ஆடகம் [சிறுகதை]

[ 1 ]

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பேயைச் சொல்கிறார்கள் என்று நான் இணையத்தில் வாசித்தேன், ஆகவே அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் நான் தற்கொலை செய்துகொள்ளும் ஊரில் மழைபெய்து ஊரே நனைந்திருக்கவேண்டும் என்றும் ,இலைகளெல்லாம் அசைந்து அசைந்து சொட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்றும், வானம் நீலச்சாம்பல் முகிலால் மூடப்பட்டு இடியோசை அவ்வப்போது எழவேண்டும் என்றும் எண்ணினேன்.

நான் எவரும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத ஓர் இடத்தில் செத்துக்கிடப்பேன். மழைத்தாரைகள் என் உடலை அறைந்து கொண்டிருக்கும். நீரோடைகள் என் உடலை தொட்டு ஒதுங்கிச் செல்லும். அவ்வப்போது அடிக்கும் மின்னலில் என் உடல் மின்னி மின்னி அணைந்துகொண்டிருக்கும்.

மறுநாள், அல்லது அதற்கு அடுத்தநாள் எவரேனும் என் உடலைக் கண்டடைவார்கள். என் உடலைச்சுற்றி மெல்லிய மழைமணல் சருகுகளுடன் கலந்து வரிகட்டியிருக்கும். என் உடலெங்கும் உதிர்ந்த சிறிய இலைகளும் சருகுப்பொடிகளும் படர்ந்திருக்கும். சிறிய நத்தைகள் என்மேல் ஏறி மென்மையான தளிர்க் கொம்புகளை ஆட்டியபடிச் சென்றுகொண்டிருக்கும்.

இந்தக் கற்பனை நெடுங்காலமாக என்னிடம் இருக்கிறது. உண்மையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பகற்கனவுகள் எல்லாமே வெவ்வேறுவகையில் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றித்தான். எந்த ஊரென்றே தெரியாத வடஇந்தியச் சிறுநகர் ஒன்றின் பழைய விடுதியின் கறைபடிந்த சுவர்களும், அழுக்கு மெத்தையும், பிளாஸ்டிக் தண்ணீர் கோப்பையும், ஊதுவத்தி கொளுத்தி கரிபடிந்த துளைகள் கொண்ட மேஜையும் கொண்ட சிறிய அறையில்.

அல்லது லடாக்கின் அலையயலையாக சூழ்ந்து அமைதிவடிவாக குளிர்ந்து நின்றிருக்கும் மலையடுக்குகள் நடுவே ஒரு தொன்மையான புத்தவிகாரத்தின் அருகே உள்ள பழைமையான வீட்டின் சிறிய கண்ணாடிச் சன்னல்கள் கொண்ட தாழ்வான கூரையுடன்கூடிய திண்ணையில். சுள்ளென்ற ஒளி முற்றத்தில் விழுந்துகிடக்க ,காற்று கடுங்குளிராக காதுகளை விரைக்கச் செய்யும் பொழுதில்.

எண்ணி எண்ணிப்பெருக்கிக் கொள்வேன். என் சாவு எவருக்கும் பெரிய நிகழ்வு அல்ல. என்னால் பிறருக்கு அளிக்கத்தக்க துயர் என ஏதுமில்லை. என் உடலை அவர்கள் கண்டடையும்போது உருவாகும் அதிர்ச்சிதான் நான் அதிகபட்சமாக பிறருக்கு அளிக்கத்தக்கது.

அந்த தருணத்தை மிகமிக துல்லியமாக அமைத்து கண்முன் காண்பேன். அதில் அமைந்து முழுமையாக இறப்பேன். உள்ளம் கரைந்து கண்ணீர்விடுவேன். அழுதபடியே நெடுநேரம் அமர்ந்திருப்பதுண்டு. அப்படியே தூங்கி எழுவேன்.எழும்போது அதே துயரம் அதேபோல அவ்வண்ணமே நின்றிருக்கும்.

அது கரும்பாறை. அதை நான் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அது வெறும்புகைதான் என்று என்னிடம் மருத்துவர்கள் சொன்னார்கள். “நீங்க முதல்ல வெளிய வர நினைக்கணும். நீங்க உள்ள தாப்பாளை போட்டுட்டீங்கன்னா வெளியே இருந்து யாரும் திறக்கமுடியாது”

“நான் என்ன செய்யணும்” என்று கேட்டேன். “நீங்க நினைக்கிற துக்கம் உண்மையிலே இல்லைன்னு புரிஞ்சுகிடுங்க. அப்டி நம்புங்க. நீங்க எல்லாத்தையும் பெரிசாக்கிக்கிறீங்க. எல்லாத்தையும் இருட்டா பாக்கறீங்க. பிரச்சினை உங்க பார்வையிலே இருக்கு”

ஆனால் டாக்டர் மாணிக்கவேல் மட்டும் என்னை வேறுமாதிரி மதிப்பிட்டார். “பிரச்சினை சைக்காலஜிக்கல் இல்லைன்னு நினைக்கிறேன். நியூரோ பிராப்ளம்னு தோணுது.. ஆக்சுவலா ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு கலந்தது. ஒண்ணு இன்னொண்ண வளக்கும். பிரிச்சுப் பாக்கிறது சரியில்லை. ஆனா உங்க பிரச்சினையோட ரூட் நரம்புகளிலே இருக்கு. எப்பவுமே உங்க நெர்வ்ஸ் டவுனாத்தான் இருக்கு”

என் கைகள் எப்போதுமே குளிர்ந்திருக்கும். மிகமிகக் குளிர்ந்து, செத்த மீன் போலிருக்கும். அதை என் கல்லூரித் தோழர்கள் சொன்னதுண்டு. என்னிடம் கைகுலுக்குபவர்கள் திடுக்கிடுவார்கள். நான் “பயப்படாதீங்க, நான் டிராக்குலா இல்லை. மனுஷன்தான்” என்பேன். என் உடல்நிலை பற்றிய இருபது முப்பது நகைச்சுவைகள் என்னிடம் உண்டு. என் தொழிலே அதைவைத்துத்தான் ஓடுகிறது.

