சூழ்திரு [சிறுகதை]

சிறிய குத்துப்போணி என்று தோன்றும் பித்தளைக் குவளையில்தான் அப்பா டீ குடிப்பது. அதை வங்காளி என்று ஏனோ சொன்னார்கள். வங்கம் என்று சொல்லவேண்டும் என்று வீட்டுக்கு வந்த பெரியப்பா ஒருமுறை சொன்னார். வங்கி என்றார் பெருவட்டர்.அனந்தன் அதில்தான் டீ அத்தனை சுவையாக இருக்கமுடியும் என்று நினைத்தான்

அப்பா புதுப்பால் உருகி மணமெழும் டீயை பலமுறை மூக்கருகே கொண்டுவந்து, தயங்கி, இறுதியாக இயல்பாக அமையும் ஒரு கணத்தில் குவளையின் விளிம்பை வாயில் வைத்து ஒரு சொட்டு உறிஞ்சி, நாவில் அதை நிறுத்தியபடி விழிகள் நிலைகுத்தியிருக்க ஒருகணம் அமைந்திருந்தபின், சப்புக்கொட்டி அடுத்த வாய் உறிஞ்சுவார். “என்னமோ அம்மைக்க முலையுறிஞ்சிக்குடிக்குத பச்சைப்பிள்ளைய போல” என்று அம்மா முணுமுணுப்பதை அனந்தன் கேட்டிருக்கிறான்.

அம்மா அப்பாவின் பின்னால் வந்து நின்று மெல்ல “சாயை எடுக்கட்டா?”என்றாள்.

“வேண்டாம்” என்று அவர் சொன்னார்.

அம்மா அனந்தனை வியப்புடன் ஒருகணம் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். அனந்தன் அப்பா தன்னைப் பார்க்காத, ஆனால் தன் நிற்பை அவர் உணரக்கூடிய தொலைவில் நின்றான்.

அவனுடன் படிக்கும் சரோஜினி,சாவித்ரி என்னும் இரட்டையரின் அக்காவின் திருமணம். இரண்டுபேருமே அவனை தனித்தனியாக திருமணத்திற்கு வரும்படி அழைத்திருந்தனர். திருமணம் தொலைவில் மஞ்சாலுமூட்டில். பள்ளிக்கூடமே எட்டு கிலோமீட்டர் தள்ளி. அங்கிருந்து மேலும் எட்டு கிலோமீட்டர் செல்லவேண்டும். வீட்டுக்குத்தெரியாமல் போகலாம்தான். ஆனால் கல்யாணத்திற்குரிய நல்ல நிஜார் சட்டை போட்டு அப்படி கிளம்பிச்செல்லமுடியாது.

சரோஜினி- சாவித்ரிகளின் அப்பா சின்னையன் பெருவட்டர் சொந்தமாக கார் வைத்திருந்தார். வெண்ணிற டர்க்கி டவல் போடப்பட்ட இருக்கைகள் கொண்ட அந்த கருப்பு அம்பாசிடர் காராமணிபோல பளபளப்பாக இருக்கும். அனந்தன் அதைப் பார்த்து தலைசீவியிருக்கிறான். அது எங்காவது நிற்குமென்றால் சிறுவர்கள் அதைப்பார்த்து தலைசீவுவது விளையாட்டு.”போங்கலே” என்று அவர்களை துரத்திவிட்டுவிட்டு பெரியவர்களும் முகத்தைப் பார்த்து மீசையை முறுக்கிக்கொள்வார்கள்.

அனந்தன் சரோஜினியிடமும் சாவித்ரியிடமும் திருமணத்துக்கு கண்டிப்பாக வருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தான். அல்லது ஒருவரிடமே இரண்டுமுறை வாக்குறுதி அளித்தோமா? அவர்கள் இருவரில் எவர் சாவித்ரி, எவர் சரோஜினி என்று அவனால் கண்டுபிடிக்கவே முடிந்ததிலை. அவர்களுக்கும் ஒருவர் இன்னொருவராக ஆகிவிளையாடுவது சலிப்பதே இல்லை. உண்மையிலேயே அவர்கள் அவ்வாறு ஒருவர் பிறராக ஆகிவிடுகிறார்கள்.

அனந்தன் நான்குநாட்களாகத் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் அப்பாவின் மேஜைமேல் அந்த அழைப்பிதழைப் பார்த்தான். வழக்கமான மஞ்சள்நிற அட்டையில் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் அல்ல. அட்டையில் ரோஜாப்பூ படம் இருந்தது. உள்ளே மெல்லிய தாளில் தனியாக அழைப்பிதழ் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது. ஆர்வத்துடன் அவன் அதை எடுத்து புரட்டிப்பார்த்தான். “மஞ்சாலுமூடு மேக்கரை வீட்டில் சின்னையன் நாடார் [மேக்கரை பெருவட்டர்] மகள் சரஸ்வதி என்கிற சின்னக்குட்டிக்கும்…’

அவன் படபடப்புடன் மீண்டும் பார்த்தான். அதேதான். அவனுக்கு அழைப்பிதழ் அளிக்கப்படவில்லை. பெரியமனிதர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அளித்திருக்கிறார்கள். அப்பா போகக்கூடுமா? அவருக்கும் மேக்கரை பெருவட்டருக்கும் நட்பேதும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் மேக்கரை பெருவட்டர் அடிக்கடி பத்திரப்பதிவு அலுவலகம் வருபவர். அவர்களுக்கு ஏகப்பட்ட நிலங்கள் இருக்கக்கூடும். அவர்களின் குடும்பம் மார்த்தாண்டவர்மா காலம் முதலே புகழ்பெற்றது. எட்டுவீட்டுப்பிள்ளைமாரை ஒடுக்குவதில் அரசருக்கு துணைநின்ற மேக்கரை ஆசானின் வம்சம்.

அவன் அந்த அழைப்பிதழை அப்பா இல்லாதபோது அவ்வப்போது எடுத்து அவருடைய கையோ கண்ணோ படும் இடத்தில் வைத்துக்கொண்டிருந்தான். அப்பா அதை நாலைந்து முறை எடுத்துப் பார்ப்பதையும் கவனித்தான். அவர் ஆர்வமேதும் காட்டவில்லை. ஆனால் அவர் அதை தூக்கிப்போடவுமில்லை. அதிலிருந்த அழகான ரோஜாப் படம் அவரை கவர்ந்திருக்கலாம்.

நேற்று மாலை முகப்புத்திண்ணையில் வெற்றிலைபோட்டு பேசிக்கொண்டிருக்கையில் இயல்பாக அதை கையில் எடுத்த டீக்கனார் “ஆராக்கும் ஆளு?’என்றார்.

“மேக்கரை பெருவட்டர்… வலிய கையாக்கும்… மாசம் ஒரு ஒத்தியோ பாட்டமோ ஒழிப்பிக்கலோ உண்டு… வருவாரு” என்றார் அப்பா.

“ஒரு விளித்தாளுக்கு ஒரு ரூவா வெலையிருக்கும்போல இருக்கே” என்று டீக்கனார் அதை வாங்கிப்பார்த்தபடிச் சொன்னார்.

அனந்தன் ஊடே புகுந்து “எங்க கிளாஸிலேயாக்கும் அவருக்க மகளுக படிக்கிறது… ரெட்டைப்பொண்ணுக..” என்றான்.

அப்பா சீற்றத்துடன் திரும்பி “உள்ளபோய் படிலே” என்றார்.

பெருவட்டர் சிரித்து “மக்கா அவளுகளுக்க பேரென்ன?”என்றார்.

அவன் குரல் தாழ்த்தி “சரோஜினி சாவித்திரி…” என்றான்.

“நல்ல குட்டிகளா?”என்றார்.

“நல்லா படிப்பாளுக”

“படிப்பு என்ன மசுத்துக்கு? பாக்க எப்டி?” என்றார் பெருவட்டர்.

அனந்தன் மூச்சுத்திணறினான்.

“போடா” என்றார் அப்பா.

அவன் சுவர் பின்னால் மறைந்து நின்றான் “கல்யாணத்துக்குப் போகணும்லா?” என்றார் டீக்கனார்.

“சேச்சே, அவ்ளவு நெருக்கமில்லை. அதுக்காக அவ்ளவு தொலைவு போறதுண்ணா…” என்றார் அப்பா.

“ஓரோ விளித்தாளும் குறைஞ்சது ஒரு ரூவா செலவிலே அடிச்சிருக்கான்… பத்து ரூபாயெங்கிலும் சம்பாவனை வைக்கணும்லா?” என்றார் பெருவட்டர்

“பைசா வேண்டாம்…. சம்பாவனை கொடுக்கவேண்டாம்ணு கீளே போட்டிருக்கு” என்றார் அப்பா.

