வேட்டு, அங்கி -கடிதங்கள்

அங்கி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

அங்கி சிறுகதை நீங்கள் எழுதிய பேய்க்கதைகளில் முக்கியமானது. நீங்கள் எழுதும் பெய்க்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அவை மூன்று அம்சங்கள் கொண்டவை. பேயாகவும் இருக்கலாம் இல்லை மனமயக்கமாகவும் இருக்கலாம் என்ற ஒரு தன்மை அவற்றில் இருக்கும் பேய்க்கதையின் சுவாரசியம் இருந்தாலும் கூடவே அது ஒரு கவித்துவமான உருவகமாகவும் இருக்கும். பேய்க்கதையை இலக்கியத்தகுதி அடையச்செய்வது இந்த அம்சம்தான் புதுமைப்பித்தனின் கதைகளில் காஞ்சனையில் அந்த கயிற்றரவுத்தன்மை மட்டும்தான் உண்டு. எட்கார் ஆல்லன் போ கதைகளிலும் இதுமட்டும்தான்.

 

ஆனால் புதுமைப்பித்தனின் வேறுசில கதைகளில் மர்மமும் திகிலும் மட்டும் அல்ல குறியீட்டு அர்த்தமும் உண்டு. அந்தவகையான கதைகள் இலக்கியத்தின் வெற்றிகள். நன்னயபட்டன் என்பவன் வரும் கதை ஞாபகம் வருகிறது. இந்தக்கதையில் உள்ள குறியீட்டு அழகு.தான் இதை முக்கியமான கதையாக ஆக்குகிறது. மலையுச்சியில் எரியும் மரம். அந்த ஃபாதரின் கண்ணீர். அரைநூற்றாண்டுக்காத்திருப்பு. ஆனால் அவர் காத்திருந்தது பழிவாங்குவதற்காக அல்ல, பாவமன்னிப்பு அளிப்பதற்காக

 

மகேஷ்

 

 

 

வணக்கம் ஜெ

 

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு புது சிறுகதை. இப்போதெல்லாம் காலை வரை காத்திருக்காமல் இரவு 12 உங்கள் தளம் அப்டேட் செய்தவுடன் ஒரு முறை வாசித்துவிட்டு தூங்க சென்று காலை எழுந்து மீண்டும் வாசிக்கிறேன்.

 

இந்த தொடர் வரிசையில் அங்கி எனக்கு நெருக்கமானதாக படுகிறது. ஆனையில்லா பூனை அங்கி மூன்றுமே பேச்சுவழக்கில் எழுதப்பட்டவை. அது ஒரு வகையில் கதையின் உள்ளே உடனே இழுத்துவிடுகிறது. இவற்றை படித்துக்கொண்டிருக்கையில் தவளையும் ராஜகுமாரனும் கதையின் மொழிக்குள் சட்டென்று நுழையமுடியவில்லை. காடு எனக்கு பிடித்தமான நாவல் ஆகியதற்கு அதன் பேச்சுமொழி முக்கிய காரணம்.

 

மற்றொன்று கவனித்தேன் பேச்சுவழக்கில் கெட்டவார்த்தைகள் பெரும்பாலும் சிரிப்பையே வரவழைக்கின்றன. பேச்சுவழக்கில் கேட்கும்போதே அவை ஒரு வகை நக்கலாக நையாண்டி தன்மையுடனே ஒலிக்கிறது. சிலசமயமே கோபத்தின் வெளிப்பாடாக.

 

அங்கி எட்கர் ஆலன் போவின் சிறுகதை போல துவங்கினாலும் அதன் பிற்பகுதி முழுக்க உங்கள் களமே. காட்டு பாதை இருட்டு மழை யானைகள் கைவிடப்பட்ட சர்ச் மாட்டிக்கொண்ட இருவர் என ஒரு திகில் கதைக்கு தேவையான அனைத்து மூல பொருட்களும் இருந்த போதும் கதை அதையும் தாண்டி வேறொரு திறப்பை அளிக்கிறது. அதுவே உங்கள் எழுத்தின் தனித்துவ அடையாளம்- எல்லா கதைகளிலும் அறம் வரலாறு புராணம் என்பவை அடித்தளமாக இருக்கிறது.

 

கதையின் நடுவே பல இடங்கள் ரசிக்கவைத்தன. எ. கா. இவரு ஃபாதரா ஆனபிறகு கிறுக்காகல்ல. கிறுக்கானபிறகு ஃபாதரா ஆயிருக்காரு.

