சோபாவில் குப்புற படுத்திருந்த மது திரும்பிப் படுக்கும் போது ரவி ஒருவர் மட்டுமே அமரும் சோபாவில் கால்களை நீட்டி பின் தலையை சாய்த்து எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்ததைக் கண்டான்.
“என்னடா சீக்கிரமா தெளிஞ்சிருச்சா?” என்று கேட்டபடி மது டீபாய் மீது சிதறியிருந்த நேந்திரம் சிப்ஸயை எடுத்து கடித்தான்.
“ஒரே பிளாங்கா இருக்கு மச்சி எம்ப்டினெஸ். எங்காவது தூரமா போனும் ஆனா இந்த பூமில இல்ல , எல்லாமே புதுசா இருக்கனும். ஹொலிவூட் படத்தில வர ஏலியன்ஸ் உலகம் மாதிரி வேண்டாம் எதாவது புதுசா! புரியுதா புதுசா !”
“நம்ம ரூம்ல இருந்து அஞ்சு பத்து கிலோமீட்டர் தூரத்திலதான் லால்பாக்ஹ், கபன் பார்க் இருக்கு. நீ பெங்களூருல ஆறு வருசமா இருக்கே. இன்னும் அதையே பாக்கல அதுக்குள்ள புதுசா?”
“போர் அடிக்குதுடா”
”எல்லாருக்கும்தான் போர் அடிக்குது”
“இது அப்டி இல்லடா… செத்திரலாம் போல இருக்கு. ஒண்ணுமே பிடிக்கலை. டிவி, சினிமா, சோஷியல்மீடியா எல்லாமே போர். ஒண்ணுலேயுமே இண்ட்ரெஸ்ட் வரமாட்டேங்குது. ஒரே விஷயத்தையே திரும்பத்திரும்ப பாக்கிறாப்ல இருக்கு”
“அதுக்கு என்ன பண்றது?”
“எங்கியாவது போகணும்… எதாவது நடக்கணும். பேசாம ஏதாவது கொலை பண்ணிடலாமான்னு கூட தோணுது. கொஞ்சமாச்சும் லைஃப்லே சுவாரசியம் வரும்”
”இப்ப உனக்கு என்ன பிரச்சினை?”
”ஐ வான் கலர்ஸ்…. இங்க லைஃபே வெறிச்சுன்னு இருக்கு”
அவன் யோசித்தான். “சரி என்கிட்டே ஒரு ஐட்டம் இருக்கு. ஆனா””என்ன ஆனா?”
“இல்ல இதை தொடவே கூடாதுன்னு இதைக் குடுத்தவன் சொன்னான். இங்க எல்லாமே பிளாங் ஆயிடுச்சின்னா இதை எடுன்னு சொன்னான். அவன் ஒரு கிறுக்கன் மாதிரி… நான் நாலுமாசம கையிலே வச்சிருக்கேன்”
“எடுடா”
“இங்கே உள்ளத எல்லாத்தையும் விட்டுட்டு போறது மாதிரிடா இது”
“சனியன் தொலையுது… கொண்டுவாடா’
,
“சரிதான், நானும் ஒரு கம்பெனி வேணும்னு வெயிட் பன்னிட்டிருந்தேன்”
மது தள்ளாடியபடி ஹாலில் இருந்து பெட்ரூம் சென்று திரும்பி வந்து சோபாவில் அமர்ந்தான். ரவியிடம் பிளாஸ்டிக் பை ஒன்றை தூக்கி காட்டினான்.
“என்னடா இது மஷ்ரூம்?”
“ சாதா மஷ்ரூம் இல்லடா “கொடைக்கானல் மஷ்ரூம்”.
”அதுல என்ன ஸ்பெஷல்?”
“இது மேஜிக் மஷ்ரூம் … சொற்கத்துக்கான சுருக்குவழி..இந்த மஷ்ரூமுக்காக எங்க இருந்துலாம் கொடைக்கானல் வராங்க தெரியமா ? சாப்ட்டா காத்துல மெதப்ப.எங்க நினைக்கறியோ அங்க போவ”
“சும்மா அடிச்சு விடு. கஞ்சா மாதிரிதான் இதுவும் இருக்கும். பாதி போத நம்ம மனசில தான் இருக்கு” .
”சும்மா ட்ரை பண்ணி பாரு. உன்னோட கற்பன உலகத்துக்கு போக முடியலைன்னா தூக்கமாவது வரும் ”என்றான் மது.
மது இரண்டு மஷ்ரூமை ரவிக்கு கொடுத்தான்.
“எதுக்கு ரெண்டு ?’
“நீ தான் புதுசா ஏதாவது பாக்கணும்னு சொன்ன…அதனாலே டபுள் டோஸ்” என்று சிரித்தான்.
