பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

களமெழுத்து பாட்டு திங்கள்கிழமை என்று அப்புமாமா கடிதத்தில் எழுதியிருந்தார். ஆனால் அது நினைவில் பதியவில்லை.நான் அங்கே போகப்போவதில்லை என்பதனால் வழக்கமான அன்புச் சொற்களை மட்டும்தான் படித்தேன்.

அம்மா “ஒருதடவை போய் பாத்துட்டு வாடா. மாமியும் உன்னை திரும்பத் திரும்ப கேட்டா” என்றாள்.

“இருக்கிறதே எட்டுநாள்… அதிலே சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போக ஆரம்பிச்சா அப்றம் அவ்ளவுதான்…” என்றேன்.

“எல்லா வீட்டுக்குமா போகச்சொன்னேன். உன்னோட தாய்மாமா.”

“அதுக்கென்ன?”

“தாய்மாமான்னா தந்தையோட எடம்.”

நான் ஒன்றும் சொல்லவில்லை. சொந்தம் பாசம் போன்றவை எரிச்சலை ஊட்டும் ஒரு வயது உண்டு. பதின்பருவத்தில் தொடங்கி கல்யாணமாகி குழந்தைகள் பெறும்போது அது மறைகிறது. ஆனால் மீண்டும் அது வரும் ஒரு காலகட்டமும் உண்டு.

“உன்னை மகனைவிட மேலா நினைச்சிருந்தார். உனக்குத்தான் அந்த நன்றி இல்லை.”

“சும்மா போட்டு குடையாதே…போய்ட்டு வாரேன். ஆனால் ஒண்ணு அங்க போனியே இங்க வந்தியான்னு ஆயிரம் பேச்சு வரும். அப்றம் நீ என் உசிரை எடுக்கக்கூடாது.”

“இல்லைடா, சத்தியமா இல்லை.”

நான் சந்திரனின் பைக்கிலேயே கிளம்பினேன். அவனிடமிருந்து எட்டுநாட்களுக்கு இரவல் வாங்கியது. இந்த ஊர்களில் பைக்கில்தான் சுற்றமுடியும். நிறைய சாலைகளில் கார் போகாது. போனால் எதிரில் மாட்டுவண்டி வரும். அரைகிலோமீட்டர் ரிவர்ஸ் எடுக்க வேண்டியிருக்கும்.

“காரை எடுத்திட்டுபோடா , வெயிலுல்லா காயுது? என்றாள் அம்மா.

“வெயில் இருக்கட்டும்” என்றேன். பைக்கில் சாலைக்கு வந்தேன். உண்மையிலேயே நல்லவெயில். ஆனால் காற்று குளுமையாக இருந்தது. வெப்பம் தெரியவில்லை. இங்கே வெயில் எவ்வளவு இருந்தாலும் மரநிழல்கள் குளிர்ச்சியானவை. ஏனென்றால் மண்ணிலும் மரங்களிலும் நீர் இருக்கும்.

நார்வேயில் வெயில் ஒரு பெரிய சொத்து. வானிலிருந்து வெள்ளிபோல பொன்போல அரிய ஏதோ பொருள் உருகி ஒளிவிட்டு மண்ணில் பொழிவதுபோல. பலநாட்கள் வெயிலை பார்த்து மயங்கி நின்றிருக்கிறேன். அத்தகைய அழகிய வெயில் ஊரில் இல்லையோ என்று தோன்றும். ஆனால் எல்லா வெயிலும் ஒன்றுதான். வெயில் எதன்மேல் விழுந்தாலும் அழகுதான். அதன் அழகை பார்க்க மனம் அமையவேண்டுமென்றால் ஆறுமாதம் வானம் மூடியிருக்கவேண்டும். இருண்ட தெருக்களும் மங்கிய கட்டிடங்களுமாக உலகமே துயருற்றிருக்கவேண்டும். அறைகளிலிருந்து அறைகளுக்கு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

சின்னவயசில் வெயிலை ஒரு பொருட்டாக நினைத்ததே இல்லை. வெயில்காலத்தில்தான் விடுமுறை. வெயில்காலத்தில்தான் வயல்கள் மைதானங்களாகும். குமரிமாவட்டத்தில் மைதானங்கள் மிகக்குறைவு. பள்ளிகளிலும் கோயில்களிலும் மட்டும்தான் திறந்தவெளி இடமே இருக்கும். ’காலடி வைக்கும் இடமிருந்தால் ஏழடி உடம்பை வளர்க்கலாம்’ என்று குமரிமாவட்ட நிலத்தின் வளம் பற்றிச் சொல்வார்கள். எங்கும் எதையாவது பயிர் செய்திருப்பார்கள். பயிர் செய்யாவிட்டாலும் செதுக்கிக்கொண்டே இருக்காவிட்டால் நிலம் காடாக ஆகிவிடும்.

செல்லும்வழியெங்கும் வயல்கள் பச்சையாகவே இருந்தன. அறுவடை முடிந்தபின் கச்சிகள் முளைத்திருந்தன. ஒரு மழை பெய்திருக்கவேண்டும். முன்புபோல வயல்களில் மாடுகள் மேயவில்லை. பிள்ளைகள் விளையாடவில்லை. முன்னுச்சி வெயில் கண்கூசும்படி நிறைந்திருந்தது. இலைத்தகடுகள் ஒளிவிட்டன. அவற்றின் முனைகள் கூர்மையாகிவிட்டது போலத் தோன்றியது. அலைகொண்ட நீர்ப்பரப்பைப் பார்ப்பது போல.

மங்கலத்தை அடைந்து பகவதிகோயில் திருப்பத்தை கடந்தபோதுதான் திருவிழாவுக்கான அலங்காரங்களைப் பார்த்தேன். சாலைமுகப்பிலேயே ஏணிகளை நட்டு சேர்த்துக் கட்டி அலங்கார வளைவு எழுப்பியிருந்தனர். அதில் சளையோலை வேய்ந்து குருத்தோலைப் பூக்களை கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருந்த மாணிக்கன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். “பிள்ளையா? எப்ப வந்தது?” என்றான்.

“நான் வந்து மூணுநாளாச்சுடே.. நல்லாயிருக்கியா?” என்றேன்.

“பின்னே நமக்கென்ன கொறவு? மானம் பொளியுது பூமி வெளையுது. உனக்கென்னவே குஸ்தீன்னு இங்கிண கெடக்கேன்”

நான் சிரித்தபடி “வாறேண்டே” என்று கடந்துசென்றேன்.

சாலையின் இருபக்கங்களிலும் மூங்கில்களை நாட்டி அவற்றில் வாழைக்குலைகளையும் உலத்திக்குலைகளையும் கட்டியிருந்தனர். மாவிலையும் அரளிப்பூவும் சேர்த்து கட்டப்பட்ட தோரணங்கள் காற்றிலாடின.

குருத்தோலைகளை ஈர்க்குச்சி கீறி எடுத்துக் கொண்டிருந்த கொச்சப்பனை எனக்கு முகம் மறக்கவில்லை. என்னை கண்டு “அய்யோ, இதாரு, சுந்தரேசனாக்குமே”என்றான்.

“மாமனைப் பாக்கணும்னு வந்தேன்” என்றேன்.

“போகணும்… காத்திட்டிருப்பாரு. இப்ப ஒரு நாலஞ்சு வருசமாட்டு தேகசொகம் இல்லை” என்றான்.

அதிகமாக டிவி பார்க்காதவர்கள் முகங்களை நினைவு வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. நிறைய ஊர்களில் நிறைய காட்சிகளில் முகங்களைப் பார்த்துப் பார்த்து நாம் பழமிய மனிதர்களை மறக்கத் தொடங்கிவிட்டோம் போல.

பகவதி கோயில் முகப்பில் ஒரு மாட்டுவண்டியில் இருந்து பெரிய உருளிகளும் குட்டுவங்களும் இறங்கிக் கொண்டிருந்தன. அவை அங்குமிங்கும் தட்டுவதன் மணியோசை. வண்டிமாடுகள் அப்பால் நின்று வைக்கோல் மென்று கொண்டிருந்தன. அவற்றின் கழுத்து மணிகள் ஓசையிட்டன. ஒன்றையொன்று துரத்திவந்த இரு பையன்கள் என்னைக் கண்டு திகைத்து மூக்குத்துளையில் கையை விட்டுக்கொண்டு நின்றனர்.

நான் அப்பு மாமாவின் வீட்டுமுன் வண்டியை நிறுத்தினேன். அப்பு மாமாவின் வீடு பெரியது. ஒருகாலத்தில் கோயிலே அவர்களுடைய குடும்ப சொத்துதான். பிறகுதான் ஊர்ச்சொத்தாக ஆகியது. அப்புமாமாதான் எழுதிக் கொடுத்தார். அப்போது பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். காந்தியவாதி, காங்கிரஸ்காரர். காமராஜருக்கு நெருக்கம். வீட்டுமுகப்பில் காமராஜருடன் பேசிக்கொண்டு நின்றிருக்கும் கறுப்புவெள்ளை புகைப்படம் உண்டு.

நான் வண்டியை நிறுத்தியதும் மாமி உள்ளிருந்து ஓடிவந்தாள். “டேய் வாடா… இங்க பாருங்க, சுந்தரன் வந்திருக்கான்”

நான் சிரித்தபடி படியேற அவள் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டாள். “உன்னை பாக்கணும்னு அம்முக்குட்டி கிட்ட சொல்லிட்டே இருந்தேண்டா… உன்னை ருக்மிணி கல்யாணத்துக்கு பாத்தது. வா” என்று உள்ளே அழைத்துச் சென்றாள்.

