மொழி [சிறுகதை]

தங்கையா நாடார் மூச்சிரைக்க ஓடி கோயில் முற்றத்தை தாண்டி கரடி நாயரின் வீட்டை அடைந்தபோது வழியில் துண்டு கீழே விழுந்தது. “நாற எளவு!” என்று சபித்தபடி அதை ஓடிச் சென்று எடுத்து தோளிலிட்டபடி அம்மச்சி மாமரத்தைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தார்.

பெரிய வீடு. இரண்டு வாசல்முற்றங்கள். வடக்குநோக்கிய முன்முற்றத்தில் தவளைக்கண்ணனும் லாரன்ஸும் பிறரும்  நின்றிருந்தார்கள். பக்கவாட்டிலிருந்த கிழக்குமுற்றத்தில் பெண்களின் கூட்டம். வைக்கோர்போர் அருகே ஒரு வேலையாட்களின் கூட்டம். கருப்பன் அப்பால் நின்று வெறிகொண்டு குரைத்துக் கொண்டிருந்தது.

பெருவட்டர் வாயில் வழிந்த வெற்றிலைச் சாற்றை வளைத்து துடைத்துக் கொண்டு “என்னவாக்கும் சங்கதி? கரடி எங்க? ஏலே!” என்றார்.

உள்ளிருந்து கரடி நாயரின் அணுக்க வேலையாள் பல்லன் அப்பு வெளியே வந்து பெரிய பற்களைக் காட்டி “உள்ள இருக்காரு.. பெருவட்டரே பெரிய பிரச்சினையாக்கும்” என்றான்.

அவனுடைய பற்களின் அமைப்பால் அவன் எங்கும் சிரிப்பவன் போல தோன்றினான். கரடிநாயர் அம்பக்கடை வீட்டு முற்றத்தில் படி இடிந்து பக்கவாட்டில் விழுந்து வேட்டி விலகியபோது சிரித்ததாகக் கருதப்பட்டு அடிவாங்கி ஒரு பல்லை இழந்தவன்.

“அவரு என்ன செய்யுதாரு அங்க?” என்றபடி பெருவட்டர் பாய்ந்து உள்ளே நுழைந்தார்.

அப்பு உடன் வந்தபடி “சின்னக்குட்டி இருக்குல்லா அது…” என்றான்.

“ஆமா, லெச்சுமிக்குட்டி… அதுக்கு என்ன? என்ன தீனம்?” என்று பெருவட்டர் பதறினார்.

“தீனமில்லை… முறிக்குள்ள இருக்கு” என்றான் அப்பு.

“ஏன் முறியிலே வச்சிருக்கீய? அப்பிடிப்பட்ட தீனம் என்ன?” என்றபடி பெருவட்டர் கூடத்தைக் கடந்து உள்ளே சென்றார்.

உள்ளேயும் ஆட்கள். தங்கம்மை நாடாத்தி “உள்ள என்னம்பா நிக்குதிய? ஆளுவந்து போகணும்லா? வெளியே நில்லுங்க” என்று கூவ நின்றிருந்தவர்கள் அரை இஞ்ச் அசைந்தனர்.

உள்ளே அழுகை ஓசை கேட்டது.  “விசாலாட்சியம்மைக்க கரச்சிலுல்லா?” என்றார் பெருவட்டர் பீதியுடன் .

“பின்ன கரையாம முடியுமா? பிள்ளையில்லா முறியிலே இருக்கு!” என்றான் அப்பு.

“ஏலே பல்லுத்தாயோளி, ஏம்லே பிள்ளைய முறியிலே வச்சிருக்கு?” என்றார் பெருவட்டர்.

அவர் குரலைக்கேட்டு உள்ளிருந்து கரடி நாயர் பாய்ந்து ஓடிவந்து “பெருவட்டரே, எனக்க குட்டீ… எனக்க அருமந்த குட்டீ” என்று கதறி அவரை ஆரத்தழுவினார். அவர் மார்பின் முடிப்பரப்பெங்கும் கண்ணீர் பரவியிருந்தது.

“கைய எடுலே தாயோளி… நின்னு நெலவிளிச்சுதான், பெட்டப்பட்டி மாதிரி… ஏலே என்னெண்ணு சொல்லுங்கலே”

“அய்யோ என் பெருவட்டரே… எனக்க குட்டீ… எனக்க லெச்சுமிக்குட்டீ” என்று விசாலாட்சி நெஞ்சிலறைந்து கதறினாள்.

ஏழெட்டு பெண்கள் உடன் சேர்ந்து ஒப்பாரிப் பாணியில் “வாளைக் கண்ணுல்லா- எங்குட்டி வாசமுள்ள செண்டுல்லா! தாளைப் பூவுல்லா எங்குட்டி தாமரை தண்டுல்லா! ஏ!” என அழுதனர்.

“ச்சீ சவத்தெளவுகளா… ஏட்டி தங்கம்மை இவளுகள வாயில சவிட்டி வெளிய போடுட்டீ… என்ன செய்யுதே நீ அங்க?”

தங்கம்மை “ஆரெங்கிலும் ஒண்ணு மூக்குசிந்தினா கேறி வந்திருவாளுக… ஏட்டி, இனி எவளாம் சத்தம் போட்டே சங்கத் திருகீருவேன்.”

“என்ன சங்கதி?”

“எனக்க பெருவட்டரே” என்றார் கரடி நாயர் “என் செல்லமே! எனக்க தங்கக்குட்டியே!”

“லே அப்பு, இந்த நாய அந்தால பிடிச்சு போடு… என்னத்துக்கு கெடந்து மோங்குதான்? தங்கம்மை நீ சொல்லுட்டீ.”

