தங்கத்தின் மணம் [சிறுகதை]

[ 1 ]

“நாகமணீண்ணா?” என்றான் அனந்தன் குரல்தாழ்த்தி “நாகமணி அக்காவா?”

“இல்ல, இது உள்ளதாட்டே நாகமணியாக்கும்” என்றான் தவளைக்கண்ணன்.

“அத வச்சு என்ன செய்யலாம்?”என்றான் அனந்தன்.

தவளைக்கண்ணன் “நான் காட்டுதேன்… பிள்ளை பாக்கணும். பாத்துச் சொல்லணும் என்ன செய்யுகதுண்ணு” என்றான்.

அனந்தனுக்கு படபடப்பாக இருந்தது. நாகமணி. நல்லபெயர்.கல்யாணம்கூட செய்து கொள்ளலாம் ”பொம்புளயா?”

”என்னது?”

”நாகமணி.”

“பிள்ளே, இது ஒரு சின்ன மணியாக்கும்… வைரம்… வைரூடியம்.”

”வைரூடியம்னா?”

”மகரதம்” என்றான் தவளைக்கண்ணன்.

அனந்தன் ”செரி” என்றான் குழப்பமாக.

”வாருங்க” என்று தவளைக்கண்ணன் சொன்னான்  “நான் காட்டுதேன். நான் ஆருகிட்டையும் சொன்னது கிடையாது. பிள்ளை நம்ம அடுக்கம்னு நினைச்சதனாலே சொல்லுதேன்.”

அவர்கள் கோயில்முற்றத்தில் இறங்கி சாம்பந்தோடு வழியாக பாடகச்சேரி செல்லும் வயல் வரப்பில் ஏறினார்கள். ரகசியத்தால் அனந்தனின் உடல் உப்பிவிட்டது போலிருந்தது. அவனால் நடக்க முடியவில்லை. அவ்வப்போது நெஞ்சு எடைகொள்ள நீளமாக மூச்சிழுத்துவிட்டான்.

எதிரே நாராயணன் போற்றி வந்தார். “ஏலே எங்கலே போறே.”

“இங்கிண…” என்றான் அனந்தன்.

“என்ன இங்கிண?” என்றார் போற்றி. “ஏல எங்க போற?”

“போத்தி அங்கத்தே, மேகாட்டுவெளையிலே பலாவுலே காயிருக்காண்ணு பாத்துட்டுவாண்ணு ஏமான் சொன்னாரு” என்றான் தவளைக்கண்ணன்.

“அங்க காயி இல்லியே” என்றார் போற்றி “நான் வாறப்பம்கூட பாத்தேனே”

“பாத்துட்டு வாண்ணு சொல்லியாச்சு… பாக்கணும்லா?”

“அதுசெரி… அதுக்கு ஏம்லே இவன் ஒருமாதிரி இளிக்கான்?”

தவளைக்கண்ணன் அனந்தனை திரும்பிப்பார்த்தான். “கருப்பட்டி திங்குதாரு” என்றான்.

“வாயிலே கருப்பட்டி இல்லியே.”

“தின்னாச்சு போத்தி அங்கத்தே,, இப்பம் அதுக்க நினைப்பாக்கும்”

“டேய் தவளைக்கண்ணன்ணா, இங்க பாரு. சின்னப் பயலாக்கும். அவனுக்கு என்னமாம் விருத்திகேடு சொல்லிக்குடுத்தேண்ணு வச்சுக்கோ, பின்ன உனக்காக்கும் இருக்கு… பாத்துக்கோ.”

“அய்யோ நான் என்ன சொல்லிக்குடுக்கேன்? சொல்லிக்குடுக்கதுக்கு நமக்கே ஒண்ணும் தெரியாது.”

“போடே, போடே.”

போற்றி கடந்து சென்றார். தவளைக்கண்ணன் “பிள்ளே, பிள்ளை எதுக்கு முகத்த அப்டி வச்சிருக்கு?” என்றான்.

“எப்டி?”

“குஞ்சாமணியிலே குளிரடிக்குதது மாதிரி?”

அனந்தன் நின்று கவனித்தான். அப்படி ஒரு குளிர் இல்லை. “குளிரல்லை” என்றான்.

“பேசாம வாருங்க”

அனந்தன் கிளுகிளுப்பாகச் சிரித்தான்.

”ஏன் சிரிக்கீரு?” என்றான் தவளைக்கண்ணன்.

“சிரிப்பு வருதுல்லா?”

“புளி ஒரு துண்டு வாயிலே போட்டுக்கிடணும்…” என்று அவன் எம்பி பாய்ந்து பச்சைப்புளி ஒன்றை பறித்து கொடுத்தான்.

“இத வாயிலே போட்டா?”

“பிள்ளே, புளிய வாயிலே போட்டா நம்ம முகம் போடே மயிரேங்குத மாதிரில்லா இருக்கும்… இல்லேண்ணா ஒரு வேப்பங்காய எடுத்து போட்டுக்கிடணும். அய்யோ எனக்கு வய்யாவே, என்னாலே முடியல்லியேண்ணு இருக்கும். அப்படி இருந்தா ஒருத்தனும் ஒண்ணும் கேக்கமாட்டானுக.”

“ஏன்?”

“இங்கிண எல்லாருக்க முகமும் அப்டீல்லா இருக்கு. முகத்திலே இம்புடு மதுரம் இருந்திரப்பிடாது. ஓரோருத்தனும் நிண்ணு கேப்பான், என்ன சங்கதீண்ணு. எங்கிணயாம் திருடினியாலே, எவ வீட்டிலயாவது ஏறிச்சாடினியாலேன்னு கிறாஸ் செய்யுவானுக. அவனுக்கென்ன ராசால்லான்னு பொறாமைப்படுவானுக. சீவிக்க விடமாட்டானுக…”

அனந்தன் “ஓ” என்றான். புளியை வாயில் போட்டுக்கொண்டதும் அவனுக்கு உடல் உலுக்கியது

“பிள்ளைய இப்பம் பாத்தா ஆரோ கொட்டைய பிடிச்சு கசக்குதமாதிரி இருக்கு… இது நல்லதாக்கும். பாக்கிறவங்க பாவம் ஆருபெத்த பிள்ளையோண்ணு அருமையாட்டு பேசுவானுக.”

அனந்தன் “புளி திங்கணும்” என்றான்.

“பிள்ளே ஒரு காரியம் சொல்லுதேன். மொதலு நம்ம கையிலே இருந்தா நம்ம முகத்திலே அது தெரியும்… நம்ம கள்ளன் தங்கன் எங்கிணயாம் திருடீட்டு வந்து புதைச்சுப்போட்டுட்டு ஒண்ணும்தெரியாத பிள்ளை மாதிரி இருப்பான். ஆனா அவன் பெஞ்சாதிக்க நடையும் பேச்சும் மாறிடும். என்னையக் கண்டா அஞ்சுபவுனை புதைச்சு வச்சவள மாதிரியா இருக்குன்னு அவளே கேக்குத மாதிரி இருக்கும். அவ தெருவிலே நடந்தா ஊருக்கே தெரியும். அந்தால போலீஸு வந்து தூக்கிட்டு போயிரும்.”

“நான் புளி திம்பேன்.”

“ஆமா, நம்ம முகத்திலே ஒண்ணுமே தெரியப்பிடாது. ஏவாரியப்பாருங்க. லாபம் கூடுந்தோறும் அவனுக்கு ஒரு பிச்சக்கார முகம் வந்துபோடும். தேங்கா ஏவாரி செல்லன் பேசுததப் பாத்தா அடுத்த நேரம் அடுப்பிலே ஏத்துகதுக்கு அரிக்குள்ள பைசாவ நாம குடுப்போம்.”

“நான் சிரிக்க மாட்டேன்.”

அவர்கள் கூனன்பெருவட்டரின் தென்னந்தோப்பில் ஏறி அச்சுதன்நாயரின் தோட்டத்திற்குள் சென்று அதன் வழியாக கரடிப்பாறையைச் சூழ்ந்திருக்கும் காட்டை அடைந்தனர். அதன் விளிம்பில் மூலையடி இசக்கி. அப்பால் கண்ணன்குளத்து நாகயக்ஷி. அங்கேயே எவரும் வருவதில்லை. அதற்கும் அப்பால் செல்வது மூலிகை பறிக்கும் வைத்தியர் பாச்சுக் கணியார் மட்டும்தான்.

“இங்கயா?” என்றான் அனந்தன்.

“மேலே போகணும்… ஆளில்லா வனமாக்கும்”

“இங்க யக்ஷி உண்டா?”

“ஏக்கி,, யச்சி,, பூதத்தான், மலைவாதை, மறுதா, குளிகன், மாதி, சாத்தன் எல்லாம் உண்டு…”

“அய்யோ!” என்று அனந்தன் நின்றுவிட்டான்.

”பிள்ளே எதுக்கு பயருது… இது என்னண்ணு கண்டுதா?” என்று தவளைக்கண்ணன் மடியிலிருந்து கரிய உலர்ந்த காய் ஒன்றை எடுத்து நீட்டினான்.

அதை வாங்கி விரல்களால் புரட்டிப்பார்த்த அனந்தன் “என்னது?” என்றான்.

“இது இருந்தா ஒரு பேயும் நெருங்காது. சூருள்ள தெய்வமெல்லாம் சுருசுருவென்றே மறையும். பேருள்ள பேயெல்லாம் பேடிகொண்டே ஓடும். நாருள்ள பூவெடுத்து நாலுநேரம் பூசைசெய்தால் காருள்ள வனத்தினிலே காணாததை காண்பாயடா. ஆரு பாடினது, சொல்லுங்க”

“தெரியல்லியே”

“ஆப்ரகாம் சித்தர்… அவரு ஏசுவ நேரில் கண்டிட்டுண்டு…”

“ஓ” என்றான் அனந்தன் “சொற்கத்துக்கு போனாரோ?”

“இல்ல, அவரு வைத்தியருல்லா? அஞ்சு திருமுறிவையும் இப்பம் செரியாக்கித்தாறேன்னு ஏசுவானவர்கிட்ட சொல்லியிருக்காரு. அவருக்கு கோவம் வந்து போலே மயிராண்டின்னு விட்டுட்டு போயிட்டாரு… இப்பம் காட்டிலேயாக்கும். ஆளு சிரஞ்சீவியில்லா?”

”இந்த காயி என்னது?”

“அமுத்தப்பிடாது, பொட்டீரும்” என்று சொல்லி திரும்ப வாங்கி மடியில் வைத்துக்கொண்ட தவளைக்கண்ணன் “இது உணங்கின பீயாக்கும். மனுசப் பீ. இது அமங்கலமாக்கும். இத வச்சிருந்தா சாமியும் பேயும் அண்டாம ஓடீரும்.”