உள்ளே கூடத்தில் சாய்வு நாற்காலியில் அப்புமாமா படுத்திருந்தார். நன்றாகவே தளர்ந்துவிட்டார். நான் சென்று சுவரோரமாக நின்றேன் “ம்ம்ம்” என்று அவர் சொன்னார். அவ்வளவுதான் எங்களுக்குள் பேச்சு.

“என்ன இது, மருமகன் அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறான். என்ன ஏது என்று கேட்க மாட்டீர்களா?”

அப்பு மாமா புன்னகைத்தார். ஆனால் அவர் முகம் மலர்ந்திருந்தது.

மாமி ”அவளை கூட்டிட்டு வரலியாடா?” என்றாள்.

“மாவேலிக்கரையில் அவள் அப்பாவின் தம்பிக்கு உடம்பு சரியில்லை. அங்கே போகவேண்டும் என்றாள்.”

மாமி “சரி நீயாவது வந்தாயே” என்றாள்.

சுஜாவுக்கு திருவனந்தபுரம் தாண்டினாலே பாண்டிநாடு என்ற எண்ணம். இங்கே எதுவுமே அவளுக்குப் பிடிக்காது. என் அம்மாவை கொஞ்சம்கூட பிடிக்காது. அவளை நான் திருமணம் செய்து கொண்டபோது அம்மாதான் கொண்டாடினாள். ’அவங்கள்லாம் மேனோன்மாராக்கும்’ என்று எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மாமி “உள்ளே வாடா… உங்கிட்ட பேசணும்” என்றாள்.

நான் உள்ளே சென்று அடுக்களையை ஒட்டிய அறையில் டைனிங் டேபிளில் அமர்ந்தேன். வயதானவர்கள் மட்டும் இருக்கும் வீடுகள் இருண்டிருக்கின்றன அவர்கள் எல்லா சன்னல்களையும் மூடியே வைக்கிறார்கள். இருட்டு இருந்தாலும் புழுதி இல்லை.

“டீ குடிக்கிறியா?”

நான் ”சரி, கொண்டா” என்றேன்.

“இப்பமே மணி பதினொண்ணாச்சு… இப்ப சாப்பிடணும்… சரி, டீதானே?”என்றாள்.

‘டீ எப்ப வேணுமானாலும் குடிக்கலாமே” என்றேன்.

”கோயில் கொடி ஏறியாச்சு… இல்லேண்ணா நல்ல மீன் வாங்கியிருக்கலாம்”

நான் சிரித்துக்கொண்டே “அப்படிச் சொன்னாலோ நினைச்சாலோ பாவமாக்கும்” என்றேன்.

அவள் முகம் மலரச் சிரித்து “போடா, நான் எனக்காகவா நினைக்குறேன்?”என்றாள்.

புறந்திண்ணையை ஒட்டிய முற்றத்தில் ஏதோ இருந்தது நான் எழுந்துசென்று பார்த்தேன். புள்ளோர் குடங்கள். “இண்ணைக்கு என்ன வழிபாடு? புள்ளோர்க் குடமெல்லாம் இருக்கு?”என்றேன்.

“டேய், மாமா உனக்கு எழுதினாரே? களமெழுத்துபாட்டு உண்டு இண்ணைக்கு… பகவதிக்கு களமெழுத்துபாட்டு நடத்தி எட்டு வருஷமாகுது. மாமாவோட கனவிலே தேவி வந்திட்டே இருக்கா. சரி இந்தாண்டு வச்சிடலாம்னு சொல்லி இவங்களை வடக்கே ஆற்றுகாலிலே இருந்து கூட்டிட்டு வந்தோம்… என்னா செலவு தெரியுமா?” என்றாள் மாமி.

“மாமி, ஆற்றுகால் வடக்கே இல்லை. அதான் கேரளத்துக்கே தெக்கு”

“ஆமா நமக்கு வடக்குதானே? நாம பாதி தமிழங்க”

மாமி டீ கொண்டுவந்தாள். வழக்கம்போல பெரிய குவளை நிறைய பால்விட்ட காபி. ஓர் இலையில் திரளியும் இலையப்பமும் முந்திரிக்கொத்தும் கொண்டுவந்து வைத்தாள்.

“அய்யய்யோ இது எதுக்கு? இப்பதானே சொன்னே, சாப்பிட நேரமாச்சுன்னு?”

“அது இன்னும் ஒருமணிக்கூர் கழிஞ்சு… இது தீயா எரிஞ்சிரும். உனக்கென்ன சின்ன வயசு. சாப்பிடு”

நான் அதை சாப்பிட்டபடி “இதெல்லாம் சாப்பிட்டு எத்தனை வருஷமாகுது” என்றேன்.

“நீ வந்தாத்தானே?”

புள்ளுவத்தியும் புள்ளுவனும் ஒன்றுமே பேசாமல் நிழல்கள் போல வந்தார்கள். அவர்கள் ஆற்றுக்கு குளிக்கப் போயிருந்தார்கள் என்று ஈர உடைகள் காட்டின. மேலும் ஒரு புள்ளுவனும் புள்ளுவத்தியும் பச்சைக்கலத்தில் ஆற்றுநீருடன் வந்தார்கள். நான் எழுந்து சென்று அவர்களைப் பார்த்தேன் புள்ளுவத்தியிடம் “எந்த ஊரு?” என்றேன்.

அவள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டாள்.

“டேய் அவகிட்ட பேசக்கூடாது. அவ வெரதமாக்கும்.”

“ஓ” என்றேன்.

“ஒண்ணுமே ஞாபகமில்லியா?” என்றாள் மாமி

நான் வெட்கத்துடன் “இல்லை” என்றேன்.

அவர்கள் தொழுவத்தின் அருகே வைத்திருந்த மூட்டையில் இருந்து ரத்தநிறமான செம்பட்டை எடுத்து அணிந்துகொண்டார்கள். புள்ளுவன் கச்சை கட்டி இறுக்கினான். புள்ளுவத்தி முந்தானையை கட்டி சுழற்றிக்கொண்டுவந்து இடையில் செருகி அதன்மேல் பட்டுக்கச்சை கட்டினாள். புள்ளுவன் தன் காதில் பெரிய பித்தளைக் குண்டலங்களை அணிந்தான். கைகளில் பித்தளை காப்புகள். கழுத்தில் கல்மணிமாலை. புள்ளுவத்தி பித்தளையாலான வளையல்களை ஒவ்வொன்றாக அணிந்துகொண்டாள்.

கன்னங்கரியவர்கள். வெண்ணிறமான விழிகள், வெண்பற்கள். வெண்ணிறமே அழகென நினைக்கும் கண்களைக்கூட ஈர்க்கும் பேரழகு புள்ளுவத்திகளுக்கு உண்டு.

“இப்பவே ரெடியாகிறாங்க?” என்றேன்.

“இப்ப ஆரம்பிச்சிருவங்க” என்றாள் மாமி. “களமெழுதி முடிக்க அந்தியாயிடும்.. அதுக்குமேலேதானே பூஜையும் கொடையும்…”

“பூஜை கோயில் பகவதிக்குதானே?”

“மடையா, கோயில் பகவதியைத்தான் இந்த களத்தில் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்துவிடுவார்களே”

நான் எதையுமே நினைவில் வைத்திருக்கவில்லை. ஏழாம் வகுப்பு படிக்கும்போது வந்து களமெழுத்துபாட்டு பார்த்தேன். அன்று அதெல்லாம் பெரிதாக தோன்றவுமில்லை.

“இவர்களெல்லாம் சாப்பிடவேண்டாமா?”

“உனக்கு என்னடா ஆச்சு? டேய், களமெழுதிப்பாடுற புள்ளுவனும் புள்ளுவத்தியும் வெளிச்சத்துக்கு முன்னாலே சாப்பிட்டாச்சு. இனி களமழிச்சபிறகுதான் அன்ன ஆகாரம்…”

நான் புன்னகை செய்தேன்.

“வெள்ளைக்காரனாகவே ஆயாச்சு” என்றாள் மாமி.

“ஆமா, ஆகணுமே”.

”அப்பப்ப இங்கயும் வா… இதான் உனக்க மண்ணு”

புள்ளுவர்கள் அணி செய்துகொண்ட பின்னர் புள்ளோர்க் குடங்களுடன் கிளம்பிச் சென்றார்கள்.

மாமி என்னிடம் சுஜாவைப் பற்றி கேட்டாள். சுற்றிச்சுற்றி வந்து கடைசியில் “என்னடா, குடும்பம்னா பிள்ளைக வேணும்லே?” என்றாள்.

“வேணும்தான்.”

“அவளுக்கு என்னமாம் குறையா?”

“அவ வேண்டாம்கிறா.”

”ஏன்?”

”அவளுக்கு வேலை ஜாஸ்தி… இப்ப பிள்ளையெல்லாம் பெத்தா கரியர் போயிரும்.”

“என்னத்தை கரியரோ… இப்ப வேண்டாம்னு சொல்லுறே. வேணும் வேணும்னு கேட்டா கிடைச்சிருமா? ஈஸ்வரஹிதம் இருக்கணும்ல?”

