குருவி [சிறுகதை]

நாகர்கோயிலில் இருந்து டிஸ்டிரிக்ட் எஞ்சீனியர் என்னை அழைத்ததாக சிவன் சொன்னான். “டி.ஈ யா? என்னலே சொல்லுதே?” என்றேன்.

“அவருதான்… இருக்கேளாண்ணு கேட்டார்.”

“நீ என்ன சொன்னே?”

“சாய குடிக்க போயிருக்காருண்ணு சொன்னேன்.”

“செரி, அந்தமட்டுக்கும் ஒரு வெவரம் உனக்கு இருக்கே.”

பதற்றமாக இருந்தது. எதற்காக? ஏதாவது சிக்கலாகி விட்டதா? ஆனால் எல்லா லைனும் சரியாக இருந்தது. ஒன்றும் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை.

நான் பதற்றத்தை கூட்டிக்கொண்டே செல்ல, ஃபோன் அடித்தது. எடுப்பதற்குள்ளாகவே உள்ளுணர்வு சொன்னது, அவர்தான்.

அவரேதான் “சார் குட்மார்னிங். இல்ல குடீவனிங்.”

“ஆறுமுகமா?”

“ஆமா சார்”

“நம்ம மாடன்பிள்ள இப்ப எங்க இருக்கான்?”

நான் ஆறுதல் அடைந்தேன். “அவன் அப்டி தினமும் வாறதில்லை சார். உள்ளதைச் சொன்னா அவன் வரவேண்டாம்னாக்கும் இங்க ஜேஈ உட்பட எல்லாரும் சொல்லியிருக்கது” என்றேன். “வந்தா சலம்பலாக்கும்… பெரிய சீண்டிரமாக்கும்.”

“அவனை பிடிக்கணும்டே… உடனே அவன் வேணும். நாளைக்கே அவன் நாகருகோயிலுக்கு வந்தாகணும்.”

“சார், அப்டி உடனேன்னா?”

“நான் சொல்லுதேன்லா… ஜி எம் கூப்பிட்டு சொல்லியிருக்காரு… அவன் வேணும்.”

நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன். என் கோபத்தைப் புரிந்துகொண்டு அவரே விளக்கினார்.

“ஆப்டிக்கல் கேபிளுக்கு ஒரு நேஷனல் பிளானு வே, காஷ்மீர் டு கன்யாகுமாரி. பிளான் கேகேன்னு பேரும் வச்சாச்சு. நாளைக்கு செண்டிரல் கம்யூனிகேஷன்ஸ் மினிஸ்டர் கன்யாகுமாரியிலே அந்த பிளானைத் தொடங்கிவைக்கிறார்.”

“தெரியும்” என்றேன்.

“அதுக்குண்டான நாடகம் முளுக்க ஸ்கிரிப்டா எளுதி குடுத்தாச்சு. டெலிவிஷன்ல காட்டணும்லா? முதல்ல ரயில்வே ஸ்டேஷன்ல வரவேற்பு. ஆபீஸ்ல ஒரு திறப்புவிளா. இங்க உள்ள ஆபீசர்களிட்ட ஒரு டிஸ்கஷன்… எல்லாம் போஸுதான். தொழிலாளர்களிட்ட ஒரு சந்திப்பு உண்டு… ஆனா கடைசியிலே ஒரு ஐட்டம் இருக்கு. கேபிளை ஒருத்தன் ஸ்பிளைஸ் செய்யுதான்… அங்க மினிஸ்டர் போயி பாத்து கைய நீட்டி அவனுக்கு ஆலோசனை சொல்லுதாரு.. இவரு பத்தாம்கிளாசு படிச்சவரு… இவரு சொல்லியில்லா அவன் செய்யணும்.. மினிஸ்டராக்குமே.”

“சரி” எனக்கு அப்போதும் புரியவில்லை.

“அந்த கேபிளை டிவியிலே காட்டுவானுக. நாடு முளுக்க. அதுக்கு குளோஸப்பு உண்டு. இங்க நம்ம பயலுக செய்து வச்சிருக்கத பாத்தா பெத்த அம்மை தாங்கமாட்டா. எருமை சவைச்சுப்போட்ட வைக்கோலு மாதிரி இருக்கு. கொஞ்சம் நீட்டா, பாத்தா அளகாட்டு இருக்கது மாதிரி அதைச் செய்யணும்.”

எனக்கு புரிந்தது. “மாடன்பிள்ளை செய்வான்” என்றேன். “அவன் பழைய சோல்டரிங்குக்க ஆளாக்கும்… ஆனாலும் கலை அறிஞ்சவன்…”

“நாளு இல்லவே. இனி ஒருநாள்.. இண்ணைக்கு ராத்திரி தொடங்கணும். நாளைக்கு காலம்பற முடிக்கணும்… நாளைக்கு காலம்பற பத்து மணிக்கெல்லாம் மினிஸ்டர் கன்யாகுமரி வந்து எறங்கீருவாரு.”

“இப்ப வந்து சொன்னா எப்டி?”

“வே, இப்பதான் டிஇ போயி அந்த கேபிள் ஜங்ஷனை பாத்திருக்காரு. அதைக் காட்டினா பிறவு இங்க நாம ஜீவிச்சிருக்கவேண்டிய அவசியம் இல்லேன்னு சொன்னாரு… என்ன செய்வீகளோ என்னமோ இது செரியாயிடணும்னு சொல்லுதாரு. முதல்ல இப்ப செய்திருக்கது முளுக்க அவுக்கணும். புதிசாட்டு செய்யணும்…”

நான் பெருமூச்சுவிட்டேன்.

“எப்டியாவது அவனைப் பிடியும்வே… அவனால செய்யமுடியும்னு நினைக்கேன்.”

“செரி சார்” என்றேன்.

“இல்ல, ஒரே ராத்திரியிலே வேற ஆராவது செய்யமுடியுமா?”