தங்கம்மை “பெருவட்டரு வரணும்… இந்நா சின்னக்குட்டி பத்தாயப் பெரையிலே உள்ள போயிருக்கு.”

“அது என்னத்துக்கு உள்ள போச்சு?”

“அம்மை கருப்பட்டி எடுத்திட்டு வந்திருக்கா… இது கருப்பட்டி கேட்டிருக்கு… தரமாட்டேன்ன்னு சொல்லியிருக்கா… உள்ள போயிட்டுது.”

“அதுக்கா இம்பிடு வெப்ராளம்… நான் குட்டிய போயி எடுக்கேன்.”

“கதவு உள்ள மூடியிருக்குல்லா?”

பெருவட்டர் திகைத்தார். அவருக்கு நிலைமை புரிந்தது. வயக்கவீட்டின் பத்தாய அறை கிட்டத்தட்ட நிலவறை. ஆனால் தரைத்தளத்தில் இருந்தது. உள்ளே தரையில் கல்பலகைகள் பரப்பி இறுக்கபட்டது. அதன் சுவர்கள் கற்பாளங்களால் ஆனவை. மேலேயும் கருங்கல் பாளங்கள் அடுக்கப்பட்டு கூரை. அந்தக் கூரைக்குமேல் ஒரு தட்டுபடி அறை. அதன்மேல்தான் கூரையைத் தாங்கும் தூண்கள் நடப்பட்டிருந்தன.

அதன் கதவு ஆறு இஞ்ச் கனமான தேக்குமரம். அதற்கு உள்ளும் புறமும் இரும்புப்பட்டைகள். அந்தக்காலத்தில் அதற்குள்தான் நகைகளும் மதிப்புமிக்க பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இப்போது அது புளி, கருப்பட்டி அறையாக மாறிவிட்டது. எலி உள்ளே போகமுடியாது. பெருவட்டர் இரண்டுமுறை உள்ளே போயிருக்கிறார். கரடி நாயர் அவருடைய குடும்பச் சொத்தான யானை நெற்றிப்பட்டம், யானை நகைகள், கதகளி நகைகள் ஆகியவற்றை உள்ளே ஒரு பெரிய தேக்குபெட்டியில் வைத்திருந்தார்.

“ஆரும் சத்தம்போட வேண்டாம்… எல்லாம் பாத்துக்கிடலாம்” என்று பெருவட்டர் சொன்னார். ஆனால் அவருக்கு வயிற்றுக்குள் பதற்றம் குளிராக எடையாக தெரிந்தது. உள்ளே ஒரு வளர்ந்த ஆள் குனிந்தே நிற்கமுடியும். காற்றே கிடையாது.

“ஏட்டீ, குட்டி உள்ள போயி எம்பிடு நேரம் ஆச்சு?”

தங்கம்மை “கருப்பட்டி எடுத்தப்பம் காலம்பற எட்டு மணி… குட்டிய தேடினது காலம்பற எட்டரைக்கு. அறை பூட்டியிருக்குண்ணு கண்டுபிடிச்சப்ப ஒரு மணிக்கூர் ஆகியிருக்கும்.”

“இப்பம் மணி பத்தரை… அப்பம் ரெண்டரை மணிக்கூர் நேரமாட்டு குட்டி உள்ள இருக்கா” அவர் குரல் கொஞ்சம் தழைந்தது.

“எளவெடுத்த நாய வெட்டிப் போட்டுட்டு நானும் சாவேன். பிள்ளைய பாக்க முடியாம இவ என்ன எடுக்கா? செத்த சவமே!” என்று கரடி நாயர் கையை ஓங்கிக்கொண்டு மனைவியை நோக்கி பாய்ந்தார்.

பெருவட்டர் “அந்தாலே போலே… கைய வச்சே முறிச்சு போடுவேன்.. போ… போலே… நாயர்மாருக்கு நாயறிவுண்ணு சும்மாவா சொல்லுகானுக… லே அப்பு. இந்த நாயி இங்க இனி வரப்பிடாது” என்றார் பெருவட்டர்.

அப்பு “மாமன் வரணும்… பெருவட்டருல்லா சொல்லுதாரு” என்றான்.

“அய்யோ நான் சாவுதேன் நான் சாவுதேன்… எனக்க குட்டிக்கு என்னமாம் ஆச்சுன்னா நான் இருக்கமாட்டேன்” என்று கரடி நாயர் தலையில் அறைந்து கதறியபடி தளர்ந்து அமர தவளைக்கண்ணனும் அப்புவும் அவரை இரண்டு கைகளையும் பிடித்து தூக்கி இழுத்து வெளியே கொண்டு சென்றார்கள்.

“பெருவட்டரே… எனக்க பிள்ளை… நானும் சாவுதேன்.. அவளுக்க கூட நானும் சாவுதேன்.”

“சும்மா கெட… என்ன இப்பம் நடந்துபோச்சு… குட்டி உள்ள இருக்கா. நாம வெளியே விளிச்சுதோம், வந்திருவா… நான்லா சொல்லுதேன்” என்று பெருவட்டர் அவளை அதட்டினார்.

