முதல் ஆறு [சிறுகதை]

அவன் முகப்பவுடரை கைக்குட்டையில் கொட்டி அதை நன்றாக மடித்து பாண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தான். பின்பக்கம் பாக்கெட்டில் வட்டச்சீப்பு. அவன் நின்றிருந்த இடத்தில் சாய்வெயில் விழுந்தது. முந்தையநாள் மழைபெய்திருந்தமையால் தரை நனைந்து ஆவி எழுந்தது. ஆகவே வெக்கையில் வியர்த்து ஊற்றியது.

பஸ் நிற்குமிடத்தில் நிழற்குடை ஏதுமில்லை. பெரிய அரசமர நிழல்தான். ஆனால் அந்த நிழல் எதிர்ப்பக்கம் முத்துசாமி நாடார் அண்ட் சன்ஸின் மிகப்பெரிய கட்டிடத்தின்மீது நிழலால் ஆன மரம்போல விழுந்து கிடந்தது. அதில் இலைகளின் அசைவு ஆயிரக்கணக்கான கண்களின் இமைப்பு போல தெரிந்தது.

அங்கே நின்றிருந்த அத்தனை பேரும் வியர்வையில் நனைந்திருந்தனர். எல்லாரையுமே அவனுக்குத் தெரியும். அணைஞ்ச பெருமாள் குலசேகரத்தில் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்துபவர். சித்ராதேவி பள்ளிக்கூட ஆசிரியை. ராஜன் ரப்பர்கடையில் வேலை பார்க்கிறான். மேலவிளை அருணாச்சலம் நாடார் சந்தையில் கருப்பட்டி விற்பவர். அவர்கள்தான் அவனிடம் பேசுபவர்கள். மற்றவர்கள் கண்கள் சந்தித்துக் கொண்டால் புன்னகைப்பவர்கள்.

தொலைவில் பஸ் வந்தது. ஆனால் அது வருவதற்கு முன்பாகவே அவன் நெஞ்சு படபடத்து கைகால்கள் தளர்ந்தன வாய் உலர்ந்துவிட்டது. முழுமூச்சையும் திரட்டுபவன் போல உடலை உந்தி சீப்பை எடுத்து தலையைச் சீவினான். கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தமாக துடைத்து மறுபக்கமாக மடித்துக்கொண்டான். பெருமூச்சுவிட்டான். தண்ணீர் குடிக்கவேண்டும் போலத் தோன்றியது

தக்கலை பஸ் வந்து கீரீச்சிட்டு நின்றது. அனைவரும் முண்டியடித்து ஏறினார்கள். அவன் கண்டக்டர் விசில் கொடுப்பது வரை காத்திருந்தான். வண்டி கிளம்பியதும் கம்பியைப் பிடித்து தொற்றி மேலேறினான். படியில் நின்றபடி தலையை மிடுக்காகத் தூக்கி பக்கவாட்டில் ஒழுகிச் செல்லும் வீடுகளைப் பார்த்தான். அவன் முகத்தில் ஒளி அலையடித்தது

ஐந்து நிமிடங்கள் அவன்மேல் எதையோ எடையாக வைத்தது போல் இருந்தது. அதன் பின் கையை திருப்பி வாட்சில் நேரம் பார்த்தான். ஒன்றும் பதியவில்லை. அதன்பின் மெல்ல தளர்ந்து இயல்பு நிலையை அடைந்தான். அப்போது தான் சந்தேகம் வந்தது. யாரும் பார்க்கவில்லையோ? முதலில், அவள் பஸ்ஸில் இருக்கிறாளா? அவள் இல்லை என்ற எண்ணம் அடுத்து ஏற்பட ஏமாற்றத்தில் மனம் சுருங்கிவிட்டது. ஒரு சில கணங்களில் கண்ணீரே வந்துவிட்டது

அவன் கையைத் தூக்கி தலையை வருடினான். அவ்வசைவை மேலும் இயல்பாக ஆக்கி திரும்பி அவளைப் பார்த்தான். அவன் உள்ளம் பதறி, நெஞ்சு படபடக்கத் தொடங்கி ,கண்கள் முற்றாகவே பார்வையை இழந்து ஓரிரு கணங்கள் கழித்து மீண்டன. அவள் அங்கே அமர்ந்திருந்தாள், கடைசி இருக்கைக்கு முந்தைய இருக்கையில், சன்னலோரம் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய காதோரமும் நெற்றி முகப்பிலும் மென்மயிர்ச் சுருள்கள் காற்றிலாடிக் கொண்டிருந்தன. கன்னத்தில் மெல்லிய பரு ஒன்று புதிதாக எழுந்திருந்தது. மெல்லிய உதடுகள் சற்றே காய்ந்து சிவந்த பாலிதீன் தாள் போல ஒட்டியிருந்தன. சன்னலின் ஒளியில் கன்னமும் கழுத்தும் நெற்றியும் மிளிர்ந்து கொண்டிருந்தன. கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி நலுங்கியது. நீலநிறமான தாவணிக்கு மேல் சங்கிலியின் பதக்கம் அசைந்தது. காதுகளில் ஜிமிக்குகள் ஆடின.

