான் பொய்கையாழ்வார் ஒரு சின்ன வீட்டு திண்ணையிலே மழைக்கு ஒதுங்கி நின்னுட்டிருந்தார். அப்ப பூதத்தாழ்வார் அங்கே வந்து இடம் கேட்டார். ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாங்கன்னு அவர் இடம் கொடுத்தார். ரெண்டுபேரும் பேசிட்டிருக்கிறப்ப பேயாழ்வார் அங்க வந்து இடம்கேட்டார். ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்னு சொல்லி உள்ள சேத்துக்கிட்டாங்க. மூணுபேரும் ஒட்டி நின்னுட்டு பெருமாளோட புகழைப் பற்றிப் பேசிட்ட்ருந்தாங்க

நாலாவது ஆள் வந்திருந்தார்னா புதிசா ஒரு வேதாந்தக்கொள்கை உண்டாகியிருக்கும்என்றேன் “இல்லேன்னா ஒரு கொலை விழுந்திருக்கும்”

சுந்தர்அங்க நாலாவது ஆளா பெருமாள் வந்து நின்னார்னு ஐதீகம். அந்த இடம் இப்ப ஒரு கோயில்மாதிரிஎன்றார்

பெருமாள்லாம் அப்டி சண்டைபோடுற இடத்துக்கு வருவாரா என்ன? ஏகாந்தமான இடத்துக்குத்தானே பெருமாள் வருவார்?” என்று ராகவன் கேட்டார்.

ஏகாந்தம்னா என்ன? ஏக அந்தம். ஒண்ணுமட்டும் மிஞ்சியிருக்கிறது. அவங்க மூணுபேரும் பேசிப்பேசி போய் சேந்த இடத்திலே ஒண்ணுமட்டும்தான் மிச்சமிருந்தது. அதுதான் பெருமாள்என்றார் சுந்தர்

ஜேகே இப்டி கல்யாணத்துக்கெல்லாம் வருவாரா? நான் பாத்ததில்லைஎன்றேன்.

ஆமா, எனக்கே ஆச்சரியம்தான். அவரோட பொண்ணு கல்யாணத்திலே அவரைப் பாத்தாலே நான் ஆச்சரியப்படுவேன்என்றார் ராகவன்

தயாளன் அவரோட ரொம்ப நெருக்கமான நண்பர், அவர் வீட்டுக்கு இவர் போய்த்தான் ஆகணும். ஜேகே இதிலே எல்லாம் ரொம்ப நெகிழ்வா இருப்பார். அவருக்கு ஃப்ரண்ட்ஸ்னா ரொம்ப முக்கியம்என்று அறிவு சொன்னார்

ஆமாமா, அவரோட ஃப்ரண்ட்ஸெல்லாம் அம்பது அறுபது வருசமா கூடவே இருக்காங்கஎன்றார் சுந்தர்

ஆனா ஒரு லௌகீகமான விஷயத்திலே அவரை சம்பந்தப்படுத்திக்கிறது கஷ்டமா இருக்கு. அவர் எழுதினது இந்த வாழ்க்கையைத்தான். ஆனா அவரு இதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். வேறே எங்கோ நின்னுட்டு இதையெல்லாம் பாத்திட்டிருக்கிறவர்என்று ராகவன் சொன்னார்

கல்யாணம் லௌகீகமா என்ன? அதிலே ஒரு ஸ்பிரிச்சுவலான அம்சம் இருக்குல்ல?” என்றார் கோபாலன்

கல்யாணத்திலயா? கடைசியிலே ஃபஸ்ட்நைட்டே ஸ்பிரிச்சுவல்னு சொல்லிருவீங்கபோலஎன்றேன்

இல்ல, சத்தியமா சொல்றேன். எனக்கு கல்யாணங்களிலே ஒரு எலிவேஷன் ஃபீல் ஆகும். அதிலே என்னமோ இருக்குஎன்று கோபாலன் சொன்னார்அது எவ்ளவு புராதனமான சடங்கு. அந்த மந்திரங்களுக்கெல்லாம் எப்டியும் மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கும். அந்தச் சடங்குகள் எல்லாமே குறியீடுகளா தோணும். ஒரு கவித்துவமான நாடகம் மாதிரி. ஒரு வழிபாட்டுச் சடங்கு மாதிரிஅதிலே டிவைனா என்னமோ இருக்கு