அவன் சிந்திப்பது தெரிந்தது. இந்திப்பேப்பர் தின்னும் பசு!

“பாலு நாத்தமடிக்குமோ?”

“பின்னே, இந்திக்கு ஒரு கெட்ட வாடை உண்டு பாத்துக்க” என்றேன்

“ஆமா’ என்றான்

குன்றுமேலே தன்னந்தனியாக நின்றிருக்கும் மரம்போன்றவன் பாவி. அவன்மேல் கர்த்தரின் இடிமின்னல் இறங்கும். அவன் நெருப்பாக பற்றி எரிவான்

அப்பாவின் பாவம் மகனுக்குள் நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது. அதை ஒரு மழையிரவில் ஃபாதரிடம் பாவமன்னிப்பு கேட்டு அங்கியை முத்தமிட்டு அணைக்கிறான்.

அது உண்மையிலேயே ஃபாதரின் ஆவியா இல்லை யாரோ ஒரு பைத்தியமா. அவர் கிறுக்கன் அவரிடம் பாவத்தை சொன்னாலும் அவருக்கு புரியாது மன்னிப்பு அளித்துவிடுவார் என தெரிந்தே மன்னிப்பு கேட்டானா.“அவரு ஃபாதருல்லா? ஆசீர்வாதம் செய்யாம இருக்க முடியுமா?”

அந்த கிறுக்கு ஃபாதரின் ஆசிர்வாதம் அவனுக்கு விடுதலை அளித்துவிட்டதா இல்லை முன்னரே அந்த பாவத்தை ஸெபாஸ்டியனிடம் கூறிவிட்டதுனாலேயே அவன் பாரம் குறைந்துவிட்டதா. யோசித்தால் பல தோன்றும்.

ஆனால் இது யோசிக்க கூடிய கதையல்ல வாசித்து உணர்ந்து கடந்து போக வேண்டிய கதை. கடைசி வரி அதையே செய்கிறது. அவனும் அதையே செய்கிறான்.

“வேற ஒரு டீக்கடைய பாருடே… பசிக்குது” என்றேன்

ஸ்ரீராம்

 

வேட்டு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

வேட்டு சிறுகதை ஒரு நாவலாகவே விரிகிறது. நீங்கள் சிறுகதை பற்றி எழுதிய வரையறையை மீறிச் செல்கிறது. நீண்டகாலம். ஒரு முழுமையான வாழ்க்கைச்சூழல். ஆனால் அது எப்படி சிறுகதையாகிறது என்றால் ஒரு சின்ன இடத்திற்குள் ஒருவன் அதைச் சொல்லும்போதுதான். அடர்த்தியான திருப்பங்கள் கொண்ட குறியீட்டுத்தன்மைகொண்ட கதையாக ஆகிவிடுகிறது அது

தேவி

 

அன்புள்ள ஜெ

வேட்டு கதையை எடுத்ததுமே படித்தேன். பத்தே நிமிடம். பரபரப்பான வாசிப்பை அளித்த கதை. துப்பறியும் கதைபோல. அந்தக் கதைசொல்லிகளின் நக்கல்கள் ஒரு நல்ல தொடக்கம். கவுண்டர்களைப்பற்றிய நையாண்டியை ஒரு கவுண்டர் ஆன நான் ரசித்தேன். கவுண்டர்கள் சிறந்தவர்கள் என்று சொல்லப்படும்போது உருக்கமாக ஆமாம் என்று சொல்லும் பழனிக்கவுண்டர் எனக்கு தெரிந்தவர்தான்

அந்தக்கதை ஜானம்மாவைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து பார்வதியைச் சொல்கிறது. ஆனால் சரியாக ஜானம்மா வந்து சேர்ந்துகொள்கிறார். ஜானம்மாவும் அந்த சம்பவங்களில் வெளியே தெரியாமலேயே இருந்திருக்கிறாள்

வேலாயுதன் பாஸ்கரன் இருவரும் ஆண்மையைக்கொண்டு பெண்ணை ஏமாற்றுகிறார்கள். பெண்கள் அந்த ஆண்மையை ஏற்று அடிபணிவதாக நடித்து அவர்களை ஏமாற்றிவிடுகிறார்கள். துப்பாக்கி ஆண்மையின் அடையாளமாகவே கதையில் வருகிறது

 

ராஜ்குமார்

 

 

முந்தைய கட்டுரைஆடகம், கோட்டை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏதேன் [சிறுகதை]