அங்கி, விலங்கு -கடிதங்கள்

அங்கி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அங்கி கதையின் அந்த ஃபாதரை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு மனிதன் இன்னொருவனுக்குப் பாவமன்னிப்பு கொடுக்கமுடியுமா? முடியும் அவன் தன்னை ஆண்டவரின் வடிவமாக நினைத்துக்கொள்ளவேண்டும். அப்படியே வாழவேண்டும். அந்த சபையில் அப்படி அமரவேண்டும்

ஜெ, மலைமேல் நின்றிருக்கும் தனிமரம் கிறிஸ்துவிற்கு சரியான உதாரணம். கிறிஸ்து கல்வாரியில் உயிர்விட்டதைச் சொல்வதுபோல் இருக்கிறது. தான் எரிந்து உலகுக்கு ஒளிகாட்டியவர்

கிறிஸ்துதாஸ்

***

ப்ரிய ஜெமோவிற்கு,

பலவகை பதார்த்தங்கள் பரிமாறப்படும் ஒரு நீண்டு கொண்டிருக்கும் விருந்தில், முதல் உணவை உண்டு சுவைக்கவே நேரம் எடுக்கும் சிறு எறும்பு என்றே உணர்கிறேன். ஒரு மழையின் அத்தனை துளிகளையும் ஏற்றுக்கொள்ளும் பாத்திரம் ஒன்று பூமியைத் தவிர ஏதும் இருக்குமா என்று தெரியவில்லை. பூமியாக மாறி அத்தனையும் ஏற்றுக்கொள்ளுவதே இயல்பான, சாத்தியமான வழி.

பின்னொரு நாளில் அது ஏதோ ஒரு இலையாய், ஊற்றாய் இன்னும் ஏதோ ஒன்றாக பரிணாமம் காணலாம். இல்லாது போயின் பூமியில் ஈரத்தை எப்போதுமாய் தங்க வைக்கலாம் , என்றோ ஒரு நாளின் வெம்மையை, தாகத்தை தணிக்கலாம். வானம் என விரிந்திருக்கும் உங்கள் சிறுகதைகளை ஒவ்வொரு இடத்தில் இருந்து பார்க்கவே துலங்கும் ஒரு தோற்றம். மேற்கொண்டு பிறர் எடுக்கும் புகைப்படங்கள் வழியாக புலப்படும் பல பயணங்கள்.

அங்கி – ஆண்டவரின் கருணையால் அனைத்து பாவங்களை கழுவியும் வெண்மையைத் தக்க வைத்துக்கொள்ளும் ஆடை. கள்ளம், வன்மம் கொண்டு வருபவைகளைத் தனக்குள் அழித்துக் கொண்டு வெள்ளையாகவே வெளிப்படுவது. பெரும் மலையாக நின்று வழிந்து ஓடும் வெள்ளி ஓடை ஒவ்வொருவரின் பல்லாயிரம் அழுக்கையும் பாம்புசட்டையாய் களைவது. அத்தகைய ஆடை கறைப்படிந்து புழுதியில் மட்கி கிடைக்கிறது. ஒரு கனிந்த முத்தம் அதை விடுவிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அங்கியை முத்தமிடவே கடும் இடர்களையும் தாண்டி தொடர்கிறது சாமுவேல் மகனின் பயணம்.

மன்னிப்பு கேட்காது அமைதியுறாத சாமுவேலின் ஆன்மா அவன் மகன் வடிவத்தில் அதை நிகழ்த்துகிறது. மன்னிப்பு கொடுக்காமல் அல்லது மரிக்கும் நேரத்தில் ஒரு கணத்தால் கறையாகி போன ஃபாதரின் ஆன்மாவும் அவன் வரவை எதிர்பார்த்தே காத்துக்கிடக்கிறது.

