வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஆர்.எம்.வி.எஸ்.தோட்டான் தலையைச் சுழற்றியபடி மிக மெல்ல உள்ளே வந்தார். எங்கள் ஸ்விட்ச் ரூமை அடைய மூன்று அறைகளைக் கடக்கவேண்டும். ஒவ்வொரு வாசலைக் கடந்ததும் ஒருகணம் நின்றார். ’சரி’ என தலையசைத்தபின் மீண்டும் நடந்தார். ஸ்விட்ச் ரூமை அடைந்ததும் குடையை வழக்கமான கொக்கியில் மாட்டினார். அதன் நேர்கீழே பையை வைத்தார். அப்படியே வெற்றுச் சுவரைப் பார்த்தபடி சற்றுநேரம் நின்றார்.

சுவிட்ச் ரூமில் ஸ்விட்ச் பேனல்களில் அமர்ந்திருந்த டெலிஃபோன் ஆப்பரேட்டர்கள் எட்டுபேரும் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் சிலசமயம் ஒருமணி நேரம் கூட அப்படி நிற்பதுண்டு. அன்றாடம் நடப்பது. ஆனாலும் அதை பார்க்கையில் ஒரு வேடிக்கை இருந்தது. ஷீலாவும் கீதாவும் கண்களால் என்னை பார்த்து சிரித்தனர். டி.எம்.ராஜன் புருவத்தை தூக்கினான்.

ஆனால் தோட்டான் உடனே திரும்பிவிட்டார். நாற்காலியை இழுத்து மிக நேராக போட்டார். அது மிகச் சரியாக இருக்கிறதா என இருமுறை சரிபார்த்தபின் மிகமிக கவனமாக அமர்ந்தார். பெருமூச்சுவிட்டபின் எங்களைப் பார்த்தார்.

நான் “குட்மார்னிங் தோட்டானே” என்றேன்.

“எஸ். குட்மார்னிங்” என்றார் தோட்டான் அவர் எதைச்சொன்னாலும் பதறியடித்துச் சொல்வதுபோல் இருக்கும்.

ஷீலா சிரிப்புடன் “குட்மார்னிங் சார்” என்றாள்.

பதற்றமாக “குட்மார்னிங்” என்று அவர் சொன்னார். எங்கள் ரூம் சூப்பர்வைசர் அவர்தான். சீனியர், வேறெங்கும் அவரை அமர்த்தமுடியாது. சூப்பர்வைசர் பொதுவாக எதுவுமே செய்ய வேண்டியதில்லை. தோட்டானைப் பொறுத்தவரை அவர் எதுவுமே செய்யாமலிருந்தாலே போதும். ஆனால் அவர் அவ்வாறு இருப்பதில்லை.

தோட்டான் மினிட்ஸ் புக்கை எடுத்து எச்சில் தொட்டு புரட்டினார். புதிய பக்கத்தை எடுத்து மேலே எழுதப்பட்டிருப்பதை நோக்கினார். அதன்கீழே தன் பெயரை எழுதி பணிநுழைந்த நேரத்தையும் பதிவிட்டு கையெழுத்திட்டார். மடித்து அப்பால் வைத்தார். அதன்மேல் பேனாவை வைத்துவிட்டு ஃபோனை எடுத்தார். “ஸீரோ கொடு” என்றார்.

நான் ”தோட்டானே, ஸீரோ எல்லாம் போயாச்சு” என்றேன்.

தோட்டான் “ஆமா ஆமா” என்றார். தலையைச் சுழற்றி ”போயாச்சு” என்றார்.

பழைய ஸ்ட்ரௌஜர் தொலைபேசி நிலையத்தில் டயல்டோன் என்பது ஒருங்கிணைந்த இயந்திரத்தால் உற்பத்தி செய்யப்படுவது. பூனை உர்ர்ரிடுவதுபோல கேட்கும். அடிப்படை எண்ணான ஸீரோவில் எப்போதுமே டயல்டோன் இருக்கும். அதில் நூறு தொடர்புகள் வரை கொடுத்தாலும் அது சீராகக் கேட்கும்.

எல்லா போர்டிலும் ஸீரோ உண்டு. “அது ஒரு மங்கல எண், எவருக்கும் சொந்தம் கிடையாது. ஸீரோதான் கணக்குக்கு ஆதாரம். அது எந்த எண்ணுடனும் சேரும். பிற எண்ணுக்கு மதிப்பை அளிக்கும், மதிப்பை குறைக்கும். ஆனால் அதற்கு மதிப்பே கிடையாது” என்று பயிற்சியளித்த முதல்நாளிலேயே வகுப்பெடுத்த குஞ்ஞிராமன் மாஸ்டர் சொன்னார்.

தோட்டான் அதில் தொடர்புபடுத்தியபின் ரிஸீவரை காதோடு சேர்த்து தோளால் அழுத்திக் கொள்வார். காதில் ஏற்ற இறக்கமில்லாத ர்ர்ர்ர் ஒலிக்கத் தொடங்கும். பூனை உடல்சுருட்டி கண்களை சுருக்கிமூடி மூக்கைத் தாழ்த்தி ஆழ்ந்து தூங்கிக்கொண்டே இருக்கும்.

தோட்டான் அதைக் கேட்டுக்கொண்டே இருப்பார். தலை சுழன்று கொண்டிருக்கும். அவருடைய தலை ஒர் உருளை போல ஒரு கொக்கியில் மாட்டப்பட்டு சமநிலை இல்லாமலிருப்பதாகத் தோன்றும். மெல்ல தலை எடைகொண்டு தொங்கி ஒருபக்கமாகச் சரியும். கண்கள் சொக்கி இமைகள் இறங்கும். வாய் திறந்து தோள்கள் தொய்ந்து பக்கவாட்டில் ஆலிவ் பச்சை பீரோவில் சாய்ந்து அப்படியே அமர்ந்திருப்பார்.