“போலாம் போலாம், முன்னாடி போலாம்… முன்னாடி போனாலும் எல்லாம் தெரியும்…”

அவன் திடுக்கிட்டு முன்னால் நகர்ந்தான். அவள் ஒருகணம் அவனை திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் வெளியே பார்த்தாள்.

அந்த கண்டக்டருக்கு அவனை நன்றாகவே தெரியும். கருப்பாக, மிக ஒல்லியாக பெரிய குரல் வளையுடன் இருப்பான். அவன் தன் கண்களை நேருக்கு நேர் சந்தித்தால் புன்னகைத்து பணிவாக பார்வையை விலக்கிக்கொள்வான். ஆனால் அவன் பேசுவதெல்லாம் தன்னை நோக்கித் தான் என்று அவனுக்கு தெரிந்திருந்தது.,

அவள் அவனை பார்த்த பார்வையில் வெறும் முகஅறிமுகம் மட்டும்தான் இருந்தது. அரைக்கணம். ஒரு பார்வை, வெறும் பார்வை, அவ்வளவுதான். ஆனால் அவளுக்கு அவனை தெரிந்திருக்காமலிருக்க வாய்ப்பே இல்லை. இரண்டு ஆண்டுகளாக அவன் அவள் செல்லும் பஸ்சிலேயே சென்று வந்து கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும். காலையிலும் மாலையிலும். பெரும்பாலும் தவறவிட்டதே இல்லை. அது தற்செயல் அல்ல என்று தெரியாமலிருக்காது.

ஆனால் அவள் கண்களில் அது தெரியவில்லை. கண்கள் லேசாகச் சுருங்கினவா? ஒவ்வாமை தெரிந்ததா? ஒவ்வாமையா? இருக்கலாம். இரண்டு ஆண்டுகளில் அவள் அவனை பொருட்படுத்திய ஒரு கணம்கூட இல்லை. ஒருமுறைகூட, ஒருகணம்கூட அவள் இயல்பாக தானாக திரும்பி அவனைப் பார்த்ததில்லை. அது ஒவ்வாமைதான். அவனை அவள் வெறுக்கிறாள். ஆனால் அந்த வெறுப்பைக் காட்டக்கூட அவன் பொருட்படுத்தப்பட வேண்டியவன் என நினைக்கவில்லை.

அவன் சோர்ந்து நிற்கமுடியாமல் கம்பியைப் பிடித்துக் கொண்டான். கண்ணீர் வந்தது. தலைகுனிந்து கண்களை கொட்டினான். தொண்டை கரகரவென்றது. கீழே சன்னல் வழியாக கட்டிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பஸ் திருவட்டார் நோக்கிச் சென்றது. அங்கிருந்து மார்த்தாண்டம். அங்கிருந்து தக்கலை.

தக்கலையில் இருந்து அவள் இன்னொரு டவுன்பஸ்ஸில் ஏறி நாகர்கோயில் சுங்கான் கடையிலுள்ள  ஐயப்பா பெண்கள் கல்லூரிக்குச் செல்வாள். அங்கே பி.எஸ்.ஸி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவளுக்கு கல்லூரி முடிய சாயங்காலம் ஐந்துமணி ஆகிவிடும். அவள் ஐந்து பத்துக்கு கல்லூரி முகப்பில் உள்ள அரசமரத்தடியில் பஸ்சுக்காக நிற்பாள். அப்போது அவன் அந்த ஆலமரத்தின் மறுபக்கம் ஒரு டீக்கடையில் சற்றே மறைந்து நின்றிருப்பான். அவள் வந்து நின்ற பின்னரும் வெளியே வரமாட்டான். அங்கிருந்தே அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான்.

அவள் எப்போதுமே நீலத்தாவணிதான். அந்தக் கல்லூரியில் அது சீருடை. அத்தனை பெண்களுக்கும் ஒரே சீருடை. ஆனால் அவனால் அவளை முதற்கணமே கண்டுபிடித்துவிட முடியும். ஓர் அசைவே போதும். அவன் உள்ளம் கொப்பளிக்க தொடங்கிய பின்னர்தான் தன் கண்கள் அவளைக் கண்டுவிட்டன என்பதையே அவன் மனம் உணரும்.