“அய்யே” என்று கையை நீட்டினான் அனந்தன்.

“அப்டி சொல்லப்பிடாது. இந்த காட்டிலே நமக்கு பாதுகாப்பு இதாக்கும்.”

“உணங்கின பீய ஏன் பயப்படுது சாமிகள்?”

“ஏமான், பண்டு முகிலன்மாரு படைகொண்டு வந்தப்ப நம்ம பிராமணனுங்க என்ன செய்தானுக?”

“என்ன செய்தானுக?”

“சாமிய எடுத்துட்டு அங்க பீய வாரிக்கொட்டிடு ஓடிப்போனாக. முகிலன் வந்து பாத்தா சாமி இல்ல… மூதேவியாக்கும் இருக்கது, ஹெஹெஹெ”

“ஏன் சாமி பயப்படுது?”

“ஏமான் கக்கூஸ் போனா களுவாம கோயிலுக்கு போவுமா”

“மாட்டேன்”

“அப்ப களுவாம போற எடத்துக்கு சாமி வராதுல்லா?”

அனந்தன் “ஆமா” என்றான்.

“பயராம வரணும்…”

அவர்கள் காட்டுக்குள் நுழைந்தார்கள். பாதை மேலேறிச் சென்றது. மண்ணில் சரல்கற்கள் செறிந்திருந்தன. மண்ணே பாறைபோல தோன்றியது. ஆங்காங்கே உருண்டு நின்ற கரும்பாறைகள் மேல் கொடிகள் ஏறியிருந்தன.

அங்கே பகலிலும் சீவிடுகளின் ஒலி நிறைந்திருந்தது. செடிகளின் இலைகளில் பச்சை மேலும் அடர்ந்து நீலம்போல தெரிந்தது. எல்லா செடிகளிலும் முட்கள் இருந்தன. ஒரு செடியில் முள்ளும் முல்லைபோன்ற வெள்ளை மலர்களும் மட்டுமே இருந்தன.

“இது முல்லையா?”

“இது முள்ளுமுல்லை… மணக்காது. அளுகின பீயிக்க மணமாக்கும்.”

“பின்ன ஏன் மஞ்சப்பூச்சி சுத்துது?”

“ஏமான் ஓரோண்ணும் ஓரோ உயிருக்கு சீவனாக்கும். இப்பம் வண்டு ஏன் பீய உருட்டீட்டு போவுது? அதுக்கும் அதுக்க பிள்ளையளுக்கும் உண்டான சோறுல்லா அது?”

“எனக்கு பயமாட்டு இருக்கு.”

“ஏன்? பிள்ளை இங்க வந்ததில்லையா?”

“நான் ஏக்கி கோயிலை தாண்டினதில்லை.”

“பிள்ளை இனி அப்டி எவ்ளவு எடம் தாண்டணும்… தாண்டித் தாண்டித்தான் தெரிஞ்சுகிடணும். தாண்டினாத்தானே முத்தும் மணியும் கிட்டும்” என்றான் தவளைக்கண்ணன். “ஏழாம்கடல் எல்லை தாண்டினா முத்துண்டு மணியுண்டு ஞானப்பெண்ணே. ஏழாம்கடல் எல்லை தாண்டினா நோவுண்டு சாவுண்டு ஞானப்பெண்ணே. … முக்குவன்மாருக்க பாட்டாக்கும். முத்தும் உண்டு சாவும் உண்டு… ரெண்டும் அந்தாலயாக்கும்.”

”எனக்கு பயமாட்டு இருக்கு.”

“இங்கதான்” என்றான் தவளைக்கண்ணன். ”இந்தப்பாறைக்கு அடியிலே.”

அனந்தன் நின்று “நீ ஏன் அந்த மணிய எடுக்கல்ல?”என்றான்.

“பிள்ளே, நாம முத்தின கையில்லா. நஞ்சு வந்திரும்.”

“முத்தின கையிண்ணா?”

“பாவம் செய்த கை.”

“என்ன பாவம்?”

“சாவான பாவம்.”

“நான் செய்யல்ல இல்லியா?”

”பிள்ளை பரிசுத்தமான சின்னப்பிள்ளையாக்கும்… பிள்ளைக்க கையிலே அதை எடுக்கலாம்… வாருங்க.”

அவன் பெரிய பாறை ஒன்றின் அடியிலிருந்த இடுக்கருகே அமர்ந்தான். உள்ளே கூர்ந்து நோக்கிவிட்டு “உள்ள பாக்கணும்” என்றான்.

அனந்தன் உள்ளே பார்த்தான். ஒரு வேர் தெரிந்தது.

“என்னது?”

“வேரு.”

”வேரா… பிள்ளை அது பாம்பு… செண்டைமுறியன்.”

“ஆமா!” என்றான் அனந்தன். அவன் வயிறு உலுக்கிக்கொண்டது. ஒரு துளி சிறுநீர் சொட்டியது. அவன் எழப்போனான்.

“எந்திரிக்காண்டாம்… இருக்கணும். நம்ம கையிலே இந்த பண்டம் இருக்குல்லா?

அனந்தன் அமர்ந்துகொண்டான்.

“வெஷமாக்கும்… அதுக்க வாயிலதான் மணி இருக்கு.”

“அதை எப்டி எடுக்கது?”

“அதுக்கு வளியுண்டு… அதுக்க எடத்தை அசுத்தப்படுத்தினா அது விட்டுட்டு போயிடும்”

அவன் தன் மடியிலிருந்து இன்னொரு உலர்ந்த மலத்துண்டை எடுத்தான்.

“இது ஆருக்க பீ?”

“அது இப்ப முக்கியமா? பேசாம இருக்கணும்.”

அவன் அதை உள்ளே போட்டு ஒரு குச்சியால் தள்ளித்தள்ளி பாம்பின் அருகே கொண்டு சென்றான். அது பாம்பின் உடலில் பட்டதும் அது திடுக்கிட்டது. தீ பட்டதுபோல சுருங்கியது. அதன் செதில்கள் அதிர்வதைக் காணமுடிந்தது.

”அதுக்கு வலிக்குதா?”

”அது தவம் செய்யுது… நல்ல மூத்த நாகப்பாம்பாக்கும். வயசு ஆச்சு. இனி சீவிக்கவேண்டாம்னு முடிவானதும் எரையெடுக்குதத நிப்பாட்டிரும்… நல்ல எடம் பாத்து சுருங்கி வளைஞ்சு இருக்கும். உஸ்ஸுன்னு மந்திரம் சொல்லிட்டு அப்டியே தவம் செய்யும். நல்ல சொப்பனம் போலத்த தவம். அதுக்க தவம் மூத்து வெளையுறப்ப அதுக்க உடம்பிலே உள்ள வெஷம் முளுக்க மண்டைக்கு வரும்.”

“ஏன்?”

 பிள்ளை, அதுக்க வெஷம் அது இங்க எலிபிடிச்சு திங்குததுக்கும் எதிராளிகளை கொல்லுகதுக்கும் உண்டானதில்லா?”

“ஆமா.”

“அந்த வெஷத்தை இங்க எறக்கிப்போட்டுட்டுல்லா அது மோட்சம் போவ முடியும்?”

“ஆமா.”

“அதை அது உருட்டி எடுத்து நெத்திமுக்கிலே கொண்டு வரும். அங்க அது நல்லா விளைஞ்சு இறுகி மணியாட்டு ஆகும். அதாக்கும் நாகமணி… வைரம் மாதிரி பளபளப்பான கல்லு. நீலக்கலர் கல்லு.”

“வெஷமா?”

“ஆலகாலவெஷம்.. தொடப்பிடாது” என்றான் தவளைக்கண்ணன். “அந்த நாகமணி நல்லா முத்தினபிறவு அதுக்க மூக்கிலே இருந்து விளுந்திரும்… அதுக்குப்பிறவு பாம்பு அதுக்க வாலை அதுவே விளுங்கும். உருண்டு உருண்டு ஒரு பந்து மாதிரி ஆயிரும். அப்டியே சொர்க்கம் போயிரும்… அதுக்க எலும்பு இங்க கிடக்கும்… பாம்புக்க எலும்பு உருண்டு பந்தா இருந்தா ஒரு நாகம் சொர்க்கம் போயிருக்குண்ணு அர்த்தம்.”

”சொற்கத்துக்கா?”

”பிள்ளே அதுக்க சொற்கம் நாகலோகம்லா?”

”ஆமா.”

”இப்ப அதுக்க தவம் கலைஞ்சு போச்சு… நாம பீயப்போட்டு அசுத்தம் செஞ்சுட்டோம்லா?”

பாம்பு ஊர்ந்து வெளியே வந்தது.புதிய வெட்டுகத்தியின் இரும்பு நிறம். செதில்கள் ஈரம்போல் பளபளத்தன.அதன் வாலும் தலையும் ஒரேபோல இருந்தன.

“தலை ஏதாக்கும்?”

“பிள்ளை ஒண்ணு மனசிலாக்கணும். வளரவளர பாம்புக்க வாலு தடிச்சுக்கிட்டே இருக்கும். வாலும் தலையும் ஒரேமாதிரி ஆகும்பம் அதுக்க ஆயுசு முடிஞ்சுதுன்னு அர்த்தம். அப்ப அதுக்க வாலும் தலையும் ஒரேமாதிரி பத்தி விரிக்கும் பாத்துக்கிடுங்க“

அது புழு போல நெளிந்து ஊர்ந்து புதருக்குள் சென்றது

“அதுக்கு இப்பம் நல்ல பசி இருக்கும். தவம் கலைஞ்சதாக்குமே.”

”கடிக்குமா?

“வெசமில்லாம கடிச்சு என்ன செய்ய? ஏமான் இப்பம் அதனாலே ஒரு சீவனையும் பிடிக்க முடியாது… அதனால இப்பம் அது போயி பீய தின்னும்.”

“பாம்பா?”

“ஆமா, உயிரோட இருக்கணும்லா? ஒரே ஒரு தடவை பீயத் தின்னு உடம்பிலே விசம் ஊறினா பிறவு மத்த சீவிகளை பிடிக்கலாம்லா?”

“பாவம்.”

“உள்ள மணி கெடக்கா பாருங்க.”

“ஆமா கெடக்கு” அனந்தன் சொன்னான். “சின்னதா ஒரு நீலக்கல்லு… எருக்கம்பூவுக்க மொட்டு மாதிரி.”

