பூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்

 

பூனை [சிறுகதை]

அன்புள்ள ஜெ சார்,

பூனை கதை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பல்லக்கு கதையின் பொற்றயில் திவாகரன் மேனோன். மேனோனையும் கேசவன் தம்பியையும் ஒப்பிட்டு யோசிப்பது ஆர்வமூட்டுவதாக இருந்தது. மேனோன், தம்பி இருவருமே கடந்த காலத்தின் நிழல்கள். சென்ற (நிலபிரபுத்துவ?) காலகட்டதில் சீராக வாழ்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரு வகையில் அந்த குடும்பத்தில் பிறந்ததனாலேயே அமைந்த தங்கள் ஊழை தாண்ட முடியாதவர்கள். இருவருக்கும் மிகவும் வயதான தாய் கூடவே உண்டு.

 

மேனோன் தன்னை பிறர் எப்படி பார்க்கிறார்கள் என்பதில் மிகுந்த சிரத்தை உள்ளவர். தன்னுடைய சுயத்தை அதில் தான் தேக்கி வைத்துள்ளார்ஆனால் காலுக்கு கீழ் பூமி நழுவுவதை அவர் அறிவதில்லை. அவரிடம் கஞ்ஞிக்கு கூட காசில்லை.. ஆனால் தம்பி அதற்கு நேர் எதிர். அவர் பிறரின் பார்வையை பொருட்படுத்துவதில்லை, அவரிடம் இருக்கும் செல்வமே அவரது சுயத்தை வகுக்குகிறது. தம்பியின் காலின் கீழ் உள்ள நிலம் நழுவுவதில்லை மாறாக அவரை முற்றாக உள்ளே இழுத்துக் கொள்கிறது.

மேனோன் சற்றே பெரிய பூனையை தரவாட்டில் கண்டிருந்தால் சிறுத்தை எனக் கொள்வார். முற்றத்தில் கட்டி வைத்து எல்லோரையும் காண அழைத்து கம்பீரமாக சாய்வு நாற்காலியில் சரிந்து கொள்வார் :)

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

 

அன்புள்ள ஜெ

 

பூனை ஆனை கதையின் இன்னொரு வடிவம். “இன்னொருவரின் பூனையை நாம் ஏன் புலியாக்கி கொடுக்கவேண்டும்?” உண்மைதான். அங்கே அந்தக்குடும்பம் எல்லாவற்றையும் சுருக்கிக்கொண்டிருக்கிறது. அந்த பெரிய வீடே சிறு அறைகளாக ஆகிவிட்டது. முதுமை என்பதே எல்லாவற்றையும் மினிமலைஸ் செய்வதுதான். புலியை பூனையாக ஆக்கிவிட்டார்கள். இனி அதை திரும்ப புலியாக ஆக்கினால் அவர்களால் தாங்க முடியாது.

 

அந்த இருண்ட வீடு, அந்த கிழவர்கள், அந்த மச்சு எல்லாமே எங்கோ பார்த்ததுபோல இருக்கின்றன. இங்கே மதுரைப்பக்கம்கூட கிராமங்களில் அப்படிப்பட்ட பழைய ஜமீன், பண்ணையார் வீடுகள் நிறையவே உண்டு

 

முத்துராஜ்

 

 

பழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

முதற்கண் தங்கள் தளத்தில் எனது சிறுகதையை வெளியிட்டமைக்கு  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

ஒரு புதிய எழுத்தாளனின் கதையை வெளியிட்டு பின் அதன் தொடர்பாக வரும் கடிதங்களையும் மூன்று நாட்கள் தொடர்ந்து வெளியிடுவதென்பது மிகப்பெரிய விஷயம்.
.அது எவ்வளவு பெரிய உள எழுச்சியை அந்த புதியவருக்கு கொடுக்கும் என்பதை இப்போது  அனுபவித்து திளைத்துக்கொண்டுருக்கிறேன் .  ஓரளவு இலக்கிய அறிமுகம் உள்ள நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்து அவர்களின் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் பெற்று ஒரு கனவு உலகில் இருப்பது போன்று இந்த மூன்று நாட்களை உணர்கிறேன்.

