கொரோனோவும் இலக்கியமும்

 

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தங்கள் தளத்தை அவ்வப்போது வந்து வாசிப்பவன் நான். தங்கள் தளத்தை சென்ற நாட்களாக வாசிக்கையில் நாட்டு நடப்புகளுடன் சம்பந்தமே இல்லாமல் இருப்பதாகத் தோன்றுகிறது. கோவிட் கொள்ளைநோய் உலகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது. அதனிடமிருந்து தப்புவது எப்படி என்று மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மோடி அரசு போதுமான அளவுக்கு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. அதேசமயம் தனிமைப்படுத்தலும் பிரச்சினையாக உள்ளது. எல்லா ஊடகங்களிலும் இதேபேச்சுத்தான் உள்ளது. நீங்கள் மக்களை அறிவுறுத்தி வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. தவறு என்றால் மன்னிக்கவும்

செந்தில் பழனிச்சாமி

 

அன்புள்ள செந்தில்

நன்றி. நீங்கள் சொல்வதுபோல எல்லா ஊடகங்களிலும் இதே பேச்சுத்தான் உள்ளது. ஓரளவு ஊடகங்களைக் கவனிப்பவர்களுக்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று தெரிந்திருக்கும். அதை கடைப்பிடிப்பது மட்டுமே இப்போது செய்யவேண்டியது.

மற்றபடி கோவிட் வைரஸ் பற்றிய அத்தனை புள்ளிவிவரங்களையும் தெரிந்துகொள்வது, தகவல்களையும் வதந்திகளையும் சேகரிப்பது, அரசியல்நிலைபாடு மதநிலைபாட்டுக்கு ஏற்ப கருத்துக்களாக மாற்றிக்கொள்வது, முடிந்தவரை பரப்புவது எல்லாமே இன்னொரு வகை வைரஸ் செயல்பாடுகள். எவரும் அவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த முன்முடிவுகளைக் கடந்து ஒரு சொல் கூட சொல்லப்போவதில்லை

இச்சூழலில் எனக்குத்தேவை எனத் தோன்றியது உள்ளத்தை தூய்மையாக, உயர்வாக வைத்துக்கொள்ளுதல். அதுவே மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரே வழி. இலக்கியம் என்னும் இந்த தேவதையை இதுநாள் வரை நம்பி உபாசித்து வந்தேன். இப்படிப்பட்ட நேரத்தில்தானே அவளை மேலும் சார்ந்திருக்கவேண்டும். அவள் எனக்கு மேலும் கனியவேண்டும்.

ஒரு சின்ன நெருக்கடி வந்தாலும் உடனே  ‘இலக்கியமாவது மண்ணாவது’ என்று பேச ஆரம்பிப்பது இங்கே வழக்கம். அவ்வாறு பேசுபவர்கள் இலக்கியவாதிகளோ இலக்கிய வாசகர்களோ அல்ல. அவர்களுக்கு இலக்கியம் ஒருவகை வம்பு, ஒருவகை கேளிக்கை. எனக்கு அப்படி அல்ல, எனக்கு அதுதான் அரசியல், ஞானம், தெய்வம் எல்லாமே. என்றும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். அது என்னை கைவிட்டதில்லை.

உண்மையில் நீங்கள் இருக்கும் இதே மனநிலையில்தான் இங்கே பலர் இருக்கிறார்கள். நானறிந்த பெரும்பாலான வழக்கமான நண்பர்கள், வாசகர்கள் இக்கதைகளைப் படிக்கவில்லை. அவர்களால் கோவிட் செய்திகளை தவிர எதையுமே படிக்க முடியவில்லை. வேறெதையும் பேசவும் முடியவில்லை.

வாழ்க்கையை வெறும் அர்த்தமற்ற சலிப்பாக வாழ்பவர்கள்தான் இப்படி எதிர்மறையாக ஏதாவது கிடைத்தால்கூட அதைவைத்துக்கொண்டு பரபரப்பாக்கி எதிர்மறைக் கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள். அவர்களுக்கு இலக்கியமும் ஒருவகை வம்பாகவே பொருள்படும்.