நான் ஒன்றும் சொல்லவில்லை. மாமி அதன்பின் குடும்பத்தில் பிறந்த எல்லா குழந்தைகளைப் பற்றியும் விரிவாகச் சொன்னாள். மாமியின் உடலசைவுகளிலேயே கொஞ்சம் வேகம் கூடியதுபோல தோன்றியது. வேலை செய்துகொண்டே பேசினாள். நான் அவளிடமிருந்து ஒருவழியாக விடுபட்டு கோயிலுக்குள் சென்றேன்.

சிறிய கோயில். சற்றே பெரிய ஒரு புட்டி போல. கூம்புவடிவக்கூரை, வட்டமான சுவர். கூரை அக்காலத்தைய சிப்பிவடிவ ஓடுகளால் ஆனது. உச்சியில் ஒற்றை வெண்கலக் கலசம். அதன்மேல் வெண்கலத்தாலான நாகபடம். சுற்றுமுற்றம் மட்டும் மிகப்பெரியது. ஒருவேளை அது பெரியதாக இருப்பதனால்தான் கோயில் சிறிதாகத் தெரிகிறதோ என்னவோ. சுற்றுமதில்சுவர் உயரமானது அல்ல. வெளியே நின்று உள்ளே எட்டிப் பார்க்க முடியும்.

சட்டையைக் கழற்றிவிட்டு கோயிலுக்குள் நுழைந்தேன். கருவறை திறந்திருந்தது. தேவி சிறிய அழகிய கற்சிலையாக ஒற்றைச் சுடர் வெளிச்சத்தில் நின்றாள். சந்தன முழுக்காப்பு சாத்தப்பட்டிருந்தது. வெள்ளிக் கண்மலர்கள். கண்ணாடியால் மூக்குத்தி பதிக்கப்பட்டு சுடர்கொண்டிருந்தது. முத்தோலக்காவு பகவதி ஒரு கன்னிப்பெண். எல்லாச் சடங்குகளும் கன்னிகளுக்குரியவை.

தேவியை வணங்கிவிட்டு சுற்றி மேற்கு முற்றத்திற்குச் சென்றேன். முற்றம் மூன்று நாட்களுக்கு முன்பே மண்ணை இறுக்கி ஒருக்கப்பட்டிருந்தது. அதன்மேல் அன்றுகாலை சாணிமெழுகி களம் அமைத்திருந்தனர். களம் காய்ந்து இளம்பச்சை நிறமாக விரிந்துகிடந்தது. ஒரு பெரிய இலைபோல. அதைச்சூழ்ந்து மூங்கில் நாட்டி வடம்கட்டி கால்படாமல் காத்திருந்தனர். மூங்கில்களிலிருந்து மூங்கிலுக்கு குருத்தோலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. வாழைத்தண்டுகளை நாட்டி களத்திற்கு எல்லை அமைத்திருந்தனர்.

”ஆராக்கும்?” என்று ஒருவர் வெற்றிலைக் கறையுடன் கேட்டார். நரைத்த பம்பைத்தலையும் இளங்கூனல் கொண்ட உடலும். எவரென்று தெரியவில்லை.

“நான் இங்க, குந்நத்துவீட்டில்…”

“ஆ, சுந்தரன்…டே எங்க இருக்கே?”

“நார்வேயில்.”

“நார்வேன்னா அமேரிக்காதானே?”

”ஆமா”

“நல்ல ஊராக்கும்… உனக்க கெட்டினவள் வந்திட்டுண்டா?”

”இல்லை.”

“பிள்ளைக இல்லைல்லா?’

”ஆமா, எதுக்கு இத்தனை மூங்கில்?”

“அறுபத்துநாலு மூங்கில் காலுண்ணாக்கும் கணக்கு. ஓரோண்ணுக்கும் கணக்குண்டு கேட்டியா… இந்நா கெட்டியிருக்கே இந்த கயித்துக்கு வெள்ளிவடம்ணு பேரு. வெள்ளியில்ல, கத்தாளநாருதான். ஆனா நாலஞ்சு வெள்ளிமணி கெட்டி வைப்பம். தெக்கு வடக்காட்டு அஞ்சு இழை, கிழக்கு மேக்காட்டு எட்டிழைன்னு பல கணக்குகள் உண்டு அதுக்கு.”

புள்ளுவன்களும் புள்ளுவத்திகளும் களத்தின் தென்மேற்கு மூலையில் கன்னிதெய்வத்திற்கான பீடத்தை அமைத்தார்கள். செங்கற்களை அடுக்கி சிறிய பீடம் உருவாக்கி அதன்மேல் செம்பட்டு விரித்தனர். அதன்மேல் வெண்கலத்தாலம் வைக்கப்பட்டது. அதன்மேல் ஒரு வெண்கலச்செம்பு கவிழ்த்து வைக்கப்பட்டது. அருகே வாழையிலை விரித்து அதில் பசுஞ்சாணியை உருட்டி வைத்து அருகம்புல் சூட்டி பிள்ளையார். பிள்ளையாருக்கு பூ, வெற்றிலை, பாக்கு, ஒரு துண்டு வெல்லம் படைக்கப்பட்டது.

அப்பால் பூக்கூடையில் கமுகப்பூக்குலைகளும் அரளி, செம்பகம், தாமரை, மந்தாரம் போன்ற மலர்களும் வைக்கப்பட்டிருந்தன. பூசைக்குரிய சாம்பிராணியையும் சூடத்தையும் எடுத்து வைத்தான் ஒருவன். ஒரு சிறுவன் மாமா வீட்டில் இருந்து கடவத்தில் தேங்காய்களையும் வாழைக்குலையையும் கொண்டு வந்தான். அதிலேயே வெற்றிலையும் பாக்கும் இருந்தன.

நான் கைகளை கட்டியபடி பார்த்து நின்றேன். திடீரென்று என் உள்ளம் இனிமைகொண்டது. ஏனென்று தெரியாத இனிமை. அல்லது அது துயரமா? நான் அந்தில் திளைத்தேன். கூர்மையான கத்தியின் முனைமேல் கையை வைத்து மெல்ல வருடுவதுபோன்ற இனிமை. அதன்பின் நான் ஒர் ஒலியை கேட்டேன். மிக அணுக்கமாக எவரோ செவியில் பேசுவதுபோன்ற ஒலி. கைவளைகளின் ஓசை.

அது வளையோசை என உணர்ந்த கணம் என் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது. தாளமுடியாத இதய அதிர்வு. வியர்த்துவிட்டது. மூச்சுத்திணறியது. நான் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் ஒவ்வொரு கணமும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்திரா படிகளை குனிந்து தொட்டு வணங்கியபின் கோயிலுக்குள் நுழைந்தாள். கைவளைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன. உடைகளின் அசைவொலி. மூச்சொலி. என்னை அவள் பார்த்துவிட்டாள். நிற்கிறாள். நான் திரும்பிப் பார்த்தேன். என் முகத்தில் புன்னகை எழவில்லை. ஒரு வலிப்பு போன்ற அசைவு மட்டும்தான்.

அவள்தான் சுதாரித்துக்.கொண்டாள். “எப்ப வந்தீங்க?”என்று தணிந்த குரலில் கேட்டாள்.

“இப்பதான்…”

“எத்தனைநாள் லீவு?”

“எட்டுநாள்…அதிலே மூணுநாள் ஆயாச்சு.”

“சுஜா வரலியா?”

“இல்லை.”

அவள் ஏன் வருவதில்லை என்று உனக்கே தெரியும்.

அவள் திரும்பி பார்த்து “களமெழுத்து தொடங்கியாச்சு போல” என்றாள்.

சற்றே பருத்திருந்தாள். வெண்மையான கழுத்து மேலும் ஒளிகொண்டிருந்தது. கன்னங்கள் கொழுவியிருந்தன. சிவப்புப் புள்ளிகளாக சில பருக்கள். நெற்றியில் ஈரத்தில் ஒட்டிய மயிர்ச்சுருள்கள். காதோரம் மென்மயிர் நன்றாகவே இறங்கியிருக்கும் அவளுக்கு. மேலுதட்டிலும் மெல்லிய பூனைமயிர் உண்டு.

அப்படிப் பார்க்கக்கூடாதோ? ஆனால் அங்கே எவரும் இல்லை. நான் பெருமூச்சு விட்டேன் அந்த நெஞ்சுப்பாரத்திற்கு பெருமூச்சு இதமாக இருந்தது. மீண்டும் ஒரு மூச்சை இழுத்துவிட்டேன். அவளை பார்க்கக்கூடாது, ஆனால் நான் ஓரக்கண்ணால் களத்தைப் பார்த்து நின்ற அவளைப் பார்த்தேன்.

உனக்குத்தெரியும் நான் பார்ப்பது.

“போற்றி இல்லியா?” என்றாள்.

“தெரியலை…நான் வாறப்ப இல்லை.”

”இவங்களுக்கு பூஜை பண்ணணும்னா அவரு வரணும்ல?”

“ஆமா.”

என்ன பேசுகிறாய்? சொற்களை இத்தனை பொக்காக ஆக்கித்தானா நாம் இனி பேசிக்கொள்ள முடியும்?

புள்ளுவன் எழுந்துவந்து கோயிலின் சிறிய மணியை அடித்தான். அப்பால் மடைப்பள்ளியில் இருந்து பத்மநாபன் போற்றி வந்தார். கண்களைச் சுருக்கியபடி என்னையும் அவளையும் பார்த்தார்.

“இந்திரா தானே?”

“ஆமா.”

“இதாரு வீட்டுக்காரரா? எப்ப வந்தீங்க?”

நீ இந்தத் தருணத்தை எப்படிக் கடக்கிறாய்?

