அணஞ்சியம்மை ஒரு சாக்குப்பையை அக்குளில் இடுக்கிக்கொண்டு வந்து சேர்ந்தபோது நான் கோயில்முற்றத்தில் இடிந்த திண்டின்மேல் அமர்ந்து பச்சைமாங்காய் தின்றுகொண்டிருந்தேன்.
“பிள்ளே, இங்கிண நாணியம்மை தம்ப்ராட்டிக்க வீடு எங்கயாக்கும்?” என்று அவள் கேட்டாள்.
அப்போது அவள் யாரென்று எனக்குத்தெரிந்திருக்கவில்லை. வடித்த காதுகள் தோளில் தொங்கின. இருமுலைகளும், இரு நீண்ட பைகளாக ஆடின. முலைக்காம்புகள் குப்புற நிலம்நோக்கியிருந்தna, பசுவின் காம்புகளைப்போல. இடையில் ஒரு வேட்டி மட்டும் கட்டியிருந்தாள். முகம் சிலந்திவலைபோல சுருக்கங்கள் மண்டியிருந்தது. நரைத்த கண்கள் . வாயே இல்லை. நூல் இழுத்துக் கட்டப்பட்ட சுருக்குப்பை போல உதடுகள் உள்ளடங்கியிருந்தன.
“எனக்க மாமியாக்கும். நான் விளிச்சுகொண்டு போறேன்” என்று கொட்டையை வீசினேன்.
நான் நடக்க கிழவி ஆடியாடி தொடர்ந்து வந்தாள். கையால் சூழ்ந்திருக்கும் காற்றை தண்ணீர் போல தள்ளித்தள்ளி நடப்பதுபோலிருந்தது.
“பிள்ளே, பிள்ளே ஒரு நல்ல நிக்கரு போடப்பிடாதா? எலியில்லா எட்டி பாக்குது?” என்று கையால் சுட்டிக்காட்டினாள்.
நல்ல கால்சட்டைதான். நான் சற்றுமுன் சிறுநீர் கழித்தபோது அதை உள்ளே விட மறந்துவிட்டிருந்தேன். அவசரமாக உள்ளே தள்ளி பித்தானைப்போட்டேன். தொட்டதும் மீண்டும் மூத்திரம் வருவதுபோலிருந்தது.
“அது செரி, இப்பம் காற்றும் வெளிச்சமும் பட்டாத்தானே உண்டு… இனியில்லா கிடக்கு சோலி… சில்லற சோலியா? பத்து அறுவது வருசம் இனி அதுல்லா கைபிடிச்சு விளிச்சோண்டு போகும்” என்றாள் கிழவி.
“ஆரு?”என்று கேட்டேன்.
“பிள்ளை, கொக்கு பறக்குதத கண்டிட்டுண்டா?”.
“ஆமா”.
“அதை அதுக்க மூக்காக்கும் வானத்திலே இளுத்துகிட்டு போறது…அதேமாதிரியாக்கும் ஆம்பிளையாளுகள இந்த மூக்கு இளுத்துட்டு போவுது”
நான் என் மூக்கை தொட்டுப்பார்த்தேன். கூர்மையாக இல்லை. அதுவா என்னை இழுத்து ஓடவைக்கிறது.
“அந்த மூக்கில்லை பிள்ளே, கீள்மூக்கு”
நான் “அது எங்க இருக்கு?” என்றேன்.
“இப்பம் அதை பாட்டுக்கு விடுங்க. பிறவு அதுவே பிள்ளைட்ட சொல்லும், என்னைய தூக்கி வச்சுக்கிடுன்னு… அனத்திக்கிடே இருக்கும்லா… பச்சைப்பிள்ளை மாதிரில்லா பண்டுவம் பாக்கணும்?” கிழவி தனக்குத்தானே என சொல்லிக்கொண்டே வந்தாள். “ஞானமார்க்கத்துக்கு கூட்டிட்டுப் போற குருசாமியில்லா அது? அதுக்கே வளி தெற்றினா பிறவு ரெட்சையில்லை”
நாணி மாமியின் வீட்டுக்கு முன்னால் சுகு நின்றிருந்தான். அவனும் மாங்காய்தான் தின்றிருந்தான். அவன் வீட்டுமுன்பக்கம் கல்யாணப்பந்தல் அவிழ்க்கப்படவில்லை. கொல்லைப்பக்கம் இருந்த கலவறைக் கொட்டகையை அவிழ்த்துவிட்டிருந்தார்கள்.