ஒரே நேரத்தில் இருவரும் பாவ மன்னிப்பு பெறுபவராகவும் கொடுப்பவராகவும் மாறுவதை ”சகல விசுத்தருடேயும் சகல மரிச்சவருடேயும் திருநாள் தினங்ஙளில் கும்பஸாரிக்குக” என்ற வரியில் கோடிட்டு பின் “பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்ப்பட்டன. நீ பரிசுத்தவானாக ஆனாய். பிதாவின்றே அனுக்ரஹம் நின்றே ஒப்பம் உண்டு. நின்றே வழிகளில் கர்த்தாவாய ஏசு கிறிஸ்துவின்றே வெளிச்சம் உண்டாகட்டே. விசுத்தையான மாதாவின் காருண்யம் உன்னுடைய கண்ணீரையெல்லாம் துடைத்து உன்னை ஆறுதல்படுத்தட்டும்… எல்லா நன்மையும் கைகூடட்டும்… ஆமேன்” என்ற வரிகளில் இரு மொழிகளையும் மாறி மாறி வைத்து யதார்த்தமாய் வெளிப்படுகிறது.

கொடுத்ததும் பெற்றும் நெகிழ்ந்த உள்ளம் தன்னகம் அழிந்து, பிதாவினுள் ஐக்கியமாக பரிசுத்தமாகி முழு அர்ப்பணிப்போடு இறைவன் முன் நிற்கிறது. மழை பின்பும் இடியோடும் மின்னலோடும் தொடர்கிறது ஆனால் உள்ளிருப்பவரையும், வெளியே இருப்பவர்களையும் அவை தொட முடியாத தொலைவில் இருக்கிறது.குன்றின் மேலிருக்கும் தனி மரம் பாவியாகவும் நீதிமானாகவும் நாணயத்தின் எந்த பக்கத்தை நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது.

அப்படிப்பட்ட இருவர் பற்றிய நிகழ்வை அவர்கள் மறைந்த பின் மற்றொரு இருவர் வழியாக நாம் காண்பது இந்த சிறுகதை. பசுமைப் போர்த்திய மலையின் வளைவுகளில் மீதான பயணத்தில் இடி மின்னலுடன் பெருகி வரும் மழையின் இரவு எண்ணற்ற செய்திகளை திரை மறைவாய் சொல்லிக்கொண்டே செல்கிறது. மென்மையும் முட்களாய் உருமாறும் புதர்களில் சிக்கிக்கொள்ளும் கணங்கள். நீர்ப் பெருக்கோடு நம் வாழ்வை சமைத்துக் கொள்ள முயலும் பயணத்தில் இடறி விழவும், தடுத்து நிறுத்தவும் கற்களும் வேர்களுமாய் பல இருந்தாலும் காயங்களோடு முன்னோக்கி மேல் சென்றதும் அங்கே நாம் காண்பது பெரும் உண்மையை. ஆனால் பெரும் உண்மைகள் எல்லாம் தோற்றத்தில் எளிய உருவம் மட்டுமே. அப்பெருவொளி அடைந்த பின் தொடரும் பயணத்தில் முன்னர் இடர்களாய் தெரிந்தவை எல்லாம் படிகளாய் மாற்றிட பிறக்கும் தெளிவு.

ஞானக்கூத்தன் அவர்களின் கவிதையில் ஒரு வரி, “உளியின் சப்தம் மலை முழைஞ்சில் உதிக்கும் போது ஓராண்டு கேட்கும் போது நூறாண்டு” என்பதை நினைவுப்படுத்தும் “வானத்திலே இடி ஒருக்கா. பிறவு மலையிலயும் காட்டிலயும் மாற்றொலி… ”, ‘அதுவும் நம்ம செவிக்கு கேக்குததுதான். மழையிலே பாறையிலே அப்டி பல சத்தமும் கேக்கும்” வரிகள் விடாது பெய்யும் இவ்வாழ்வு மழையில் நனையாத இடமாக இருக்கும் ஆலயங்களை நோக்கியே நாம் செல்ல கூடும். அங்கே தன்னை ரட்சிப்பவனின், வழிக்காட்டுபவனின் ஆழத்தை விரும்பும் இதயம் அவன் உயரத்தை சற்றே மிரட்சியோடும் பார்ப்பதை “அவனையாக்கும் இவனுக பேய்ணு நினைக்குதது” என்ற வரி சொல்கிறது.