”அவரு வரல்லை… ஆபீஸ்லே லீவு இல்லைன்னுட்டாங்க. நான் இண்ணைக்கு காலையிலேதான் வந்தேன். இது யாருண்ணு தெரியாதா? குன்னத்துவீட்டில்…”

”குன்னத்துவீட்டில்?” என்றார் போற்றி, புருவத்தைச் சுருக்கியபடி.

“நான் திற்பரப்பிலேருந்து வாறேன். குன்னத்துவீட்டில் பாகீரதிக்க மகன்.”

“டேய் நீ அமேரிக்காவில்தானே இருக்கே?”

“ஆமா.”

”எப்ப வந்தே?”

“இப்பதான்.”

”ஒரு நோக்கிலே நீ இவ வீட்டுக்காரன் மாதிரியே இருக்கே, அவன் பேரென்ன சுகுமாரன்தானே?”

”ஆமா” என்றாள்.

நீ அனைத்தையும் தொடாமல் கடந்து செல்கிறாயா என்ன?

போற்றி உள்ளே சென்று சந்தனம் எடுத்துக் கொண்டுவந்து எனக்கும் அவளுக்கும் தந்தார். இருவரும் அருகருகே நின்று ஒரே சமயம் கைநீட்டி அதை வாங்கிக் கொண்டோம். அவள் கண்மூடி பிரார்த்தனை செய்து அதை நெற்றியில் இட்டுக் கொண்டாள். நான் வெறுமே தொட்டுக் கொண்டேன்.

எத்தனை முறை நடித்த காட்சி இது!

புள்ளுவனும் புள்ளுவத்தியும் சேர்ந்து அந்த தாலத்தை கொண்டு வந்து கோயில்முன் வைத்தனர். போற்றி அந்த வெண்கலச் செம்பின் மேல் நீர் தெளித்தபின் ஒரு செம்பட்டை மூடினார். அதை அப்படியே உள்ளே கொண்டு சென்று தேவி முன் வைத்து பூஜை செய்யத் தொடங்கினார்.

தாந்த்ரிக பூஜை. கைமுத்திரைகள் ஓசையற்ற மந்திரங்கள். மலரும் நீரும் அள்ளி அதன்மேல் போட்டார். அவள் கைகூப்பி உள்ளே பார்த்து நின்றிருந்தாள்.

அவள் உடல் செழிப்புகொண்டிருந்தது. கைகள் சற்று பருத்திருந்தன. வேறொருத்தியாக இருந்தாள். நான் அறியாதவளாக. முற்றிலும் புதியவளாக.

என் உடல் எரியத் தொடங்கியது. கைகளை இறுக மூடியிருந்தேன். அதை பலம்கொண்ட மட்டும் அழுத்தினேன். எவர் மேலோ எதன்மேலோ கடும் கோபம் எழுந்தது.

போற்றி கதவை உள்ளிருந்து மூடினார். அவள் பெருமூச்சுடன் நிமிர்ந்தாள். என்னை நோக்கி புன்னகை செய்தாள். இரு கன்னங்களிலும் நீளவாட்டு குழிகள். அவை மேலும் அழகுகொண்டிருந்தன.

“உனக்கு ரெண்டு குழந்தைங்கள்ல?”

”ம்.”

அவள் கண்களில் சிரிப்பு அகன்றது. விழிகள் தழைந்தன.

“மூத்தவ என்ன பண்றா?”

“மூணாம்கிளாஸ்… சின்னவ ஒண்ணு.”

”ரெண்டும் பொண்ணு… பொண்ணு ஐஸ்வரியம்னு இங்க சொல்லுவாங்க இல்ல?” என்றேன்.

அவள் நிமிர்ந்து என்னை பார்த்தாள். கண்களில் ஒரு சீற்றம் வந்து சென்றது.  “ஆமா, அவருக்கு பொம்புளைப் புள்ளைங்கன்னா ரொம்ப புடிக்கும்”

என் கத்தியின் கூர் என்னை நோக்கி திரும்புகிறது.

நான் அந்தக் கணத்தைக் கடந்து வர நெடுநேரமாகியது. பார்வையை விலக்கி அப்பால் களத்தை பார்த்தேன். அதன்மேல் வெயில் சிவந்து விழுந்து கிடந்தது.

மேலும் ஏதோ சொல்ல நினைத்தேன். சொற்களுக்காக துழாவி ஒன்றை எடுத்தகணம் போற்றி கதவைத் திறந்தார்.

தீபச்சுடர் காட்டினார். பகவதியின் கரிய முகம் ஒளிகொண்டு அணைந்து ஒளிகொண்டது.

அந்த தாலத்தை எடுத்துக் கொண்டுவந்து அர்த்தமண்டபத்தில் வைத்தார். துணியை முறுக்கி நெஞ்சுக்கு குறுக்காக கட்டிய புள்ளுவன் வந்து அதை எடுத்துக் கொண்டுசென்று களத்தின் தென்மேற்குமூலைப் பீடத்தின்மேல் வைத்தான். புள்ளுவத்தியர் இருவரும் குரவையிட்டனர். இன்னொரு புள்ளுவன் புள்ளோர்க் குடத்தின் தோற்பரப்பை மெல்லிய கழியால் வருடி விம்மலோசை எழுப்பினான். புள்ளுவன் அந்த பட்டுமூடிய செம்பின்மேல் மலர்மாலை சூட்டினான். அதன்முன் மலரும் பித்தளைக்கெண்டியில் நீரும் படைத்தான். வாழைப்பழம் வெற்றிலை பாக்கு வைத்தான். சூடம் கொளுத்தி சுற்றி தூபம் காட்டினான்.

அவள் கைதொழுதபடி நின்றாள். அவள் கதோர மயிரை காற்று மிகமெல்ல அசைத்தது. கழுத்தில் தங்கச்சங்கிலி மென்மையான ஒளியுடன் பதிந்ததுபோல் கிடந்தது. அவளுடைய வெண்சருமத்திலேயே ஒரு பொற்கோடு விழுந்ததுபோல.

புள்ளுவன் சூடத்தை எங்களுக்கு காட்ட நான் அதை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டேன். அவளும் தன் கண்ணில் ஒற்றிக்கொண்டாள். உதடுகள் மெல்ல அசைந்தன. பிரார்த்தனை செய்கிறாள். தன் குழந்தைகளுக்காக, கணவனுக்காக.

அவள் கீழுதடு இருகுமிழிகளைப் போல. இரு உதடு எல்லைகளிலும் மென்மையான மயிர் நீட்சி உண்டு. மெலுதட்டில் வியர்வை பனித்திருந்தது. மூக்கிலும் வியர்வை. அடிக்கடி உதட்டை மடித்துக் கடித்துக்கொள்ளும் வழக்கம் அவளுக்கு உண்டு. தன்னைத்தானே அடக்கிக்கொள்பவள் போலத்தெரிவாள்.

குடம் மீட்டிய புள்ளுவன் வடகிழக்கு மூலையில் சென்று அமர்ந்துகொண்டான். இரு புள்ளுவத்திகளும் புள்ளுவனும் சென்று வண்ணப்பொடிக் கொப்பரைகளை எடுத்துவந்தனர். பூசணிக்காய் நெற்றால் ஆன குடுவைகள். ஐந்து வண்ணங்கள். ஒன்றில் குருதிச்செந்நிறம். சுண்ணாம்பும் மஞ்சளும் சேர்த்து அரைத்து அரிசிப்பொடியுடன் கலந்து உருவாக்கப்பட்டது. வெண்ணிறம் பச்சரிப்பொடி. உமிக்கரியை பொடித்து உருவாக்கிய கருமைநிறம். பச்சை நிறம் ஏதோ இலையின்பொடி.

நெஞ்சில் கைவைத்து வணங்கியபின் புள்ளுவன் முதற்கைப்பிடியாக வெண்பொடியை அள்ளி களத்திற்கு குறுக்காக நீள்கோடொன்றை வரைந்தான்.

அவள் பெருமூச்சுவிட்டாள்.

நான் “கோடு வரையுறாங்க?” என்றேன்.

“அதுக்குபேரு பிரம்மசூத்ரம்…ஆயுஷ்ரேகைன்னும் சொல்லுவாங்க.”

“ஓ.”

“வெள்ளப்பொடிதான் சாத்வீகம்… அப்றம் மஞ்சள். அதுக்குப்பிறகு சிவப்பு. அது ராஜஸம் அதுக்குபிறகு பச்சை, நீலம். கடைசியாத்தான் கருப்பு. நீலமும் கருப்பும் தமஸ்னு சொல்வாங்க.”

“அது என்ன இலை? அந்தப்பச்சைப்பொடி?”

“அதுவா அதை நென்மேனி வாகைன்னு சொல்லுவாங்க… அந்த எலையை நிழலிலே உலரவைச்சு பொடிப்பாங்க.”

புள்ளுவன் கைநிறைய சிவப்புப் பொடியை அள்ளி ஈசானமூலையில் வைத்தான். பின்னர் அதை நீட்டிக்கொண்டு சென்றான். அவனைத் தொடர்ந்து இரு புள்ளுவத்திகளும் மஞ்சள் நிறத்தையும் சிவப்பு நிறத்தையும் அள்ளி உதிர்த்தனர். அவர்கள் கையிலிருந்து சிறிய விசிறிபோல, இறகுபோல வண்ணங்கள் விரிந்து மண்ணில் விழுந்தன. களத்தில் அந்த வண்ணங்கள் கலந்து கரைந்து விரிந்தன.