“அதுதான்… அதுதான்… அப்பம் இந்த பாம்புக்கு இப்ப வெஷமில்லை…”

“எடுக்கட்டா?”

“அய்யோ… ஆலகால வெஷமாக்கும்… தொட்டா உடம்பு நீலமாயிடும்.”

“என்ன செய்ய?”

“இருங்க” அவன் தன் இடையிலிருந்து ஓர் இலையை எடுத்தான். அதில் பசுஞ்சாணி இருந்தது

“இதை அதுக்குமேலே போட்டு சாணியோட எடுங்க”

அனந்தன் அதை அந்த மணிமேல் போட்டு சாணியுடன் அதை அள்ளி எடுத்தான்.

“இந்த எலையிலே வையுங்க.”

அவன் அதை இலையில் வைத்தான் வைத்தான்.

“அதை அப்டியே சுருட்டி எடுத்துக்கிடுங்க… அது இனி பிள்ளைக்குள்ளதாக்கும்”

“எனக்கா?”

“ஆமா, நாகமணியை மனசு மூத்தவங்க வச்சிருக்கமுடியாது”

அனந்தன் பெருமூச்சுவிட்டான். அவன் உடலெங்கும் மூச்சு உறைந்து கல்லாக நின்றிருந்தது.

“ஆயிரம் வைரத்துக்கும் ஐயாயிரம் மகரதத்துக்கும் பத்தாயிரம் வைரூடியத்துக்கும் சமானமாக்கும் ஒரு நாகமணி.”

“இதவச்சு என்ன செய்ய?”

“பிள்ளை,ஒரு காரியம் மனசிலாக்கணும். இது சாதாரண மணி இல்லை. இந்த முத்தும் மணியும் வைரமும் எல்லாம் எதுக்காக போடுதானுக? பளைய ராஜாக்களெல்லாம் ஏன் இதையெல்லாம் வச்சிருந்தானுக?”

”ஏன்?”

”இதெல்லாம் வசியக்கல்லுல்லா? மூணு வசியம். தன வசியம், ஸ்த்ரீவசியம், சத்ரு வசியம். ஒருத்தன் சக்தியுள்ள கல்லை குண்டலமாட்டோ லாக்கெட்டாட்டோ மோதிரமாட்டோ போட்டிருந்தா பொம்புளைங்க வந்து நிப்பாளுக. பொன்னும் பணமும் தேடிவரும். எதிரி வந்து காலக்கும்பிடுவான்…”

அனந்தன் “இத வச்சிருந்தாலா?” என்றான்.

“வைரக்கல்லு தனவசியம்… அதாக்கும் செட்டியார்மாரு போடுதது. வைரூடியம் சத்ரு வசியம். நாயர்மாருக்குள்ளது” தவளைக்கண்ணன் குரல்தாழ்த்தி ”நாகமணி ஸ்த்ரீவசியமாக்கும். பெண்ணடிகள் மயங்கி மயங்கி வருவாளுக.”

“அவளுக நம்மள என்ன செய்வாளுக?”

“பிள்ளே பொம்புளை வந்தா பணமும் பவரும் வந்தாச்சுல்லா? நல்ல பைசா உள்ள வீட்டிலே குட்டிய வளைச்சா பணம் வரும். ஆளும்பிடியும் உள்ள வீட்டுலே பொண்ணுண்ணா சத்ரு இல்லாம ஆயிடுவான்… அட்டலெச்சுமியும் பெண்ணாக்குமே.”

அவர்கள் திரும்பி நடந்தனர். அனந்தனின் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டே இருந்தது.

தவளைக்கண்ணன் “சொன்னான். “ஆனா ஒரு காரியமுண்டு… இது வெஷமாக்கும். இது கனிஞ்சு வாறதுக்கு ஆறேளு வருசமாகும். அதுவரை தொட்டா ஆளைக்கொன்னிரும்.”

“தொடாம என்ன செய்ய?”

“அதான் சொல்லுதேன்… சாணியிலே பொதிஞ்சு வச்சிருக்கணும். மனுசப் பீ அதைவிட நல்லதாக்கும்… எப்பமும் அளுக்கிலே இருக்கணும். இந்த வெஷம் அளுக்கை எரிச்சுகிட்டே இருக்கும். அப்டியே இதிலே இருக்குத வெஷம் எரிஞ்சு குளுந்துபோவும். அதுக்குபிறவு பிள்ளை ஒரு நல்ல மோதிரத்தை செஞ்சு அதிலே இத போட்டுக்கிட்டா பின்னே நினைச்சவ வந்து நிப்பாள்லா?”

அனந்தன் ரகசியமாக “ஜெயபாரதி?”என்றான்.

“அவ ஆரு மகாராணிக்க அனந்திரவளா? வருவா.”

“விஜயஸ்ரீ?”

”அவளும் வருவா… பிள்ளை பாக்கணும்”

“ஷீலா?”

”அவள விளிச்சவே வேண்டாம்… நினைச்சா போரும்”

”சரோஜாதேவி?’

“வருவா பிள்ளே… சொல்லுகத நம்பணும்”

அனந்தனால் நடக்க முடியவில்லை. அவன் கையிலிருந்து அந்த பொட்டலம் குளிர்ந்தது, எடைகொண்டது, அதிர்ந்தது.

“பிள்ளை தரவேண்டிய மிச்சம் ரூபா அம்பதாக்கும்.”

“ஆமா.”

“அஞ்சஞ்சா தந்தாப்போரும்…”

“பாக்குதேன்.”

”ஏமானுக்க வெத்தில டப்பாவிலே பைசா கிடக்கும். அவரு அந்தால போறப்ப எடுக்கணும்…”

“சரி” என்றபோது அவன் குரல் பதறியது.

”இல்லேன்ணா வைப்பறைக்குள்ள போயி ஒரு தங்கமோ வெள்ளியோ கொண்டுவந்து தரணும்… அறுபது ரூபாய்க்கு நாகமணீண்ணா கொள்ள மலிவாக்கும்… பின்ன பிள்ளை நம்மாளு…”

“செரி” என்றான் அனந்தன்.

“சாணம் வச்சுகிட்டே இருக்கணும்… சாணம் வெஷமா மாறினதும் வேற சாணம் வைக்கணும். ஆனா பசுவுக்க சாணம் சீக்கிரம் வெஷம் எடுத்திரும். மனுஷப்பீன்னா ஆறுமாசம் ஒரு வருசம்கூட நிக்கும் கேட்டுதா?”

“ஏன்?”

”அதுல்லா நம்ம மலம்? ஆணவம் கக்கம் மாயை… எல்லா மலமும் வெசத்தை எடுக்கும்”

“எடுத்து என்ன செய்யும் ?”

“மலம் பொன்னாகும். கேளடா, மாநாக மணிதொட்டால் மலமும் பொன்னாகும். ஆளடா, அதனாலே அகிலமெல்லாம் அறிவாயே. இது யாக்கோபு சித்தர் பாடினதாக்கும்.”

“சாணிக்குழியிலே போட்டா?”

“அது பொன்னாவுமாண்ணு தெரியல்ல. பசுவுக்கு மலம் குறைவுல்லா? பிள்ளை மனுஷப் பீயிலே வைக்கணும். ஒருவாரம் வச்சிருந்தா அது பொன்னாவும்.”

“அய்யே.”

“செரி…சாணம் வைக்கணும்.”

அவர்கள் நடக்கும்போது அனந்தன் சட்டென்று பயமாக உணர்ந்தான்.

“பயமாட்டு இருக்கு.”

“எதுக்கு பயம்?”

“ஒண்ணுமில்லை.”

“எப்பமும் தொடங்கும்ப ஒரு பயமிருக்கும். எதை தொடங்கினாலும் நாம நம்ம எல்லைய மீறியாக்கும் போறம்.”

“அப்டி பயமில்லை.”

“பயப்படாதீக பிள்ளே… பயப்படுதவனுக்கு பொன்னும் மணியும் இல்லை. பெண்ணும் பேரும் இல்லை.”

அனந்தன் “பயமில்லை”என்றான். ஆனால் அப்போதுதான் உச்சகட்ட பயத்தை உணர்ந்தான்.

[ 2 ]

அனந்தன் அந்த நாகமணியை கொண்டு சென்று வைக்கோற்போரின் அருகே வைத்து பிரித்துப் பார்த்தான். சாணிக்குள் அது நீலநிறக் கூழாங்கல் போல் இருந்தது. ஒரு பட்டாணிக்கடலை அளவு. நாகத்தின் நஞ்சு. இரண்டு ஆண்டுகளுக்கு முன் காளி எருமையை நாகம் கடித்தது. அது நாக்கு நீலமாகி வெளியே கிடக்க வலிப்பு வந்து நுரைதள்ளி உயிர்விட்டது.

அவன் அதை பார்த்துக் கொண்டிருந்தான். கைநீட்டி அதை தொடவேண்டும் என்று தோன்றிய வேகம் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அதை அடக்கிக்கொண்டான். அதை மீண்டும் மூடப்போகும்போதுதான் அந்த சாணி நிறம் மாறியிருந்ததைக் கண்டான். அதுவும் சற்று நீலமாக ஆகிவிட்டிருந்தது. அதை தொட்டாலென்ன? ஆனால் அதுவும் ஒருவேளை நஞ்சாகியிருக்கக் கூடும்.

அவன் சிவப்பியின் சாணியை எடுத்து வந்தான். அதில் நாகமணியை போட்டு பொதிந்து ஒரு இலையில் சுருட்டி விறகுபுரையின்மேல் செங்கல் இடுக்கில் வைத்தான். அந்த பழைய சாணியை அப்பால் எடுத்து போட்டுவிட்டு சென்று கையை கழுவினான்.

”எதுக்குடா கைய களுவுதே?” என்று அம்மா கேட்டாள்.

“கையிலே சாணி” என்றான்.

“சாணிய எங்கடா வாரினே?”

“இங்க ,சிவப்பிக்க சாணி.”

“இவன் எதுக்குடீ சாணி வாரப்போறான்?”

“என்ன செய்யுதுண்ணு ஆருகண்டா? சொன்னா கேட்டாத்தானே?” என்றாள் தங்கம்மா.

அனந்தன் வீட்டுக்குள் சென்றான். சினிமா மாசிகா இதழை எடுத்து பிரித்து ஜெயபாரதியைப் பார்த்தான். பெரிய உதடுகள். புரட்டி ஷீலாவை பார்த்தான். விஜயஸ்ரீ படம் அதில் இல்லை. பழைய இதழ்களில் இருக்கலாம். அவை எங்கே என்று தெரியவில்லை. தேடி எடுக்கணும்.”

