தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

தனிமையில் இருப்பது எனக்கு ஒன்றும் புதியது அல்ல. தனிமையிலிருப்பதை கொண்டாட்டமாகவே பார்க்கும் மனநிலையும் உண்டு. பெரும்பாலான நாட்களில் வீட்டில் இருக்கையில் தனிமைதான். மாடியில் என் எழுத்து, துயில் அறைகள். சாப்பாட்டுக்கு கீழே வருவேன். அப்போது பிள்ளைகளிடம் அருண்மொழியிடமும் பேசிக்கொள்வேன்.

ஆனால் இப்படி வந்தமையும் வலுக்கட்டாயமான தனிமை, அதை நாம் அறிந்து சூடிக்கொள்வதனால், சற்று எடைமிக்கதுதான். அதை கொஞ்சமேனும் வகுத்துக்கொள்ளாமல் இருந்தால் இயல்பாக எதிர்கொள்வது கடினம். ஆகவே நெறிகள், வழக்கங்கள் சிலவற்றை உருவாக்கிக்கொண்டேன். நடைமுறையிலிருந்து கண்டுகொண்டு உருவாக்கியது

ஒன்று, வீட்டில் தொடர்ந்து கொரோனோ பற்றியே வாசிப்பது, பேசுவது, விவாதிப்பது, செய்திகளை கவனிப்பது ஆகியவற்றை தவிர்த்தேன். தெரிந்துகொள்ளவேண்டியவற்றை தெரிந்துகொண்டாயிற்று. இனி நுண்தகவல்களால் எந்த பயனும் இல்லை. அரசியல்கட்சிக்காரர்கள் காழ்ப்பே உருவனவர்கள். அவர்கள் உருவாக்கும் எதிர்மறை மனநிலை இந்தத் தனிமையில் மிகப்பெரிய நோய்போல வந்து சூழ்ந்து கொள்ளக்கூடியது.

அவர்கள் இந்த தனிமையில் நாம் அடையும் அனைத்து அதிருப்திகளையும் சோர்வுகளையும் அரசுக்கு எதிராக அல்லது தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக திருப்பமுடியுமா என்று பார்க்கிறார்கள். அதில் எல்லா தரப்பும் சமமான வெறியுடன் இருக்கின்றன. அவர்களின் வெறிக்கு நாம் நம்முடைய மன அமைதியை பலிகொடுக்கவேண்டாம்

ஆகவே வாட்ஸப் செய்திகள், தொலைக்காட்சி விவாதங்கள் ஆகியவற்றை முற்றாகவே தவிர்க்கலாம். நாளிதழ்களே தேவையில்லை. இணையத்திலேயேகூட இனிய, வசதியான தொடர்புகள் போதும். அரசியல்காழ்ப்பாளர்கள், மதக்காழ்ப்பாளர்களை முழுமையாக கொரோனோ வைரஸைவிட தீவிரமாக தவிர்த்துவிடுகிறேன்.

சொந்தக்காரர்களின் ‘நலம்விசாரிப்பு’ ஒரு பெரிய தொந்தரவு. ஓரிரு சொற்களில் முடித்துக்கொள்ளுங்கள். சோர்வுறச் செய்யும்படி பேசுபவர்கள் நம்மை இருட்டுக்குள் இழுத்துவிடுகிறார்கள். மரியாதையாக அவர்களை ஒதுக்கியே ஆகவேண்டும்.

பேச்சில் முழுமையாகவே கொரோனோ பற்றிய குறிப்பை தவிர்க்கமுடியாதுதான். கூடுமானவரை முயலவேண்டும். பேச்சு அங்கே சென்றால் உடனே கவனமாகத் திசைதிருப்பிக் கொண்டுவந்துவிடவேண்டும். இனிய நினைவுகள், இனிய பேச்சுக்கள், இனிய விளையாட்டுத்தனம். அதுவே தேவை.

இசை, சினிமா, இலக்கியம் ஆகியவை துணைநின்றிருக்கவேண்டும். இந்நாட்களில் கதைகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லாமே அடிப்படையில் வாழ்வைக் கொண்டாடும் கதைகள். அக்கதைகளை குடும்பத்துடன் வாசிக்கிறோம். கதையில் இல்லாத நினைவுகளும் தொடர்ச்சிகளும் பேச்சில் உருவாகி வருகின்றன. என் அப்பா இந்த நாட்களில் அப்படி ஒர் ஒளிமிக்க வடிவாக என் குழந்தைகள் முன் என் பேச்சுவழியாக துலங்கி வருகிறார். கண்ணீர்வரச்  சிரித்து குப்புற விழுகிறார்கள். எழுத்தாளனின் தந்தைக்குச் சாவே இல்லை.