“நான் வாறேன்… அம்மா தேடிட்டிருப்பா?”

“நீ எப்ப போறே?”

“நாளைக்குத்தான்… சாயங்காலம் நேரா பாலராமபுரம். அங்க ஒருநாள். பிள்ளைங்க அங்கதான் இருக்கு.”

”நீ மட்டும்தான் வந்தியா?”

“ஆமா, அம்மா சொல்லிட்டே இருந்தா. மாமியார் பிள்ளைகளை விடமாட்டேன்னு சொன்னாங்க. சரி நான் மட்டுமாவது வரலாம்னு வந்தேன்.”

மேலும் என்ன சொல்வது?

கண்களால் விடைபெற்று அவள் நடந்து சென்றாள். கைவளை ஒலி அகன்று செல்கையிலும் வருகிறேன் என்றே ஒலிக்கிறது. ஆடைகளின் சரசரப்பு. சென்று மறைந்தபின்னரும் நெடுநேரம் செவிகள் கூர்கொண்டிருந்தன.

நான் அங்கே அமர்ந்து அந்த வண்ணங்கள் அவர்களின் கையிலிருந்து ஒழுகி இறங்கி மண்ணில் படிந்து பீலிகளாக விரிந்து கொண்டே இருப்பதைப் பார்த்தேன். தேவியின் வலக்காலின் கட்டைவிரல் உருவாகி வந்தது. ஒளிகொண்ட கால்நகம். விரல்கள், பின் அவள் பொற்சிலம்பு.

மண்ணுக்குள் இருந்து ஊறி வருகின்றதா? மூவர் கைகளில் இருந்து ஒற்றை ஓவியம் எழுகிறதென்றால் அவர்களுக்குள் முழுவடிவில் இருக்கின்றதா? ஓர் ஏரி போல. இவை மூன்று மடைகள்தானா?

ஓவியம் தேவியின் இடையை நெருங்கியபோது மாமி வந்து வெளியெ நின்ற்படி “சாப்பிடவாடா” என்றாள்.

நான் அவளுடன் சென்றேன்.

“ஏண்டா ஒருமாதிரி இருக்கே?” என்று மாமி கேட்டாள்.

“இல்லியே.”

“உன் முகம் சரியில்லை.”

”ஒண்ணுமில்லை, என்னமோ நினைச்சிட்டிருந்தேன்”

”நீ இங்கேயே வந்திரமுடியுமாடா?”

“கஷ்டம்.”

“என்ன இருந்தாலும் இதுதானே நம்ம மண்ணு?”

மாமரத்துக்கு அப்பால் மாமாவின் வீடு. அந்தக்காலத்தில் அதை மாளிகை என்றே சொல்வார்கள். வண்ணக்கண்ணாடிகள் பதிக்கப்பட்ட சன்னல்கள் அக்கிராமத்தில் அந்த வீட்டில்தான் முதன்முதலாக வந்தன.

மாமி விரிவாகவே சமைத்திருந்தாள். கூட்டுகறி ,அவியல், துவரன், வறுவல், கூட்டு, பச்சடி, கிச்சடி. ஊற்றிக்கொள்ள சாம்பார், வறுத்தரைச்ச தீயல், புளிசேரி. ஆனைக்காது பப்படம்.

“என்ன இது விருந்தா இருக்கு!”

‘நீ வந்திருக்கேல்ல?” என்றாள் மாமி . முகம் பிரகாசமாக இருந்தது. ‘உனக்கு பிடிக்குமே, அடைப்பிரதமனும் கடலைப்பிரதமனும் வைச்சேன்”

“ரெண்டா?”

“தேங்காப்பால் பிழியறதுதானே கஷ்டம்? மத்தபடி என்ன?”

சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் மாமி “மடத்துக்கல்லுக்கு பாயாசம் கொஞ்சம் குடுத்தனுப்பணும். பங்கஜத்துக்க மக வந்திருக்கா” என்றாள்.

“பாத்தேன்” என்றேன்.

“கோயிலுக்கு வந்திருந்தாளா? நல்ல குட்டி” என்றாள். “அவ புருஷனுக்கு இப்ப டெல்லியிலே பெரிய வேலைன்னு சொன்னாங்க… ஐஏஎஸ் இல்லை. ஆனா அதுமாதிரி வேலை”

“அப்டியா?”

“அவ சொல்லலையா?”

“இல்லை.”

“இருடா, புளிசேரி விட்டுக்க.”

நான் அமைதியாகச் சாப்பிட்டேன்.

”அவ அடிக்கடி வர்ரதில்லை, பாலராமபுரம் வந்திட்டு அப்டியே போயிடுறான்னு பங்கஜம் புலம்பிட்டே இருப்பா” என்றாள் மாமி “இரு பிரதம் விட்டுக்க.”

“டம்ளரிலே குடு.”

“அதென்ன? இலையிலே விட்டுச்சாப்பிட்டாத்தான் சத்யைவட்டம் சாப்பிட்ட மாதிரி… டம்ளரிலே அப்றமா தாறேன்”

நான் எழுந்து கைகழுவினேன்.

“வேணுமானா கொஞ்சம் படுடா… அவங்க வரைஞ்சு முடிக்க எப்டியும் அஞ்சுமணி ஆயிடும்”

“இல்ல பாக்கிறேன்… இப்ப பாத்தாத்தானே?”

நான் மீண்டும் களம்வரையும் இடத்திற்கு வந்தேன். தேவியின் உந்திச்சுழி உருவாகி வந்துகொண்டிருந்தது.

மிக மென்மையானது. மிகமிக மென்மையானது. பெருக்கெடுத்தோடும் கங்கையின் சுழிபோல. கடற்சுழிபோல. மரக்கலங்களை உள்ளிழுத்துக் கொள்வது. மானுடத் திரள்களை ஆழத்தில் அழுத்திய பின்னரும் அவ்வண்ணமே மலர்ந்திருப்பது.

நான் கைகளைக் கட்டியபடி நின்று நோக்கிக் கொண்டிருந்தேன். அங்கே ஏற்கனவே விரிந்திருந்த மாபெரும் ஓவியத்தின் மீதிருந்த கண்ணுக்குத் தெரியாத திரை ஒன்றை அவர்கள் விரல்களால் அகற்றிக் கொண்டிருப்பதுபோல தோன்றியது. சுருள்விரிந்து வந்துகொண்டே இருந்தாள்.

இரண்டு மரக்கால்களில் அரிசி கொண்டுவரப்பட்டது. அதைக் கொட்டி கூம்புக் குவியலாக்கி இரு முலைகளாக ஆக்கினர். அதன்மேல் மஞ்சள்பொடி பரப்பப்பட்டு பொன்னொளி உருவாக்கப்பட்டது.

எழுந்த சிறு குமிழ்முலைகள். அன்னையென ஆகாதவளின் முலைகள் கருவிலிருந்து எழுந்த குழந்தையின் விரல்கள் சுருண்டமைந்த கைகள்போல. மொட்டுகள், மலரா இதழ்களின் செறிவு. அவற்றின்மேல் பூண்கள், மணிகள் அமைந்தன. வடங்கள், ஆரங்கள், சரப்பொளி, கண்டமணி.

இரு ருத்ராக்ஷங்கள் முலையின் காம்புகள் என வைக்கப்பட்டன. இரு குழந்தை விழிகள். உண்ணப்படாத காம்புகள் மிகச்சிறியவை. நாணிக்கண்புதைத்தவை. உண்ணாமுலை அன்னை. உண்ணப்படாதவள். ஆனால் மணமும் தேனுமேந்தி வானோக்கி மலர்ந்தவள்.

உன் மெல்லிய சிலிர்ப்பென எழுந்து என்னை நோக்கிய ரகசியக் கண்கள். முதன்முதலாக என் விரல்கள் அறிந்த பெண்தளிர்கள்.

விரிந்த இரு கைகள் அவர்கள் வரைந்தனர். அஞ்சலும் அருளலும் காட்டி அமைந்தவை. ஒன்று மொழி, ஒன்று அன்னம். ஒன்று அணைப்பு பிறிதொன்று அளிப்பு. ஒருகை அணைத்து முலையூட்டுவது. மற்றொன்று மெல்ல முதுகில் தட்டிக்கொண்டிருப்பது.

ஒன்றுமறியாத சின்னஞ்சிறுமியின் கண்கள் எப்போது கன்னிக்குரியவை என்றாகின்றன? எக்கணம் கனல்கொண்டு எழுகின்றன?

கன்னிக்கு முலை சுரப்பது எப்போது? கண் கனிவது எப்போது?

மூன்று வரிகள் கொண்ட கழுத்து. அதிலிட்ட நாகாபரணம். அமுது நிறைந்த கலங்களுக்குமேல் நஞ்சு. நஞ்சின் விழிகள், கூரிய கோட்டுப்பற்கள். அதன் நெளிவென நீலம்.

முகம் விரிந்துகொண்டிருந்தது. இதழ்கள், அடுக்கிய வெண்பற்கள், சிறுகுமிழ் மூக்கு. கன்னங்களின் பொற்பொடி. செந்நிறத்தில் எழுந்த நாணம். செவிக்குழைகள் தோளில் அமைந்தன.

