வருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்

வருக்கை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

வருக்கை கதையை வாசித்துக்கொண்டிருந்தபோது தங்கன் என்ற பெயரும் பலாப்பழச்சுளைகளும் மனதிலே ஒன்றாக ஆகிவிட்டன. எங்களூரில் தங்கன்சுளை என்றுதான் சொல்வார்கள். பொன்னிறமான வரிக்கைச்சுளைகள்.

அவள் அந்த சம்புடத்தை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். அதில் அந்தச் சுளைகளின் மணம். பொன்னிறத்தின் மணம். அது அவளை மலரச் செய்கிறது. கிருஷ்ணனின் மணம். மனம்கவர்ந்த கள்வனின் மணம். சோரன் என்றுதானே கிருஷ்ணனைச் சொல்வார்கள்

 

எஸ்.

 

அன்புள்ள ஜெ,

 

வருக்கை கதையில் கள்வனை ஏன்  பெண்களுக்குப் பிடிக்கிறது என்று நினைத்துப் பார்த்தேன். காதலன் என்பவன் ஒரு கள்ளன். காதல் என்பதே களவு என்றுதானே சொல்லியிருக்கிறது. காதலை கள்வனாக பார்ப்பதனால்தான் கிருஷ்ணன் கள்வனானான்.

 

சங்ககாலம் முதல் அப்படித்தான். கபிலரின் கலித்தொகையில் ஒரு பாடல்

 

உண்ணு நீர் விக்கினான்” என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று

என்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி

நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்.

 

என்று சங்கப்பாடலில் வருகிறது. துணிச்சலாக தலைவி வீட்டுக்கே சென்று தலைவியின் கையைப்பிடித்து இழுத்தான். அம்மா வந்ததும் அப்படியே சமாளிக்கிறான். அவளும் அவனை விட்டுக்கொடுக்கவில்லை. அம்மா அவன் முதுகை நீவ அவளை கொல்வதுபோல பார்த்துச் சிரிக்கிறான். அவனை கள்வன்மகன் என்று செல்லமாகச் சொல்கிறாள்

 

அந்த சங்ககாலத் தலைவி சொன்னதைத்தான் இன்றைக்கு இந்த கிராமத்துத் தலைவியும் சொல்கிறாள். நாணத்துடன் “கள்ளனா?”என்று கேட்கிறாள்

 

அ.ராஜகோபால்

 

 

“ஆனையில்லா!” [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

முதலில் நான் சிரித்துச் சிரித்து வாசித்தேன். அதிலுள்ள வசனங்கள்தான் முக்கியமான சிரிப்பு. அவை எந்த மனநிலையில் சொல்லப்படுகின்றன என்பது. அந்த வசனத்தைச் சொல்பவரின் முகம் உடனே கண்ணுக்குத் தெரிகிறது. இந்தக்கதையின் கலையழகே ஒரு பெரிய சமூக சித்திரமே கண்முன் வந்துவிடுகிறது என்பதுதான்.

 

அதன்பிறகு வாசித்தபோது ஒன்று தெரிந்தது. நுட்பமான பகடியாக இங்கே கரடிநாயர், அல்லது மொத்த நாயர்களும்தான் கேலி செய்யப்படுகிறார்கள். ‘இவனுகளாலே ஒரு ஆனைக்கு இங்க மானம் மரியாதையா ஜீவிக்க முடியாம போச்சே’ என்ற கரடி நாயரின் மனத்துயரம்தான் மையக்கரு. அவரை போட்டு வறுத்து எடுக்கிறது கூட்டம். ஒருபக்கம் வேதக்காரர்கள். இன்னொருபக்கம் காணிக்காரர்கள். நடுவே மாட்டிக்கொண்ட பழைய வீடு வேறு. அதை அப்படியே விட்டுவிட்டால் என்ன என்று சொல்லும் மகன் வேறு. என்ன செய்வார்

 

ஜெயக்குமார்

 

அன்புள்ள ஜெ,

 

நான் ஆனையில்லா கதையை வாசித்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். என் அப்பாவிடம் சொன்னேன். அவர் அந்தக்காலத்தில் தஞ்சையில் இதேபோல நடந்த சில கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு மாட்டுவண்டி கிணற்றில் சரிந்துவிட்டது. மூன்றுநாள் ஆகியது வெளியே எடுக்க

 

அந்தக்காலத்தில் டிவி இல்லாமல் கிராமங்களில் இதேபோல வேடிக்கைபார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள்தான் ஒரே கேளிக்கை. சினிமாபோல இதையெல்லாம் ரசித்திருக்கிறார்கள். இன்றைக்கு இவ்வளவு கூட்டம் கூடுமா என்பதே சந்தேகம்தான்.

 

அதை வாசிக்கும்போது தோன்றியது பிற இடங்களில் பெரிய பிரச்சினையாக இருப்பதை மிக சின்னதாக ஆக்கி விடுகிறர்கள் கிராமங்களில் என்று. அந்த பிரச்சினையிடம் போய் நீ பெரிய பிரச்சினையே இல்லை என்று மந்திரம்போட்டால் என்ன செய்யமுடியும்? நாம் பெரிய பெரிய சிக்கலாக நினைக்கும் பல விஷயங்களுக்கு ஊரில் எளிமையான விடைகளை வைத்திருப்பதைக் காணலாம்.

 

மலைபோல வந்ததை எலிபோல ஆக்குவதுதான் இந்தக்கதை. ஓர் இடத்தில் யானை வீட்டை உடைத்து உள்ளே புகுந்துவிட்டதை கிண்ணத்திலே எலி விழுந்ததைப்போல என்று ஒருவர் சொல்கிறார்

 

எஸ்.ராம்

 

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9
அடுத்த கட்டுரைபூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்