யா தேவி! , விலங்கு – கடிதங்கள்

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

யாதேவி, சர்வபூதேஷு, சக்திரூபேண ஆகிய மூன்று கதைகளையும் இப்போதுதான் படித்தேன். இனி அவற்றை ஒரே கதையாக குறுநாவல்போலத்தான் மக்கள் படிப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் அப்படிப்படிப்பவர்கள் ஒரு அனுபவத்தை இழந்துதான் விடுவார்கள். தனித்தனிக்கதைகளாக அவை சம்பந்தமே இல்லாத தரிசனங்களை தருபவையாக இருக்கின்றன. நான் அவற்றை மானசீகமாக அப்படி பிரித்துப்பார்த்துக்கொண்டுதான் வாசித்தேன்.

 

எஸ்.ராஜா

 

 

அன்புள்ள ஜெ

நலம் தானே? யாதேவி , சர்வ ஃபூதேஷு, சக்தி ரூபேண மூன்று கதைகளையும் வாசித்து  அதிலிருந்து மீண்டு வர முடியாமல் அதற்க்குள்ளாகவே உழன்று கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீதரனிடம் எல்லா சொல்லும் இடம் “நான் இங்குள்ள பகவதி ஆலயத்திற்கு கொடுக்கலாமென்று நினைத்தேன். அங்கே இருக்கும் கற்சிலை அத்தனை உயிர்ப்புள்ளது அல்ல. இதை வைத்தால் பகவதி நேரில் வந்ததுபோல் இருக்கும்”. எல்லாவின் பார்வையில்  கோவிலில் உள்ள பகவதிக்கு உண்மையான பெண்ணிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பகவதி என்ற பெண் தெய்வம் வேறு. உண்மையான பெண் என்பவள் வேறு. பகவதி பெண்ணாக  நேரில் வந்ததுபோல் இருக்க வேண்டுமென்றால் தன்னை போன்ற ஒரு பெண்ணின் உருவம் அங்கே இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள்.பெண்களை தெய்வமாக பாவிக்கும் இடத்தில் பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு எல்லை என்று அவளுக்கு புரியவில்லை. அதனால் தான் இங்கே இத்தனை பெண்கள் ஒரு பொம்மை பாதுகாப்பாக இருக்காதா என்ன? பெண்களுக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கே? ” என்று தனக்கு புரியவில்லை என்றும் கேட்கிறாள்.

ஸ்ரீதரன் “ வெள்ளைக்காரர்களே அப்படித்தான். வெள்ளைக்காரப் பெண்களுக்கு இந்தியாவில் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதே தெரியாது” என்று சொல்கிறான். அது உண்மை தான் என்று தோன்றியது. இரண்டு நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு என் அத்தை, மாமாவை நியூயார்க் நகரின் டைம் ஸ்கொயர் அழைத்துச் சென்றோம். மானுடம் கொப்பளிக்கும் அந்த இடத்தில், இசைக்கலைஞர்கள், கார்ட்டூன் பாத்திரங்கள் போல் வேடமிட்டவர்கள், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுடன் படம் எடுத்துக்கொண்டு அவர்கள் கொடுக்கும் டாலரை பெற்றுக்கொள்வார்கள். அவர்களுடன் பெரும்பாலும் இரண்டு மூன்று இளம் பெண்கள் மேலாடை இல்லாமல் வெறும் மேனியில் வண்ணம் தீட்டி நிற்பார்கள். பின் இரவு நேரங்களில் கூட. மக்கள் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துவிட்டு பணம் கொடுப்பார்கள். முதலில் அதைப் பார்த்து அதிர்ந்த என் அத்தை உடனே கேட்ட கேள்வி, இந்த பெண்கள் இது முடிந்து பாதுகாப்பாக வீட்டிற்கு போய்விடுவார்களா என்று. கேளிக்கையில் மூழ்கித் திளைக்கும் மக்கள் திரளில் ஒருவரும் வெடித்தெழும் சிரிப்புடன் அவர்களுடன் படம் எடுத்துக் கொள்வதை தவிர வேறு எந்த தவறான செயல்களில் ஈடுபட்டு எவரும் பார்த்ததில்லை. பொதுவாக இந்த சூழலில் வளர்ந்த பெண்களுக்கு இந்தியா வந்தால்  எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது புரிவது கொஞ்சம் கடினம் என்று தான நினைக்கிறன்.