மெல்லிய சத்தத்திற்கும் திடுக்கிடுவேன். எப்போதுமே அதிர்ந்து கொண்டிருக்கும் மெல்லிய ஃபிலமெண்ட் போலத்தான் இருப்பேன். என்னால் எவர் விழிகளையும் ஏறிட்டுப் பார்த்துப் பேசமுடியாது. எவரிடமும் எதிர்த்தோ பேச்சை ஊடுருவியோ எதையும் சொல்லமுடியாது. என்னிடம் கேட்டாலொழிய எதையும் சொல்வதில்லை. ஆனால் பொதுவாக மனிதர்கள் பிறர் பேசக் கேட்பதில் ஆர்வமற்றவர்கள். நான் எந்தக்கோடையிலும் நன்றாகப் போர்த்திக்கொண்டுதான் தூங்குவேன். வெந்நீரில்தான் குளிப்பேன்.

என் நரம்புகள் ஏன் அப்படி இருக்கின்றன என்று டாக்டரிடம் கேட்டேன். “சின்னவயசுப் பாதிப்பு இருக்கலாம். இல்ல பிறப்பிலேயே அப்டி இருக்கலாம். அதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. இப்ப அதுக்காக மெனக்கெடுறதில்லை. மருந்து தாறேன். ரெகுலரா கொஞ்சநாள் சாப்பிட்டுப் பாருங்க”

ஸைப்ரக்ஸா என்று ஒரு மாத்திரை. அதைச் சாப்பிட்டால் என் பதற்றம் குறைந்துவிடும். ஆழ்ந்த ஒருநிலை வரும். ஆளே இல்லாத நீண்ட சாலையில் நான் சென்றுகொண்டே இருப்பதுபோலிருக்கும். தன்னந்தனியாக. பைக்கிலோ காரிலோ அல்ல. மிதந்து செல்வேன். சென்று சென்று அந்த அடிவானத்தில் மறைவேன்.

நாலைந்து மணிநேரம் ஆழ்ந்த தூக்கம். ஆனால் விழித்தால் மனம் மேலும் பாரமாகவே இருக்கும். உடல் கணுக்கணுவாக உளைச்சல் கொண்டிருக்கும். உதடுகள் உலர்ந்து கண்கள் கனத்து பலநாள் தூக்கமில்லாத சோர்வு கொண்டிருப்பேன்.

அப்படி பல மாத்திரைகள்.கடைசியாக சாப்பிட்ட மாத்திரை ஸோலியன். அதை எட்டு மாதம் சாப்பிட்டேன். அதுவும் என்னை அதே போல சாலையில் ஒழுகச்செய்து தூங்கவைத்தது. அதன்பின்னர்தான் இன்னொரு டாக்டர் அது ஸ்கிஸோஃப்ரினியாவுக்கான மாத்திரை என்றார். பயந்துபோய் அப்படியே நிறுத்திவிட்டேன்.

அதன்பின் நான் நினைத்தேன், எதற்காக இதை நோயாக நினைக்கவேண்டும்? எல்லாரும்தான் பகற்கனவு காண்கிறார்கள். நான் பெண்களைப் பற்றியோ பணக்காரன் ஆவதைப் பற்றியோ கனவு காண்பதில்லை. சாவுபற்றிய கனவு, அவ்வளவுதானே? இருந்துவிட்டுப் போகட்டும்..

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கனவுகள் கூர்மையாயின. நான் எங்கே எப்படி எதைச் செய்துகொண்டிருந்தாலும் அவை கூடவே இருந்தன. என் பேச்சு சிரிப்பு எல்லாமே அதன்மேல் நிகழ்ந்தன. நான் செய்தித்தாள்களில் தற்கொலைச் செய்திகளை மட்டும் படித்தேன். இணையத்தில் வெவ்வேறுவகையான தற்கொலை முயற்சிகளைப் பற்றி மட்டும் ஆராய்ந்தேன்.

நேற்று மாலை திடீரென்று தோன்றியது, கனவுகண்டது போதும் என்று. கொஞ்சநாளாகவே கனவுகள் சலித்துவிட்டிருந்தன. அக்கனவுகளை நான் செய்து பார்க்கப் போவதில்லை. ஆகவே அவை பொருளற்றவை என்று தோன்றியது. எல்லா கனவுகளையும் அவநம்பிக்கையுடனும் ஏளனத்துடனும் அணுகத் தொடங்கினேன்.

“அப்படி ஏளனம் செய்யவேண்டியதில்லை. நினைத்தால் என்னால் உடனே கிளம்பிச் செல்லமுடியும். செய்துகொள்ள முடியும்” ஏன்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். “செய்துபார்” என்று யாரோ என்னை அறைகூவினார்கள்.”நான் கோழை இல்லை” என்று அவனிடம் சொன்னேன். “சரிதான்”என்றான். “நான் யார் என்று காட்டுகிறேன்” என்றேன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை” என்று அவனிடம் மீண்டும் சொன்னேன்.

எங்கே செல்லலாம் என்று இணையத்தில் தேடினேன். கடைசியாக எழுந்த கற்பனையில் நான் ஓயாமல் மழைபெய்துகொண்டிருந்த ஓர் இடத்தில் என் சாவை நிகழ்த்தியிருந்தேன். ஆகவே மழை என்று தேடினேன். ஆகும்பேயை கண்டுபிடித்தேன். ஒருகணமும் தாமதிக்கவில்லை. பையை எடுத்தேன். அறையைப் பூட்டி சாவியை குமாரசாமியிடம் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன். யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. எந்தச் செய்தியும் எவருக்காகவும் விட்டுவைக்கவில்லை.