மதியம் உணவு உண்பதில்லை. சிறுநீர் கழிக்கக்கூட எழுவதில்லை. சிலசமயம் ஏதேனும் ஒலிகேட்டு திடுக்கிட்டு எழுந்தால் உடல் தாறுமாறாகத் துள்ளும். கைகால்களில் வலிப்பு வந்ததுபோல தோன்றும். “ஏ? ஏ?என்ன?ஏ? ஏது?”என்று குளறுவார்.

அவரை பிடித்து அமரச் செய்யவேண்டும். “ஒன்றுமில்லை தோட்டானே… ஒன்றுமில்லை. உட்காருங்கள்…” என அமரச்செய்து மீண்டும் ரிசீவரை காதில் மாட்டிவிடவேண்டும். மீண்டும் மெல்ல மெல்ல டயல்டோன் என்னும் ஓங்காரத்தில் அமிழ்வார்.

எங்கள் தொலைபேசி நிலையத்தை கிராஸ்பார் தொழில் நுட்பத்திற்கு மாற்றி ஓராண்டு ஆகிறது. அதன் அமைப்பே வேறு. அதன் இயந்திரங்கள் எல்லாம் வேறு ஒரு அறையில் இருந்தன. அதன் டயல்டோன் ஹார்மோனிக்காவில் ஒரு நோட்டை நீட்டி அழுத்தியதுபோல ஒலித்தது. எந்த எண்ணிலும் அது மூன்று நிமிடங்களுக்கு மேல் ஒலிப்பதில்லை.

ஸ்ட்ரௌஜர் தொலைபேசி நிலையம் போய்விட்டதை தோட்டான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் வந்ததுமே “ஸீரோ கொடு” என்பார். “தோட்டானே ஸீரோ இப்ப இல்லை!” என்று சொல்வார்கள். அவர் ஒப்புக்கொள்வார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே மறந்துவிடுவார். அவரால் அலைமோதாமல் இருக்க முடியாது.

தோட்டான் எழுந்து சென்று கடிகாரத்தை சற்று நேரம் பார்த்தார். மீண்டும் வந்து அமர்ந்தார். தலை சுழன்று கொண்டே இருந்தது. மீண்டும் எழுந்து வெளியே சென்றார். முன்வழுக்கையை தடவிக் கொண்டே இருந்தார். ரிசீவரை எடுத்து காதில் வைத்தார் . அதன் டயல்டோன் மீட்டலைக் கேட்டார். அது முறிந்ததும் சலிப்புடன் எழுந்து நடந்தார்.

அவரை பார்க்க எனக்கே நிலைகொள்ளவில்லை. “இந்த கர்நாடக சங்கீதக்காரர்கள் எல்லாம் ஒரு பெட்டி வைத்திருப்பார்களே” என்றேன்.

“சுருதிப்பெட்டியா?” என்றாள் துர்க்கா.

“ஆமாம், அதுதான். அதை வாங்கிக் கொடுத்தால் என்ன?” என்றேன்.

துர்க்கா “அது இப்படி ஒரே மீட்டலாக இருக்காது, அலையலையாக இருக்கும்” என்றாள்.

தோட்டான் திரும்ப வந்தார். அமர்ந்து ரிசீவரை எடுத்து காதில் வைத்தார். சலிப்புடன் அதை கீழே வைத்தார். எழுந்து அலைபாய்ந்தபடி நடந்தார்.

எனக்கு டீ இடைவேளை வந்தது. எழுந்து மினிட்புக்கில் பதிவு போட்டுவிட்டு வெளியே சென்றேன். ஒரு டீ, ஒரு சிகரெட். துணைக்கு எவராவது வருவார்களா என்று பார்த்தேன். அப்போதுதான் அவனை கவனித்தேன். படிக்கு கீழே நின்றிருந்தான். “யார்?”என்றேன்.

கன்னடத்து ஆள் என்று தெரிந்தது. பெரும்பாலும் ஒரு பட் அல்லது ஷெனாய்.

“நான் எஸ்.ஜி.சாந்தியின் கணவன். கொப்பலில் இருந்து வருகிறேன்” என்று அவன் சொன்னான். “என்பெயர் டி.வி.கிருஷ்ண பட்.”

நான் “வாருங்கள்” என்றேன்.

“இது சப் டிவிஷனல் ஆபீஸர் ஆபீஸ் தானே?”

“ஆமாம்.”

“இங்கேதானே டெலிஃபோன் எக்ஸேஞ்ச்?”

“ஆமாம்” என்றேன் “யாரைப் பார்க்கவேண்டும்?”

“சப் டிவிஷனல் எஞ்சீனியர் மிஸ்டர் ராகவனை.”

”இருக்கிறார், வாருங்கள்.”

நான் அவனை மேலே அழைத்துச்சென்றேன். அவன் “நான் பேங்கில் வேலை பார்க்கிறேன். கனராபாங்க்” என்றான்.

“தெரியும்… நான் உங்கள் திருமணத்திற்கு வரமுடியவில்லை. கொப்பலில் நடந்தது இல்லையா?”

“ஆமாம்.”

அவன் விசும்பிவிட்டான். எனக்கு அதைப் பேசியிருக்கவேண்டாமோ என்று தோன்றியது. சாந்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாள். ஒரு விபத்தில். அவள் வீடு மங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இருந்தது. அதை அவள் கடக்க முயன்றபோது லாரி வந்து அறைந்து வீசிவிட்டது.

“ஸாரி” என்றேன்.

“இல்லை ஒன்றுமில்லை” என்று அவன் கைக்குட்டையால் முகத்தை துடைத்தான். மூக்கு சிவந்து ரத்தமாக ஆகியது. காதுமடல்கள்கூட சிவந்திருந்தன.