இன்னொரு நிகழ்வு. சில மாதங்களுக்கு முன், அஞ்சனா நியூயோர்க்கில் நடந்த ரோலிங் லௌட் என்ற ராப் திருவிழாவிற்கு  அவள் நண்பர்களுடன் போய்வந்தாள். அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் கொண்ட பெருங்கூட்டம். ராப் இசை ரசிகர்களின் கொண்டாட்ட பூமி. மறுநாள், அங்கு சென்று வந்த அவள் அனுபவங்களை பரவசத்துடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டாள். மேடைக்கு முன் இருக்கும் Mosh pit டில் உள்ள நெரிசலில் அங்கு யாருக்காவது மூச்சு அடைப்பது போல் இருந்தால் எப்படி கூட்டத்தில் இருப்பவர்களே பாதுகாப்பாக தலைக்கு மேல் அவர்களை தூக்கி நெரிசலுக்கு வெளியே அனுப்பிவிடுவார்கள் என்று ஆச்சர்யத்துடன் சொன்னாள். என் இளம்வயத்தில் பல கூட்டங்களில், பேருந்து முதல் தேரோட்டம் கூட்டம் வரை நான் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் நினைவுக்கு வர, இந்த கூட்டம் பாதுகாப்பானதா என்று கேட்டேன்.  அதற்கு அவள் சொன்ன பதில்,  “Amma , these people are here for the music. Why do they have to misbehave to anyone? “ . கடைசி வரை நான் கேட்டது அவளுக்கு புரியவே இல்லை.

யா தேவி சர்வஃபூதேஷு சக்திரூபேண சம்ஸ்திதா என்று பெண்மையைத் தொழும் சமூகத்தில் எல்லாக்கள் சிதைக்கப்படுவது வலி மிகுந்த முரண்…

அன்புடன்,

மகேஸ்வரி

 

 

 

விலங்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

விலங்கு சிறுகதை ஒரு டிவிஸ்ட் வழியாகச் செயல்படுகிறது. மர்மக்கதை என்ற வடிவில் உள்ளது. ஆனால் அது கேட்டுக்கொள்ளும் கேள்விகள் முக்கியமானவை. ’விலங்கும் மனிதனும் தெய்வமும் ஆகி இங்கே இருப்பவை எல்லாம் interchangeable என்று சொல்கிறது அப்படியென்றால் அவை எல்லாம் ஒன்றின் இன்னொரு வடிவங்களா ?அந்த ஒன்று என்ன?

 

ஒண்ணு அப்டி தோணுகது இன்னொண்ணுக்க மயக்கமாக்கும். அது அப்டி அங்க அவனுக்கு காட்டுது… தோற்றம்தான் இருக்கு. தோன்றுறது இருக்கிறதா என்ன? ரெண்டும் வேறல்ல என்று அவர் சொல்லும் இடம் கதையின் மையமே இந்த உருமயக்கம்தான் என்று தோன்றியது. பின்னால் சென்று வாசித்தேன். அங்கே தெரிந்தது. கதை அதைத்தான் சொல்கிறது.

 

தெய்வம் மனிதனாகும்போது ஒரு பகுதியை மிருகமாக மிச்சம் வைத்திருக்கிறது. வேடிக்கைதான்

 

செல்வக்குமார்

 

அன்புள்ள ஜெ

ஒடி கதையை வாசிக்கையில் எனக்கு ஓர் எண்ணம் வந்தது. குறிப்பாக இந்த வரியை வாசிக்கையில்.  மிருகமா வேசம்போட்டு நடிச்சிருக்கான், ஆடியிருக்கான். இப்பகூட மனுசன் பண்ணிக்கிடுத அலங்காரங்களிலே முக்காவாசி மிருகங்களோட சில அம்சங்களை தனக்கும் சேத்துக்கிடுததுதான். கம்பிளிச்சட்டை போட்டுகிடுதது, குல்லா போட்டுக்கிடுதது… மனுஷனோட நடனம் நாடகம் எல்லாமே மிருகம் மாதிரித்தான். புலி சிங்கம் குதிரை மான்…அதாவது நாம் அனைவரும் ஒடி வித்தை செய்துகொண்டே இருக்கிறோம் இல்லையா?

 

நான் இதை வாசித்தபின் என் வீட்டிலுள்ள பொருட்களை ஆராய்ந்ந்தேன். ஜீன்ஸ், டிஷர்ட். குல்லாய். எல்லாமே ஏதாவது மிருகங்க்ளின் சாயலில் இருந்து எடுத்தவை. நான் பயன்படுத்தும் செண்ட் கூட மிருகத்திடமிருந்து எடுத்ததுதான். ஒடி என்பது நம் வாழ்க்கையில் ஓர் அன்றாடமாகவே உள்ளது

 

ராஜ்குமார் மருதவாணன்

முந்தைய கட்டுரைஆடகம், கோட்டை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேட்டு, துளி -கடிதங்கள்