[ 2 ]

ஆகும்பேக்கு நான் வந்து சேர்ந்தபோது காலை எட்டுமணி. நள்ளிரவில் பெங்களூர் வந்து அங்கிருந்து பேருந்தைப் பிடித்தேன். நான் சுற்றியிருக்கவேண்டாம், ஆகும்பே மங்களூரிலிருந்து இன்னும் பக்கம், எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அது சின்ன ஊர் என்று படித்திருந்தேன். அத்தனை சின்ன ஊர் என்று தெரிந்திருக்கவில்லை. பேருந்துநிலையத்தில் என் பேருந்து மட்டும்தான் சென்று நின்றது. பேருந்தின்மேல் மழை அறைந்து ஓலமிட்டுக்கொண்டிருந்தது

இறங்கியவர்கள் இருவர். அவர்களும் குடைவைத்திருந்தனர். குடையை திறந்தபடி பேருந்திலிருந்து இறங்கும் கலையை கற்றிருந்தார்கள். ஒருகணம், பறவை சிறகடித்து எழுவதுபோல. நான் என் பையிலிருந்து மழைக்கோட்டை எடுத்து போட்டுக்கொண்டேன். தலைக்குமேல் அதன் வளைவை இழுத்துப் போட்டுக்கொண்டு மழையில் இறங்கினேன்

மழைநீர் அப்படி தெள்ளத்தெளிந்து ஓடும் என்று நான் எண்ணியிருக்கவே இல்லை. எல்லா கூரைகளில் இருந்தும் பெரிய கண்ணாடி வடங்களைப்போல நீர்த்தாரைகள் கொட்டின. தரையில் ஓடிய நீர் குளிர்ந்திருந்தது. என் உடல் சிலிர்த்து குளிரை அறிந்தது. மழைக்கோட்டின் நைலானுக்குமேல் நீர்க்கற்றைகள் அறைந்த ஓசை என் உடலெங்கும் கேட்டது

நேராக திறந்திருந்த டீக்கடை நோக்கிச் சென்றேன். பாய்லரின் நீராவி மழைச்சரடுகள் நடுவே செல்வது விந்தையாக இருந்தது. “டீயா?”என்று கேட்டார்.

“தமிழா?”என்று நான் கேட்டேன்

“தமிழ் தெரியும்” என்றார்.

டீ சுமாராக இருந்தது, கொஞ்சம் பழைய பால். ஆனால் அதன் சூடு என்னை புல்லரிக்கச் செய்தது

“இங்க ஓட்டல் உண்டா?”என்றேன்

“சாப்பிடவா?”

“இல்லை, தங்க’

“லாட்ஜ் உண்டு… ஒந்தே லாட்ஜ். அதோ அங்கே”

அங்கிருந்தே விடுதியைச் சுட்டிக்காட்டினார். சாலைநோக்கி எல்லா அறைகளும் திறந்திருக்கும் இரண்டுமாடிக் கட்டிடம். பாசிபடிந்த சுவர்கள் மழையில் நனைந்து கருமையாக இருந்தன. வராந்தாவில் நின்ற ஒருவன் பீடி பிடித்துக்கொண்டிருந்தான்.

நான் அந்த விடுதி நோக்கிச் சென்றேன். மழைக்குள் இருவர் குனிந்து நடந்துசென்றார்கள். அவசரமே இல்லாமல். ஒரு கரிய பெரும்பசு மழையில் ஊறி மெல்ல நடந்து வயிறு அதிர பேருந்துநிலையம் நோக்கிச் சென்றது. சட்டென்று மேகம் மின்ன நீர்த்தாரைகள் சுடர்விட்டு அணைந்த இருளில் இடியோசை மிக அருகே ஒலித்தது.

நான் நாகப்பா விடுதியை அடைந்தேன். அங்கே மேஜை மட்டும் இருந்தது. அதை சிலமுறை தட்டியபோது ஒரு கிழவர் கையில் டீ டம்ளருடன் வந்தார். “எவரு?”என்றார்

“ரூம்” என்றேன்

இருக்கிறது என அவர் சொல்லவில்லை. மேஜையை திறந்து ஒரு பெரிய லெட்ஜரை எடுத்து பேனா வைக்கப்பட்ட பக்கத்தை பிரித்து நீட்டினார். நான் அதில் என் பெயரையும் விலாசத்தையும் எழுதினேன்

அவர் டீ குடித்தபடி “போன் நம்பர் பேக்கு” என்றார்

அதையும் எழுதினேன்

“ரூம் எங்கே?” என்று ஆங்கிலத்தில் கேட்டேன்

”கன்னடம் கொத்தில்லா?”

“தெரியாது”

”எந்த பாஷை?”

“தமிழ்”

“காலையிலே பத்துமணிவரை ஹாட் வாட்டர் இதே.. கீழே சொன்னா பக்கெட்டிலே கொண்டுவருவேனு. பையன் ரூமிலே டீ காப்பி கொண்டுவருவேனு. ஒரு டீக்கு அஞ்சுரூபா சார்ஜூ எக்ஸ்டிரா”

அங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் என்றார். அருகே ஒரு ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. அங்கே வேலைபார்ப்பவர்களில் தமிழர்கள் அதிகம்.

என்னை ஒரு சிறுவன் மேலே கொண்டுபோனான். “டீ கொண்டுவரவா சார்?”

“இப்பதான் சாப்பிட்டேன்”

“மழைக்கோட்டை ரூமுக்கு வெளியே கழட்டுங்க சார்…ரூம் ஈரமானா இங்க காயாது”

செருப்புகளையும் வெளியே கழற்றினேன். அறை சுமாராக இருந்தது. மெத்தை விரிப்பும் போர்வையும் ஓரளவு வெண்மையானவை. கழிப்பறையும் கறைபடிந்திருந்தாலும் தூய்மையானது. சுவர்களில்தான் நீர் வழிந்த விதவிதமான கறைகள். ஒரு பிளாஸ்டிப் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அது பாதி எழுந்து நின்றிருந்தது. சுவரே நீர் ஊறி சில்லிட்டிருந்தது. சுவர் மூலைகளில் எல்லாம் பூசணம் படிந்திருந்தது

நான் என் பையை வைத்துவிட்டு பையனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன். மெத்தைமேல் படுத்துக்கொண்டேன். பேருந்துப் பயணம் கொஞ்சம் கடுமையானது. இரவெல்லாம் ரங்கராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பதுபோலிருந்தது. படுத்தபோது கட்டிலும் சுழல்வதுபோலிருந்தது

