ஆடகம், கோட்டை -கடிதங்கள்

ஆடகம் [சிறுகதை]

அன்புள்ள ஆசிரியருக்கு,

 

 

ஆடகம் நான் அணுகும் ஜனத்திரளில் பாதியேனும் மரணம் குறித்து எண்ணாதோரில்லை. ஆகும்பேவும் மரணத்திற்குபின் சுய தள்ளாட்டத்துடனான கதைப் போக்கும் நாயகனின் பிரச்சனை தவிர்த்து என்னை வேறு எதுவும் சிந்திக்க விடவில்லை. ராஜநாகமும் விஷவீரியமும் நம்மை நாகம் சீண்டும் கணமும் உணரும்போது முந்தைய நாயகனின் கற்பனைகள் நிஜமாயிற்றோ என்று நானும் நம்பினேன். பிழைத்தெழுதலும் அதன்பின்னான ராஜநாகத்தின் பொன்னொளிர் தருணங்களும் பொன்னின் வகைகளில் ஒன்றாய் ஆடகம் எழும்போது எனக்கு தமிழின் வீச்சும் அதை நீங்கள் கையாளும் பாங்கும் எனக்குத் தமிழின் மீதான காதல் இன்னும் அதிகமாகத்தான் ஆயிற்று.

 

 

சற்றே மனநெருடலாய் இருந்தது நாயகனின் குறை விஷத்தின் பொருட்டு சரியாவதாக கதையின் ஓட்டம் அமைந்தது. ஆனால் இப்போதைய கரோனா மனநிலையில் இந்த நல்ல முன்னெடுப்பு பூரிப்புடன் பிடிக்கத்தான் செய்தது. வாசிப்பவனை முழுமையாகவே அதில் இழுப்பதும் முடிவில் அவனே மேலே எழ கற்பனை துணை கொள்ளலுமே அந்தக் கதையை என்றுமே வாசகனை நினைவுறுத்தியிருக்கும். அந்த வகையில் ஆடகம் பொன்னாயிற்று.

 

நன்றி

 

இப்படிக்கு

 

கண்ணன்,

கோவை.

 

 

 

அன்புள்ள ஜெ

 

ஆடகத்தில் சொல்லியிருக்கும் ஒரு விஷயம் பற்றி. நான் ஓமியோ மருத்துவன். உண்மையிலேயே மிகமிக நீர்த்துப்போன ராஜநாகத்தின் நஞ்சுதான் ஓமியோ முறையில் மனச்சோர்வுக்கும் நரம்புத்தளர்ச்சிக்கும் ஸ்கிஸோப்ரினியாவுக்கும் மருந்து. ஹானிமான் அவரே எழுதியிருக்கிறார். நிரூபிக்க்கப்பட்டபிறகுதான் ஓமியோவில் இருந்துதான் அதை அலோபதி எடுத்துக்கொண்டது. ஆனால் அபாயமான மருந்து என்று இன்றைக்கு ஓமியோ அதைப் பயன்படுத்த தடை உள்ளது. வாக்ஸின் வடிவில் மனச்சோர்வுக்கும் நரம்புத்தளர்ச்சிக்கும் அல்ஷைமர் நோய்க்கும் அதை அலோபதி பயன்படுத்திக்கொண்டிருக்கிறது

 

ஓமியோவின் கொள்கைதான் நீங்கள் கதையில் சொல்வது. விஷம் நீர்த்துப்போய் மருந்தாகிறது. மருந்து இறுகினால் நஞ்சாகிறது

 

ராமசாமி குமரவேல்

 

கோட்டை [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

கோட்டை கதையை ஒரு கிரா பாணி கதையாகச் சொல்லலாம். ஆனால் கதைசொல்லி இங்கே எல்லாம் தெரிந்த கிழவர் அல்ல, ஒன்றும் தெரியாத குழந்தை. ஆகவே அவனுக்குத்தெரிந்த எல்லைக்குள் கதை நடைபெறுகிறது.

 

ஆண்குழந்தை நாவையும் வாயையும் மையமாக்கி காமத்தை உருவாக்கிக்கொள்கிறது. கன்றுக்குட்டி நக்கிக்கொண்டே இருக்கிறது. இந்தக்கதையில் விடுபட்டது பெண்ணுக்காக ஆணும்பெண்ணும் மோதிக்கொள்வது. ஆனால் பிறகு அந்த மாம்பழச்சண்டையை நினைத்துக்கொண்டேன். சரியாக அமைந்திருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது

 

பூடகமாகச் சொல்லப்பட்டதனாலேயே ஆற்றல்கொண்டதாக அமைந்துவிட்ட கதை

 

செந்தில்குமார்

 

 

 

ஜெயமோகனுக்கு

 

கோட்டை கதை படித்தேன். இது இதுவரை யாரும் எழுதாத தளத்தில் உலவும் பாலியல் கதை .கம்பி மேல் நடக்கும் வித்தை. சாகசம்தான், சற்று பிசகினாலும் கீழே விழ நேரும். மறைமுகமாக அணைஞ்சியின் செயல் சொல்லப்படுவதிலிருந்தே ஆர்வம் ஊட்டப்படுகிறது. கதையின் தொடக்கத்தில் அணைஞ்சி சொல்லும் வார்த்தைகளே கதையின் போக்கை ஊகிக்கவைத்து விடுகின்றன.

 

பட்டாளத்தில் இருக்கும் தோக்கு மற்றும் பிள்ளைகள் தின்னும் மாம்பழம் எல்லாமே பாலியலில் தொடர்பு உள்ளது போலவே நினைக்கத் தோன்றுகிறது. பெண் ஒரு கோட்டைதான்.  மணமான பின் கணவன் அதைப் பிடித்துத் தன் கொடியை நாட்ட முயல்கிறான். சிலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோல்வி அடைகிறார்கள். ஆனால் தோல்வி அடைந்தவர்கள் அத்தோல்வியை வெளியே சொல்வதில்லை. ஆனாலும் ஒன்று; கோட்டையும் அடிபணிந்து இடம் கொடுத்து வெற்றி பெறுகிறது.

 

கதை கோட்டையும் அதைப் பிடிப்பவனும் நடத்தும் யுத்தத்தில் இருவரும் அடையும் இன்ப வலியைச் சரியாகக் காட்டுகிறது நடை புது விதமாய் படிக்கக் களைப்பில்லாமல் உள்ளது

 

வளவ துரையன்

முந்தைய கட்டுரைதுளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேட்டு, அங்கி -கடிதங்கள்