“சம்பாவன வேண்டாம்ணா? பைசா குடுக்கவேண்டாம்ணா?” என்றார் டீக்கனார்.

பெருவட்டர் அதை வாசித்து “ஆமால்ல? அப்டி அடிச்சிருக்கானே?”

அப்பா “அவருக்கு இருக்குத சொத்து அப்டி” என்றார்.

”இருந்தாலும்… மகாலெச்சுமிய வேண்டாம்ணு சொல்லுகதுண்ணா” என்றார் டீக்கனார்.

“வாறவன்ல எவன் பைசா குடுக்குதவன் எவன் குடுக்காதவன்னு கணக்கு பாக்காம இருக்குதது நல்லதுல்லா வே” என்றார் அப்பா.

காலையில் அப்பா வழக்கத்தைவிட முன்னரே எழுந்து “எடீ வெந்நி வை” என்றபோது அவனுக்கு படபடப்பாக இருந்தது. ஒருவேளை கல்யாணத்துக்குத்தான் போகிறாரோ. கண்ணுக்குப்படும்படி உலவிக்கொண்டிருந்தால் ஒருவேளை கூட்டிச்செல்வாரோ. அவன் முகப்பு கூடத்தைவிட்டு அகலவில்லை.

அவர் குளித்துமுடித்து அமர்ந்திருந்தபோது பெருவட்டர் வந்தார். அவர் வெள்ளைவேட்டி வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார் தோளில் வெள்ளை டர்க்கி டவல். அவர் வந்து அமர்ந்ததும் அம்மா வந்து பார்த்து “சாயை எடுக்கட்டா” என்றாள்.

“டீக்கனாரு வரட்டும்” என்றார் பெருவட்டர்.

கருப்பன் “வௌ” என்றது.

“டீக்கனரா?” என்றார் அப்பா.

வந்தது கருங்குரங்கு. அது கூரையிலிருந்து ஆடிச் சொட்டி, முற்றத்தில் இறங்கி, திண்ணையில் ஏறி ,தூண் சாய்ந்து அமர்ந்து, அலுப்புடன் கொட்டாவி விட்டது.

“சுக்கிரி ஷீணிச்சுபோட்டே” என்றார் பெருவட்டர்.

“அவனுக்கு இங்கிண சோடி இல்லல்லா?” என்று அப்பா சொன்னார்.

“அப்பம் காட்டுக்கு போறதுக்கென்ன?” என்றார் பெருவட்டர்.

“காட்டிலே அங்க என்ன அதுக்கு கூட்டுகாரன்மாரா இருக்கானுக? இங்க நாம இருக்கம்”

“அதுகாக நாம இவனுக்கு பெண்ணு பாத்து கெட்டிவைக்க முடியாதுல்லா?”

சுக்கிரி என அதற்கு பெயரிட்டவர் டீக்கனார். அம்மா அதை சுக்ரீவன் என்று அழைத்ததன் சுருக்கம். அம்மா அப்பாவை பாலி என்றும் அதை சுக்ரீவன் என்று சொன்னாள். காலையில் அப்பா எழுந்து குளிக்கப்போகும்போது மரத்திலிருந்து இறங்கி கூடவே போகும். அவர் வெந்நீர் விட்டு குளிக்க அப்பால் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும். அவருடன் சேர்ந்து மாட்டுக்கு உண்ணிபொறுக்கும். கருப்பனுக்கும் அவ்வப்போது உண்ணி பொறுக்குவதுண்டு.

டீக்கனார் விரைந்து வந்தார். அவரும் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அணிந்து தோளில் வெண்ணிற டர்க்கி டவல் போட்டிருந்தார்.

சுக்கிரி “ர்ர்’ என்றது.

டீக்கனார் “நல்ல உறக்கமில்லை கேட்டியளா? நேத்து வலிய் எருமைக்கு என்னமோ மனசு செரியில்ல… விளிச்சுகிட்டே இருந்தா. என்னான்னு கேட்டு மனசிலாக்கி அதை சமாதானப்பெடுத்தி முடிச்சா பள்ளியிலே ஜெவமணி அடிச்சுப்போட்டு”

அம்மா வந்து “சாயை எடுக்கட்டா?”என்றாள்.

“எடு பிள்ளே” என்றபடி டீக்கனார் அமர்ந்தார்.

“எருமைக்கு என்ன மனசங்கடம்?”என்றார் பெருவட்டர்.

“என்னமோ… அதுக்க மனசு நாம என்ன கண்டோம்?”

அப்பா “மளைய நினைச்சு மனசு நொந்திருக்கும்… நல்ல எரிவெயிலு காலமாக்குமே” என்றார்

பெருவட்டர் “புல்லு கடிக்குதா?”என்றார்.

“இப்பம் நல்லா வைக்கோலு எடுக்குது” என்றார் டீக்கனார்

அம்மா மூன்று கோப்பைகளில் டீ கொண்டுவந்து வைத்தாள். டீக்கனார் அந்த அழைப்பிதழை எடுத்துப்பார்த்து “இண்ணைக்குல்லா இந்த கல்யாணம் என்றார். பின்பக்கத்தை பார்த்து “எட்டுமங்கலம் நாராயணன் நாயரு அரிவைப்பு… அதையும் போட்டுட்டானுகளா? பந்தலுகாரன் பேரையும் போடவேண்டியதுதானே?” என்றார்.

அப்பா  “ஆரு?”என்றார். ”குடும்வே” என்று பாய்ந்து அதைப்பிடுங்கி “ஆமா எட்டுமங்கலம்… வே, எட்டுமங்கலம் நாணுக்குட்டனை தெரியாதா வே?” என்றார்.

“அரிவைப்புகாரராக்குமோ?” என்றார் டீக்கனார்.

“சாதாரண அரிவைப்புகாரர் இல்லை. மகாராஜா கையாலே பட்டும் வளையும் வாங்கினவரு… அபிநவநளன் அப்டீண்ணு பேருவாங்கினவரு”

பெருவட்டர் “இன்னொருத்தரு அப்டி உண்டும்லா?”என்றார்.

“அவரு சம்பக்குந்நு கருணாகரன். அவரு அபிநவ பீமன். வே, சமையலிலே பீமபாகம் நளபாகம்னு ரெண்டு உண்டு… கொஞ்சமாட்டு வைக்கிறது நளபாகம். அதாவது பூவிலே மாலைகெட்டுகதுபோல. பெரிசாட்டு வைக்கிறது பீமபாகம். அதாவது பாறையத்தூக்கி கோயிலை கட்டுததுபோல”.

“இவரு கல்யாணச் சமையலுல்லா செய்யுதாரு?”.

“மலைமலையாட்டு பூவை கட்டி அப்டியே மாலையாக்கலாமே”

டீக்கனார் டீக்கோப்பையை எடுக்க ‘சாயையை வையும்வே… நாம கெளம்பி மஞ்சாலுமூடு போறம்” என்றார்.

“நாம ஆனைபாக்க பாறசாலைக்கில்லா போறம்?”

“ஆனை அங்கிணதான் நிக்கும். கற்பூரத்திலே செய்தது இல்லல்லா? அலிஞ்சுபோவாது. நாம அபிநவ நளனுக்க கல்யாணச்சாப்பாடு உண்ணுதோம்.”

“அதுக்கு உமக்குல்லாவே அளைப்பு? நாங்க எப்டி வாறது?”

“வே, ஒரு நல்ல பாட்ட ஒருத்தன் பாடினா நீரு என்னவே செய்வீரு? அவன் விளிச்சு சொல்லணுமாக்கும் வந்து பாட்டை கேளுன்னு? ஒரு காத்தடிக்குது. ஒரு பூமணம் வருது… எல்லாம் தெய்வத்துக்க விளியாக்கும்… வாரும்வே”.

டீக்கனார் பெருவட்டரிடம் “போலாமா வே?” என்றார்.

பெருவட்டர் “போலாம், இப்டி விளிக்கானே” என்றார்.

அப்பா டீ சாயை வேண்டாம் என்றார். “சாயை குடிச்சா வயறு அமந்துபோயிடும்….”

அனந்தன் “எனக்க கிளாஸிலே படிக்கப்பட்ட குட்டிகளாக்கும்’ என்றான்.

“உள்ளபோடா, பய இங்கிணயே கெடந்து சுத்துதான்” என்றார் அப்பா.

அனந்தனின் மூளை விழிப்பு கொண்டது. “சரோஜினி சொன்னா அபிநவ நளனுக்க சமையலாக்கும்ணு” என்றான்.