நிறைவாக, நான் எப்போதும் சொல்வது போல் உங்களுடைய நகைச்சுவை ஒண்ணாம் கிளாஸ் ஆசானே!. இந்த மாதிரி கதையில் கூட மழைச்சாரலாய் அங்கங்கே தூவிக்கிடக்கிறது. “கிறுக்கன்கிட்ட பாவமன்னிப்புக்கு சபை அனுமதி உண்டுண்ணா கெளம்பி வந்து கூடிருவானுக…நம்மாளு பயப்படுதது ஃபாதரையில்லா?” :-)

ஸ்தோத்திரம் ஆண்டவரே!! –

வி.பி

***

விலங்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

முன்பொருமுறை ஒருபேட்டியில் மார்க்யூஸிடம் கேட்கப்பட்டது, அவரை அவர் என்னவாகச் சொல்ல விரும்புகிறார் என்று. “நான் என்னை ஒரு கதைசொல்லி என்று மட்டும்தான் சொல்வேன். வேறு எது சொல்லப்பட்டாலும் மறுப்பேன்” என்று அவர் பதில் சொன்னார். இலக்கியம் என்பது அடிப்படையில் கதையும் பாடலும்தான். புனைவிலக்கியத்தில் என்னென்ன இருந்தும் கதை இல்லையென்றால் அது இலக்கியம் அல்ல. கதை என்பது மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டுபிடித்து பயன்படுத்தும் ஒரு கருவி. கதையைக்கொண்டுதான் அவன் வாழ்க்கையைச் சொல்லமுடியும். ஏனென்றால் நேரடியாகச் சொல்லப்படும் வாழ்க்கை வாழ்க்கைபோலவே சலிப்பூட்டுகிறது. அர்த்தமில்லாமல் இருக்கிறது

நீங்கள் எப்போதுமே கதை என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். கதையை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தத்துவம் வரலாற்று ஆய்வு எல்லாமே கதையாக மாறியே வெளிப்படுகின்றன. கதையின் எல்லா வடிவங்களையும் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவ்வகையில் புதுமைப்பித்தனுக்கு வாரிசு என்று சொல்லலாம்.

தத்துவம் அரசியல் என்றெல்லாம் பாவனைகள் செய்து கதையை கோட்டைவிட்டுவிட்டிருக்கும் இந்தக்காலகட்டத்தில் இக்கதைகள் பெரிய வரம்போல் தோன்றுகின்றன

விலங்கு புதுமைப்பித்தன் எழுதியிருக்கக்கூடிய ஒரு கதை. திகில்கதையிலிருந்து ஒரு உருவகமாகவும் தத்துவக்கேள்வியாகவும் அது நம்மை அறியாமலேயே மாறிவிடுகிறது. மனிதன் ஏன் விலங்காகிறான்?விலங்கு எப்படி தெய்வமாகிறது? தெய்வம் ஏன் மனிதனாகிறது? என்ன நடக்கிறது இந்த சுழற்சியில்?

உலகம் முழுக்க உள்ள மைத்தாலஜியை வைத்துத்தான் இதற்கு பதிலை ஆராய முடியும்.ஜோசஃப் காம்பெலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்

ராமச்சந்திரன்

***

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

நலம். நலம் பொலிக..!