திமிலை, கொம்பு, இலைத்தாளம், சங்கு, மணி ஆகிய பஞ்சவாத்தியங்களுடன் மாரார் கூட்டம் வந்தது. அவற்றை தோளிலும் கைகளிலும் ஏந்தியபடி நின்று களமெழுத்து சித்திரத்தைப் பார்த்தார்கள். அவர்களுடன் வந்த சிறுவர்களும் ஒருவருக்கொருவர் உந்தி தள்ளி நின்று ஓவியத்தை நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

மாமி வந்து “டேய் வாடா. குளிச்சிட்டு வேட்டிகட்டிட்டு வா… இப்ப ஆரம்பிச்சிரும்” என்றாள்.

நான் வீட்டுக்குப் போனேன். மாமா குளித்துவிட்டு வந்திருந்தார். வீடே பரபரப்பாக இருந்தது. எல்லா அறைகளிலும் வேலைக்காரர்கள். வெல்ல உருளைகளை எடுத்து கடவத்தில் அடுக்கிக் கொண்டிருந்தார் ஒருவர். பித்தளை வாளிகளுடன் ஒருவர் சென்றார்.

“ஆற்றுக்குப் போய் குளிச்சிட்டு வரியா?”

”ஆறு…”

”நம்ம தோட்டத்துக்கு கீழே நேரா ஆறுதான்.. போய் இறங்கினா படித்துறை இருக்கு… நல்ல தண்ணி. நீ எங்க இனி ஆத்தில குளிக்கிறது? இங்க வந்தாத்தானே?”

மாமி துண்டும் சோப்பும் தந்தாள். நான் கிளம்பவிருக்கையில் கையில் தேங்காய் எண்ணையுடன் வந்தாள்.

“அய்யய்ய ,நான் வச்சுக்கிடறதில்லை” என்றேன்.

“வைச்சுக்க…சூடு” என்றாள். ”குனிடா!”

அவளே தேய்த்துவிட்டாள். நான் தேங்காயெண்ணை மணத்துடன் தோட்டத்தின் நடுவே இறங்கிச் சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்தேன்.

இங்கெல்லாம் கைதோநி என்ற செடியை இடித்து பிழிந்து சாறெடுத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி வற்றவைக்கிறார்கள். அதில் ஜீரகம் மிளகு போடுவதுண்டு. ஒருவகை உள்ளூர் கூந்தல்தைலம். அதற்கு ஒரு மணம் உண்டு. பித்துப்பிடிக்க வைக்கும் ஒரு ரகசிய மணம். நீள்கூந்தலை முகத்தின்மேல் அள்ளிப்போட்டுக் கொள்ளச் சொல்வது. எண்ணி கொள்கையிலேயே கூந்தலின் பட்டுமென்மையை கொண்டுவருவது.

கமுகுமரங்களுக்கு அப்பால் ஆற்றின் நீரொளி தெரிந்தது. இலைகளில் அந்த ஒளி மெருகேற்றியிருந்தது. ஆற்றின்மேல் பறவைகள் சூழ்ந்து பறந்துகொண்டிருந்தன. ஒர் எருமையின் ஓசை கேட்டது.

ஆற்றில் ஏராளமானவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். நல்ல நீரோட்டம். அந்தப்படித்துறை சளைமரத்தடிகளை வெட்டி அடுக்கி உருவாக்கப்பட்டது. மாமியின் குடும்பத்திற்கு மட்டுமானது. அதில் எவருமில்லை. நல்லவேளை. அந்த மனநிலையில் என்னால் எவரிடமும் பேசமுடியாது.

நான் துண்டைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்கினேன். நீரில் மலைக்குளிர். பேச்சிப்பாறை மிக அருகில்தான். எப்போதுமே மழைமுகில் நின்றிருக்கும் அப்பர்கோதையாறு, முத்துக்குளிவயல் மலைகள். ஊரின் எந்த பகுதியில் நின்று பார்த்தாலும் தென்மேற்கே நீலமலரிதழ்கள் என தெரிந்துகொண்டிருப்பவை. அங்கிருந்து வரும் நீர் இது

நீரில் புன்னைப் பூக்கள் படலமாக மிதந்துசென்றன. முதலில் அவை கொன்றை என நினைத்தேன். நீரில் இறங்கி பூம்படலத்தை விலக்கிவிட்டு மூழ்கினேன். எழுந்தபோது தலையெல்லாம் புன்னைப்பூ. உடலில் புன்னைப்பூ மணம்.

முதலில் மூழ்குவதுதான் தயக்கம்கொள்ள வைப்பது. மூழ்கியபின் எழவே முடியாது. நீர் வந்து அணைத்து சுழற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்பால் பெண்களின் குரல். சிரிப்பொலிகள். பல்வேறு வளையோசைகள். ஆனால் அந்த வளையோசை வேறு. அது வேறொரு இசைக்கருவியின் மெல்லிய சிணுங்கல்.

நான் தலைதுவட்டிவிட்டு மேலே சென்றபோது வெயில்மங்கத் தொடங்கியிருந்தது. நீரில் ஒளி அலைகொண்டிருந்தாலும் புதர்களுக்குள் நிழல் கருமைகொண்டிருந்தது. கமுகுகளுக்கு கீழே பொன்னிறமான பழுக்காய்ப் பாக்குகள் விழுந்துகிடந்தன.

உடலை அறிந்த அந்த உடல் இன்றில்லை. அறியப்பட்ட உடலும் இன்றில்லை. அவ்வறிதல் மட்டும் வெட்டவெளியில் நிலைகொள்கிறதா என்ன?

“நல்லா குளிச்சியா?” என்று மாமி கேட்டாள். “சரிகை வேட்டி எடுத்துவச்சிருக்கேன். கட்டிக்க”

நான் வேட்டிகட்டி நீண்ட நாட்களாகின்றன. இடையில் சுருட்டி சுருட்டி விட்டுக்கொண்டேன். அவிழ்ந்துவிடாமலிருக்க அதுதான் வழி. வேட்டி கட்டும்போது தொடைகளில் ஒரு நிர்வாண உணர்வு. ஆனால் சற்று நேரத்திலேயே இதமான ஒரு தழுவலைப்போல் வேட்டியின் மென்மையை உண்ர்ந்தேன்.

சட்டையை தேடினேன். மாமி வந்து “சட்டையை துவைச்சுபோட்டுட்டேன்.. அந்தா மேல்வேட்டி எடுத்து வச்சிருக்கு” என்றாள்.

”இதுவா? இது சரிகைபோட்டிருக்கே”

”சரிகைபோட்டதுதான் வேணும்.. கோயிலுக்குல்ல போறே?”

அதை போட்டுக் கொண்டபோது வரலாற்றுக் காலத்திற்குள் சென்றுவிட்டவன் போல் உணர்ந்தேன். இங்கே மீண்டும் மீண்டும் இப்படி பிறந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறேன். இதே முகத்துடன் இதே உடலுடன்.

ஒருவன் இழப்புகளை துயரை எத்தனை முறை பிறந்து எத்தனை முறை அடையவேண்டும் என்பது விதி?

கோயிலுக்குள் கூட்டம் நிறைந்திருந்தது. தேவியின் பிரபாவலையம் மஞ்சள் சிவப்பு பொடிகளால் தாமரை இதழ்களின் வடிவில் வரையப்பட்டுக் கொண்டிருந்தனர். பந்தலைச் சூழ்ந்து கூடி நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“ஆகா சுந்தரேசனா? எப்படா வந்தே?”

அவர் முகம் நினைவில் இல்லை. மையமாகச் சிரித்து “இப்பதான்” என்றேன்.

“நம்ம பாகீரதிக்க மகன்” என்று இன்னொருவரிடம் சொன்னார்.

“ஆமால்ல?” என்றார் அவர். அவர் பெயர் சுகுணன் என்று ஞாபகம் வந்தது. உடனே இவர் பெயர் ராதாகிருஷ்ணன் என்றும்.

சற்றே மறைந்து நின்றுகொண்டேன். குருத்தோலைகள் மறைத்தன. இந்த உடை நல்லது. இங்கே எல்லாரும் இதே உடையில்தான் இருக்கிறார்கள். ஓவியம் கிட்டத்தட்ட முழுமை அடைந்துவிட்டது. தேவியின் காலடியில் கனிகளும் காய்களும் தனியாக வரையப்பட்டன. புறக்களம் வரைந்து கொண்டிருந்தனர். தேவியைச் சூழ்ந்து விளக்குகள் சுடர் ஏந்தி நின்றன. அசையாத சுடர்கள். எரியாதவையும்கூட. ஆனால் அவை ஒளிகொண்டிருந்தன.

விதவிதமான வெறுந்தோள்கள். கரியவை. வெளிறியவை, திரண்டவை, தொய்ந்தவை. மயிரடர்ந்த மார்புகள். வெற்றுப்பலகை மார்புகள்.

ஒரு செயின் போட்டுக்கிடுங்க.

சே, நான் தங்கம் போடுறதில்லை.

மார்பிலே முடியிருந்தா செயின் நல்லாருக்கும்.

அப்ப நீ வாங்கிக்குடு.

நானா, அய்யோ!

இல்லேன்னா உங்கப்பாகிட்ட சொல்லு.

நல்ல கதை!

அவர்ட்ட நான் பொன்னும் பணமும் பேசி வாங்குவேன்ல?

அய்ய!

பெரும்பாலான பெண்கள் வெண்ணிற சரிகைப்புடவைதான் அணிந்திருந்தனர். முதியபெண்கள் வெண்ணிற முண்டும் நேரியதும். கோயிலுக்குள் கூட்டம் நிறைந்துவிட்டது.

