யா தேவி! [சிறுகதை]
சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
சக்தி ரூபேண! [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
யாதேவி சிறுகதையில் எல்லா தன் உடலையே தான் என உணர்கிறாள். உடலை உடல் எனக் காணுதலைப் பற்றி தாங்கள் அம்பேத்கரின் பௌத்தம் கட்டுரையில் எழுதி இருந்தீர்கள். மனிதனின் முதல் பெரும் மாயம் தன் உடலைத் தான் என உணர்வது. எல்லா தன் உடலை வெறுக்கிறாள் அதன் வழியாகத் தன்னையும், ஸ்ரீதரன் அவள் உடலைக் கடந்து, அவளைக் காண்கிறான். அவள் கொள்ளுவது ஒரு எரிச்சல் ஒரு கோபம், தன் கீழ்மைகளே ஆனாலும் தான் எனக் கொள்வதை மனிதனால் இழக்க முடிவதில்லை போலும்.
ஆனால் அவளின் ஆழம் அதை விரும்புகிறது. ஸ்ரீதரன் சக்தி ரூபமாக, இப்பிரபஞ்சத்தைப் படைத்து அதுவே ஆன மகாமாயையாக அவளைக் காண்கிறான். அவளை அது மீட்கிறது, எல்லா அடைவது கிழக்கின் கனிவை, பெண் உடலைப் பாவம் என்னும் காணும் மேற்குக்கு மாற்றை.
சர்வ பூதேஷு கதையின் மாத்தன் எல்லாவின் உடலை கடந்து காண்கிறான் ஸ்ரீதரனைப் போலவே. ஸ்ரீதரன் தன் வித்யையால் அடைந்ததை தன் இயல்பான களங்கமின்மையால், வெகுளித்தனத்தால் அடைகிறான்.
மாத்தன் எனக்கு கிறிஸ்துவை, கிம்பெல்லை நினைவு படுத்தினான். இறுதி வரையில் ஸ்ரீதரன் அவனிடம் எல்லாவை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறான். இறுதியில் மாத்தன் எல்லாவின் மடியில் உறங்கும் கணம் ஸ்ரீதரன் காண்பது தாய்மையை.
ஸ்ரீதரனின் கண்டடைதலும் இதில் உள்ளது. யோகமும் வித்யையால் அடைவதை ஒருவர் களங்கமின்மையால், கருணையால் அடைய முடியும் என்பதே ஸ்ரீதரன் கண்டு கொள்வது. சக்தி ரூபேண அவள் தெய்வமாவதின் கதை, மூன்று விதத்தில் அவள் உடலை அறிகிறார்கள், ஸ்ரீதரன் அவன் வித்யையால் ஞானத்தால், மாத்தன் கருணையால், பிறர் தங்களின் கீழ்மையால் அஹங்காரத்தினால்.
அசோக் சாம்ராட்
அன்புள்ள ஜெ,
யாதேவி கதைகள் நினைவில் வளர்ந்தபடியே செல்கின்றன. இத்தனை வாசிப்புச் சாத்தியங்கள் அதற்கு இருப்பது ஆச்சரியம்தான். அந்தக்கதைகளை வாசிக்கையில் நான் முதலில் அது ஒரு மதம்சார்ந்த உருவகம் என்றுதான் நினைத்தேன். அப்படி நினைத்ததனாலேயே அது எனக்குள் வளரவுமில்லை. பல பழையபாணி வாசகர்கள் அப்படித்தான் அதை வாசித்து எதையும் அடையாமல் இருந்தார்கள் என நினைக்கிறேன். என் நண்பர்கள் பலர் கூட “ஆமா, அவன் ஸ்ரீவித்யா உபாசனை பண்றான், அதை சிறப்பா சொல்றார். அப்றம் என்ன?”என்றார்கள். “இந்துமதத்தை தூக்கிப்பிடிக்கிறார்” என்றார்கள் சிலர்.
