லூப் [சிறுகதை]

நான் ஃபோனில் “ஃபுல் லூப்பு சார்!” என்றேன்.

“டேய், நம்ம கிட்ட வெளையாடாதே கேட்டியா? கெளம்பி வந்தேன்னா பாரு” என்றார் ஞானம் சார்.

“வேணுமானா வாருங்க. வந்து நீங்களே பாருங்க… நான் என்னத்துக்கு பொய் சொல்லணும்?” என்றேன். “நீங்க ஆரு, சர்ச்சிலே பாவமன்னிப்பா குடுக்குதீக? பொய்யச் சொல்லுகதுக்கு?”

ஞானம் சார் சிரித்துவிட்டார். “மக்கா. இஞ்சபாரு. என்னையப் போட்டு கொல்லுதானுக. வெள்ளைக்காரன் நேரா மெட்ராஸுக்கே விளிச்சுப் போட்டான். ஜிஎம் என்னைய தந்தைக்கு விளிச்சாரு.”

“என்னன்னு விளிச்சாரு?” என்று ஆவலாகக் கேட்டேன்.

“அதை உனக்கு நான் சொல்லுதேன்… ஏலே, செத்த சவமே, லைனைப் பாருலேண்ணாக்க.”

“சார், நான் சத்தியமாட்டு சொல்லுதேன். லைன் கிளிகிளியராக்கும். ஒரு தும்பு தூசி இல்லை பாத்துக்கிடுங்க. மணிமணியா சத்தம் கேக்குது. நெல்சன் அந்தால போனிலே இருக்கான். விளிச்சு பாக்குதியளா?”

“செரிடே” என்றார். “பாத்து செய்யுங்க. அப்பன் பனையிலே இருந்து விளுந்தா கோளிக்காலு கடிக்கலாமேண்ணு நினைக்காதீய.”

ஞானம் சார் சீனியர். பலகாலம் டெக்னீஷியனாக இருந்து மேலே சென்று ஜூனியர் எஞ்சீனியரும் அசிஸ்டென்ட் எஞ்சீனியரும் ஆகி இப்போது டிஸ்ட்ரிக்ட் எஞ்சீனியர். இந்த ஆண்டு அவருக்கு ஓய்வு. ஏற்கனவே அவர் கர்த்தாவின் வழியில் நெடுந்தொலைவு சென்றுவிட்டவர். ஓய்வுக்குப்பின் பைபிளைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்.

சற்றுநேரம் கழித்து ஞானம் கூப்பிட்டார். “லே, நானே அவன விளிச்சேன். சத்தம் நல்லாத்தானேடே இருக்கு.”

“ஆமா, பின்ன நான் என்ன சொன்னேன்?”

“பின்ன எதுக்கு வெள்ளைக்காரன் கம்ப்ளெயிண்ட் சொல்லுதான்?”

“சார், அவன் சாயங்காலமானா பிராந்தியை வலிச்சு கேற்றுதான்… காது அடைச்சுப்போச்சு… முன்ன இங்கிண அந்தோணியார் சர்ச்சிலே ஃபாதர் என்ன கம்ப்ளெயிண்ட் சொன்னாருண்ணு தெரியும்லா?”

அந்தோணியார் சர்ச்சின் ஃபாதர் ஃபோன் கிடைக்கவில்லை என பலமுறை புகார் செய்திருந்தார். ஃபோன் சரியாகத்தான் இருந்தது. கடைசியில் நேரில் சென்று விசாரித்தோம். அவர் கூப்பிட முயன்றது பரமண்டலத்தில் இருக்கும் கர்த்தாவாகிய ஏசுவை. “அவரு வீட்டிலே இல்லேன்னா மாதாவெங்கிலும் ஃபோனை எடுக்கலாம்லா? கிளவிக்கி அங்க வேற என்ன சோலி?” என்றார். அதன்பின்புதான் அவரை மனநிலைச் சிகிச்சைக்காக எடத்துவாவுக்கு கொண்டு சென்றார்கள்.

ஞானம் “எனக்க விதி… உன்னையெல்லாம் வச்சு மேய்க்குதேன்” என்றபடி ஃபோனை வைத்தார்.

நெல்சன் “சார் நான் வரட்டா?” என்றான்.

“ஏன், அங்கிண பெண்ணுகெட்டி குடியிருக்க ஐடியா இருக்கா? வந்துசேருலே” என்றேன்.

நெல்சன் திரும்பிவர அந்தியாகும். அந்த ஃபோன் சரக்கல்பாறை எஸ்டேட்டுக்கு உள்ளே இருந்தது. லைன் ரிசர்வ் ஃபாரஸ்ட் வழியாகச் சென்றது. பதினொரு கிலோமீட்டருக்கு தூண் நட்டு கம்பி இழுத்து இணைப்பு கொடுத்திருந்தார்கள். சுதந்திரத்திற்கு முன்னரே அந்த ஃபோன் கொடுக்கப்பட்டுவிட்டது. இன்றைக்கு என்றால் கொடுக்க மாட்டார்கள். ரிசர்வ் ஃபாரஸ்டை ஊடுருவிச் செல்ல சாதாரண வீட்டு ஃபோன் இணைப்புக் கம்பிகளுக்கு உரிமை இல்லை.

நான் மறுநாள் காலையில் அலுவலகம் சென்றபோது அச்சுதன் என்னை எதிர்நோக்கி காத்திருந்தான். வெடி வெடிக்கும் குரலில் “குட்மார்னிங் சார்” என்றான். குறுப்புகளில் மெல்லப் பேசுபவர்கள் குறைவு. “ஞானம் சார் விளிச்சிருந்தார்.”

எனக்கு புரிந்துவிட்டது. “நெல்சனை விளி” என்றேன்.