“பிள்ளே இதாக்குமா வீடு?” என்றாள் கிழவி.
“ஆமா, உள்ளதான் இருக்காவ”
”எங்க வீட்டுக்கா?” என்று சுகு சொன்னான். “எங்க வீட்டிலே கல்யாணம் இருக்கே? பெரிய கல்யாணம்”
“அப்பி கல்யாணப்பண்டத்த பத்திரமா வச்சுக்கிடணும், கேட்டுதா?” என்று கிழவி சொனனள். “அணஞ்சி வந்திட்டுண்டுண்ணு போயி சொல்லணும்… பண்டுவச்சி அணஞ்சீண்ணு சொல்லணும் பிள்ளே…”
அவன் “அணஞ்சி வந்தாச்சே” என்று உள்ளே ஓடினான்
நான் “அவன் லூஸு… மாங்காயை நக்குவான்” என்றேன்
அணஞ்சி “எனக்கப்போ, அளப்பங்கோடு சாத்தாவே, இண்ணா கெடக்கேனே” என்று சொல்லி மூட்டின்மேல் கையை வைத்து மேலேறினாள்.
வீட்டுமுன் மூங்கில்களை ஊன்றி ஓலைவேய்ந்து தாழ்வான பந்தல். தரையில் சாணி தெளித்து இறுக்கியிருந்தார்கள். பந்தலில் வேய்ந்திருந்த வெள்ளைவேட்டிகளை அகற்றிவிட்டார்கள். காலைவெளிச்சம் அதன் ஓட்டைகள் வழியாக தரையில் சில்லறைபோல பரவியிருந்தது. அதற்கு அப்பால் வீட்டின் திண்ணையும் முகப்பும் நிழலாக இருந்தன.
பந்தல்காலில் கன்றுக்குட்டியை கட்டியிருந்தார்கள். அது சுற்றிச்சுற்றி வந்து கயிறு இறுகி மூங்கிலில் ஒட்டிக்கொண்டு நின்று அதை நக்கிக்கொண்டிருந்தது. கிழவியைக் கண்டதும் “ம்ம்மா” என்றது. நாக்கு வாழைப்பூ நிறத்தில் வளைந்தது.
“காளையாக்கும்… என்னமாம் நக்கிட்டே இருக்கணும்…நாக்காக்கும் இப்பம் பெலத்த இந்திரியம்…”என்றாள் அணைஞ்சி
பந்தலில் ஒரு பெஞ்சில் தாணப்பண் அண்ணன் வெற்று மார்புடன் லுங்கி அணிந்து மல்லாந்து தூங்கிக்கொண்டிருந்தார். வாய் திறந்து பல்லின் அடிப்பக்கம் கறையாகத் தெரிந்தது. தொண்டைமுழை ஏறி இறங்கியது. புதிய தங்கச்சங்கிலி மார்பில் தழைந்து கிடந்தது. கையில் புதிய மோதிரம். நெற்றியில் மஞ்சள் களபத் தீற்றல்.
காலையில்தான் தாணப்பன் அண்ணனும் லீலா அக்காவும் இலுப்பையடி யக்ஷிகோயிலுக்குப் போய்விட்டு வந்திருந்தார்கள். லீலா அக்காவை தாணப்பன் அண்ணன் கல்யாணம் செய்து இரண்டுநாட்கள்தான் ஆகியிருந்தன. நாலுக்கூட்டம் பிரதமன். அடை,கடலை, பருப்பு, சேமியா. எனக்கு கடலைப்பிரதமன் பிடித்திருந்தது.
தாணப்பன் அண்ணனும் லீலா அக்காவும் பேசிக்கொண்டிருக்கும்போது லீலா அக்கா நான்குபக்கமும் பார்த்துக்கொண்டும் அவ்வப்போது சிரித்துக்கொண்டு தலைகுனிந்தும் இருப்பதை நான் நேற்று அவர்கள் கோயிலுக்குப் போகும்போது பார்த்தேன். தவளைக்கண்ணன் “தொட்டுவிட தொட்டுவிட துடிக்கும் கை பட்டுவிட பட்டுவிட மலரும்” என்று பாடியபடி தென்னை மரத்தில் ஏறினான். நான் அவனை பார்க்க என்னைப்பார்த்து கண்ணடித்தான்.