ஒருகணத்தில், ஓர் அசைவுத்துளியில், ஒரு மனஅதிர்வாக அவளை கண்டேன். எப்போதுமே அது வீணையில் கைபட்டதுபோல ஓர் அதிர்வு மட்டும்தான். முதலில் நிகழ்வது மனதில்தான்.

அவளும் வெண்ணிறச் சரிகையாடைதான் அணிந்திருந்தாள். நான் அவளை நேருக்குநேர் நோக்கியதுமே ஏமாற்றம் அடைந்தேன். ஏன் என்று தெரியவில்லை. எரிச்சல், தனிமை. அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று தோன்றியது

அவள் மெல்ல நடந்துவந்தாள். என் கண்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதற்குள் அவள் கண்களைச் சந்தித்துவிட்டேன். மிக மெலிதாகப் புன்னகைத்தாள். என் உடல் எரிந்தது. கண்களில் நீர் கசிந்தது.

நிலத்தையே நோக்கிக் கொண்டிருந்தேன். அவள் பிறபெண்களுடன் பேசிச் சிரித்தாள். நலம் விசாரித்தாள். அங்கேயே எப்போதும் இருப்பவள் போலிருந்தாள். அங்கே முழுமையாகத் திகழ்ந்தாள். பெண்களால் மட்டுமே இயல்வது அது.

புள்ளுவன் தேவியின் கரிய விழிகள் நடுவே ஒரு பிடி வெண்பொடியை தூவினான். சட்டென்று அவள் கண்களில் ஒளி தோன்றியது. ஊடுருவுவதுபோல் என்னை நோக்கியது. நான் திடுக்கிட்டேன். நான் ஒன்றை ஏற்கனவே கண்டுவிட்டிருந்தேன். திரும்பி அவளைப் பார்த்தேன். நீண்டகூந்தலில் செவிக்குப்பின் ஒரு ரோஜாவை வைத்திருந்தாள்.

அங்கே நின்று பொலிந்தேன். அந்திமரம் என பொன்னொளி கொண்டேன். அவள் விழிகளை சந்தித்தேன். அவற்றில் புன்னகை இல்லை. ஒரு துளி அனல் மட்டும். இமைகள் சரிந்தன. முகம் கனல்பட்டுக் கன்றியதுபோல் இருந்தது.

ஜெயபாரதி வச்சுக்கிடறாள்ல?

ரோஜாவா?

ஆமா, இப்டி பக்கவாட்டிலே.

அய்யே!

அதாண்டீ இப்ப ஃபேஷன்.

நான் மாட்டேன்!

வைடீ!

மாட்டேன்!

சரி போ.

வைக்கிறேன்.

வேண்டாம்.

வைக்கிறேன்கிறேன்ல?

வேண்டாம்டீ போடீ.

அப்ப சரி.

போ எனக்கென்ன.

போறேன்.

சரி.

இல்ல போகல்லை.

போயிருவியா?

கல்விளக்குகளில் இடப்பட்ட திரிகளில் சுடர்பொருத்த தொடங்கினர். கோயிலைச் சுற்றி ஆயிரம் அகல்கள் சுவரில் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றை கொளுத்த அனைவரும் சென்றார்கள். சுடரிலிருந்து சுடர் கொளுத்தப்பட்டு கோயில் செம்மலர் பூத்து செண்டாகிக் கொண்டே சென்றது. கோயில்முகப்பில் நின்ற கல்லால் ஆன ஏழடுக்கு விளக்கை ஒரு கோயில் ஊழியன் கொளுத்தினான். அது கல்லால் ஆன ஒரு மலர். கன்னங்கரிய எடைமிக்க ஒளியற்ற மலர். ஆனால் மலர். அதில் எழுந்தன செவ்விதழ்கள்.

ஸ்ரீகாரியம் கையை வீசினார். பஞ்சவாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. ஒற்றைச்சொல்லையே வெவ்வேறு விசையில் திரும்பத் திரும்பச் சொல்வதுபோல அதன் தாளம். அந்தத்தாளத்திற்கு ஏற்ப சுடர்கள் அலைந்தாடுவதுபோல அதிர்வதுபோல விழிப்பிரமை.

அவள் சுடரேற்றிய அகல் நின்று பொலிந்தது. அவள் முகம் அதில் செம்மை கொண்டிருந்தது. கூந்தல்சுருள்களும் பொற்கம்பிகளாயின. அவள் அகன்றபின் நான் அதனருகே சென்றேன். அதன் சுடரை சற்றே தொட்டேன். தூண்டிவிடுபவன் போல. எண்ணையை முகர்ந்து பார்த்தேன். தேங்காயெண்ணையின் மணம்.

மணியோசை எழுந்தது. அனைவரும் கருவறை முன் கூடினர். உள்ளே சுடர்கள் சூழ தேவி எழுந்தருளியிருந்தாள். சந்தன முழுக்காப்பிட்ட உடல். விழிமலர்கள் அனல்சுடர்கள் என்றாகியிருந்தன.

மணியோசையுடன் போற்றி தீபாராதனை காட்டினார். அவள் கருவறை நோக்கி நின்றிருந்தாள். நேராகச் சென்று நின்றிருந்தால் கண்களுக்குள் இரு செஞ்சுடர்களைக் காணமுடியும்.

கற்பூர ஆரத்தி தட்டு சுழன்று வந்தது. இரு மென்மையான கைகளால் அவள் பொத்தி கண்களில் ஒற்றிக்கொண்ட அதே சுடர் என்னை நோக்கி வந்தது. நான் அதை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டபோது வெம்மையின் மென்மணம் கொண்டிருந்தது.

களத்தில் நந்துனியையும் குடத்தையும் புள்ளுவர்கள் மீட்டினார்கள். கூட்டம் அங்கே சென்றது. நான் சென்று நின்றுகொண்டேன். புள்ளுவத்தி அரிசிவட்டிலில் இருந்து வெண்ணிற அரிசியை ஐந்து குவியல்களாக தேவியின் காலடியில் குவித்தாள். ஐந்திலும் மலர் இட்டாள்.

என்னருகே நின்றிருந்த கிழவர் “சுந்தரனாக்குமோ?” என்றார்.

“ஆமா.”

“நாணு சொன்னான்.”

“இது என்ன சடங்கு?”

“வெள்ளரி வைக்கிறது… வெளுத்த அரிசி படைச்சு கும்பிடுதது… அதுக்குபிறகு பட்டுக்கூறை இடுதது. அதுக்குப்பிறகாக்கும் களம்பூசை.”

செம்பட்டு விரிக்கப்பட்டது. ஐந்து வாத்தியங்களும் முழக்கமிட பெண்கள் குரவையிட்டனர். கணபதிக்கு வெற்றிலை பாக்கு பழம் வெல்லம் படைத்து வணங்கிய புள்ளுவன் செம்புக்கலவடிவில் களத்தில் எழுந்தருளிய தேவிக்கும் மலரும் நீரும் இட்டு வணங்கி தீபமும் தூபமும் காட்டினான்.

அந்தி எழுந்துவிட்டிருந்தது. புள்ளுவன் கையில் பந்தத்துடன் களத்தைச் சுற்றிவந்தான். அவனுக்குப்பின்னால் புள்ளுவத்தி கையில் தாலத்தில் அரிசியும் மலரும் சிறுகுவளையில் நீருமாக நடந்தாள்.

“சந்தியாவேலையும் களப்பிரதட்சிணமாக்கும் இப்பம்” என்றார் அவர்.

நான் விலகி நின்றேன். அவர் மேலே பேச விழைபவர் போலிருந்தார். எனக்கு அப்போது எந்தக்குரலையும் கேட்கப்பிடிக்கவில்லை.

புள்ளுவனும் புள்ளுவத்தியும் களத்தின் இருமூலைகளில் அமர்ந்துகொண்டார்கள். பாடல் தொடங்கியது. புள்ளுவர்க்குடம் விம்மி விம்மி உடன் சேர்ந்துகொள்ள தேவிமகாத்மியம் தோற்றம்பாடல் ஒலித்தது.

“பூக்குலை மாலை மாந்தளிர் திணமாந்தளிர் செம்பருத்தி

பூமலரு குறுந்தெங்கின் ஓலை வௌம்புள்ள செம்பழுக்கா

நாக்கில தன்னில் வெள்ளரி வெள்ள வெற்றில நல்ல தேங்கா

நாலு திசையும் விளக்கோடே பீடமேறிய குலதெய்வம்

பார்தலறி எத்திய வாள் கடுத்தில சூலம் கொள்வோள்

பாட்டினு அலங்கரிச்ச களத்தில் வந்நு உடனாடுமம்மே

காக்கின் நினக்கு கும்பிடுந்நோரு லோகர்க்கு நீ துணையாய்

காத்தருளேணமே ஸ்ரீ பகவதி காவிலம்மே!”

பாடல் ஒலிக்க ஒலிக்க புள்ளுவன் பச்சைத் தென்னைமட்டைக் கீற்றுக்களில் வெண்ணிறத் துணிசுற்றி தேங்காயெண்ணை ஊற்றி வைத்திருந்த பந்தங்களை ஒவ்வொன்றாக தேவியின் உருவின் பிரபாவலையத்தைச் சுற்றி நட்டான். இடக்கால் அருகிலிருந்து வரிசையாக வைத்து வலக்கால் அருகே வந்தான். கூடவே பாடல் விளைந்து எழுந்தோறும் களம் தழல்கொண்டது. நடுவே ஓவியம் தழல்திரை என நெளிந்தது.