நெல்சன் வரவில்லை. கொஞ்சம் தாமதிக்கும் என்று சொல்லியிருக்கிறான். நேற்று காட்டிலிருந்து பத்து பலாப்பழமாவது கட்டி எடுத்துக்கொண்டு வந்திருப்பான். இன்று காலை சந்தைக்கு விற்கக் கொண்டு போயிருப்பான்.

நான் அந்த எண்ணை சோதனை செய்தேன். மிகமிகத் துல்லியமாக இருந்தது. அழைப்பைக் கேட்டு அங்கே எடுத்தவன் யோசேப்பு. துரையின் வேலைக்காரன்.

“யோசேப்பு, ஃபோன் வர்க் ஆவுதுல்லாவே?”

“அண்ணா, நேத்து நெல்சன் வந்து என்னைய அடிக்காக்கொறை… அண்ணா நான் சாயங்காலம் துரைக்கு சரக்கு எடுத்து வச்சுப்போட்டு வீட்டுக்குப் போயிருவேன். போறவரைக்கும் ஃபோன் இருக்குண்ணா… ராத்திரியிலே இல்லை.”

“இந்நா இப்பம் காலம்பற இருக்கே.”

“ஆமா இருக்கு.”

“என்னடே இது… ராத்திரி மட்டும் ஆஃப் ஆவுண்ணா போனுக்கும் மலேரியாவா பிடிச்சிருக்கு?”

“போனுக்கு மலேரியா வருமாண்ணா? உள்ளதா?” என்றான். பீதியுடன் “போனை தொட்டா வந்திருமோ?” என்று கேட்டான்.

“வைடே போன.”

நான் என்ன செய்வதென்று அறியாமல் அமர்ந்திருந்தபோது ஞானம் கூப்பிட்டார். “வணக்கம் சார்” என்றேன்.

“நான் செத்தேன்னு நினைச்சியாலே?”

“இல்லியே.”

“அப்ப நான் விளிக்கிறப்ப ஏன் மூச்சு வாங்குதே?”

“நீங்க எங்க சாவ? ஆளைக் கொன்னுட்டுதான் போவீக.”

“அது வேண்டிவரும்டே… ஏலே இப்ப ஜிஎம் கூப்பிட்டார். மரியாதையாட்டு பென்ஷன் வாங்க மாட்டேன்னு சொல்லுதார். வெள்ளைக்காரன் மெட்ராஸுக்கு விளிச்சானாம். கோர்ட்லே கேஸு போடுவேன்னு சொன்னானாம்.”

“ஆமா கேஸு போடச்சொல்லுங்க… நாப்பத்தஞ்சு வருசம் களிஞ்சு தீர்ப்பு வரும். எஸ்டேட்ட வித்து வக்கீலுக்கு பீஸு குடுக்கணும்.”

“டேய், என்னவாக்கும் நடக்குது?”

நான் நடப்பதைச் சொன்னேன். ஞானம் திகைப்புடன் கேட்டிருந்தார்.

“அதெப்டிலே சாயங்காலமானா ஃபோன் ஆஃபாவும்?”

“அங்க அவன் என்னமோ செய்யுதான்.”

“அப்டியா?”

“வாறீகளா? இண்ணைக்கு சாயங்காலம் போயி கையோட பிடிப்பம்.”

“வாறேண்டே அப்டி விட்டிரப்பிடாதே” என்றார் ஞானம். “இனி இதிலே நான் கெட்டவார்த்தை கேக்க முடியாது.”

நான் அன்று சாயங்காலம் ஆபீஸிலேயே இருந்தேன். ஐந்து மணிக்கு ஞானம் வந்தார். “இருக்கியா? கெளம்பியாச்சான்னு நினைச்சேன்.”

“இல்ல இதில என்னமோ இருக்கு.”

“ஏலே, வல்ல மாடனோ எசக்கியோ செய்யுத வேலையா இருக்குமோ?”

“நாம சத்யகிறிஸ்தியானிகள்லா?” என்றேன்.

“ஆமா , அதனாலே நம்மள அதுகளுக்கு பிடிக்காதுல்லா?”

“உம்ம கிட்ட பேசுகதுக்கு நொட்டலாம்” என்றேன்.

“லே, நான் உனக்க சீனியராக்கும்.”

“அது அஞ்சு மணிவரை. நான் இப்பம் ஆஃப் டூட்டியில்லா.”

ஆறரை மணிக்கு நான் சென்று ஃபோனை சோதனை செய்தேன். அது வேலை செய்யவில்லை.

“என்னலே?”

“லூப்பு”

“லூப்புன்னா? ரிசீவர் ஆஃபா.”

“அப்டி தோணல்லை. கம்ப்ளீட் லூப்பு இல்ல. நாய்ஸ் இருக்கு”

“அப்டியா? என்னமாம் டச்சிங்கா இருக்குமோ?”

“பாப்பம் சார்… கெளம்புங்க.”

நாங்கள் இருவரும் சைக்கிளில் கிளம்பினோம். நெல்சனை வரச்சொல்லியிருந்தேன். நாங்கள் அந்நேரத்தில் கிளம்புவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

“சார், லைனு பாக்கவா போறிய? இப்பமா?”

“ஆமா, இப்பம்தானே லைனு ஆஃபாயி கெடக்கு?”

“சார், அந்த ரூட்டு என்னான்னு தெரியுமா? ரிசர்வு ஃபாரஸ்டாக்கும்… கொடுங்காடு. ஆனையும் கடுவாயும் கரடியும் உள்ள காடு… அதுகளையாவது கண்ணால பாக்கலாம். பாம்பு மலிஞ்சு கெடக்கு. செத்தபிறவுதான் கடிச்ச பாம்பை கண்ணாலே பாக்கமுடியும்.”