“சார், இது ஒத்த ஒருத்தனாச் செய்யவேண்டிய வேலை. நாலுநாளு எடுக்காம செய்யுதவன் எவனும் இங்கிண இல்ல. ஒத்த ஒரு ராத்திரியிலே இதைச் செய்யக்கூடியவன் அவன் ஒருத்தன்தான்… அது அவனுக்கு கடவுள் குடுத்த கொடையாக்கும்… மத்தவனுக ஸ்பிளைஸ் செய்தா கேபிள் வேலைசெய்யும், ஆனா அளகாட்டு இருக்காது.”

“அளகாட்டு வேணும்வே” என்றார். “பூமாதிரி இருக்கணும்.”

“அப்ப அவன்தான். பாக்குதேன்”

ஃபோனை வைத்துவிட்டு நான் நேராக ஜூனியர் எஞ்சீனியரிடம் சென்றேன். புதிய ஜே இ தாணம்மாள் தன் அலுவலக அறையில் அமர்ந்து ஃபோனில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் ஃபோனில் பேசாத நேரம் அரிது. அப்போதும் சோகமாக இருப்பாள்.

“நம்ம டிஇ விளிச்சாரு. ஒடனே மாடன் பிள்ளையை கூப்பிட்டுட்டு வரணும்னு சொன்னாரு” என்றேன்.

“அப்டியா?” என்றாள். அப்போதும் ஃபோன் வாயைப் பொத்தியிருந்தாள்.

“உங்கள விளிக்கல்லியா?”

“இல்லியே.”

“எப்பிடி விளிக்க? ஃபோனை கீள வச்சாத்தானே?” என்றேன். “மாடன் பிள்ளைக்க காண்டாக்ட் நம்பர் உண்டா?”

“தெரியாதே.”

“அவன் வாறதுண்டா? எப்பம் வந்தான் கடைசியாட்டு?”

“தெரியல்ல.”

“பிறவு உங்களுக்கு என்ன தெரியும்?” என்றேன். “முதல்ல அந்த போனை கீள வையுங்க… சம்பளம் வாங்குதீகள்லா?”

தாணம்மாள் உதட்டைப் பிதுக்கி கண்ணீர் மல்கி “எல்லாம் எனக்க கிட்ட கேளுங்க… நான் ரெண்டு பச்சைப் பிள்ளைகள வீட்டிலே விட்டுட்டு இங்க வாறேன். எனக்க அம்மைக்கு உடம்பு செரியில்ல…”

“செரி செரி. நான் கேக்கல்ல…” என்றேன். “ஆனா ஒரு சின்ன காரியம் ஞாபகம் இருக்கட்டும். இந்த ஆபீஸுக்க முளுப்பொறுப்பும் உள்ள ஆபீசர் நீங்களாக்கும். நான் உங்க கீள வேலை பாக்கப்பட்டவன்.”

“நான் என்ன செய்ய! எனக்கு ஒண்ணுமே தெரியாது. என்னைய எல்லாரும் திட்டுதாக… எனக்க கோரோயில் முருகா… நான் சாவுதேன். நான் செத்தா எல்லாருக்கும் சந்தோசம்தானே?”

நான் வெளியே சென்று கிளார்க்குகள் இருக்கும் இடத்தை அடைந்தேன். ராமசாமி இருந்தார்.

“வே, நம்ம மாடன் பிள்ளை இப்பம் எங்கிணயாக்கும்?”

“அவன் சஸ்பென்ஷன்ல இல்லா இருக்கான்?”

“ஓ!” என்றேன். “எதுக்கு?”

“எதுக்கா? தண்ணிய ஊத்திக்கிட்டு அக்கவுண்ட் ஆபீஸர் மாதவன் பிள்ளையை மண்டையிலே அடிச்சான். நாலு தையலு.”

“அது ஆச்சுல்லா மூணுமாசம்.”

“ஆமா, ஆனா அதுக்குபிறவு காண்டாக்ட் இல்ல. அவனுக்க பெர்சனல் ஃபைலு இப்ப எங்க இருக்குண்ணும் தெரியல்ல.”

“இப்ப அவனை காண்டாக்ட் பண்ண என்ன வளின்னு தெரியுமா?”

“கீள லைன்மேன் வர்க்‌ஷாப்புல டேனியல்ராஜுன்னு ஒருத்தன் உண்டு. அவனாக்கும் இவனுக்க ஒரே கூட்டுகாரன்.”

நான் “செரி” என்று எழுந்து கீழே சென்றேன்.

டேனியல்ராஜ் இருந்தான். மெல்லிய போதையில் இருப்பது தாடை இறுக அடிக்கடி பல்லைக் கடிப்பதிலிருந்து தெரிந்தது. வாய் நிறைய நாற்றமடிக்கும் ஜரிதா பீடா போட்டிருந்தான், அது மது நாற்றத்தை மறைக்க.

“வே டேனியலு, உம்ம கூட்டாளில்லாவே மாடன் பிள்ளை? அவன் எங்க இருக்கான்னு தெரியுமா?”

“அவனை போலீஸ் புடிச்சுதுல்லா?”

“எப்பம்?”

“நேத்து…” என்றான். சுட்டுவிரல் அந்தரத்தில் நிற்க ஒருகணம் உறைந்து சிந்தித்து “இல்ல ஞாயித்துக்கெளமை.”

“நேத்தா ஞாயித்துக்கெளமையா?”

“தெரியல்ல… எனக்ககிட்ட சம்முவம் சொன்னான்.”

“நீரு போனீரா?”

“போனா என்னைய பிடிச்சு வைச்சிருவானுகளே.”

“எந்த போலீஸ் ஸ்டேஷன்ல?”

“இங்கதான் மேட்டுச்சந்தையிலே.”

நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் பேசலாமா என எண்ணினேன். ஆனால் பொதுவாக போலீஸ்காரர்கள் போனில் எதையுமே காதால் கேட்கமாட்டார்கள். ஒரே சொற்றொடரையே கத்துவார்கள்.