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

சாப்பாடு அறுசுவை அரசாலே

நான் விளையாட்டாச் சொல்லலை. சீரியஸா சொல்றேன். திருமண வாழ்க்கை லௌகீகமானதுதான். இல்லேன்னு சொல்லமாட்டேன். சொல்லப்போனா நாம லௌகீகம் சம்சாரம்னு சொல்றதெல்லாமே அதைத்தான். ஆனா கல்யாணம் அப்டி இல்லை. காதல் அப்டி இல்லை.ரெண்டு பேரு நாம நம்ம வாழ்க்கையை முழுசா பங்குவைச்சுக்குவோம், நம்ம மனசை முழுசா கைமாத்திக்குவோம்னு சொல்லிக்கிடறாங்கன்னா அந்த சந்தர்ப்பம் சாதாரணமானது இல்லை. அதிலே ரொம்ப டிவைனா ஒண்ணு இருக்கு. அந்த டிவினிட்டியை அவங்களாலே ஒருவேளை தக்கவைச்சுக்க முடியாம இருக்கலாம். ஆனா கல்யாண ஃபோட்டோக்களிலே பாத்தா அவங்க அப்டி ஒரு ஒளியோட இருக்கிற மாதிரி இருக்குஎன்றார் கோபாலன்

அவங்க மேலே லைட்ட ஃபோகஸ் பண்றாங்க இல்ல?”

சரி, நான் மேலே ஒண்ணுமே சொல்லலை…”

இல்ல சொல்லுங்க. கிருஷ், நீங்க சும்மா இருங்க.. சொல்லுங்க

இல்ல

சொல்லுங்க, சுவாரசியமா இருக்கு

கோபாலன் சொன்னார்.“அதாவது மனுஷ மனசுங்கிறது ரொம்ப பிரைவேட்டானது. மனுஷ வாழ்க்கையோட சுகதுக்கங்களும் ரொம்ப ரொம்ப பிரைவேட்டானது. அப்டி இருக்கிறப்ப அப்டி ஒரு உறுதிமொழிய ரெண்டு பேரு எடுத்துக்கிடறது மொத்த இயற்கைக்கும் சவாலான ஒண்ணு, இல்லையா?“

அதான் சொல்றேன் ஸோ அன்னேச்சுரல்என்றார் ராகவன்

ஆமா, ஆனா இலக்கியம் இசை எல்லாமே அன்னேச்சுரல்தான். தியானம் தவம் எல்லாமே அன்னேச்சுரல்தான். எல்லாமே மனுஷனோட கற்பனையும் முயற்சியும்தான். யோக சித்தவிருத்தி நிரோதஹன்னு பதஞ்சலி சொல்றார்.சித்தவிருத்திதான் இயற்கையானது. அதை நிப்பாட்டுற யோகம் செயற்கையானது

பெரும்பாலும் சிரித்தபடி பேசும் கோபாலன் அத்தனை தீவிரமாகப் பேசியதும் மற்றவர்கள் அமைதியடைந்தனர்

ராகவன்நான் ஒண்ணு சொல்லவா?” என்றார்

சொல்லுங்கஎன்றேன்

இல்லை, நான் ஜாஸ்தியா ஏதாவது சொல்றதா தோணினா மன்னிச்சுக்கணும். ஏன்னா நீங்கள்லாம் பிள்ளைக்குட்டிக்காரங்க..”