கண்களை மூடியபோது மழையின் சத்தம்.அது என்னை சூழ்ந்து நின்றிருந்தது. ஒர் அருவிக்கு அடியிலேயே படுத்திருப்பதுபோல. கண்களை திறந்து பார்த்தேன். அறைக்குள் மெல்லிய புகை நிறைந்திருந்தது. புகையா? எழுந்து அமர்ந்தேன். மேஜைப்பரப்பு போர்வைப் பரப்பு எல்லாம் வெண்ணிறமான புகை படிந்து அமைந்திருந்தது

புகையல்ல, மிகமெல்லிய நீர்த்துளிகள். நான் நீர்த்துளிப்பரப்பில் கையால் எழுதினேன். ஆங்கிலத்தில் Go என்று. அதன்பின் என் பெயரின் முதலெழுத்து R. அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். காற்று உள்ளே வீச ஒட்டப்பட்டிருந்த போஸ்டரின் விளிம்பு ஓசையிட்டது. அதை ஏறிட்டுப்பார்த்தேன். அதிலிருதது என்ன என்று முதலில் புரியவில்லை. பிறகு கூர்ந்து நோக்கினேன். அது ஒரு பெரிய பாம்பு.

உலோகச் சாம்பல் நிறம். நூற்றுக்கணக்கான சிறிய சிப்பிகளை அடுக்கிவைத்து உருவாக்கியதுபோன்ற உடல். அல்லது ஏதோ பெரிய மீனின் உடல்போல. அடிக்கழுத்து வெளிறிய சங்குவண்ணம்.எனக்கு அதன் தலை சிறிய நாய்க்குட்டி போல இருப்பதாகத் தோன்றியது. கண்கள் இரு கண்ணாடி உருளைகள். அதன் வாயிலிருந்து சிவந்த நாக்கு நீண்டு பறந்து நின்றது

நான் எழுந்து பல்தேய்த்தேன். முகம்கழுவி வெளியே வந்தேன். மீண்டும் அந்த பாம்புப் படத்தை பார்த்தேன்.மழைக்கோட்டை கையில் எடுத்துக்கொண்டு கீழே வந்து விடுதிக்காரரிடம் “இங்கே எங்கே சாப்பிடுவது?”என்றேன்

“அதோ அங்கே, ஓட்டுக்கட்டிடம். பிராமின் ஓட்டல். கொங்கணிப் பிராமின்… காலை இட்லி தோசை. மதியம் சோறு. ராத்திரி சூடுகஞ்சி கிடைக்கும்”

மழையில் நடக்கும்போது அந்த ஊரைப்பற்றி ஆச்சரியமாக எண்ணிக்கொண்டேன். நான் வந்து ஒருமணிநேரம் கடந்துவிட்டது. மழை குறையவே இல்லை. அதே ஓலம். அதே இடிமின்னல். அப்படி மழைபெய்யக்கூடும் என்றே நான் அறிந்திருக்கவில்லை

கண்கள் கூச சாலையின் ஈரம் மின்னி அணைந்தது. இடி வெடித்து தலைக்குமேல் காற்றே சற்று அசைந்தது. நான் ஓட்டுக்கட்டிடத்தை அடைந்தேன். ஷெனாய் மெஸ் என்ற பெயர்பலகை கம்பிகளில் தொங்கி காற்றில் ஆடியது. இரண்டு டிவிஎஸ்50 வண்டிகள் நின்றன. மழைக்கோட்டுக்கள் போட வெளியே மூங்கில்கொக்கிகள் இருந்தன. கோட்டை கழற்றி மாட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன்

அங்கே நாலைந்துபேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பெரிய பற்களுடன் சிரித்த வாய்கொண்ட கொங்கணி பிராமணர் ”வாங்கோ, தமிழாளா?”என்றார்.

“ஆமா”

“இட்லி இருக்கு, தோசை இருக்கு, பயிறுவடை இருக்கு”

“தோசை குடுங்க” என்றபடி அமர்ந்தேன்

அவர் டீ கொண்டுவந்து வைத்தார்

“தோசை…”

”தோசை போடணுமே”

நான் டீயை பார்த்தேன். எதிரே அமர்ந்திருந்தவர் “எந்தூரு?” என்றார்

”நாகர்கோயில்”

“இங்க இப்டித்தான். டீய முதல்ல சாப்பிடுவாங்க”

”ஓ” என்றபின் டீயை சாப்பிட்டேன்.

“டூரிஸ்டா?” என்றார்

“ஆமா” என்றேன்

“இங்க டூரிஸ்டுகள் வாரதில்லை.இப்ப இண்டர்நெட் வந்தபிறகு எப்பவாவது இந்த இடத்தைப்பத்தி தெரிஞ்சுட்டு வருவாங்க…வந்தா ஒருநாள்தான் ஓடிருவாங்க…”

“மழையப் பாக்கத்தானே வாராங்க?”

“மழைய சும்மா பாக்கலாம்… மழையிலே இருக்கிறது ரொம்ப கஷ்டம்” என்றார் “சினிமாவிலேதான் மழை நல்லாருக்கும்”

“நீங்க என்ன பண்றீங்க?”

“நான் இங்க ரிசர்ச் செண்டர்லே லேப் அசிஸ்டெண்டா இருக்கேன். பேரு ஜான் சுந்தர்”

“என்ன ரிசர்ச்?”

“தெரியலையா? அதை நெட்லே பாக்கலை போல” என்றார். “இந்த ஆகும்பே காடு கிங் கோப்ரா சாங்சுவரி… கோப்ரா ரிசர்ச் செண்டர் இங்கே இருக்கு”

“ராஜநாகம்ல?”என்றேன்

“ஆமா, உங்க ஊரிலேயும் உண்டு. அப்பர் கோதையார், அந்தப்பக்கம் களக்காடு முண்டந்துறை…”

“ராஜநாகம்” என்றேன் “நல்லபேரு…நான் சின்னப்பையனா இருக்கிறப்ப டிவியிலே அப்டி ஒரு படம் வந்தது. பழையபடம்…அந்தக்கால ஸ்ரீகாந்த் நடிச்சது”

“எழுபத்துநாலிலே வந்த படம்…தமிழிலே சொதப்பிட்டாங்க. கன்னடத்திலே அது பெரிய கிளாஸிக். டி.ஆர்.சுப்பாராவ் கேள்விப்பட்டிருக்கீங்களா?”