அப்பா திரும்பி அவனை கூர்ந்து பார்த்தார். பிறகு  “செரி அம்மைகிட்ட போயி சொல்லிட்டு சட்டைய போட்டுட்டு வா” என்றார்

அனந்தன் பாய்ந்து உள்ளே ஓடினான். “சட்டை… நைலக்ஸ் சட்டை… நீலச்சட்டை!” என்று கூவினான்.

“நைலக்ஸா? அது எதுக்கு?”

“அப்பா சொனனார் நைலக்ஸ் சட்டைய போடுடான்னு சொன்னார். இப்பவே போட்டுட்டு வான்னு சொன்னார்”

“எங்க போறே?”

“சரோஜினி வீட்டு கல்யாணத்துக்கு…”

“கல்யணத்துக்கா? சொல்லவே இல்லையே?”

“இப்பதான் நினைச்சு கெளம்பிட்டிருக்காக”

“நீயுமா போறே”

“அப்பா வரச்சொன்னாங்க”

“நைலக்ஸ் எதுக்கு”

“நான் சரோஜினிகிட்ட சொன்னேன், நைலக்ஸ் சட்டை இருக்குன்னு”

“நைலக்ஸ்லாம் வேண்டாம்… வெயிலுக்கு எரியும்”

“நைலக்ஸ் சட்டை! நைலக்ஸ் சட்டை! நைலக்ஸ் சட்டை! நைலக்ஸ் சட்டை!”

“சத்தம்போடாதே… எடுத்து தாறேன்.

நைலக்ஸ் சட்டை உண்மையில் பெண்கள் சட்டை தைக்கவேண்டியது. நீலநிறத்தில் ஜிலுஜிலுவென்றிருந்தது. டைலர் குஞ்ஞன் அப்பாவிடம் ”நல்ல துணியாக்கும். சின்னப்பிள்ளைக்கு ஒரு சட்டையை தைப்போம் பிள்ளைவாள். நல்லா இருக்கும் என்றார்.

“தையல் நிக்குமாடே? என்றார் அப்பா.

“உள்ள துணிவச்சு தைப்போம்.. நிக்கும்”

நைலக்ஸ் சட்டை போட்டதும் அனந்தன் ஒரு பெரிய மீன்கொத்தி போல உணர்ந்தான். பாய்ந்து மீனைக்கவ்வி சிறகு விரித்து மேஜைமேல் ஏறி அமர்ந்தான்.

“டேய் கிளிச்சுட்டு வராதே… “என்றாள் அம்மா.

“மயிலு மாதிரில்லா இருக்கு!” என்று தங்கம்மை வாயில் கைவைத்து வியந்தாள்.

“மாயி தத்தை! மாயி தத்தை!” என்று குட்டி சிணுங்க ஆரம்பிக்க அம்மா அதை எடுத்து “எனக்க கிலுக்காம்பெட்டிக்கு மயிலுச்சட்டை தருவேன்…” என்று அப்பால் கொண்டுசென்றாள்

அப்பாவும் டீக்கனாரும் பெருவட்டரும் அப்படியே வைத்துவிட்ட மூன்று கோப்பை டீயையும் சுக்கிரி எடுத்து குடித்தது. நாக்கைச் சுழற்றியபடி கோப்பையை தூக்கி கவிழ்த்து அண்ணாந்து உள்ளே டீ எஞ்சுகிறதா என்று பார்த்தது. கையை உள்ளே விட்டு சுழற்றியும் ஆராய்ந்தது.

அவர்கள் கிளம்பியதும் அது அனந்தனை நோக்கி கண்களைச் சிமிட்டியது. பின்பு வீட்டுக்குள் சென்றது. சமையலறையை ஒட்டி அமர்ந்து இட்லி வாங்கி சாப்பிட்டுவிட்டு போகும். ஒரு முழு இட்லியை வாய்க்குள் அதக்கி வைத்திருக்கும்

அப்பாவும் பெருவட்டரும் டீக்கனாரும் முன்னால் செல்ல அனந்தன் டீக்கனார் கையைப் பிடித்தபடி நடந்தான். அப்பா நாணுக்குட்டன் நாயர் பற்றி பேசிக்கொண்டே சென்றார். நாணுக்குட்டன் நாயரின் அப்பா  எட்டுமங்கலம் கேசவன் நாயரும் பெரிய சமையற்காரர். அப்பா இளமையில் அவருடைய சமையலை பாறசாலை கோயில் உற்சவத்தில் முதல்முறையாகச் சாப்பிட்டார். அதன்பின் இரண்டே முறை. பொன்மனை தலைக்கட்டு  வலியநிலை அச்சுதன்தம்பியின் மகள் கல்யாணத்திற்கு, திருவட்டார் அம்மைவீட்டு குஞ்ஞிலக்ஷ்மிக்குட்டியம்மாவின் திருமணத்தில்.

“திருவட்டாறிலே அவரு ஒரு அவியல் வைச்சாருவே, அது அவியல்… அவியல்ணாக்க அது அவியல். அவியலிலே சேனைக்கிளங்குக்கும் சேம்பக்கிளங்குக்கும் ஒரு ஸ்வரச்சேர்ச்சை வரணும் பாத்துக்க. அது சில்லறைப்பட்டவன் கைக்கு சிக்காது. அண்ணைக்கு அது நூறு பர்செண்ட் வந்துபோட்டு. அவியலுக்குமேலே தயிர் விடணும்… அது சும்மா விட்டா போதாது. பக்குவமான நேரத்திலே விடணும்… அவியலை இறக்குததுக்கு முன்னாடி, சேனைக்கிளங்குக்க கறைமணம் போயி தேங்காய் சுண்டுத மணம் வாறதுக்கு நடுவிலே கொண்டாந்து செருகிப்போடணும்… இல்லேண்ணா போச்சு”

“இவரு எப்டி?? என்றார் டீக்கனார்.

“இவரும் கெஜகில்லில்லா… போன வருசம் திருவட்டாறிலே அனந்தபத்மநாபன் நாயருக்க மக கல்யாணத்திலே ஒரு கூட்டுகறி வச்சார். பூசணிக்காக்கூட்டுகறி ஒரு எசக்கேடான ஐட்டமாக்கும். அது கறியாக்கும், ஆனா கொஞ்சம் இனிப்பு உண்டு. இனிப்பு நிக்கவேண்டிய எடத்திலே நிக்கணும், வீட்டிலே கெட்டினவ புருசனுக்கு ஒப்பரம் நிக்குத மாதிரி. கூடிப்போனா வாயிலே வைக்க முடியாது. குறைஞ்சா ருசி இருக்காது… அதொரு கலையில்லா?”என்றார் அப்பா.

”அதொடு கொடுப்பினையாக்கும்” என்றார் டீக்கனார்

“இப்பம் சோபானப் பாட்டுக்கு இடைக்கா எப்டி இருக்கு? பாட்டு போறவளிக்கு இடைக்கா வரணும். ஆனா பாட்டைக்கேக்குறப்ப இடைக்கா காதிலே விளப்பிடாது. பாட்டுக்குள்ள இடைக்காவுக்க தாளம் எறி ஊறியிருக்கணும்..” அப்பா கையை வீசி “அதுக்காக்கும் இடைக்காவுக்கு அப்டி ஒரு நல்ல தோலு வேணும்னு சொல்லுதது. கிண்கிண்ணுண்ணும் கேக்கப்பிடாது. மெத்து மெத்துண்ணும் ஆகப்பிடாது. பொத்தின சத்தம் வரணும்… நல்ல காதுக்கு அது தெரியும்வே”

ஆற்றைக் கடந்து மாறப்பாடி சந்திப்பில் பதினாறு ஜி பஸ்ஸை பிடித்தார்கள். அது குழித்துறைக்குச் செல்வது. மேல்பாலை சந்திப்பில் இறங்கி அங்கிருந்து அடுத்த பஸ் மஞ்சாலுமூடுக்கு. வழி நெடுக அப்பா சமையலைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். “நல்ல சத்யை சாப்பிட்டா ஒரு குணமிருக்கும்… நாம சாப்பிடுகது என்னென்ன? சோறு சாம்பாரு அவியலு துவரன் அதுக்குமேலே பிரதமன் போளி. ஆனா சாப்பிட்டு முடிஞ்சு நாம ஏப்பம் விடுறப்ப நாம அறியாத ஒரு புதிய சாப்பாட்டுக்க மணம் வரணும்…”

“அதெப்டி?“ என்றார் டீக்கனார்

“வே, வெத்திலயும் சுண்ணாம்பும் பாக்கும் சேந்தா தாம்பூல மணம் எப்டிவே வருது”

டீக்கனார் “அதுசெரியாக்கும்” என்றார்

“அதேமாதிரி அத்தனை சாப்பாடும் சேந்து வயித்திலே ஒண்ணாயிடணும்… அதாக்கும் அன்னலெச்சுமி. நல்ல சமையல்காரன் கையை வைக்கேல்லண்ணா புளிச்ச ஏப்பம் வரும்… எரையெடுத்த பாம்புமாதிரி நெளியணும்..நல்லா சாப்பிட்டவன் எருமைமாதிரி படுத்து அசைபோட்டு கண்ணுசொக்கி இருக்கணும்வே”

மஞ்சாலுமூடு பகவதிகோயில் முகப்பிலேயே மாபெரும் அலங்கார வளைவு அமைத்திருந்தார்கள். அதில் செவ்வந்திப்பூவால் ஆன அடுக்குவளையங்கள் தொங்கின.