என் பைக்கில் போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். அதை பார்க் செய்தபோதே ஏட்டு நாராயண பிள்ளை சிரித்தபடி என்னை நோக்கி வந்தார். “வாரும்வே… என்ன சங்கதி? வல்லதும் திருட்டுபோச்சா?”

“நீரு அந்தப் பக்கம் வரல்லேல்லா? எப்டி திருட்டுப் போவும்?” என்றபின் விஷயத்தைச் சொன்னேன். “இங்க வந்திட்டுண்டான்னு அறியணும்… அட்ரஸாவது இங்க இருக்கும்ல?”

“அப்ப உங்ககிட்ட அட்ரஸ் இல்லியா?”

“அது அவனுக்க வீட்டு அட்ரஸ்… அவனுக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.”

“நல்ல பார்ட்டி” என்றார் நாராயணபிள்ளை “வாரும்.”

நான் மேலே சென்று அறைக்குள் நுழைந்தபோதே மாடன் பிள்ளையை கண்டுகொண்டேன். “இந்நா, இவனாக்கும்.”

அவனை விலங்குபோட்டு ஒரு ஜன்னல் கம்பியுடன் கட்டி வைத்திருந்தார்கள். தலைகுனிந்து முகம் மீது முடிக்கற்றைகள் சரிய தூங்கிக்கொண்டிருந்தான்.

“இவனா? இவன் நாலுநாளாட்டு இங்க உள்ளல்ல கெடக்கான்.”

“எதுக்கு?”

“எதுக்கா? நட்டநடு மத்தியான்ன நேரம் தண்ணியப் போட்டுட்டு பஸ்டாண்டிலே போயி பஸ்ஸை மறிச்சு கலாட்டா செய்திருக்கான். பிடிக்கப்போன போலீஸுகாரனுக்க முகத்திலே துப்பியிருக்கான்.”

மாடன் பிள்ளை உடலெங்கும் காயங்கள் இருந்தன.

“நல்லா சாத்திட்டியபோல.”

“அதுபின்ன, கோர்ட்டுக்கு கொண்டு போகல்லேன்னா அடிப்போம்ல.”

“ஏன் கேஸு போடல்ல?”

“ஐடி கார்ட காட்டினான். சர்க்காரு எம்ப்ளாயியாக்கும். அதுக்க புரஸீஜர் எளுதி எடுக்க சீண்டரம்பிடிச்ச வேலை. அதனாலே நாலுநாளாட்டு வச்சு அடிக்கோம்” என்றார் நாராயண பிள்ளை. “வே ஆசீர்வாதம், அவனை விடுலே.”

விலங்கு அவிழ்க்கப்பட்டதும் மாடன் பிள்ளை விழித்தெழுந்து என்னைப் பார்த்தான்.

“வே ஏட்டு… பாத்தீரவே… ஆரு வந்திருக்குன்னு. எங்க சீனியர் சூப்பரெண்டாக்கும்… ஆ, அதாக்கும். மத்திய அரசுவே… வே மத்திய அரசு, தெரிஞ்சுகிடும். மயிராட்டாவே நினைச்சீரு? தொப்பி போயிரும் பாத்துக்கிடும்” என்றான். என்னிடம் “சார் இவருக்க தொப்பி போகணும்… தெறிப்பிக்கணும்” என்றான்.

“பாப்பம்… நீ வாடே.”

“வாறேண்டே ஏட்டு… மறுக்கா வந்து உங்கிட்ட பேசுதேன்.”

வெளியே வந்ததும் நான் “ஏம்லே இப்டி கெடந்து சீரளியுதே?” என்றேன்.

“கேரளம் நமக்கு தண்ணி தரேல்லல்லா? அதனாலே கேரளா பஸ்ஸை மறிச்சேன்… அவனுக இங்க வரவேண்டாம்… கண்டிசனா வரவேண்டாம், அவ்ளவுதான்.”

“எப்ப தண்ணி தரேல்ல?”

“மே மாசத்திலே.”

“ஆமா, இது டிசம்பர்லா?”

“ஆமா, ஆனா இப்பம்லா எனக்கு ஞாபகம் வந்தது?”

“செரி வா, உங்கிட்ட ஒரு காரியம் சொல்லணும்.”

“நீரு ஒரு இருபத்தெட்டு ரூவா குடும்.”

“டேய் நீ நிதானமாட்டு இருக்கணும்… உங்கிட்ட நான் பேசணும் பாத்துக்க.”

“நிதானமாட்டு இருக்கணுமானா சரக்கு உள்ள எறங்கணும்… பாத்தேரா கை நடுங்குதத…”

நான் பணம் கொடுத்தேன். “அப்ப நாலுநாள் லாக்கப்பிலே எப்டிடே இருந்தே?”

“அது தினம் ரண்டுநேரம் வச்சு அடிக்கானுகள்லா? அடிபட்டா ஒரு ஆஃப் அடிச்ச கிக்கு உண்டு.”

அவன் “இங்க நில்லும்” என்று அப்படியே மறைந்தான்.

நான் காத்திருந்தேன். அப்படியே போய்விடுவானா? மோசம் போய்விட்டோமா?

ஆனால் அவன் வந்தான். உண்மையாகவே நிதானமாக இருந்தான்.

“சொல்லும்வே” என்றான்.

நான் எல்லாவற்றையும் சொன்னேன். “மாடன் பிள்ளை, நீ வந்து செஞ்சு குடுக்கணும்… இது நம்ம டிப்பார்ட்மெண்டுக்க மானமாக்கும்…”

“அப்ப எனக்க மானம்? எனக்க மானம் போச்சே. நான் ஏன் இங்க போலீஸ்ல அடிபட்டேன்? கையிலே பைசா இல்லை. ஏன் பைசா இல்லை? நான் சஸ்பெண்டு.”

“நீ அக்கவுண்டெண்டை அடிச்சே.”

“ஆமா, ஏன் அடிச்சேன்? அவரு என் பேமெண்டை நிப்பாட்டினாரு…”

“ஏன்?” என்றேன்.