“உனக்கு ?”
” எனக்கு ஒண்ணு போதும் நல்லா தூங்க போறன்”
”நீ உன் கற்பனைல என்னையும் சேத்துக்கோ ஒரு கம்பெனி இருக்கும் புது எடத்துல”
மது பெட்ஷீட்யை எடுத்து முழுவதுமாக மூடி படுத்துகொண்டான்.
ரவி இண்டு மஷ்ரூமை விழுங்கி “புதுசா! புதுசா ” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
“என்னடா ரெயின்போவுக்கு உள்ள வந்தமாதிரி இருக்கு?” என்றான் மது.
”ஆமாண்டா ஏதோ தூரமா வந்திட்டோம் !பல லைட் இயர்ஸ் தாண்டி”.
”என்னமோ இங்க மல, மரம், செடி எல்லாமே ரெயின்போ மாதிரி ஏழு கலர் மிக்சாகி இருக்கு” என்று ரவியின் முகத்தை பார்த்தான் ”டேய் நீயே கூட ரெயின்போ மாதிரிதான் இருக்க” என்றான் மது.
“நானும் உன்னைய அப்டித்தாண்டா பாக்கிறேன். மயில் மாதிரி இருக்கே”
அவர்கள் மரங்கள் அடர்ந்த காட்டின் வழியாக நடந்துக்கொண்டிருந்தார்கள் . செடிகளிலும் மரங்களிலும் பூக்களும் பழங்களும் எல்லாம் ஏழு வண்ணங்களின் வெவ்வேறு கலவையாக இருந்தன.
“யப்பா! என்னவா இருக்குடா !சான்சே இல்ல !”
ரவி பேசாமல் நடந்தான்
“என்னடா ! புதுசா பாக்கணும்னு சொல்லிட்டு எதுவும் பேசாம இருக்க இதுவும் பிடிக்கலையா? ?”
“பேச்சு வரல டா!”
அருகில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டது. இருவரும் அதை நோக்கி நடந்தார்கள். ஒரு சிற்றாறு அதே ஏழு வண்ணக்கலவையுடன் ஓடிக்கொண்டிருந்தது .
ரவி உணர்ச்சி மிகுந்து அழுதுவிட்டான்.
“என்னடா வெறும் செடி, மலை , காடுதான் இருக்கு மனுஷன், பிராணி ஏதும் இல்ல?” என்றான் மது.
“இங்க மனுசங்க இருக்க மாரி தெரியல” என்றான் ரவி
“ வேறு யாரோ இருப்பாங்க ”என்று மது சொன்னான்.
ஆற்றை தாண்டி ஒரு மரத்தடியில் யாரோ அமர்ந்திருப்பதுபோல இருந்தது. இருவரும் அதை நோக்கி நடந்தார்கள். அருகில் செல்லச்செல்ல அது ஒரு யானை சம்மனக்காலில் அமர்ந்திருப்பது போல இருந்தது.
இவர்கள் வருவதை கண்ட அது எழுந்து நின்றது. இருவரும் அசைவற்று அப்படியே நின்றார்கள். அவர்களை நோக்கி அது நடந்து வந்தது.
மது “ விநாயகா, ஆனை முகத்தோனே!” என்று ஓடிப்போய் அதன் காலில் விழுந்தான். அது அதிர்ச்சியடைந்து பின்னால் சென்றது.
இரண்டு காலில் நடக்கும் யானை அது. அனால் ஒடுங்கிய வயிறு. சிறிய தும்பிக்கை. நெற்றியில் ஒரே ஒரு பெரிய கண்.
வியந்து பார்த்து கொண்டிருந்தான் ரவி.
“உங்களை வரவேற்கிறேன்” என்றது அது.
“ நீங்க எப்படி எங்க மொழி பேசுறீங்க? ”என்றான் ரவி.
“டேய் அவரு கடவுள் டா அவருக்கு எல்லாம் தெரியும்” என்றான் மது கும்பிட்டவாறு.
”கடவுள் என்றால் ?” என்றது அது.
“முற்றும் அறிந்த ஞானி ”என்று ரவி சொன்னான்.
“இங்கயும் அது போல கடவுள்கள் உண்டு. அவர்களை காண நெடும் பயணம் செல்லும் போதே உங்களை கன்டேன்”
“ அப்போ நீங்க?” என்றான் மது.
“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நான் பாதிதான் கடவுள்” என்று சிரித்தது அது.” இங்கே வருபவர்கள் எப்படி பேசினால் புரிந்து கொள்வார்கள் என்று எங்களுக்கு தெரியும். அதை தாண்டி ஒன்றும் தெரியாது”.