“இதுதான் எஸ்.டி.இ.ராகவனின் அறை” என்றேன். “காத்திருங்கள். அவர் ரவுண்ட் போயிருக்கும் நேரம்… இதோ வந்துவிடுவார்.”

”சார் நீங்களும் வாருங்கள்… எனக்கு ஒரு உதவி தேவை” என்றான். “ஒரு தனிப்பட்ட உதவி… நீங்களே ராகவனிடம் சொல்லுங்கள்”

”அதை நீங்களே ராகவனிடம் சொல்லலாமே.”

“சொன்னேன். அவர் முடியாது என்றார். நேரில் வராதே என்றார்.”

“அப்படியா? என்ன உதவி?”

“சாந்தியின் குரல் எனக்கு வேண்டும்…”

நான் திகைத்து “சாந்தியின் குரலா?” என்றேன்.

“ஆமாம், முன்பு அவள் குரல்தான் கும்பளாவில் இருந்து ஃபோனில் அறிவிப்புகளாகக் கேட்டுக்கொண்டிருந்தது…”

நான் “ஆமாம்” என்றேன்.

“அவள் குரல் எனக்கு வேண்டும்…” என்றபோது அவன் குரல் இடறியது. கண்கள் கசிய மீண்டும் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான். “அவளுடைய அழகே குரல்தான். குரலைக் கேட்டுத்தான் நான் அவளை திருமணம் செய்துகொண்டேன். அவள் குரலே என்னிடம் இல்லை. பதிவுசெய்யவேண்டும் என்று தோன்றவில்லை. இந்த அறிவிப்புகள் கிடைத்தால் அவளே திரும்பக் கிடைத்ததுபோல.”

நான் “நானே சொல்கிறேன்… அவர் வரட்டும்” என்றேன். உள்ளே அழைத்துச்சென்று நாற்காலியில் அமரவைத்தேன். நானும் அமர்ந்துகொண்டேன்.

கும்பளா, உப்பளா எல்லாம் மிகச்சிறிய கடற்கரை ஊர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட அவை எலக்ட்ரானிக் டெலிஃபோன் எக்சேஞ்சுகளாக இருந்தன. அதன்பின் எங்கள் மைய தொலைபேசிநிலையம் கிராஸ்பார் தொழில்நுட்பத்துக்கு வந்தபோது அவை எங்களுடன் இணைந்து ஒரே டெலிஃபோன் எக்ஸேஞ்ச் ஆக மாறிவிட்டன.

பழைய எலக்ட்ரானிக் டெலிஃபோன் எக்ஸேஞ்சுகளை டெலிஃபோன் எக்ஸேஞ்ச் என்று சொல்வதே ஒரு மங்கலவழக்கு. சற்றே பெரிய கைப்பெட்டிகள் அவை. ஒன்றில் ஐம்பது எண்களுக்குள் தொடர்பு அளிக்க முடியும். ஆனால் அவை ஐம்பதாண்டு பழைமையான ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்சுகளை விட நவீனத் தொழில்நுட்பம் கொண்டவை. எல்லாமே ஆட்டமாட்டிக். மனிதக் கையே படவேண்டியதில்லை.

கும்பளா, உப்பளா, மஞ்சேஸ்வரம், நீலேஸ்வரம் என தொடங்கி எட்டு எலக்ட்ரானிக் டெலிஃபோன் எக்ஸேஞ்சுகள் எங்கள் மைய டெலிஃபோன் எக்ஸேஞ்சை ஒட்டி அமைக்கப்பட்டன. அங்கே பொறுப்புக்கு ஒரு லைன்மேன் மட்டும்தான். ஒற்றை அறை கொண்ட ஒரு சிறுகட்டிடம். காலையில் திறந்து பழுதுள்ள எண்களை குறித்து மேலே அனுப்பிவிட்டால் அவன் வேலை முடிந்தது. வேறு லைன்மேன்களுடன் சீட்டாடலாம், இரவில் மது அருந்தலாம்.

எலக்ட்ரானிக் டெலிபோன் எக்ஸேஞ்ச் என்றபோது என்னவோ ஏதோ என்ற பரபரப்பு எங்கள் அலுவலகத்தில் இருந்தது. அதிநவீன ஜப்பானியத் தொழில்நுட்பம் அது. ஸ்ட்ரௌஜர் டெலிஃபோன் எக்ஸேஞ்ச் என்பது அனலாக் தொழில்நுட்பம். மின்காந்த விதிகளின்படி செயல்படுவது. தொன்மையான ஜெர்மானிய தொழில்நுட்பம்.

“மாட்டுவண்டியில்லே ராக்கெட்டை ஏற்றிக்கொண்டுபோகும் போட்டோ ஒன்று பார்த்தேன். அதைப்போல இருக்கிறது” என்றார் சகாவு நந்தகுமார். ”ரஷ்யாவிலே இதெல்லாம் வந்து இருபது வருஷமாகிவிட்டது.”

ஆனால் எட்டு எலக்ட்ரானிக் டெல்ஃபோன் எக்சேஞ்சுகளும் ஒரே ஆட்டோவில் வந்துசேர்ந்தபோது சப்பென்று ஆகிவிட்டது. “இந்த எட்டு பெட்டியா ஒரு டெலிஃபோன் எக்ஸேஞ்ச்? என்னடே இது?” என்றான் ஸ்ரீதரன்.

“டேய் , இது எட்டு டெலிஃபோன் எக்ஸேஞ்ச்” என்றான் டெக்னீஷியன் தாமஸ் மேலேப்பறம்பில்.

ஸ்ரீதரன் வாய் திறந்து நின்றுவிட்டான்.

அப்போதிருந்த எஸ்.டி.இ ஜோசப் காட்டுக்காரன் திறமையானவர். நிர்வாகத்தில் முன்பின் இருந்தாலும், அந்தியில் இரண்டு லார்ஜ் உள்ளே போனபின் சோஷலிசம் பேசி சலம்பினாலும், தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதில் கில்லாடி. அவர்தான் எட்டு டெலிஃபோன் எக்ஸேஞ்ச்களையும் நிறுவினார்.