அணைஞ்சி குனிந்து தாணப்பன் அண்ணனின் உடலை பார்த்தாள். கையால் மெல்ல அவர் அணிந்திருந்த லுங்கியை விலக்கி பார்த்தாள். நான் வாய் பொத்தி சிரித்தேன்.
“என்ன சிரிப்பு? வித்துகுணம் பாக்கணும்லா?”என்றாள் அணைஞ்சி. “நல்ல உறைச்ச உடம்பு… என்ன சோலி செய்யுதாரு?”
நான் “அண்ணன் பட்டாளமாக்கும். தோக்கு உண்டு” என்றேன்.
“அதத்தான் இப்பம் பாத்தேனே. வலிய தோக்கு ஒண்ணும் இல்லை. சாமானிய தோக்குதான் பிள்ளே”
நான் பெஞ்சில் சென்று அமர்ந்தேன். அப்படி அமர்ந்திருக்கையில் நன்றாக வளர்ந்துவிட்டதாகவும் வெற்றிலைபாக்கெல்லாம் போட்டுக்கொள்ளலாம் என்றும் தோன்றும். ஆனால் வெற்றிலைத்தாலத்தில் கிள்ளிப்போட்ட காம்புகள்தான் கிடந்தன. ஒன்றிரண்டை எடுத்து வாயிலிட்டு மென்றேன்.
அரையிருளில் சுவரிலிருந்த புகைப்படங்களில் ஆணும் பெண்ணு ஜோடி ஜோடியாக முறைத்து பார்த்தனர். சுகுவின் அம்மாவின் சின்னவயது கல்யாணப் படத்தில் அவள் முன்நெற்றியில் தலைமயிரை இழுத்துவிட்டு, காதோரம் பெரிய பூ சூடி தடிமனாக புருவம் வரைந்து, கண்மையை மீன்வால்போல நீட்டிவிட்டு, தோளருகே பூரி போல உப்பிய கைவைத்த ஜாக்கெட் போட்டிருப்பாள். அருகே நாணி மாமியின் கல்யாணப் படம். அதில் மாமி நேரியதும் முண்டும் அணிந்து தலைகுனிந்திருப்பார். மாதவன் மாமனின் கண்களில் பூனைபோல இரு வெள்ளைப்புள்ளிகள் தெரியும்.
சாந்தா அக்காவின் கல்யாணப் புகைப்படம் கலர். அது நரைந்து காவிநிறத்தில் இருந்தது. அக்காவின் தலைமயிர் சாம்பல்பூச்சாக மாறியிருக்க அவள் கணவர் அச்சுதன் மாமாவின் மேல் ஏதோ மேலிருந்து வழிந்து முழுமையாக அழித்திருந்தது. ஆனால் அக்காவின் ஒரு கண் மின்னுவதுபோல தனியாகத் தெரியும்.லீலா அக்கா பதினொன்றாம் கிளாஸ் பாஸானபோது எடுத்த படத்தில் அக்கா தாவணி போட்டு கையில் புத்தகம் வைத்திருப்பாள்.
நாணிமாமி வெளியே வந்து “வந்தியா அணஞ்சி.. வாடீ… “என்றாள் “உன்னைப்பற்றி வண்ணாத்தி மாதவி சொன்னா”
“இம்பிடு கஞ்சிவெள்ளம் உப்பிட்டு எடுக்கணும் பிள்ளே… வல்லாதே வருதே” என்றாள் அணைஞ்சி
“தாறேன்” என்று நாணி மாமி உள்ளே சென்றாள்
“அதிலே நல்லா கொஞ்சம் பருக்கையும் பற்றும் இடுங்க… கண்ணிமாங்கா உண்டா?”
“வெள்ளத்திலிட்ட மாங்கா இருக்கு”
“எடுங்க… ஒரு பிடி அவியலோ துவரனோ உண்டெங்கிலும் கொள்ளாம்” என்றாள் அணைஞ்சி.
மாங்காயை உடைத்து கூழாக்கி அதைத் தொட்டுக்கொண்டு அவியலை மென்றபடி அணைஞ்சி கஞ்சியை குடித்தாள். “இம்பிடுபோல” என்று மீண்டும் கேட்டாள். நாணி மாமி கொண்டுவந்து மீண்டும் ஊற்றிய கஞ்சியையும் குடித்தாள்.
