பூனை, ஆனையில்லா- கடிதங்கள்

பூனை [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

பூனை சிறுகதைக்கு ஒரு படத்தை போட்டிருக்கிறீர்கள். மிகப்பொருத்தமான படம். சரியாகத் தேடிப் பிடித்திருக்கிறீர்கள். வயதான, நொந்துபோன பூனை. பாவம் அதுவும் அந்த கிழவாடிகளைப் போலத்தான். அங்கே எலிபிடித்து வேறெந்த தொந்தரவும் இல்லாமல் வாழ்கிறது

 

ஆனால் அவ்வப்போது வந்து கிழவி செம்பால் அடிக்கிறாள். குச்சியைக் காட்டி துரத்துகிறாள். அதற்கு போக்கிடம் இல்லை. அந்தப்பக்கம் பலாமரம் வழியாக குன்றுக்குமேல் போய்விட்டு திரும்ப வந்துவிடும். வயசான காலத்தில் அதுவே தன்னை பூனையாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. அடியென்றால் அடி, இருக்கட்டும் என்று வீட்டுக்குள் முடங்கிக்கொள்கிறது

 

இந்தக்கதை அந்தச் சிறுத்தையின் வாழ்க்கைதான் காட்டுக்கு அரசனாக இருந்திருக்கலாம். இப்போது பூனையாக ஆகிவிட்டது. அதை கரடிநாயரும் நத்தானியேலும் நினைத்தால்கூட திரும்ப புலியாக ஆக்கமுடியாது. புலியாக வாழ்வதற்கான ஆற்றல் அதற்கு இல்லை. ஓய்வுபெற்றால் புலியும் பூனை ஆகும்

 

இப்படிக்கு

ஓய்வ்பெற்ற

ஆர். ராஜகோபாலன்

 

ஜெ

 

பூனை சிறுகதை. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். ஒரு பொய்யை நான்கு பேர் மறுபடி மறுபடி உரக்கச்சொன்னால் அது உண்மையாகிவிடுமாம். அதே போல உண்மையும் பொய்யாகிவிடும். கண்ணால் பார்த்தவனே கூட உண்மையைப் பொய்யென்றும் நம்பிக் கூறத் தொடங்கி விடுவான்.

 

உண்மையில் மேல் மச்சில் நதானியேல் ஒரு சிறுத்தையைப் பார்க்கிறான். மச்சு இருக்கும் வீட்டுக்காரர்கள் நம்பாமல் அது எப்பொழுதும் இருக்கும் பூனை என்கிறார்கள்.  அவன் ஊரில் போய்ச்சொல்லி சிலர் வந்து பார்த்துச் சிறுத்தை என்று கூறுகிறார்கள், வீட்டுக்காரர்கள் மறுக்கிறார்கள். ஐயப்பன் பலாக்கிளை வழியாக அது வர வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகிறான். கடைசியில் எல்லாரும் அதைப் பூனை என்றே வலிந்து சொல்ல நத்தானையேலும் அது சிறுத்தையன்று பூனை என்றே ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைக்கு மாற்றப்படுகிறான். வழக்கு மன்றங்களில் வழக்கறிஞர்களின் வாதங்களால் உண்மை எப்படிப் பொய்யாகும் என இக்கதை மூலம் உணர முடிகிறது.

 

அறிவிருந்தா ஏன் கோயில்ல பூசை பண்ணிதோம் எனப் போற்றி கேட்பது ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லாமல் சொல்கிறது. ஒரு பெண்ணின் தலையை “வெள்ளைப் பூவன் சேவற்கோழிக்குக் கூறும் உவமை மிகப்புதியது. பேனைத் தலையிலிருந்து எடுப்பவர் அதைக் கெட்டியான கட்டாந்தரையிலோ அல்லது தம் நகத்தின் மேலோ வைத்துக் குத்துவார்கள். அதைச் சொடுக்குவார்கள் எனக் கிராமங்களில் கூறுவார்கள். நிறைய உண்டதால் அவன் வயிறு மிகவும் பெருத்துக் கெட்டியாகி விட்ட்து. அதைக் கூறும்போது “வயித்திலே பேனைவச்சுக் கொல்ல்லாம் மாதிரி இருக்கு என்று கூற ஜெயமோகனால்தான் முடியும்.