அவன் அப்படியே தூங்கிவிட்டான். ஷீலா பொன்னிறமாக வந்து அவனிடம் “வரட்டுமா?” என்றாள்.

அப்பாவின் குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டான்.

“வீட்டுக்குள்ள என்னடி சாணி நாத்தம்?”

“வீட்டுக்குள்ளயா? ஆமா… தங்கம்மை, நீ சாணி மெளுகினியா?”

“இல்லியே.”

“சாணி நாத்தம்லா அடிக்கு?”

அனந்தன் வெளியே எட்டிப்பார்த்தான்.

“இந்தச் சவம் எங்கியோ சாணிய அள்ளியிருக்கு… போய் குளிடா… குளிச்சுட்டு வாடா.”

அனந்தன் வீட்டை விட்டு வெளியே சென்றபோதுதான் அந்தியாகிவிட்டிருப்பதை உணர்ந்தான். எங்கும் விந்தையான மஞ்சள் ஒளி நிறைந்திருந்தது. அவன் ஆற்றை நோக்கிச் சென்றபோது எதிரில் போற்றி பொன்னிறமாகச் சுடர்விட்ட குடத்தில் நீருடன் வந்தார். மகாதேவருக்கு ஆற்றுநீர்தான் அபிஷேகம். அவன் விலகி நின்றான். அவர் அவனை பார்த்தபின் ஒன்றும் சொல்லாமல் மேலேறிச் சென்றார்.

அவன் படிகளில் இறங்கியபோது சுகு பசுவோடு மேலேறி வந்தான். பசு ஒவ்வொரு படியிலும் காலெடுத்து வைத்து தலையாட்டி மேலே வந்தது. குளிப்பாட்டப்பட்ட ஈரத்தில் அதன் உடலில் பொன் வழிந்தது.

அது செம்மஞ்சள்நிறப் பசுதான். ஆனால் அவ்வளவு ஒளியுடன் அவன் அதைப் பார்த்ததே இல்லை. அவன் திகைப்புடன் நிற்க கன்றுக்குட்டி துள்ளியபடி வந்தது. அது புதுமாந்தளிர் போல பொன்னொளி விட்டது.

அனந்தன் கண்களை கசக்கிக்கொண்டான். பதற்றமாக இருந்தது. ஆற்றுநீரை அடைந்தான். நீரில் இறங்கி நின்றபோது அத்தனை பரல்மீன்களும் ஒளிசுடர்வதைக் கண்டான். அவை பொன்னாலான தகடுகள் போல வளைந்தன. துள்ளி எழுந்து பொன்மின்னி நீரில் விழுந்தன. அவன் பயந்துபோய் கரையிலேறிக்கொண்டான்.

மேற்குவானத்தில் சூரியன் சரிந்து தென்னையோலைகளுக்கு மேல் பெரிய கனி போல் நின்றிருந்தது. அத்தனை ஓலைநுனிகளிலும் பொன்னிறமான துளிகள் தெறிப்பது போலிருந்தது.

அவன் கண்ணை மூடிக்கொண்டு நீரில் பாய்ந்து மூழ்கினான். அடியில் மணல் தரை பொற்துகள்கள். நிழல்கள் பொன்னிற அசைவுகள். பொன்னிற அலைகள். அவன் கண்களை திறந்து மேலேறி வந்து நின்றபோது காற்றே உருகி செம்பிழம்பென ஆகிவிட்டிருந்தது. சூரியன் பெரும்பாலும் மூழ்கிவிட்டது. பறவைகள் பொற்சிறகுகளுடன் சென்றன.

அவன் திரும்பி படியை நோக்கி ஓடினான். சுற்றிலும் தென்னந்தோப்புகள் இருண்டுவிட்டன. கற்படிகளிலும் இருள். ஒருகணம் தயங்கியபின் அவன் திரும்பி ஆற்றின் நீர்ப்பரப்புக்கு இணையாக மணல்பாதையில் விரைந்தான். மணல்மேட்டில் ஏறிநின்று சூரியன் அணைவதைப் பார்த்தான். அவன் கண்களே பொன்னாலான இரு குமிழிகளாக மாறிவிட்டது போலிருந்தது. ஆற்றங்கரையில் எவருமில்லை. ஒவ்வொன்றாக பொன்னிலாடி மூழ்கி மறைந்துகொண்டிருந்தன.

அனந்தன் அங்கே நின்று ஏங்கி அழுதான். ஏன் அழுகிறோம் என்றே அவனுக்குத்தெரியவில்லை. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. ஆனால் துயரம் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை.

[ 3 ]

அனந்தன் வீடு திரும்பியபோது இருட்டிவிட்டிருந்தது. அவனுக்கு பசித்தது. துண்டை காயப்போட்டுவிட்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தான். அம்மா அவனிடம் “எங்கடா போயிருந்தே?” என்றாள்.

“குளிக்க.”

“அதான் கேட்டேன், குளிக்க இவ்ளவு நேரமா?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“கேட்டதுக்கு பதில் சொன்னா என்ன? நீ என்ன பெரிய கவர்னர் துரையா?

அப்பா “என்னடி நாத்தம் வீட்டிலே?” என்றார் “சனியன் பிடிச்ச வீட்டிலே ஒரு வாய் வெள்ளம் நிறைவாட்டு குடிக்கமுடியுதா? ஏய் என்னடி நாத்தம்?”

“என்ன நாத்தம்?”என்று அம்மா கேட்டாள். “ஆமால்ல, டேய் நல்லா குளிச்சியாடா?”

“ஆமா.”

“வாறவளியிலே சாணிய மிதிச்சியோ?”

“இல்ல.”

“இது நம்ம சாணிநாத்தமில்லை… எருமச்சாணி மாதிரி…எருமைக்கு வயிறு எளகிப்போனா வாற நாத்தம்… எளவு, ஏதாவது சீக்கு வருதோ என்னவோ… போய் பாக்குதேன்.”

அப்பா கையில் டார்ச்சுடன் தொழுவுக்குச் சென்றார்.

“சோறு சாப்பிடுதியாடா?”

அனந்தன் சாப்பிட அமர்ந்தான். அம்மா தட்டுபோட்டு சோறு போட்டு மீன்குழம்பை ஊற்றினாள். அயிலை மீன். மீன் பொரிப்பும் இருந்தது.

“நாத்தமா அடிக்கு…என்னண்ணு தெரியல்லை” என்று அப்பா சொன்னார்.

“தங்கம்மை கைமறதியா என்னமாம் எங்கியாம் வச்சாளோ?” என்றாள் அம்மா.

“அவ நாளைக்கு வந்தா கேளு… என்னண்ணே தெரியல்ல.”

அனந்தன் சோற்றை அள்ளி மூக்கருகே கொண்டு சென்றான். மெய்யாகவே நாற்றம் அடித்தது. சாணியின் நாற்றம்தான்.

அவன் கீழே கையை தழைத்தான். பின்னர் கண்களை மூடியபடி சோற்றை வாயிலிட்டான். மெல்ல மெல்ல சுவை தெரிந்தது. மேலும் மேலும் மென்றான். அதுவரை அப்படி சுவையாக உண்டதே இல்லை என்று தோன்றியது.

“இன்னும் வேணுமாடா?”

“கொண்டுவாங்க.”

அவன் இரண்டாம் முறையும் தட்டை வழித்தபோது அம்மா “என்னடா, எங்கபோனே? மத்தியான்னம் சாப்பிட்டேதானே?” என்றாள்.

“சோறு” என்றான் அனந்தன், அதைக் கேட்காதவனாக.

“சரி இந்தா சாப்பிடு… நான் ஒரு பிடி அரிசிய கஞ்சிவச்சுக்கிடுதேன்.”

அவன் மீண்டும் இருமுறை சோற்றை போட்டு உண்டு எழுந்தான். கைகழுவிக் கொண்டிருந்தபோது களைப்பாக இருந்தது. தன் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டான்.

அப்பா கொல்லைப் பக்கம் வந்தார். “எடீ, கொஞ்சம் தண்ணி எடுத்து வை… குளிக்காம முடியாது”

“வெந்நி போடவா?”

“வேண்டாம், தண்ணி போரும்”

அவர் குளிக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. விளக்கைச் சுற்றி பறக்கும் பூச்சிகளை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவை பொன்னிறத் துகள்களாக இருந்தன.

“என்னமோ ஒரு நாத்தம்… என்னண்ணு தெரியல்ல.”

“என்னமாம் செத்த நாத்தமா இருக்குமோ?”

“அந்த நாத்தமில்லை. இது ஒருமாதிரி…”

அப்பா தலைதுவட்டிக் கொண்டு “உனக்க மகன் என்னமாம் வெளங்காப்போன வஸ்துவ கொண்டுவந்து ஒளிச்சு வச்சிருக்கானா? நாய்ப்புத்தியாக்கும்” என்றார்.

”அவன் என்ன கொண்டுவந்தான்? சும்மா சொல்லாதீங்க.”

“ஊரெல்லாம் நக்கி அலையுதான்… அவனை இண்ணைக்கு தவளைக்கண்ணன்கூட போறத பாத்திருக்காங்க… அவன் ஒரு வெளங்காப்பய.”

“சாப்பிடுறீங்களா?”

அப்பா கட்டிலில் சாப்பிட அமர்ந்தார். அம்மா தட்டில் கஞ்சியை கொண்டு சென்று வைத்தாள். அப்பாவுக்கு இரவில் கஞ்சிதான். தொட்டுக்கொள்ள பொரித்த மீன், வறுத்த கய்கறிகள், அப்பளம், வற்றல், வடகம் , மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய்.

அப்பா கஞ்சிமுன் அமர்ந்துகொண்டு “இந்த ரூமிலே நாத்தம் அடிக்குது” என்றார்.

“இங்க என்ன நாத்தம்?”

“ஏட்டி சொல்லுதேன்ல… இங்கதான். லைட்ட அடிச்சுப்பாரு.”

அம்மா விளக்கை அடித்து வீட்டுக்குள் பார்த்தாள். கட்டிலுக்கு அடியிலும் பீரோவுக்குப் பின்னாலும் பார்த்தாள்.

“ஒண்ணும் இல்ல.”

“உனக்கு நாத்தம் வருதா இல்லியா?”

“வருது… ஆனா..”

“என்ன ஆனா?”

“கஞ்சி குடியுங்க.”

“நீ குடி… இந்த நாத்ததிலே குடிக்க என்னால முடியாது…”

“கஞ்சிகுடிக்காம கிடந்தா…”

“செத்துபோயிட மாட்டேன்..எடுத்திட்டுப்போடி.”

