வேட்டு, துளி -கடிதங்கள்

துளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

துளி ஒரு அற்புதமான ஃபீல்குட் கதை. ஒருதுளி அன்பு போதும் என்ற ஒற்றை வரியாக கதையைச் சுருக்கிவிடலாம். ஆனால் உண்மையில் அது ஒரு மிகப்பெரிய லைஃப் ஸ்பியரை ஈஸியாக வரைந்துகாட்டுகிறது. நாய், யானை, மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து வாழ்கிறார்கள். உணவையும் இடத்தையும் மட்டும் பங்கிட்டுக்கொள்ளவில்லை. மானசீகமாகவே ஒன்றாக இருக்கிறார்கள். ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். சமாதானம் ஆகிறார்கள். யானையை சமாதானப்படுத்திக் கூட்டிச்செல்லும் மாதேவன்பிள்ளை அதை ஒரு சகமனதாகவே நினைத்துப் பேசுகிறார்.

 

கருப்பன் எல்லா இடங்களிலும் சொட்டுவிடுகிறது. அது எல்லாவற்றையும் உரிமைகொண்டாடுகிறது. அதற்கு இந்த உலகமே உரிமையானதுதானே? அதனால் அந்த அன்பினால்தான் அந்த உயிர்களை இணைக்கமுடிகிறது. கருப்பனின் சொட்டு ஒரு ஒரு பெரிய வடம்போல அந்த ஊரையே கட்டிவைத்திருக்கிறது

 

ஆர்.மாரிமுத்து

 

அன்புள்ள ஜெ

 

துளி கதையை சிரித்துக்கொண்டே வாசித்தேன். கோயிலிலே பேசுற பேச்சா இது? வார்த்தையிலே ஒரு கட்டுப்பாடு வேணும். அயோக்கியத் தாயோளிக, மட்டுமரியாதை இல்லாம பேசினா கோயிலுக்குள்ள சுண்ணியா வெளங்கும்? என்று மாதேவன்பிள்ளை வெளிப்படுத்தும் பண்பாட்டு அக்கறை முக்கியமான ஒரு வரலாற்று தடையம்

 

இந்தக்கதை நடக்கும் காலம் என்றால் ஐம்பதாண்டுகளுக்கு முன்னால். குறிப்புகள் அதைத்தான் காட்டுகின்றன. ஐம்பது ஆண்டுக்கு முன்னால் இருந்த ஒரு பண்பாட்டை  அப்படியே மறுபடியும் புனைவாக உருவாக்கி நிலைநிறுத்த முடிகிறது. அதுதான் இலக்கியத்தின் வெற்றி

 

சி.ஜெயக்குமார்

வேட்டு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

வேட்டு கதையில் எல்லாரும் சொல்லியும் சொல்லப்படாத ஒரு சின்ன விஷயம் மிச்சமிருக்கிறது. அது பார்வதி சமைக்கும் அந்த பீஃப் கறி. அவள் அதை வேலாயுதனிடமிருந்து கற்றுக்கொண்டாள். அதை அவள் மறக்கவே இல்லை. அவளிடம் இன்று அந்தச்சுவையாக வேலாயுதன் மிஞ்சியிருக்கிறான் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்

 

அவள் வேலாயுதனை விட்டுவிட்டு பாஸ்கரனுடன் வந்து அங்கிருந்து விடுதலையை அடைந்தாள். அவர்கள் இருவரும் சாவதற்கும் அவளே காரணம். ஆனாலும் அந்த நினைவு அவளிடம் சமையாலாக எஞ்சியிருக்கிறது. என்னதான் இருந்தாலும் அவள் மனமொன்றி இருந்தது அவனிடம்தான். ஆகவே அவள் அவனுடைய ஒரு அம்சத்தை மிச்சம் வைத்திருக்கிறாள்

 

பா முத்துக்குமார்

 

அன்புள்ள ஜெ

 

வேட்டு கதையில் ஒரு வாசிப்பு. தப்பாக இருக்கலாம். எனக்கு தோன்றியது. பெரேரா, வேலாயுதம், பாஸ்கரன் எல்லாரும் ஆண்களாக அவர்களுக்கு முடிந்தவரை பெண்களை வெல்கிறார்கள். பயன்படுத்திக் கொள்கிறர்கள். ஆனால் பெண்கள் அவர்களை நுட்பமாக பழிவாங்குகிறர்கள். ஜானம்மா பாஸ்கரனை கைவிடுவது ஒரு அழகான படிமம். பார்வதியும் வேலாயுதனை கைவிடத்தான் செய்தாள்.

 

ஆண்கள் பெண்களை நம்பவைக்கிறார்கள். பெண்கள் அதை நம்பிவிட்டதாக ஆண்களை நம்ப வைக்கிறார்கள். கைவிடுவதுதான் அவர்களின் மிகப்பெரிய ஆயுதம். ஈவிரக்கமே இல்லாமல் அதை செய்கிறார்கள்

 

டி.எம். ரவீந்திரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17
அடுத்த கட்டுரையா தேவி!, ஆனையில்லா, பூனை – கடிதங்கள்