தக்கலை பஸ் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். ஒரு மாணவர் கூட்டத்தை அப்படியே இரண்டு கைகளாலும் நெல்லை எடுப்பதுபோல அள்ளி எடுத்துக்கொண்டு வரும். அதில் அவள் ஏறவேண்டும். ஏறுகிறாளா என்று பார்த்துக் கொண்டு நிற்பான். பலசமயம் ஒன்றிரண்டு பஸ்களை அவள் தவறவிட்டு விடுவாள். முகம் சுளித்து திரும்பி வந்து மீண்டும் நிற்பாள். சலிப்புடன் ப்ச் என்று சொல்லி சாலையையே பார்ப்பாள். அவள் பஸ்சில் ஏறியதை உறுதி செய்துகொண்ட பின் அவன் அந்த பஸ்ஸை நோக்கிச் செல்வான். அது உந்தி எழுந்ததுமே கம்பியில் தொற்றிக் கொள்வான். “ஏலே விளுந்து சாகாதே… விளுந்து சாகாதேலே… அப்பனம்மை பைசா குடுத்து படிக்க வைக்கதாக்கும்”

அவனுடைய கல்லூரி மேலும் ஒரு நிறுத்தம் கடந்து அப்பாலிருந்தது. ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் பெண்களுக்கு இடமில்லை. ஆகவே அங்கே படித்த பையன்களில் பெரும்பாலானவர்கள் ஐயப்பா கல்லூரி முகப்பில் வந்து நின்று பஸ் பிடிப்பார்கள். ஒருசாரார் அப்படியே விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ் பக்கமாகச் செல்வார்கள். சிலர் பஸ்பிடித்து ஹோலிகிராஸ் கல்லூரி வரைக்கும் செல்வது கூட உண்டு. சில பையன்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதையும் அவனிடம் சொல்லியிருந்தார்கள். அவர்களை பாராக்காரர்கள் என்றும் பூவன் கோழிகள் என்றும் பொதுவாகச் சொல்வார்கள்.

ஐயப்பா காலேஜ் பெண்கள் பொதுவாக பஸ் நிறுத்துமிடத்தில் உள்ள கடைகளில் எதையும் வாங்குவதில்லை. வாங்கினால் கூட அவசியத்திற்கு பேனா பென்சில் ரப்பர் பேப்பர் ஏதாவதுதான். ஆனால் அங்கே பல கடைகள். பீடி சிகரெட் விற்பவர்கள். சோடா கலர் விற்கும் கடைகள். எல்லாமே பூவன் கோழிகளுக்காக. ஒவ்வொரு பையனும் ஒவ்வொரு வகை. எல்லாருமே இளமை ஊஞ்சலாடுகிறது கமலஹாசனாகவோ, முள்ளும் மலரும் ரஜினிகாந்தாகவோ தன்னை கற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் கூட்டம் நல்லதுதான். ஏனென்றால் அங்கே ஒரு பையன் வந்து பஸ்சுக்காக காத்து நிற்பதை எவரும் தனியாக கவனித்துப் பார்ப்பதில்லை. ஒருமணி நேரம் நின்றால் கூட எவர் கண்ணுக்கும் படுவதில்லை. பெரும்பாலானவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. கூட்டத்திலேயே ஒவ்வொருவரும் தனித்தனியாக இருந்தனர். பதற்றம், காத்திருப்பு, சலிப்பு, எதிர்பார்ப்பு, பின்னர் பரவசம். பெரும்பாலும் ஓரிரு கண்சந்திப்புகள்தான். ஒரு மெல்லிய புன்னகை கிடைத்தால் அது தெய்வம் வந்து இறங்கியதுபோல.

அவள் தக்கலை வந்து இறங்கி அடுத்த பேருந்து நிலையத்தில் பெண்கள் பகுதியில் நின்றிருப்பாள். அவன் அருகே ஆண்கள் பகுதியில். அங்கே பஸ் வந்து சென்றுகொண்டே இருக்கும். எதிரே கணேசன் டீ ஸ்டாலில் பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும். இளையராஜாவின் புதிய பாடல்கள். “என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உனை பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ.”

அவன் அந்தப் பாடலை முதலில் கேட்டபோது அவனுக்காகவே பாடப்பட்டது போல் உணர்ந்தான். சிட்டுக்குருவி படம் நாகர்கோயில் ராஜேஷில் வெளியாகியது. சுமித்ரா நடித்தது. அவளை அவனுக்குப் பிடிக்காது. குண்டான குள்ளமான கதாநாயகி. ஆகவே அந்தப்படத்தை இடைவேளை வரை பார்த்துவிட்டு கிளம்பிவிடுவான். அந்தப்பாடல் எந்நேரமும் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இளையராஜாவின் எல்லாப் பாடல்களுமே அவனை பித்துப்பிடிக்கச் செய்தன. “நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை”. “ஒரேநாள் உனைநான் நிலாவில் பார்த்தது உலாவிடும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது”

அவை முந்தைய எம்.எஸ்.வி பாடல்கள் போல் இல்லை. ஏனென்றால் அவற்றை அவன் அப்பாவும் சித்தப்பாக்களும் மாமாக்களும் அத்தைகளும் கேட்கவில்லை. அவர்களின் மனம் படிந்த தடமே இல்லாத புதிய பாடல்கள் அவை. இளையராஜா அவனுக்காகவே அவற்றை போட்டார். பொங்கியெழும் வயலின்கள், ஒழுகிச்செல்லும் குழலொசை, துடித்துத் துடித்து நின்றிருக்கும் கித்தார். அவை மயங்க வைத்தன. கனவிலாழ்த்தின. ஏங்கி நிறைந்து கண்ணீர் மல்கச்செய்தன.