விசாலாட்சி அவர் சொன்னால் நம்புவாள். அவள் கரடி நாயரை திற்பரப்பு கோயிலில் வைத்து மணம் முடித்த நாளில் அதற்குமுன் பார்த்தே இராத மதுரை மல்லிகைப்பூவின் கொடும் நாற்றம் தாங்காமல் குமட்டல் எடுத்து கோயில் திண்ணையில் படுத்திருந்தபோது அவர்தான் ரகசியமாக ஓடிச்சென்று சோடா வாங்கிக் கொண்டுவந்து எலுமிச்சை பிழிந்து உப்பு போட்டு கொடுத்தார். அதன்பின் அவளுக்கு கரடி நாயர் அறியாமல் செய்யவேண்டிய எல்லாவற்றையும் அவர்தான் செய்வார். கரடி நாயருக்கு தெரிந்தால்கூட இவர் உச்சகட்ட கோபத்தில் அவரை ஓர் அதட்டுபோட்டு பயப்படச் செய்துவிடுவார்.

நிலைமை கொஞ்சம் அமைதியான பின்னர் பெருவட்டர் யோசிக்க ஆரம்பித்தார். கதவை தட்டுவதில் அர்த்தமில்லை. ஏற்கனவே பலர் தட்டிவிட்டார்கள். உள்ளே ஓசை கேட்காது. குழந்தை பயந்துவிடக்கூடும். அதற்கு இரண்டு வயதுதான். ஆனால் கிலுகிலுப்பை போல அர்த்தமே இல்லாமல் பேசும். சின்ன அரிசிப்பற்களைக் காட்டி நன்றாகவே சிரிக்கும். நிறம் கொஞ்சம் குறைவுதான். அவளுக்கு மூத்தவன் அனந்தனைப்போல அம்மாவின் சாயல் இல்லை. கரடி நாயரின் அம்மா லட்சுமிக்குட்டியின் சாயல். அதே பெயர்தான். அதை இன்னொரு முறை அழைத்துப் பார்க்கலாம். ஒருவேளை கேட்குமோ என்னவோ?

அவர் கதவருகே சென்று வாயை அதன் பொருத்தில் வைத்து “மக்கா. கிலுக்காம்பெட்டி ,மக்கா கிலுக்காம்பெட்டி, நானாக்கும் தங்கையா மாமன்.. இஞ்சேரு…. இஞ்சேரு குட்டீ, உனக்கு நான் கல்கோனா கொண்டு வந்திட்டுண்டு… இஞ்சேரு குட்டி”

ஆனால் உள்ளே இருந்து எதுவும் கேட்கவில்லை. பங்கிக் கிழவி “அது எங்க கேக்க? நாலு கலுக்கோனா வேங்கி அதுக்கு ஆண்டுதிதி குடுக்குறப்ப எலையிலே வையுங்க” என்றாள்.

“அய்யோ எனக்க குட்டியே! எனக்க செல்லமே!”

“ஏட்டி தங்கம்மை, இந்த நாறக்கெளட்டு முண்டச்சிக்க வாயில வெளக்குமாத்த வையிடீ.”

லாரன்ஸ் கடப்பாரையுடன் வந்தான். “பெருவட்டரே கடப்பாறை”

“அது எதுக்குலே?”

“கொண்டுவரச் சொன்னாக.”

“அதவச்சு என்ன செய்ய? மசுத்துகதா?”

“கதவ உடைக்கலாம்லா? குட்டிக்கு அங்கிண மூச்சு போயிருக்கும் இந்நேரம்”

“வாய கிளிச்சுப்போடுவேன். தாயோளி… போலே” என்றார் பெருவட்டர். ஆனால் உடைப்பதா என்று தெரியவில்லை.

லாரன்ஸ் “தட்டிப்பாப்பமே” என்றான்.

பெருவட்டர் ஒன்றும் சொல்லவில்லை. அவனே கடப்பாரையால் கதவை குத்தினான். கதவின் விளிம்புகளிலிருந்த தூசுதான் பறந்தது

“பெருவட்டரே, பாறையிலே தட்டுகது மாதிரி இருக்கு”

”என்ன செய்யண்ணு தெரியல்லியே…” என்றார் பெருவட்டர்.

“ஆசாரிகிட்ட கேட்டுப்பாக்கலாமே” என்று தவளைக்கண்ணன் சொன்னான்

“ஆருலே இவன்? ஆசாரி இங்க வந்து என்ன மயித்தவா போறான்?” என்று கையை நீட்டி கூச்சலிட்ட பெருவட்டர் பின்பு ஒருகணம் யோசித்து “செரி, ஆசாரிய விளி” என்றார்.

“ஆசாரி இங்கிணதானே நிக்காரு.”

“வக்காவோளி, இங்க நின்னுட்டாலே சும்மா இருக்கே?” என்று பெருவட்டர் ஆசாரியை அடிக்கப் பாய்ந்தார்.

“அது முளுக்க இரும்புல்லா? நான் மர ஆசாரி” என்றார் பிரமநாயகம் ஆசாரி. “எங்கிளுக்க வேதம் வேறயாக்கும்… உளியெறங்காப் பொருள் எங்க கணக்குலே இல்ல”

“பின்ன நீரு எதுக்குவே அம்புஜத்துக்க வீட்டுக்கு போறீரு?” என்றான் லாரன்ஸ் “அவ மூசாரில்லா?”

“ஆருலே அது? லே.”

“சத்தம்வேண்டாம்..” என்றான் அப்பு.

“அப்பம் மூசாரிய விளிடே…உயிர எடுக்கானுக… எல்லாத்தையும் சேத்து கொளுத்திப் போடுவேன்” என்றார் பெருவட்டர்.

மூசாரியை கூட்டிவர லாரன்ஸ் சைக்கிளில் ஏறி சென்றான். தங்கம்மை வந்து “பெருவட்டரே அம்மை மயக்கம்போட்டு விளுந்திட்டா” என்றாள்.

“ஆரு?”என்றபின் பெருவட்டர் அவளை நோக்கி ஓடினார்.