எட்டிலும் அறிவிப்புகளை மனிதக்குரல் சொல்லமுடியும். எங்கள் டெலிஃபோன் எக்ஸேஞ்சில் எல்லா செய்திகளும் ஒலிகள்தான். ஒரே ஒலி வெவ்வேறுவகையில் துண்டிக்கப்பட்டு ‘இணைப்புகள் இல்லை’, ’அனைத்து இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளன’, ’தொடர்புகொண்ட எண் எடுக்கவில்லை’ போன்றவற்றை உணர்த்தின. ஆனால் எலக்ட்ரானிக் டெலிஃபோன் எக்ஸேஞ்சுகளில் உண்மையான மனிதக்குரலே ஒலிக்கும் என்பது மாபெரும் விந்தையாக இருந்தது.

எஸ்.டி.இ ஜோசப் காட்டுக்காரன் குரல்தேடலுக்காக எங்கள் அலுவலகத்தில் ஒரு தேர்வை நடத்தினார். பெண்கள் மட்டும். அவர்கள் வரிசையாகச் சென்று தங்கள் குரலை பதிவுசெய்துவிட்டு வந்தனர். அழகியும், கர்நாடகசங்கீத பாடகியும், பாலக்காடு ஐயருமான துர்க்காதான் தேர்வாவாள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் சாந்தியின் குரல் தேர்வுசெய்யப்பட்டது.

சாந்தியை நாங்கள் பொருட்படுத்தியதே இல்லை. அவளுக்கு பூனைக்கண். மிகமெலிந்த உடல், பின்பக்கம் முன்பக்கம் ஏதுமில்லை. பால்வெண்ணிறம், ஆனால் முகம் அழகு என ஏதும் சொல்லமுடியாதபடி இருக்கும். பற்களுக்கிடையே உள்ள இடைவெளிதான் அவளை அப்படி காட்டுகிறது என்பதை நான் பிந்தித்தான் கண்டுபிடித்தேன். பேசவே மாட்டாள். எதிலும் கலந்துகொள்ளமாட்டாள். அவள் எங்கள் அலுவலகத்தில் வேலைசெய்வதே அவ்வப்போதுதான் நினைவு வரும். மேலதிகாரிகளுக்கு அவள் பெயரே நினைவிலிருக்காது.

அவள் தன் குரலைப் பதிவுசெய்ய போகவில்லை. எல்லா பெண்களும் போயாகவேண்டும் என்று சீனியர் சூப்பர்வைசர் மாணிக்கவல்லி சொல்லி ஒரு சிறு பட்டியலை சிவப்பு மையால் டிக் செய்தாள். அதில்தான் சாந்தியை கண்டுபிடித்து அதட்டி போகும்படிச் செய்தாள். அவள் உடலை குறுக்கி தோள்களை ஒடுக்கியபடி சுவர் ஓரமாக ஒரு வெள்ளெலி போல சென்றாள்.

தன்குரல் தேர்வுசெய்யப்பட்டதை சாந்தி நம்பவில்லை. தன்னை கேலி செய்கிறார்கள் என்றே நினைத்தாள். “மெய்யாகவே உன்குரல்தான்… நம்பு” என்றேன். அவள் கண்கள் அழுகையில் பளபளத்தன. சாயங்காலம் எஸ்.டி.இ ஜோசப் காட்டுக்காரன் நேரில் வந்து சொன்னபோதுதான் அவளுக்கே நம்பிக்கை வந்தது. அப்படியே மேஜையில் கவிழ்ந்து படுத்து விசும்பி அழுதாள்

அவள் குரல் அத்தனை இனிமையானது என்பதை அது தொலைபேசியில் ஒலிக்கும்போதுதான் உணர்ந்தோம். தித்தித்தது. “என்ன குரல், எஸ்.ஜானகியின் குரல்” என்று எஸ்.டி.இ ஜோசப் காட்டுக்காரன் பலமுறை சொன்னார். துர்க்காவே “நல்ல சப்தம் சாந்தி. நீ சங்கீதம் படிக்கவில்லையா?” என்றாள். “என் அப்பாவுக்கு அதெல்லாம் பிடிக்காது” என்று அவள் கீழே பார்த்து பதில் சொன்னாள்.

சாந்தியின் குரல் அப்படி எங்கிருந்தோ கேட்பது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் செவியில் தோன்றி “அனைத்து இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளன” என்று சொல்லும்போது “சீ வாய மூடுடீ” என்று நாங்கள் அதட்டுவோம். சாந்தி அருகே இருந்து வாய்பொத்தி சிரிப்பாள்.

அவளுக்கே அவள் குரல்மேல் பித்து எழத்தொடங்கியது. ஒவ்வொருநாளும் அவள் அதை பலமுறை கேட்பாள். அதைக் கேட்பதற்காகவே உப்பளா, கும்பளா போன்ற ஊர்களை தேவையில்லாமல் அழைப்பாள்.

திடீரென்று அவளுக்கு திருமணம் நடந்தது. வெட்கத்துடன் அழைப்பிதழை அளித்தபோது அவள் கொஞ்சம் அழகாக ஆகிவிட்டது போலக்கூடத் தோன்றியது. கொப்பலில் திருமணம். மங்களூரில் வரவேற்பு. அவள் கணவனை பார்த்து வந்தவர்கள் அவன் அழகாக இருப்பதாகச் சொன்னார்கள். சாந்தியைவிட மிக அழகு என்றாள் கீதா ஷெனாய்.

ராகவன் உள்ளே நுழைந்தபோதே முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டார். கிருஷ்ண பட் பேசத்தொடங்குவதற்கு முன்னரே “இதோ பார், நான் சொல்லிவிட்டேன். முடியாது. அதெல்லாம் ஸ்க்ராப் செய்துவிட்டோம். அந்த குரலெல்லாம் எங்கேயும் இல்லை. அப்படி வைத்திருக்கும் வழக்கமே இல்லை” என்றார்.