“இல்ல”

“இங்க கன்னடத்திலே பெரிய எழுத்தாளர். அவரு எழுதின மூணுகதைகளை ஒண்ணாச்சேத்து நாகரஹாவுன்னு ஒரு படம் எடுத்தாங்க. புட்டண்ண கனகல் டைரக்ட் பண்ணினாரு. விஷ்ணுவர்த்தன் ஹீரோ”

“நாகரகாவுன்னா?”

“ராஜநாகம்தான்”

“நீங்க இங்க லேப்லே என்ன பண்றீங்க?”

“ராஜநாகத்தோட வெஷம் ரொம்பரொம்ப காஸ்ட்லியான மருந்து. ராஜநாகங்களை வளத்து அதோட வெஷப்பைகளை பிதுக்கி வெஷத்தை எடுத்து பிராஸஸ் பண்ணி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்றோம். இப்ப ஒரு கிராமுக்கு பதினெட்டாயிரம் ரூபா வரை வருது. ஒரு தடவை பத்துகிராம்வரை எடுப்போம். ஒண்ணரைலட்சம் ரூபாய்”

“வெஷம்ல? மருந்துங்கிறீங்க?”

“எல்லா வெஷமும் மருந்து, எல்லா மருந்தும் வெஷம்” என்றபடி எழுந்துகொண்டார்.

ஷெனாய் எனக்கு தையல் இலை போட்டு இட்லியை வைத்ததும் நான்  “தோசைதானே கேட்டேன்” என்றேன்

“இட்லி கேக்கலையா?”

‘இல்லையே”

“ஓ… அப்ப இருங்க”

“இல்லல்ல, இட்லியே போடுங்க”

இட்லி சூடாக இருந்தது, ஆனால் அரிசி ரவையால் செய்யப்பட்டது போன்ற சுவை. இனிப்பு கலந்த சாம்பாரில் இட்லி கரைந்தது

சாப்பிட்டபின் இன்னொரு டீ குடித்துவிட்டு கிளம்பினேன். கோட்டை போட்டுக்கொண்டபோது அப்படியே காட்டுக்குள் சென்றாலென்ன என்று தோன்றியது.

தார்ச்சாலையில் நடந்து பக்கவாட்டில் சென்ற மண்சாலைக்குள் நுழைந்தேன். இருபுறமும் காடு மழைநீரால் அறைவாங்கி முழக்கமிட்டபடி நின்றது. ஓடையே வழியாக இருந்தது. ஆனால் நீர் மிகமிக தெளிந்து ஓடியது. மழைபெய்து பெய்து கரைவதற்கு மண்ணில்லாமல் ஆகிவிட்டதுபோல

அந்த வழியில் அவ்வப்போது ஜீப்புகள் போயிருக்கும் என்று தோன்றியது. சருகுகள் அழுகி கால்வைத்ததும் கூழாக மாறி சறுக்கின. இலைசெறிந்த இருளுக்குள் மழை இறங்கிக்கொண்டே இருந்தது

மழையின் மணம் என ஒன்று உண்டு என அப்போது அறிந்தேன். அது நீர்ப்பாசியின் மணம். அத்தனை மரங்களிலும் பாசி படிந்திருந்தது. அத்தனை கற்களிலும் பசும்பாசி.

இங்கே ராஜநாகம் உண்டா? இருக்கும். ராஜநாகம் பற்றி நானறிந்த செய்திகளை சேர்த்துக்கொண்டேன். அதன் நஞ்சு ஓரு யானையை கொல்லக்கூடியது. பதினெட்டு அடிவரை நீளமாக வளரும். நான்கு அடி உயரத்திற்கு படமெடுத்து எழுந்து நின்றிருக்கும். அது பிற பாம்புகளைத்தான் உணவாகக் கொள்ளும். பாம்புகள் பெருகிய இடங்களில்தான் ராஜநாகம் இருக்கும். மழைக்காடுகளில்

நான் அதைத் தேடிக்கொண்டே சென்றேன். இலைச்செத்தைகளில், விழுந்துகிடந்த மரத்தடிகளில், பாறையிடுக்குகளில் எங்கோ அது இருக்கிறது. என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அப்படி நினைத்ததுமே நான் அதன் பார்வையை எங்கும் உணரத் தொடங்கிவிட்டேன். அந்தக்காடே ராஜநாகத்தின் பார்வையால் என்னை சூழ்ந்திருந்தது

மழைக்குள் ஒரு பாறை கரிய பளபளப்புடன் நின்றிருந்தது. அதன்மேல் சென்று அமர்ந்தேன். ராஜநாகம் கடித்துச் சாகவேண்டும். ஆம், அதுவே நல்ல வழி. என் அறையில் பைக்குள் நான் தூக்கமாத்திரைகளை வைத்திருந்தேன். தற்கொலைக்கு மிகச்சிறந்த வழி அதுதான். அப்படியே மயங்கி மயங்கி இல்லாமலாகிவிடலாம்.

ராஜநாகம் கடித்தால் எப்படி இருக்கும்? என் செல்பேசியை எடுத்து தேடினேன். குறைவாகவே விண்தொடர்பு இருந்தது. சக்கரம் சுற்றிச்சுற்றி அது ஒரு பக்கத்தை எடுத்தது. ராஜநாகத்தின் நஞ்சு நரம்புகளைப் பாதிக்கும். நரம்புகளின் வலை அறுந்துவிடும். நரம்புகளுக்கும் தசைகளுக்குமான தொடர்பு இல்லாமலாகும். மூச்சுத்திணறல் வரும். வலிப்பு வரும். வாயில் நுரைதள்ளும். பார்வை மங்கி நினைவு அழியும்.