“செத்தா சவம் போவட்டுலே… போவம்.”

“ஆரு செத்தா?” என்றான் நெல்சன்.

“என்ன?”

“ஒண்ணுமில்ல.”

“உனக்கு முடியல்லேன்னா நீ வரவேண்டாம்… நான் உன்னை கட்டாயப்படுத்த முடியாது. நானும் ஆரோக்கியமும் போறம்… என்ன ஆரோக்கியம்?”

“போவம் சார்… நாம கத்தோலிக்கங்களாக்கும்… திருச்சபைக்கு உள்ள நாம பாக்காத ஆனையா, கடுவாயா, கருநாகமா?”

“ஏலே, உனக்க வாயி செரியில்ல கேட்டியா?”

நெல்சன் “வாறேன்… அப்டி விட்டிரமுடியாதுல்லா?” என்றான்.

வழியில் குடிக்க தண்ணீரும் சாப்பிட ரொட்டியும் எடுத்துக் கொண்டோம். ஆளுக்கொரு எட்டுகட்டை டார்ச். அவையெல்லாம் டூல் ஸ்டாக் அறையிலேயே இருந்தன.

கிளம்பும்போது நன்றாகவே இருட்டியிருந்தது. முதல் டெர்மினலில் சோதனை இட்டேன். துல்லியமாக இருந்தது.

“காட்டிலேதான்” என்றேன்.

காட்டுப்பாதையில் புதர்கள் நீண்டு மறைத்திருந்தன. நெல்சனும் ஞானமும் தரைக்கு லைட் அடிப்பது, நான் லைனுக்கு லைட் அடிப்பது என முடிவுசெய்து கொண்டோம்.

காட்டுக்குள் தேக்குமரத்தை தூணாக நட்டு இணைப்பு கொடுத்திருந்தார்கள். ஒவ்வொன்றும் பெரிய அடிமரம்போல இருந்தது.

“இது மோசே காலத்து ஃபோன் லைனுன்னு நினைச்சேன், எளவு சாலமன் காலத்து லைனினுல்லாடே தோணுது” என்றார் ஞானம். “ரெட்ட லைன் இப்டி போறதுண்ணா… இது எத்தனை கிலோமீட்டர்?”

“பன்னிரண்டு.”

“பன்னிரண்டு கிலோமீட்டர் இதுக ரெண்டும் புருசன் பெஞ்சாதிமாதிரி போவுதா?”

“நடுவிலே அதுக லூப்பு விட்டா நமக்கில்லா பிரச்சினை?” என்றேன்.

“விருத்திகேடு பேசாதே ஆரோக்கியம்… நான் உனக்க சீனியராக்கும்.”

காடு இருண்டு நிழலுருக்களாக இருந்தது. சீவிடுகளின் ஓசை செவியை நிறைத்தது. சட்டென்று நின்று உடனே மீண்டும் தொடங்கியது.

“எனக்க அப்பன் காட்டிலே மாடுமேய்ச்சாரு தெரியுமாலே?” என்றார் ஞானம்.

“தெரியும்” என்றேன். “நாலுபேருகிட்ட அப்பன் பிஷப்பாக்கும்னு சொல்லிக்கிடலாமே.”

“அப்ப நான் காட்டுக்குள்ள போறதுண்டு… ஏலே காடுதான்லே ஏசுவானவரு வாழுத எடம்…”

“லூசிஃபருங்க நடமாட்டம் உண்டுண்ணாக்கும் தோணுது.”

நெல்சன் லைட் அடித்த இடத்தில் பாம்பின் வால் சொடுக்கிச் சென்றது.

“அவன் அவனுக்க மரியாதையத்தானே சொல்லியிருக்கான்… ஆதமுக்க அறிவு எங்கப்போச்சு?” என்றார் ஞானம்.

நெல்சன் “சார்!” என்றான்.

அதற்குள் நாங்களும் கேட்டுவிட்டிருந்தோம். “வலியாளு” என்றான் நெல்சன்.

யானை ஒன்றின் பிளிறல் கேட்டது. அதைத் தொடந்து தொலைவில் இன்னொரு யானையின் பிளிறல்.

“அம்மச்சி யானையாக்கும் முதல்ல வாறது.”

“சவிட்டுமாலே?”

“அம்மச்சிக்கு தோணணும்.”

“ஆனை நாயராலே? அம்மச்சிக தலை ஏறி நிக்காளுக?”

முதல் யானை புதர்களிடையே தோன்றியது. நின்று திரும்பி எங்களைப் பார்த்தது. இருட்டுக்குள் கண் பழகி அதன் உருவை நான் பார்த்துவிட்டேன்.

அம்மச்சி ஓர் ஓசையை எழுப்பியது. அதைத்தொடர்ந்து யானைகள் கூட்டமாக சென்றன. அவை சரிவிறங்கி காட்டுக்குள் சென்றன.

“என்னவே சொல்லிச்சு?”

“வேதக்காரத் தாயோளிகளாக்கும்… நாம நம்ம சோலியப்பாத்துப் போவோம்னு.”

“ஒருநாள் உன்னைய வெட்டுவேன் பாத்துக்க… லே, நான் உனக்க சீனியராக்கும்.”

“பின்ன என்ன மயிருக்கு ஆனை வந்தப்பம் எனக்க கவட்டைக்குள்ள கேறினீரு?”

“அது, நான் வயசானவன்லா?”

“அதுசெரி.”

“ஏலே இங்க ஒரு டெஸ்ட் எடு.”

நெல்சன் மேலே தொற்றி ஏறினான். “சார் இங்கவரைக்கும் ஓகேயாக்கும்.”

“இதுக்குமேலே ஆருடே? மரக்கிளை விளுந்தா இப்டி லூப் ஆவாதே.”