நான் “இங்கே ஏதாவது…” என்று தொடங்கினேன்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இங்கே எங்கே குரலை வைத்திருக்கிறோம்? உங்களுக்கு தெரியாதா? கண்டம் ஆன டெலிஃபோன் எக்ஸேஞ்ச்களை டிஸ்மாண்டில் செய்து திருப்பி அனுப்பிவிடுவோம். அவை இன்றைக்கு எங்கேயுமே இல்லை. அவற்றை அப்போதே உடைத்திருப்பார்கள். அவற்றை ஏலம்கூட விடமுடியாது. உடைத்தே ஆகவேண்டும்… இல்லாவிட்டால் மிஸ்யூஸ் ஆகிவிடும். இருக்கிற வேலையில் எங்கே போய் நான் தேடுவது? அதிகாரபூர்வமாக இதைச்சொல்லி ஒரு கடிதம்போடமுடியுமா என்ன?”

“ஆனால்…”

”முடியாது, அவ்வளவுதான்… போகலாம்.”

நான் எழுந்தேன். அவனும் எழுந்தான். வெளியே வந்தபோது அவன் அழுதுகொண்டிருந்தான்.

நான் “அழாதே. எங்காவது இருக்கும். இந்த டெலிபோன் என்பது ஒரு மாபெரும் வலை. எங்கேயாவது கண்டிப்பாக இருக்கும். எங்கே இருந்தாலும் தேடி எடுக்கலாம். கொஞ்சம் நாளாகும். நானே தேடி எடுத்து உனக்கு தருகிறேன்” என்றேன்.

அவன் அழுதுகொண்டே தலையாட்டினான்.

மேலும் பேசி ஆறுதல் சொல்லி அவனை அனுப்பிவிட்டு வந்து ஸ்விட்ச்ரூமுக்கு வந்தேன். விஷயத்தைச் சொன்னபோது ஷீலாவும் கீதாவும் கண்கலங்கினர்.

துர்க்கா “ராகவன் சொன்னது உண்மைதான். அந்த குரல் எங்கேயும் இருக்காது… கிராஸ்பார் டெக்னாலஜியே போய்விட்டது. அதற்கு அடுத்தபடியான டிஜிட்டல் எக்சேஞ்ச் வந்துகொண்டிருக்கிறது. எலக்டிரானிக் எக்சேஞ்ச் என்பதே ஒரு அசட்டு ஜோக். அது எங்கேயுமே இருக்காது” என்றார்.

“நான் தேடப்போகிறேன்” என்றேன்.

“உனக்கென்ன வேறு வேலை இல்லையா?”

“தேடிப் பார்ப்போமே” என்றேன்.

அவர்கள் என்னை முன்னரே ஒரு கிறுக்கனாகத்தான் பார்த்தார்கள். ஆகவே நான் தேட தொடங்கியபோது அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

நான் ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இந்தியாவிலுள்ள எல்லா சிறிய தொலைபேசி நிலையங்களையும் அழைத்தேன். எல்லாவற்றிலும் கிராஸ்பார் தொழில்நுட்பம்தான். அதற்கான குரல்கள் டெல்லியிலேயே பதிவுசெய்யப்பட்டவை. இந்தியா முழுக்க ஒரே குரல்.

நாலைந்து நாட்களில் எனக்கு இந்தியாவின் வெவ்வேறு ஊர்களின் பெயர்களைக் கேட்பதில் ஆர்வம் வந்தது. டெலிஃபோன் எக்சேஞ்ச் பட்டியலை வைத்துக்கொண்டு தேடிக் கொண்டிருந்தேன். அதற்கு இரவுநேரப் பணிதான் வசதியானது. இரவில் அழைப்புகளே இருக்காது. நானும் இன்னொருவனும் மட்டும்தான் இருப்போம். இரவின் தனிமையில் விண்மீன்கள் செறிந்த வானில் என் குரல் சாந்திக்காக தேடிக்கொண்டே இருக்கும்

ஒருநாள் தோட்டான் வந்தார். அவருக்கு அன்று பகலில் வேலை இல்லை. இரவு வழக்கமாக அவருக்கு வேலை போடுவதில்லை, அன்று ஏதோ குளறுபடி நடந்திருந்தது. அவர் மேஜையில் அமர்ந்தபடி என்னிடம் “ஸீரோ போடு” என்றார்.

படுத்தப் போகிறார் என்று தோன்றியது. அப்போது எனக்கு ஒர் எண்ணம் வந்தது. “தோட்டானே, இங்கே வந்து அமருங்கள். இங்கே ஒரு விஷயத்தை எனக்கு தேடிக்கொடுங்கள்” என்றேன்.

”என்ன ?’ என்று அவர் கேட்டார்.

“இதோ இந்த ஹெட்செட்டை மாட்டிக்கொள்ளுங்கள். இந்த ஒயரை இந்த துளைகளில் இணைக்கவேண்டும். குரல்களைக் கேட்கவேண்டும். இதில் சாந்தியின் குரல் கேட்டால் எனக்குச் சொல்லவேண்டும்”

“சாந்தியா?

“ஆமாம்”

”அவள் எங்கே இருக்கிறாள்?”

”தோட்டானே, அவளுடைய குரல் இந்த ஃபோன் நெட்வர்க்கில் எங்கேயோ இருக்கிறது.”

“எங்கே?”

“எங்கேயோ.”

அவர் தனக்கே என “எங்கேயோ!” என்றார்.

நான் அவருக்கு வரிசையாக எல்லா எண்களையும் எப்படி பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தேன். அவர் கண்டுபிடிக்காவிட்டாலும் அதில் மூழ்கினால் என் உயிரை எடுக்காமல் ஓர் இடத்தில் இருப்பார் என்று நினைத்தேன்..