அத்தனை பாடல்களிலும் என் கண்மணி உன் காதலி பாடலின் இசை கலந்திருந்தது. ஏதேனும் ஒரு வயலின் கீற்றல், கித்தார் துணுக்கு அதை நினைவூட்டியது. சட்டென்று பிறபாடல்களில் இருந்து இசையை திரட்டிக்கொண்டு அதுவே எழுந்து வந்தது. ”என் கண்மணீ உன் காதலி!” அவன் கைகள் நடுங்கத்தொடங்கும். பான்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொள்வான். அங்கே சீப்பு தட்டுபடும். அதன் மென்மையான முள்பரப்பில் விரலை உரசிக்கொள்வான். உள்ளத்திலேயே அந்த உரசலை உணரமுடியும்.

அடிக்கடி தலைசீவி கைக்குட்டையால் முகம்துடைப்பான். கைக்குட்டையில் முகப்பவுடர் வைத்திருப்பது என்பது ஓர் அடையாளம்.

“கர்ச்சீப்பிலே பௌடர் ஏறுததாக்கும் மனசிலே மற்றது ஏறுதது. ஒரு மணமுல்லாடே அது” என்று ராமபத்ரன் சொல்வான். “இவன் முகத்த பாத்தியா? பளிச்சுன்னு இருக்கு. இவனுக்க கர்ச்சீபிலே பௌடர் உண்டு… சத்தியமாட்டு உண்டு”.

“இல்ல… இல்லலே” என்று அவன் சொன்னான். “நான் முகம் களுவினேன்”.

“பிடியுங்கலே இவனை”.

ராபின்சன் ,சுந்தரன் ,குமார் ஆகியோர் அவனை அவனை பிடித்து அமுக்க ராமபத்ரன் அவன் பாண்டுக்குள் கைவிட்டு கைக்குட்டையை எடுத்தான். பிரித்தபோது உள்ளே பௌடர்.

“டே, அரைக்கிலோ வச்சிருக்காண்டே” அவனை உலுக்கி “ஆருடே?பௌடர் ஆருக்குடே? சொல்லுடே” என்றான்.

”இல்ல மக்கா, சத்தியமாட்டு இல்லை”.

“சொன்னா உனக்கு அடிவிளாது பாத்துக்க… ”

அவன் “சத்தியமாட்டு இல்லடே” என்றான்

“சும்மா ஒருத்தன் கர்ச்சீபிலே பௌடர் வைப்பானா?”

“அம்மை மேலே சத்தியமாட்டுடே, சும்மாதான்”

“செரி எங்க போற? இது காச்சலு இல்லை பீச்சலு. ஒளிச்சு வைக்கவே முடியாது பாத்துக்க”.

“அவனுக்கு பயமாக்கும்லே, நாம கேறி இடிச்சுப் போடுவோம்ணு…”.

“நமக்கு ஊரெல்லாம் விளைஞ்சிருக்கு. ஒண்ணொண்ணா விளுந்திட்டிருக்கு…” .

“லே, பெண்ணுக இப்டி கர்ச்சீபிலே பௌடர் வைப்பாளுகளா?”.

அவனுக்கு மனம் படபடத்தது. வேறெங்கோ நோக்கி செவிகூர்ந்தான்.

“அவளுக பத்தாம் கிளாசிலேயே வச்சுகிடுவாளுக. ஆனா அது இதுக்க அடையாளம் இல்ல”.

“பின்ன? இதுக்க அடையாளம் ஏதுலே?”

அவன் அந்தப் பேச்சை கேட்காதவனாக பக்கவாட்டில் மாமரத்தைப் பார்த்தான். உடம்பே காதாக இருந்தது.

“பலது உண்டு, அதில ஒண்ணு அதுக்குபிறவு அவளுக தனியா வரமாட்டாளுக. ஒரு கூட்டுகாரிய பிடிச்சுகிட்டு அவளுக்க கிட்ட பேசிட்டே இருப்பாளுக. சிரிப்பாளுக. சாதாரணமா இருக்க மாதிரி நடிப்பாளுக. கண்ணு சுத்திக்கிட்டே இருக்கும்..”