“அம்மையே எளுப்புட்டி… அம்மை, வெசாலமே, இந்தா எந்திரி… ஏட்டி மூஞ்சியிலே இம்புடு வெள்ளம் தளிச்ச தெரியாதா உனக்கு?”

பங்கஜம் நீரை தெளிக்க விசாலாட்சி கண்விழித்து பெருவட்டரை பார்த்து “பெருவட்டரே… எனக்க பிள்ளை! எனக்க குட்டீ!” என்று கூவினாள்.

”இப்பம் வெளியே வந்துபோடுவா… சும்மா இருப்பியா? இவள வச்சுகிட்டு.”

முன் அறையிலிருந்து கரடி நாயர் ஆவேசமாக ஓடிவந்தார். கையை ஓங்கியபடி “இவள வெட்டிட்டு நானும் சாவுதேன்… அறிவில்லாத தேவ்டியா!” என்று கூவினார்.

பெருவட்டர் அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். “போலே வெளியே.. ஏல வெளியே போலே”

கரடி நாயர் “எல்லாரும் சேந்து எனக்க குட்டிய கொல்லுங்க… நானும் சாவுதேன்” என்று பீரிட்டு அழ அவரை தவளைக்கண்ணன் இழுத்துக் கூட்டிச்சென்றான்.

“ஒண்ணு மனசிலாவேல்ல, நெலவறையிலே எதுக்கு உள்ள பூட்டு வச்சிருக்காவ?” என்றான் முத்தன்.

“அந்தக்காலத்திலே தீவட்டிக்கொள்ளைக்காரனுவ வருவாவல்லா? அப்பம் பொன்னையும் பணத்தையும் பொம்பிளையாளுளையும் உள்ள போட்டு பூட்டிருவானுக…” அப்புப் பாட்டா சொன்னார்.

“இரும்பு கோட்டையில்லா!” என்றார் மாதேவன் பிள்ளை.

“பின்ன? மகாராசா காலமாக்கும்!”

“நாயர்மாரு விவரமுள்ளவனுக.”

”தீவட்டிக்காரன்மாரு ஒருக்கா வந்து மூடின கதவைத் தட்டி விளிச்சு, பொன்னோட வெளியே வந்தா உன்னையும் கூட்டிட்டு பாண்டிநாட்டுக்கு போறேன். இல்லேண்ணா வெளியே பூட்டிட்டு சாவியையும் கொண்டு நாங்க அந்தாலே போயிருவோம்னு சொன்னானுவ… நாணிக்குட்ட்டீங்குத அம்மிணியும் ஏளு பெண்ணடிகளும் உள்ள இருக்கப்பட்ட பொன்னையும் பணத்தையும் எடுத்துகிட்டு கதவத்தெறந்து வந்து அவனுக கூட போனாளுக… களக்காட்டுப்பக்கம் அவளுகளுக்க வம்சம் இப்பமும் உண்டு.”

“பாண்டிக்காரனுக அதுக்குமேலே வெவரம், என்னலே?”

மூசாரி வந்திறங்கினார். கிழவரான செல்லன் பிள்ளைக்கு ஆணிக்கால். ஆகவே பொத்திப்பொத்தி நடந்து வந்தார். பஞ்சுத்தலை, பஞ்சு ஒட்டிவைத்தது போன்ற புருவங்கள். அரிசிமாவு படிந்தது போல தாடி.

“மூசாரியே இந்த நெலவறைய எப்டி தெறக்குதது? சின்னக்குட்டி உள்ள போயிருக்கு… உள்ள கொண்டி விளுந்து போச்சு” என்றார் பெருவட்டர்.

செல்லன்பிள்ளை உள்ளே வந்தார். நிலவறையை பார்த்ததுமே புரிந்துகொண்டர். “இது மூலந்திருநாள் மாடலுல்லா?”

“என்னது?”

“மூலந்திருநாள் மகாராஜா காலத்திலே எனக்க அப்பனுக்க அப்பன் இருந்த நாளிலே செய்தது… பெருவட்டரே இதை உடைக்குததுக்கு ரெண்டுநாள் ஆவும். இரும்புத்தகடாக்கும்… சூடாக்கி உருக்கி எடுக்கலாம். ஆனா மொத்தமா சூடாயிரும். குட்டி உள்ள இருக்குல்லா.”

“கதவை வேணுமானா எரிச்சு உடைக்கலாம்” என்றான் கோலப்பன்.

”ஏல ஆருலே அவன்? உள்ள பிள்ளை இருக்குல்லா? புகை முளுக்க உள்ளல்ல போவும்?”

“பின்ன என்ன செய்யுதது?”

“போத்திய விளிச்சணும் பெருவட்டரே.”

“போத்தி எதுக்கு? மந்திரம் போடவா?”

“அவரு பிராமணனுல்லா? பிராமணனுக்கு ஏளறிவாக்கும்.”

“இவரு போத்தியில்லா, இவனுகளுக்கு அஞ்சரையாக்கும்… எளவு எங்க போனாருண்ணு தெரியல்லியே” என்றார் பெருவட்டர்.

“முக்குசாஸ்தா கோயிலுக்கு போறதை பாத்தேன்.”

“கூட்டிட்டு வாலே… சங்கதியச் சொல்லி கூட்டிட்டு வா… வெவரம் கெட்ட நாய்களா இருக்கானுக… எனக்க அளப்பங்கோடு முத்தப்பா எனக்கு நிலை கொள்ளலியே…நேரமாகுதே.”

போற்றி வரும்போது பெருவட்டர் தளர்ந்து அமர்ந்திருந்தார். வியர்வை வழிந்துகொண்டிருந்தது.