ஆனால் நினைவுகள் மயங்கிச்செல்லும்போது விசித்திரமான பிரமைகள் வரும்.கனவுகளின் கொந்தளிப்பு. இனிமையானவை கடுமையானவை அச்சமும் களியாட்டமும். மொத்தமூளையே கண்ணாடிக்கோளம் கீழே விழுந்து உடைந்து விரிசலிட்டதுபோல அர்த்தமில்லாமல் குழம்பிச் சுழிக்கும் பிம்பங்களின் தொகுப்பாக ஆகிவிடும்.

நான் அங்கே ராஜநாகம் வரவேண்டும் என விரும்பினேன். மிகமிக விரும்பினேன். பிரார்த்தனை செய்தேன். ராஜநாகம் என் முன் எழுகிறது. நான்கடி உயரத்தில். வாழைக்கன்று எழுந்தது போல. விசித்திர்மான ஒரு காளான் போல அதன் படம். கழுத்தின் செதில்அடுக்குகள் அசைகின்றன. வெறித்த கண்கள் என்னை பார்க்கின்றன. நாக்கு பறக்கிறது. நான் அசையாமல் அதை நோக்கிக்கொண்டிருக்கிறேன்

சவுக்கால் சொடுக்குவதுபோல ஒரு கொத்து. அவ்வளவுதான். நான் கையை இழுத்துக்கொள்கிறேன். அப்படியே விழுந்துவிடுகிறேன். என்னுள் எல்லாமே உடைந்துவிடுகின்றன. உள்ளே எல்லா வண்ணங்களும் கலந்த விபரீதமான ஓவியக்காட்சிகள் நிறைகின்றன. பளிச்சிடும் வண்ணங்கள் உருகி வழிகின்றன. நினைவுகள் வண்ணங்களாகி கரைகின்றன. எண்ணங்கள் வண்ணங்களாகி குழம்புகின்றன. பின்னர் ஒவ்வொன்றாக மறைகின்றன

நான் மழைநீர் வழியும் காட்டில் சருகுகளின் மேல் கிடக்கிறேன். என்மேல் இடியுடன் மின்னல் வெட்டிக்கொண்டிருக்கிறது. மழைநீர் என்னை சுற்றிக்கொண்டு செல்கிறது. மழைத்துளிகளால் சிதறடிக்கப்படும் மண் என் மேல் தெறிக்கிறது.என் உடல் புல்லரிக்கிறது. வலிப்புகொண்டு தசைகள் இழுபடுகின்றன. பின்னர் மெல்ல இறுகிவிடுகின்றன.

என் உடல் அங்கே கிடக்கிறது. மழைநீரில் சிவந்து சற்றே உப்பி ஒரு பெரிய அடிமரம்போல. அதை அவ்வழியாக ஜீப்பில் செல்லும் எவரோ பார்க்கிறார்கள். கன்னடத்தில் பேசியபடி அதை நோக்கி ஓடிவருகிறார்கள். ஒருவர் என்னை சுட்டிக்காட்டி ஏதோ சொல்கிறார்கள். அவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.

என் முகம் உப்பி நீலம்பாரித்திருக்கிறது. உதடுகள் நாகப்பழம் தின்றவைபோலிருக்கின்றன. இரண்டு பற்கள் உதடுகளை ஆழமாகக் கடித்திருக்கின்றன. கைகள் சுருட்டிப் பிடிக்கப்பட்டிருக்கின்றன. தூக்கில் தொங்குபவன் போல பாதங்கள் நீண்டு இழுபட்டு நின்றிருக்கின்றன.

நான் அழத்தொடங்கினேன். என் உடலெங்கும் அழுகை நிறைந்தது. அழுது அழுது ஓய்ந்து மெல்ல பெருமூச்சுகள் விட்டேன். எழுந்தபோது மிகமிகக் களைப்பாக உணர்ந்தேன். என் உடலே எடைகொண்டுவிட்டதுபோல. மெல்ல கால்களை இழுத்து இழுத்து வைத்தபடி நடந்தேன். மேலும் செல்லவேண்டியதில்லை, அறைக்குச் சென்று படுத்துவிடவேண்டும்

என் கால் ஏதோ வேரை மிதித்தது. அல்லது விழுந்துகிடந்த மரக்கிளை. அது மறுபக்கம் மேலெழுந்தது. நான் திடுக்கிட்டு திரும்பியபோது ஒரு விரைவான வீச்சாக ஏதோ இலைகளுக்குள் செல்வதைப் பார்த்தேன். மழைநீர் ஓடையாகிச் செல்வதுபோல. ஆனால் மழைநீர் அல்ல

என் முழங்காலின் பின்பக்கம் கடுத்தது. குனிந்து பார்த்தேன். ஜீன்ஸின் மேல் முள் ஏதுவும் குத்தியிருக்கவில்லை. அந்த மரக்கிளை எங்கே? என் உள்ளம் அதிர்ந்தது. அதுவா? அதுவா? நான் ஜீன்ஸை பிடித்து சுருட்டி மேலேற்றினேன். என் முழங்கால் மடிப்பில் இரு சிறு புள்ளிகள். இணையானவை, சிவந்த குருதியடையாளங்கள்

என் உடல் பதறிக்கொண்டிருந்தது. அங்கிருந்து சாலையை நோக்கி ஓடவேண்டும், கூச்சலிட்டு எவரையாவது உதவிக்கு அழைக்கவேண்டும் என்று தோன்றியது. மறுகணம் நான் புன்னகைத்தேன். நான் வந்ததே இதற்காகத்தான். இதைத்தான் வேண்டிக்கொண்டேன்

கால்சட்டையை கீழிறக்கிக்கொண்டு மெல்ல நடந்து அந்தப்பாறைமேல் சாய்ந்து அமர்ந்தேன். என்ன செய்கிறது எனக்கு? ஒன்றுமே செய்யவில்லை. நரம்புகள் என்ன ஆகின்றன? முடிச்சுகள் அவிழ்கின்றனவா? தளர்கின்றனவா? மூச்சுத்திணறுகிறதா? ஆனால் அது இதயத்துடிப்புதான். மூச்சு விரைவாகிவிட்டிருக்கிறது, அவ்வளவுதான்.