“ஏம்லே ராமபத்ரா?”

“ஏலே அவளுக தனியாட்டு வந்தா முகத்திலே எல்லாமே தெரிஞ்சிரும்லா? பதற்றம், பயம், ஆர்வம், எல்லாம். அவளுகளுக்க சக்திண்னு சொல்லுதது எனக்கு இதெல்லாம் மயிரே போச்சுங்கிற நடிப்பாக்கும். சாதாரணமா இருக்கேன், எனக்கு இவனெல்லாம் ஒரு சுக்கும் இல்லேன்னு காட்டணும். அதுக்கு நல்ல வளி கூட்டுகாரிக்கிட்டே பேசுதது, சிரிக்குதது. அதுக்குன்னு ஒரு கூட்டுகாரிய பிடிச்சுகிடுவாளுக. அதுக்கும் வந்து வாய்க்கும் வாபெளந்த கூட்டுகாரிக. அதுகளுக்கு ஒண்ணுமே தெரியாது. மூஞ்சியும் இதைவிட ரொம்ப சுமாராத்தான் இருக்கும். அதெல்லாம் சரியா பாத்துத்தான் செலெக்ட் பண்ணுவாளுக”

அவன் அவளைப்பற்றி நினைத்துக் கொண்டான். அவள் எப்போதுமே தனியாகத்தான் வந்தாள். எப்போதுமே சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அப்பம் எப்படே தனியாட்டு போவாளுக?”

“அது சங்கதி செட்டான பிறவு” என்றான் ராமபத்ரன். “டப்புன்னு அந்த கூட்டுகாரிய களட்டிவிட்டிருவாளுக”

அவன் நெஞ்சு நின்றேவிட்டது என்று தோன்றியது. கைகள் நடுங்க ஒரு மாமர இலையை எடுத்துக்கொண்டான். அவளுக்கு எவராவது இருக்கிறார்களா? ஒவ்வொரு கணம் கணமாக நினைவிலிருந்து எடுத்தான். இல்லை என்று தோன்றியது. இல்லவே இல்லை. வாய்ப்பே இல்லை. ஆனாலும் உள்ளம் நுணுகி நுணுகி தேடியது. அப்படியென்றால் ஏன் அவள் தன்னந்தனியாக வருகிறாள்? ஏன் ஒருமுறைகூட அவனை பார்க்கவில்லை? ஏன் அவனைப்பற்றி அக்கறையே கொள்ளவில்லை?.

அப்படியென்றால் யாரோ இருக்கிறான். யாரோ ஒருவன். அவன் அழகன். ஆண்மையானவன். உயரமானவன். நல்ல வேலையிலும் இருக்கக்கூடும். அவனை தன் கண்முன் கண்டுவிட்டான். உடலே உதறி நடுங்கிக் கொண்டிருந்தது. வெறியுடன் அவன்மேல் பாய்ந்து அவனை சதையும் ரத்தமும் பிய்ந்து தெறிக்க அடிக்கவேண்டும். சிதைத்து கூழாக்கவேண்டும்.

பின் அவன் மனம் அடங்கியது. அவனை ஏன் கொல்லவேண்டும்? அவன் அதிருஷ்டக்காரன். எனக்குத்தான் எதற்கும் யோகமில்லை. தகுதி இல்லை. படிப்பும் சரியாக வரவில்லை. இந்த எம்.ஃபில் முடித்தால் பி.ஹெச்.டி செய்யவேண்டும். அதன்பிறகும் வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை. பழைய சட்டை, பழைய பான்ட். எத்தனை துவைத்து அயர்ன் பண்ணி போட்டுக்கொண்டாலும் பழையது பழையதுதான். அவன் கண்ணீரை அடக்கிக்கொண்டான்

தக்கலையிலிருந்து அவள் ஊருக்குச் செல்ல இரண்டே பஸ்தான். ஒன்று குலசேகரம் வழியாக. அது டவுன்பஸ், நின்று நின்று போகும். ஆகவே அதில் ஏறுவதில்லை. இன்னொன்று 16 ஏ. அது வேர்க்கிளம்பி, திருவட்டார் வழியாகச் செல்லும். அதில்தான் அவள் செல்வாள். அதில் பெரும்பாலும் கூட்டமிருக்காது. வேர்க்கிளம்பியில் பாதிப்பேர் இறங்க கொஞ்சபேர் ஏறிக்கொள்வார்கள்.