“ஏம்வே, ஒத்த வளையத்துக்கே நூறுரூவா ஆயிருக்கும்போல இருக்கே” என்றார் டீக்கனார்

வண்டிகளில் வந்தவர்கள் வண்டிகளை நிறுத்த பக்கத்து தோப்பில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான வண்டிமாடுகள் வைக்கோல் தின்னும் கழுத்துமணி ஓசை. சைக்கிள்கள் நூற்றுக்கும்மேல். கார்களே இருபது நின்றன.ஒருகார் மிகப்பெரியது

“பியூக்கு காராக்கும்’ என்றேன்

அப்பா “இப்பம் எல்லாவனும் வண்டிக்கு செவலைக்காளைய் கெட்டுதான். காங்கேயமாக்கும் வண்டிக்க ஐஸ்வரியம்” என்றார்

“அது மெதுவாட்டு போவும்லா? லோடு வலிக்கணுமானா அது நல்லது” என்றார் டீக்கனார்

“வேகமா போயி என்ன கோட்டையயா ஜெயிக்கப்போறம்? வே, ஒரு ஐசரியம் வேண்டாமா? செவலக்காளைய பாத்தா மூத்த நாயை மாதிரில்லா இருக்கு?”

அங்கிருந்து பெருவட்டரின் வீடு வரை இருபக்கமும் மூங்கில் நட்டு தோரணம் போல செவ்வந்திப்பூ மாலைகள். தரையை செம்மையாக்கி ஆற்றுமணல் விரித்திருந்தனர். சின்னப்பிள்ளைகள் ஓடிவிளையாடிக்கொண்டிருந்தார்கள். நாதஸ்வர மேளம் கேட்டது

ஏழுநிலைப்பந்தல் ஒரு பெரிய கோட்டைபோல தெரிந்தது. ”ஏளுநிலைப்பந்தலு கெட்டினவனையும் விளித்தாளிலே பேரு போட்டிருக்கலாம்” என்றார் பெருவட்டர்

மூங்கில் நிறுத்தி சேர்த்துக்கட்டி எழுப்பிய பந்தல் இரண்டு பனை உயரம். அதன்மேல் பனையோலைகளால் அலங்காரம். ஏழு கூம்புகளில் கொடிகள் பறந்தன. பந்தலுக்குள் போக ஏழு வாசல்கள். முதன்மை வாசல் வழியாக அப்பாவும் டீக்கனாரும் பெருவட்டரும் உள்ளே சென்றார்கள்.

வாசலில் மேக்கரை பெருவட்டர் நின்றிருந்தார். கைகூப்பி வணங்கி “வாருங்க… வாருங்க… கண்டு கொறே நாளாச்சுல்லா? சௌக்கியமா?”என்று சொல்லிக் கொண்டிருந்தார்

அப்பாவைக் கண்டதும் “வாருங்க… வாருங்க பிள்ளே” என்றார்

“இவன்மாரு நம்ம சினேகிதன்மாராக்கும். இது பெருவட்டன். இது டீக்கன். இங்க நாணுக்குட்டன் நாயராக்கும் அரிவைப்புண்ணு விளிப்பேப்பரிலே பாத்தம். உடனே வண்டி ஏறிட்டோம்” என்றார்

மேக்கரை பெருவட்டர் முகம் மலர்ந்து “பின்னே? ஆளு சும்மாவா? வரமாட்டேன் வேற விளி இருக்குண்ணு சொன்னாரு. வரேல்லண்ணா எனக்க மகளுக்க கல்யாணம் இல்லேன்னு சொல்லிப்போட்டு வாசல் திண்ணையிலே இருந்துபோட்டேன்லா? அவரே வந்து செரி போடே, நான் வாறேண்ணு சொன்ன பின்னாடில்லா எந்திரிச்சேன்” என்றார்

“கொடுப்பினை வேணும்’ என்றார் அப்பா. “குட்டி யோகமுள்ளவளாக்கும். நல்ல சாப்பாட்டுக்குப் பிறவு நாலாளு மனசுநிறைஞ்சு நல்லாருண்ணு சொல்லுதாகள்லா, அதாக்கும் தெய்வத்துக்க ஆசீர்வாதம்”

மேக்கரை பெருவட்டர் கண்கலங்கி “ஆமா, நல்லாருக்கணும் எனக்க குட்டி” என்றார்

பெருவட்டர் “ஏளுநெலைப் பந்தலுல்லா.. ஆராக்கும் பந்தலுசில்பி?” என்றார்

”வாகையடி அனந்தன்நாடாரு… அவரும் பேருகேட்ட ஆளாக்கும்”

“பாக்கணுமே” என்றார் பெருவட்டர்

“வந்திட்டுண்டு… பாப்பம்” என்றார் மேக்கரை பெருவட்டர் “லே முருகா லே கூட்டிட்டுப்போலெ”

அவர்களை பெருவட்டரின் அனந்தரவன் முருகன் வந்து கூட்டிச்சென்று அமரச்செய்தான். மிகப்பெரிய பந்தல். மண்டைக்காட்டு கொடைக்குத்தான் அனந்தன் அத்தனைபெரிய பந்தலைப் பார்த்திருக்கிறன்ன். மேலே வெண்ணிறமான துணியால் விதானமிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மூங்கில் தூண்கள். அவற்றில் எல்லாம் சிவந்த துணி சுற்றியிருந்தார்கள். பந்தலின் கூரைவிளிம்பிலிருந்து பூத்த கொன்றைபோல பட்டுப்பாவட்டாக்களும் துணித்தூண்களும் தொங்கின. பந்தலின் நடுவே பன்னிரண்டு பூவட்டத் தொங்கல்கள்.

பந்தலின் அருகே ஒரு சிறு தனிப்பந்தல். அதில் மரப்பலகையிட்டு உருவாக்கப்பட்ட மேடையில் நாதஸ்வரக்குழு.

“ஆராக்கும் நாதஸ்வரம்?” என்று அப்பா கேட்டார்

“தஞ்சாவூரு பார்ட்டி. திருவீழிமலை சாமிநாதபிள்ளையும் உலகநாதபிள்ளையும் நாதஸ்வரம். தவிலு தலைச்சங்கோடு சுப்ரமணிய பிள்ளையும் அவருக்க தம்பி கணேசபிள்ளையும்…’ என்றான் முருகன்

“நயம் பார்ட்டியாக்கும். தவுல பிள்ளையப் போலல்லா வச்சு கொஞ்சுதாரு” என்றார் அப்பா

நாதஸ்வரம் எடுத்த பாட்டு அனந்தனுக்குத் தெரிந்திருந்தது. “நகுமோ மோ கனலேநி” என்றேன்

அப்பா திரும்பிப்பார்த்து முகம் மலர்ந்து “ஆபேரியாக்கும்” என்றார். அவருக்கு பிடித்த ராகம் அது என்று அனந்தனுக்குத்தெரியும். சிலசமயம் அவர் அதைக்கேட்டு அழுதுவிடுவதும் உண்டு

“தேவகாந்தாரம்ணு நினைச்சேன்” என்றார் டீக்கனார்

“அதும் இதும் ஒண்ணுதான். ஷெனாய்லே பீம்பளாசின்னு ஒண்ணு வாசிப்பான். அதுவும் ஒண்ணுதான்… ஐயர்மாருக்குத்தான் அதுக்க வித்தியாசம் தெரியும்” என்றார் அப்பா

நாதஸ்வர இசைக்கு அப்பா தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். பெருவட்டர் அனந்தனிடம் “பந்தலு இப்டி நிக்கணுமானா முதல்ல காத்துக்க கணக்க தெரிஞ்சு வச்சிருக்கணும். காத்து எடத்துக்கு எடம் சீசனுக்கு சீசம் மாறும்… அதொரு சாஸ்திரமாக்கும்” என்றார். ‘ஆடாம இருந்தா பந்தலு விளுந்திரும். ஆட்டம் கூடினாலும் சரிஞ்சிரும். மேலே ஆடணும், நாட்டியிருக்க மண்ணிலே தூணு ஆடப்பிடாது” என்றார்.

