ஆடகம் [சிறுகதை]
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
ஆடகம் கதை வாசித்தேன். தனித்திருத்தலை, கதைகளுக்கான நேரம் என்றதும் ஒரு குதூகலம். அதுவும் காதல் கதைகள், மாய யதார்த்தம் என்றதும், மகிழ்ச்சி.
இந்த சீரீஸ் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை ஆடகம். தலைப்பைக் குறித்த சிந்தனையுடனே கதையை வாசித்தேன். கதைக்குள் அதன் விளக்கம் வரும்போது ”இதோ கிடைத்துவிட்டது” என்ற பெருமூச்சு.
தற்கொலை என்ற சொல்லைக் கண்டவுடன், வாசிக்க வேண்டாம் என நினைத்தேன். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் சொல்லியிருந்த “உளச்சோர்வு கொடுக்கும் கதைகள் இல்லை” என்ற முடிவால், வாசித்தேன். ஏமாற்றவில்லை.
விஷம் பொன்னாகும் தருணம். ஆடகம்.
நன்றி
பலராம கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
ஆடகம் படித்தேன். அற்புதமான கதை. இந்த வரிசைக்கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். இத்தனை அற்புதமான கதைகள் அடுக்கடுக்காக எப்படி வருகின்றன? நீங்கள் இந்தக்கதைகளை கருக்கொள்ள ஆரம்பித்து நீண்டநாளாகிறது என நினைக்கிறேன். இந்த கருக்கள் உங்கள் மனதில் இருந்திருக்கின்றன. ஆனால் எழுத வாய்க்கவில்லை. வெண்முரசு எழுதுவது பயணங்கள் சினிமா. இப்போது எழுதியே ஆகவேண்டிய நிலை
நான் முதலில் உங்களுக்கு எழுதிய கதை தற்கொலைபற்றியது. தொடர்ச்சியான தற்கொலை மனநிலை என்னை நான்கு ஆண்டுகள் ஆட்டிப்படைத்திருக்கிறது லிதியம்பைகார்பனேட் குறைவு என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் எப்படியோ இன்றைக்கு மீண்டுவிட்டேன். அதைப்பற்றி பிறகு
இந்தகதைகள் வரும்போது எழுதலாமென்று நினைத்து இப்போது எழுதுகிறேன். ஏனென்றால் இதிலுள்ள ஒரு நுட்பம். தற்கொலைசெய்துகொள்ள நினைப்பவர்கள் ஏன் தங்கள் சாவை பிறர் பார்வையிலேயே பார்க்கிறார்கள் என நான் எண்ணியிருக்கிறேன். விதவிதமாகச் செத்துக்கிடப்பதைப்பற்றி அவர்கள் எண்ணும்போதெல்லாம் தன்மையில் நினைப்பதில்லை, படர்க்கையில் நினைக்கிறார்கள். நான் எப்போதுமே தொலைவில் இருந்து என்னை பார்ப்பேன். இன்னொருவனாக. இரண்டாக இருப்பேன். செத்தவனாகவும் இருப்பேன், பார்ப்பவனாகவும் இருப்பேன். ஒரு மயக்கநிலை
என் வாசிப்பிலே இதை மௌனி அவருடைய கதைகளில் எழுதியிருக்கிறார். “என்னையே என் சடலத்தையே நெடுந்தொலைவிலிர்ய்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்’ ஆடகம் கதையின் தொடக்கத்தில் அந்த தற்கொலைக் கற்பனைகளில் அந்த இருநிலை அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. ஜெ, அந்தமனநிலையில் இல்லாதவர்களால் அதை எழுத முடியாது. நீங்கள் தற்கொலை மனநிலையில் இருந்ததைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். நல்லவேளை, இல்லையென்றால் இந்தக்கதைகள் வந்திருக்காது
ஏன் அந்த படர்க்கை பார்வை? ஏனென்றால் தற்கொலை என்பதே பிறருடனான ஓர் உரையாடல். பிறருக்கு நாம் ஒன்றை அறிவிப்பது. நாம் அப்போது பிறரைத்தான் நினைக்கிறோம். ஆனால் அது மட்டும் அல்ல. நாம் தற்கொலைக்குப்பிறகும் மிஞ்சியிருப்போம் என நினைக்கிறோம். தற்கொலையோடு முடிந்துவிடும் என நினைப்பதே இல்லை. உண்மையில் நாம் ஏன் தற்கொலையிலிருந்து பின்வாங்குகிறோம் என்றால் சட்டென்று தற்கொலைக்குப்பின் நாம் இல்லவே இல்லை என என்ணிக்கொள்கிறோமே அந்த திக்கென்ற உணர்வுக்குப்பின்னாடிதான்
சரி, நான் எப்படி மீண்டேன்?ஜெ, நீங்கள் எழுதியதுபோலத்தான். என் தொழில்தான் எனக்கு ராஜநாகம். அந்த விஷம்தான் எனக்கு மருந்தாகியது
நன்றி ஜெ
எஸ்.எம்

கோட்டை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கோட்டை சிறுகதை ஆச்சரியமானது. காமம் காதல் என்று இரண்டு உண்டு. கிராம வாழ்க்கையில் காமம் மட்டும்தான். காதல் என அதை மெல்லோடவுன் செய்துகொள்வதில்லை. இதை கிராமத்தைவிட்டு விலகிவந்தபின் இந்த பதினெட்டு ஆண்டுகளில் தெளிவாகவே உணர்கிறேன். காதல் என்றாலே அதை “அப்டி என்ன அரிப்பு?”என்றுதான் பார்ப்பார்கள்
அந்த காமம் வன்முறையாகவே வெளிப்படுகிறது. குரங்குகள் மிருகங்கள் எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன இல்லையா? அதை மனிதன் எப்போது கட்டுக்குள் கொண்டுவந்தான்? இல்லை உண்மையில் கொண்டே வரவில்லையா? விவசாயம் செய்தாலும் நிலம் இன்னும் மனிதனுக்குப் பண்படாததாகவே உள்ளது. ஆகவே இன்றுவரை விவசாயம் ஒரு போராடமாகவே உள்ளது என்கிறார்கள். அதுபோலவா?
கி. ரவிக்குமார்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
கோட்டை வாசித்தேன். இந்தவரிசை கதைகளில் இல்லாத நேரடியான எரோட்டிக் தன்மை உள்ள கதை. எதை ஜெயிக்க நினைக்கிறார்கள் என்ற கேள்விக்கு அம்மையைத்தான், வேறு எவரை என்கிறாள் அணஞ்சி. அதுதான் முதல் வரி. அணஞ்சியை பார்க்கும் சிறுவன் அவளுடைய தொங்கிய முலைகளைத்தான் கவனிக்கிறான். அங்கே ஆரம்பிக்கிறது. மாம்பழத்தை கசக்கி உண்பது. சிகரெட் ஊதுவது எல்லாமே அதன் அடையாளங்கள்
கதையில் தெளிவாக வருவது முலைப்பாலை நிறுத்துவதன் கசப்பு. கன்றுக்குட்டியும் சரி இடுப்பிலிருக்கும் குழந்தையும் சரி. அணஞ்சி சொல்கிறாள், தாயின் கசப்பை உணரவேண்டும். அதன்பின் ஒரு இருபதாண்டு அந்தக்கசப்புதான் நீடிக்கும் என்று. அங்கிருந்துதான் கோட்டையை வெல்லும் வெறி. கோட்டை என்பது பெண்தான், அன்னைதான்.
ஜெயக்குமார் எஸ்