சீட் எப்படியும் கிடைத்துவிடும். ஆனால் அவன் உட்கார்வதில்லை. எங்கே அமர்ந்தாலும் அவளைப் பார்க்க முடியாது. முன்னால் அமர்ந்தால் ஒரு பின்னுணர்வாகவே அவள் நீடிப்பாள். பின்னால் அமர்ந்தால் அவளுடைய கூந்தலையும் கழுத்தோரச் சுருள்முடியையும் பக்கவாட்டில் தெரியும் கன்னங்களையும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அவன் சன்னல் வழியாக சாலையை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் எப்போதுமே வெளியே பார்க்கிறாள். வெளியே என்னதான் இருக்கிறது? ஒரே வீடுகள். குமரிமாவட்டத்தில் சாலையை ஒட்டியே வீடுகளைக் கட்டுகிறார்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக நாகர்கோயில் வரை ஒரே தெருபோலத்தான். எல்லா வீடுகளையும் கடந்த ஏழாண்டுகளாக திரும்பத்திரும்ப பார்த்துவிட்டான். தெரிந்த முகங்கள். குழந்தைகள் பெரிதாகிவிட்டன. தென்னைமரங்கள் தலைக்குமேல் எழுந்துவிட்டன.

ஒரேவழியில், ஒரே நேரத்தில் அந்த பஸ் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு மாபெரும் பெண்டுலம்போல. பேச்சிப்பாறை, குலசேகரம், திருவரம்பு ,திருவட்டார், ஆற்றூர், வேர்க்கிளம்பி, அழகியமண்டபம், தக்கலை. மீண்டும் தக்கலையில் இருந்து அழகியமண்டபம் வேர்க்கிளம்பி வழியாக பேச்சிப்பாறை. மாறாத பயணம். ஒரே ஒருமுறை சிறிய விபத்து நடந்திருக்கிறது. ஏழெட்டுமுறை பிரேக்டவுன் ஆகியிருக்கிறது. மற்றபடி ஒன்றுமே நடப்பதில்லை.

அவள் அந்த பஸ்சில் வரத்தொடங்கியும் மூன்று வருடங்கள் ஆகின்றன. அவன் அவளை பார்த்தும் மூன்றாண்டுகள் இருக்கும். இயல்பாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் அவள் முகத்தில் சாலையோர இளவெயில் விழுந்து கன்னங்கள் மின்னுவதைக் கண்டான். அன்றும் ஒரு சிறிய பரு இருந்தது. அன்றும் உதடுகள் சிவப்பாக உலர்ந்து ஒட்டியிருந்தன. அன்றும் அவள் வெளியே நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றும் இப்படியேதான் கூந்தல் சுருள்கள் அலைபாய்ந்தன. அன்று தொடங்கியது. எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நீடிக்கிறது. சென்றுகொண்டே இருக்கிறது காலம். பெண்டுலம் முன்னும் பின்னும் வரலாம், காலம் முன்னால் மட்டும்தான் செல்லும்.

வண்டி ஆற்றூரை அடைந்தபோது அதன் விலாவில் யாரோ ’டப் டப் ‘ என்று தட்டினார்கள். ஒரு போலீஸ்காரர். கண்டக்டர் சென்று அவரிடம் பேசிவிட்டு ஏறினார். “சார், வண்டி வேர்க்கிளம்பி வளி போவாது. அங்கிண இந்து-கிறிஸ்தவச் சண்டை நடக்குது. போலீஸு எறங்கியிருக்கு. வண்டி வேறவளியாட்டு சுத்திப்போகும்… வேர்க்கிளம்பி போவாது…”

“அளகியமண்டபம் போவுமா? என்று கிழவி ஒருத்தி கேட்டாள்

“போவாது, நேரா பத்மநாபபுரம் போயி தக்கலைக்கு போவும்…எந்த வளியா போவுதுண்ணு இப்ப சொல்லமுடியாது. சுத்திப்போவும்”

ஓரிருவர் இறங்கினார்கள். கிளவி “நீக்கம்புலே போவானுக… பஸ்சிலே போவ வளியில்லையே” என்றபடி இறங்கினாள்

பஸ் திரும்பி புதியவழியில் சென்றது. அது சிறிய பாதை. வெறுமே சல்லிக்கல் போட்டு செம்மண்ணால் இறுக்கப்பட்டிருந்தது. பஸ்ஸில் இருபக்கமும் செறிந்த தென்னந்தோப்புகள். சற்று தூரம் போனபிறகு வீடுகளே இல்லை. பச்சைநிழல் நிறைந்திருந்த தோட்டங்கள். சாலையின் மேலேயே மாமரங்களும் பலா மரங்களும் கவிந்திருந்தன. பஸ்ஸுக்குள் விழுந்து அலையலையாகச் சென்று கொண்டிருந்த ஒளியே நிறம் மாறிவிட்டிருந்தது

ஆழமான ஆறு தெரிந்தது. அதன்மேல் பாலத்தில் பஸ் சென்றது. ஆற்றில் ஒளியே நீர் என ஓடிக்கொண்டிருந்தது. பாறைகள் நடுவே வெண்ணிறமான நுரை. இருபக்கங்களிலும் பெரிய கோட்டைபோல பசுமை. இலைகள் ஒளியில் துள்ளின.

