யா தேவி! – கடிதங்கள்-16

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

யாதேவி , சர்வ ஃபூதேஷு இரண்டு கதைகளையும் கடந்த இரண்டு வாரங்களில் வாசித்து ஓரோர் வாரம் மனதில் ஓடவிட்டு களித்திருந்து தொடர்ந்து வாசித்த கதை சக்தி ரூபேண. முதல் இரண்டு கதைகளுக்கும் மாறாக பெரும் உளச்சோர்வை அளித்தது எல்லாவின் முடிவு அவள் காணாமல் போகும் போதே தெரிந்து விட்டது(செய்தி ஏற்கனவே தெரிந்திருந்ததால்) கதையின் முடிவிற்காக தொடர்ந்து படித்தேன். ஆனால் கதையின் முடிவு இன்னும் அதிக கலக்கத்தை அளித்தது. எல்லாவின் பொம்மை புன்னகைக்கையில் கதை முடிகிறது, அந்த புன்னகை கதை இங்கு தொடங்குகிறது என்று சொல்கிறது. அங்கிருந்து பின்னோக்கி வாசிக்கையில் 3 கதைகளும் சேர்ந்து ஒரு நாவலாக மனதில் விரிகிறது.

இங்கே புன்னகைக்கும் அந்த பொம்மையை அவன் சக்தியாக சக்தியின் வடிவமாக கண்டு மீண்டு வர கூடும், ஆனால் அன்னையின் நிஜ உருவம் அதை வெறும் உடலென கண்ட மனிதர்களால் சிதைக்கப்பட்டு கிடக்கிறது. உண்மையில் மனிதர்களுக்கு சிலை அன்னையாக உருவகிக்க படும்போது தான் அன்னையை காண முடிகிறதா?

எல்லா உடலை காட்சி பொருளாக்கி செல்வம் சேர்கிறாள், தன் உடலின் மாதிரிகளை உற்பத்தி செய்து உலகெங்கும் விநியோகிக்கிறாள். ஸ்ரீ மூலம்  தான் அன்னையின் வடிவம் என காண்கிறாள் அல்லது தன்னுள் இருக்கும் அன்னையை கண்டுகொள்கிறாள், மாத்துக்குட்டிக்கு அன்னையென ஆகிறாள் பின் சுற்றிலும் அனைவரும் அன்னையென அவளை காண்கிறார்கள். ராமன் குட்டி அவள் கன்யாகுமரி தேவி என பாறை மேல் நின்று கொண்டிருப்பதை நாம் காண்போம் என்கிறான். இப்படியாக தன்னில் சக்தி வடிவம் இருப்பதாய் கண்டு கொண்ட எல்லாவை கோவில் சிலையில் இருக்கும் உயிரற்ற தன்மை தொந்தரவு செய்கிறது.

“அது மிகமிகச் சிறந்த உடல்… இலட்சிய உடல். அதுதான் கற்பிப்பதற்கு மிகச்சிறந்தது. எல்லா அடையாளங்களையும் அதைக்கொண்டே சொல்லமுடியும். ஒவ்வொரு நரம்பையும் அதைக்கொண்டு காட்டிவிடமுடியும்”

நான் பெருமூச்சுவிட்டேன்

இது இக்கதையின் முக்கிய தருணம், இங்கே தான் கதை தடம் மாறுகிறது இந்திய மனதை கேள்விக்குள்ளாக்குகிறது, நாம் பெண் சக்தி வடிவம் உலகமெங்கும் நிறைந்திருக்கும் ஆற்றல் வடிவம் இன்னும் இன்னும் பூஜிக்கும் பெண்ணை வெறும் உடலாய் காணும் இன்னொரு இந்திய முகம் வெளிவந்து வெட்கி தலைகுனிகிறது. ஸ்ரீ இந்திய தத்துவங்களில் பெண் கொண்டாடப்படுவதை முதல் கதையில் சொல்கிறான். அவன் அதெற்கென பயிற்சி எடுத்து கொண்டவன் பெண்களை அழகை ஆற்றல் வடிவாய் மட்டுமே ரசிக்க இந்திய மரபில் பயின்றவன். ஆனால் மாத்துக்குட்டி வடிவில் அவன் வேறு எதையோ தேடுகிறான்,

“வேறுவகையில்?”

‘வேறுவகையில் என்றால்?”