சேச்சே, சும்மா பேச்சுதானே? சொல்லுங்க

கோபாலன் சொன்னது சரிதான். இயற்கைக்கு மாறான ஒரு சங்கல்பம்தான் கல்யாணம். ஆனா அதை ஏன் எடுத்துக்கறான் மனுஷன்? எந்த விதமான பாஸிட்டிவான ஃபீலிங்காலயும் இல்ல. முழுக்க முழுக்க பயத்தாலேஎன்றார். “மனுஷனுக்கு தனிமைதான் குடுக்கப்பட்டிருக்கு. அதுக்கு ஆல்டர்நேட்டே இல்லை. முழுமையான தனிமை. அதை யாராலயும் ஒண்ணும் செய்யமுடியாது. அந்தத் தனிமையை பயந்துதான் அவன் சொசைட்டியை உருவாக்கிக்கறான். குடும்பத்தை உருவாக்கிக்கறான். சொந்தம் சாதி பிள்ளை குட்டி எல்லாமே அதுக்காகத்தான்

ஆனா அவனுக்கு தெரியும் அதெல்லாம் செயற்கைன்னு. அது ஒரு நெருக்கடியிலே அப்டியே போயிடும்னுஅதனாலே அவனே அதை முடிஞ்சவரை உறுதியாக்க முயற்சி பண்றான். சபதம் எடுத்துக்கறான். சங்கல்பம் பண்ணிக்கிடறான். அதுக்கு பலவகையான சடங்குகளைச் செய்றான். மூதாதையர் மேலே சத்தியம் பண்றான். தெய்வங்கள் மேலே சத்தியம் பண்றான். தீ மேலே தண்ணி மேலே மண் மேலே சத்தியம் பண்றான். அதுவும் பத்தாதுன்னு ஊரையே கூட்டிவச்சு சோறு போட்டு சத்தியம் பண்ணிக்கிடறான். அதுக்குமேலே ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் சர்க்காருக்கு சத்தியம் பண்ணிக்குடுக்கறான்எதுக்கு? அவ்ளவு பயம். இதிலே டிவைனா என்ன இருக்கு?” என்று ராகவன் கேட்டார்

அவரும் வாதாடுபவர்தான். இருந்தாலும் அந்தப்பேச்சால் ஒர் அமைதியின்மையை அடைந்தோம். ஆகவே அனைவரும் அமைதியாகிவிட்டனர்

நீங்க சொன்னீங்கள்ல? இலக்கியம் ,கலை ,ஆன்மிகம் எல்லாமே அந்த தனிமையை போக்கத்தான். ஒரு மனுஷனாலே இன்னொரு மனுஷனுக்குள்ள நுழையவே முடியாது. நேரடியா நுழைய முடியாதுங்கிறதனாலே கொல்லைப்பக்கமா நுழைய முயற்சி பண்றான். சன்னல்வழியா நுழைய முயற்சி பண்றான். கூரையை பிரிச்சு உள்ள குதிக்க முயற்சி பண்றான். அதான் கலை, இலக்கியம், ஆன்மிகம் எல்லாம்” என்றார் ராகவன்

என்ன பண்ணினாலும் ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனோட தொடர்பு கொள்ளவே முடியாது. சந்தேகமே வேண்டாம். மனுஷன் நல்லா சீல் வைச்ச கங்காஜலம் மாதிரி. உள்ள போக வழியே இல்லை”.என்றார் ராகவன்

கங்காஜலத்தை கடைசியாத்தான் உடைப்பாங்கஎன்றார் சுந்தர். அவர் ஏன் அதைச்சொன்னார் என்று எவருக்கும் தெரியவில்லை

கல்யாணமண்டபம் வந்தாச்சுமூஞ்சிகளை கொஞ்சம் சுமுகமா வச்சிருக்கலாமேஎன்றார் அறிவு

நாம என்ன சண்டையா போட்டோம்? கோபாலன் நூறுவாலா பட்டாஸை கொளுத்திப்போட்டார் அதுமேலே ராகவன் ஒரு ஆயிரம்வாலாவை கொளுத்திபோட்டார், நம்ம செவிகள் அடைச்சிருக்கு, அவ்வளவுதான்என்றார் சுந்தர் “ஒரு மைசூர்பாகை கடிச்சா தெறந்திரும். இப்ப என்ன?”

ஜேகே வந்தாச்சா?”

