வேட்டு, துளி -கடிதங்கள்

துளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

நலமா

 

“துளி’ சிறுகதையை வாசித்தேன் யானையை பற்றிய தொடர்ச்சியான விவரணைகளையும் கூர்ந்த உங்களின் aவதானிப்புகளையும்,நினைவின் அடுக்குகளில் சேகரமாகிய எண்ணற்ற வாழ்வனுபவங்களை என்னை போன்ற வாசகனுக்கு கொடையாக அளிக்கின்றீர்கள். மகிழ்ச்சி

 

தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் சிறுகதைகள் குறிப்பாக என்னை போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு (தற்போதய சூழ்நிலையில் ) மனஅழுத்தத்தை குறைத்து மாற்றுசிந்தனைக்கு வழிகாட்டுகிறது “ஆனையில்லா” கதையெல்லாம் இரவெல்லாம் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தேன்.

 

இப்படி சொல்லிக்கொண்டேன் .தலைவா நீங்க இப்ப Full Formல இருக்கிங்க

 

என்றென்றும்

அன்புடன்

சக்தி

 

 

மதிப்பிற்குரிய ஜெ.

 

 

போர்க்களத்தில் மத்தகம் உரசி நின்ற பேரரசன் ஒரு தவளையை மிதித்தற்காக  ஒரு வாரம் கவலையுறுவது என்பது ஆச்சரியமாக உள்ளது. மனிதர்கள் தங்கள் சிறுவயதை நினைவு கூறும் போது நம்மைவிட அதிக நுண்ணறிவு கொண்ட யானை நினைவுகூறாதா என்ன.  இக்கதை வாசிக்கும் போது யானை டாக்டர் கதை நினைவெழுவதை தவிர்க்க இயலாது.

 

நீங்கள் ஒரு உரையில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானை தண்ணீரில் அடித்து வரப்பட்ட சிறு பூவை கண்டு பயந்து கொள்ளும்.

 

இன்று யானைக்கு நிகழ்வதை எல்லாம் நினைக்கும்போது சிந்தனைகள் எங்கெங்கோ சென்று முட்டி உடைகிறது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கொந்தளிப்பான மன நிலையை உருவாக்கிய கதை.

 

நன்றி

 

ஏழுமலை

 

அன்புள்ள ஜெ

துளி ஒரு அருமையான கதை. இதுவரை வந்த கதைகளில் இதுதான் எனக்கு மிகமிகப்பிடித்த கதை. ஒரு மொத்த கிராமமும் கதைக்குள் வருகிறது. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் குணச்சித்திரம் தெளிவாக வரையறைசெய்யப்பட்டிருக்கிறது. ஒரு சில வரிகள் வழியாகவே அது வெளிப்படுகிறது.

 

உச்சகட்ட நகைச்சுவை தூள்பறக்கும் சண்டை நடுவே குருவி பறப்பதுபோல பெருவட்டரின் மனைவி வந்து காசு வாங்கிச் செல்வது. அவர்களுக்கெல்லாம் இது ஒரு பொருட்டே அல்ல. யானைகளை கையெழுத்துபோட்டு சொந்தமாக்கிக்கொள்ளும் நாய்.

 

மொத்த கதையிலும் நிதானமானவன், அன்பின் தூதுவன் கருப்பன். ஒரு துளி போதும் என்பதுதான் கதையின் மையம். ஒரு துளி நல்லெண்ணம். ஒரு துளி அன்பு. கருப்பன் ஒரு தேவதூதன் போல

 

மகாதேவன்

 

வேட்டு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

வேட்டு கதையின் மையம் முதல் வரியிலேயே வந்துவிடுகிறது. வாழ்க்கையில் காமம் தவிர எதற்கும் பெரிய பொருள் இல்லை, அதை வேண்டுமென்றால் விரித்துக்கொள்ளலாம் என்ற ஔசேப்பச்சனின் கருத்து

 