அவன் தன்னை மறந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.

“சார் இது எந்த ஊரு?” என்றார் ஒருவர்

“இது முதலாறு…”

“இங்கிண இருந்து சாம்பமூட்டுக்கு போலாமா?”

“எறங்கி கேட்டுப்பாருங்க… பக்கம்னாக்கும் தோணுது”

அவர் இறங்க பஸ் மீண்டும் சென்றது.

முதலாறு. கீழே ஓடுவது திருவட்டாறிலிருந்து குழித்துறை செல்லும் ஆறுதான். ஆனால் இங்கே அது முதலாறுபோல. சின்னஞ்சிறிய மண்வீடுகள். பசுக்கள் திகைத்துப்போய் பஸ்சை பார்த்தன.

ஒரு வண்டுபோல வானில் சுழன்று கொண்டே இருப்பதாகத் தோன்றியது. இந்த சாலையில், சற்றே திசைமாறினால் இப்படி ஓர் அதிசய நிலம் இருந்திருக்கிறது. சாலையின் வலச்சரிவில் மண் இறங்கி இறங்கிச் சென்று கீழே ஆழத்தில் ஆற்றின் வெள்ளிவரியைக் காட்டி மடிந்து மேலேறி மரங்களாகி வானை தொட்டு நின்றது. தெளிந்த வானம். ஒளிகொண்ட வெண்ணிற முகில்கள். காற்றில் பச்சைவெளி அலைகொண்டது

சுற்றிச்சுற்றி சென்றபடியே இருந்தது பஸ். ஓர் இடத்தில் சாலை அப்படியே முடிந்து இடைவழியாகியது. செம்மண் பாதை மரங்கள் வழியாகச் சென்றது

“தப்பிப்போச்சோ?”என்றான் கண்டக்டர்

“இங்க எல்லா வளியும் ஒண்ணுபோலே” என்றார் டிரைவர் ‘எளவு முதலாறுன்னு ஒரு ஊரு இருக்கப்பட்டதே இப்பம்தாம்லே தெரியும்”

பஸ் உறுமி உறுமி பின்னடைந்து திரும்பி மீண்டும் செல்லத்தொடங்கியது. கீழே தெரிந்த வானில் ஒரு செம்பருந்து ஒளிவிட்டபடி சுழன்றது. பசுமையில் அதன் நிழல் அலையலையாகப் பறந்தது. ஓசையே இல்லை. ஓசையில்லாமையால் ஒளி மேலும் உயிர்கொண்டிருந்தது.

“ஏலே ,இது முதலாறுல்லா?”

முதலாறின் மறுபக்கம் பஸ் மீண்டும் வந்திருந்தது.

“லெஃப்ட் ஒடிச்சிருக்கணும் அண்ணாச்சி”

“பாப்பம்டே. புதிய வளி, நாம என்னத்த கண்டோம்”

வண்டி மீண்டும் சுழன்று சிறிய வழியொன்றில் ஏறி படகுபோல அசைந்து பழைய பாதையை அடைந்தது. எத்தனை ஆயிரம் மரங்கள். அனைத்தும் ஒளியிலாடி தியானத்தில் என நின்றிருந்தன. கொஞ்சம் ஒளியை மங்கவைத்தால் இதை நிலவொளிக்காட்சி என்று சொல்லிவிடமுடியும்.

சரிவெங்கும் மஞ்சள்நிறத்தில் ஆவாரம்பூ பூத்து நிறைந்திருந்தது. வெயிலெழுந்த பின்னரும் பட்டாம்பூச்சிகள் எழுந்து சுழன்று பறந்து கொண்டிருந்தன. மஞ்சள் நிறமானவை, தவிட்டுநிறச் சிறகுகள் மேல் கரிய கண்கள் கொண்டவை, மீன்கொத்தி போல பளிச்சிடும் நீலவண்ணம் கொண்டவை. காகங்கள் எழுந்தெழுந்து அமைந்தன. மைனாக்கள் மண்ணிலிருந்து எழுந்து மரங்களை நோக்கிச் சிறகடித்துச் சென்றன

ஓர் ஓடை பாறைகள் வழியாகத் துள்ளி சரிவிறங்கி காட்டுக்குள் பொழிந்தது. அந்த ஓசை துண்டாக வந்து செவியில் விழுந்து மறைந்தது. ஒளி வானிலிருந்து பொழிகிறதா இல்லை வானையும் மண்ணையும் ஒளியின் திரைப்பரப்பில் வரைந்திருக்கிறார்களா?

மெல்லிய சத்தம், பல்லியின் ஓசை போல. அவன் தன் பார்வையை விலக்க விரும்பவில்லை. மீண்டும் அந்த பிடிவாதமான சத்தம். அவனை எவரோ அழைப்பதுபோல. அவன் திரும்பிப்பார்த்தான்.