வந்தா தெரியுமே

வாசலில் தயாளன் எங்களை எதிர்கொண்டார். “வாங்க வாங்கஎல்லாரும் வாங்க

அவரே உள்ளே அழைத்துச் சென்றார். மிகப்பெரிய கல்யாண மண்டபம். ஒரு மைதானம் போலிருந்தது. அது நிறைய மக்கள்.பெரும்பாலும் பெண்கள். பட்டுப்புடவைகளின் திரள் அந்த இடமே பொன்வண்டுகளால் நிறைந்திருப்பதுபோல தோன்றச் செய்தது

நேர்முன்னால் மண்டபத்தின் மறு எல்லையில் மணமக்கள் நின்றிருந்த மேடை. மணமகள் பழங்கால வட இந்திய அரசி போலிருந்தாள். சரிகை ஆடைகள். சிவப்பு முகச்சாயம். அலங்காரக்கூந்தல். கல்மின்னும் நகைகள். மணமகன் ஐரோப்பாவிலிருந்து அப்போதுதான் வந்திறங்கியவன்போல இளநீலநிற சூட். மின்னும் ஷுக்கள்.

கிழக்கும் மேற்கும் சங்கமம் மாதிரிஎன்றேன்

ஆமா, முன்னாடில்லாம் அந்த சூட் அப்டியே பீரோவிலே இருக்கும். எங்கப்பா இப்பகூட வச்சிருக்காருஇப்ப பரவாயில்லை. அப்பப்ப ஃபாரீன் போக வாய்ப்பிருக்கு

அந்த மகாராணி டிரெஸ்ஸை என்ன பண்ண? அதப்போட்டுட்டு ஆஃபிஸ் போகமுடியுமா என்ன?”

சும்மா இருங்க. காதிலே விழுந்து ஒரே ஒருத்தி அப்டி வந்தாக்கூட அத்தனைபேரும் கெளம்பிருவாங்க. மவுண்ட்ரோடு நெரிசல் கலர்லே கண்ணு பூத்துபோற மாதிரி ஆயிடும்

பையனையும் பொண்ணையும் வாழ்த்திருவோமேஎன்றேன்கூட்டம் கம்மியா இருக்கு

ஆமா, கையோட சாப்பிட்டுரலாம்என்றார் கோபாலன் “இந்த மண்டபத்திலே பாஸந்தி நல்லா இருக்கும்

மெட்ராசையே நக்கிப்பாத்த்த நாக்கு…” என்றார் சுந்தர்அதுக்கு ஒரு வணக்கம்

“அடுத்த ஜென்மத்திலே ஆதிசேஷன் மாதிரி ஆயிரம் நாக்கோட பிறந்து இந்தியாவையே நக்கிப்பாக்கணும்னு வாழ்த்தறோம்என்றார் ராகவன்

இந்தியாவுக்கே வெஷத்த வச்சிருவான்யா இந்த ஆளு

மேடைக்குச் சென்று மணமகனை வாழ்த்தினோம். சேர்ந்து நின்று குழுப்புகைப்படத்திற்கு புன்னகைத்தோம். மணமக்களுக்கு எங்கள் எவரையும் தெரியவில்லை. ஆகவே ஒரு அச்சிட்ட புன்னகையை அளித்தார்கள்

திரும்ப வரும்போதுதான் நான் மறு எல்லையில் மேடையில் புல்லாங்குழல் வாசிப்பவரைப் பார்த்தேன்

அய்யோ அது மணி இல்லை? “

ஆமா

அவரா வாசிக்கிறார்? அவரே நேர்லயா? அய்யோ. நான் ரெக்கார்ட்னு நினைச்சேன்

அவரேதான்.. ஒரு கச்சேரிக்கு அம்பதாயிரம்னா கல்யாணக்கச்சேரிக்கு ரெண்டு லட்சம்..” என்றார் அறிவு.

ஆனால் அந்த மாபெரும் கூடத்தில் ஒருவர்கூட அவரை கேட்கவில்லை. அத்தனைபேரும் பின்னால் திரும்பி மேடைநோக்கி நின்று பேசினர். சிரித்தனர். ஒருவரை ஒருவர் அழைத்தனர். பரிசுப்பொருட்களுடன் மேடை நோக்கிச் சென்றனர்.இறங்கி வந்தனர். மற்றவர்களை அழைத்துக்கொண்டு சாப்பிடச்சென்றனர்

நான்ஒருத்தர்கூட கேக்கலையேஎன்றேன்

கல்யாணக் கச்சேரின்னா அப்டித்தான். அது அவங்களுக்கும் தெரியும். அதான் நாலுமடங்கு ரேட்என்றார் கோபாலன்