“என்னவே?” என்றபடி போற்றி உள்ளே வந்தார்.

“எனக்கு நெஞ்சிடிக்குது… நிக்கமுடியல்ல.”

“இருடே, வெப்ராளப்படாதே” என்ற போற்றி முகவாயில் கையை வைத்து நிலவறையை ஆழமாக பார்த்தார்.

“உள்ள யட்சி உண்டும்லா? அதாக்கும் போத்தி வந்தது” என்றார் அப்புப் பாட்டா.

போற்றி இடையில் கற்பூரத்தை துணியில் சுற்றி வைத்திருந்தார். அதை எடுத்து ஆழ இழுத்து மூக்கும் முகமும் சுளித்து அதிர்ந்து பின் இயல்படைந்தார்.

“குட்டிக்க மூத்தவன் எங்க?”

“அனந்தா, லே” என்றார் பெருவட்டர் “இங்கிணல்லா நிக்கான்.. எலிமாதிரி… லே, இங்கவா. போத்தி விளிக்காருல்லா.”

அனந்தன் சிறிய உடலை மேலும் குறுக்கி பெரிய கண்களால் ஏறிட்டுப் பார்த்தான்.

“லே, மக்கா, உனக்கு தெரியாத ஒண்ணு இந்த வீட்டிலே இல்ல… சொல்லு மக்கா. வெளியே இருந்து உள்ள பேசுததுக்கு வளி உண்டா?”

“அப்பா அடிப்பாரு.”

“அடிக்க மாட்டாரு.”

“அம்மை?”

“அம்மையும் அடிக்க மாட்டா.”

“தங்கம்மை?”

“ஏல, அவளும் அடிக்க மாட்டாலே.”

“ஆருமே அடிக்க மாட்டாவளா?”

“ஆருமே அடிக்க மாட்டாவ. போத்தில்லாடே சொல்லுதேன்.”

“அங்க ஒரு ஓட்டை இருக்கு. தூம்பு!”. சிறுவிரலை காட்டி  “இம்பிடுபோல ஓட்டையாக்கும்.. குச்சிய விட்டா உள்ளார போவும்” என்றான் அனந்தன்.

அப்பு “ஆமா, களுவின வெள்ளம் வெளியே போறதுக்குண்டான மடைத்தூம்பு இருக்குல்லா? வெரலுவிடுத வட்டம்” என்றான்.

“இப்பம் சொல்லுதே… ஏலே, அதுவளியா பிள்ளைகிட்ட பேசி மொள்ளமா கொண்டிய எடுக்கச் சொல்லு” என்றார் போற்றி “பிள்ளைக்க அம்மைய விளி”

“நான் பேசுதேன்! நான் பேசுதேன்!” என்று கரடி நாயர் பாய்ந்து வந்தார். “எங்கலே தூம்பு? எலே எங்கலே தூம்பு.”

அவர் வெளியே ஓட அப்பு வழிகாட்டி முன்னால் சென்றான்.  “இந்தா இங்கிண இருக்கு… இந்தா”

வெளியே சுதைச்சுவரிலிருந்து சிறிய துளை திறந்திருந்தது.

“நல்ல செறுப்பக்காரி பெண்குட்டிக்க தொப்புளு மாதிரில்லாவே இருக்கு“ என்றார் கண்ணு மூத்தார்.

அதை மூடியிருந்த துணியை அப்பு உருவி எடுத்தான். அவன் ஒரு குச்சியை எடுக்க போற்றி “ஏலே ஏலே தள்ளி உள்ள விட்டிராதே. பதமா எடுலே.”

அதற்குள் கரடி நாயர் வாயை பொருத்தி “மக்களே மக்களே ஏட்டி செல்லமே” என்று கூவினார்.

“அடைப்ப எடுக்கட்டும்வே… இவரு என்ன கிறுக்கன் மாதிரில்லா இருக்காரு.”

அடைப்பை உருவியபின் கரடி நாயர் வாயை மீண்டும் பொருத்தி “எனக்க பிள்ளே.. எனக்க செல்லமே எனக்க குட்டீ” என்று கதறினார்.

“இவனை எடுத்து மாற்றும்வே… எளவு ஒப்பாரில்லா வைக்கான்” என்றார் போற்றி.

“உள்ள இடிமொளக்கமா கேக்கும்” என்றார் ஆசாரி “குட்டி பயந்திருப்பா.”

“குட்டிக்க அம்மை வரட்டு… அவ பேசட்டு… அளப்பிடாது. நெலைவிளிக்கப் பிடாது. பதனமாட்டு குட்டிகிட்ட பேசணும். ஆசாரி, வே, கதவை எப்டி தெறக்குததுண்ணு சொல்லும்வே.. அம்மை குட்டிக்கிட்ட சொல்லட்டு.. குட்டிக்கு ரெண்டுவயசு ஆச்சுல்லா? வெவரமுள்ள குட்டியாக்கும்… சொன்னா செய்வா… பூப்போலே தெறந்து வருவா.”

“ஏட்டி தங்கம்மை, வெசாலத்த விளிடீ” என்றார் கரடி நாயர்.

“அவளாலேதான் இதெல்லாம்… அவளுக்கு நான் வச்சிருக்கேன்… நாறத்தேவ்டியா.”

“டே அவனுக்க சங்க வெளியே எடுலே” என்று பெருவட்டர் கூவினார்.

“நீ சும்மா இருலே… கரடி நீ அந்தால போ” என்றார் போற்றி.

தங்கம்மை விசாலாட்சியை தாங்கி கூட்டிவந்தாள். விசாலாட்சி ஓசையின்றி அழுதபடி மூச்சிளைத்தபடி வந்தாள். வெளியே சென்றபோது சுவரை பற்றிக்கொண்டு நிலையிழந்து விழப்போனாள்.