ஆனால் அந்தக் கதையை ஒருபெண்ணின் பல பிம்பங்கள், பிம்பங்கள் வழியாக திகழும் பெண் என்று எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்ததுமே கதை பெரிதாக ஆரம்பித்துவிட்டது. நாம் நன்கறிந்த நம் மனைவியையே நாம் அறிவோமா என்ன? ஒரு வாழ்க்கையின் நிலையில் நாம் அவளை புதிதுபுதிதாக கண்டபடியேதானே இருக்கிறோம்? அந்தக்கோணத்தில் வாசிக்க ஆரம்பித்ததும் நாம் அன்றாடவாழ்க்கையிலேயே உழலும் அடிப்படைப்பிரச்சினை சார்ந்த கதையாக ஆகிவிட்டது.
ஜி.சிவராமன்
“ஆனையில்லா!” [சிறுகதை]
அன்புக்குரிய ஜெ,
இந்த கோவிட் பீதிச் சூழலில் ஆனையில்லா, பூனை, வருக்கை, கதைகள் படித்தது மனதை வெகுவாக இலகுவாக்கியது. அதுவும் “ஆனையில்லா” நீங்கள் எழுதிய சிறந்த சில கதைகளில் கட்டாயம் இடம் பெறும். அந்த யானையும் சிறுவர்களும் அக்கதையனுபவத்தை எங்கோ உயர்த்திக் கொண்டு விட்டனர். ஆனையில்லா, பூனை இரண்டையும் மனைவி மகளுக்கு விவரிக்க அவர்களுக்கும் சிரிப்பு தாளவில்லை. வீட்டுக்குள் ஆனை கேறி நிற்பது போல் ஒரு கோட்டுச்சித்திரம் கூட வரைந்து பார்த்து மகிழ்ந்தார் என் மனைவி.
அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு வரியையும் மீண்டும் மீண்டும் படித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். அக்கிராமத்தின் சமூக, மத, சாதி அமைப்பு, அவை மாறியிருக்கும், மாறிக்கொண்டிருக்கும் சித்திரம் உரையாடல்கள் மூலம் கதையினூடே இழையோடுகிறது. அதன் மேலே எங்குமே துருத்தி நிற்காமல் இயல்பான நகைச்சுவை உணர்ச்சி ததும்புகிறது. எப்படிப் பார்தாலும் ஆனையில்லா கதை ஒரு பெர்ஃபெக்ஷன் என்றே மனதில் பட்டது. நான் வெகுவாக சிலாகித்த அ.முத்துலிங்கம் அவர்களின் “ஒன்றைக் கடன் வாங்கு கதை” நினைவில் வந்தது. அவரை அழைத்து இக்கதை பற்றி கூறினேன். நேற்று தான் இன்னொரு வாசகரும் அழைத்து அக்கதை பற்றி கூறியதாக சொன்னார். இன்றே படித்து விடுகிறேன் என்றும் கூறினார்.
வருக்கை புன்னகைக்க வைத்தது. கிராமங்களில் இயல்பாக பேசி அலசப்படும் மீறல் நகைச்சுவை வழியும் உங்கள் வட்டார உரையாடல்கள் வழியே வெகு சிறப்பாக அமைந்து விட்டது, வருக்கை என்று தேடி “வாழையின் கனி தானும் மதுவிம்மு வருக்கையின் சுளையும்” என்ற சுந்தரரின் அழகான பாடலுக்கு இட்டுச் சென்று விட்டது. “மதுவிம்மு வருக்கை” என்ன அழகான ஒரு சொல்லாட்சி! இனி மனதிலிருந்து அகலாது. நவீன கவிதைகள் எழுதுவோர் தமிழிலக்கியம் நன்கு பயின்றிருக்க வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்துவது புரிகிறது.
இக்கதைகளுக்கு நன்றி
சிவா – ஹியூஸ்டன்
கோட்டை [சிறுகதை]
விலங்கு [சிறுகதை]
துளி [சிறுகதை]
வேட்டு [சிறுகதை]
அங்கி [சிறுகதை]
தவளையும் இளவரசனும் [சிறுகதை]
பூனை [சிறுகதை]
வருக்கை [சிறுகதை]
“ஆனையில்லா!” [சிறுகதை]
தனிமையின் புனைவுக் களியாட்டு
புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…
யா தேவி! [சிறுகதை]
சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
சக்தி ரூபேண! [சிறுகதை]