 

வளவதுரையன்

கடலூர்

 

“ஆனையில்லா!” [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ஆனையில்லா இன்றிருக்கும் மனநிலையில் ஒரு அட்டகாசமான கதை. பொதுவாக ஹ்யூமர் பற்றி ஒரு தியரி உண்டு. கொஞ்சம் ‘எரோட்டிக்’ அம்சம் [அல்லது ஆபாசம் என்றே கூட சொல்லலாம்] இல்லாமல் நல்ல ஹ்யுமர் அமைவதில்லை. நீடித்து நிற்கும் ஹ்யூமரில் எல்லாம் இந்த அம்சம் உண்டு. எனக்கு பிடித்தவர் உங்களுக்கும் பிடித்த சக்கி. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த ஜாய்ஸ் உங்களுக்குப் பிடிக்காது. சரி, போகட்டும்.

 

இந்தக்கதையில் உள்ள அந்த மார்பிட் அம்சத்தை மிகவும் ரசித்தேன். கலப்பை. அந்தக்கிழவிக்கு வயசான காலத்தில் ஒரு விஸ்வரூப தரிசனம். புண்ணியம் செய்த ஆத்மா. யானையின் பின்பக்கம் கஜராஜவிராஜிதம் என்று சம்ஸ்கிருதம். அதுவும் கிரீஸ் போட்டு பளபளப்பாக என்றால் எப்படி கரடிநாயரும் தங்கையாபெருவட்டரும் ரொமாண்டிக் ஆகாமல் இருக்க முடியும்?

 

நினைத்தால் பெருக்கவும் சுருக்கவும் ஆனை என்ன வேறொன்றா என்ற கேள்வி தத்துவார்த்தமானது. அட்டை அல்ல இன்னொரு உவமை உண்டு என்று சொல்வதும் அந்த மனநிலைதான். அடியோட்டமாக வந்துகொண்டே இருக்கும் இந்த சின்ன நாற்றம்தான் சிரிக்க வைக்கிறது

 

ராமச்சந்திரன்

 

,ஜெ

மிகத்தீவிரமான வெண்முரசில் ஈடுபட்டிருக்கும்போது இதுபோன்ற ஒரு நகைச்சுவை ஆங்காங்கே மிளிரும் கதை தேவைதான். வாசகருக்கும் படித்து முடித்தவுடன் மனத்தை லேசாக்குகிறது. பல உவமைகள் கதையை களைப்பில்லாமல்  படிக்க உதவுகின்றன. ”வீட்டுப் பெண்களெல்லாம் நரியைக் கண்ட கோழிகள் போலக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.” ”கிண்ணத்திலே எலி விழுந்த கணக்காட்டு நிக்குது”

 

” யானை நத்தைபோலத் தோணுது” என்ற உவமையை நத்தையை மழைக்காலத்தில் பார்த்தவர்களால் நன்கு உணர முடியும். நகரங்களில் இப்பொழுது நத்தைகள் ஏது?. நத்தை அதன் முதுகிலேயே ஒரு வீட்டைச் சுமந்து கொண்டிருப்பது போல வட்டமான ஒன்றைச்சுமந்து கொண்டிருக்கும். யானை அந்த வீட்டினுள் உள்ளேயும் போகமுடியமால்  வெளியேயும் வரமுடியாமல் அவ்வீட்டையே முதுகில் சுமந்து கொண்டிருப்பதுபோல் இருக்கிறது என்ற காட்சியைக் கண் முன்னே கொண்டுவந்து காட்டும் உவமையாகும்.