“எனக்க பளைய சஸ்பென்ஷன் நேரத்திலே பேமெண்டாக்கும் அது. அதை ஏன் நிப்பாட்டினாரு? ஏன்?”

“ஏன்?”

“அதுக்கு முன்னாடி சஸ்பென்ஷன் ஆனதை ரிவோக் பண்ணல்ல.”

“சஸ்பென்ஷனிலே இருக்கவனை எப்டிடே மறுபடியும் சஸ்பெண்ட் பண்ண முடியும்?”

“அதை தாணம்மாளிட்ட போயி கேளும்வே.”

“செரி விடு. இது எனக்குப் புரியாது. ரொம்ப சிக்கலா இருக்கு. நான் விசயத்துக்கு வாறேன். என்ன இருந்தாலும் டிப்பாட்மெண்ட் நம்ம அப்பன் மாதிரி. ஆயிரம் இருந்தாலும் நாம விட்டுக்குடுக்க முடியாது.”

“நான் எனக்க அப்பனைத்தான் முதல்ல செருப்பாலே அடிச்சேன்.”

“சரி, நம்ம அம்மை.”

“அவளை நான் தினமும் தேவ்டியா முண்டைன்னு விளிப்பேனே.”

“சரிடே சாமி… நமக்க படியளக்குத சாமி.”

“நான் போனவருசம் ஏன் அரெஸ்ட் ஆனேன்? சொல்லும் பாப்பம். குமாரகோயில் முருகனை கெட்டவார்த்தை சொல்லி வேட்டிய தூக்கி காட்டினேன்… அந்த பிச்சக்கார நாயில்லா என்னைய குடிகாரனாக்கி கண்ட கண்ட நாயிங்க வாயாலே அட்வைஸ் செய்ய வைக்குது?”

நான் அவன் தோளைப் பிடித்தேன். “இங்கபாரு… நீ யாரு? நீ ஒரு ஆர்ட்டிஸ்டாக்கும். மத்தவனுகள மாதிரி கடனுக்கு வேலை செய்யுதவன் இல்ல. வேலைசெஞ்சா அது செஞ்சதுமாதிரி இருக்கும்… அதனாலத்தான் உன்னைய கூப்பிடுதாங்க… இப்ப பாரு, உன் அருமை இங்க சிலபேருக்குத்தான் தெரியும்… இப்ப பாரு உனக்க வேலையை டிவியிலே உலகமே பாக்கப்போவுது. காலகாலமா அது இருக்கும்லே… டிவியிலே இனி எப்ப ஆப்டிக்கல் கேபிள்னு காட்டினாலும் அதை காட்டுவானுக. ஏய், சுசீந்திரம் கோயிலு மாதிரி தலைமுறை தாண்டி நிக்கும்லா? ஒரு ஆர்ட்டிஸ்டுக்கு அதைவிட என்ன வேணும்? சொல்லு…” என்றேன்.

அவன் கொஞ்சம் தணிந்ததுபோலத் தோன்றியது.

“வாடே” என்றேன்.

“இல்ல” என்றபோது அவனிடம் ஒரு தெளிவு உருவாகியிருந்தது. “நான் வரமாட்டேன். நீரு போயி சொல்லும்.”

“டேய்.”

“நான் சொல்லுதேம்லா?” என்றான். “நீரு சொன்னது உள்ளதாக்கும். நான் ஆர்ட்டிஸ்டு. நான் செய்யுதது சுசீந்திரம் சிற்பம் போலேயாக்கும். அது ஆயிரம்பேரு காணணும். தலைமுறை தாண்டி நிக்கணும்… ஆனா அதுக்காக நான் கீள எறங்கிர மாட்டேன். எனக்கு நான் செய்யுத வேலைதான் முக்கியம். அதைவிட நான் முக்கியம். இந்தா நீரு வந்து கேக்கேருல்லா, அந்த வேலைன்னா என்ன? அது நானாக்கும். எனக்க மனசாக்கும். ஆத்மாவாக்கும். அதை விட்டுட்டு ஒரு பேரும் பெருமையும் எனக்கு வேண்டாம்… “

அவன் தொடர்ந்தான். “இந்த வேலைய பத்தாளு பாக்கணும்னு நான் என்னைய விட்டுட்டேன்னாக்க இனி எனக்கு வேலையே செய்ய முடியாது… வேலை செய்யல்லேன்னா மாடன் பிள்ளை ஆரு? செத்த சவமாக்கும். குடிகாரத்தாயளியாக்கும்… போவும்வே.”

“நான் உன்னைய மனசிலாக்குதேண்டே மக்கா” என்றேன்.

“வே, மத்தவன் செய்யுத வேலைக்கும் நான் செய்யுததுக்கும் என்ன வித்தியாசம்? மத்தவனுகளுக்கு கையும் கண்ணும் ஒண்ணாச் சேராது. கணக்கு இருக்கவனுக்கு கணக்கத் தாண்டியுள்ள ஒருமை தெரியாது. அது சீவனுக்க ஒருமையாக்கும். எலை, பூவு, பட்சிக்க செறகு, மிருகத்துக்க முடி எல்லாத்திலயும் இருக்குத சீவனுக்க ஒருமை. அதையாக்கும் என் கையாலே நான் செய்யுதேன்.. அது மத்தவன் செஞ்சா வராது” என்றான் மாடன் பிள்ளை.