பர்ரே என்று ஏப்பம் விட்டு “கஞ்சிகுடிச்சா இம்பிடு கருப்பட்டி எனக்கு வேணும்… அதொரு சீலமாகிப்போச்சு, கேட்டியளா?”
கருப்பட்டியை வாயிலிட்டு சப்பியபோது அவள் கண்கள் மெல்ல மங்கலாயின. முகமும் கரைந்து மொத்தையாக ஆவதுபோலிருந்தது.
நான் கன்றுகுட்டியை அவிழ்த்துவிட்டேன். அது வாலை சுருட்டிக்கொண்டு பாய்ந்து துள்ளி ஓடியது.
நாணி மாமி “டேய் டேய்… அது போயி பாலு குடிக்கும்” என்றாள் ‘பிடிடே பிடி பிடி…”
நான் அதை பின்னால் ஓடி போய் பிடித்து மீண்டும் கொண்டுவந்து கட்டினேன். பசு அம்பேய் என்று கன்றை அழைத்தது
சவத்துக்கு ஒரே நெனைப்பாக்கும்” என்றாள் நாணி மாமி “வந்து பாருடீ அணஞ்சீ… பிள்ளை கிடந்து துடிக்கா” என்றாள்
அணைஞ்சி தாணப்பன் அண்ணனைப் பார்த்துவிட்டு “நல்ல இரும்பு சாதனமாக்கும்…” என்றபடி எழுந்து பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்
”நீ போயி விளையாடுலே” என்றாள் நாணி மாமி
சுகு என்னருகே வந்து “அக்காவுக்கு நெஞ்சுவலி” என்றான்
“ஏன்?” என்றேன்
“அவளுக்கு நெஞ்சுவலில்லா?”என்றான், குழப்பமாக.
அவன் மேல் பச்சை மாங்காய் வாசனை அடித்தது. எனக்கு காலையில் தின்ற மாங்காய் நினைவால் பல் புளித்தது
“உனக்க வீட்டிலே மாம்பழம் இருக்கா?”என்றேன்
”அம்மா உள்ள வச்சிருக்கா”
”உள்ளயா?“
“வாறியா?” என்று அவன் ரகசியமாக அழைத்தான்
நாங்கள் ஓசையில்லாமல் உள்ளே சென்றோம். அணைஞ்சி உள்ளே பொதியை அவிழ்த்துக் கொண்டிருந்தாள். நாணி மாமியும் சாந்தா அக்காவும் அருகே நின்றனர். சாந்தா அக்காவின் இடையிலிருந்த ஸ்ரீதரன் அவள் ஜாக்கெட்டை விலக்கி முலையை தூக்கி சப்பிக்கொண்டிருந்தான்
“அய்யய்ய… என்ன இது அம்மிணி? படிச்ச பிள்ளைதானே? அதுக்கு எம்பிடு வயசு?”
“அதாவுது வாற ஆவணியிலே மூணு”
“ரெண்டு தாண்டியாச்சு… இப்பமும் வலிச்சு குடிக்குது… நிறுத்தப்பிடாதா?”
“நிறுத்தினா எங்க கேக்கான்?”
”வேப்பெண்ணை வச்சு பூசணும் பிள்ளே..”
“அதெல்லாம் பூசியாச்சு…வேப்பெண்ணை எட்டிக்காச் சாறு… ஒண்ணும் கேக்கேல்ல. நக்கி துப்பிட்டு குடிப்பான்…. “
“ராத்திரியும் பக்கத்திலயா கிடப்பு?”
“ஆமா, அவன் அப்பன் இங்க இல்லல்லா?”
”பிள்ளே இது செரிவராது… கட்டிச்செந்நாரம் வச்சு பூசணும்… பதினஞ்சுநாள் நிண்ணு கசக்கும்.. அம்மைண்ணு சொன்னாலே கசக்கும்… பெண்ணுக்க கசப்பு அவனுக்கு தெரியணும். பின்ன இனிக்கணுமானா பத்திருபது வருசமாவும்…நான் தாறேன்”
நான் அங்கேயே நின்றேன். சுகு “வாறியா?”என்றான்
“நீ போயி எடுத்திட்டு வாடே” என்றேன்
அணைஞ்சி பொதியிலிருந்து வாடிய இலைகளையும் சில வேர்களையும் எடுத்தாள். “ஒரு கலம் சூடுவெள்ளம் வேணும்… நல்லா கொதிக்கணும்”
“அடுப்பிலே வெள்ளம் கெடக்குது”
“இத உள்ள இட்டு கொதிக்கவையுங்க … எங்கயாக்கும் எனக்க பொன்னு உருப்படி?”