 

அதேபோல “நல்லா கார்க் மாதிரி இருக்கு” என்ற உவமையும் . கார்க் என்பது அப்பொழுதெல்லாம் சிறிய பாட்டில்களின் வாயை அடைக்கப் பயன்படும் மிகவும் தக்கையான மரத்தால் செய்யப்பட்ட ஒரு மூடியாகும். அதைப் பாட்டிலின் வாயின் உட்புறதில் வைத்து அடைத்து விடுவார்கள் அது இறுகப் பிடித்துக் கொள்ளும். தண்ணீர் பட்டால் உப்பிவிடும்; இந்த யானை போலக் காற்று கூட வர இடைவெளி இல்லாமல் செய்யும். அதேபோல கிராமங்களில், “முள் மேல விழுந்த சீல” என்பார்கள். அந்தச்சீலையை மிகவும் ஜாக்கிரதையாகக் கிழியாமல் எடுக்க வேண்டும். இக்கதையில் “எலைக்கும் கேடில்லாம முள்ளுக்கும் கேடில்லாம” என்பது அதை நினைவூட்டியது. இவை மிக யதார்த்தமாக வந்து விழுந்த உவமைகள்.

 

பாகன் கூறுவது போல ஒரு புதிய செய்தி. இது உண்மையோ அல்ல பொய்யோ தெரியாது. ”ஆனை பயந்தாலோ  சீறினாலோ கொஞ்சம் உப்பினாலோ கொஞ்சம் பெரிதாகி விடும்” என்பது விலங்காய்வாளர்கள் தாம் தெரிவிக்க வேண்டும். யானையின் மனத்துக் கேற்ப அதன் உரு மாறுபடும் போல இருக்கிறது. யானையை மிக நல்லது என்பதைக் கூற வருபவன், “ஆத்தில பொம்பளையாளுக குளிக்குத எடத்துல எறங்க மாட்டான்” என்பதும் “அன்ன ஆம்புள குளிக்கற எடத்துல கலப்பையைக் காட்டிட்டு நிக்கது உண்டு.” என்பது சிரிப்பைத்தான் உண்டாக்கும்.

 

கடைசியில் நாகப்பன் எஸ்டேட்டில் இருக்கும் குட்டியானையான ‘கொச்சுகேசவன்” பெயரைச்சொல்லிப் பலமுறை அழைத்ததும் அது தான்தான் என்றும் தன் உருவம் சிறியதுதான் என்றும் நம்பி அது சிறியதாகி வந்து விட்டது என்று கதை முடிகிறது. இது சாத்தியாமா என்றல் சாத்தியம்தான்.

 

இந்த இடத்தில் “வாஸ்து சுபாவம் மனசைப் பொருத்தது” என்னும் பெரியாச்சான்பிள்ளையின் வியாக்கியானம்தான் நினைவுக்கு வருகிறது. அவர் ”மனம் லேசாக இருந்தால் நாம் தூக்கும் பொருளும் லேசாகிவிடும். மனம் சஞ்சலங்களுக்கு ஆட்பட்டுக் கனமாக இருந்தால் பொருளும் கனமாகி தூக்க முடியாமற் போய்விடும்” என்று கூற வருகிறார். யுத்த காண்டத்தில் மூர்ச்சையாகிக் கிடக்கும் இலக்குவனை இராவணனால் தூக்க முடியாமல் போகும்போது அனுமன் இடையிலே புகுந்து தூக்கிச்செல்லும் போது அவர் கூறும் வியாக்கியானம் இதுவாகும்.

 

வாழ்வின் பிரச்சனைகளைக் கையாளும் விதமும் இதே போலத்தான். நாம் ஒரு சிக்கலில் யானை மாட்டிக்கொண்டது போல மாட்டிக்கொள்கிறோம். அது பெரியது அல்லது சிறியது என்பது நம்மனத்தைப் பொருத்ததே. கோபாலகிருஷ்ணன் யானையானது தன்னைக் கொச்சுகேசவன் என எண்ணித் தன் உருவையே சிறியதாக்கிக்கொண்டது போல அச்சிக்கலை நாம் சிறியதாக நினைத்தால் அதிலிருந்து எளிதாக வெளியே வந்து விடலாம். பெரியதாக எண்ணினால் அதிலிருந்து வெளியே வர இயலாமல் மாட்டிக்கொண்டே கிடக்க வேண்டியதுதான்.

 

வளவ துரையன்

கடலூர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–12
அடுத்த கட்டுரைவேட்டு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்