அவன் பேசிக்கொண்டே சென்றான். “நான் வேலைய தொடங்கிட்டேன்னாக்க பிறவு நானாக்கும் அந்த வேலை. இந்தா இங்கிண நிக்குத மாடன் பிள்ளை அதுக்குப்பிறவு இல்லை. வேலை நானாட்டு மாறி நின்னுட்டிருக்கும். நான் ஒயராட்டு ஈயமாட்டு தீயாட்டு மாறிருவேன். பின்னிப் பின்னி அதுவே அதுக்க ரூபத்தை அடைஞ்சிரும். செஞ்சு முடிச்சு பாப்பேன். சாமி எறங்கின மாதிரி இருக்கும். கண்ணுமுன்னாடி எந்திரிச்சு நின்னிட்டிருக்கும். வாளைக்கண்ணு கூம்பி முளைச்சு நிக்கும்லா, அப்டி. அய்யோ இம்பிடுநேரம் இது எங்க இருந்ததுன்னு தோணும்லா? அதுமாதிரி… அப்டி நின்னிட்டிருக்கும். பாத்து மனசாலே கும்பிடுவேன். நினைச்சு நினைச்சு கண்ணீரு விடுவேன்…”

என்னைப் பிடித்து உலுக்கி அவன் சொன்னான் “வே, நான் ஆரு? நான் ஆர்ட்டிஸ்டாக்கும். ஒருத்தன் படம் வரையுதான், நான் இதைச் செய்யுதேன். எனக்கு அது சின்ன வயசிலே தெரியும். எனக்குத் தெரிஞ்ச ஒண்ணு இது மட்டும்தான். எனக்க அப்பன் நான் படம் வரையுததைக் கண்டா அடிப்பாரு. ஆசாரியாலே நீயின்னு கேட்டு அலறுவாரு. என்னைய கட்டி வச்சு அடிச்சிருக்காரு. சூடு வச்சிருக்காரு. சோறில்லாமல் இருட்டறையிலே அடைச்சு வச்சிருக்காரு. வெசம்வச்சு கொன்னு போட்டிருவேன்னு சொல்லியிருக்காரு.”

“பதினொண்ணாம் கிளாஸ் தோத்தப்ப இனி உனக்கு சோறில்லை போடான்னு சொன்னாரு… அத்து அலைஞ்சேன். வயத்துக் கொதிப்பினாலே இந்த வேலைக்கு வந்தேன். லைன் இளுத்தேன். கேபிளுக்கு குளிவெட்டினேன். அப்பதான் சந்திரன் மாஸ்டர் என்னையக் கண்டுபிடிச்சாரு. அவரு சோல்டரிங் செய்யுததிலே மாஸ்டராக்கும். ஒயர சேத்து ஈயச்சொட்டு விடுவாரு. ஒரு சொட்டு… ஒவ்வொரு சொட்டும் ஒரே அளவு. மணிமணியாட்டு. மணிகளைச் சேத்து வச்சமாதிரி… அவரு சோல்டரிங் செஞ்ச வயர பாத்தா என்னமோ செடிக்க வெதை மாதிரி இருக்கும்…. அதை படிச்சேன். ஒரே மாசம். அவரு எனக்க கைய எடுத்து கண்ணிலே ஒத்திக்கிட்டு சொன்னாரு, மக்களே நான் திறமைக்காரன்…. நீ ஆர்ட்டிஸ்டுன்னுட்டு. அவருதான் அப்டிச்சொன்ன முத ஆளு. அதுக்குப்பிறவு இந்நா இப்ப நீரு சொல்லுதேரு.”

நான் “ஆமாடே” என்றேன்.

“ஆனா நீரு இதுவரை இதை எனக்க கிட்ட சொன்னதில்லை. இப்ப எனக்க அவசியம் வந்ததனாலே சொல்லுதீரு…”

“அப்டி இல்லடே.”

“சொல்லல்லா? இதுவரை மனசறிஞ்சு சொல்லல்லா? இந்த உலகத்திலே அத்தனை பேரும் எங்கிட்ட என்னவே சொல்லுறிய? ஒளுங்கா குளி, பல்லுதேயி, காலம்பற தோசை தின்னு, மத்தியான்னம் சோறு தின்னு, சாயங்காலம் டிவி பாரு, பொஞ்சாதிக்கமேலே ஏறு, பிள்ளைகள பெத்து அதுகளுக்கு சொத்து சேத்து வையி. எங்கள மாதிரி செத்து மண்ணாப்போ… அதைத்தானே? வே, நான் கேக்கேன். இந்த உலகத்திலே எனக்கு அட்வைஸ் மயிரச் சொல்லாத எந்த தாயோளியாவது உண்டாவே? எனக்க அப்பனுக்க ரூபமாக்கும் அம்பிடுபேரும். சொன்னேருல்லா, டிப்பாட்மெண்டு. அது அப்பனுக்கு அப்பன். அதிலே ஓரோருத்தனும் அப்பன்.”

“ஆப்பீசர பயப்படுதான். காசுள்ளவனை பயப்படுதான். கையூக்கு உள்ளவனை பயப்படுதான். ஆனா ஆர்ட்டிஸ்டுன்னா மட்டும் எல்லாவனுக்கும் அவனை நல்லாக்கி போடலாம், சீர்திருத்திப் போடலாம்னு தோணுது. போனவாரம் நம்ம ஆபீஸிலே தூத்துவாருத கோரன் சொல்லுதான், ஏலே மாடன் பிள்ளை, மனுசனாட்டு வாளுலேன்னு. அம்பிடு தாயோளிகளுக்கும் சொல்லுகதுக்கு ஒண்ணுதான் இருக்கு. மனுசனாட்டு வாளு…”

அவன் குரலைத் தூக்கி உரக்க சொன்னான் “வே, நான் மனுசன் இல்ல. நான் ஆர்ட்டிஸ்டு. நான் மனுசன் இல்லவே. நான் பாவி. நான் கேடுகெட்ட குடிகார நாயி. நான் அசிங்கம் பிடிச்ச மிருகம்.. பண்ணி. நான் புளுவாக்கும். பீயிலே நெளியுத புளு, நான் சாத்தானாக்கும். பேயாக்கும். சங்க கடிச்சு ரெத்தம் குடிக்குத மாடனாக்கும். என்ன மயிரானாலும் உம்மையும் உங்காளுகளையும் மாதிரி மண்ணாப்போன மனுசனா இருக்கமாட்டேன் வே…”