ஆனால் தோட்டான் அதை தீவிரமாகவே எடுத்துக் கொண்டார். முழுமூச்சாக அமர்ந்து குரலைத் தேடத் தொடங்கினார். சிலேட்டில் எழுதும் குழந்தைபோல வாயை வைத்துக் கொண்டு அமர்ந்த இடத்திலேயே இரவெல்லாம் தேடிக்கொண்டிருந்தார்.

காலையில் கிளம்பும்போது ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் நான்கு நாட்கள் கழித்து நான் பகலில் அலுவலகம் சென்றபோது தோட்டான் போர்டில் அமர்ந்து ஹெட்செட் போட்டுக் கொண்டு கடுமையான கவனத்துடன் பணியாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன்

“குரல் தேடிக்கொண்டிருக்கிறார்” என்று கருணாகரன் கண்ணடித்தான்.

நான் அவர் அருகே அமர்ந்து “ஏதாவது கிடைத்ததா?” என்றேன்.

“நிறைய குரல்கள்…” என்று அவர் சொன்னார். “ஏராளமான பெண்கள். ஆயிரக்கணக்கில். எல்லா குரல்களும் வானிலிருந்து வருகின்றன. மண்ணிலிருந்து நிறைய குரல்கள் வானத்திற்குச் செல்கின்றன.”

“ஆமாம்” என்று நான் சொன்னேன்.

அவர் பதறும் கண்களால் என்னைப் பார்த்து “வானத்திற்குப் போகும் குரல்களைவிட வானத்திலிருந்து வரும் குரல்கள் மிகுதி” என்றார்.

“அப்படியா?”

“அங்கே வானத்தில் சாந்தியின் குரல் இருக்கிறது…”

“ஆமாம்” என்றேன். அவருடைய உலகில் நுழைய எனக்கு பிடிக்கவில்லை நான் எழுந்துகொண்டேன். “நான் வருகிறேன் தோட்டானே.”

“அங்கே வானத்தில் லிஸியின் குரலும் இருக்கிறது. லிஸி! அங்கே மேலே!” என்று தோட்டான் கைகாட்டினார்.

நான் திடுக்கிட்டேன். மற்றவர்களைப் பார்த்தேன்.

துர்க்கா என்னிடம் “இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்றாள்.

லிஸி தோட்டானின் மனைவி. அவர்கள் ஒரு சிறிய பைக்கில் கண்ணூரிலிருந்து வரும்போது ஒரு காருக்கு வழிவிட்டார்கள். பைக் சரிந்துவிழ பின்னால் வந்த பஸ் லிஸியின் தலைமேல் ஏறிவிட்டது. ஆனால் அது நடந்து பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டிருந்தன.

நான் திரும்பிச் செல்லும்போது தோட்டானை தவறாகத் தூண்டிவிட்டேனா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் வேறுவழியில்லை. ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்சின் டயல்டோன் இல்லாதாகிவிட்ட பின் அவருக்கு இதுதான் கவனக்குவிப்புக்கு உதவுகிறது.

எனக்கும் இரவுவேலை பழகிவிட்டது. இரவின் தனிமை பிடித்திருந்தது. இரவில் ஒலிக்கும் மனிதக்குரல்கள் விந்தையானவை. உண்மையிலேயே கந்தர்வர்கள் மனிதர்களிடம் பேசவிரும்பினால் அவர்கள் மின்னலைகளில் ஊடுருவவேண்டும். தொலைபேசிகளில் வந்து பேசவேண்டும்.

நான் சாந்தியின் குரலைத் தேடுவதை விட்டுவிட்டிருந்தேன். அதற்குப் பதிலாக இரவெல்லாம் வெவ்வேறு ஒலிகள் டெலிஃபோன் சிக்னல்களில் ஊடுருவுவதை கவனிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் வெவ்வேறு ரேடியோக்கள். இலங்கை, பங்க்ளாதேஷ், பர்மா ரேடியோக்கள். பல்வேறு ஹாம் ரேடியோக்கள். போலீஸ் வயர்லெஸ்கள். ராணுவ வயர்லெஸ்கள். ஈரானிய ரேடியோகூட ஒருமுறை கேட்டது. பெரும்பாலும் பொருள் தெளியாத உதிரிச் சொற்கள். அவ்வப்போது உறுமல்கள், ஓலங்கள், ரீங்காரங்கள்.

“யார்?” என்று ஒரு குரல் அதட்டும் “என்னை கைவிட்டுவிடாதீர்கள்” என்று ஒரு பெண்குரல் மன்றாடும். “இதெல்லாம் இங்கே இருக்கா?” என்று ஒரு கிழவர் வியப்பார். ஒரு ஆர்மோனியம் மீது விரல்கள் ஓடிச்செல்லும். ஒரு குரல் “இங்க என்னை மீறி எதுவுமே நடக்காது” என்று உறுமும்.

உண்மையில் இந்த சிக்னல்கள் எல்லைமீறவே கூடாது. டிஎன்ஏ எல்லைகளைப்போல அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அலைவரிசைகளைச் சேர்ந்தவை. ஆனால் அன்று தொழில்நுட்பம் அவ்வளவு துல்லியமாக இருக்கவில்லை. இன்னொரு அலைவரிசை ஊடுருவும்போது தேனீக்கூட்டம் போல அனைத்தும் கலைந்துவிடும். பலவகையான ஓசைகள். குரல்கள் ஒன்றையொன்று ஊடுருவிக் கலையும்.

குரல்கள் ரேசர்பிளேடுகள் ஒன்றையொன்று வெட்டுவதுபோல உரசிக்கொள்வதாக எனக்குத் தோன்றியது. ரேசர்பிளேடுகளை இறக்கைகளாகக் கொண்ட பல்லாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் வானம், இருண்ட வானம். முடிவில்லா வானம். இறந்தவர்களும் பிறக்காதவர்களும் இருக்கும் வெளி.

