விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

தவளையும் ராஜகுமாரனும் உணவுப்பழக்கம் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்தது. நான் ஜப்பானில் பணியாற்றிய காலகட்டத்தில் ஜப்பானிய மீன் உணவின் மணம் எனக்கு ஒவ்வாமையை அளித்தது. அது பச்சைமீன் மணம் அதை அவ்வப்போது சொல்லியும் இருந்தேன்

ஆனால் ஒருநாள் என் நண்பன் என்னிடம் என் உணவிலுள்ள பெருங்காயம் வெந்தயம் போன்றவை ஆப்பீஸில் குமட்டலை உருவாக்குகின்றன அவற்றை தவிர்த்துவிடலாமே என்று சொன்னான். ஆபீஸில் உள்ளவர்கள் அவனிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். என்னிடம் சொல்ல சங்கடப்பட்டார்களாம்

அதன்பிறகுதான் மனித வாழ்க்கையிலுள்ள இந்த பெரிய இடைவெளிகளைப்பற்றிய உணர்வை நான் அடைந்தேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுவை. மானுடத்தின் வேறுபாட்டை உணரத்தொடங்கும்போதுதான் நாம் மனிதர்களாக ஆகிறொம்

எதற்குச் சொல்கிறேன் என்றால் ஏன் இத்தனை பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறோம்? ஏனென்றால் ‘அதர்’ மீதான பயம். அசைவ உணவு உண்பவர்களைப் பயம். பூண்டு சேர்ப்பவர்களைப் பயம். நம்மவர்கள் என ஒரு சின்ன வட்டம். அதற்குள்தான் பயமே இல்லை. இந்தப்பயம்தான் நம்மை ஆட்டுவிக்கிறது

ஆனால் காதல் என்பது ஒரு சாகசம். அது எல்லைகளைக் கடந்து பாய்வது. அதற்கு இந்த வகையான பொருத்தங்கள் முக்கியமல்ல. அது புதிய நிலத்தை தேடிச்செல்லும் நில ஆய்வாளரின் மனநிலையைத்தான் காட்டுகிறது. காதலின் சாகசத்தை அழகாகச் சொன்ன கதை

நன்றி

விஜயகுமார் மாணிக்கவாசகம்

 

ஜெ.

 

தவளையும் இளவரசனும் படித்தேன். இருவருமே வேறுபட்ட கலாச்சாரத்தில் இருப்பவர்கள். அதிலும் அவன் சுத்த சைவம். அசைவக்காரர்களுக்கு சைவத்தைப் புரியவைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்தான். சில மேல்நாட்டினர் அப்படி ஒன்று இருக்கிறது என்பதையே உணரமாட்டார்கள். அதை நம்பவும் மாட்டார்கள். அவன் சைவத்தைப் புரியவைக்க ஓவியம் நடனம் பயன்படுத்தினான் என்பது சிரிப்பூடுகிறது. அவள் தன் இனக்குழுவிலிருந்து தப்பி வந்த தவளைதான்.

 

தவளை நீரிலும் வாழும் நிலத்திலும் சஞ்சரிக்கும். மற்ற நேரங்களில் தன் நிர்வாணத்தைக் காட்டும் அவள் [கடற்கரையில் யாருமில்லை என அவளே ஆடையை உதறுகிறாள்] ஆடை மாற்றும்போது பார்க்கக்கூடாதெனச் சொல்லும் மரபிற்குக் கட்டுப்படுகிறாள். இப்படி இருவித மனநிலைக்கும் பண்பாட்டிற்கு இடையில் அவள் வாழ்கிறாள். ஆனாலும் தவளை நீர் மற்றும் நிலத்துக்குத் தன்னைப் பழக்கிகொண்டது போல அவளும் பழக்கிக்கொண்டுவிட்டாள். அவனோ பொருள்தேடும் பயணக்கடலால் அடித்துச்செல்லப்படும் மரக்கட்டைதான்.