பந்தல் நிறைந்துவிட்டது “ஏளு ஊரு சேத்து விளிச்சிருக்காரு” என்று டீக்கனார் சொன்னார்

“ஊருகூடி சாப்பிட்டாலாக்கும் விருந்துக்கு ருசி” என்று அப்பா சொன்னார். “கூட்டம் கூடிப் பாக்கப்பாக்க ஆனை அளகாட்டு ஆகுதுல்லா?”

அனந்தன் சரோஜினியை பார்த்துவிட்டான். அப்பாவிடம் ஒன்றுக்கு போவதாக கையை காட்டினான். அவர் தலையசைக்க அவன் வெளியே போய் பந்தலைச்சுற்றிக்கொண்டு முன்னால் சென்றான்.

“சரோஜினி நான் வந்தாச்சு!”

அவள் அவனைப்பார்த்து வாய்பொத்தி சிரித்து “ஏம்லே இந்தச் சட்டை போட்டிருக்கே?”என்றாள்

“இது மீன்கொத்திச் சட்டை” என்றான் அனந்தன் “நான் சொன்னேன்லா? நைலக்ஸ் சட்டை”

சாவித்ரி “நல்லா இருக்கு” என்றாள்

“எங்க அப்பா வந்திருக்காரு…நாதஸ்வரம் கேக்காரு” என்றான் அனந்தன்.

“சாவித்ரீ ஏட்டி” என்று கூப்பிட்டபடி ஒரு பெண் பட்டுப்புடவை கட்டி தலைநிறைய பூவுடன் வந்தாள்  “இங்கியா நிக்கே?”

“எனக்க கிளாஸ்லே படிக்க கூட்டுகாரன்… அனந்தன்” என்றாள் சரோஜினி

“அந்த நாயரு பையனா? உனக்க அப்பா வந்தாராடே?”

“அங்க இருந்து பாட்டு கேக்குதாரு”

“நீ இஞ்ச வா”

அவள் அவனை அழைத்துச்சென்றாள். ஒரு சிறு அறையை திறந்து உள்ளிருந்து ஒரு லட்டு எடுத்துக்கொண்டுவந்து தந்தாள். “இதை தின்னு… உங்கப்பாவுக்கு இதைக் குடு”

‘இது என்னது?” என்றான் அனந்தன்

“இது தஞ்சாவூரு சீவல்பாக்கு… நான் குடுத்தேன்னு சொல்லு”

“ஆரு?”

”மகாலச்சுமின்னு சொல்லு”

“செரி”

அனந்தன் திரும்ப வந்து அப்பாவிடம் சீவல் பொட்டலத்தை கொடுத்து ‘மகாலச்சுமீன்னு ஒரு மாமி குடுத்தா” என்றான்

“வே, மகாலச்சுமிவே” என்றார் டீக்கனார்

“அப்பவே பாத்தேன்…பட்டும் பவிசுமாட்டு இருக்கா… நம்மள பாக்கல்லேண்ணு நினைச்சேன்… பாத்திருக்கா” என்றார் பெருவட்டர்

அப்பா சீவலை வாங்கி சற்றே அள்ளி வாயில்போட்டார்.முகம் மலர்ந்து “தஞ்சாவூரு நாதஸ்வரம் கேக்குறப்ப தஞ்சாவூரு சீவலு போடணும்வே. அது ருசியறிஞ்ச பெண்ணுக்கு தெரியும்”

“மகாலச்சுமிக்கு உம்ம ருசி அறியாம இருக்குமா வே?”

நாதஸ்வரம் சுதியும் கதியும் மாறியது. கூட்டத்தில் பேச்சொலி அடங்கியது. திருமணச்சடங்குகள் தொடங்கின. திருமணத்தை அவர்களின் குடும்பத்திலுள்ள மூத்தநாடார் நடத்தி வைத்தார். மணமேடையில் புதுநெல் நிறைந்த மரக்கால்களில் தென்னம்பூக்குலைகள். பொன்னிறநீர்க்குடங்கள். குத்துவிளக்குகள். தாலங்களில் கனிகள், காய்கள், மலர்கள். ஒரு தாலத்தில் பொன்,பட்டு. ஒரு புதிய பனையோலைக் கடவத்தில் மண்.

மந்திரம் ஏதுமில்லை. மூத்தநாடார் ஆணைகளை மட்டும் இட்டார். மேக்கரை பெருவட்டர் பட்டுவேட்டி கட்டி, தலையில் பெரிய சரிகை முண்டாசுடன், சரிகை மேலாடையை முறுக்கி உடலுக்கு குறுக்கே பூணூல் போல அணிந்தபடி, இடுப்பில் கட்டிய கச்சையில் குத்துவாளைச் செருகியபடி வந்து மேடையில் நின்றார். பையனின் அப்பாவும் அதேபோல தலைப்பாகையும் உடைவாளுமாக வந்து நின்றார்.

அனந்தன் எழுந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தான். நாயர் கல்யாணங்களை விட சடங்குகள் கூடுதலாக இருந்தன. பையன் கடவத்தில் இருந்த மண்ணில் நவதானியங்களை விதைத்து நீரூற்றினான். ஒவ்வொருவரையாக வணங்கினான். அதன்பின் பெண்ணை கூட்டிவந்தனர். ஒரு பெரிய மலர்மாலைக்குவியல் போல அவள் நடந்துவந்தாள். கையில் தண்ணீர் நிறைந்த வெண்கலக் குடத்துடன் மணமேடையில் ஏறினாள்.

அனந்தன் சலித்துப்போய் கூட்டத்தை பார்க்க ஆரம்பித்தான். ஆண்களெல்லாம் சலிப்புடன் ஆங்காங்கே பார்வையை சுழற்றிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் கண்கள் குத்திட மணமேடையை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் முகங்களில் ஏதோ தீவிரம் நிறைந்திருந்தது

உரத்த நாதஸ்வர ஓசை. சடங்கு செய்த மூத்த நாடார் “பட்டுக்கொடுக்குதேங்கய்யா!” என்றார். மணமகன் பெண்ணுக்கு பட்டு கொடுத்தான் ”பெண்ணு சேலை மாத்தட்டுங்கய்யா” பெண் சென்று பட்டுமாற்றி உடுத்து வந்தாள். “மாலை மாத்திக்கிடுங்கய்யா” மாலைமாற்றலும் தாலிகெட்டு முடிந்தது. அனந்தனின் தலைமேல் மலரும் அட்சதையும் மழைபோல பொழிய அவன் முடியை தட்டி அவற்றை உதிர்த்தான். அத்தனைபேருடைய தலையிலும் மலரும் அரிசியும் இருந்தன

மணமக்கள் ஒவ்வொருவர் காலிலாக விழுந்து ஆசி வாங்கினார்கள். கிழவர்களை கைத்தாங்கலாக மேடைக்கு கொண்டுசென்றார்கள். அவர்கள் காலில் மணமக்கள் விழுந்து ஆசிபெற சில கிழவர்கள் அழுதார்கள்.