அவன் தொண்டை நரம்புகள் புடைத்திருந்தன. “இந்நா கூப்பிடுதான்லா உம்ம டிஇ. அவன் என்னவே சொன்னான் எங்கிட்ட? போயி கேளும்வே. கேட்டுட்டு வாரும்… இல்ல நான் சொல்லுதேன், அவன் சொன்னான், அவனுக்க ரூமிலே என்னைய விளிச்சு சொன்னான். என்னைய இருக்கச் சொல்லல்ல. ஏன்னா நான் டெக்னீசியன், அவன் ஆப்பீஸரு. வே, அவன் ஆரு? ஒரு பரிச்சை எளுதி ஜெயிச்சுப் போட்டா அவன் தெய்வமா? நான் இருக்குதது பிரம்மனுக்க நாக்காலியாக்கும். அந்த நாற்காலிக்க காலிலே தொட அவனுக்கு யோக்கியதை உண்டா? அவன் எங்கிட்ட சொல்லுதான். நீ பெரிய ஆர்ட்டிஸ்டுன்னு சொன்னாங்க, ஆர்ட்டிஸ்டோ என்ன எளவோ முதல்ல மனுசனாட்டு இரு, அதுதான் முக்கியம்னு…. மனுசனா இல்லேன்னா நீ என்னவா இருந்தாலும் அதனாலே பிரயோசனம் இல்லேங்குதான். இப்பம் அவனுக்கு அவன் சொல்லுத நல்ல மனுசனை வேண்டாம்தானே? அவனுக்கு சீரளிஞ்சு கெடக்குத மாடன் பிள்ளைதானே வேணும்?”

“அவன் சொல்லிட்டே இருந்தான்… எப்டி? சிம்மாசனத்திலே இருக்குத ராஜா மாதிரி. அவன் உலகத்தை ஜெயிச்சுப் போட்டானாம். நான் தோத்து நின்னுட்டிருக்கேனாம்… அவன் சொல்லச் சொல்ல நான் நின்னு கேட்டேன். அவன் சொல்லுத அட்வைஸை எல்லாம் கேட்டேன். இந்த உலகமே கூடி எனக்ககிட்ட சொல்லுது. மனுசனா இருலேன்னு. மனுசனாட்டு ஆக்குததுக்காக என்னைய பிரம்பாலே அடிச்சுது. என்னைய சூடு போடுது. இருட்டறையிலே அன்னந் தண்ணியில்லாம அடைச்சுப்போடுது… மாட்டேன்னு சொல்லி நான் குடிகாரனாட்டு ஆனேன். நான் மனுசனா ஆவமாட்டேன் வே, இன்னும் கீளத்தான் வே போவேன்… “

“செத்துக் கெடப்பேன் வே. இந்நா இந்த ரோட்டிலே அனாதை நாயாட்டு செத்துக் கிடப்பேன்… எனக்கு ஒரு மயிரும் குறையில்லை. மேலே போனா சாமிக்கிட்ட சொல்லுவேன், போலே மயிராண்டின்னு… நான் சந்தோசமா இருந்திருக்கேன். நான் வாள்ந்திருக்கேன். நான் நிறைஞ்சிருக்கேன். ஒரு வேலைய முடிச்சு நிமுந்து பாக்கிறப்ப நீயும் நானும் ஒண்ணுண்ணு சொல்லுவேன். நீ வானத்தை கையிலே வச்சிருக்கே. எனக்க கையிலே இருக்கப்பட்டது இந்த சோல்டர்ராடு மட்டும்தான். அதனாலே நான் உன்னைய விட மேலு… நீ என் கெண்டைக்கால் மயிரு… ஆமா, அப்டித்தான் சொல்லுவேன்.”

அவன் மூச்சுவாங்கி உடனே புன்னகைத்து “சூப்பர் வசனம் இல்லியா?” என்றான். “ஏத்தினது எறங்கிப்போச்சே. வேய் ஒரு இருவத்தெட்டு ரூவா குடும்வே.”

“தாறேன்… நீ கேட்டத வாங்கித்தாறேன்.. நீ எங்கூட வா.”

“நான் வாறேன்.. ஆனா ஒரு கண்டிசன்.”

“சொல்லு.”

“அவன், அந்த டிஇ எனக்க கிட்ட மன்னிப்பு கேக்கணும்… சும்மா கேட்டா போராது. அத்தனை ஸ்டாஃப் முன்னால வச்சு கேக்கணும். கும்பிட்டு கேக்கணும். தெரியாமச் சொல்லிட்டேம்லே மாடன் பிள்ளை, நீ ஆர்ட்டிஸ்டு, நான் வெறும் மனுசன்னு சொல்லணும்… சொல்லுவானா? சொன்னா செய்யுதேன்.”

“டேய், சொல்லுகதுக்கு ஒரு நியாயம் வேணும்.”

“எனக்க நியாயம் இதாக்கும். ஒருநாளானாலும் நான் ஜெயிக்கணும். சொல்லுவானா அவன்?”

“அதெப்பிடி?”

“அப்ப போயி நொட்டட்டும்.”

“உனக்கு பேரு புகள்…”

“ஒரு மயிரும் வேண்டாம் போகச்சொல்லு.”

நான் யோசித்தேன். “செரி நான் சொல்லுதேன்… பேசிப்பாக்குதேன் நீ வா.”

“பேசிக்குறைக்க முடியாது. அவன் என்கிட்ட மன்னிப்பு கேக்கணும்… மன்னிப்பு கேட்டாத்தான் மிச்சம்.”

“வாடே நான் சொல்லிப்பாக்குதேன்.”

நான் அவனை ஆட்டோ பிடித்து அலுவலகம் கூட்டிவந்தேன். அலுவலக அறையில் அவனை அமரச்செய்தேன்.

பக்கத்து அறைக்குச் சென்று டி இயிடம் பேசினேன். “இப்டி சொல்லுதானே?”

“நான் மன்னிப்பு கேக்கணுமா? வேய், நான் அவனுக்க நல்லதுக்காக்கும் சொன்னேன். இப்டி சீரளியணுமாடேன்னு கேட்டேன்.”