அம்மா கஞ்சியை உள்ளே எடுத்துக்கொண்டு சென்றாள். அவளும் குடிக்கவில்லை.

அனந்தன் படுக்கையில் படுத்துக்கொண்டு கண்களை மூடினான். அவன் மெல்லிய இசையொன்றை கேட்டான். கண்களை விழித்துப் பார்த்தான். இசை கட்டிலில் இருந்து வருவதுபோல் இருந்தது. கட்டில் மெல்ல அதிர்வதுபோல.

சற்றுநேரம் கவனித்தபோது இசை நின்றுவிட்டது. அவன் எழுந்து சென்று அறைக்குள் நின்றபடி வெளியே செவிகூர்ந்தான். சிலசமயம் தொலைவில் ஏதாவது கோயிலில் போடப்படும் இசை அப்படி காற்றில் வந்து கேட்கும்.

அவன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். இசை கேட்கத் தொடங்கியது. தலைசுழல்வது போலிருந்தது. எழுந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஆனால் உடலை உந்தி எழமுடியவில்லை. கட்டில் கீழே விழுந்துகொண்டே இருந்தது. இருண்ட ஆழத்தில்.

அவன் கைகளால் கட்டிலைப் பிடித்துக்கொண்டான். இப்போது இசை தெளிவாகவே கேட்கத் தொடங்கியது. மிகமென்மையான இசை. அலைபோல அவனை தூக்கி அது ஊசலாட்டியது. புல்லாங்குழல் இசை போலவும் வயலின் இசைபோலவும் தோன்றியது.

அவன் அந்த இசைமேலேயே அலைபாய்ந்துகொண்டிருந்தான். நெடும்பொழுது கழித்து விழித்துக்கொண்டபோது சன்னல் வழியாக நிலவொளி உள்ளே வந்து விழுந்துகிடந்தது. இசையின் தாலாட்டு உடலில் எஞ்சியிருந்தது.

அவன் எழுந்து கதவைத் திறந்து வெளியே சென்றான். காலை எனத் தோன்றும் அளவுக்கு நிலவு. முற்றத்தின் கூழாங்கற்களெல்லாம் புடைத்து எழுந்து நின்றன. சாந்தி டீச்சரின் கன்னங்களில் பருக்கள் போல. தொழுவத்துக்கூரை வெள்ளிபோல மின்னியது. வைக்கோர்போரின் வளைவில் நிலவொளி நீராக வழிவதுபோலிருந்தது.

அவன் வெளியே இறங்கிச் சென்றான். முற்றத்தைக் கடந்துசென்று கொட்டகையை அடைந்து செங்கல் இடுக்கில் இருந்து அந்த பொட்டலத்தை எடுத்தான். அதைப்பிரித்தபோது உள்ளே அந்த செந்நீலநிற மணி தெரிந்தது. ஒளியேதும் இல்லை. ஒரு சிறிய மொட்டுபோல.

அதை நன்றாகப் பார்க்கும்பொருட்டு அவன் நிலவொளிக்கு வந்தான். நிலவொளி அதன்மேல் பட்டதுமே அது ஒளிகொள்ளத் தொடங்கியது. ஒளி பெருகியபடியே வந்தது. அவன் அந்த ஒளியால் மயங்கியவனாக அதைப்பார்த்துக்கொண்டிருந்தான். ஒளி பெருகிப்பெருகி கண்களை நிறைத்தது. அருகே நின்ற குட்டித்தென்னை ஒளியாக மாறிவிட்டிருந்தது.

மெல்லிய நீலநிற ஒளி. நிலவொளியுடன் நீலம் கலந்து உருவானது. அவன் அருகே எவரோ இருப்பதுபோல உணர்ந்தான். மூச்சொலி. உடலின் வெம்மை. ‘ஆரு?” என்றான்.

எவரென்று தெரியவில்லை. தென்னைமரம்தான் அப்படி ஒரு உணர்வை அளிக்கிறதா? வேறொருவர் கூட வந்து நிற்பதுபோல. “ஆரு?”என்று அவன் கேட்டான்.

மிக மெல்லிய பெண்குரல் சிரிப்பொலி. அவன் உடல் புல்லரித்தது எழுந்து நின்றுவிட்டான். “ஆரு? ஆரு?”என்றான்.

மேலும் ஒருவர். மிக அருகே. ஆனால் அவனால் அவர்களை காணமுடியவில்லை. கண்களை மூடியபோது மிக தெளிவாக அவர்களை உணர முடிந்தது. கைகளை நீட்டினால் தொட்டுவிடலாம்போல.

“ஆரு?” என்று அவன் கேட்டான்.

“நான்லா?”

அவன் உடல் குளிர்ந்து கல்போல ஆகியது. கைகளையும் கால்களையும் மட்டுமல்ல இமைகளைக் கூட அசைக்க முடியவில்லை.

“ஆரு?”

‘டேய் நான்தாண்டே… தெரியல்லியா?”

“இல்ல, நான் பாக்கல்ல.”

“டேய் இங்கபாரு.”

அங்கே எவருமில்லை என்றே கண்கள் காட்டின. மூச்சொலி. மிக மென்மையான ஒரு மணம். அது பொருட்களின் மணம் அல்ல. மலர்களின், தளிர்களின் மணம் அல்ல. வேறொன்று. உடல்மணம். வியர்வையின் மணம். மென்மையின் வெப்பத்தின் மணம்.

அவன் “வேண்டாம்” என்றான்.

“ஏன்?”

“வேண்டாம்.”

“ஏம்டே, என்னைய உனக்கு தெரியாதா?”

அவன் கையிலிருந்த நாகமணியை வீசிவிட்டு ஓடினான் கால் எங்கோ தட்டியது. கதவின்மேல் பாய்ந்து பிடித்துக்கொண்டு நின்றான். அறைக்குள் சென்று படுக்கையில் படுத்து போர்வையால் போர்த்திக் கொண்டான். அவன் உடல் நடுங்கி அதிர்ந்துகொண்டிருந்தது.

மீண்டும் கட்டிலில் இருந்து இசையெழத் தொடங்கியது. அவன் தாடை கிட்டித்து பற்கள் உரசிக்கொண்டன. உடல் உலுக்கி கூச்சமெடுத்தது. கண்கள் நீர்கொண்டன.

அவன் கட்டிலை கையால் அறைந்தான். பற்களில் இரும்பைக் கடித்த கூச்சம். எழுந்து நின்றான். அறை மென்மையாகச் சுழன்றுகொண்டிருப்பதைப்போல தோன்றியது.

தள்ளாடி சுவரைப் பிடித்துக்கொண்டான். மெல்ல தரையில் அமர்ந்தான். தலையை கையால் அறைந்துகொண்டு அழுதான். அவனைச்சூழ்ந்து சுவர்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. மெல்லிய தோற்பரப்புகள்போல .

[ 4 ]

காலையில் அவனை தங்கம்மை எழுப்பினாள். “பிள்ளே, எந்திரிக்கணும்… ஏன் கீளக்கெடந்து உறங்குது…?”

அவன் எழுந்தபோது தரையில் தூங்கியிருப்பதை உணர்ந்தான், வாயைத் துடைத்து ஆடையை சரியாக அமைத்துக்கொண்டான்.

தங்கம்மை “இப்பம் நேரம் என்னண்ணு தெரியுமா?”

அவன் ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றான். கலத்து நீரை அள்ளி முகம் கழுவினான். முகம் வெம்மைகொண்டிருந்தது. குளிர்நீர் பட்டதும் ஆறுதலாக இருந்தது.

அப்போதுதான் அந்த நாகமணியின் நினைவு வந்தது. அவன் வெளியே ஓடி கொட்டகைக்குப் பின்பக்கம் சென்றான். நாகமணி சாணியுடன் கீழே கிடந்தது. அதை எடுத்து பொட்டலமாக்கி மீண்டும் அந்த செங்கல் இடுக்கில் வைத்தான்.

செவலைக்கோழி கொக் கொக் என மேய்ந்துகொண்டிருந்தது. இயல்பாக திரும்பியவன் அதைக் கண்டான். அவன் தூக்கி வீசிய பழைய சாணி அது. அதில் சிறிய பொன்னிறப் புழுக்கள் செறிந்திருந்தன.

அவன் கூர்ந்து பார்த்தான். பொன்னால் செய்யப்பட்டவை போன்ற புழுக்கள். அவை அசையாமலிருந்தால் கம்மலில் இருந்தோ மூக்குத்தியில் இருந்தோ எடுக்கப்பட்ட ஆணி என்றே சொல்லிவிடலாம்.

“கோழி… போ கோழி”

ஆனால் செவலைக்கோழி மேலும் வெறிகொண்டு கொத்தியது. அதை விரட்டுவதில் பொருளில்லை. அது ஏற்கனவே தின்றுவிட்டிருக்கிறது. அது முழுக்க தின்பதுவரை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் கால்கள் தளர நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

“டேய், காப்பி வேணுமா?”

“வேணும்.”

அம்மா தந்த காப்பியை அவன் உறிஞ்சிக்குடித்தபடி ஒட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தான். அப்பு அண்ணா கையில் மண்வெட்டியுடன் வந்து அதை வைத்துவிட்டு “என்னவாக்கும்?”என்றார்.

“என்ன?”

“நாத்தம்ணு சொல்லுதாரு… வீடும் முற்றமும் தூத்து விருத்தியாக்கச் சொன்னாரு.”

‘ஆமா என்னமோ நாத்தம்” என்றான்.

அப்பு அண்ணா முகம் சுளித்து “இது என்ன நாத்தம்னாக்க, நாகலிங்க மரம் இருக்குல்லா? அதுக்க பூவு கீள விளுந்து அளுகிக் கிடக்கும்பம் வாற நாத்தமாக்கும்… “ என்றார் “தலைசுத்தும்.. அப்டி ஒரு விருத்திகெட்ட பீ நாத்தம்.”

”பீ நாத்தமா?” என்றான் அனந்தன்.

“பிள்ளே, அது பூக்குறப்ப பூ மணம், வாடுறப்ப பீ மணம். தூரத்திலே தெய்வமணம். பக்கத்திலே போனா நரகமணம்… அதாக்கும் நாகலிங்கப்பூவை நாகயச்சிக்க கோயிலிலே மட்டும் வைக்கணும்னு சொல்லுதது…”

அவன் காப்பியை குடித்தபின் எழுந்து சென்று “அம்மா இன்னும் கொஞ்சம் காப்பி”என்றான்.

“டேய் இருந்த காப்பி முளுக்க உனக்குல்லா குடுத்தேன்.”