“பாப்பம்… அங்க வெள்ளைக்காரன் குடிச்சு முடிச்சு மிச்சம் பிராந்திய போனுக்குள்ள ஊத்துதாண்ணு நினைக்கேன்.”

“சேச்சே, அப்டிச் செய்வானுகளா? அதும் வெள்ளைக்காரன்?”

“ஓர்மையுண்டா மத்த தாமசு பேக்டரியிலே போனிலே வந்த பிரச்சினை?” என்றேன்.

தாமஸ் குரியன் தொழிற்சாலையில் ஃபோன் அவ்வப்போது லூப் ஆகும். கடைசியில் கண்டுபிடித்தோம். கீழே அது ஓட்டை. அதன்வழியாக உள்ளே ஒரு தவளை போய் அமர்ந்திருந்தது.

இன்னொரு இடத்தில் நெல்சன் சோதனை இட்டான். “சார் இங்கயும் ஓக்கேயாக்கும்.”

“பய கடுமையாட்டு உளைக்குதான்… இந்த ரிசர்வ் ஃபாரஸ்டுலே இப்டி லைனை ஒரு டச்சிங் இல்லாம மெயிண்டெயின் செய்திருக்கான்லா?” என்றார் ஞானம்.

“ஒருதடவை வந்தா சக்கைப்பளமோ, மரச்சீனியோ, ஒண்ணுமில்லேண்ணா ஒருகெட்டு புல்லோ கொண்டு வந்திருவான்… ஏம்லே நெல்சன்?”

“சார், சீவிச்சணும்லா?”

“அதென்னதுலே?”

“சார், நில்லுங்க.”

“என்னலே அது? எளவு தீக்கொள்ளி மாதிரில்லா இருக்கு?”

“சார், வாயமூடுங்க… அது புலியாக்கும்.”

“புலிக்கு ஏதுலே தீயி?”

நெல்சன் ஒன்றும் சொல்லவில்லை. இரு ஒளிப்புள்ளிகளும் மறைந்தன.

“என்னலே அது?”

“புலிக்க கண்ணாக்கும் சார்.”

“கண்ணுலே தீயுண்டோ?”

“ஆமா, காஞ்சபுல்லிருந்தா பற்றி எரியும்… சும்மா வாறியளா சார்? நடுராத்திரியிலே காட்டுக்குள்ளே ஒருமாதிரி…” என்றான் நெல்சன்.

“லே, நான் உனக்க ஆபீசராக்கும், பேப்பர் அடிச்சு கையிலே தந்துபோடுவேன்.”

“செரி, அப்ப நீங்க வாருங்க. நான் போறேன்.”

“லே, லே, மக்கா… என்னலே… உனக்க அப்பன் ஆபிரகாமை எனக்கு தெரியும்லே… நீ கோமணம் கட்டாத காலத்திலே உன்னைய பாத்தவனாக்கும் நான்.”

“நெல்சா உனக்க குஞ்சாமணிய வரைக்கும் பாத்திருக்காரு.”

“சார்” என்றான் நெல்சன்.

“நான் பாக்கேல்லடே.”

“அதில்ல சார்.”

“என்னடே?”

“அந்நா அங்க ஒரு மரக்கிளை ஒடிஞ்சு விளுந்து கெடக்கு.”

வானின் மெல்லிய வெளிச்சத்தில் அதை நன்றாகவே பார்க்கமுடிந்தது. இரு கம்பிகளையும் தொட்டபடி அது கிடந்தது.

“லூப்பு இதாக்கும்” என்றான் நெல்சன்.

“மக்கா இதை ஆரோ வெட்டிப் போட்ட மாதிரில்லா இருக்கு… அங்க ஒரு மரத்தையும் காணுமே”

“ஆமா மரத்த வெட்டிப் போடுதாவ… இருங்க எடுக்குதேன்.”

நெல்சன் அருகிலிருந்த மரத்தில் ஏறினான்.

“பாத்துலே.”

அவன் மேலேறிச் சென்று கூச்சலிட்டான் “சார்!”

“என்னலே?”

“சார், இது ஒரு மலைப்பாம்பாக்கும்”

“லே, பயங்காட்டாதே லே, நான் வயசானவனாக்கும்.”

“சத்தியமாட்டு சார்… மலைப்பாம்பாக்கும். குறுக்கே கேறி கெடக்குது”

“லே, தொட்டிராதே… சுத்திப்பிடிச்சிரும்…” என்றேன். “இந்தா இந்தக் கம்ப பிடி… இதவச்சு குத்தி கீளே போடு.”

அவன் கம்பை பிடித்தான். அதை நீட்டி மலைப்பாம்பை குத்தி கீழே போட்டான். சொத் என கீழே இலைகள் மேல் விழுந்தது. நான் டார்ச் அடித்தேன். விழுந்த வேகத்தில் சற்றே சுருண்டது. மிகமெல்ல ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.

“நெல்சா கீளே வாலே… அது உனக்க மரத்தைத்தான் தேடிவருது.”

நெல்சன் இறங்கிவிட்டான். அது அந்த மரத்தில் தொற்றி சுற்றிக்கொண்டு மேலேறியது மிகமெல்லச் செல்வதுபோல தோன்றியது. ஆனால் நினைத்ததை விட வேகமாக மேலே சென்றுவிட்டது.

“தாரோ அரக்கோ உருகி ஒளுகி போறது மாதிரி இருக்குடே” என்றார் ஞானம்.

அது மரக்கிளையை அடைந்தது. அதன் தலை ஒரு விரல்போல நீண்டது. கம்பியை அடைந்து மெல்லத் தொற்றி இரண்டு கம்பிகளையும் இணைத்தபடி முன்புபோல படுத்துக்கொண்டது.