விண் என்பது பூமிக்கு மட்டும் உரியது அல்ல. விண்ணகங்கள் கோடிகோடி. அங்கிருந்தெல்லாம் எழுகின்றன எண்ணிமுடியாத கதிர்கள், அலைகளாக. விண் என்பது எண்ணிவிட முடியாத கதிர்களின் அலைகடல். ஒலி என்பது அவற்றில் ஒன்று. ஒரு கதிரின் அமைப்பை இன்னொன்றாக ஆக்க முடியும். அலைவடிவமே கதிர்களின் மொழி.

ஓர் அலைவடிவை இன்னொன்றாக ஆக்கலாம். தொலைபேசி என்பதே அந்த மாயத்தின் வடிவம். ஒலியலை மின்னலைகளாகி மீண்டும் ஒலியலைகளாகக் கூடும் என்பதை கிரகாம்பெல் கண்டடைந்தார். வானத்தின் முடிவிலியை ஆளும் விதிகளில் ஒன்றை சென்று தொட்டார். மூடப்பட்ட பல்லாயிரம் வாசல்களில் ஒன்றை திறந்தார்.

அதன்பின் எத்தனை வாசல்கள். அப்போதுதான் ஆப்டிக்கல் ஃபைபர் வந்துகொண்டிருந்தது. அது ஒலியலையை மின்னலைகளாக்கியது. மின்னலைகளை ஒளியலைகளாக்கி நுண்குழாய்கள் வழியாக அனுப்பியது. அவை மீண்டும் மின்னலைகளாகி ஒலியலைகளாகி மொழியாகி அர்த்தங்களாகி உணர்வுகளாகி செவிகளை அடைந்து உள்ளங்களாயின.

அத்தனை கதிர்களும் வானில் இருக்கின்றன. அவை சென்று கொண்டிருக்கின்றன. ஓர் இடத்திலிருந்து அவை மறைந்தால் வேறெங்கோ சென்று கொண்டிருக்கின்றன என்றே பொருள். ஒவ்வொன்றும் சென்று கொண்டே இருக்கிறது. அது செல்லும் திசை முடிவிலி. ககனவெளி. ஆகவே செல்லும் வடிவில் விரைவின் நிலையில் அவை என்றென்றும் இருந்து கொண்டிருக்கும்.

இங்கிருக்கும் அத்தனை குரல்களும் வானில் இருந்து கொண்டிருக்கின்றன. சிலகுரல்கள் கோடிகோடி கிலோமீட்டர்கள் சென்றுவிட்டிருக்கும். அர்ஜுனனின் குரல், கிருஷ்ணனின் குரல் பால்வழிகளை கடந்துவிட்டிருக்கும் இப்போது. புத்தரின் குரல் காந்தியின் குரல் பின்னால் சென்றுகொண்டிருக்கும். சாந்தியின் குரல் லிஸியின் குரல் இன்னும் பெயர்தெரியாத கோடிக்கணக்கானவர்களின் குரல்கள்.

அப்பாலிருந்து வேறுகுரல்களும் வரக்கூடும். நாம் விரித்து வைத்திருக்கும் தொலைபேசி இணைப்பு என்னும் இந்த சின்னஞ்சிறு சிலந்திவலையை அவை அதிரச்செய்கின்றன. இதோ இப்போது இந்த ஓசையை கலைத்து குழறலாக ஆக்குவது எங்கோ நெடுந்தொலைவில் நான் என்றும் அறியமுடியாத ஏதோ ஆத்மாவாக இருக்கலாம். அதன் அழியாத துயரமாக இருக்கலாம்.

ஒருநகரில் இரவில் ஒருவன் மட்டும் விழித்திருப்பதுபோல பித்துகொள்ளச் செய்வது வேறில்லை. ஒவ்வொரு சிந்தனையும் கிறுக்கின் விளிபைச் சென்று அறைந்து மீள்கிறது.

ஒருநாள் தோட்டான் என்னைப் பார்க்க ஓடிவந்தார். அது பகல், நான் பணியிலிருந்தேன். மூச்சிரைக்க “சாந்தி, சாந்தியின் குரல்!” என்றார்.

நான் திகைத்தேன். ஆனால் தோட்டான் ஏதோ பிரமையிலிருப்பதாகவே நினைத்தேன். இருந்தாலும் “காட்டுங்கள்” என்றேன்.

தோட்டான் என்னிடம் அவருடைய ஹெட்செட்டை அளித்தார். நான் இன்னொரு முறை அவர் டயல்செய்த எண்ணை சுழற்றினேன். சாந்தியின் குரல் “அனைத்து இணைப்புகளும் உபயோகத்தில் உள்ளன” என்றது

என் கை நடுங்கத் தொடங்கியது. அது என் மனப்பிரமை இல்லை என மீண்டும் முயன்றேன். மீண்டும் அதே ஓசை. அது மணிப்பூரில் ஒரு சிறிய எக்ஸேஞ்ச். அந்த பெயரை குறித்துக்கொண்டேன்.

உடனடியாகப் பதிவுசெய்யவேண்டும். டேப் ரிக்கார்டர் வேண்டும். எழுந்து வெளியே ஓடினேன். என்னை அத்தனைபேரும் எழுந்து பார்த்தார்கள்.  “சாந்தியின் குரல்! மணிப்பூரில்” என்றேன்.

‘உண்மையாகவா?”

“ஆமாம்”

நான் வெளியே சென்று மனமகிழ் மன்றத்தில் பாடிக் கொண்டிருந்த டேப்ரிக்கார்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்தேன். அதற்குள் அத்தனை பேரும் அக்குரலை கேட்டுவிட்டிருந்தனர்

உடனே டேப்பில் இருந்த கேஸட்டை அழித்து அதில் சாந்தியின் குரலை பதிவு செய்தேன். அழிந்து விடும் என்று தோன்றியது. மீண்டும் மீண்டும் பதிவு செய்தேன். வேறு கேஸட்டுகளில் பதிவு செய்தேன்.