ஒவ்வொருவராக சென்று மணமக்களை வாழ்த்தலாயினர். அனந்தன் சரோஜினியோ சாவித்ரியோ தெரிகிறார்களா என்று பார்த்தான். சரோஜினி அந்தவழியாக பாவாடையை தூக்கிக்கொண்டு ஓடினாள். “சரோ சரோ” என்று அவன் கூப்பிட்டான். அவள் கேட்கவில்லை

அப்பாவும் டீக்கனாரும் பெருவட்டரும் மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தார்கள். அப்பா வந்து அமர்ந்துகொண்டு அவனை அழைத்து “பிள்ளைவாள் கிட்ட போயி சக்கனி ராஜமார்க்கமு வாசிக்கணும்னு சொல்லுடே” என்றார்

அவன் நாதஸ்வர மேடைக்குச் சென்று நாதஸ்வரம் வாசித்தவரிடம் “அப்பா சொன்னாரு சக்கனிராஜா வாசிக்கணும்னு” என்றான்

அவர் திரும்பி அப்பாவை பார்த்து புன்னகைத்து தலைதாழ்த்தியபின் வாசிக்க ஆரம்பித்தார். அப்பா தலையசைத்து புன்னகைத்தார்

மேக்கரை பெருவட்டர் கும்பிட்டபடி அருகே வந்து “முதப்பந்தி இருந்திட்டிருக்கு… பிள்ளைவாளும் பெருவட்டரும் டீக்கனாரும் வந்து சாப்பிட்டு எனக்க குட்டிய அனுக்ரகிக்கணும்” என்றார்

“இருக்கட்டும்… இந்த ராகம் தீரட்டும்…அருமையாட்டு வாசிக்குதாரு”

“தஞ்சாவூருக்கு போயி விளிச்சு கொண்டுவந்ததாக்கும். அப்டி மதுரைய கடந்து வரமாட்டாங்க” என்றார் மேக்கரை பெருவட்டர்

“கெந்தர்வன்மாருல்லா!” என்றார் அப்பா

மேக்கரை பெருவட்டர் கைகூப்பி “அப்ப ரெண்டாம் பந்திக்கு வாறேன்” என்றார்

அவர் போனதும் அப்பா “முதப்பந்தி என்ன இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்காக்கும் வே. மரியாதையா விளிச்சுதாருண்ணு நாம போகக்கூடாதுல்லா” என்றார்

சக்கனிராஜ முடிந்ததும் இரண்டாம்பந்திக்கும் நேரம் சரியாக இருந்தது. அப்பா சென்று நாதஸ்வரமும் தவிலும் வாசித்தவர்களை கைகூப்பி வணங்கி ஆளுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தார். அவர்கள் அதை வாங்கி கண்ணில் ஒற்றி மடியில் வைத்தனர்

அப்பா வந்து “எந்தரோ மகானுபாவுலு வாசிக்க சொன்னேன்… சாப்பிடுற இடத்திலேயும் கேக்கும்லா?”என்றார்

“ரூவா குடுக்கணுமா?”என்று அனந்தன் கேட்டான்

“அவங்க நாலுபேருமே பணக்காரங்களாக்கும்.. தஞ்சாவூரிலே இருந்து காரிலே வந்திருக்காங்க. நம்ம பணத்தாலே அவங்களுக்கு ஒண்ணும் ஆகப்போறதில்லை. ஆனா நாம சரஸ்வதிக்கு காணிக்கை குடுக்கணும். அது அவங்களுக்கு குடுக்கிறதில்லை, அவளுக்கு குடுக்கது. அது அவங்களுக்கும் தெரியும்” என்றார் அப்பா

டீக்கனார்  “நீரு பணம் குடுக்கிறப்ப அவருக்க முகம் விரிஞ்சுபோட்டுவே” என்றார்

பந்திவாசலில் நின்றவர் வந்து கும்பிட்டு “வாருங்க… எடம்போட்டிருக்கு” என்றார்

அப்பா உள்ளே நுழைந்து கைகழுவிவிட்டு பந்திக்காரன் அழைத்துச்சென்று அமரவைத்த இலையின் பின்னால் பந்திப்பாயில் கால்மடித்து அமர்ந்தார். அவருக்கு அப்பால் டீக்கனார் பெருவட்டர் இருவரும் அமர்ந்தனர். இப்பால் அனந்தன் அமர்ந்தான்.

இலையில் கறிகள் பரிமாறப்பட்டிருந்தன. உப்பு இடக்கை ஓரம் ஒரு துளி. அதன்பின் மாங்காய், கிடாரங்காய், நெல்லிக்காய், இஞ்சிப்புளி ஊறுகாய்கள். அவற்றை பின்னர் இஞ்சி, நார்த்தங்காய், மிளகு எரிகறிகள். வறுத்து அரைத்து சற்றே வெல்லமிட்டு செய்யப்பட்ட எரிகறிகள் அரக்குபோல, தேன்மெழுகுபோல தெரிந்தன. வலது ஓரம் முதலில் பெரும்பயிறு போட்டு செய்த பூசணிக்காய் கூட்டுகறி. துவரன்பருப்பு வேகவைத்து துருவியிட்ட வெள்ளரிக்காயுடன் செய்யப்பட்ட பருப்புக்கூட்டு. பெரும்பயறு வேகவைத்து காரமிட்டு தாளித்துவைத்த பயறுக்கூட்டு. அதையொட்டி தயிர் உருகி நெய்பரவி நின்ற அவியல். அதில் எழுந்து நின்ற சிறுவிரல் தடிமன் கொண்ட வாழைக்காய்த் துண்டுகள். குழைந்தும் குழையாத தேங்காயின் விழுது.

அதற்குப்பின் மயக்குகறிகள். தேங்காய் துருவிப்போட்டு கடைந்து எள் இட்டு தாளித்த காய்ச்சில் கிழங்கு, வெண்ணிறமாக குழைந்த செறுகிழங்கு, நாவில் மெல்லிய இனிப்பை அளிக்கும் பொன்னிறமான  நனகிழங்கு. அதன்பின் வறுத்தரைச்ச உருளைக்கிழங்கு கூட்டு. அதன் அருகில் மொந்தன் வாழைக்காய் மசாலாக்கூட்டு. பெருஞ்சீரகம் போட்டு வைத்த சேப்பகிழங்குக் கூட்டு. பெரும்பயறு மிதந்து நின்ற புடலங்காய் கூட்டு. மென்பச்சை நிறமான பீர்க்கங்காய் கூட்டு.அதன்பின் பொரியல்கள். சிறுதுண்டுகளாக நறுக்கி தேங்காய் துருவல் இட்டு தாளித்து எடுத்த பிஞ்சுப்பயறு, கடுகுதாளித்து புரட்டிய வெண்டைக்காய், நெய்மணம் கொண்ட கத்தரிக்காய்.

அதன்பின் துவரன்கள். கொத்தவரங்காய், அவரைக்காய், கோவைக்காய். அதன்பின் வழுதுணங்காய், நேந்திரன்வாழைக்காய் சேனைக்கிழங்கு ஆகியவற்றாலான விழுக்குபுரட்டிகள். அதன்பின் பச்சைமிளகாயுடன் தேங்காய் அரைத்து ஊற்றிச் செய்த வெள்ளரிக்காய், பச்சைத்தக்காளிக்காய், தடியன்காய் பச்சடிகள். அதன்பின் அன்னாசிக்காய், புளிச்சிக்காய், பச்சை அயனிக்காய் ஆகியவற்றை இட்டு பச்சைமிளகாயுடன் செய்த புளிக்கும் கிச்சடிகள் மூன்று. அதன்பின் பெரும்பயறிட்டு செய்த செய்த ஓலன். தேங்காய் பால் விட்டு சேனைக்கிழங்கு துண்டு போட்டு செய்யப்பட்ட சேனைக்காளன். ‘காளன் அமைஞ்சா பாலோடு நிக்கும்’ என்று அப்பா சொல்வதுண்டு. வாழைப்பழம் இட்டு செய்யப்பட்ட பழக்காளன்.

தொடர்ந்து வெல்லமிட்டு வைக்கப்பட்ட இனிப்புப்பச்சடி. சீனிபோட்டு செய்யப்பட்ட புளிப்புப்பச்சடி.மாம்பழத்தை துண்டுகளாக்கி காரமிட்டு செய்யப்பட்ட மாம்பழப் பச்சடி.பட்டைகளாகச் சீவி காரமிட்டு பொரித்து எடுத்த சேனைக்கிழங்கு.மொந்தன் வாழைக்காயை சீவிச்செய்த வாழைக்காய் உப்புவரட்டி. வெல்லத்தில் புரட்டி எடுத்த பேயன் வாழைக்காய் சர்க்கரை வரட்டி. அதனருகே கெட்டியான பச்சைத்தோல் கொண்ட சிங்கன் வாழைப்பழங்கள் இரண்டு. மாம்பழத்துண்டு இரண்டு. வரிக்கைப் பலாச்சுளை மூன்று. ஒரு சிறு கிண்ணத்தில் தேன். இன்னொரு கிண்ணத்தில் வெண்பொன்னிறமான பசுநெய்.

“கறி நாலு, உப்புநாலு, வறவு நாலு, பொரிவு நாலு, உபதம்சம் நாலு, மதுரம் நாலு அதாக்கும் குறைஞ்ச கணக்கு” என்று அப்பா சொன்னார். “லச்சுமி கடாச்சம் உண்டுமானா மேலே எம்பிடுவேணுமானாலும் போகலாம்”

“எண்ணிப்பாக்கணுமோ?

“எண்ணவேண்டாம் சரியாட்டு இருக்கும்”

“உபதம்சம்னா?”