“உள்ள இருக்கா” என்ற நாணி மாமி “ஏட்டீ வாடீ” என்றாள்
உள்ளிருந்து ஏதோ குரல் கேட்டது
‘ஏட்டி வாடி.. சும்மா” என்று நாணி மாமி சொன்னாள். “அணஞ்சி மருந்துபோடணும்லா?”
உள்ளிருந்து லீலா அக்கா தளர்வான ஆடையுடன் வந்தாள். தூங்கி எழுந்து வருவதுபோலிருந்தது முகமும் கண்ணும். மேலாடையை அள்ளி மேலே போட்டிருந்தாள்.
“பிள்ளை ஷீணிச்சு போச்சே” என்றாள் அணைஞ்சி
“என்னண்ணு சொல்லுகது… பெண்ணடிக்க விதியில்லா?”என்றாள் நாணி மாமி
”பிள்ளை பயப்படாதீக. நல்லா மருந்திட்டு திளைப்பிச்ச வெள்ளம் போட்டு ஆவியும்வேதும் பிடிச்சா ரெண்டுநாளிலே வலி போயிடும்” என்றாள் அணைஞ்சி
லீலா அக்கா கண்களை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்
“என்னெண்ணு இப்டி போட்டு செய்யுதானுக?”என்றாள் நாணி மாமி
“ஜெயிக்கணும்லா? ஜெயிச்சு கேறணும்லா? கோட்டையிலே கொடிய நாட்டினாத்தானே நெறவு?”
நாணி மாமி உள்ளே போய்விட்டு வந்து ”தண்ணி திளைக்குது அணைஞ்சியே” என்றாள்
“ஆரை ஜெயிக்குதானுக இவனுக?”என்றாள் சாந்தா அக்கா
“பெத்த அம்மைய….வேற ஆர?”
சுகு வந்து “எடுத்தாச்சுலே” என்றான். அதற்குள் ஒரு மாம்பழம் கீழே விழுந்தது
சாந்தா அக்கா திரும்பிப்பார்த்தாள். “என்னடா? டேய்”
“ஓடுடே” என்று சுகு ஓடினான். நான் பின்னால் ஓடினேன். நாங்கள் வைக்கோர்போர் அருகே சென்று ஒளிந்துகொண்டு மாம்பழங்களை ஆளுக்கு ஒன்று எடுத்துக்கொண்டோம்
“பச்சவரிக்கையாக்கும்….சாறு மட்டும் உண்டும்” என்றான் சுகு
பச்சவரிக்கை மாம்பழத்தின் தோல் கெட்டியானது. உள்ளே நாரும் சாறும் மட்டும்தான். ஆனால் நல்ல இனிப்பாக இருக்கும். சுகு மாம்பழத்தை கைகளில் வைத்து கசக்கினான். நானும் அதேபோல கசக்கினேன். கசக்கிக் கசக்கி தொளதொளப்பாக ஆக்கியபின் அதன் முனையைக் கடித்து சிறு ஓட்டை போட்டோம். அதன்வழியாக உறிஞ்சியபோது இனிமையான சாறு வந்தது
முழுக்க உறிஞ்சும்வரை நாங்கள் அதில் மூழ்கி இருந்தோம். பின்னர் அவற்றை வீசிவிட்டு ஆழ்ந்த ஏக்கத்தை அடைந்தோம்.
“ஒண்ணு கீளே விளுந்துபோட்டு”என்றான் சுகு
”அதைக்கொண்டு வந்திருந்தா நீயில்லா தின்னிருப்பே?”
“ஆமா, இது எனக்க வீடுல்லா? எனக்கு ஒண்ணு கூடுதலு வேணும்லா?”
“நீ எனக்க வீட்டுக்கு வந்தப்பம் நான் உனக்கு மாம்பழம் குடுத்தேன்லா?”
