துளி [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களது வலைதளத்தில் வரும் சிறுகதைகளை ஆவலுடன் ரசித்து வாசித்து வருகிறேன். இதுவரை வந்த சிறுகதைகளில் “துளி” ஆக சிறந்தது. தங்களது யானை குறித்த வர்ணணைகளுக்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவை யானையை கண் முன் நிறுத்தும் பரவசத்தை அளிப்பவை. நான் தங்களின் பல கதைகளில் அதை ரசித்ததுண்டு. யானைகள், கோயில் திருவிழா, பால்ய கால நண்பர்கள் – கலந்து கொடுக்கப்பட்ட மனம் உவக்கும் ஒரு சித்திரம். மேலும் பல கதைகளை எதிர்பார்கிறேன்.
நலமுடன் வாழ்க!
அன்புடன்,
பா.ரவிச்சந்திரன்
அன்புள்ள ஜெ,
துளி கதையை வெடித்துச் சிரித்தபடி வாசித்தேன். இத்தகைய கதைகளில் உரையாடல்கள் தான் அழகை அளிக்கின்றன. சண்டை போடுபவர்கள் ஒரு ஆஃப் அடித்தால் கட்டித்தழுவி பிள்ளை பெறுபவர்கள் போல ஆகிவிடுவார்கள் அல்லவா என்ற வரியில் சிரித்தபோது என் மனைவி வந்து என்ன என்ன என்று கேட்டாள்.
கரடிநாயரின் பால்யகால நண்பர்கள் அவருடன் மூன்றாம் வகுப்பில் நிகழ்ந்த பிரச்சினையில் தொடங்கி டீனேஜ் சாகசங்கள் வரை சண்டைபோடுகிறார்கள். ஆனால் அவர்களிடையே எப்படி ஒற்றுமை வருகிறது? மழைநீரும் மலைநீரும் கலந்ததுபோல் இருக்கிறது இரண்டு யானைகளும் இணைந்திருப்பது என்று சொல்லிக்கேட்டதுமே கரடி மனம் மலர்ந்துவிடுகிறார். ஏனென்றால் அவரும் அதே மனநிலையில் இருக்கிறார். அந்த ஒற்றை மனநிலையால்தான் அவர்களிடையே அந்த ஆழமான நட்பு நிலவுகிறது
சுந்தர்ராஜ்
தவளையும் இளவரசனும் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
தவளையும் இளவரசனும் கதையைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். உலகில் எழுதப்பட்ட பெரும்பாலான பெரிய காதல்கதைகள் எல்லாமே ஒருவகை பொருந்தா ஜோடிகள் நடுவே வந்த காதல்கள்தான். அரசகுமாரிக்கும் அடிமைக்கும் நடுவே காதல். கிராமத்தானுக்கும் பணக்காரனுக்கும் நடுவே காதல்
பி.ஜி.வோடவுஸ் ஒரு கட்டுரையில் இந்தமாதிரி சுத்தமாக சம்பந்தமே இல்லாதவர்கள் காதலிப்பதாக புனைவில் எழுதுவதை கேலிசெய்து எழுதியிருக்கிறார். அது நினைவுக்கு வந்தது. அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் என்ன ஆகும்? சண்டைதான். ஆனால் காதல் அப்படித்தான் வரும்
பாரதி ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் கோபாலய்யங்கார் ஒரு இடையப்பெண்ணை பிரம்மசமாஜம் வழியாக மணந்துகொள்கிறார். அவர்கள் பின்னாடி என்னவாக ஆனார்கள் என்று கற்பனைசெய்து புதுமைப்பித்தன் கோபாலய்யங்காரின் மனைவி என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். இந்தக்கதையுடன் சம்பந்தப்படுத்தி வாசிக்கவேண்டிய கதை
எம்.சந்தானம்
அன்புள்ள ஜெ
தவளையும் இளவரசனும் ஒரு வேடிக்கையான ஆனால் அழகான கதை. உரையாடல்கள் வழியாகவே கதை செல்வதனால் நாம் அவர்களுடன் இருந்துகொண்டிருக்கும் உணர்வை அடையமுடிந்தது.
அவர்கள் இருவரும் கொஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள். உரையாடல் வழியாகவே அந்தக் கொஞ்சலை எழுதமுடியும். ஆகவே நல்ல காதல்கதை என்பது உரையாடல்கள் வழியாகவே நிகழமுடியும் என்று நினைக்கிறேன்
அந்தக்கதையில் அவர்கள் கடைசியாக முத்தமிட்டுக்கொள்கிறார்கள். ஆனால் கதைமுழுக்க சொற்களால் முத்தமிட்டபடியே இருக்கிறார்கள்
முத்து சுகுமார்