கோட்டை, வேட்டு – கடிதங்கள்

கோட்டை [சிறுகதை]

ஜெ,

கோட்டை  எங்கெங்கோ என் நினைவுகளை விரித்து சென்றது. ஏன் நாம்  சிகரெட் பிடிக்கிறோம் ? சட்டென்று ஓஷோவின் புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது “குழந்தை தன் ஆறு வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்பட்டால்  வளர்ந்த பின் பெண்களின் மார்பு ஒரு கவர்ச்சி பொருளாக அதற்கு  தெரியாது ” எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால்  “freudian” கூற்றின்படி  வாய் அல்லது நாக்கு தான் குழந்தையின் முதல்  “erogenous zone” பாலியல் உளவியலின் முதல் படி(ஓரல் கிரேவிங்) . அது குறைவாக கிடைத்தால் அல்லது மறுக்கப்பட்டால் வளர்ந்த பின்   நியூரோசிஸ் நிலைக்கு இட்டுச்செல்கிறது. அதிகமாக கிடைத்தாலும் பிரச்சனை தான்.

ஏதோ ஒரு தீராத ஏக்கமும் அதை வெல்ல வேண்டும் என்ற ஆதிக்கமும் இருந்து கொன்டே இருக்கிறது. இந்த மனநிலை கர்ணா போல் முரட்டுத்தனமாக இருக்கவேண்டிய அவசியமில்லை மென்மையாகவும் இருக்கலாம்.

ஞானமார்க்கத்துக்கு குருசாமியாகவும் வாழ்க்கையின் குடைச்சலாகவும் அதுவே இருக்கிறது.

 

விஷ்ணுகுமார்

 

அன்புள்ள ஜெ

கோட்டை போன்ற ஒரு கதையை ஏன் எழுதமுடியவில்லை என்றால் இப்போது கம்யூனிட்டி லைஃப் இல்லை. இப்போதுள்ள வாழ்க்கையை யோசித்துப்பார்த்தேன். எஞ்சீனியரிங் வரை படிக்கிறோம். வேலைக்குச் செல்கிறோம். அப்புறம் நண்பர்கள். இதுதான் நம்முடைய கம்யூனிட்டி லைஃப். இதில் எல்லா இடங்களிலும் நம்மைப்போன்றவர்களே நம்மைச்சுற்றி இருக்கிறார்கள். ஒரே பொருளாதார நிலையைச் சேர்ந்தவர்கள்

 

உதாரணமாக நான் வாழும் சென்னையில் பக்கத்திலேயே பெரிய சேரி இருக்கிறது. ஆனால் நான் உள்ளே போனதே கிடையாது. அங்கே என்ன நடக்கிறது என்றே எனக்குத்தெரியாது. அதேபோல எங்கள் வீட்டிலிருந்து சைக்கிளில் போகும்தொலைவில் ஒரு முஸ்லீம் ஏரியா உள்ளது. அந்த வாழ்க்கையும் எனக்குத்தெரியாது. ஆகவே இங்கே கம்யூனிட்டி லைஃபே இல்லை

 

அதோடு அந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை இங்கே எவரும் என்கரேஜ் செய்வதும் இல்லை. எல்லாருக்கும் ஒரே வாழ்க்கையைத்தான் சொல்கிறர்கள். அணஞ்சி போன்ற ஒரு கதாபாத்திரம் இங்கே இல்லை. இருந்தால் நாம் சந்திக்க வாய்ப்பே இல்லை. அதனால்தான் திரும்பத்திரும்ப செக்ஸ் எழுதப்பட்டாலும் அது ஒரு பெர்சனல் பிராப்ளமாகவே எழுதப்படுகிறது

 

இந்தக்கதையில் உள்ள விதவிதமான கதாபாத்திரங்களை மிகவும் ரசித்தேன். அதுதான் இதை அத்தனை நெருக்கமான கதையாக ஆக்குகிறது

 

கார்த்திக் கணேஷ்

 

விலங்கு [சிறுகதை]

அன்புநிறை ஜெ,

 

 

விடியலின் முதல் ஒளியென ஒவ்வொரு நாளையும் தொட்டு பொன் சூட்டும் ஒரு கதை.

 

ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் செங்கதிரொன்று ஏனையது தன்னேரிலாத தமிழ் – உயர்வு நவிற்சியெனத் தோன்றிய இவ்வரிகள் உண்மையென்று தெளிகிறது. இருட்குகையுள் நீளும் ஒளிச்சரடென இக்கதைகள் நம்பிக்கை தருகின்றன.

 

வீட்டிலிருந்தே அலுவலகப் பணி. தினமும் அருகே கடற்கரை வரை சென்று வருகிறேன். அங்கு அமர்ந்து சிறிது நேர வாசிப்பு. நீண்ட நடை, பெரும்பாலும் இரவு கூட்டம் அடங்கிய பிறகு. இன்னும் இங்கு ஊரடங்கு உத்தரவு இல்லை.

 

நேற்றிரவு வேட்டு கதை வாசித்தேன். ஆண் பெண் உறவின் வர்ணங்கள் காட்டும் கதை என்று வாசித்ததும் தோன்றியது.  உறக்கத்துக்கு முந்தைய ஊசலாடும் கணத்தில் இந்தோனேசியா பிராம்பனன் ஆலயத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம்  நினைவிலெழுந்தது. ரோரோ ஜொங்ராங் என்ற பழங்குடி இளவரசியை பான்டுங் என்னும் இளவரசன் வற்புறுத்தித் திருமணம் செய்ய முயலும் கதை. அவள் விருந்துக்காக வெட்டும் எருமை என்று மகிஷ மர்த்தனத்தை விளக்கும் அவ்வூரின் கதை. பார்வதியும் ஜானம்மையும் மகிஷனைத்தான் வதம் செய்கிறார்களோ?

 

மிக்க அன்புடன்,

சுபா

 

 

அன்புள்ள ஜெ

 

’வேட்டு கதையைப்பற்றி நிறையவே எழுதிவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் வாசித்தாலும் என்ன சொல்வது என்றுதான் நினைக்கிறோம். எல்லாமே எழுதப்பட்டுவிடுகிறது புதியபுதிய வாசிப்புக்கள் வந்துகொண்டே இருக்கின்றன

 

சர்க்கஸ் உங்கள் கதைகளில் ஒரு முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்தக்கதை எனக்கு கரடி கதையை ஞாபகப்படுத்தியது. அது ஒரு அழகான கதை. அதில் கரடியின் அந்த துயரம் உள்ளது. இந்தக்கதை வேறு ஒரு தளத்தில் உள்ளது. அதிலுள்ள பெண்களின் வாழ்க்கை.

 

கதைமுடிவில் அந்த இரு பெண்களும் பிளஸண்டான அன்பான பெண்களாகத்தான் காட்டப்படுகிறார்கள். அதுதான் எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது. அந்த பெண்கள் இந்த சிக்கலான சூழலை எப்படி ஜெயித்துவந்தார்கள் என்பதுதான் இந்தக்கதை என நினைக்கிறேன்

 

மாரிச்செல்வம்

முந்தைய கட்டுரைமொழி,துளி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்