“ஆமா ஆனா அவனுக்கு அது பிடிக்கல்லியே.”

“டேய் இவனுக்கு என்னடே அப்டி ஒரு ஏத்தம்? இவன் யாரு. கேவலம் ஒரு டெக்னீசியன்.”

“சரி, இருக்கட்டும். நமக்கு அவன் தேவைல்லா?”

“ஆமா அதுக்காக?”

“அவன்கிட்ட ஃபோனிலே ஒரு மன்னிப்பு கேட்டுகிடுங்க.”

“அவன் பப்ளிக்கா கேக்கணும்னுல்லா சொல்லுதான்.”

“வேண்டாம்… அவனை நான் பேசி எறக்கீருதேன். நீங்க ஒரு பேச்சுக்கு மன்னிப்பு கேட்டாப்போரும்.”

“சோல்டரிங் அடிக்குத நாயிக்கு இந்த ஏத்தமா? செரி கேக்கேன். ஆனா ஒண்ணு வேலை முடிஞ்ச பிறவு அவனுக்கு நான் ஆப்பு வைப்பேன்.”

“இனி அவனை என்ன செய்ய? ஏற்கனவே சஸ்பெண்டு.”

“டிஸ்மிஸ் பண்ணுதேன்.”

“அதுவும் அவனுக்கு ஒரு காரியமில்லை. அவன் ரோட்டிலே நிக்க பளகியாச்சு” என்றேன். “அதோட இப்டி ஒரு அவசியம் வந்தா நமக்கு வேற ஆளில்ல.”

“செரிவே ஒரு வார்த்தை கேக்கேன்.”

நான் திரும்பி என் அறைக்குள் நுழையும்போது மாடன் பிள்ளை அரைத்தூக்கத்தில் இருந்தான். என் காலடியோசை கேட்டு விழித்துக்கொண்டான்.

“என்ன சொல்லுதாரு?”

“நான் பேசினேன். கடும்பிடித்தம் பிடிக்காரு. அவருக்கு உன்னைய விட வயசாக்கும் பாத்துக்க.”

“அது எனக்க தப்பில்ல.”

“சரி, ஆனா..”

“ஒரு ஆனாலும் இல்ல. பப்ளிக் மன்னிப்பு. வேற ஒண்ணும் பேசவேண்டாம்.”

“மன்னிப்பு கேப்பாரு… ஆனா…”

“பப்ளிக்கா கேக்க மாட்டாரு… வே, பப்ளிக்கா ஏன் கேக்கமாட்டான்? அப்ப அவன் சொல்லுலே அவன் நிக்கப்போறதில்லை. வேலை முடிஞ்சா எனக்கு ஆப்பெறக்குவான்… அந்த சோலியே வேண்டாம்… பப்ளிக் மன்னிப்பு கேட்டே ஆகணும்.”

சிவன் எட்டிப்பார்த்து “ராஜப்பன் வந்திருக்கான்… காரமலை லைனு பாக்குதவன்.”

“அவனுக்கு என்னவே இப்பம் கொள்ளை? நாளைக்கு வரச்சொல்லு.”

“இல்ல, என்னமோ முக்கியம்னு சொல்லுதான்.”

“என்ன முக்கியம், இப்ப சோலியா இருக்கேன்ல?”

“என்னமோ காட்டணுமாம்.”

“என்னது?”

“கொண்டுவரச் சொல்லுடே” என்றான் மாடன் பிள்ளை. “நாட்டுச்சாராயமோ கஞ்சாவோ என்னமாம் இருக்கும்.”

ராஜப்பன் உள்ளே வந்தான். கையில் ஒரு துணிப்பை.

“என்னவே உயிர எடுக்கேரு?”

“இல்ல கோனாரே, ஒரு சாதனம் கண்டுபிடிச்சேன். அது எதுக்கு உதவும்னு தெரியல்ல. நல்லா இருந்தது. காட்டிட்டுப் போலாம்னு வந்தேன்…”

“என்னவே?”

“இது காட்டிலே ஒரு மரத்துக்குகீள கெடந்தது.”

“பிளாஸ்டிக் கூடைல்லா?”

மாடன் பிள்ளை எழுந்து அதை வாங்கினான். “வே, இது என்னவே?” என்றான். “அய்யோ, தூக்கணாங்குருவிக் கூடுல்லா?” என்றான்.

“ஆமா.”

“அது பிளாஸ்டிக் மாதிரில்லா இருக்கு?” என்றேன்.

“இது எங்க கிட்டிச்சு?” என்றான் மாடன் பிள்ளை.

“அணைஞ்சபெருமாள் கோயிலுக்கு பொறத்த, அந்த பெரிய ஆலமரத்துக்கு கீள.”

மாடன் பிள்ளை என்னிடம் “வே, இது நான் வெட்டிப்போட்ட வயர் மிச்சமாக்கும்… ரெண்டுமாசம் முன்னாலே நான் அங்கிண பளைய கேபிளிலே சோல்டரிங் வேலை பாத்தேன். நான் வெட்டிப்போட்ட வயர்களை கொண்டுபோயி தூக்கணாங்குருவி கூடு கட்டியிருக்கு” என்றான்.

நான் அப்போதுதான் அதை நன்றாகப் பார்த்தேன். தூக்கணாங்குருவியின் கூடேதான். ஆனால் முழுக்கமுழுக்க நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ண ஒயர்களால் பின்னப்பட்டது.

“வேடிக்கையாட்டுல்லா இருக்கு” என்று அதை புரட்டிப்பார்த்தேன்.

மாடன் பிள்ளை அதை வாங்கியபோது கைகள் நடுங்கின. அவன் அதை புரட்டிப்புரட்டிப் பார்த்தான் “என்னவே வேலை இது… யம்மா, என்னாலே முடியல்லியே, என்னவே வேலை இது… இது என்னவே வேலை…”

“ஏம்வே?” என்றேன்.