அங்கிருந்து விரித்துக்கொண்டே செல்லப்படும் கதைக்கு பல தளங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. முக்கியமானது சர்வைவல். அதுதான் வாழ்க்கையின் அர்த்தம் என்று ஒருபக்கம் கதை சொல்கிறது. ஜானம்மா பார்வதி இருவரின் போராட்டமும் எவரிடமும் வெல்லவோ எவரையும் பயன்படுத்திக்கொள்ளவோ அல்ல. வாழ்வதற்காக மட்டும்தான்

 

அவர்க்ள் எவரையும் ஏமாற்றவில்லை. அவர்களை ஏமாற்றுபவர்களை ஜெயிக்கிறார்கள் அவ்வளவுதான். அது அவர்க்ளால் செய்யபப்ட்டே ஆகவேண்டும்

 

எனக்கு அந்தக்கதையில் முக்கியமானதாகப் பட்டது பார்வதி பாஸ்கரனுடன் உறவுகொள்ளும் இடம். புலிக்கூண்டு. இரு புலிகளுக்கு நடுவே. ஒரு திரில்லான அனுபவம்தான். இருபுலிகளுக்கு நடுவே என்பதே ஒரு நல்ல படிமமாக இருந்தது

 

 

செந்தில்குமார்

 

 

ஜெ. வணக்கம்

 

வேட்டு கதை படித்தேன். தமிழில் வேட்டு என்பது இருபொருள் தரக்கூடியது. ஒருவரை மற்றொருவர் ஏமாற்றுவதை வேட்டு வைத்தல் என்பார்கள். வேலாயுதம் ஆர்மீனியன் ட்ரிக் மீலம் ரசிகர்களை ஏமாற்றினான். பாஸ்கரன் பார்வதியை அடைய அதையே பயன்படுத்தி வேட்டு வைத்தான். பார்வதிக்குத் தெரியாது என்று பாஸ்கரன் நினைத்துக் கொண்டிருக்க அவளோ முன்னமே அந்த ட்ரிக் தெரிந்திருந்தும் அறியாததது போல பாஸ்கரனுக்கே வேட்டு வைக்கிறாள். பார்வதிக்கு விடுதலை வாங்கிக்கொடுக்க ஜானம்மா பாஸ்கரன் கையைப் பிடிக்காமல் வேட்டு வைத்துக் கீழே விழவைக்கிறாள்.

 

கதையைப் படித்து முடித்ததும் சர்க்கஸ்காரர்களின் வாழ்வு மீது பரிதாபம்தான் தோன்றியது. புலி வாலைப் பிடித்து விட்டதுபோல்தான் அவர்களது வாழ்க்கை. பாலியல் சீண்டல்கள், வேறு தொழில் தெரியாமை, கேட்க ஆளில்லாத அனாதை நிலைமை எல்லாமே அவர்களுக்கு எதிராக நிற்கின்றன. ஆனாலும் அது ஒரு போதைதான். தம்மை எல்லாரும் ரசிக்கிறார்கள் எனும் நினைப்புதான் அது. “பார்ப்பவர்கள் கூச்சலிடும்படி ஏதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தோன்றுவது அதனால்தானே?

 

சரி, ஆர்மீனியன் ட்ரிக் ரகசியத்தை பாஸ்கரன் எப்படி அறிந்து கொண்டான் என்பதற்குக் கதையில் விடையில்லை வாசகனின் ஊகங்களுக்கு ஜெ. விட்டுவிடுகிறார். ஆனால் பார்வதியைப் பார்த்துத் தெரிந்து கொண்டானோ என்னும் வரியும், அவள் அவள் அறியாமலேயே ஆவ்ளுக்கு அழைப்பு விடுத்தது என்னும் வரியும் ஓரளவிற்கு நமக்கு விடை தருகின்றன

 

வளவ துரையன்.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15
அடுத்த கட்டுரையா தேவி! – கடிதங்கள்-16