மணிப்பூரில் ஒரு எக்ஸேஞ்சில் தற்காலிகமாக எலக்டிரானிக் எக்ஸேஞ்சை பயன்படுத்தியிருக்கிறார்கள். அது இங்கே கும்பளாவில் இருந்தது, அதை டெல்லியிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள்.

தொலைபேசியில் கிருஷ்ண பட்டை அழைத்தேன். கொப்பலில் இருந்து அவன் குரல் களைப்புடன் ஒலித்தது.

“கிருஷ்ண பட் தானே?”

”ஆமாம்.”

”நான் ராமச்சந்திரன் பேசுகிறேன்…. சாந்தியின் குரல் கிடைத்துவிட்டது. டேப்பில் இருக்கிறது வந்து வாங்கிக்கொள்ளுங்கள்.”

அவன் விம்மி அழுதான்.

டெலிஃபோன் எக்ஸேஞ்சே கொண்டாட்ட மனநிலையில் இருந்தது. சாந்தியே திரும்பி வந்துவிட்டதுபோல.

“பாவம் சாந்தி… அவள் குரலாவது இருக்கிறது.”

“அவன் அதை விடவே மாட்டான்!”

நடுவே பார்த்தபோது தோட்டான் மீண்டும் போர்டில் அமர்ந்து தேடிக்கொண்டிருந்தைக் கண்டேன்.

“தோட்டானே இனி என்ன செய்கிறீர்கள்? சாந்தி கிடைத்துவிட்டளே?”

”லிசியின் குரல்?”

அனைவரும் அமைதியடைந்தோம். நான் துர்க்காவிடம் மட்டும் போய்வருகிறேன் என்று சொல்லி வெளியேறினேன்.

கிருஷ்ண பட் மறுநாளே வந்து அதை வாங்கிக்கொண்டு போனான். என் கைகளைப் பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டு விம்மி விம்மி அழுதான். நாங்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டோம். அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. அவன் கைகளை வெறுமே குலுக்கினோம். அவன் தோளைத் தொட்டோம். பெண்கள் அழுதனர். ராகவன் கூட கண்கலங்கிவிட்டார். அவனிடம் மன்னிப்பு கோரினார்.

ஓரிரு வாரங்களிலேயே அனைவரும் சாந்தியை மறந்துவிட்டோம். அவளைப்பற்றிய பேச்சு அவ்வப்போது எழுந்தது, பின்னர் முற்றிலும் இல்லாமலாகியது. புதிய மாற்றங்கள், பலர் புதிதாகவந்தனர். பலர் சென்றனர்.

ஆனால் தோட்டான் மட்டும் கிராஸ்பார் டெலிஃபோன் எக்ஸேஞ்சின் ஓசைகளிலேயே மூழ்கி இருந்தார். அவரையும் பெரும்பாலும் மறந்துவிட்டிருந்தோம்.

ஒருநாள் அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். அவர் ஒரு போர்டில் அமர்ந்தார். ஒரு லைனுக்குள் நுழைந்தார். அங்கே எவரோ இருவர் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அவரைக் கேட்கமுடியாது. அவர் அவர்களைக் கேட்கலாம். அவர் இன்னொரு லைனை அதில் சேர்த்தார். இரு ஓசைகளும் அவர் செவியில் கலந்து கூச்சல்களாயின. மேலும் ஒரு இணைப்பை கலந்தார். மேலும் மேலும் கலந்தபோது அது முழக்கமாகியது. பத்துக்குமேல் இணைப்புகள் கலந்தபோது காட்டில் சீவிடுகள் போடும் ஒலிபோல ஒன்று உருவானது. அலைகளற்ற நீண்டு நீண்டு நீண்டு முடிவிலிக்குச் சென்றுகொண்டே இருக்கும் ஓரு ரீங்காரம்.

தோட்டான் அதைக் கேட்டுக்கொண்டு கண்களை மூடி அமர்ந்தார். அவருடைய தலை சுழன்றுகொண்டே இருந்தது. பின்னர் மெல்லமெல்ல அமைதியாகியது. ஒருபக்கம் சாய்ந்து விழிகள் மூடி வாய் திறந்து அவர் அதில் மூழ்கி அமைந்திருந்தார்.

இப்போது என்னென்னவோ ஆகிவிட்டது. முப்பதாண்டுகளில் கிராஸ்பார் தொழில்நுட்பம் போய் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தது. அதன்பின் செல்போன் வந்தது. நான் தொலைபேசித் துறையிலிருந்து விலகினேன். வேறுவேறு ஊர்களுக்கு சென்றேன்.

பல ஆண்டுகளுக்குப் பின் பழைய நண்பன் கருணாகரனிடம் கேட்டேன். “நம் தோட்டான் இப்போது எங்கே இருக்கிறார்? ஓய்வுபெற்றுவிட்டார் இல்லையா?”

“அவரா? தெரியாதா, அவர் செத்துவிட்டார், பதினொரு ஆண்டுகள் ஆகிறது”

ஒருநாள் போர்டில் இருக்கையில் சுவர் சாய்ந்து கண்மூடி வாய்திறந்து, மலர்ந்த முகத்துடன் இருந்த தோட்டானை அந்த இருக்கைக்கு அடுத்த டியூட்டிக்கு வந்த சந்திரகுமார் எழுப்பியிருக்கிறான். அவன் அவரை தொட்டபோது அவர் பக்கவாட்டில் சரிந்தார். ஒருமணிநேரம் முன்னரே அவர் இறந்து குளிரத்தொடங்கிவிட்டிருந்தார்.

***

முந்தைய கட்டுரைமொழி,ஆடகம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18