ஈரோடு வாசகர் சந்திப்பு எனது சிந்தனை தடத்தையே புரட்டிபோட்டுவிட்டது. கோவில் யானைகளை காட்டு யானைகளுடன் புத்துணர்ச்சி முகாமில் கொண்டு விடுவதை போல். வெறும் வாசிப்பு என்று மட்டும் தேங்கிவிட்ட என்னை போல் பல பேருக்கு இது மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. இலக்கியமும் ஒரு வகை காடு தானே.

ஒரு வருடத்திற்கு முன்னாள் இதே கதையை எழுத ஆரம்பித்து பாதியில்  நிறுத்தி. அதை தற்போது படித்து பார்த்தால் ஒரு சம்பவத்தை அப்படியே வழக்கமான நடையில் எழுதிவைத்திருக்கிறேன். எந்த வகையிலும் இலக்கியத்தில் சேர்க்கமுடியாததாக உள்ளது.

அடுத்து கடிதங்கள், நான் இந்த கதையை கிருஷ்ணன் அவர்களுக்கும்  அனுப்பினேன். உடனேயே பதில்கள்  கிடைத்துவிட்டது. ஒரு கூர்மையான விமர்சனமாக அது இருந்தது. கிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றிகள் பல.

பின்பு  சுனில்  அவர்களுக்கும், மற்ற ஈரோடு வாசகர் சந்திப்பு நண்பர்களுக்கும் அனுப்பினேன். அனைவரும் கருத்துக்களை பகிரந்து கொண்டார்கள். அதில் சுனில் அவர்களின் கடிதம் தனித்துவமானது.
நினேஷ்  அவர்களுக்கும் மகாதேவன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

அந்த சாந்திப்பில் கலந்து கொண்ட பெரும்பாலோர் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
படித்த ஒரு புத்தகத்தை பற்றி கூட பேச ஆள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தவர்களை ஒரு எழுத்தாளன் அளவிற்கு உயர்த்திவிட்டீர்கள் . இது ஒரு சராசரி மனிதனை விட எழுத்தாளனைவிட  நீங்கள் உயர்ந்து நிற்கும் இடம்.

மீண்டும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

உங்கள் வாசகன்,

இல. கோகுலரமணன்.

 

 

அன்புள்ள ஜெ,’

 

புதிய எழுத்தாளர் கோகுலரமணனின் கதை என்று கண்டபோது உடனே வாசிக்கவில்லை. ஒருநாள் கழிந்துதான் கடிதங்களை கண்டபின் வாசித்தேன். ஏனென்றால் இன்றைக்கு வரும் புதிய கதைகளில் அனுபவங்களே இல்லை.

 

இலக்கியம் அகவய அனுபவம்தான். ஆனால் அதைச்சொல்ல புறவயமான உலகம் தேவை. அதுதான் எனக்கும் அந்த எழுத்தாளனுக்கும் பொதுவானது. இளம் எழுத்தாளர்கள் சும்மா அகத்தை மட்டுமே சொல்கிறர்கள். அதோடு ரிலேட் செய்யவே முடியவில்லை. அந்தரத்தில் நிற்கிறது. அந்தக்கதை எங்கே நடக்கிறதென்றே தெரிவதில்லை.

 

எழுத்தளன் புறவாழ்க்கையைச் சொல்லவேண்டும்.எனக்கும் அவனுக்கும் பொதுவான ஒன்றைக்கொண்டு அவன் தன் மனசைச் சொல்லமுடியும். அதேசமயம் அது நன்றாகத்தெரிந்ததாகவும் இருக்கக்கூடாது. அதில் ஒரு புதுமையும் இருக்கவேண்டும். வழக்கமான விஷயங்கள் சலிப்பை அளிக்கின்றன.