“என்ன ஒரு ஒருமை… எப்டி பின்னியிருக்கு. ரெண்டு அடுக்குப்பின்னல். மடக்கிமடக்கி விளிம்பு. கீளே இருந்து உள்ளபோக வளி. உள்ள இருக்குத முட்ட வெளியே விளாதபடி சுத்துப்பாதை… யப்பா… எப்டிவே?”

“குருவிங்க கூடு அப்டித்தான் கெட்டும்” என்றேன்.

“வே, இது ஒயரு.. பின்னல் நிக்காது. அதனாலே ரெட்டை முடிச்சு போட்டிருக்குவே.”

“ஓகோ” என்றேன்.

“எப்டிவே… என்ன வேலை வே” என்றான் மாடன் பிள்ளை குரல் தழுதழுக்க அதை புரட்டிப்புரட்டி பார்த்தான். “இது கூடுல்லவே, அந்தக் குருவிதான். அது இப்டியே கூடாவே மாறி இருந்து பின்னியிருக்கு… தன்னைத்தானே பின்னியிருக்கு.. எப்டிவே.”

“நெறமெல்லாம் கலந்துகட்டியிருக்கு” என்றேன்.

“அதுக்கு நெறம்தெரியாதுன்னு சொன்னாக” என்றான் ராஜப்பன்.

“ஆமா, நம்ம மாதிரி நெறம் தெரியாது… அதுக்க நெறம் வேற. நெறத்தை வச்சுப்பாத்தா கண்டபடி கலந்த மாதிரி இருக்கு. ஆனா வேற ஒரு ஒருமை இருக்கு… வேற ஒண்ணு…” என்றான் மாடன் பிள்ளை. “பாக்கப் பாக்க தெளிஞ்சு வருது. கொஞ்சம் தெரியுது. மிச்சம் ஆகாசம் மாதிரி இருக்குது. யம்மா! எனக்க அம்மா!”

“இஞ்சபாரு மாடன் பிள்ளை, எல்லா தூக்கணாங்குருவியும் கூடு கெட்டுது… அம்மைக்குருவி குஞ்சுக்குருவிக்கு தனியா சொல்லிக்குடுக்குத வளக்கம் இல்லை. முட்டைக்குள்ளேயே அதையெல்லாம் படிச்சுப் போட்டாக்கும் வருது… இது ஒரு குருவி கெட்டின கூடில்ல. இந்த உலகத்திலே உள்ள அத்தனை குருவிகளும் சேந்து கெட்டின கூடாக்கும்.”

“ஆமா ஆமா” என்று சொன்ன மாடன் பிள்ளை தேம்பி அழத்தொடங்கினான்.

“டேய், என்னடே இது? இஞ்சபாரு.. பயலுக்கு தலைக்கு போதை ஏறிப்போச்சுன்னுல்லா தோணுது.”

அவன் விசும்பி அழுதபடி அந்தக் கூடை மார்போடு அணைத்துக் கொண்டு தலைகுனிந்து உடல் குறுக்கி அமர்ந்திருந்தான்.

ராஜப்பனிடம் “நீரு போவும்வே, நான் ஆபீசர்கிட்ட சொல்லி உமக்கு என்னமாம் பணம் வாங்கித்தாறேன்” என்றேன்.

ராஜப்பன் “செரி” என்று சென்றான்.

“செரிடே, விடு நீ ஒண்ணும் மனசிலே வச்சுகிடாதே” என்றேன்.

“சின்னக்குருவி… ஒரு சின்னக்குருவி” என்றான் மாடன் பிள்ளை.

“ஆமா” என்றேன்.

“ஒரு அடைக்காய்ப் பாக்கு மாதிரி… அம்பிடு சின்னக்குருவி.”

“ஆமா ஆனா அதுக லெச்சக்கணக்கிலே இருக்கு. அதுக எல்லாம் சேத்தா ஒத்தைக்குருவி மாதிரியாக்கும்.”

அவன் “ஆமா!” என்றான்.

“நான் பேசிப்பாக்குதேன். டி இகிட்ட இன்னொரு தடவை சொல்லுதேன்” என்றேன், பேச்சை மாற்றும்பொருட்டு.

“வேண்டாம்…” என்று மாடன் பிள்ளை சொன்னான். “ஆருகிட்டயும் சொல்லவேண்டாம். எங்கிட்ட ஆரும் மன்னிப்பு கேக்கவேண்டாம்… நான் வேலையைச் செய்யுதேன்.”

“இல்ல..”

“ஆருமில்லை… நான் பேச இங்க ஆருமில்லை. எங்கிட்ட பேசவும் ஆரும் வேண்டாம்.”

“நீ செய்லே. உனக்கு நான் நல்ல பிரைஸ் ஒண்ணு தரச்சொல்லுதேன். மினிஸ்டர் கையாலே…”

“ஒண்ணும் வேண்டாம்… எனக்கு ஒண்ணும் வேண்டாம்…” என்றான் மாடன் பிள்ளை “நாளைக்கு மினிஸ்டருக்கு இந்த குருவிக்கூட்டை பரிசா குடுங்க. அங்க மெட்ராஸிலே ராஜீவ்காந்தி செண்டரிலே இதை கொண்டுபோயி வைக்கணும்.. இது அங்க இருக்கணும். அங்க வார அம்பிடு டெக்னீசியன்களும் எஞ்சீனியர்களும் இதைபாக்கணும்”

“சொல்லீருவோம்” என்றேன்.

“எனக்க அம்மோ! எனக்க அம்மோ!” என அவன் நெஞ்சில் கைவைத்தான். மீண்டும் விம்மினான்.

“செரிடே மக்கா. விடு… நீ மனுசனில்ல. நீயும் ஒரு குருவியாக்கும்”

அவன் திரும்பி கண்ணீருடன் என்னைப் பார்த்தான்.

“ஆமாலே நீயும் குருவியாக்கும். சத்தியமாட்டு” என்றேன்.

மாடன் பிள்ளை புன்னகைத்தான்.

***

முந்தைய கட்டுரைஅருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைதளத்தை ஆடியோ வடிவில் கேட்க