”அதுக்கு முன்னாடி நான் மூணு மாம்பழம் உனக்குக் குடுத்தேனே”
“அது புளிப்பு”
“உனக்க மாம்பழம்தான் புளிப்பு… பீப்புளிப்பு… தூ தூ தூ”
அவன் அழுகைவர “எனக்க மாம்பழத்தை தாலே” என்றான்
“இந்நா கெடக்கு… எடுத்து சூப்பு” என்று கீழே கிடந்த மாங்கொட்டையை காட்டினேன்
அவன் ஆவேசமாக என்னை அடித்தான். நான் அவனை தடுத்து புரட்டி அடித்தேன். இருவரும் வைக்கோலில் புரண்டு சண்டைபோட்டோம்.
நான் அவனை பலமுறை அடித்தேன். அவன் அழுகையுடன் ”நான் செத்தா எங்க அம்மை உன்னை கொல்லுவா” என்றேன்
“நான் உனக்க அம்மைய கொல்லுவேன்”
அவன் “எனக்க அம்மே” என்று அழுதான்
“உனக்க அப்பனையும் கொல்லுவேன்… உனக்க பாட்டியையும் கொல்லுவேன்”
”எங்கிளுக்கு சாமி உண்டு”
“எங்க சாமி பெரிய சாமி தெரியுமா?”
அவன் கீழுதட்டை நீட்டி மூக்கிலும் நீர் வழிய விக்கி விக்கி அழுதான்
“இனிமே நீ மாங்கா கொண்டுவருவியா?”
“கொண்டு வருவேன்”
“எத்தனை மாங்கா?”
“ரெண்டு”
நான் அவனை மீண்டும் அறைந்தேன்
“மூணுமாங்கா மூணுமாங்கா!”
“அதில நீ எம்பிடு திம்பே?”
அவன் கண்ணீர் வழிய “ஒண்ணு” என்றான்
நான் அவன் மேலிருந்து எழுந்து “நீ உனக்க அம்மைகிட்ட சொல்லுவியா?”என்றேன்
“சொல்லமாட்டேன்”
”செரி போ” என்றேன்
அவன் விசும்பிக்கொண்டே போனான். அவன் சொல்லாமலிருக்கமாட்டான். மேலும் எங்களை சாந்தா அக்கா பார்த்தும் விட்டாள்.
வீட்டுக்கே போய்விடலாம், அதுதான் பாதுகாப்பு. நான் வைக்கோற்போரைச் சுற்றிக்கொண்டு உரப்புரை வழியாகச் சென்றேன். அங்கே தாணப்பன் அண்ணன் உரப்புரைச் சுவர் மறைந்து நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். லுங்கியை தொடைக்குமேல் தூக்கிச் சுருட்டி மயிர்படர்ந்த தொடையை வருடிக்கொண்டிருந்தார்.
ஏணியுடன் வேலிக்கு அப்பால் சென்ற ராயப்பன் “என்னவே புதுமாப்பிள்ளை. ஊதுதேரு” என்றார்
“ஊதணும்லா?”என்றார் தாணப்பண் அண்ணா சிரித்தபடி
“அணஞ்சி வாறத பாத்தேனே? வயலு உளுது மறிச்சிட்டாச்சு போல” என்றார் ராயப்பன். “பட்டாளம்பிள்லே, ஆடு உளுத வயலும் உண்டு ஆனை உளுத வயலும் உண்டு பாத்துக்கிடுங்க”
“ஆனைக்க கதைய அணஞ்சி சொல்லட்டு” என்று தாணப்பன் அண்ணன் சிரித்துக்கொண்டே சொன்னார்
“நம்ம பாக்கரன் கெட்டினப்ப பத்துநாள் அந்த தெருவிலே போவமுடியாது. குட்டி கெடந்து நெலைவிளிப்பா… ராத்திரியிலே இவன், காலம்பற அணஞ்சி” என்றார் ராயப்பன்.
தாணப்பன் “இப்பம் அங்க அலறலும் விளியும் கேக்குல்லா” என்றார்
“ஹெஹெஹெஹெ” என்று சிரித்து “வலிச்சாச்சுண்ணா அந்த தும்ப குடுங்க. பட்டாளம் சீக்ரெட்டுல்லா?” என்றார் ராயப்பன்
தாணப்பண் அண்ணா கொடுத்த சிகரெட் துண்டை வாங்கி ஆழமாக இழுத்து “நல்ல சாதனமாக்கும்… முல்லப்பூ மணம்” என்றார்
சிகரெட்டில் முல்லைப்பூ மணத்தை நான் பார்த்ததில்லை. நான் சற்று அருகே சென்றேன். அது வேறு ஏதோ மணம்.