“சார், அப்ப இதாக்கும் சங்கதி. இது வளக்கமாட்டு அந்தியானா ஏறி இப்படிக் கெடக்குது… பாவம் வெள்ளைக்காரன். அவன் சும்மா சொல்லல்ல. அதுக்கு அவனை நாம எவ்ளவு கெட்டவார்த்தை சொன்னோம்” என்றேன்.

“நான் கெட்டவார்த்தை சொல்லல. நான் ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கிறவனாக்கும்.”

“நொட்டினீரு…”

“நான் சீனியராக்கும்லே.”

“அத அந்த பாம்புகிட்ட போயி சொல்லும்.”

நாங்கள் அதைப் பார்த்துக்கொண்டு நின்றோம்.

“இப்பம் என்னடே செய்ய?”

“இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது. நாளைக்கு மலைக்குறவன்மாரை விளிச்சு கொஞ்சம் பைசாவ குடுப்போம்… அவனுக இதைப்பிடிச்சு சாக்கிலே போட்டு கொண்டுவந்து குடுப்பானுக. கொண்டுபோயி அந்தால பேச்சிப்பாறை காட்டிலே விட்டுருவோம்.”

“அங்க கரெண்டு கம்பி போவுதுலே… குறுக்காலே கேறி கெடந்துபோடும்.”

“அது தொட்டுப் பாத்துட்டுல்லா ஏறுது.”

“ஆமா” என்றார் ஞானம்.

நாங்கள் திரும்பி நடந்தோம். ஞானம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர் என்னிடம் “ஏம்லே மக்கா, இது என்னத்துக்குலே இப்டி ஏறிப்படுக்குது?” என்றார்.

“அதுக்க வேதத்திலே அப்டி ஏறிப் படுக்கிறது சாவான பாவம்னு சொல்லியிருக்கும்போல… அப்ப அப்டி செய்யாம இருக்க முடியாதுல்லா?”

“சும்மா இரிலே… நான் கேக்குதது அஃபிசியலாக்கும்.”

“அது தற்செயலா அங்க ஏறிப் படுத்திருக்கும். அந்த கம்பியிலே உள்ள டிஸி கரெண்டு அதுக்கு ஒரு மாதிரி ர்ர்ர்னு இருந்திருக்கும். ஒரு கோர்ட்டர் ரம்மு அடிச்ச மாதிரி. என்ன இருந்தாலும் அது ஒரு சீவன்லா? ஒருமாதிரி இருந்தா அது பிடிச்சுப்போயிடும்.”

நெல்சன் “நம்ம சாமிக்கண்ணு நாக்கு வச்சு டிசி கரெண்டை தொடுவான்.. ஒரு சின்ன துள்ளு துள்ளுவான். கேட்டா சிகரெட்டு பீடி எல்லாத்தைக் காட்டிலும் நல்லதாக்கும், பைசா செலவும் இல்லேன்னு சொல்லுதான்” என்றான்.

“அதுக்கு என்னமோ சொகம் கண்டுபோட்டு” என்றேன்.

“எப்டிடே இருக்கும் அதுக்கு?”

“மஸாஜ் மாதிரி இருக்கும்போல…”

“ஏலே, துரைக்கு விளி வந்தா லைனிலே காலிங் கரெண்டு வரும்லா? வால்டேஜ் கூடினது.”

“அப்பம் ஒரு சின்ன துள்ளு துள்ளும்னு நினைக்கேன்… பின்ன அது வாறதுக்காக காத்து கெடக்கும்.”

“என்னலே, மனுசனத்தான் இப்டி ஏணைக்கு கோணையாட்டு படைச்சு பரிதவிக்க விட்டுட்டாரு ஆண்டவரு… பாம்பையும் அந்தமானிக்கே படைச்சிட்டாரே” என்றார் ஞானம்.

“எல்லாம் ஒண்ணுதான்” என்றேன். “பாவம் நெளிஞ்சு நெளிஞ்சுல்லா போவுது? நட்டெலும்பிலே நல்ல வலி இருக்கும்போல. இப்டி செஞ்சா ஒருமாதிரி எதமாட்டு இருக்கும்னு தோணுது.”

“உள்ளதா?” என்றார் ஞானம்.

“மஸாஜுல்லா?”

“நான் இதுவரை அதுமாதிரி செய்ததில்லை கேட்டியா?”

“போனதுமே செஞ்சுபாக்கணும்… நீங்க சீனியராக்குமே.”

ஞானம் நெடுநேரம் பேசாமல் வந்தார். பிறகு மெல்ல “எதுக்குடே அப்டி செய்யுது?” என்றார்.

“அதுக்கும் போரடிக்கும்லா?”

“ஏலே, காட்டுக்குள்ள லைனை விட்டது நம்ம தப்புல்ல?” என்றார் ஞானம்.

“ஆமா” என்றேன்.

நாங்கள் திரும்பிச்செல்ல இரவு ஒருமணி ஆகிவிட்டது. வாழைச்சந்தை அருகே நாராயணன் நாயரின் மணிகண்டவிலாஸ் டீ ஷாப் சென்று வாழைப்பழமும் டீயும் சாப்பிட்டுவிட்டு பிரிந்தோம். ஞானம் நெல்சனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தார். “என்னத்துக்கு இது, சும்மா இரியும்” என்று சொன்னபடி அவன் பாய்ந்து வாங்கிக் கொண்டான்.

மறுநாள் நெல்சன் இரண்டு காணிக்காரர்களை அழைத்து வந்தான். அவர்களுக்கு ஆளுக்கு ஐந்து ரூபாய் கூலி பேசினோம். பாம்பை பிடித்து கொண்டு வந்து காட்டிவிட்டு பேச்சிப்பாறைக்கு அப்பால் கொண்டு சென்று விடவேண்டும் அட்வான்ஸ் ஐந்து ரூபாய் கொடுத்தேன்.