வாசிக்கலாம், எழுதலாம், சினிமா பார்க்கலாம். ஆனால் அவை உற்சாகமானவையாக இருக்கவேண்டும். நெகிழ்வை உருவாக்குபவையாக, கொண்டாட்டமானவையாக. நான் என் வழக்கப்படி காமிக்ஸ்களை வாசித்து தள்ளுகிறேன். அவ்வப்போது பழைய பிரிட்டிஷ் இலக்கியம். கூடவே மலையாள தமிழ் எழுத்துக்கள். பழைய மாஸ்டர்களை ஒருமுறை சென்று பார்க்க ஒரு சந்தர்ப்பம்,

ஆனால் முழுநேரமும் குடும்பம் ஒன்றாக இருக்கக்கூடாது. ஒருநாளில் இவ்வளவு என வகுக்கப்பட்ட நேரத்தை மட்டுமே கூடிச் செலவிடவேண்டும். அது கொண்டாட்டமானதாக இருக்கவேண்டும். மற்றபடி ஒவ்வொருவருக்கும் அவரவர் பொழுதுதான் இருக்கவேண்டும். ஒருவரோடொருவர் படிந்துகொள்ள தொடங்கினால், ஒருவரை ஒருவர் ஆட்சி செய்ய ஆரம்பிப்போம். சிலநாட்களிலேயே சலித்துவிடும். சண்டைகளைக் கொண்டுவரும்

ஒரு காரணத்தாலும் ஒருவரை ஒருவர் கண்டிப்பது, குறைகூறுவது, எரிச்சல்படுவது கூடாது. அதை மிகக் கண்டிப்பாகவே விலக்கியிருக்கிறேன். எந்தக்காரணத்தின் பொருட்டும். அது பெருங்குற்றம். அப்படிச் செய்பவர் அதற்கு தலைபோகும் காரணத்தையே சொன்னாலும் ஒரு வீட்டுக்குள் உளநிலையை முழுமையாகவே சிதைக்கிறார். தன் மனநிலையையும் குடும்ப மனநிலையையும் கசப்பாக்கிக் கொள்கிறார். தனிமை அக்கசப்பைப் பெருக்கும்.

நம் குடும்பங்களில் அது இயல்பாக நிகழத்தான் செய்யும், ஏனென்றால் இது ஒரு விசேஷநிலை என பலர் உணர்வதில்லை. குறிப்பாகப் பெண்கள். அவர்கள் சிடுசிடுப்பாகப் பேசுவதுதான் கண்டிப்பாகவும் பொறுப்பாகவும் இருப்பது என்றும், தன்னிரக்கம் கொண்டிருப்பதே குடும்பத்தின் அன்பை கோரும் மனநிலை என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் அன்பாகவும் கறாராகவும் சொல்லிப் புரியவைக்கத்தான் வேண்டும் – இது உறவினர் வீட்டு நிலைமையில் இருந்து அடைந்த மெய்ஞானம்.

திறந்தவெளியில் கொஞ்சமேனும் இருக்கமுடிந்தால் நல்வாய்ப்பு. குறிப்பாக மொட்டைமாடி ஒரு பெரும் பரிசு. அதை வீணாக்கவேண்டாம். எனக்கு அது அத்தனை இனிதாக ஆகிவிட்டிருக்கிறது. அங்கே மாலையையும் காலையையும் செலவிட்டால் நாள்முழுக்க மூடியிருக்கும் உணர்வு ஏற்படாது என் வீட்டு மொட்டைமாடியில் நின்றால் ரயில்பாதைக்கு அப்பால் பச்சை பெருகிக்கிடக்கும் சோழர்கால ஏரி இருக்கிறது. அது ஓர் அழகிய காட்சி.

[ஏரி, சோழர் வாழ்க}

இரண்டுநாட்களிலேயே சிறைமனநிலை உருவாவதற்கு நாட்கள் ஒன்றாக உருகி ஒட்டிவிட்டிருப்பதே காரணம். ஏனென்றால் நாம் வேலையைக் கொண்டே நாட்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு நாமே ஆணையிட்டுக்கொண்டு சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்த்தால் நாட்கள் ஓர் அழகிய வடிவுக்கு வந்துவிடுகின்றன. நான் பார்க்கிறேன்.

கொஞ்சமேனும் வேலைகளை செய்யவேண்டும். செடிகளுக்கு நீர்விடுவது, பாத்திரம் கழுவுவது என எதையாவது செய்கிறேன். அது ஒரு இயல்புநிலையை அளிக்கிறது.

நான் வீட்டில் இருந்தால் வாரமொருமுறையே சவரம்செய்துகொள்வேன். ஆனால் இப்போது தினமும் சவரம் செய்கிறேன். சவரம் செய்யாத முகம் சோர்வை காட்டுகிறது. நம் முகத்தைப் பார்ப்பவர்களிடம் தேவையற்ற சோர்வை பகிர்ந்துகொள்கிறது.

இது ஒரு நல்லகாலகட்டம். பின்னாளில் நாம் உற்சாகமாக நினைவுகூர்ந்து பேசிக்கொள்ளும் விஷயங்களால் ஆனது. இதை ரசிப்போம் என்று நமக்குநாமே சொல்லிக்கொள்ளவேண்டியதுதான் இன்றைய தேவை

சோர்வாக இருப்பது உண்மையில் ஒரு சுயதெரிவு. பெரும்பாலானவர்கள் அதை வலிந்து சூடிக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியாக இருப்பதும் கொண்டாடுவதும் சுயதெரிவுதான். நான் அந்த தெரிவை செய்துகொண்டு முப்பதாண்டுகளாகின்றன. ஒவ்வொருநாளும் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறேன். இப்போதும் அப்படியே.

துளி [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

தனிமையின் புனைவுக் களியாட்டு

புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

 

முந்தைய கட்டுரைவிலங்கு [சிறுகதை]
அடுத்த கட்டுரைஅங்காடித் தெரு பத்தாண்டுகள்