தங்கம்மை “அம்மை பேசாம போவணும்.. எனக்க காப்பிய குடுக்கேன். வளரும் பிள்ளையில்லா…” என்றாள்.

“நேத்து ஒருகுண்டான் சோத்த தின்னான்.”

“அது இப்டியாக்கும். எனக்க பய செல்லன் ஒருபானை சோத்தை கமத்தியிட்டு திம்பான்… வளருத வயசிலே பயக்க அப்டியாக்கும்… பிள்ளே இஞ்சேருங்க காப்பி.”

அனந்தன் அந்தக்காப்பியையும் வாங்கி குடித்தான். துண்டை எடுத்துக்கொண்டு ஆற்றுப்பக்கம் சென்றான்.

திரும்பி வரும்போது இலஞ்சிமூட்டு நாகராஜா காவில் போற்றி பூசைசெய்துகொண்டிருந்தார். அவன் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவர் பூவும் நீரும் காட்டி சாந்திபூஜை முடித்து வெளியே வந்து “என்னடே, என்ன ஒரு களைப்பு?” என்றார்.

“ஒண்ணுமில்லை.”

”உறக்கம் இல்லியோ?”

”இல்லியே.”

“பாத்து எடுத்து நடந்துக்க கேட்டியா?” என்றார் போற்றி. “சிவனுக்க களுத்திலே இருக்கப்பட்டது நாகமாக்கும்.”

அவன் திடுக்கிட்டு “என்னது?”என்றான்.

“ஆலகாலவெசம் இருக்குதது சாமிகிட்டயாக்கும். சாமிக்கு அடங்கி இருக்குதது வரை அதுவும் சாமிதான்.”

அனந்தன் “ஆமா” என்றான்

போற்றி “நான் சொல்லுகதை பிறவு யோசிச்சுப்பாரு… புரியும்.”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“குளிச்சியா?”

“ம்.”

”வந்து கும்பிட்டுட்டுப் போ.”

அவன் அவருடன் நடந்தான். கோயிலுக்குள் நுழைந்து அவர் மடப்பள்ளியை நோக்கிச் செல்ல அவன் கருவறை முன் கைகூப்பி நின்றா. உள்ளே சிவலிங்கம் செவ்வரளி மாலை சூடி ஒற்றைச்சுடர் தூக்குவிளக்கொளியில் ஈரம் மின்னும் கருமையுடன் தெரிந்தது.

அவன் எதையும் வேண்டிக் கொள்ளவில்லை. கைகூப்பி பார்த்துக் கொண்டிருந்தான். போற்றி வந்து மணியோசை எழுப்பி உள்ளே சென்றார். உள்ளிருந்து வாழையிலையில் சந்தனம் கொண்டு வந்து தந்தார். அவன் அதை நெற்றியில் போட்டுக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்

உடல் ஓய்ந்தது போல் இருந்தது. அவன் திண்ணையில் அமர்ந்து வெயில் ஏறிவருவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பு அண்ணா “வீடு முளுக்க பாத்தாச்சு… ஒண்ணுமில்லை. நாறுது நாறுதுண்ணு சொல்லுதாரு” என்றார்.

தங்கம்மை “நானும் உள்ள அம்பிடும் பாத்தாச்சு… ஆனா நாத்தம் இருக்கு” என்றாள்.

“இனி, வல்ல செய்வினையோ மற்றோ இருக்குமோ?”

“ஆமா செய்வினை…போபிலே.”

“இல்ல தங்கம்மை… இருக்கும். இப்பமே பலபேருக்கு கண்ணுல்லா?”

”செய்வினை வைக்கணுமானா ஆருக்காவது அவ்ளவு கோவம் இருக்கணும். இவரு அப்புராணியில்லா?”

“என்னமோ நான் சொன்னேன்… பிறவு உங்க இஷ்டம்.”

“டேய் அனந்தாம், இட்டிலி திங்குதியாலே?”

“வாறேன்.”

அவன் எழுந்து அடுக்களைக்குச் சென்றான். அம்மா அவனைக் கூர்ந்து பார்த்து ”என்ன உனக்கு?”என்றாள்.

“ஒண்ணுமில்ல.”

“காய்ச்சலிருக்கா?”என்று தொட்டுப்பார்த்தாள் “இல்லியே.”

அவன் “உறக்கமில்லை” என்றான்.

“ஏன்?”

“சொப்பனம்” என்றான் அனந்தன்.

“ஏன் ஒருமாதிரி சிரிக்கே?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“நீ மண்ணுமூடு சாஸ்தாவை நினைச்சுக்கிட்டே படு என்ன? வா இட்டிலி தின்னு.”

அவன் அமர்ந்தான். அம்மா இட்லி தட்டிலிருந்து இட்லியை போடுவதற்குள் தட்டை அவனே கவிழ்த்தான். மொத்த இட்லிகளும் தட்டில் விழுந்தன.

“டேய் டேய் சூடுடா.”

அவன் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்தான். வாய் வேகுமளவுக்கு இட்லி சூடாக இருந்தது. வெறும் இட்லியையே நாலைந்து விழுங்கிவிட்டிருந்தான்.

“இரு சட்டினி கொண்டாரேன்.”

சட்டினிக்கு அவன் இன்னொரு தட்டு இட்லி போட்டுக்கொண்டான்.

“என்னடீ இது, இப்டி திங்குதான்?”

“திங்கட்டு அம்மிணி… கண்ணு போடாதிய, அம்மைகண்ணு ஆறாக்கண்ணாக்கும்.”

“இல்லே… வல்ல யட்சியோ மற்றோ பிடிச்சிருக்குமோ.”

“சும்மா போவணும்…”

அனந்தன் மேலும் ஒரு தட்டு சாப்பிட்டுவிட்டு எழுந்துகொண்டான். சென்று புறந்திண்ணையில் அமர்ந்தான். உடலெங்கும் அசதி நிறைந்திருந்தது. கைகால்கள் உளைச்சலெடுத்தன. அப்படியே கண்ணயர்ந்து ஆழ்ந்து உறங்கினான்.

அவன் விழித்துக்கொண்டபோது உடல் குளிர்கொண்டதுபோல நடுங்கியது. அந்தக்கனவுகள் ஒவ்வொன்றாக நினைவிலெழுந்ததன.

எழுந்துசென்று முகம் கழுவிக்கொண்டான். கையில் நீருடன் அலைபாயும் நிழல்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“அவனுக்கு என்னமோ ஆச்சுடீ… தீனம் கண்ட கோளி மாதிரில்லா இருக்கான்?” என்றாள் அம்மா.

“செரி ஒருநாளு இருக்கட்டும்… நாளைக்கு பாப்பம்… காய்ச்சலு இல்லல்லா?”

அனந்தன் மெல்ல நடந்து தன் அறைக்குச் சென்று அமர்ந்தான். அவன் உள்ளம் முழுக்க உருவங்களாக ஆகாத நெளிவுகள் நிறைந்திருந்தன. கட்டிலில் படுத்துக்கொண்டு மச்சின் உத்தரங்களை பார்த்தான். அவை நெளிந்துகொண்டிருந்தன. நீர்ப்பிம்பங்களைப்போல.

வெளியே போற்றி வந்திருப்பது தெரிந்தது. அப்பாவிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார்.

“லெச்சணங்களைக் கண்டா நாகயக்ஷிக்குள்ளதாக்கும். ஆனா இப்பம் இதெல்லாம் ஆரு நம்புதாக?”

“நாகயக்ஷியுமில்ல மயிருமில்ல… என்னமோ நோய். சிலநோய்களுக்கு அதுக்குண்டான நாத்தம் உண்டு…”

“அதும் உள்ளதாக்கும் வைசூரிக்கு ஒருமாதிரி திரிஞ்சபாலுக்க மணம் உண்டு.”

“பயல நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன். பாப்பம், இண்ணைக்குள்ள ஏதாவது அடையாளம் தெரியுதான்னு.”

“வேணுமானா ஒரு சின்ன ரெக்ஷை எளுதி கெட்டலாம்.”

“எதுக்கு?”

”இல்ல நாகயக்ஷிண்ணாக்க…”

”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். மனுசன் சந்திரமண்டலத்திலே காலு வச்சாச்சு… இங்க நாகயக்ஷி… சும்மா இரும்வே போத்தி.”

“செரி, நாம சொல்லுகதை சொல்லியாச்சு” என்றார் போற்றி “வேணுமானா விசாலம் செய்யட்டு.”

“அவளுக்கு என்ன தெரியும்?”

“இல்ல அவளுக்க ஒரு ஆறுதலுக்காக… நீங்க ஆஸ்பத்திரிக்கு பையன கொண்டுபோற நேரத்திலே இங்க ஒரு சின்ன பூசை. அவன் வந்ததும் ஒரு ரெக்ஷை… நீங்க இருக்கவேண்டாம்.”

“என்னமோ கொண்டாடுங்க, எங்கிட்ட கேக்காதீங்க.”

“அவனுக்க முகத்திலே இருக்கப்பட்ட சிரிப்பை கண்டுதா வே? அது கந்தர்வனுக்க சிரிப்பாக்கும்”

அப்பா வெற்றிலையைக் கொப்பளித்தார். அவன் கூரையின் நெளிவுகளை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த ஒசையும் நெளிவதாகத் தோன்றியது. கண்களை மூடியபோது அவன் நெளிவுகளை பார்க்கத் தொடங்கினான்.

அம்மா உள்ளே வந்து அவனை பார்ப்பதை அவன் பார்த்தான். ஆனால் அவன் தூங்கிக்கொண்டும் இருந்தான். அம்மா அவனை குனிந்து பார்த்து கொண்டு நின்றாள். பின்னர் அவன் நெற்றியிலும் கழுத்திலும் கையை வைத்தாள்.

அவன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். அவளை சிவந்த கண்களால் பார்த்தான். அவள் யார் என்றே தெரிந்து கொள்ளாதவனைப்போல. அவள் அவன் நெஞ்சிலும் கழுத்திலும் கையை வைத்தபின் ”என்னடா செய்யுது” என்றாள்.

அவன் மெல்ல முனகினான்.

“உடம்பு வலிக்குதா?”

“இல்ல.”

“காய்ச்சல் இல்ல.. பின்ன உனக்கு என்ன செய்யுது?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“ஏம்லே இப்டி சிரிக்குதே?”

”இல்லியே.”

”உன் மூஞ்சியிலே சிரிப்ப வரைஞ்சு ஒட்டினமாதிரி இருக்கு.”