மழைகொட்டிக்கொண்டே இருந்தது. என்மேல், மரங்கள்மேல். ஆனால் ஓசை குறைந்து குறைந்து வந்தது. முழுமையாகவே ஓசை இல்லாமலாகியது. காடு விந்தையான ஒரு ஊதாநிறக் காட்சியாக மாறியது. சிந்திய டீசல்  நீரில் ஒளிவிடுவதுபோல மின்னும் ஊதாவும் நீலமும் சிவப்பும் கலந்து இலைநுனிகள் அசைந்தன.

என் வலக்காலை எவரோ பிடித்து உலுக்கி இழுத்ததுபோல் உணர்ந்தேன். வாய்கோணலாகி எச்சில் வழிந்தது. நான் என்னையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தேன். எந்த பொருளும் இல்லாத காட்சிகள் ஓடின. ஓசையில்லாமல் ஒரு கண்ணாடியில் அவை தெரிவதுபோலிருந்தது. கண்ணாடியை பலவகையில் சரித்து அக்காட்சிகளை நெளியச்செய்தனர் எவரோ.

மிகமெல்லிய ஒரு மணம்.மூட்டைப்பூச்சி நசுக்குவதுபோல. அல்லாது மயிர்பொசுங்குவதுபோல. இன்னொருமுறை என் வலக்கால் இழுத்துக்கொண்டது. என் கை துடித்து சற்றே இழுபட்டு கோணலாகியது. நான் மூக்கில் ஆழமான நெடியை உணர்ந்தேன். எரியும் கந்தகநெடி.

[ 3 ]

எட்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் மீண்டும் ஆகும்பேக்கு என்னால் வரமுடிந்தது. வரவேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு ஆண்டும் பெருகிக்கொண்டேதான் சென்றது. ஆண்டில் நாலைந்துமுறையாவது திட்டமிட்டு ஏதோ காரணங்களால் ஒத்திப்போட்டேன். முக்கியமான காரணம் என் வேலை மாறிவிட்டது. வேலைக்காகப் பயணங்கள் செய்பவர்கள் தங்களுக்கான பயணங்களை செய்யவே முடியாது

ஆகும்பே மாறிவிட்டிருந்தது. அந்த கொங்கணி பிராமணரின் மெஸ் இல்லை. ஓடு உடைந்து அந்தக் கட்டிடம் பூட்டிக்கிடந்தது. புதிய இன்னொரு பெரிய தங்கும்விடுதி. அதன் முகப்பில் சிமெண்டில் புத்தர்சிலை. ஒட்டியே ஒரு பெரிய ஓட்டல். நான் அங்கேதான் அறைபோட்டிருந்தேன்.

சாலையை நிறைத்து மழைபெய்துகொண்டிருந்தது. அடிக்கடி திடுக்கிடச் செய்தபடி இடிமுழங்கிக் கொண்டிருந்தது. நான் உயரமான சப்பாத்துக்கள் போட்டிருந்தேன். மழைக்கோட்டின்மேல் நீரின் அறைதல்களை உணந்தபடி நடந்தேன். அந்த மண்சாலை அப்படியேதான் இருந்தது. திரும்பி உள்ளே சென்றேன். அந்தப் பாறையை பார்த்தேன். அதுவும் மாறவில்லை. அந்தப் பாசிகூட அப்படியே இருக்கிறது என எண்ணிக்கொண்டேன்.

அங்கே நின்று அச்சூழலை நோக்கிக்கொண்டிருந்தேன். அன்றுபெய்த மழையே அப்படியே அறுபடாமல் நீடிக்கிறதா? எனக்கு நானே புன்னகைத்துக்கொண்டேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அத்தகைய விசித்திரமான எண்ணங்களை நான் அடைவேன். அந்த எண்ணங்கள் வழியாக நெடுந்தொலைவு செல்வேன். வெளியே சொன்னால் என்னை கிறுக்கன் என்று சொல்லிவிடுவார்கள். அப்படிப்பட்ட அபத்தமான கற்பனைகள்

அன்று சிறியவேலையில் இருந்தேன். தோல்வியுற்றவனாக, தனித்தவனாக. இன்று என் தொழிலின் உச்சங்களில் இருக்கிறேன். என் மனைவியும் குழந்தைகளும் ஊரில் இருக்கிறார்கள். என் கையில் அந்தச் சில்லிடல் இல்லை.  உடலில் நடுக்கம் இல்லை. அந்த பழைய உடலுக்குள் இருந்து முற்றிலும் புதிதாக முளைத்து எழுந்துவிட்டிருக்கிறேன். எப்போதாவது அந்த காலங்களை எண்ணும்போதுகூட அவன் வேறு எவரோ என்றே அகம் சொல்கிறது

அன்று இங்கே கிடந்த என்னை மேலே அணைக்கட்டிலிருந்து திரும்பிய ஊழியர்கள் கண்டெடுத்தார்கள். ஆராய்ச்சிமையத்திற்கு உடனே கொண்டுசெல்லப்பட்டேன். அங்கே மூன்றுநாட்கள் இருந்தேன். அங்கிருந்து பெங்களூர் மருத்துவமனைக்கு. பதினைந்து நாட்களில் உயிர்பிழைத்து எழுந்துவிட்டேன்

என் உடல் கருமைகொண்டு மெலிந்தது. உதடுகளிலும் இமைகளிலும் தோல் வெந்ததுபோல் ஆகி, உயிரற்று உரிந்தது. ஆனால் அதன்பின் மிக வேகமாக மீண்டேன். எடைகூடியது, தோல் பளபளப்பாயிற்று. என் நரம்புச்சிக்கல்கள் முழுமையாகவே அகன்றன. என் மாறத உளச்சோர்வு எங்கென்றே அறியாமல் அகன்றது

முதலில் பசிதான் நான் உணர்ந்தது. எந்நேரமும் சாப்பாட்டை நினைத்துக் கொண்டிருந்தேன். வெறிபிடித்து உண்டேன். உண்ண உண்ணச் சுவை பெருகியது. எல்லாமே சுவைத்தன. எப்போதும் கையில் இனிப்புகள் வைத்திருந்தேன்.நள்ளிரவில் எழுந்து சாப்பிட்டேன். கனவிலும் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

பின்னர் சுவை எல்லாவற்றிலும் திரும்பியது. வண்ணங்கள் என்னை பித்துபிடிக்கச் செய்தன. பலநிறங்களில் ஆடைகள் வாங்கிக்குவித்தேன். அவற்றை பார்த்துப் பார்த்து கொண்டாடினேன். வெறிகொண்டு இரவுபகலாக பாட்டு கேட்டேன். வீடெங்கும் நறுமணப் பொருட்கள் எரிந்தன. ஒவ்வொரு நாளும் விளையாடினேன், நீச்சலடித்தேன், பைக் ஓட்டினேன்.