“தொடுகறி”

“நானும் தின்னு தின்னு பாக்குதேன்…நாக்கு பளகுது. பேரு மனசிலே நிக்கமாட்டேங்குது” என்றார் டீக்கனார்

“நீரு என்னவே அரிவைப்பா படிக்கப்போறீரு?”

கீழ் எல்லையிலிருந்து ஒருவன் யானை முகப்படம் போல பொள்ளல்குமிழிகள் நின்ற பொன்னிறமான  பப்படத்தை வைத்துக்கொண்டு சென்றான்.அதைத்தொடர்ந்து ஒருவன் கருங்காலிப் பட்டை போட்டு காய்ச்சிய ஆழ்ந்த செந்நிறம் கொண்ட வெந்நீரை கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு சென்றான்.

அதன்பின் சோறு வரத்தொடங்கியது. செந்நிறமானத் தீற்றல்கள் கொண்ட நீளமான பெரிய அரிசியாலான சம்பாச்சோறு. முதலில் சிறுபயற்றம் பருப்பாலான கறிவந்தது. தளிர்ப்பச்சைமஞ்சள் நிறம் கொண்டது. அதில் நெய்ச்சொட்டு ஊற்றி பப்படத்தை உடைத்து சேர்த்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். பருப்புகறிக்கு பொரியல்களையும் துவரன்களையும் மட்டும்தான் தொடவேண்டும். அவியலோ கூட்டோ எடுக்கக்கூடாது. பச்சடிகளையும் கிச்சடிகளையும் தொடக்கூடாது. ஊறுகாயில் கைவைத்தால் அது சமையலைப் பழிப்பது.

அனந்தன் அப்பாவைப் பார்த்துப்பார்த்து சாப்பிட்டான். அவர் என்ன எடுக்கிறாரோ அதை எடுத்தான். அப்பா எப்போதுமே விரல்மடிப்புகளுக்குமேல் உணவுபடாமல் உண்பார். வாயில் விரல் படாது. உதடுமூடியே மெல்வார். பேசமாட்டார். கனைப்பு உறுமல் தும்மல் ஏதுமிருக்காது. மெல்லும் ஓசையே எழாது. இலையில் உணவை கலந்து குழப்ப மாட்டார். தேவையற்றவற்றை ஓரமாக ஒதுக்கி வைக்கையிலும் அவை கலைந்திருக்காது. எது தேவையென்றாலும் கையசைவால்தான் கேட்பார்

காயம் கரைத்துவிட்ட தவிட்டுநிறமான சாம்பார் வந்தது. பிஞ்சு கத்தரிக்காய்களை முழுமையாகவே சற்றேகீறி அதில் போட்டிருந்தனர். வெள்ளரிக்காயும் தடியன்காயும் துண்டுகளாக சாம்பாரில் ஊறாமல் கிடந்தன. சாம்பாருக்கு கூட்டுகளையெல்லாம் தொட்டுக்கொள்ளலாம். அதன்பின் சற்றே சோறுபோட்டு குழம்புகள். வறுத்தரைச்ச வெண்டைக்காய் குழம்பு. பச்சைத்தேங்காய் அரைத்த வெள்ளரிக்காய் குழம்பு. அவற்றுக்கு பச்சடிகள், கிச்சடிகள் துணை.. அதன்பின் புளிசேரிகள் வந்தன. மோர்விட்டுச் செய்த மாங்காய் புளிசேரி. பச்சைமிளகாய் மணத்துடன் அன்னாசிப்புளிசேரி. எலுமிச்சைப்புளிசேரி. அவற்றுக்கு எலல காரத்தொடுகறிகளையும் சேர்க்கலாம்.

இலைகள் வழித்து உண்ணப்பட்டு தூய்மையாயின. பிரதமன்கள் வரத்தொடங்கின. முதலில் அடைப்பிரதமன். அது இரும்புநிறத்தில் இருந்தது. கருப்புவெல்லம் தேங்காய்ப்பாலுடன் சுண்டி உருவானது. அதில் அடைவில்லைகள் ஒன்றோடொன்று வழுக்கின. முந்திரிப்பருப்பும் திராட்சையும் மிதந்தன. அதன்பின் பருப்புப் பிரதமன். அதற்கு ஆழ்ந்த தவிட்டு நிறம். அதன்பின் கடலைப்பிரதமன். பயறுப்பிரதமன் பொன்னிறமாக இருந்தது. இனிப்பு திகட்டத்தொடங்கியதும் அரைக்கரண்டி சோறு போட்டு ரசம் ஊற்றப்பட்டது. அப்பா கிண்ணத்தில் ரசம் வாங்கிக் குடித்தார். முதலில் புளிச்சகாய் இட்ட ரசம். பின்னர் எலுமிச்சை ரசம். கடைசியாக மிளகு ரசம்.

மீண்டும் பாயசங்கள் வரத்தொடங்கின. வருக்கைப் பலாச்சுளை இட்டு தேங்காய்ப் பாலூற்றிச் செய்த சக்கைப்பிரதமன், வருக்கை மாம்பழத்துண்டுகளுடன் உடைத்த பச்சரிசி போட்டு செய்த மாம்பழப்பாயசம், கதலிவாழைப்பழத்துண்டுகளுடன் சேமியாவை போட்டு செய்த பழப்பாயசம். அதன்பின் தொடுகறிகளை வழித்து சாப்பிட்டு இடைவெளிவிட்டனர். மொத்த கூடமும் சாப்பாட்டின் அலுப்பை அடைந்து உடலசைவுகள் மென்மையடைந்தன. பருப்புப் போளிகளை வைத்துக்கொண்டே சென்றான் ஒருவன். அதன்மேல் பூந்தி வைத்துசென்றான் இன்னொருவன். பச்சரியும் சீனியும் போட்டு செய்த பால்பாயசத்தை அதன்மேல் ஊற்றிச்சென்றான் இறுதியாக. அவற்றை குழைத்து சாப்பிட்டு முடித்தபோது காய்ச்சிய மோரும் அதற்குரிய சோறும் வரத்தொடங்கியது

அப்பா மோரைக் குடித்தார். வாழைப்பழத்தையும் பலாச்சுளையையும் மாங்கனியையும் உண்டார். கடைசியாக இனிப்புவரட்டியதை வாயிலிட்டுக்கொண்டார். இலையை மடித்துவிட்டு அமர்ந்திருந்தார். அனைவரும் பந்தியின் எல்லையில் அமந்திருந்த முதியவரை பார்த்தனர். அவர் கனைத்தபின் எழுந்து செல்ல ஒரேபோல கையை தூக்கியபடி விரைவில்லாமல் இடைவெளி விட்டு நடந்து வெளியே சென்றார்கள். கைகழுவியபின் மறுபக்க வழியாக வெளியே சென்று அங்கிருந்த முற்றத்தில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் அமர்ந்தனர். சாய்ந்துகொள்ள தலையணைகள் போடப்பட்டிருந்தன

அப்பா அதிலொன்றில் அமர்ந்தார். டீக்கனாரும் அருகே அமர்ந்தார். பெருவட்டர் அப்பால் சென்று தாம்பூலச்சுருள்களை எடுத்துவந்தார். அப்பா அதிலொன்றை வாங்கி வாயிலிட்டு மென்றார். மென்றபடியே மெல்ல கண்சொக்கினார்

அனந்தன் எழுந்துசென்று ஒரு வெற்றிலைச்சுருளை எடுத்தாலென்ன என்று எண்ணினான். மூவருமே சொக்கி கிடந்தனர். ஆனால் அது ஆபத்து. அப்பா தூங்கமாட்டார்

அவன் அங்கே ஆங்காங்கே கிடந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு மந்திரவாதி மாயக்கோலை சுழற்றி அத்தனைபேரையும் வீழ்த்தியிருக்கிறான்

அப்பா கலைந்து எழுந்து “டீக்கனாரே, வே போலாம்வே” என்றார்

டீக்கனார் “போகவேண்டியதுதான்.. ஏசுவே” என்றார்

மூவரும் எழுந்து வேட்டியைக் கட்டிக்கொண்டார்கள். அப்பா “வைப்பறைக்கு போயி நாணுநாயரு கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருவோம்” என்றார்

பெருவட்டர் “ஆமா அது வேணும்லா?” என்றார்

அவர்கள் நடந்தனர் .அப்பா “வே டீக்கனாரு ஒரு பச்சடி வச்சிருந்தாரு பாத்தேராவே? இஞ்சியும் மிளகும்போட்டு?”என்றார்

“இல்லியே… என்னெனமொ இருந்தது’ என்றார் பெருவட்டர்

“எண்ணி குறிச்சாவே திங்கமுடியும்?”என்றார் பெருவட்டர்

“அது ஒரு பச்சடி… இண்ணைக்குப் பிறந்த பிள்ளை மாதிரி… இதுக்கு முன்னாடி ருசிச்சதில்லே… அப்டி ஒரு மணம்…”

அனந்தனுக்கு பதற்றம் எழுந்தது. அப்பா முட்டாள்தனமாக பச்சடியைப்பற்றி நாணுக்குட்டன் நாயரிடம் பேசப்போகிறார். அவர் சுருண்டுவிடுவார்.