நான் முன்வரிசையில் சென்று நின்றேன். மணி சற்று போதையில் இருப்பதாகத் தோன்றியது. கண்களுக்கு கீழே மதுஅடிமைகளுக்கு உரிய தசைவீங்கிய வளையம். சற்றே தொங்கிய கன்னங்கள். ஆனால் கண்களை மூடி உடல் மெல்ல அசைந்தாட முழுமையாகவே ஒன்றி வாசித்துக்கொண்டிருந்தார்

பேசினா நாக்குழறும், ஆனா வாசிப்பு அப்டியே இப்பவும் துல்லியம்தான்என்றார் சுந்தர்

மெல்லிய புல்லாங்குழலிசை சுவர்களில் பதிந்து கூடத்தைச் சூழ்ந்திருந்த எல்லா ஒலிப்பெட்டிகளிலும் எழுந்தது. ஆனால் அதை முழுமையாகவே மூழ்கடிக்கும் அளவுக்கு கூடத்தில் பேச்சுமுழக்கம் இருந்தது

ஜேகெ வந்தாச்சுஎன்று அறிவு என் தோளைத் தொட்டார். “வாங்க, வந்து ஒரு வார்த்தை சொல்லுங்க

ஆமாஎன்று நான் வாசலுக்குச் சென்றேன். நண்பர்களும் உடன் வந்தார்கள்

அவரும் கொஞ்சம் புகைபோட்டிருப்பார்ல? என்றார் ராகவன்

பெரிய கார் வந்து நின்றது. வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்த ஜேகே நரைத்த த்லைமுடிக்கற்றைகளை தள்ளி தோளுக்குப்பின் விட்டபடி இறங்கினார். மீசையை நீவியபடி அருகே வந்த தயாளனைப் பார்த்தார்

என்னய்யா?”என்று அவருடைய தோளை தொட்டபின் என்னைப் பார்த்து புன்னகைத்தார்

உடனே கண்கள் மாறுபட்டன. “மணில்ல? இங்க வந்திட்டானா?”

அப்படியே உள்ளே சென்றார். அவர் செல்ல, யானைக்கு வழிவிடுவதுபோல கூட்டம் பிளந்தது. நேராகச் சென்று மணியின் முன் நின்றார். திரும்பாமலேயே கையால் ஒரு நாற்காலி போடும்படி ஆணையிட்டார். நாற்காலி வந்ததும் அமர்ந்து கால்மேல் கால்போட்டுக்கொண்டார். கைகளைக் கட்டியபடி சாய்ந்து அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்

அந்த பாடல் முடிந்து மணி கண் திறந்ததும் ஜேகேவை பார்த்தார். புன்னகையுடன் தலையசைத்தார்.ஜேகே ஒரு மெல்லிய புன்னகையை மட்டும் அளித்தார்

மணி அடுத்த பாடலை தொடங்கினார். அதில் அதுவரை இல்லாத ஒன்று இருந்தது. முன்பு அந்த இசையிலிருந்த ஏக்கம் ஒன்று மறைந்துவிட்டிருந்தது.அது என் கற்பனையாகவும் இருக்கலாம். ஆனால் இசை மிகப்புதிதாக இருந்தது

குழல் குழைந்தது. மெல்லிய புகைபோல சுருளவிழ்ந்தது. பட்டுத்திரைச்சீலை போல குழைந்து நெளிந்தது.பொன்னிற நாகம். மயிலின் திரும்பும் கழுத்து. மெல்ல எழும் நாரையின் சிறகுவிரிப்பு. அசையாச்சிறகுகளுடன் வட்டமிடும் பருந்து. அதன் நிழல். தொலைவில் ஒளிர்ந்தபடிச் செல்லும் சிற்றோடை

மீண்டும் ஒரு இடைவேளை. அப்போது உணர்ந்தேன். அந்த கூடம் முற்றிலும் அமைதியாக இருந்தது. அத்தனைபேரும் அறியாமலே விலகிச் சென்றுவிட ஜேகேயைச் சுற்றி இடம் ஒழிந்துகிடந்தது. அனலெழுந்து பொசுக்கிய வட்டம்போல

மீண்டும் ஒருபாடல். அவர் எதை வாசிக்கவேண்டும் என்று கேட்கவில்லை, இவர் சொல்லவுமில்லை. அவர்களுக்கே அது தெரிந்திருந்தது. அவர்கள் ஒன்றின் இரு கரைகளில் இருந்தனர். ஒன்றின் இரு பக்கங்களாக இருந்தனர்.