அதற்கு அடுத்தநாள் லேடி அக்கவுண்டெண்ட் பத்ரகாளிப் பிள்ளை ஆபீஸுக்கு வரும்போது இரண்டு காணிக்காரர்கள் சாக்குப்பையை அருகே போட்டுவிட்டு அமர்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

“ஆரப்பாக்கணும்லே?” என்று பத்ரகாளிப்பிள்ளை கேட்டாள்.

“ஆரோக்கியம் சாரை… அஞ்சுரூவா வேங்கணும்” என்று ஒருவன் சொன்னான்.

“அஞ்சுரூவாயா? அதென்னதுலே சேனைக்கிளங்கா?”

“இல்ல அம்மிணி, மலைப்பாம்பு” என அவன் திறந்து காட்டியிருக்கிறான்.

பத்ரகாளிப்பிள்ளை “என்றே பொன்னுபகவதியே!” என அலறியபடி ஓடி படியில் கால் இடித்து உருண்டு விழுந்து, “என்றே கோரோயில் முருகா” என்று கதறியிருக்கிறாள். இத்தனைக்கும் அவள் முற்றிய கம்யூனிஸ்டு சகாவு.

நான் வந்தபோது பத்ரகாளிப்பிள்ளை லீவுபோட்டு போய்விட்டிருந்தாள். காணிக்காரன் பாம்பை காட்டினான். அது நாய்க்குட்டி போல தலைதூக்கி என்னைப் பார்த்தது. மூக்குக்கண்ணாடி போட்ட சாந்தமான முகம்.

ஐந்து ரூபாய் கொடுத்து “கொண்டுபோய் விட்டிருலே” என்றேன். “இத திங்க மாட்டியள்லா?”

“அய்ய மலைப்பாம்பு எண்ணையில்லா… வயத்தாலே போவும் சாமி” என்றான் காணிக்காரன்.

“கெட்டுப்போன நெய்யிலே செய்ததாக்கும்” என்றான் இன்னொருவன். அவன் என்ன சொன்னான் என்று எனக்குப் புரியவில்லை.

ஞானம் கூப்பிட்டார் “ஏலே ஒரு பிரச்சினை ஆயிட்டுது… என்ன ஃபால்டுன்னு ஜிஎம் கேட்டாரு. பாம்பு ஏறி குறுக்காலே படுத்துப் போட்டுதுண்ணு சொன்னேன். நீ என்ன பெந்தேகொஸ்தே ஆயிட்டியான்னு கேக்காரு.”

“ஆறது நல்லது… பாம்பு அவனுகளுக்குத்தான் பயப்படும்போல” என்றேன்.

பத்துப்பதினைந்து நாட்கள் ஒரு பிரச்சினையும் இல்லை. மீண்டும் அதே சிக்கல். இம்முறை நெல்சனே காணிக்காரர்களை கூட்டிக் கொண்டு சென்றான். அங்கே அதே பாம்பு அதேபோல கிடந்தது. அத்தனை காட்டு எல்லையையும் கடந்து அது திரும்பி வந்துவிட்டது.

“எப்டிலே திரும்ப வருது?”

“ராத்திரி ஊந்து வந்திருக்கு” என்றான் நெல்சன். “இஞ்சிஞ்சா ஊர்ந்தா நாலுநாளிலே அம்பது கிலோமீட்டர் வந்துபோடலாம்ல?”

“வளியிலே ஊருகள் உண்டுல்லா?”

“அவனுக ஆறுமணிக்கே தண்ணிய போட்டு உறங்கியிருப்பானுக.”

“நாயிங்க?”

“அதுக இதப்பாத்தா கவட்டையிலே வால வச்சுகிட்டு ஒப்பாரி பாடும்.. நாயர நம்பினாலும் நாய நம்பப்பிடாதுன்னாக்கும் சொல்லு.”

“இங்க அது எதுக்குடே வருது? அங்க இதவிட நல்ல காடுல்லா?” என்றேன்.

“வனத்திலே அலைஞ்சாலும் எனத்திலே அடையணும்லா? சொக்காரனுக பங்காளிக இங்கிணதான் இருப்பானுக போல” என்றான் நெல்சன்.

காணிக்காரர்கள் அதைப்பிடித்து கொண்டு சென்று கோதையாறு காட்டில் விட்டுவிட்டார்கள். பதினெட்டாம்நாள் சரியாகத் திரும்ப வந்துவிட்டது.

“லே, பைசாவுக்கு ஆசைப்பட்டு இந்த காணிக்காரனுக மறுபடி கொண்டாந்து விடுதானுகளா?” என்றேன்.

“அவனுகளுக்கு கள்ளம் தெரியாது சார்…” என்றான் நெல்சன்.

“கத்தோலிக்க மதத்திலே சேத்திருவோம்லே. ஆறுமாசத்திலே சகல கள்ளமும் படிச்சிருவானுக… இனி அவனுக கொண்டுபோயி விடுறப்ப நீயும் ஒப்பரம் போ. நம்பிக்கை இல்லாமல் இல்ல. இருந்தாலும் ஒரு இது வேணும்லா?”

இம்முறை மாஞ்சோலை. கூடவே நெல்சனும் போனான். மலைப்பாம்பை அரசாங்க பேருந்திலேயே கொண்டு சென்றிருக்கிறார்கள் கண்டக்டர் “என்னவே சாக்கிலே?” என்று கேட்டான்.

நெல்சன் பதில்சொல்வதற்குள் காணிக்காரன் பணிவாக “பாம்பாக்கும் ஏமானே” என்றான்.