”ஆச்சரியம்!” என்றான் ரவி. “எங்கள் முன்னோரின் தகவல்படி இந்த கிரகத்தின் பரிணாம வளர்ச்சியில் நாங்கள் முன்னால் இருந்து வருகிறோம். எங்களின் நுண்ணுணர்வும் வளர்ந்து கொன்டே இருக்கிறது”.
“இவ்வவு அட்வான்ஸ் பிரெயினை வச்சிட்டு இங்க பெரிய வளர்ச்சி இல்லையே ?” என்றான் ரவி.
“இங்க வரும் சிலர் இதை கேட்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன், நீங்கள் எதை வளர்ச்சி என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இங்க வளர்ச்சி எல்லாமே கான்ஷியஸ்னஸ்லே தான்” என அது சொன்னது.
”அப்டீன்னா?” என்று ரவி கேட்டான்.
“இந்த மரம் உங்களுக்கு எப்படி தெரிகிறது ? என்றது அது.
“இங்கே எல்லாமே ஏழு வண்ண கலவை தானே?” என்றான் ரவி.
“அது இங்கே புதிதாய் வருபவரும், பிறந்த குழந்தையும், மற்ற உயிரினமும் காண்பது. எனக்கு இப்போது தெரிவதெல்லாம் இரண்டு வண்ண கலவைதான்” என்றது அது.
”என்ன சொல்றிங்க? ”என்றான் ரவி ஆச்சரியம் தாங்காமல்.
“இந்த கிரகம் நாம் காணும் காட்சிக்கு அப்பாற்பட்டது. எல்லா வண்ணமும் மறையும் போதே அதன் உண்மையான வடிவம் தெரியும், அதை காண்பதே நம் பிறப்பின் லட்சியம் என்று எங்களுக்கு பாடம் உண்டு. இதுதான் எங்களின் வளர்ச்சி. எங்கள் குழுவில் பெரும்பாலும் இதை நோக்கித்தான் வளர்ச்சியே. சிலர் இந்த வண்ண உலகத்தில் நிறைவாக வாழ்ந்து மறைவதும் உண்டு”.
புரிந்தது போலும் புரியாதது போலும் இருந்தது அவர்களுக்கு. “ நான் உங்களை எங்கள் குழு இருக்கும் இடத்திற்கு வழி காட்டுகிறேன். நீங்களே போய் பாருங்கள்” என்றது அது.
“நீங்க எங்கே போகிறீர்கள்? ”என்றான் ரவி .
“நான் என்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சியில் இருக்கிரேன் அதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க போகிறேன்”
“ எங்கே ?”
“ இந்த வண்ண உலகை முற்றிலும் கடந்து விட்டவர்களை தேடிப்போகிறேன். அதை கடந்த பின் அவர்கள் எங்க போகிறார்கள் என்று சொல்வதில்லை அவர்களை தேடி சென்று சந்தேகம் தெளிவது நம் பொறுப்பு. அதில் சிலர் காணாமலும் போகலாம்”.
“அவர்கள் உண்மையாக கடந்து விட்டார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?”
“ இங்கே பொய் சொல்லி வாழ்வதற்கான எந்த தேவையும் இல்லை” என்றது அது.
”என்னை பொறுத்த வரை இந்த வண்ண உலகமே சொர்கம். இதை கவிதையில் வர்ணிக்கவே பல பிறப்புகள் வேண்டும். எல்லாம் அப்படியே இருக்கிறது. எங்கள் ஊரில் உள்ள நாசங்கள் எதுவும் இல்லை.இப்படி ஒரு இடத்தில் வாழ்வதைவிட வேறு எந்த ஞானமும் கடவுளும் தேவையில்லை” என்றான் ரவி.
”சரி அது அவரவர் விருப்பம். அதோ தெரிகிறது ஒரு வளைவு அதன் வழியாக நேராக போனால் எங்கள் குழு இருக்கும். அங்கே சென்று அவர்களை பாருங்கள் .மேலும் விவரம் கிடைக்கும்”
அவர்கள் விடைபெற்றார்கள்.
”ஆனால் அந்த வளைவின் இடது புறத்தில் இருக்கும் சிறிய மரத்தின் பழங்களை உண்ணாதீர்கள்” என்றது அது.
’ஏன்?” என்றான் ரவி.
“இங்கே இருக்கும் உலகம் சலித்து வேறு எங்கேயோ போகும் விருப்பமுள்ளவர்கள் சாப்பிடும் பழம் அது. எங்கள் குழுவில் சிலர் இதை உண்டார்கள் . இப்போது எங்கே எப்படி வாழ்கிறார்க்ளோ?”
திடுக்கிட்டு எழுந்தான் ரவி. மதுவின் குறட்டை ஒலியை மீறி இதயம் பட படவென்று அடிப்பது கேட்டது.
==========================================
விஷ்ணுகுமார்- அறிமுக எழுத்தாளர்