அடுத்த பாடலை எடுக்கையில் மணி உதடுகளைப் பிரித்த ஓசைகூட கேட்டது. ஜேகே விழிகள் வெறித்திருக்க அசைவிலாது அமர்ந்திருந்தார்

நான் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தேன். இசை எழுந்து எழுந்து சுழன்று உருகி உருகி ஒளியுடன் ஓட ஒருகணத்தில் ஜேகே வாசித்துக்கொண்டிருந்தார். மணி கேட்டுக்கொண்டிருந்தார். ஜேகேயே வாசிக்க அவரே கேட்டுக்கொண்டிருந்தார்.

அங்கே அவர்கள் இருவரும் மட்டும்தான் இருந்தனர். அல்லது ஒருவர். அல்லது அவர்களும்கூட அங்கே இல்லை

ஒரு கட்டத்தில் மணி குழலைத் தாழ்த்திக்கொண்டார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. ஜேகே எழுந்து வெளியே நடந்துசென்று காரிலேறி அமர்ந்தார்.

தயாளன் வெளியே ஓட அதற்குள் கார் கிளம்பிச் சென்றுவிட்டது. தயாளன் திகைத்து நின்றார்.

பிள்ளைங்கள வாழ்த்தாம போய்ட்டாரேகூப்பிடவா?” என்றார் தயாளனின் மனைவி.

வேணாம், நாளைக்கு ரெண்டுபேரையும் மடத்துக்கு கூட்டிட்டுப்போவோம்என்றார் தயாளன்

கூடத்திலிருந்த அத்தனைபேரும் இயல்படைந்தனர். உடல்கள் தளரும் ஓசைகள். மெல்லிய பேச்சொலிகள். மூச்சொலிகள். நாற்காலிகள் உரசும் ஒலி. ஓரிரு சிரிப்பொலிகள்.

மணி தன் புல்லாங்குழல்களை அப்படியே விட்டுவிட்டு எழுந்து சென்றிருந்தார். அவருடைய மாணவன் அவற்றை எடுத்து பெட்டிக்குள் அடுக்கினான். மிருதங்கத்தை உறையில் இட்டனர். வயலின்காரர் பெட்டியுடன் எழுந்துவிட்டார்

நான்போலாமா?” என்றேன்

கோபாலன் பெருமூச்சுவிட்டார்

நாங்கள் தயாளனிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றோம். வெளியே கார்கள் முகப்பொளி சுழல வந்து ஆட்களை ஏற்றிச் சென்றன. எங்கள் காரை எடுத்துவர அறிவு சென்றார்

நான் சட்டென்று ஏதோ தோன்ற ராகவனைப் பார்த்தேன். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்து அரைவெளிச்சத்தில் பளபளத்தது

என்ன? என்ன?” என்றேன்

ஒண்ணுமில்லைஎன்றார்

கோபால்என்னாச்சு? ஏன்?” என்றார்

விடுங்கஎன்றேன்

ஏன்?

விடுங்க அப்றம் பேசலாம்

கோபாலன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். கார் வந்து நின்றது, ஏறிக்கொண்டோம்

கார் மெல்ல சாலையில் இறங்கியது. வண்ணவிளக்குகள் ஒளிர்ந்த நகரத்தெரு. முட்டிமோதும் மனிதர்கள். மிதந்தலையும் முகங்கள். வண்டிகளின் கிரீச்சிடல்கள். முட்டல்கள்,மோதல்கள். ஒலித்திரள். காட்சித்திரள். நடுவே ஒருசொல் இன்றி நாங்கள் சென்றுகொண்டிருந்தோம்.

***

 

 

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

 

முந்தைய கட்டுரைகுருவி, லூப்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–31