“அப்பா அடைப்பிரதமன் ரொம்ப நல்லா இருந்தது” என்றான்

“அதுபின்ன ஆசானுக்க கையில்லா? பெருந்தச்சன் தொட்ட மரம் சில்பம். அதாக்குமே ரீதி” என்றார் அப்பா “அந்த பச்சடியிலே என்னமோ ஒரு எலையோ காயோ போட்டிருந்தாரு…என்னண்ணு தெரியல்ல”

அனந்தன் மேலும் பதற்றம் அடைந்தான். “அப்பா எல்லாமே நல்லா இருந்தது. அவியலுகூட…”

“அதெல்லாம் ஆசான்மாரு அப்டியே கைய சுழட்டினா வந்திரும்டே… மேலப்புறம் சக்கரபாணி பெரிய சித்திரகாரரு… சும்மா தரையிலே கம்பால ஒரு கீறு கீறினா அது படமாயிரும். பிரம்மன் பூமிய நினைச்சு நினைச்சு கணக்குபோட்டா செய்தான்னு நினைக்கே? ஒரு நிமிசம், ஒரு செக்கண்டு… உலகம் உண்டாச்சு. அதாக்கும் ஆசானுக்க கை”

அனந்தன் பெருமூச்சுவிட்டான். அப்பா அதைத்தான் சொல்லப்போகிறார்

பந்தலுக்குப் பின்பக்கம் பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. எல்லாப்பக்கமும் திறந்த கொட்டகை. அதன்மேல் இரண்டு அடுக்கு கூரை. இரு அடுக்குகளுக்கும் நடுவே இடைவெளி, அதன் வழியாக புகை போகும். அதிலிருந்து பந்திப் பந்தலுக்கு வருவதற்கு கூரையிட்ட பாதை.

அப்பா அங்கே நின்றிருந்த சமையற்காரரிடம் ”நாணுநாயரு உண்டுமா?”என்றார்

“அந்தாலே இருக்காரு… வெள்ளத்துணி இட்டு மூடியிருக்குல்லா?”

”எட்டாம் பந்தி தாண்டியாச்சு… இன்னும் நாலு போவும்”என்றார் டீக்கனார்

“எல்லாப் பந்திக்கும் சமமாட்டு எல்லாம் இருக்கும்வே… நாணு வாறாருண்ணு சொன்னா அதாக்கும் கண்டிசன்” என்றார் அப்பா

துணித்திரைக்கு அப்பால் ஒரு சாய்வுநாற்காலியில் நாணுக்குட்டன் நாயர் படுத்து கண்மூடியிருந்தார். கையிலிருந்த பனையோலை விசிறி கீழே விழுந்திருந்தது

அப்பா கனைத்தார். அவர் கண் திறந்தார். முகம் மலர்ந்து எழுந்து “வரணும் வரணும் பிள்ளைவாள்… இப்ப நினைச்சேன்… இந்த ஊருக்கு வந்திட்டேனே, பிள்ளைவாள் வாற மாதிரி உண்டான்னு”

”பேருகேட்டா வந்திருவேன்ல… இவரு டீக்கன், அவரு பெருவட்டன். நம்ம கூட்டுகாரன்மாராக்கும்”

“பேரைக் கேட்டப்ப அந்தாலே கெளம்பிட்டோம்…”என்றார் பெருவட்டர் “ஈஸ்வரன் நேரிலே வந்து அனுக்ரஹிச்ச மாதிரி இருந்தது…”

“மனுசனுக்கு நாக்கையும் மண்ணுக்கு விளைச்சலையும் குடுத்த தெய்வமாக்கும் நாயருக்க கையிலே நிக்குதது” என்றார் டீக்கனார்

“ஏளு சென்மத்திலே அன்னமிட்டு யாகம் செஞ்சவரு இப்டி ஒரு கையோட பிறக்குதாருண்ணு தோணுது”என்றார் பெருவட்டர் மீண்டும்

“சந்தோஷம் வளரே வளரே சந்தோஷம்” என்றார் நாணுக்குட்டன் நாயர்

அப்பா “அந்தப் பச்சடி.. அவனாக்கும் ராஜகுமாரன்.. இப்ப பிரத்யட்சப்பட்ட தெய்வம்லா” என்றார்

அனந்தன் படபடப்புடன் நாணுக்குட்டன் நாயரைப் பார்த்தான். ஆனால் அவர் முகம் அப்படியே மலர்ந்துவிட்டது. சிரிப்பில் கண் இடுங்கியது. வாய் இழுபட்டு விரியத்திறந்தது, அஹ் அஹ் அஹ் என்று சிரித்தபோது உடல்குலுங்கியது

“நான் நினைச்சேன், பிள்ளை வந்திருந்தா மர்மத்திலே நேராட்டு கை போயி தொட்டிருக்குமேன்னு… ஈஸ்வரன் மேலே ஆணை, வச்சு விளம்பினதுக்கு ஒரே ஒருத்தர் வந்து சொன்னாப்போரும்வே…. அதிகம் ஆளு வேண்டாம். ஒருத்தர் போரும்… தெய்வம்மேலே ஆணையா ஒருத்தர் வந்து சொன்னாப்போதும்… இனி ஒண்ணும் வேண்டாம்”

அப்பா சிரித்து “அது அமிர்தாக்குமே” என்றார்

“அதிலே என்ன புதிசா கலந்திருக்கு? சொல்லுடே”

”ஒரு துளி கடுக்காய் உண்டுமோ?”

“ஆஹ் ஆஹ் ஆஹ்!” என்று நாணுக்குட்டன் நாயர் சிரித்தார்.  “ஆமா கடுக்காய்… நெல்லிக்காய்க்கு பதிலா கடுக்காய். ஆனால் எண்ணி இடணும்… ஒரு சொட்டு நஞ்சு அன்னத்தை அமிர்தாக்கும். ஒரு சொட்டு கசப்பு எல்லாத்தையும் இனிப்பாக்கும்”

“இன்னைக்கு செஞ்சதா?”

“இன்னைக்கு காலையிலே செஞ்சதுடே… இங்க வந்தப்ப தோணி செஞ்சது”

“ஈஸ்வரானுக்ரகம்” என்றார் அப்பா

“நல்லாருடே. எனக்க கையிலே இருக்குத லட்சுமியாக்கும் உனக்க நாக்கிலே இருக்கா. இவனாரு பயலா?”

“ஆமா”

‘லச்சுமி கடாச்சம் உண்டா?”

“அப்டி இல்லை. ஆனா அம்மைய மாதிரி கவிதை வாசிப்பு உண்டு…”

“லச்சுமியும் சரஸ்வதியும் ஒண்ணுல்லா” என்றார் நாணுக்குட்டன் நாயர்

“கும்பிடுலே” என்றார் அப்பா

அனந்தன் சென்று அவர் காலைத்தொட்டு கும்பிட்டான். “ருசி இருக்கட்டும்…எல்லா ருசியும் ஈஸ்வரனுக்க ருசியாக்கும்” என்றார் நாணுக்குட்டன் நாயர் “ருசியாத்தான் தெய்வம் மனுசனுக்க முன்னால வரமுடியும்…அதுக்கு வேற வளியில்லை”

அப்பா ஒரு ரூபாயை எடுத்து நாணுக்குட்டன் நாயர்கையில் கொடுத்து  “அனுக்ரஹிக்கணும்” என்றார்

அவர் “நல்லது நல்லது” என அதை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு மடியில் வைத்தார்

”வாறேன்” என்றார் அப்பா

‘வாறோம் நாயரே… இண்ணைக்கு இனி தெய்வதரிசனம் தேவையில்லை”என்றார் பெருவட்டர்

‘ஏசுவே” என்று டீக்கனார் கும்பிட்டார்

திரும்பி செல்கையில் பெருவட்டர் ‘வே, நாம போயி அந்த பந்தலுகாரனையும் பாத்துப்போடுவோம்” என்றார்

“ஆமா, இப்பதான் நான் நினைச்சேன்’ என்றர் அப்பா.

***

முந்தைய கட்டுரை“விடமாட்டே?”
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–28