அவள்தான். பஸ்சின் கம்பியில் பைசாவால் தட்டி அவனை அழைத்தாள். இரண்டு இருக்கை தள்ளித்தான் அவள் அமர்ந்திருந்தாள். எழுந்து வந்திருப்பாள்போல. பஸ்சில் அப்போது அவர்கள் இருவர்தான் பயணிகளாக இருந்தனர்

“இது எந்த எடம்?”

“இது முதலார்… இப்டியே வண்டி சுத்திப்போய் பத்மநாபபுரம் போவும்”

“லேட்டாவுமா?”

“போயிடும்”

“இண்ணைக்கு எனக்கு பரிட்ச்சையாக்கும்”

“பத்துமணிக்குள்ள போவலாம்… பரிட்சை எப்ப?”

”பதினொரு மணிக்கு”

“பிறவென்ன? சந்தோசமா இருங்க… வெளியே பாருங்க”

அவள் புன்னகைத்தாள்.

அவனும் புன்னகைத்தான். அவனால் அத்தனை தெளிவாக, தன்னம்பிக்கையாக பேசமுடிகிறது. அவனால் அவள் கண்களை நேருக்குநேர் பார்க்க முடிகிறது.

அவன் வெளியே திகழ்ந்து கொண்டிருந்த பசுமையையே பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளம் விம்மிக்கொண்டே இருந்தது. ஒரு சொல்கூட அதில் நிலைகொள்ளவில்லை. காற்று சுழன்று வீசும்போது படபடக்கும் கொடி பறப்பதுபோலிருந்தது

“சுத்திப்போட்டே அண்ணாச்சி”

“இருடே, இப்பம் வளிய பிடிச்சிடுதேன்… ஒருமாதிரி மேப்பு பிடிகிட்டிப்போச்சு”

வண்டி மீண்டும் பின்னடைந்து புதிய ஒரு பாதையில் சுற்றத்தொடங்கியது. முதலார் மின்ஏற்று நிலையம் தெரிந்தது. மிகமிக ஆழத்தில் ஓடிய பேச்சிப்பாறை கால்வாயில் நீர் துள்ளி சுழித்தோடியது. மிக விளிம்பில் நின்று ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.

“பிடிச்சுப்போட்டேம்லே”

தென்னை ,தென்னை ,தென்னை, தென்னை. தென்னை மட்டும்தான். அவ்வப்போது வாழை. இரண்டும் ஒரே மரத்தின் இரண்டு தோற்றங்களா என்ன? இரண்டும் நீர் நீர் நீர் என்று காட்டுபவை. அடர்பசுமை கொண்டவை. ஒளியில் பளபளக்கும் இலைகள் கொண்டவை. குளிர்ந்த நீர் நிறைந்த தடிகொண்டவை.

“பத்மநாபபுரம்! பத்மநாபபுரம்!”

பத்ம்நாபபுரம் சந்திப்பில் ஏகப்பட்டபேர் ஏறி வண்டி நிறைந்தது. தக்கலையில் சென்று நின்றபோது பஸ் முற்றாக ஒழிந்தது. நாகர்கோயில் பஸ் கிளம்பி நின்றிருந்தது. அவள் திரும்பிப் பார்க்காமல் ஓடி அதில் ஏறிக்கொண்டாள். அவனும் ஏறி அதன் வாசல் அருகே நின்றான்.

தொங்கியபடி காற்றில் மிதந்து செல்வதுபோல அவன் நாகர்கோயில் சாலையில் சென்றான். வேளிமலை பச்சை அடுக்குகளாக எழுந்து எழுந்து வந்துகொண்டிருந்தது. வெயிலில் நனைந்த உச்சிமலைகள் பிரமித்தவை போல அமைந்திருந்தன

சுங்கான் கடை ஐயப்பா கல்லூரி. கொத்துக்கொத்தாக பெண்கள் இறங்கினர். அவன் இறங்கி இறங்குபவர்கள் செல்ல வழிவிட்டு நின்றான். அவள் இறங்கி நின்று தாவணியை சீரமைத்துக்கொண்டாள். கண்கள் சுழன்று அவனை வந்து தொட்டன. மிகச்சின்ன புன்னகையில் உதடுகளின் இருபக்கமும் சிறு மடிப்பு விழுந்தது. கண்களில் ஒளி தோன்றியது. வரட்டுமா என சிறு தலையசைப்பு.

அவள் சென்ற பின்னரும் அவன் அப்படியே நின்றிருந்தான். பஸ் மெல்ல முன்னகர்ந்ததும் தொற்றி ஏறிக்கொண்டு பறந்து சென்றான்.

***

முந்தைய கட்டுரைகைமுக்கு, ஆழி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசின்னஞ்சிறு வெளி