“ஏட்டி பிடிச்சுக்கோ.”

“பிள்ளை செத்தா அம்மைக்கு பின்ன துக்கம்லா” என்றாள் பங்கிக் கிழவி. “அதுக்க கல்லறையிலே அதுவா அருமையாட்டு கேறிப்போச்சு பாத்தியளா?”

”டேய் அந்த நாறக்கெளவிய அடிச்சு போடுலே.. அவ நாக்க பொசுக்க ஆளில்லியா?”

”நீ சும்மா இருடே..நாம நம்ம வேலைய பாப்பம். தேளுக்க தர்மம் கொட்டுகதாக்கும்” என்றார் போற்றி. “வெசாலமே நீ அந்தால இரு… ஓட்டை வளியா மூசாரி சொல்லுகத குட்டிகிட்ட சொல்லு.”

விசாலம் அமர்ந்தாள். அந்த துளையில் வாயை வைக்கும்போது கண்ணீர் விட்டாள்.

“அப்பிடி வாயை அமுத்தப்பிடாது. உள்ள முளங்கும். கொஞ்சம் தள்ளிவச்சு மைக்கிலே பேசுகது போல சொல்லணும்..” என்றார் செல்லன் மூசாரி .

“குட்டீ… குட்டீ.. லெச்சுமீ.”

”காத வையுங்க… காத வையுங்க.”

விசாலம் காதை வைத்துப் பார்த்தாள்.

“கேக்குதா?”

“ஆமா, குட்டி கரையுதா.”

“நல்லதாக்கும். அவளுக்கு போதமிருக்கு. உள்ள காத்து தீரல்ல… விளியுங்க…”

“குட்டீ… லெச்சுமி… செல்லமே”

விசாலம் அழுதபடி மூக்கையும் கண்ணையும் துடைத்து விம்மினாள்.

“அழப்பிடாது. சொல்லுங்க… அவ வந்த வளியிலே கதவு இருக்கு… அப்டியே திரும்பிப் போயி அதை கையாலே தொட்டுப் பாக்கச் சொல்லுங்க” என்றார் மூசாரி.

விசாலம் தயங்கி சொல் சேர்த்து “மக்களே, குட்டீ, வந்த வளியாட்டு போடீ. கதவ தொட்டுப்பாருட்டீ” என்றாள்.

“செவிய வச்சு கேளுங்க…”

போற்றி “என்ன சொல்லுதா?” என்றார்.

“கரையுதா.”

“பதில் சொல்லுதாளா?”

“இல்ல.”

“மறுபடியும் சொல்லுங்க.”

விசாலம் மீண்டும் சொன்னாள் “மக்களே குட்டீ வந்த வளியாட்டு போடி… அந்த கதவை தொட்டுப்பாருட்டீ.”

“என்ன சொல்லுதா?

“அவளுக்கு ஒண்ணும் புரியல்ல… கரையுதா.”

போற்றி “சொல்லிட்டே இருங்க” என்றார்.

விசாலம் “குட்டீ செல்லம் அம்மை சொல்லுததை கேளுடீ வந்த வளியாட்டு போடி… அந்த கதவை தொட்டுப்பாருட்டீ” என்றாள்.

தங்கம்மை “பிடிவாதம் கூடின சென்மம்லா? பெத்த பாட்டிக்க பேரும் அதே நாறச்சொபாவமும்” என்றாள். “காலம்பற எந்திரிச்சு பாயிலேயே இருந்து ஒரு நாளிகை அளுவும்… ஆரு சொன்னாலும் நிப்பாட்டாது. என்ன வேணும்னு கேட்டாலும் சொல்லாது… சீண்டரம் பிடிச்சது”

பங்கஜம் “நாம இவன்கிட்ட கேக்கணும், குட்டி ஏன் அளுவுதுடேண்ணு. குட்டிக்கு கருப்பட்டி வேணும்னு இவன் சொல்லுவான். அதுவும் கேட்டுட்டு ஆமாண்ணு சொல்லீரும்… ரெண்டும் சேந்து கருப்பட்டி திங்கும்.”

“அது எங்க திங்குது… இதுல்லா பிடுங்கி நக்கும்? அந்தால போலே, ஒட்டிட்டு நிக்கான் பாரு” என்றாள் தங்கம்மை.

போற்றி திரும்பிப் பார்த்து “அது காரியமாக்குமே… லே, நீ போயி உனக்க எளைய குட்டிகிட்டே பேசு… வெசாலமே நீ பேசுத பாஷை அவளுக்கு புரியல்ல கேட்டியா… நீ வெலகு… அனந்தா, நீ போலே.”

அனந்தன் ஆவலாக “குட்டி செத்துப்போச்சா?” என்றான்.

“ஏலே” என்று அவனை அடிக்கப் பாய்ந்தார் பெருவட்டர்.

“நாடாரே, நீரு வெலகும்” என்றார் போற்றி. “இல்ல, குட்டி உள்ள இருக்கு. நீ மூசாரி சொல்லுகதெ அப்டியே குட்டிக்கிட்ட சொல்லு.”

அனந்தன் சென்று மடை அருகே அமர்ந்தான். விசாலம் விம்மி அழுதுகொண்டே அங்கேயே மண்ணில் படுத்தாள்.

மூசாரி “கொச்சேமான் கேக்கணும்… குட்டி நல்லாருக்கியாண்ணு கேக்கணும்” என்றார்.

அனந்தன் மடையில் வாயை வைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தான். சிரித்துக்கொண்டே “அப்பீ…ஞாளு ச்சி சேச்சிணீ?” என்றான்.