அம்மா வெளியே சென்றாள். அவன் எழுந்து சென்று தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். அவனுக்கே திகைப்பாக இருந்தது. அவன் முகத்தில் கோயில் சுற்று மதிலின் சுவரோவியங்களைப்போல ஒரு மயங்கிய சிரிப்பு இருந்தது.

அம்மா எட்டிப்பார்த்து “சாப்பிடுதியா? வா” என்றாள்.

அவன் வெளியே சென்று சாப்பிடுவதற்காக அமர்ந்தான். அம்மா சோறு போட்டாள். அவன் வெறியுடன் உருட்டி உருட்டி சாப்பிடத் தொடங்கினான்.

‘நல்லா திங்குதான். பசிக்கு கொறவு இல்ல. அதான் பாக்குதேன்” என்று அம்மா சொன்னாள்.

அப்பா பக்கத்து அறையிலிருந்துகொண்டு “அவனுக்கு என்ன செய்யுதுண்ணு கேளு” என்றார்.

“ஒண்ணும் செய்யல்லண்ணு சொல்லுதான்.”

”மோணையன்… இவன பெத்து வளக்குத லெச்சணத்துக்கு… ஆம்புளைண்ணா ஒரு இது வேணும்… செத்த சவம்… வந்தா அவனை வெட்டி வாளைக்கு போட்டிருவேண்ணு சொல்லு… நாறப்பய”

“கொஞ்சம் வாய வச்சுட்டு சும்மா இருக்குதியளா?”

“நீ வாய மூடுடீ… நீ பெத்த பயதானே? உனக்க காளிவிளாகத்து குடும்ப புத்திதானே இருக்கும்.”

“புத்திதான் தெரிஞ்சிருக்கே.”

“என்னடீ புத்தி? புத்தியப்பத்தி உனக்கு என்னடி தெரியும்? நாயே, ரெண்டுபேரையும் வெட்டி புதைச்சிருவேன்.”

“ஆம புதைச்சாங்க.”

“எடீ, வேண்டாம், வேண்டாம் கேட்டியா?”

“அதான் நான் சொல்லுதேன்… வேண்டாம்!”

“நான் போறேன். சாவுதேன்… எங்கியாம் போயி சாவுதேன்.”

“தொடங்கியாச்சு.”

“எனக்கு முடியல்ல… நான் செத்தாத்தான் நீயெல்லாம் எனக்க அருமையை அறிவே.”

அனந்தன் “இன்னும் கொஞ்சம் சோறு” என்றான்.

“பாரச்சனியனே, என்னைய எடுத்து தின்னு.”

”அவன எதுக்குடி திட்டுதே? என்னைய வந்து திட்டு… வந்து அடிடீ.”

“அறிவுகெட்டநாயி… சோறுகாணாத பரதேசி மாதிரி.”

“ச்சீ, தேவ்டியா நாயே.”

அப்பா பாய்ந்து வந்து கீழே அமர்ந்திருந்த அம்மாவை ஓங்கி உதைத்தார். அவள் பக்கவாட்டில் சாய்ந்து விழ அருகில் இருந்த செம்பை எடுத்து எறிந்தார். அது உருண்டு அப்பால் சென்றது.

“வெட்டீருவேன்… வெட்டி சாய்ச்சிருவேன்”

அம்மா வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“என்னடி பார்வ? ஏய் என்னடி பார்வை? கொன்னிருவேன்! நான் முன்னபின்ன பாக்கமாட்டேன்.”

அனந்தனின் தங்கை எழுந்து அமர்ந்து அழத்தொடங்கினாள்.

“சீ வாய மூடு… எல்லா சனியனும் வந்து என்னைய கொல்லுங்க.”

அப்பா மீண்டும் வெளியே சென்றார். மூச்சிரைக்க நடந்தபின் திண்ணையில் சென்று அமர்ந்தார்.

“இன்னும் சோறு.”

அம்மா அவனை வெறித்துப் பார்த்தாள். நேராகச் சென்று மொத்த சோற்றுக்கலத்தையும் தூக்கிக்கொண்டுவந்து அவன் முன் வைத்தாள்.

அவன் சோற்றை அள்ளி தட்டில் போட்டுக்கொண்டான். குழம்பு இல்லை. வெறும் சோற்றையே உருட்டி உருட்டி தின்றான். அவள் வெறுமே நோக்கிக்கொண்டிருந்தாள்.

அவன் எழுந்து கைகழுவிவிட்டு சென்று மீண்டும் படுத்துக்கொண்டான். உடல் சோறு நிறைந்து எடையாக இருந்தது. ஆகவே படுத்ததும் இதமாக உணர்ந்தான்.

இமைகள் கனத்து ஒட்டிக்கொண்டன. பற்கள் கூசி ஒன்றோடொன்று உரசிக் கொண்டபோது தலைக்குள் உலோகக்கம்பிகள் மீட்டும் இசை. இசை அவனை உடல் விதிர்க்கச் செய்தது. கைவிரல்கள் அதிர்ந்தன. கால்கள் வலிப்பு போல இழுத்துக் கொண்டன. ஆனால் அந்த இசை அவனை மயங்கவும் செய்தது. மிகமிக கூரிய இசை. மிகமிக ஆழத்துக்குள் செல்லும் இசை.

கண்களிலிருந்து கண்ணீர் வழிய அவன் அந்த இசையைக் கேட்டுக் கொண்டிருந்தான். மிகத்தொலைவுக்குச் சென்று அங்கிருந்து அவன் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அக்கட்டிலில் படுத்திருந்தான். அவனருகே ஒரு பொன்னிறமான நாகம் அவனை தழுவி இறுக்கி மெல்ல நெளிந்து கொண்டிருந்தது.

அப்பா மெல்ல எழுந்து வந்தார். அம்மா தரையில் பாய் விரித்து தலை அருகே வைக்கப்பட்ட சிம்மினி விளக்கின் ஒளியில் படித்துக்கொண்டிருந்தாள். அவர் அருகே நின்றார். அவள் திரும்பிப்பார்க்கவில்லை. அவர் கனைத்தார். அவள் அதையும் பொருட்படுத்தவில்லை. அவர் காலால் அவளை மெல்ல தொட்டார் அவள் நிமிர்ந்துபார்த்தாள்.

“போட்டுடீ… தெரியாம செஞ்சுபோட்டேன். எனக்க கவலையிலே.”

அவள் “ம்” என்றாள்.

அப்பா திரும்பி அவனை பார்த்தபின் “கோவம் வந்தா அது அப்டியே வெஷமா மண்டைக்கு ஏறிடுதுடி… என்னன்னு செய்ய… கிறுக்கனாக்கும் நான்” என்றார்.

அம்மா மெல்லிதாக புன்னகைத்து “தெரியுமே”  என்றாள்.

”பிறவு என்னத்துக்கு சீண்டுதே?”

“சும்மா” என்றாள் அம்மா.

“வாடி.”

அம்மா எழுந்து கலைந்த தலையை சுழற்றிக் கட்டிக்கொண்டு அப்பாவுடன் வெளியே சென்றாள். அவன் அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த அறையெங்கும் நிழலுருக்களாக நாகங்கள் இருந்தன. அவை சுவரோரமாக வழிந்தன. மூலைகளில் படமெடுத்தன. ஒன்றையொன்று சந்தித்ததும் தழுவிக்கொண்டு முகம் நோக்கி சீறின. வால்கள் துடிக்க எழுந்து எழுந்து விழுந்தன.

[ 5 ]

அவன் கண்விழித்தபோது வியர்வையில் உடல் நனைந்திருந்தது. தாகம் எடுத்தது. உடலே வரண்டு எரிவதுபோலிருந்தது. எழுந்து அமர்ந்தான். சூழ்ந்திருந்த இருட்டை பார்த்தபின் மெல்ல காலடி எடுத்து வைத்து அம்மாவை கடந்து நடந்தான்.

அடுக்களையில் நுழைந்து சூழ நோக்கியபோது செம்புக்கலத்தில் நீர் இருப்பதைக் கண்டான். அதை அப்படியே தூக்கி குடித்தான். நீர் கால் கட்டைவிரல்நுனி முதல் தொடங்கி மூக்குவரை நிறைந்து தளும்பியது. உடனே முழுமையாக வற்றி மீண்டும் எரிந்தது. மீண்டும் குடித்தான். மீண்டும் மீண்டும் குடித்தபின் கலத்தை கீழே வைத்து சுவரில் சாய்ந்து நின்றான்.

அவன்மேல் சுவர் சாய்ந்திருந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டான். உடலில் இருந்து நீர் ஆவியாகிக்கொண்டே இருந்தது. அவன் கண்களிலிருந்து நீர் வழிந்து நெஞ்சில் சொட்டியது.

மூக்கை உறிஞ்சியபடி அவன் அவன் மெல்ல அடுக்களைக் கதவைத் திறந்து வெளியே வந்தான். நிலவு சாய்ந்த நிழல்களை உருவாக்கியிருந்தது. முற்றம் குளிர்ந்து கிடந்தது. உயிருள்ள சருமம் போல ஒளிகொண்டிருந்தது.

அவன் காலை வைத்தபோது முற்றம் தசைபோல விதிர்ப்பதாக உணர்ந்தான். மிக மெல்ல நடந்து சென்றான். கொட்டகைக்குப் பின்னால் சென்று செங்கல் இடுக்கிலிருந்து அந்த பொட்டலத்தை எடுத்தான். திறந்து பார்த்தபோது அந்த சாணியும் ஒளிகொள்வதை கண்டான்.

நோக்க நோக்க அது ஒளிபெற்றபடியே வந்தது. மீண்டும் அதை பொதிந்தபின் எடுத்துக்கொண்டு மறுபக்கம் சென்றான். அங்கே கப்பத்தென்னைகளுக்கு அருகே கழிப்பறை இருந்தது. பூசப்படாத செங்கற்கள் கொண்டு கட்டிய சுவர்களுக்குமேல் ஓலைக்கூரை கொண்ட ஒற்றை அறை.

அதை வெட்டி பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அப்பாதான் கழிப்பறை கட்டவேண்டும் என்று முடிவுசெய்து ஆளைகூட்டிவந்தார். கிணறு வெட்டும் தொம்பர்கள். அப்பாவே நின்று அவர்களுக்கு வெட்டவேண்டிய குழியின் அளவுகளைக் குறித்துக்கொடுத்தார். மூன்றடி விட்டமுள்ள குழி. பத்தடி ஆழம்.