இன்னொருவன் சேர்ந்துகொண்டு பெருமையாக “தோனே பெரிய மலைப்பாம்பு… ஞங்கா பிடிச்சது” என்றான்.

வெளியே குதித்துவிட வேண்டியதுதான் என்று நெல்சன் நினைப்பதற்குள். “செரி, கஞ்சா கொண்டுபோனா போலீஸு உண்டு, பாத்துக்க” என்றார் கண்டக்டர்.

செக்போஸ்டிலும் “சாக்கிலே என்னவே?” என்று கேட்டதும் நெல்சன் பேசாமல் குளிர்ந்து நாவிறங்கி அமர்ந்திருக்க “பாம்பு சாமி” என்றான் காணிக்காரன். “தோனே பெரிய பாம்பு… ஞங்கா பிடிச்சது” என்றான் இரண்டாம் காணிக்காரன்.

அவர்கள் ஆர்வமில்லாமல் திரும்பிச் சென்றார்கள். பொதுவாக அவர்கள் சில சொற்களால் மட்டுமே மூளை சீண்டப்பட்டு வேலை செய்யும் பழக்கத்தை அடைந்தவர்கள்.

ஒருமாதத்தில் மலைப்பாம்பு திரும்பி வந்துவிட்டது.

“என்னலே இது? நடுவிலே ஏகப்பட்ட ஊரு இருக்கு. பஸ்ஸுபோற ரோடு இருக்கு… எப்டிலே வருது?” என்றார் ஞானம்.

“இருந்து தின்னா இரும்பையும் திங்கலாம்… அது வந்திருக்கும் மெதுவா.”

“ஜிஎம் கேட்டா நான் என்னலே சொல்லுவேன்?”

“பாம்பை பிடிச்சு அவருக்க ஆப்பீசுக்கு குடுத்தனுப்பிருவோம்” என்றேன். “அங்க வச்சு ஊதட்டு.”

“அங்க ஏகப்பட்ட மலைப்பாம்புக கெடக்கு, எரையெடுத்து நாளெல்லாம் உறங்கீட்டிருக்கும்” என்றேன்.

மறுநாள் ஞானம் அவரே கிளம்பி வந்துவிட்டார். “லே, நாம போயி துரைய பாக்கணுமாம். என்ன ஏதுன்னு அவருக்கு சொல்லிப் புரியவைச்சுட்டு மெட்ராஸுக்கு ஃபோன் செய்து சொல்லணுமாம். ஜிஎம் சொல்லுதாரு” என்றார். “பின்ன ஒரு காரியம்” என்று குரலைத் தாழ்த்தி, “பிராமணனுக நம்மை சாபம்போட்டா பலிக்கும்லா?” என்றார்.

“ஆரு சாபம் போட்டது?” என்றேன்.

“ஜிஎம்மு… அவரு என்னைய அஷடுன்னு சொன்னாரு. நான் நம்ம பாசையிலே அதுக்கு சமானமான வார்த்தையச் சொன்னேன். நீ நல்லா இருக்கமாட்டேன்னு சொல்லி போனை வைச்சிட்டாரு.”

“நீரு என்ன சொன்னீரு?”

“சுண்ணீண்ணு சொன்னேன்.”

“அதுக்கு இதுவா சமானமான வார்த்தை?”

“இல்லியா?”

“வெளங்கீரும்” என்றேன். “ஆனா அவரு ஜிஎம்முல்லா? பிராமணன்னு சொன்னா கோயிலிலே பூசை வைக்கணுமே.”

“ஆமா” என்றார்.

நாங்கள் இரு சைக்கிள்களில் துரையை பார்க்கக் கிளம்பினோம். அந்த இடம் வந்தபோது ஞானம் “இங்க எங்கியோதான் கெடக்கு… சாயங்காலம் ஆனா கம்பீல ஏறீரும்” என்றார். “ஏசுவானவரு சிலுவையிலே இருக்க மாதிரில்லாவே ஏறி இருக்கு.”

“ஆமா” என்றேன்.

“பாம்புக்கு என்னவே இந்தச் சோலி? நம்மள மெனக்கெடுத்த? பேசாம வல்ல முயலையும் பிடிச்சு முளுங்கினமா ஜெவம் செய்துகிட்டு சுருண்டு கெடந்தோமான்னு இல்லாம?”

“நெல்சன் சாயங்காலமானா ஏத்திக்கிடுதான்லா?”

“ஏத்துகானோ?”

“பின்ன?”

“நாம மட்டும் ஏன்லே இப்டி நல்ல மரியாதப்பட்டவங்களா போயிட்டோம்?”

“நாம பைபிளு படிக்கோம்லா?”

“அதுவும் சரிதான்.”

துரை அவருடைய பங்களாவிலே இருந்தான். ஞானம் சாரைக் கண்டதுமே முகம் சிவக்க கூச்சலிட்டபடி அருகே வந்தான்.

“உங்க ஃபோன் எனக்கு வேண்டாம்.. எடுத்துட்டு போயிரு” என்றான். “எடுத்திட்டு போயிரு. கோ எவே.. ஐ சே கோ எவே!”

“சார் ஐ வில் எக்ஸ்பிளெயின்… ஐ வில் எக்ஸ்பிளெயின்… சார் பிளீஸ்… சார் ஐ பெக் யூ.. சார் பிளீஸ் சார்” என்று திரும்பத் திரும்ப ஞானம் சொன்னார். அவன் அவர் பேச இடமே கொடுக்கவில்லை. பச்சைக் கண்களில் அவ்வளவு கோபம்.

ஞானம் மூச்சிரைக்க என்னிடம் “ஏலே சொல்லுலே… நமக்கு இனி மூச்சில்ல” என்றார்.