 ”என்னவே சொல்லுதான்?”

“அது அவங்களுக்க பாஷை… நீரு சும்மா இரும்.”

“பிள்ளே, குட்டிகிட்ட வந்த வளியாட்டு திரும்பி அந்த கதவ தொட்டு பாக்கச் சொல்லணும்.”

“ஏன்?”

“அப்டியே சொன்னாப்போரும்.”

“அப்பீ, மந்நாழியே போயி ராட்டிலு தொடீட்டே… ஞாளு பற கேட்டா.”

“இது மலையாளமா?” என்றார் முத்தன்.

குமாரன்நாயர் “மலையாளம் இப்டி கேவலமாட்டா வே இருக்கு? அந்தாலே போவும் வே” என்றார்.

“ப்ஸாஸுக்க பாஷை… அல்லேலூயா!” என்றார் ஞானகுருசு.

“என்ன சொல்லுதா?” என்றார் போற்றி.

“அப்பி சொல்லுதா இருட்டா இருக்காம்.”

“இருட்டாத்தான் இருக்கும்… இருட்டிலே போறதுதான் இந்த வெளையாட்டுன்னு சொல்லணும்.. கதவை தொட்டாள்னாக்க பிரைஸ்!” என்றார் போற்றி.

“அப்பீ ஞீ ஆனையிலே போயி ராட்டிலே தொட்டா ஞீக்கு பிரைஸ்…”

“ஆனையா? உள்ள ஆனை இருக்காலே?”

”சும்மா கெடலே.”

“உள்ள சாத்தானுக்க ராஜ்ஜியமாக்கும்! அல்லேலூயா!””

“என்னடே சொல்லுதா உனக்க குட்டி?”

“அப்பி கதவிலே தொட்டா… அப்பீ ஞீ பிரைஸ்… கல்கோனா பிரைஸ்!”

“பிள்ளே அப்டியே தடவிப்பாக்கச் சொல்லணும்… கீளேருந்து… கொண்டி நீட்டியிருக்கா இல்ல விளுந்திருக்காண்ணு சொல்லணும்.”

போற்றி “ஓரோண்ணுக்கும் பிரைஸ் உண்டு” என்றார்.

“அப்பீ ஞீக்கு பிரைஸ்…ஞீ ராட்டு ஈட்டி தொட்டே…ஞீ ராட்டீ மாஞ்சு தொட்டே… ஞீ தொட்டே ஞீக்கு பிரைஸு.”

“என்னவே சொல்லுதான்? என்னமோ தமாஸு மாதிரில்லா இருக்கு.”

”குட்டி பேசுதாள்ல…சும்மா இரும்வே.”

மூசாரி “என்ன பிள்ளே சொல்லுதா?”

“ஒண்ணு கொண்டி கீழே கெடக்கு.”

“மேலே பாக்கச் சொல்லுங்க.”

“ஞீ மூளில் ராட்டு ஈட்டி மாஞ்சிடீ…ஞீ தொடே.. ஞீ தித்தி அங்ஙு போ.”

“என்ன சொல்லுகாண்ணு சொல்லுங்க பிள்ளே.”

“அவ தேடுதா.”

“மறுபடி சொல்லுங்க.”

“அப்பீ ஞீ மூளில் ராட்டு ஈட்டி மாஞ்சிடீ…ஞீ தொடே.”

“என்ன சொல்லுகா?”

“ஒரு கொண்டி இப்டி இருக்கு” என அனந்தன் எழுந்து கையை கிடைமட்டமாக காட்டினான்.

”இவன் கண்ணால பாத்தது மாதிரில்லாவே சொல்லுகான்… நம்ப முடியல்ல.”

“அதுக அப்டிதான், அதுக பாஷைய கண்ணால பாக்கும்… சும்மா இரும்.”

மூசாரி “அதை அப்டியே மேலே தள்ளி இளுக்கச் சொல்லணும்பிள்ளே.”

”அப்பீ ஞீ மூளி ஆக்கு. ஞீ அது மூளீ ஆக்கு… ராட்டு ரீட்டி மூளி ஆக்குடீ.”

“என்ன சொல்லுதா பிள்ளே.”

“அவ அதை தொட்டாச்சு.”

“பின்ன?”

“எடுக்காம நிக்குதா.”

“சொல்லணும்…எடுக்கச் சொல்லணும்.”

“அப்பீ ஞீ மூளி ஆக்கு ..அப்பீ ஞீ மூளி ஆக்கு..”

“என்ன பிள்ளே?”

“அவ எடுக்காம நிக்கா.”

“ஏன்?”

“சொல்லாம நிக்குதா.”

“சொல்லணும் பிள்ளே, எடுக்கச் சொல்லணும் பிள்ளே.”

“அப்பீ ஞீ மூளி ஆக்கு. அப்பீ ஞீ மூளி ஆக்கு.”

“என்ன பிள்ளே?”

“அவ எடுக்கல்ல.”

“இப்பம் என்ன செய்யுதது?”

அனந்தன் மீண்டும் வாயை வைத்து “அப்பீ ஞாளு பண்டம் ஞ்சி… பண்டம் ஞ்சீடீ” என்றான்.

“அது என்னமோ சொல்லுகானே… என்ன சொல்லுகான் ஆசாரி.”

“அது நான் சொல்லல்ல பெருவட்டரே, அவனே சொல்லுகான்.”

அனந்தன் தன் இடையிலிருந்த நிஜாரை கழற்றிவிட்டு பிறந்தமேனியாக ஓடி கதவருகே வந்து நின்றான்.