அனந்தன் அன்று அவர்கள் தோண்டுவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பா ஆபீஸ் போய்விட்டார். அவர்கள் மிகவேகமாக வெட்டினார்கள். ஒருவன் உள்ளே மண்ணை கூடையில் வெட்டி வைக்க மேலே நின்ற ஒருவன் அதை கயிற்றால் இழுத்து எடுத்தான். அதற்குரிய சகடையை அவர்களே கொண்டுவந்திருந்தார்கள்.

சாயங்காலம் அப்பா வந்து குழியைப்பார்த்தபோது கொதித்தார். ஐந்தடி அகலத்திற்கு இருபதடி ஆழத்துக்கு தோண்டி வைத்திருந்தனர். “ஏலே கிணறாலே வெட்டச்சொன்னேன், நாயிகளா…. உங்க கிட்ட என்னலே சொன்னேன்.”

“விடுங்க வே… அவனுக்குத்தெரிஞ்சதுல்லா அவன் வெட்டுவான்… நாம இதை செரியாக்கலாம்” என்றார் பெருவட்டர்.

ஏற்கனவே குழிக்கு கல்லாலான மூடி செய்யப்பட்டிருந்தது. அதை போடமுடியவில்லை. ஆகவே பெரிய அயனிமரத்தடியை கொண்டுவந்து வெட்டி குறுக்காகப் போட்டு அதன்மேல் பலகையானால மூடி போட்டு கழிப்பறை அமைக்கப்பட்டது.

அவன் இரும்புவாளியில் நீரை எடுத்துக்கொண்டு அதற்குள் சென்று ஆடையை அவிழ்த்து சுவரில் கொண்டியில் மாட்டியபின் கழிப்பறைக் குழிக்கு மேல் அமர்ந்தான். மலம் நேராகவே குழிக்குள் விழும்படியானது அது.

அந்த பொதியை அவிழ்த்து காலடியில் வைத்துக்கொண்டான். மலம் வந்ததும் அதன்மேல் அதை நேரடியாகவே போடலாமென நினைத்தான். முக்கியதும் மலம் வருவதுபோல் இருந்தது. அவன் எழுந்து உடலை ஒசித்ததும் கழிப்பறை அமைந்திருந்த மரத்தடி முனகலோசையுடன் முறிந்தது.

அவன் பயந்து சுவரை பிடிக்க முயல அங்கே பிடிமானம் ஏதும் இருக்கவில்லை. அது சரிந்து அவனை உள்ளே தள்ளியது. அவன் தவித்து அங்குமிங்கும் கைகள் பரிதவித்தான். கழிப்பறை மரமூடி உள்லே விழுந்தது. அந்தப்பொதி கூடவே உள்ளே விழுந்துவிட்டது.

அவன் காலடியில் மரப்பலகையாலான மூடி விழுந்து இருளில் மூழ்கியது. அதைத்தொடர்ந்து அயனிமரத்தடியின் ஒரு பெருந்துண்டு உடைந்து உள்ளே சென்றது. உள்ளிருந்து மிகமிக இனிமையான வாசனை எழுந்தது. தாழம்பூ போல, நாகலிங்கப்பூ போல. இல்லை, வியர்வை கலந்த உடலின் வாசனை. அவன் அந்த மணத்தில் உளம் மயங்கி சிலகணங்கள் நின்றான்.

அவன் காலடிகள் நழுவி விளிம்பை அடைந்தன. ஒருகால் அடியில்லாமல் தவித்தபோதுதான் அவன் பதற்றமாக தன் உடல் கீழே செல்வதை உணர்ந்தான். ஒரே உந்தில் மற்றக்காலால் விளிம்பை மிதித்தான். மறுபக்கம் விழுந்து கையை ஊன்றி முறிந்து சரிந்த அயனிமரத்தடியை பிடித்தான். தவழ்ந்து உருண்டு எழுந்து அப்பால் சென்றுவிட்டான்.

அயனித்தடி பிரிந்து மண்ணுடன் கீழே சென்றது. அவன் நடுங்கியபடி அதை பார்த்து அமர்ந்திருந்தான். உள்ளே தடிகள் விழுந்து அமிழும் ஓசை. உடலை உலுக்கும் கெட்ட நாற்றம் எழுந்து அவனைச் சூழ்ந்தது. அவன் வயிறு அதிர குமட்டி வாந்தியெடுத்தான். உண்டவை அவனுள் இருந்து வெளிவந்தபடியே இருந்தன.

[ 6 ]

அனந்தன் ஐந்து நாட்கள் கடுமையான காய்ச்சலில் கிடந்தான். அன்றிரவு கைகளை ஊன்றி தவழ்ந்து புறவாசல் முற்றம் வரை வந்து அங்கிருந்த நீரை குடித்து அங்கேயே விழுந்துவிட்டான். மறுநாள் காலையில்தான் அம்மா அவனைப் பார்த்தாள்.

அவனுக்கு காய்ச்சல் வந்தது. குலசேகரம் ஆஸ்பத்திரியில் மூன்றுநாள் இருந்தான். காய்ச்சல் குறையத்தொடங்கியதும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். நான்காம்நாள் தான் அவன் கண்விழித்தான். அவனுக்கு எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை.

அம்மா அவன் முனகலைக் கேட்டு ஓடிவந்தாள். “என்னடா, டேய், என்ன?”என்றாள்.

“தண்ணி” என்றான்.

அம்மா கொண்டுவந்த டீயை அவன் ஊதி ஊதி குடித்தான். வாயும் உடலும் வெந்திருந்தன. ஆகவே சூடு உறைத்தது. ஆனால் டீ உள்ளே சென்றதும் அவன் உடல் ஆற்றல் பெற்றது.

வியர்த்து மெல்ல அடங்கியதும் அவன் எழுந்து அமர்ந்தான்.

“படுத்துக்கோ” என்று அம்மா சொன்னாள்.

“கொஞ்சநேரம் இருக்கேன்” என்றான்.

அவனை அம்மா கைபிடித்து வெளியே கூட்டிச் சென்றாள். புறவாசலில் கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன. அப்பால் புதிய கழிப்பறை கட்டப்பட்டிருந்தது. தகரச்சுவரும் தகரக்கூரையும் கொண்டது.

“சர்வோதயாவிலே கெட்டிக்குடுத்தது… வெறும் நாநூறு ரூபா செலவு. அதை ரெண்டு வருசமா சொல்லுதேன். கேட்டாத்தானே? நல்லவேளை கெட்டது ண்ணும் நடக்காம குமாரகோயில் முருகன் காப்பாத்தினான்” என்று அம்மா சொன்னாள்.

அவன் திண்ணையில் அமர்ந்தான். புதியகாற்று உடலுக்கு இனிமையாக இருந்தது. கால்களை நீட்டிக்கொண்டு மாமரத்தின் இலையசைவை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் மீண்டும் கழிப்பறையைப் பார்த்தான்.

தங்கம்மை “அம்மிணி இத பாத்தியளா?”என்றபடி வந்தாள். அவனை பார்த்ததும் “அய்யோ பிள்ளை தேறிப்போச்சே… நல்லா ஆயிரிச்சு பிள்ளே… இனி ஒண்ணும் இல்லை” என்றாள்.

அவன் புன்னகைத்தான்.

“என்னடி?” என்றள் அம்மா.

“நம்ம செவலக்கோளிக்க முட்டையாக்கும்… என்னம்பா இருக்கு பாருங்க.”

அவன் எட்டிப்பார்த்தான். அம்மா அதை கையில் வாங்கி “கோளிமுட்டையா?” என்றாள்.

அதில் பொன்னிறத்தில் ஒரு வளையம் இருந்தது.

”பவுனுலே மாலையிட்டது மாதிரில்லாட்டீ இருக்கு?”

“ஆமா” என்று தங்கம்மை சொன்னாள். “என்னமோ பவுனு மின்னுதேண்ணு போயி பாத்தேன்… செவலக்கோளி முட்டைய இட்டுட்டு எந்திரிக்குது.”

அம்மா “என்னடீ இது? இப்டி உண்டா?”என்றாள் “பயமாட்டு இருக்குடீ.”

“அம்மிணி போத்திகிட்ட கேக்கணும்” என்றாள் தங்கம்மை.

“நீ போயி கூட்டிட்டுவாடீ… இங்கிணதான் கோயில் மண்டபத்திலே இருப்பாரு.”

அனந்தன் “ கொண்டா” என்று கைநீட்டினான்.

“உடைச்சுப்பிடாதே… உள்ள என்ன இருக்குண்ணு நாம என்ன கண்டோம்.”

அவன் அதை வாங்கி புரட்டிப்பார்த்தான். பொன்னாலான ஒரு மெல்லியகோடு

“எந்தக் கோளி?”

“நம்ம செவலைல்லா?”

அம்மா அதை வாங்கிக்கொண்டு “என்னமோ ஏதோ… நல்லதுக்குண்ணு தோணல்ல.”

போற்றி வேகமாக வந்தார். அவனைப் பார்த்ததும் “அய்யோடா, எந்திரிச்சாச்சே…” அம்மாவிடம் “எங்க?” என்றார்.

அம்மா அதைக்கொடுக்க வாங்கிப்பார்த்தார்.

“என்னண்ணு எனக்கும் தெரியல்ல. ஆனா ஒரு கதை உண்டு” என்றார் “சேவக்கோளி பெட்டைக்கோளியை அணையுததை சிலசமயம் நாகம் பாத்துப்போடும். பெட்டைக்கோளி தனியா நிக்குறப்ப அதுகேறி அணைஞ்சுபோடும். அப்டி அணைஞ்சா அந்தக்கோளி பொன்முட்டைபோடும்ணு சொல்லுவாங்க.”

“அய்யோ.”

“அது நாம பயப்படவேண்டாம்… கண்ணன்கொளத்து நாகயக்ஷி கண்கண்ட தேவதையாக்கும்… அங்கிண கொண்டு அவளுக்க முன்னாடி வச்சு கும்பிடுவோம். பின்ன அவளுக்க ஹிதம்… ஒரு தீங்கும் வராது. பய எந்திரிச்சுட்டான்லா.”

அம்மா “நாகம்மே, பரதேவதே” என்று கும்பிட்டாள்.

போத்தி “இப்பம் முகம் தெளிஞ்சுபோட்டு… முன்னாடி என்னமோ கதகளி வேசம் புஞ்சிரிச்ச மாதிரிலல முகம் விரிஞ்சிருந்தது…. இப்பம்தான் மனுஷப்பார்வை வந்திருக்கு” என்றார். “நல்லா குளிப்பாட்டீட்டு கோயிலுக்கு கொண்டுவாங்க, ஒரு வழிபாடு களிச்சுப்போடுவோம்”

***

முந்தைய கட்டுரைவீடுறைவு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19