“முதலில் வந்ததுபோல?”

“ஆ!” என்றான். பின்னர் “இல்லை” என்றான்.

இங்கே ஸ்ரீ தன்னுள் இருக்கும் மனித இச்சையை வெளிக்காட்டுகிறான். இந்நிலையில் எல்லா தன பொம்மை உடலை பாடம் எடுக்க பயன்படுத்த சொல்கையில் திணறுகிறான். மரக்கட்டை பொம்மை பாதுகாப்பானதாகவும் உயிர்தன்மை கொண்ட பொம்மையின் பாதுகாப்பின்மையும் சொல்கிறான். ஆனால் எல்லாவால் புரிந்து கொள்ள முடியவில்லை, அவள் குணமாகிவிட்டாள்[purified]. இந்நேரம் கிட்டத்தட்ட ஒரு சராசரி இந்திய மனம் ஸ்ரீயில் வெளிப்படுகிறது, அக்கறை கொண்டு எல்லா தனியாக இரவில் வெளி செல்வதை எச்சரிக்கிறான். அவள் கடைசி நாள் என்று கேட்டுகொண்டு போகிறாள்.

இதற்க்கு மேல் கதை இந்திய சராசரி மனிதர்களை தோலுரிக்கிறது, உளதத்தளிப்பை குழப்பத்தை சோர்வை அளிக்கிறது.

“வெறிபிடித்து இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் கஞ்சாவெறி இப்படிச் செய்ய வைக்கும். அவர்களைப் பார்த்துக் குரைத்த ஒரு நாயை இதைப்போல அடித்து கொன்று கல்லைவீசி நசுக்கி சிதைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களால் நிறுத்தவே முடியவில்லை. வெறி ஏறிக்கொண்டே போயிற்று. அது செத்துவிட்டதுகூட அவர்கள் மூளைக்குள் செல்லவில்லை”

இங்கே நாயின் குரைத்தல் அவர்களை சீண்டியிருக்கலாம் எனில் எல்லா அவர்களை எங்கனம் சீண்டினாள், அவர்களை எந்த வெறி அவ்வாறு செய்ய தூண்டியது? காமத்தால் தத்தளிப்பவர்களுக்கு தன்னுடைய நகலை தந்து  எல்லா அவர்களை ஆற்றுபவள் எப்படி இவர்களை சீண்டி இருக்க முடியும், இல்லை அவளை கொன்றது இரவில் இந்திய மனதில் குடியேறும் பேய்.
அன்புக்கும் உடல் தேவைக்குமாக உலகெங்கும் பல வடிவங்களில் நிறைந்திருக்கும் அன்னையை வெறும் சதை என மிருகங்களுக்கு இரையாகவா இந்தியா வந்தாள் எல்லா ? பெண்ணை பூஜிக்க கற்று கொடுத்த இந்திய பண்பாடு பூஜிப்பவர்கள் அடிப்படை மனித/மிருக உணர்வுகளை கணக்கில் கொள்ளவில்லையோ ? இன்னும் இன்னும் கேள்விகள் ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு விதத்தில் கதையை அணுக செய்கிறது. குழம்பி தெளிந்து குழம்பி விரிகிறது கதை.

நன்றி,
அருள்.

அன்புள்ள ஜெ
யாதெவி முதலான மூன்று கதைகளையும் ஒரே குறுநாவலாக வாசிக்கலாம் என்று தோன்றியது. வெவ்வேறு கோணங்களில் எழுதப்பட்டவை என்று தோன்றினாலும் அக்கதைகள் படிப்படியாக ஒரே போக்கில் விரிந்து வந்தன
முதலில் எல்லா ஒரு மாயைப்பெருக்காக தென்படுகிறாள். அதை ஸ்ரீதரன் கண்டுகொள்கிறான். அதன்பின் அவள் அன்னையாகிறாள். அதைக் காண்பவன் மாத்தன். அதன்பின் அவளை வெறும் தசையாக காண்கிறார்கள் சிலர். அவள் தன் மாயை வழியாக தப்பித்த்துக்கொள்கிறாள்
பலவகையாகச் சிந்திக்கவைத்த அற்புதமான கதை
கிங்ஸ்லின் டேவிட்
முந்தைய கட்டுரைவேட்டு, துளி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆடகம்,கோட்டை -கடிதங்கள்