“என்னவே செய்யுதான்?”

“என்னமோ அவங்களுக்குள்ள. பாப்பம்.”

”எறும்பு கடிச்சுப்போட்டோ?”

“அப்பி கதவ தெறந்திட்டா” என்று அனந்தன் கூவினான்.

“வே ஆசாரி, கதவத் தள்ளும்வே”

“பாத்து, குட்டி அந்தப்பக்கம் சேர்ந்து நிக்கப்போறா”

ஆசாரி கதவை மெல்ல தள்ளினார். சற்றே திறந்தபோது குட்டியின் சிறிய வட்டமுகம் தெரிந்தது.

“அப்பீ ஞாளு பண்டம் ஞ்சி… பண்டம் ஞ்சீ அப்பீ”

குட்டி வெளியே வந்தது. அதன் உடம்பிலும் துணி ஏதுமில்லை. தயங்கியபடி வந்து அனந்தனின் உடலுடன் ஒட்டியபடி நின்றது.

“எனக்க மக்களே என்று வீரிட்டபடி கரடி நாயர் ஓடிவந்து குட்டியை தூக்கி கொண்டார். வெறிகொண்டு முத்தமிட்டபடி தழுவி இறுக்கி அங்குமிங்கும் ஓடினார் “எனக்க பொன்னே எனக்க முத்தே எனக்க செல்லமே.”

விசாலம் கண்ணீருடன் சிரித்துக் கொண்டு அதைப் பார்க்க தங்கம்மை “இனி ஒருமணிக்கூராவும் அதை கீள வைக்க… அம்மிணி வரணும். இம்பிடு காப்பிவெள்ளம் குடிச்சணும்” என்றாள்.

”ஆமா வெசாலமே நீ கொஞ்சம் காப்பி குடி” என்றார் போற்றி.

“ஏட்டி தங்கம்மை அந்த கரடிக்கும் ஒருவாயி காப்பிய குடிடீ” என்றார் பெருவட்டர்.

”நீ என்னடே சொன்னே குட்டி கிட்ட?” என்று போற்றி கேட்டார்.

“அப்பிக்கு துணியில்லை… அப்பி பண்டம் காட்டி நின்னா..”

“அதுசெரி, துணியில்லாம வாறது ராஜகுமாரிக்கு நாணமாப் போச்சு” என்றார் போற்றி.

”அதுக்கு இவன் எதுக்கு வே நிக்கர களட்டுதான்?” என்றார் பெருவட்டர்.

“இவன் துணியில்லாம நின்னா அவளுக்கு நாணம் போயிரும்லா?”

“எப்டி?”

“நீரு வளந்துபோட்டேரு… சொன்னா புரியாது” என்றார் போற்றி.

“குட்டிய வல்ல பாம்போ மற்றோ கடிச்சிட்டுண்டாண்ணு பாக்கணும்” என்றாள் பங்கி. “இருட்டுலே பாம்பு கடிச்சா அரைநாழிகையிலே சீவன் போகும்லா?”

“ஏலே இந்த நாறச்சவத்த இளுத்து நாலு சவுட்டு சவுட்டுங்கலே.”

“அவ வாயாலே குசு விடுதவள்லா.”

“வே பெருவட்டரு… கரடிக்கிட்டே சொல்லும்வே மகாதேவனுக்கு ஒரு பந்திருநாளி கொடைக்குடுக்கணும்னு…  நான் வாறேன். சாத்தாகோயிலுக்கு நேரமாச்சு.”

“பந்திருநாளி நானும் நேந்திட்டுண்டு… வேதக்கோயிலுக்கும் ஒரு மெளுவுதிரி நேந்திருக்கு” என்றார் பெருவட்டர். ‘நாளைக்கு கொண்டு வாறேன்.”

“நான் வாறேன்.. வெசாலமே நான் வாறேன் கேட்டியா?”

பங்கஜம் “எல்லாருக்கும் காப்பி இட்டிருக்கு.. குடிச்சிட்டுபோங்க” என்றார்.

“ஆமா, ஷோ முடிஞ்சாச்சுல்லா.. காப்பிகள குடுங்க” என்றபடி போற்றி சூடத்தை எடுத்து முகர்ந்து பார்த்தார்.

தவளைக்கண்ணன் நிலவறைக்குள் எட்டிப்பார்த்தான்.

“அந்த நாய உள்ள போட்டு மூடுங்கலே” என்றான் லாரன்ஸ்.

“குட்டி உள்ள நல்ல பெரிய கருப்பட்டி எடுத்து வச்சு பக்கத்திலே இன்னொரு கருப்பட்டிய வச்சு அதுக்குமேலே ஏறி இருந்து தின்னிருக்கா” என்றான் தவளைக்கண்ணன். “இண்ணைக்கு ஒருநாள் நல்ல பீச்சலு உண்டு”

முற்றம் வழியாக டீக்கனார் அவசரமாக வந்து கூட்டத்தைப் பார்த்து “என்னவே? வே பெருவட்டரே, என்னவே?” என்றார்.

“வே டீக்கனாரு,, இங்கிண நாம அறியாத பல பாசைகள் உண்டும்வே.”

“ப்ஸாஸுக்க பாஷைதானே?”என்றார் டீக்கனார் “வேதத்திலே சொல்லியிருக்குல்லா?”

“இது சாமிக்க பாசை வே… தேவன்மாருக்க பாசை.”

“நீரு கேட்டேரா?”

“பின்ன? ரெண்டு காதாலே!”

”ஏசுவே, ராசாவே” என்றார் டீக்கனார்.

***

முந்தைய கட்டுரைஆடகம்,கோட்டை -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16