 

கோகுலரமணனின் கதை புதிய விஷயம், ஆனால் பொதுவானது. நானே இந்த நம்பிக்கைகளைப் பார்த்திருக்கிறேன். ஜோடிகளைப் பிரிக்கக்கூடாது. ஜோடி மரங்களைக்கூட பிரிக்கமாட்டார்கள். நீயா ஜோடி சேர்த்தாய் நீ பிரிப்பதற்கு என்று கதை முடிகிறது. அழகான கதை. இளம் எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்

 

ஸ்ரீனிவாஸ்

பழையது மோடை – கடிதங்கள்

கோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்

 

சக்தி ரூபேண! [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சக்திரூபேண கதையை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை. முந்தைய கதைகளை அப்படியே தலைகீழாக்கிவிடுகிறது. இதுதான் தொடக்கம் என்று நினைக்கிறேன். இந்தச் சம்பவத்தைப் பற்றி வேறேதோ கட்டுரையில்கூட சொல்லியிருந்தீர்கள் என்று ஞாபகம்

 

பெண்ணை நாம் என்னவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவளை தெய்வமாகவும் அவள் உடலை போகப்பொருளாகவும் பார்க்கிறோமா? அந்தப்பெண்ணுடலை அப்படிச் சிதைக்கிற வெறி எங்கிருந்து வருகிறது? கொலை அல்ல அங்கே பிரச்சினை. அவர்கள் அவளை அடித்து சிதைத்திருக்கிறார்கள். அந்த வேகம் எங்கே இருந்தது?

 

அவளுடைய பலமுகங்கள் கதையில் வருகின்றன. அதில் ஒரு முகம்தான் அங்கே சிதைக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். அவளுடைய ஒரு பிம்பம் சிதைந்தது. இன்னும் ஆயிரமாயிரம் பிம்பங்கள் எஞ்சியிருக்கின்றன.

 

அவளுடைய அந்தப்புன்னகையும் வரவேற்பும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு திருப்பம். உண்மையாகவே சிதைந்தது பொம்மை இருப்பது எல்லா என்று அந்தச் சமயத்தில் நானும் நினைத்துவிட்டேன்

 

எஸ்.சாந்தகுமார்

 

அன்புள்ள ஜெ

 

சக்திரூபேண ஒரு வலுவான கதை. மூன்றுகதையும் தனித்தனியாகவும் நிற்கின்றன. ஒரே கதையாக வேறு சில எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்தக்கதையில் இன்றைக்கு எனக்கு முக்கியமாகப் படுவது ஒன்று உண்டு. ஸ்ரீதரன் எல்லாவின் படம் என போலீஸுக்கு அளிப்பது அவளுடைய பொம்மையின் படம். அந்தப்படம்தான் கம்ப்யூட்டர்களில் செல்போன்களில் பெருகிப்பெருகி நிறைகிறது. அதாவது அது பிம்பத்தின் பிம்பம். பிம்பம் மேலும் மேலும் பிம்பங்களாக ஆகிறது. பெருகிக்கொண்டே செல்கிறது. அசல்வடிவம் அழிந்துவிடுகிறது.

 

மாயை என்பது அந்த பிம்பங்களின் நுரையா இல்லை அந்த மூலமாக உள்ள உடலா? எங்கள் தியானமுகாமில் இந்தக்கதையப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். எல்லாமே பிம்பங்கள்தான். ஒருவன் காமம் கொள்கிறான். ஒருவன் தேவிவடிவமாகக் காண்கிறான். ஒருவன் அன்னைவடிவமாக நினைக்கிறான். ஒருவன் கொலைசெய்யவேண்டிய வெறும் சதையாகப்பார்க்கிறான். அவ்வளவுதான் என்று சீனியர் ஒருவர் சொன்னார்

 

எம்.ஸ்ரீனிவாசன்

சக்திரூபேண- கடிதங்கள்-3

சக்திரூபேண- கடிதங்கள்-2

சக்தி ரூபேண- கடிதங்கள்-1

 

முந்தைய கட்டுரைவருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாளான் [சிறுகதை] விஷ்ணுகுமார்