நான் “கேன் யூ லிசன்?” என்று உரக்கச் சொன்னேன்.

துரை கூச்சலை நிறுத்தினான். “கோ ஆன்” என்றான்.

நான் விஷயத்தைச் சொன்னேன். “எங்களாலே முடிஞ்சதைச் செய்யுதோம்” என்றேன்.

“அப்ப அதைக் கொல்லு” என்றான் துரை. “அந்தப் பாம்பை கொல்லு… யெஸ்!”

“அதைக் கொல்ல சட்டமில்லை.”

“சட்டம் வேண்டாம் நான் கொல்லுறேன். இங்க ஆளிருக்கு… கன்னோட அனுப்புரேன்… யு கேன் கோ.”

சட்டென்று ஞானம் கைநீட்டி உரக்கக் கூச்சலிட்டபடி துரையை நோக்கிச் சென்றார். “நீ கொன்னிருவியாலே? லே, நீ கொன்னிருவியா? இந்நா இங்கிண நிண்ணு சகலத்தையும் படைச்ச பிதாமேலே ஆணையிட்டு சொல்லுதேன். அதை நீ கொன்னா நான் வந்து உன்னைய கொல்லுவேன்… ஏலே உன்னைய கொன்னுட்டுதான் போவேன்! ஆணை!”

துரை பயந்து உறைந்துவிட்டான். வாய் திறந்து அசையாமல் நின்றது.

“என்னலே இப்பம்? ஏலே இந்தா ஊரு உலகத்தையெல்லாம் அளிச்சு போனு குடுத்தாச்சு. அணைகள கட்டியாச்சு. ரோடு போட்டாச்சு. இந்தா இம்பிடுபோல காடு இருக்கு.. அதுக்குள்ள அந்த பாம்பு. ஆயிரம் பத்தாயிரம் போன் இருக்குல்லா? அதிலே ஒரு பாம்புக்க லூப்பும் இருக்கட்டும். ஒரு மயிரும் கெட்டுப்போவாது… அதுவும் சேந்துதான் போனு… ஆமலே அதுவும் சேந்துதான் போனு…” என்றார் ஞானம். அவர் நடுங்கிக் கொண்டிருந்தார்.

நான் “மாமா நீங்க அந்தால போங்க” என்றேன். “போங்க, சொல்லுதேன்லா?” என அவர் தோளைப் பிடித்து பின்னால் இழுத்தேன்.

“பச்சைப்பிள்ளைய கொல்லுதேன்னு சொல்லுதான்… நரையத் தாயோளி” என்ற ஞானம் உடைந்து விம்மி அழத்தொடங்கினார்.

“மாமா நீங்க போங்க… கர்த்தாவுமேலே ஆணை.”

அவர் விலகிச்சென்று கண்ணீர் வழிய விசும்பிக் கொண்டு நின்றார். நான் துரையிடம் சொன்னேன் “லுக், திஸ் இஸ் த ஃபைனல் வேர்ட் ஆஃப் அஸ். அந்த பாம்பு அங்கதான் இருக்கும். எங்க ஃபோன் சிஸ்டத்திலே அதுவும் உண்டு. உங்களுக்கு சாயங்காலத்துக்குமேலே ஃபோன் கிடைக்காது. எங்க கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் எங்ககிட்டதான் கடைசியா வரும். இங்க உங்க கிட்ட இப்ப சொல்லுறத நான் எங்க ஜிஎம் கிட்டேயும் சொல்லிடுறேன்… போதுமா?”

அவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

“பின்ன ஒண்ணு, அவரு சொல்லுதது சும்மா இல்ல. தலைய வெட்டீட்டு போற ஆளாக்கும். விசுவாசமாக்கும் மனுஷனை வீரனாக்குதது… வெளங்கிச்சா?” என்றேன்.

அவன் தலையசைத்தான். அவனும் நடுங்கிக் கொண்டிருந்தான்.

“மாமா வாங்க.”

நாங்கள் ஒரு சொல் பேசாமல் திரும்பி வந்தோம். ஏனோ வரும் வழி முழுக்க நான் அழுது கொண்டிருந்தேன்.

அதற்கடுத்த ஆண்டு ஞானம் ஓய்வுபெற்றார். அதன்பின் தேவஊழியரானார். ‘விளிச்ச விளி உள்ள’ தேவசெய்தியாளர் என்று அவரை சொன்னார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் அவர் இறந்தபோது பல்லாயிரம்பேர் அவருக்காக ஜெபித்தார்கள். நான் மேலும் பதினேழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.

இன்று அந்த ரிசர்வ் ஃபாரஸ்டே இல்லை. அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் சென்ற இரு தேசிய நெடுஞ்சாலைகள் நடுவே தேவையற்ற ஒரு லூப் என்று அதை நினைத்தார்கள். அங்கே எஞ்சீனியரிங் கல்லூரிகள் வந்தன. ஒரு தொழிற்சாலை வந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் வந்தன. சாலைகளும் தெருக்களும் பின்னி விரிந்தன. அங்கே ஒரு காடு இருந்தது என்று சொன்னால் எவரும் நம்பப்போவதில்லை.

என் மகனின் மகள் அங்கே ஒரு எஞ்சீனியரிங் கல்லூரியில்தான் படித்தாள். முப்பது ஆண்டுகளுக்குப்பிறகு அந்தவழியில் அவள் கல்லூரிக்கு சென்றிருந்தேன், என்னால் அந்த இடத்தை அடையாளம் காணவே முடியவில்லை. பதற்றமாகவே இருந்தது. பின்னர் பெருமூச்சுடன் பஸ்சில் சாய்ந்து அமர்ந்துகொண்டேன்.

***

முந்தைய கட்டுரைவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓலைச்சுவடி இதழ் -பேட்டி