யா தேவி! [சிறுகதை]
சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
சக்தி ரூபேண! [சிறுகதை]
அன்புடன் ஆசிரியருக்கு
மூன்று கதைகளையும் தொடர்ந்து வாசித்தேன். ஆகவே இவற்றை ஒரே கதையாக கருதலாம் என்று எண்ணுகிறேன். முதலில் இக்கதையில் ஒரு பாலியல் பட நடிகை இருக்கிறார். தமிழ் கதைகளில் நிறைய பாலியல் தொழிலாளிகள் வந்திருக்கின்றனர். அவர்களை மனிதாபிமானத்துடனும் புரட்சிகரமாகவும் கரிசனத்துடனும் ஏக்கத்துடனும் எனப் பல வகைகளில் தமிழ் இலக்கியம் எதிர்கொண்டுவிட்டது. ஆனால் எல்லா பாலியல் தொழிலாளி அல்ல. பாலியல் திரைப்படங்களில் நடித்தவள். கோடிக்கணக்கானவர்களின் பகற்கனவுக்கு தீனி போட்டவள்.
சமீபத்தில் ஒரு பிரபலமான பாலியல் நடிகையின் ஒரு சிறு பேட்டியைக் காண நேர்ந்தது. அவர் தன்னை மிகச் சுதந்திரமான பெண்ணாக முன் வைக்கிறார். எந்த ஆணுடனும் பெண்ணுடனும் எவ்வகையிலான பால் புதுமையினருடனும் தன்னால் உறவு கொள்ள இயலும் என்கிறார். தன் சுதந்திரத்தை தான் கொண்டாடுவதாகக் கூறுகிறார். தன்னுடைய பதின்பருவத்திலிருந்து பல ஆண்களுடன் உறவு கொண்டதாகவும் தொடக்கத்தில் அச்சமூட்டுவதாக இருந்த உடலுறவு அனுபவம் போகப்போக கிளர்ச்சி ஊட்டுவதாக மாறியதாகவும் அதனாலேயே தானொரு பாலியல் நடிகையாக நீடிப்பதாகவும் கூறினார். எனக்கு அவர் பேச்சு ஒரு பாவனையாகப்பட்டது. அவரொரு சமூகப் புறனடையாளர். அந்த புறனடையாளத்தையே அவர் தன் அடையாளமாக மாற்றிக் கொள்ள முனைகிறார்.ஆனால் புறனடையாளங்களில் நம்மால் வெகுகாலம் நீடித்திருக்க இயலாது. அது முழுமையாக சமூகத்தைவிட்டு விலகிய யோகிகளுக்கானது. மற்றபடி சாமான்யர்கள் அத்தகைய ஒரு அடையாளத்தை நடிக்கலாம்.
எல்லா அப்படியான ஒரு அடையாளத்தையே நடிக்கிறாள். அதனாலேயே எல்லாவின் கனவில் பெரிய கருப்பு புழுக்கள் வருகின்றன. ஸ்ரீதரன் போன்ற ஒருவனை எல்லா எதிர்பார்த்திருக்கவில்லை. தன்னால் எவ்வகையிலும் சீண்டப்பட முடியாதவனாக ஸ்ரீதரன் இருக்கிறான் என்பதே எல்லாவை மீட்கிறது. ஸ்ரீதரன் அப்படி இருப்பதற்கான காரணங்கள் மரபில் இருக்கின்றன. அவன் தன் காமத்தை மேன்மையாக்கம் செய்து உயர்நிலைக்கு கொண்டு சென்றுவிட்டவன். அப்படியான ஒருவன் இருக்கிறான் என்பதும் அவன் சொல்லும் யாதேவி சர்வஃபூதேஷு சக்திரூபேண என்பதும் அவளுக்குப் புதிது. அவள் அறிந்திராதது.
இந்த எல்லாவையே மாத்தன் சந்திக்கிறான். மாத்தனின் கள்ளமின்மையை எல்லாவால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஸ்ரீதரன் எல்லாவின் அந்த மாற்றத்தை முதலில் ஏற்கவில்லை. முதலில் அதீத நாகரிகத்துடன் நடந்து கொள்கிறவன் மாத்தனுக்கும் எல்லாவுக்குமான உறவை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறான். இத்தகைய மெல்லிய மன இழைகளின் கதை ஒருபுறம் என்றால் மறுபுறத்தில் பாலியல் கற்பனையை முன்னிறுத்தி நடத்தப்படும் சதை வணிகம் என்பதைக் கோடிடுகிறது. எல்லா என்ற பெண்ணின் உடல் மென்மை, குரலின் கிரக்கம் எல்லாம் ஒரு வணிகப்பொருளாக மாற்றப்பட்டு கோடிக்கணக்கில் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவை இரண்டும் சந்தித்துக் கொள்ளும் புள்ளியாகவே அந்த கொரியர் ஸ்ரீதரனுக்கு வருகிறது. விலையுயர்ந்த அந்த பொருளினைப் பெற பத்து ரூபாய்க்கு ஸ்ரீதரன் பேரம் பேசுவது ஒரு நல்ல முரண். ஸ்ரீதரன் மாத்தனை எல்லாவை நோக்கித் தள்ளுகிறான். அதாவது அவளுக்கு சதையின் தொடர்பில்லாத வேறொரு உலகத்தை – மனிதர்கள் கூடி வாழ்வது, பிரியப்படுவது – காண்பிக்கிறான். எல்லா கூடிவாழ இயலாத மனிதர்களின் இச்சையை மட்டும் தீர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு பொருளை அவனுக்குத் தருகிறாள்.
வெவ்வேறு வகையான நியாயங்கள். இறுதியில் எல்லா உயிர் சிதைந்து இறக்கும் இடம் நுட்பமானது. ஸ்ரீதரன் எல்லாவிடம் அவள் தனியாகச் செல்வதன் ஆபத்தை சூசகமாகச் சொல்கிறான். அவன் அதை நேரடியாகச் சொல்லிவிட முடியாது. அவனை தடுப்பது எது என்ற கேள்வி இக்கதையில் எனக்கு முக்கியமானதாகப்பட்டது.
மேலும் கதைத்தலைப்பு. யாதேவி சர்வஃபூதேஷு சக்திரூபேண. இத்தலைப்பு கதைக்கு மற்றொரு ஆழத்தையும் அதேநேரம் கதைப்போக்கு இத்தலைப்பின் மீதே விமர்சனமாகவும் தொனிக்கிறது.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்