அறைகளுக்குள் இருக்கப் பிடிக்கவில்லை.பைக்கில் லடாக் வரைச் சென்றேன். மலைகளில் ஏறினேன். வர்க்கலையில் விரைவுப்படகில் கடல்மேல் பாய்ந்தேன்.குலுமணாலியில் பாரச்சூட்டில் பறந்தேன். புத்தகங்களாக படித்து தள்ளினேன். கதைகள் நாவல்கள். சினிமாக்கள் பார்த்தேன். கன்னடம் படித்தேன். சுப்பாராவின் எல்லா நாவல்களையும் படித்தேன்

அவ்வளவுக்குப்பின்னரும் நேரம் மிச்சமிருந்தது. என் தொழிலில் வென்றேன். வெளிநாடுகள் சென்றேன். வீடு வாங்கினேன், கார் வாங்கினேன். திருமணம் செய்துகொண்டேன். என் மனைவி என்னை “ஹைப்பராக்டிவ்” என்றாள். “நெறைய டைம் வேஸ்ட் ஆயிடுச்சு கண்ணு” என்பேன்.

அன்று ஆராய்ச்சி நிலையத்தில் சுந்தர் சொன்னார், ராஜநாகம் என்னை மிகமிகக் கொஞ்சமாகக் கடித்திருக்கிறது என்று. “அது எப்பவுமே முழுசா கடிக்காது. கடிக்கிற உயிரோட வெயிட்டை வச்சு எவ்ளவு விஷம் உள்ளே போகணும்னு முடிவெடுக்குது. அதுவும் அரைசெக்கண்டிலே. கண்ணாலப் பாத்து வச்சு முடிவெடுக்குதா இல்லை மண்ணோட அதிர்வை வச்சான்னு சொல்லமுடியாது. உங்களுக்கு அது அஞ்சு மில்லிகிராம்கூட குடுக்கலை…”

“அவ்ளவு குறைவா குடுத்தா அது நஞ்சில்ல அமுதம். நரம்புநோய்களுக்கு அதைத்தான் மருந்தா பயன்படுத்தறாங்க… அலோபதி ஹோமியோபதி எல்லாத்திலயும்” என்றார் சுந்தர். நான் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். என் கண்கள்முன் அவருடைய உருவம் நீர்ப்பிம்பம் போல் அலையடித்தது

அவர் என் அறைச்சுவரில் ஒரு ராஜநாகத்தின் படத்தை மாட்டினார். அது பொன்னிறச் செதில்களுடன் இருந்தது. திறந்த வாயிலிருந்து நாக்கு பறந்தது. கூரிய வளைந்த பற்கள். அது எதையோ கூவிச்சொல்வதுபோலிருந்தது

ஒருநாள் ஒரு சிறு பிப்பெட்டுடன் வந்து எனக்கு அதைக் காட்டினார்.” இதான் ராஜநாகத்தோட வெஷம்” அது பொன்னிறமாக இருந்தது. “சாதாரண பொன்னிறம் இல்லை. பொன்னிலே பலவகை உண்டுன்னு பழைய புத்தகங்களிலே சொல்லியிருக்கு.  ஆடகம், கிளிச்சிறை, சாம்பூநதம், சாதரூபம். ஆடகம்தான் தூய்மையான பொன். அதுக்கு பெரிய ஒளி இருக்காது. இதேபோல அழுக்குமஞ்சள் நிறத்திலே இருக்கும். கிளிச்சிறை கொஞ்சம் மஞ்சள். கிளியோட சிறகுபோல.தங்கத்திலே வெள்ளீயம் சேத்தது அது. சாம்பூநதம் செம்புகலந்து தீ நிறத்திலே இருக்கும். சாதரூபம் நாம பயன்படுத்துற பொன்.  செம்பு கூடி நல்லாவே சிவந்திருக்கும்”

நான் அந்த நிறத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அழுக்குமஞ்சள் நிறப்பொன். ஆடகம்.ஆனால் கண்ணாடியில் தூக்கிப் பார்த்தபோது உருகிவழியும் பொற்துளி என சுடர்கொண்டிருந்தது

“ஒருகிராம் பவுன் இப்ப மூவாயிரம் ரூபாய். ஒரு கிராம் வெனம் பதினெட்டாயிரம் ரூபாய். ஆறுமடங்கு… வெஷம்ங்கிறது ஆறுமடங்கு கெட்டியான தங்கம்தான். உங்களுக்கு ஆறுமடங்கு குறைச்சு பொன்னாக்கிக் குடுத்திருக்கு” அவர் என் தோளைத் தொட்டு “Pray to Him! Thank to Him!” என்றார்

நான் அந்தப்பாறையில் அமர்ந்தேன். அங்கே எங்கோ அது இருக்கலாம். ராஜநாகம் இருபது ஆண்டுகள் வரை உயிர்வாழும். அதற்கு எதிரிகளே இல்லை. அது இடம் மாற்றிக்கொள்வதுமில்லை. அங்குதான் இருக்கிறது. என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

கொத்துவதற்கு முந்தைய ஒருகணத்தில், ஒருகணத்தின் ஒரு துளியில், அது எனக்காக நஞ்சை பொன்னாகியது. நான் அங்கு அமர்ந்து அதன் பொன்னுடலை எண்ணிக்கொண்டிருந்தேன். உருகிவழியும் பொன்னோடை என அது எழுவது போல கற்பனைசெய்துகொண்டேன்.

***

முந்தைய கட்டுரையா தேவி! – சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15