என் இலக்கியப்பார்வை அது அல்ல. எந்நிலையிலும் அது ஒரு மீட்புசக்தி. எப்போதும் உடனிருக்கும் அந்தரங்கக் களியாட்டு. அழிவிலும் துயரிலும்கூட புன்னகைக்கும் தெய்வம்

ஆகவே எனக்காகவே எழுதுகிறேன். எழுத எழுத என்னை நிறைவுறச் செய்யும் கதைகள் வந்தபடியே இருக்கின்றன. ஒரு கதை எழுதினால் ஒன்பது கதைக்கரு வந்து முட்டுகிறது. விதவிதமான உலகங்கள். வெவ்வேறு வாழ்க்கைகள். ஆனால் எல்லாமே ஒளியுள்ள கதைகள். அவை என்னை ஒளிபெறச் செய்கின்றன. ஒவ்வொரு நாளும் முகமலர்ச்சியுடன் எழுகிறேன். அகம்நிறைந்து தூங்கச் செய்கிறேன். இந்நாட்கள் ஆழ்ந்த தியான அனுபவமாக, பெரும் கொண்டாட்டமாகச் சென்றுகொண்டிருக்கின்றன.

அவ்வாறு நான் செல்லும் இடத்திற்கு உடன் வரும் ஓரிருவர் உண்டு என நான் நம்புகிறேன் வாழ்க்கையை இலக்கியம் நிறைப்பது பற்றிய நம்பிக்கை கொண்டவர்கள்.இவற்றை அவர்களுக்காகவே வெளியிடுகிறேன்

அவர்கள் பலர் படிக்கிறார்கள், கடிதங்கள் எழுதுகிறார்கள். பெரும்பாலும் வெளிநாடுகளில் தனிமையில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள். அவர்களும் பெரும்பாலும் வழக்கமான, தெரிந்த வாசகர்கள்தான். அவர்கள் போதும் என நினைக்கிறேன். எந்த இலக்கியப் படைப்பைப் போலவும் இவையும் எழுதுபவன் தனக்காக எழுதிக்கொள்பவை. வாசிப்பவர்கள் தங்களுக்காக வாசித்துக்கொள்பவை

உலகம் முழுக்க பேரிலக்கியங்கள் பல கொள்ளைநோய்க் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. வெளியுலகுக்கும் இலக்கியத்திற்கும் உள்ள உறவு என்பது நேரடியானது அல்ல. அது ஒரு மிகச்சிக்கலான உளநாடகம். ஏன் என் உலகம் இத்தனை ஒளியுள்ளதாக ஆகிவிட்டது என்று எனக்கே கூட மர்மம்தான். ஆனால் இதை ஓர் அருளாகவே கருதுகிறேன்

உங்கள் கடிதம்போல உளஅழுத்தம்கொண்ட, அதைக் கொண்டாடக்கூடிய கடிதங்களும் கதைகளும் வந்துகொண்டிருக்கின்றன. ஓரிரு வரி ஓட்டிப் படித்துவிட்டு அப்படியே அழித்துவிடுவேன். நாம் இனி இப்போதைக்கு தொடர்புகொள்ளவேண்டாம். சரிதானே?

ஜெ

வேட்டு [சிறுகதை]
அங்கி [சிறுகதை]
தவளையும் இளவரசனும் [சிறுகதை]
பூனை [சிறுகதை]
வருக்கை [சிறுகதை]
“ஆனையில்லா!” [சிறுகதை]
தனிமையின் புனைவுக் களியாட்டு
புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…
யா தேவி! [சிறுகதை]
சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
சக்தி ரூபேண! [சிறுகதை]
எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
முந்தைய கட்டுரைசக்திரூபேண!, வருக்கை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேட்டு [சிறுகதை]