அரசாங்கமே என்னை 21 நாள் வீட்டுச்சிறையில் (House arrest ) வைத்தது ரொம்ப வசதியாகப்போய் விட்டது. என் வீட்டின் சிறிய நூலகத்தை தூசி தட்டி, புத்தகங்களை மறுபடி அடுக்கி, (மனைவியிடம் திட்டு வாங்கிக்கொண்டபடி) ஏராளம் வாசிக்க நேருகிறது. வீட்டுக்கு வெளியே போனால், ரோந்து வரும் காவலர் லத்தியை சுழற்றுகிறார். கிடைத்த தனிமைக்கு யாருக்கு நன்றி சொல்லுவேன் ?

தங்கள் 2020, மார்ச்சு, 26 — ம் தேதிய இணையதள பதிவில் வந்துள்ள ‘விலங்கு’ என்ற சிறுகதையை ஒரே அமர்வில் வாசிக்க நேர்ந்தது. ஒரே நேர் கோட்டில் சொல்லப்பட்டுள்ள சிறுகதை, தமிழில் ஏற்கனவே உள்ள எழுத்தாளர்கள் போட்டுள்ள வடிவங்கள், மற்றும் சிறுகதையின் சூத்திரங்களை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளது. சிறுகதைகளில் நான் மிகவும் விரும்பி வாசித்தது புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும் தான். யாரும் யூகிக்க முடியாத முடிவுகளை அவர்கள் கதைகளில் கண்டேன்.

நான் வாசித்த சிறுகதைகள் பலவும், கிட்டத்தட்ட கர்நாடக சங்கீதக்கச்சேரிகளின் முடிவைப்போலத்தான் உள்ளது. ‘ என் சாரீரம் எப்படி ? ராக தாளம் எப்படி ? சரளி வரிசை எப்படி ? ஆலாபனை எப்படி ? கேட்டாயா ? நீ எனக்கு ‘சபாஷ்’ என்று கை தட்டு…. அது எனக்குப்போதும்’ என்று சங்கீத வித்துவான் ஒருவர் தன் கச்சேரிக்கு வந்திருக்கும் ரசிகன் ஒருவனிடம் சொன்னால், அது எப்படி இருக்குமோ, அது போலத்தான் இது வரை நான் வாசித்த எழுத்தாளர்களும், வார்த்தைகள், உத்திகள், கதை சொல்லும் லாவகம், இவற்றால், வாசகர்களிடம் ‘சபாஷ்’ வாங்கிக்கொண்டு போனார்கள். எழுத்தை வைத்துக்கொண்டு அரசியல் பிரச்சாரம் செய்த ‘பாட்டாளி வர்க்க காவலர்கள்’ ஜெர்மன்காரன் ஒருவன் சொன்னவற்றை, எழுத்துக்களில் கொள்கை முழக்கம் செய்தார்கள். இந்த மார்க்சீய வர்த்தகர்கள் எனக்கு அலுப்பூட்டுகிறார்கள்.

தமிழ் எழுத்தாளர்கள் என்னும் சாதியில், தங்கள் குரல் மட்டும் தனித்து நிற்பதை வெகு ப்ரத்யக்ஷமாய் நானும் உணருகிறேன். ‘விலங்கு’ என்ற சிறுகதை அமானுஷ்யமாய் உள்ளது. மனிதனின் இதயமே மிருக சிந்தனையில் தான் இயங்குகிறதா என எண்ணத்தோன்றுகிறது. மனிதன், மிருகமாக மாற விரும்புகிறான் என்ற விஷயத்தை ‘ ஒடி’ என்ற பயிற்சி செய்வோரை வைத்து வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். தங்கள் கதையின் கருப்பொருள், இதுவரை யாரும் தொடாத ஒன்று என்று நாம் கருதுகிறோம். மிருகமாய் இருந்த மனிதன் பரிணாம வளர்ச்சியால் மனிதனானான்’ என்பது டார்வினின் சித்தாந்தம். ஆனால், மனிதன், மீண்டும் மிருகத்தன்மைக்கு மாற நினைப்பது ‘ எதிர் பரிணாமம்’ என்று ஆகி விடுகிறது . (It ‘s reverse evolution).