பாடல் முதிருந்தோறும் மெல்ல மெல்ல பிற வாத்தியங்கள் எழுந்து கலந்துகொண்டன. நந்துனியும் முழவும் சங்கும் மணியும் இலைத்தாளமும் ஒவ்வொன்றாக சேர்ந்துகொள்ள இசை கிழக்குமழை அணுகிவருவதுபோல வலுத்தது.

ஏழு கடவங்களில் தேங்காய்களை கொண்டுவந்து வைத்தனர். ஆயிரத்தெட்டு தேங்காய். இருவர் இருபக்கமும் நின்று அவற்றை எடுத்து எடுத்து புள்ளுவன் கையில் கொடுத்தனர். அவன் கைகள் சுழன்றது இரு காற்றாடிகள் போலத்தோன்றியது. தேங்காய்கள் சீராக விழுந்து சரியாக இரண்டாக உடைந்தன. ஆயிரத்தெட்டு தேங்காய்களையும் உடைத்தபின் அவன் எழுந்து வணங்கினான்.

நால்வர் மண்டியிட்டு தேங்காய்களை பொறுக்கி கடவத்தில் சேர்த்து எடுத்துச்சென்றனர். அப்போதும் பாடல் ஓடிக்கொண்டே இருந்தது. பாடலின் இறுதிவரி முடிந்த கணம் புள்ளுவத்தி இரு கைகளையும் விரித்து ய்ய்ய்யே! என்று கூச்சலிட்டாள். அவள் உடல் விரைப்பு கொண்டது. பின்னர் நாணேற்றியதுபோல அதிர்ந்தது. துள்ளி துடித்து ஆடத் தொடங்கினாள்.

புள்ளுவன் அவள் இரு கைகளிலும் கமுகுப் பூக்குலைகளை அளித்தான். அவள் அவற்றை வீசியபடி முழங்கால் மூட்டுகளை ஊன்றி ஓவியத்தைச் சுற்றிவந்தாள். விசை கூடிக்கூடி வந்தது. மூன்றாவது சுற்றில் அவள் தேவியின் மணிமுடியை வீசி அழித்தாள். பின் முகத்தை. குண்டலங்களை. நாகமாலையை. அன்னக்குவையென்று எழுந்த முலைகளை.

தேவியின் உருவம் கலைந்து கொண்டிருந்தது. வண்ணப்பொடிகள் புழுதிபோல பறந்தன. இறுதியாக காலடிகள். இடக்காலடி மட்டும் எஞ்சியது. பின் அதுவும் மறைந்தது. புள்ளுவத்தி தூக்கி வீசப்பட்டவள் போல தேவியின் காலடியில் விழுந்து வண்ணப்பொடிகளில் புரண்டாள். அவள் கைகள் தளர பூக்குலைகள் விழுந்தன. தலைமுடி விந்தையான நீர்ப்பாசி போல பலவண்ணங்களுடன் பரவிக்கிடந்தது. அவள் உடல் நெகிழ்ந்து ஒரு துணிபோல மண்ணில் படிந்தது.

ஒரு புள்ளுவன் வந்து அவளை மெல்லத்தூக்கி அப்பால் கொண்டுசென்றான். அவள் முகத்தில் மஞ்சள் கலந்த நீரை தெளித்தான். அவள் முனகியபடி புரண்டுகொண்டிருந்தாள்.

மூத்தபுள்ளுவன் களத்தில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தான். “கல்பனை! கல்பனை!” என்று அவன் கூவினான்.

கூட்டத்தினர் ஒவ்வொருவராகச் சென்று அவன்முன் பணிந்து களம் தொட்டு வணங்கினர். அவன் ஒரு துளி வண்ணம் எடுத்து அவர்களின் நெற்றியில் இட்டு “எல்லா நன்மையும் உண்டாகும்… பகவதி உடனுண்டாகும்!” என்று வாழ்த்தினான்.

அவள் நெற்றியில் இட்டுக்கொள்வதைப் பார்த்தேன். பந்தங்களின் ஒளியில் அவள் தழலாடை அணிந்திருந்தாள் என்று தோன்றியது.

“பிரசாதம் வாங்கிக்கிடுங்க.. பிரசாதம்.”

சர்க்கரைப்பொங்கலும் வாழைப்பழமும் வாழையிலைகளில் அளிக்கப்பட்டது. களமழித்தல் உருவாக்கிய பதற்றம் மிக்க அமைதி மெல்லக் கலைந்து அனைவரும் இயல்பாக ஆரம்பித்தனர். சிரிப்புகள், பேச்சுக்கள், நலம்விசாரிப்புகள்.

அவள் என்னருகே வந்தாள். “வரட்டுமா?” என்றாள்.

“ம்” என்றேன்.

இலையை நீட்டி “வேணுமா?” என்றாள்.

நான் கொஞ்சம் சர்க்கரைப்பொங்கல் எடுத்துக்கொண்டேன்.

அவள் முகம் ததும்பிக்கொண்ட்ருந்தது. இலைநுனியில் இருந்து பனித்துளிபோல் அவள் முகம் உடலில் இருந்து உதிர்ந்துவிடும் என எண்ணிக்கொண்டேன்.

மீண்டும் ஒருமுறை தலையை அசைத்துவிட்டு அவள் விலகிச்சென்றாள். நான் திண்ணையில் அமர்ந்திருந்தேன் . பந்தங்கள் கருந்திரி எரிந்து அணையத்தொடங்கின.

போற்றி மணியோசையுடன் திருநடை சாத்தினார். கோயில் கண்மூடி துயில்கொள்ளத்தொடங்கியது. கதவிலிருந்த பித்தளை முழைகளில் விளக்கொளித் துளி நின்றிருந்தது. குருதிச்சொட்டுபோல.

திண்ணையில் பலர் படுத்துவிட்டார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். சிரிப்புகள் கேட்டுக்கொண்டிருந்தன. பின்னர் குரட்டை ஒலிகள்.

ஒரு சிறுவன் வந்து என்னிடம் “பாட்டி கேட்டாங்க, வீட்டுக்கு வரல்லியான்னு” என்றான்.

“இல்ல இங்கியே பேசிட்டிருக்கேன்னு சொல்லு” என்றேன்.

குரட்டையொலிகளாக மட்டுமே மானுடர் சூழ்ந்திருந்தனர். பின்னர் அவர்களும் இல்லாமலாயினர். களம் இருட்டுக்குள் மறைந்தது. விண்மீன்கள் நிறைந்த வானம் எழுந்து வளைந்திருந்தது.ஒருவேளை நான் மீண்டும் இந்த இடத்தை, இந்த விண்மீன்களைப் பார்க்க வாய்ப்பில்லை.

இருட்டுக்குள் அத்தனை வண்ணங்களும் மறைந்துவிட்டிருந்தன. இருட்டுக்குள் இருந்து அவை வந்தனவா? இருட்டுக்குள் வண்ணங்கள் அனைத்தும் குடிகொள்கின்றனவா? முடிவிலா இருள். பிரபஞ்சம் நிறைந்த இருள்.

நான் அங்கேயே இருந்தேன். சுவர்சாய்ந்து கொஞ்சம் தூங்கினேன். அசைந்து விழித்துக் கொண்டேன். மீண்டும் தூங்கினேன். காலையில் கோயிலைக் கூட்டிப் பெருக்கும் கருணன் மாமா வந்து மணியோசை எழுப்பியபோது விழித்துக் கொண்டேன். ஒவ்வொருவராக எழுந்து அமர்ந்தனர்.

“ம்ம்ம் எந்திரிங்க! பிரம்ம முகூர்த்தம்! பிரம்ம முகூர்த்தம்!”

நான் எழுந்து வீட்டுக்குச் சென்றேன். மாமி எழுந்துவிட்டிருந்தாள். “என்னடா யார்ட்ட பேசிட்டிருந்தே?”

“தெரிஞ்சவங்க நெறையபேர் இருந்தாங்க.”

“டீ சாப்பிடறியா?”

“ம்.”

“நல்ல மங்கலமான களமெழுத்து… பாட்டெல்லாம் மணியடிச்சமாதிரி இருந்தது.”

வெயில் எழத்தொடங்கியபோது ஆற்றுக்குச் சென்று குளித்தேன். திரும்பி வரும்போது கோயிலுக்குள் நுழைந்தேன். தேவி ஒற்றைச்சுடர் ஒளியில் கரிய சிற்றுருவாக அமர்ந்திருந்தாள். எல்லா வண்ணங்களும் அவளுக்கே சென்று சேர்ந்துவிட்டிருந்தன

களம் முழுக்க கலைந்த வண்ணங்கள் பரவியிருந்தன. அவை ஒற்றை உருவென இருந்தன என்றே சொல்லமுடியாது. தீற்றல்கள் குழம்பல்கள் சுழல்வுகள். நான் அவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றேன். அந்த வண்ணங்களை அங்கே அமர்ந்து பிரித்தெடுக்கமுடியுமா? கலைந்த அந்த உருவை மீண்டும் அங்கே வரைந்தெழுப்ப முடியுமா?

கண்களை மூடிக்கொண்டு நினைவிலிருந்து எடுக்கலாம். அணுவணுவாக மீண்டும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த ஓவியம் களத்தில் இல்லை.

திரும்ப வீட்டுக்குச் செல்லும்போது நான் மிகவும் களைத்திருந்தேன். சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் போடவேண்டும். அதன்பின் கிளம்பிவிடவேண்டும்.

***

தீயாட்டு

முந்தைய கட்டுரைஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22