“வாறேன்” என்று ராயப்பன் செல்ல தாணப்பண் அண்ணா என்னை பார்த்தார் “என்னடா?”
“அணஞ்சி விளிச்சா” ஏன் அப்படிச் சொன்னேனெ என்று எனக்கே தெரியவில்லை
“என்னத்துக்கு?” என்றார் தாணப்பண் அண்ணா
“தெரியாது”
”செரி வா” என தாணப்பண் அண்ணா நடந்தார்
“அண்ணா பட்டாளத்திலே உனக்கு தோக்கு உண்டா?”
“உண்டு…”
“பெரிசா?”
“ஆமா’
“அதவச்சு சுடலாமா?”
“ஆமாடே”
“நானும் சுடுவேன்…டோ டோ டோ!”
பந்தலில் மீண்டும் கன்றுக்குட்டி மூங்கிலில் சுழன்று தலையை தூக்கி நக்கிக்கொண்டிருந்தது
சுவருக்கு அப்பால் லீலா அக்கா அக்கா “அய்யோ! அய்யோ! எனக்க அம்மே! அய்யோ!” என்று அரற்றிக்கொண்டிருந்தாள்
“அக்கா அளுவுதா”
”அவளுக்கு கொஞ்சம் அளுகை கூடுதலாக்கும்” என்றபடி தாணப்பண் அண்ணா அமர்ந்தார்
“அக்காவுக்கு நோவுது” என்றேன்
“நொந்தாத்தான்லே அடங்குவாளுக” என்ற தாணப்பண் அண்ணா ரேடியோவை எடுத்து திருகினாள். அதில் ஏதோ இந்திப்பாட்டு ஓடத் தொடங்கியது. எல்லா வரியும் ஹே ஹே என்று ஒலித்தன
உள்ளிருந்து அணஞ்சி குனிந்து வந்தாள். “பிள்ளே தைலத்த இங்கிண வச்சேன்… குப்பி இருக்காண்ணு பாருங்க”
“இங்க இருக்கு” என்று நான் எடுத்துக்கொடுத்தேன்
விளுந்து கெடந்திருக்கு” என்ற அணஞ்சி தாணப்பண்அண்ணனிடம் “கையூக்கு நல்லதாக்கும். ஆனா தேக்குமரத்த வேரோட பிளுதெடுக்குத ஆனை பூவும் பறிக்கும்… பட்டாளம் பிள்ளை கண்டிட்டுண்டா?”என்றார்
“இல்லை”
“இருப்பு கண்டா என்னமோ ராஜ்ஜியம் ஜெயிச்ச மகாராசா போலேயாக்கும்” என்ற அணஞ்சி முட்டில் கைவைத்து “என்னமாம் ஜெயிச்சிட்டே இருக்கணுமே” என்று உள்ளே சென்றாள்
மீண்டும் அக்காவின் அழுகையும் முனகல்களும் கேட்டுக்கொண்டிருந்தன.
“நான் போறேன்” என்றேன்
“உனக்க வீட்டிலே அப்பு அண்ணா இருக்கராலே?”
“இருக்காரு”
“நான் சொன்னேன்னு சொல்லு…நான் தோப்புக்கு போறேன். சாதனம் கையிலே உண்டுண்ணு”
“சாதனம்ணா?”
“நீ அது அறிய வேண்டாம்.. போயி சொல்லு போரும்”
நான் “எனக்கு தெரியும்…பட்டாளச்சாராயம்” என்றேன்
“போடா”
நான் எழுந்து நின்று தலையை ஆட்டி “எனக்கு தெரியும்” என்றேன்
தாணப்பண் அண்ணா மடியிலிர்ந்து ஐம்பது பைசாவை நீட்டி “இத வச்சுக்க… மிட்டாய் வாங்கி தின்னு” என்றார்
நான் அதை வாங்கி பையில் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன். அதைக்கொண்டு பீடி வாங்கி இழுத்துப்பார்த்தாலென்ன என்று தோன்றியது.
========================================================