நமது பாரத தேசத்தில் உள்ள தொல்லியல் இலக்கியத்தில், ‘ஆட்டுக்கால் சித்தர்’ என்பவரைப்பற்றி ஒரு குறிப்பு உண்டு. வியாக்ர பாதர் என்பவர் புலியின் கால்களைக்கொண்டிருந்தார் என்று வாசித்திருக்கிறேன். சுகப்பிரம்ம மகரிஷிக்கு கிளி மூக்கு உண்டு. இவைகளெல்லாம் அவர்களின் பிறப்பின் போதே அவ்வாறு அமைந்திருந்ததா அல்லது, அவர்கள் ‘ஒடி’ என்ற பயிற்சி செய்து அவ்வாறு மாறினார்களா என்பதெல்லாம் பரம ரகசியம். மனிதன், மிருகத்தன்மையோடு மாற விரும்புவது, நெல்சன் ஞானத்துரை, தங்கள் கதையில் குறிப்பிடுவது போல, அது ஒரு ‘ஆர்க்கிடைப் ‘ ( archetype ).

முட்டன் பூசாரி, மலையின் மேலே, ஒரு குகை வாசியாக இருந்து கொண்டு, நெல்சனுக்கு ஒரு புரியாத புதிர் போலே இருக்கிறார். அந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் காடுகளில் தான் எத்தனை எத்தனை புதிர்கள், மர்மங்கள்..! ?! அங்கு ரிஷிகள், சித்தர்கள், ஜீவ முக்தி அடைந்தோர் என்று எத்தனையோ பேர்கள் வாழ்கின்றனர். கதையின் முடிவு எதிர்பாராதது. ஆனால், அப்படி இருந்தால் தானே, அது சிறுகதையாகும் !

இன்னொரு விஷயம், தங்கள் ‘ விலங்கு; கதை, செயற்கையான உரையாடலும், செயற்கையான சம்பவங்களும் இல்லாமல், இயற்கையாய் இருந்தது. அதுவே தங்கள் தனித்துவம் எனக்கருதுகிறேன். தாங்கள் ஏற்கனவே இதே ரீதியில், ‘நிலம்’ என்ற கதையை எழுதியுள்ளீர்கள். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொல் பழங்குடி இனம் ஒன்று, முதுகை வளைத்து, கூன் போட்டபடி நடமாடுவது ஏன் என்ற வினாவை எழுப்பியுள்ளீர்கள். அதற்கான விடை தான் அந்த சிறுகதை. ‘கண்டாள், கண்டேன். காதலித்தோம், கட்டுண்டோம்.’ என்ற ரீதியில் புனையப்படும் காதல் சிறுகதைகள் எனக்கு மிகவும் எரிச்சலூட்டுகின்றன. அந்த விதத்தில், தங்கள் ஒவ்வொரு கதையும், அதன் உள்ளடக்கத்தில், மற்றொன்றிலிருந்து தனித்து நிற்கிறது. அந்த விதத்தில், தங்கள் ‘ விலங்கு’ , மற்ற கதைகளிலிருந்தும், நீங்கள், மற்ற புனைவாளர்களிலிருந்தும் தனித்து நிற்கின்றீர்கள்.

தங்கள் எழுத்துக்கு என் வந்தனம். இந்த 21 நாட்கள் வீட்டுச்சிறை தங்களுக்கு எப்படியோ, யாம் அறியேன். உடல் நலம் பேணவும். தங்கள் பிள்ளைகள் நலமாக இருக்கிறார்களா ? அவர்களுக்கு என் இதயப்பூர்வமான ஆசீர்வாதங்கள் !! தங்கள் எழுத்து என்னை தொடர்ந்து ஈர்க்கிறது.

அன்புடன்,

ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.

***

முந்தைய கட்டுரைஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகொரோனா கதைகள்- நவீன்