 

இருவர்க்குமே உருவம், மொழி என்று எல்லாவற்றிலுமே வேறுபாடுதான். தவளையும் மானிடனும் எப்படி ஒன்றாக முடியும்? ஆனால் இருவரும் மனமொத்து ஒன்றாக இருக்கிறார்கள். காமம் என்னும் சங்கிலி பிணைக்கிறது எல்லாப் பொருத்தமும் பார்த்துச்செய்யும் திருமணங்களும் முரியும்போது பொருத்தமே பார்க்காமல் கண்டதும் காதல் என்று செய்யும் திருமணங்கள் இன்னும் நீடூ வாழ்கின்றன. அதைச்சொல்லத்தான் அவனும் திடீரென்று அவளை மணம் செய்துகொள்கிறாயா என்று கேட்கிறான். எந்தப் பொருத்தம் இல்லாவிடினும் மனம் உடல் ஒத்திருந்தால் போதும் அன்று அவன் கருதுவதுதான் கதையின் மையம்

வளவ துரையன்

 

விலங்கு [சிறுகதை]

ஜெ,

 

ஒவ்வொரு முறை வாசிப்பனுபவம் எழுத என்னும் போதும் ஒரு தடை இருக்கும் “யாரவது படிச்சு சிரிக்கபோறங்க”. ஏனோ இனி அந்த தடை இல்லை நான் ரசித்த கதைகளுக்கெல்லாம் எழுதப்போகிறேன்.

 

விலங்கு முதலில் ஒரு திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை அளித்தது. அப்போ ஆடு தான் மனுசனா ஆயிருக்கு அதான் அது “மனுசனாட்டு வந்தது சம்மதிக்கணும்” என்று சொல்லியது என்று தோன்ற மறுபடியும் வாசித்தேன் இப்பொழுது வேறு வகையான சிந்தனை முட்டன் சொல்கிறார் இங்கே ஒன்று வேறொன்றாக தெரிகிறது அப்படி தோன்றுவதும் தெறிவதும் இன்னொன்றின் மயக்கம். தோற்றம் அப்படியே தான் இருக்கு தோன்றுவது? அவருடைய ஆட்டு காது தோற்றமா தோன்றியதா? இது என்னுடைய மயக்கமாவும் இருக்கலாம். மாயையோ மாயை !.

அன்புடன்
விஷ்ணு.

 

அன்புள்ள ஜெ

 

விலங்கு ஒரு வித்தியாசமான திரில்லர். திரில்லர்கதைகளுக்குரிய எல்லா இலக்கணங்களும் இருக்கிறது. ஒன்றை நம்பவைத்து சட்டென்று இன்னொன்றாக ஆகிவிடுகிறது. திருப்பம் நம்மை அதிரச்செய்கிறது

 

ஆனால் கதை ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது. விலங்குக்கும் மனிதனுக்கும் இடையேஉள்ள வேறுபாடு என்ன? விலங்கு விலங்கு என்னும் எல்லையை கடக்க நினைப்பதில்லை. மனிதன் பறவை மீன் மிருகம் எல்லாமாக ஆகவும் நினைக்கிறான். ஆகவே அவனால் அடங்கியிருக்க முடிவதில்லை. எல்லைகளைக் கடக்கிறான். அந்த எல்லைகடப்பதே ஒடி

 

ஒடி என்றகலை மனிதன் விலங்காவது. அப்படியென்றால் தெய்வம் மனிதனாக ஆவதும் ஒடிதான். செங்கிடாய்க்காரன் மனிதனாகிறான். ஆனால் ஒடியின் விதிப்படி ஒரு மிச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. மனிதன் விலங்காவது எல்லை கடப்பது. செங்கிடாய்க்காரன் ஏன் மனிதனாக ஆகவேண்டும்? எல்லைகடப்பது தெய்வங்களுக்கும் பிடிக்கும். மனிதனாக வந்துதான் அவர்கள் லீலைசெய்ய முடியும்

 

எம்.பாஸ்கர்

முந்தைய கட்டுரைதுளி, அங்கி -கடிதங்கள்
அடுத்த கட்டுரையா தேவி! – சுரேஷ் பிரதீப்